புதன், 26 ஜனவரி, 2022

அந்தம் ஆதி


சித்தாந்தச் செம்மணி, முனைவர்.பழ.முத்தப்பன்,

திருச்சிராப்பள்ளி


அந்தம் ஆதி என்ற தொடர் சிவஞானபோதம் முதற் சூத்திரத்தின் நிறைவில் இடம் பெற்ற தொடராகும். இதன் பொருள் சிவஞான முனிவரின் உரைப்படி சங்காரத் தொழிலைச் செய்யும் கடவுளே உலகிற்கு முதற் கடவுள் என்பதாகும். சங்காரம் என்பது அழித்தல் அல்லது ஒடுக்குதல் என்ற பொருளைத் தரும். சங்காரகாரன் என்பது யாவற்றையம் ஒழித்து நிற்பவன் என்ற பொருளைத் தரும். உலகம் படைத்தல், காத்தல், ஒடுக்குதல் என்ற மூன்று தொழில்களுக்கு உட்பட்டு நடப்பதாகும்.  அந்த மூன்று தொழில்களையும் செய்யும் கடவுளர்கள் உலகத்திற்குக் காரணம் ஆவார்கள் என்று கூறப்படுவதுண்டு.  யார் ஒருவன் யாவற்றையும் ஒடுக்கித் தான் மட்டும் நிலையாக நிற்கின்றானோ அவனே உலகத்தை மீண்டும் தோற்றுவிக்கும் ஆற்றல் உடையவன்.  ஆகையால் சங்காரகாரணன் ஆகிய முதல்வனையே முதலாக இவ்வுலகம் உடைத்து எனச் சித்தாந்திகள் கூறுவர் 


சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் முழுமுதற் கடவுளாகிய இறைவன் சிவன் என்றும், பரமசிவன் என்றும், மகாருத்திரன் என்றும் குறிக்கப் படுகின்ற பரம்பொருள் ஆவார். இப்பெருமான் குணதத்துவங்கள் கடந்த உலகங்களுக்கு அப்பாற்பட்ட மூன்று தலைகளையும் ஒடுக்கி,அதன் பின்னர் அவற்றை மீளவும் தோற்றுவிக்கும் ஒப்பற்ற பரம்பொருள் ஆவார். ஆதலால் அவரை மகாசங்கார காரணன் என்றும், அல்லது சர்வ சங்கார காரணன் என்று குறிப்பதும் சித்தாந்த மரபாகும். இத்தகைய சங்கார காரணனே முதலாக அமைவது இவ்வுலகம் என்பதால் அந்தம் ஆதி என்ற சொல்லால் சங்கார தொழிலைச் செய்யும் கடவுளே உலகிற்கு முதற் கடவுள் என்று சிவஞானபோதம் குறிப்பிடுகிறது. 


அந்தம் ஆதி என்ற சொல்லுக்குரிய விளக்கமாக சிவஞானபோதத்தின் முதற் சூத்திரத்தின் மூன்றாம் அதிகரணம் அமைந்துள்ளது. மூன்றாவது அதிகரணத்தின் மேற்கோள் சங்காரனே முதல் என்பதாகும்.  இதனுடைய பொருள் சங்கார கர்த்தா ஒருவனே உலகிற்கு முதற் கடவுள் என்ற பொருளைத் தரும். சங்கார கடவுள் ஒன்றா  அல்லது பலவா என்ற ஐயத்தைப் போக்குவதற்காக எழுந்த மேற்கோளகும் இது.  மேற்கோளுக்குப் பொருளாகச் சிவஞான முனிவர் தன் சிற்றுரையில் தரும் விளக்கமாவது --

ஷஷஇரண்டாம் அதிகரணத்தில் ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி

இல்லை எனக் கூறியதனால் உலகிற்கு முதற் கடவுள் சங்கார கர்த்தா எனப் பெறப் படுகிறது.  ஆயினும் தேர் முதலாயின பலர் கூடிச் செய்யக் காண்பது போல, உலகிற்குச் சங்காரக் கடவுள் பலர் உண்டெனக் கொள்ளலாம் என்று பிறமதத்தார் கூறுவர். இதனை ஆசிரியர் எடுத்துக்கொண்டு இந்த அதிகரணத்தின் மூலம் சங்காரக் கடவுள் ஒன்றே என்று பொருள் பொதிய எழுதியுள்ளார்.||

இதற்குரிய ஏது ஷஷசுட்டு உணர்வாகிய பிரபஞ்சம் , சுட்டு உணர்வு இன்றி நின்ற சங்காரத்தின வழி அல்லது, சுதந்திரம் இன்றி நிற்றலான்|| என்பதாகும்.  இதற்குப் பொருள் ஷஷஒன்று ஒன்றாய் அறிவதாகிய உருவும் அருவும் என்று இருவேறு வகைப்பட்ட சேதனப் பிரபஞ்சம் ( அறிவு உலகம்) ஆகிய உயிர் அவ்வாறு சுட்டி அறிதல் இன்றி, எவ்வுலகும் ஒன்றாய் அறிந்து நின்ற சங்கார கருத்தாவாகிய இறைவனின் வசப்பட்டு, பரதந்திரமாய் நிற்பது அல்லது தனக்கெனச் சுதந்திரம் உடைத்தாய் நிற்காது . ஆதலால் சுதந்திரம் உடைய சங்காரகாரணனே உலகிற்கு முதற் கடவுள் என்றும் , ஏனையோர் முதற் கடவுள் அல்ல|| என்பதும் இம்மேற்கோளால் அறிகின்ற பொருளாகும். 

இந்த ஏது மேற்கோளால் தடைகளும் விடைகளும் கிடைக்கின்றன.  தடை எழுப்புகின்றவர்கள் இந்த உலகத்திற்கு முதற் காரணம் பல கடவுளர்கள் என்ற கருத்தினை உடையவர்கள் ஆவார்கள். எனவே தேர் முதலியன பலர்கூடிச் செய்யப் படுவது போல. இவ்வுலகத்தை ஒருவனே செய்வான் என்பதற்குப் பிரமாணம் ஏதும் இல்லை - வேதத்தில் சிற்சில இடங்களில் நாராயணன், பிரமன், இந்திரன், அக்கினி, சூரியன் எனப் பல கடவுளர்களையும் முதற் கடவுள் என்று கூறப்பட்டுள்ளது.  எனவே கடவுளர் பலர் என்று கூறுவதே பொருந்தும் என்பது இவர்களுடைய வாதம். 

அதுபோல மற்றொரு விதத்திலும் தடை எழுப்புவது உண்டு. உலகத்தில் இயற்கைப் பொருள்கள் பல உள்ளன. அவற்றை எல்லாம் சங்காரக் கடவுளாகிய சிவபெருமானே படைத்தான் என்று ஏற்றுக் கொண்டாலும், செயற்கைப் பொருளாகிய குடம், ஆடை, தேர் போன்றவற்றைக் குயவன், நெசவாளி, தச்சன் ஆகியோர் செய்வது போல, உலகத்தைப் படைப்போரும் பலவகையாக இருக்கலாம் என்று தடை எழுப்புவார்கள். 

இந்த மூன்றாவது அதிகரணம் இவற்றை எல்லாம் மறுத்து, சங்கார காரணனாகிய சிவபெருமான் ஒருவனே முழுமுதற் காரணன் ஆவான்  என்பதை நிலை நாட்டுகிறது. மேற்;கோளில் உலகம் தானே படைத்துக் கொள்ளச் சுதந்திரம் இல்லை என்பதைக் குறிக்கச் சுட்டு உணர்வாகிய பிரபஞ்சம் என்று குறிக்கப் பெற்றிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இறைவனுக்குத் தன்வயத்தனாதல் என்ற சுதந்திரம் உண்டு என்பதைக் குறிக்கச் சுட்டுணர்வு இன்றி நின்ற சங்காரம் என்று குறிக்கப் பெற்றிருக்கிறது. முன் கூறிய தடைகளுக்கு விடையாகக் கீழ்வரும் செய்திகளைக் குறிக்கலாம். 

தேர் போன்ற பொருளைப் பலர் ஒருங்கு சேர்ந்து செய்தாலும் அவர்கள், தலைமைத் தச்சர் ஒருவரின் ஏவல்படியே செய்வார்கள் என்பது உலக இயற்கையாகும். அவ்வாறு பணியாற்றவில்லை என்றால் தேர் அழகாக அமையாது.  அது போலத்தான் முதற் கடவுள் ஒருவன் இல்லை என்றால் உலகம் செவ்விதமாக அமையாது. வேதத்தின் சில இடங்களில் நாராயணன், பிரமன் ஆகியோர் முதற் கடவுளராகக் குறிக்கப் பெற்றாலும், அவர்கள் ஏவுதல் கர்த்தாவாகிய இறைவனுக்குக் கீழே பணியாற்றுகின்ற இயற்றுதல் கர்த்தாக்கள் ஆவார்கள்.  மேலும் சங்கார கடவுளாகிய சிவனே மூன்று தொழில்களையும் செய்பவனாக விளங்குவான் என்பது தோத்திரங்கள் கூறுகின்ற செய்தியாகும். 

ஷஷநம்மவர் அவரே மூவர் என்றே எம்பிரானோடும் எண்ணி - விண்ஆண்டு மண்மேல்- தேவர் என்றே இறுமாந்து என்னபாவம் திரிதவரே|| (திருவாசகம், திருச்சதகம் -4)

ஷஷமலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் மூவராகிய முதல்வர் ஒருவன் மேயது முதுகுன்றே||(திருஞானசம்பந்தர், 1-53-1) 

ஷஷமூவரு ருத்தனதாம் மூல முதற் கருவை||என்று சுந்தரரும் (7 - 84 -7)

ஷஷமூவர் கோனாய் நின்ற முதல்வன் ||(திருவாசகம், திருச்சதகம் - 30)

ஷஷஅரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனும் தானே|| என்று திருக்கயிலாய ஞான உலாவும் கூறுவதால், மூவராய் நின்ற சிவனே அதாவது சங்கார காரணனே உலகிற்கு முதலாவான் என்பது வலியுறுத்தப் பெறுகிறது.  

மேலும் செயற்கைப் பொருளைச் செய்கின்ற குயவரை உதாரணமாகக் கொள்ளலாகாது. ஏனென்றால் அக்குயவன் முதலானவர்களையும் தொழில் படுத்துகின்ற இறைவன் ஒருவன் உண்டு என்பதை உணரவேண்டும். ஏனென்றால் குயவன் போன்றவர்கள் முதற் காரணமாக ஆக மாட்டார்கள்.  அவர்கள் இடைக்காரண கர்த்தாக்கள் ஆவார்கள் என்று பிறரின் தடைக்குரிய விடைகள் சிவஞானபோத உரையாசிரியர்களால் கூறப் பெற்றுள்ளன. 

முதல் சூத்திரம் மூன்றாம் அதிகரணத்திற்கு ஒரு உதாரணப் பாடலே அமைந்துள்ளது. அப்பாடலின் கருத்துப்படி உயிர்களானவை பரம்பொருளாம் இறைவனால் முத்;தொழில் படுதலானும், முத்தி பெற்ற காலத்தும் அடிமையாதலாலும்  அப்பரம்பொருளாகிய சங்காரக் கடவுள் ஒன்றேயாகும் என்பதனை வலியுறுத்துகிறது. எனவே சிவஞானபோத முதற் சூத்திரத்தின் மூன்றாம் அதிகரணத்தால் அந்தம் என்ற சங்காரத்தினை நடத்துகின்;ற ஆதி என்னும் முதல்வனாகிய சிவபெருமானே காரணம் என்பது வலியுறுத்தப் பெறுகிறது. 

இதனை அடியொற்றிச் சிவஞான சித்தியார் ,

ஷஷஉரைத்தஇத் தொழில்கள் மூன்றும் மூவருக்கு உலகம் ஒத

வரைத்துஒரு வனுக்கே ஆக்கி வைத்ததுஇங்கு என்னை?  என்னின்,

விரைக்கம லத்தோன்  மாலும், எவலான் மேவி னோர்கள்

புரைத்தஅதி கார சத்தி, புண்ணியம் நண்ண லாலே|| (சுபக்கம், பா. 54)

இப்பாடல் மூலம் முத்தொழில்களும் அயன் மால் அரன் என்னும் மூவருக்கும் உரியன என்று உலகம் சொல்ல, சிவபெருமானுக்கே உரியது என வரைந்தெடுத்துச் சொல்வது என்படி என்றால், அயல், மால் இருவரும் முன்செய்த புண்ணிய விசேடத்தால் அரனது அதிகார சத்தியைப் பெற்றுத் தத்தம் தொழில் செய்வரே அன்றி, அத்தொழிலுக்கு அவர் சுதந்திரர் அல்லர்.  முத்தொழிலும் செய்யும் சுதந்திரம் சங்காரணன் ஆகிய அரனுக்கே உரியது என்று அருணந்தி சிவாசாரியார் உணர்த்துகிறார். 

இவரின் இக்கூற்றின் படியும் , அந்தமாகிய சங்காரணனே ஆதியாகிய சிவபெருமான் என்பது பெறப்படுகிறது. 

இறைவன் தான் ஆதியாகிய முதல்வன் என்பதைத் திருமுறைகள் பலவாறு உரைக்கின்றன. 

ஷஷஅடியார் தமக்கு ஆதியாகி நின்றார் அன்னி யூரரே||( 5 - 8 - 4)

ஷஷஆதியைக் கெடுமா செய்த சங்கரன் - ஆதியை பழையாறை வடதளிச் சோதியை|| ( 5 55 6)

ஷநல்லூர் அருட்துறையுள் ஆதி உனக்கு ஆளாய் எனலாமே||( 7 - 1 -5)

ஷஷபோற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே||(திருவாசகம்,திருப்பள்ளிஎழுச்சி_பா.1)

ஷஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே

மாதர் மேல் மனம் வைத்தனை|| ( பெரியபுராணம் , பா. 37)

     ஷஷஆதி மூர்த்தி கழல் வணங்கி

  அங்கண் இனிதின் அமரும் நாள்||( பெரியபுராணம் ,பா.2875) 

என்று சிவபெருமானை ஆதி முதல்வன் என்று குறிப்பிடுகின்றன. 

எனவே அந்தம் ஆதி என்ற தொடருக்குரிய பொருளில் ஆதி என்பதைத்  திருமுறைகள் முதல்வன் அல்லது தலைவன் என்ற பொருளில் குறிக்க, சாத்திரங்கள்  அந்தமாகிய தொழிலைச்; செய்கின்ற ஆதி காரணன் என்று உலகிற்கு முதல்வன் சிவபெருமானே என்று வலியுறுத்துகின்றன. 

      திருச்சிற்றம்பலம். 

 


சீவகசிந்தாமணியின் உவமை நலம்.

  சீவகசிந்தாமணியின் உவமை நலம். 

மேல்நாட்டுத் தமிழறிஞர் ஜி.யு.போப்பையர் திருத்தக்கத் தேவரைத் தமிழ்க் கவிஞருள் அரசர் என்றும், சிந்தாமணியைக் கிரேக்கக் காப்பியங்களுக்கு இணையானது என்றும் புகழ்கின்றார்.   இவ்வாறு போற்றப் பெறும் சீவகசிந்தாமணி தமிழ்மொழியின் உள்ள காப்பியமே அன்றித் தமிழ்க் காப்பியம் அன்று. அதன் கதை தமிழ் மரபுக் கதையுமன்று. இக்கதை வடமொழியில் சந்திரசூடாமணி, கத்திய சிந்தாமணி, சீவந்திர நாடகம், சீவந்திர சம்பு ஆகிய நூல்களில் காணப்படுகிறது.  வடமொழி நூலான மகாபுராணத்திலும், அதன் தமிழ்மொழி பெயர்ப்பான ஸ்ரீபுராணத்திலும் உண்டு என்பர்.   இச்சிந்தாமணியின் காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி அல்லது பத்தாம் ந}ற்றாண்டின் தொடக்கம் என்று ஆய்வாளர் குறிப்பிடுவர்;. அதிலும் பேராசிரியர் கா.சு. பிளளை அவர்கள் சீவகசிந்தாமணியின் பாயிரத்தில் வரும் பொய்யாமொழி என்ற தொடர் மைசூர் கங்கமன்னர் சத்தியவாக்கியன் என்று கூறப்படுவதால் இதன் காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாகவே அமையும் என்று கருதுவார்.   இவ்வாறு ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாக விளங்கும் சீவகசிந்தாமணிக் காப்பியம் காப்பிய வளர்ச்சியில் பல மாற்றங்களைத் தந்ததாகும.  சங்க இலக்கியங்கள் ஆசிரியப்பாவில் அமைந்திருக்க, சீவகசிந்தாமணி விருத்தப் பாவில் அமைந்தது. ஒரே வகையான விருத்தப் பாக்கள் இல்லாமல் காப்பியத்தின் கருத்திற்கேற்ப வௌ;வேறு சந்தங்களை அமைத்துக் கொண்ட பல விருத்தப் பாக்களைப் பெற்றதாகும். இதனை ஒட்டியே பிற்காலப் புலவர்கள் விருத்தப்பாக்களைக் கொண்டு தங்கள் நூல்களைப் படைத்தார்கள்.  சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்கள் நேரிடையாகக் கதைத் தொடர்பைத் தொடங்க, சீவகசிந்தாமணி நாட்டுப்படலம், நகரப் படலம் என்ற பகுதியை அமைத்து ஒரு புரட்சியைச் செய்தது. 

முதலில் தாம் வழிபடும் தெய்வத்தை வாழ்த்தி, பின் அவையடக்கம் கூறிக் காப்பியம் தொடங்குகிறது.  இந்த அமைப்பு சிலப்பதிகாரத்திலோ, மணிமேகலையிலோ காணப் பெறவில்லை. சீவக சிந்தாமணி தொடங்கிய இப்புதியமுறையைப் பின்னால் வந்த காப்பியங்களும், புராணங்களும் பின்பற்றத் தொடங்கின. இத்தகைய சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் நாட்டுப்படலத்தில் அமைந்த உவமைகளில் ஒரு சிலவற்றை எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 

உவமையின் சிறப்பு

உவமை தோன்றுவதற்குரிய நிலைக்களன்களாக ஒரு பொருளின் சிறப்பு, அதன் நலன், அதன்மேல் கொண்டுள்ள பேரன்பு, அதன் வலிமை என்ற நான்கினைத் தொல்காப்பியர் குறிப்பிடுவார். 

ஷஷசிறப்பே நலனே காதல் வலியொடு 

அந்நால் பண்பும் நிலைக்களம் என்ப|| 

என்பது உவமையின் நிலைக்களத்தைக் குறிப்பிடவந்த சூத்திரமாகும். ஷஷஏதேனும் ஒப்புமைக் கூறு பற்றி வேறுபட்ட இரு பொருட்களை ஒன்றனைப் போன்றது பிறிது ஒன்று எனக் கூறுவது உவமையாகும்.  இந்த உவமை இக்காலத்தில் உத்தி நிலையில் ஒன்றாகக் கொள்ளப் படுகிறது.||  இத்தகைய உவமையின் ஆட்சியைச் சீவகசிந்தாமணியில் பரக்கக் காணலாம். சீவகசிந்தாமணி 13 இலம்பகங்களைக் கொண்டது. அதில் முதல் இலம்பகமான நாமகள் இலம்பகம் இறைவாழ்த்து, அவையடக்கம், பதிகம் ஆகியவற்றோடு நாட்டுவளம் என்ற பகுதியைக் கொண்டதாகும்.  இந்த நாட்டுவளம் மொத்தம் 49 பாடல்களைக் கொண்டது.   இப்பகுதியில் காணப்படுகின்ற உவமைகள் படித்துப் படித்துச் சுவைக்கத் தக்கனவாகும்.  அவற்றில் ஒரு சிலவற்றைக் காண்போம். 

இறை உவமை

சீவகசிந்தாமணி ஒரு சமயக் காப்பியம் என்பதில் ஐயமில்லை.  சமண மதத்தைச் சார்ந்த சீவகன் வரலாற்றைக் கூறும் இக்காப்பியத்தில் சமண சமயத்தின் கருத்துக்கள் மட்டும் அமையாது பிற சமயங்களின் புராணச் செய்திகள், கடவுளரின் சிறப்புக்கள் ஆகியவையும் அமைந்து காப்பியப் புலவராம் திருத்தக்கத் தேவரின் சமயப்பொறை வெளிப் படுகிறது. நாட்டுவளத்தைக் கூறும் தொடக்கத்திலேயே சமணத் தெய்வத்தையும், சைவத் தெய்வத்தையும் உவமையாக ஒரே பாடலில் அமைத்துச் சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத் தேவர் தம் பொதுஉணர்வை வெளிப்படுத்தி விடுகிறார். ஏமாங்கதநாடு என்னும் காப்பியத் தலைவனின் நாட்டில் மழையின் வளத்தைக் கூறவந்த ஆசிரியர் பின்வருமாறு செய்தியை அமைக்கிறார். 

விளங்குகின்ற ஆணைச்சக்கரத்தை உடைய பரதேஸ்வரர் என்னும் சக்கரவர்த்தியின் யானைக் கூட்டம் போன்ற மேகங்கள் , அலைகளை உடைய கடல்நீரைப் பருகின. கரு முற்றும் அளவும் மலையைச் சார்ந்திருந்தன.  பிறகு வானிலே பரவி பொன்னின் நிறத்தைக் கொண்ட கொன்றை மலர் அணிந்த சிவபெருமானின் சடையைப் போல் மின்னி வாய்விட்டு முழங்கின என்று உவமை அமைந்துள்ளது.  

இலங்க லாழியி னான்களிற்று ஈட்டம்போல்

கலங்கு தெண்திரை மேய்ந்து கணமழை

பொலம்கொள் கொன்றையினால் சடைபோல் மின்னி

விலங்கல் சேர்ந்துவிண் ஏறிவிட்டு ஆர்த்தவே|| 

என்பது உவமை அமைந்த பாடலாகும்.  இப்பாடலில் இலங்கலாழியினான் என்ற சொல் சூரிய குலத்தில் பிறந்த நாபி மகாராஜாவின் பௌத்திரரும், ஆதி தீர்த்தங்கரரான விருஷபஸ்வாமியின் புத்திரருமான பரதேஸ்வர சக்கரவர்த்தியைக் குறிக்கும் என்றும், இவர் பரதராச சக்கரவர்த்தி என்றும் , இவர் நாற்பத்தெட்டு லட்சம் யானைகைள உடையவர் என்றும், இவர் பனிரெண்டு மகா சக்கரவர்த்திகளில் முதல்வர் என்றும் மகாபுராணம் குறிப்பிடும்.    இக்குறிப்பின்படி மழை மேகம் சமணர்களின் தெய்வமான தீர்த்தங்கரரின் யானைக் கூட்டம் போல் பரந்திருந்தது என்ற உவமையையும், அது  சைவக் கடவுளாகிய சிவபெருமானின் சடையைப் போல் மின்னியது என்றும் உவமைகளையும் பெற்று இப்பாடல் விளங்குகிறது. இதன் மூலம் திருத்தக்கத் தேவரின் சமயப்பொறை விளங்குவதோடு தொடங்குகின்ற முதல் உவமையே கடவுளரைப் பற்றிய உவமையாக அமைந்து சிறப்பினைத் தருகிறது. 

சீவகசிந்தாமணி ஆசிரியரின் இந்த உணர்வைப் பின்வந்த காப்பியமான கம்ப இராமாயணத்திலும் காணமுடிகிறது. 

நீறுஅணிந்த கடவுள் நிறத்த வான்

ஆறுஅணிந்து சென்று ஆர்கலி மேய்ந்துஅகில்

சேறுஅணிந்த முலைத் திருமங்தைதன்

வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே||  

என்ற பாடலைச் சீவகசிந்தாமணிப் பாடலோடு ஒப்பிடும் போது உவமையின் இன்பம் உணரப்படும். 

கல்வி உவமை

மழை பொழிந்து நீர்வளம் மிக்கு வயல்களில் நிறைந்து உழவுத் தொழில் சிறப்பாக நடைபெற்றது. அதன் பயனாகிய நெற்கதிரின் தோற்றத்தைச் சீவகசிந்தாமணி ஆசிரியர் ஒரு பாடலில் விளக்குகிறார்.  அப்பாடலில் இயற்கைநலம் கொஞ்சி விளையாடுவதை அறிய முடிகிறது. 

சொல்அருஞ்சூல் பசும்பாம்பின் தோற்றம் போல்

மெல்லவே கருஇருந்து ஈன்று மேல்அலார்

செல்வமே போல் தலைநிறுவித் தேர்ந்தநூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே|| 

இப்பாடலின் பொருள் - நெற்பயிர்கள் சூல்கொண்ட பச்சைப்பாம்பின் தோற்றம் போலக் கருவினைப் பெற்றுச் செல்வம் பெற்ற கீழ்மக்களைப் போலக் கதிர்விட்டுத் தலைநிமிர்ந்து நின்று, முற்றினவுடன் தெளிந்த நூலைக் கற்ற நல்லவர்களைப் போலத் தலை வணங்கி விளைந்தன என்பதாகும்.  இதில் பச்சைப்பாம்பு, செல்வத்தார், கற்றவர் ஆகிய மூன்று பொருள்கள் உவமையாக அமைந்துள்ளன. கல்லாதவரும் தாழ்ந்த குடியில் பிறந்தவரும் செல்வம் பெற்றால் எப்படி இருக்குமோ அதுபோல நெற்கதிர் பயிரை ஈன்றது என்றும், கற்ற்வர்கள் எவ்வாறு பணிந்து இருப்பார்களோ அதுபோலக் கதிர்முற்றி தாழ்ந்தது என்றும் உவமை இடம் பெற்றிருப்பதால் கல்வி உவமை இங்கு சிறப்பாக அமைந்துள்ளது எனலாம்.  சூல்கொண்ட பாம்பு இங்கு உவமையாய் இருப்பது போலக் குறுந்தொகையிலும் இவ்வுவமை கையாளப் பெற்றிருக்கிறது. 

சினைப் பசும்பாம்பின் சூல்முதிரப்பு அன்ன

கனைத்த கரும்பின் பூம்பபொதி அவிழ|| 

என்ற சங்கஇலக்கியப் பகுதி இவ்வுவமையோடு ஒப்பிட்டுக் காணத் தக்கதாகும். 

நாடக உவமை

ஏமாங்கத நாட்டு வளத்தைக் கூறவந்த ஆசிரியர் ஒரு நாடகக் காட்சியை உவமையாக்கி மகிழ்விக்கின்றார்.  அன்னச் சேவல்கள் சோலையில் கூடு கட்டிக் கொள்வதற்காக இதழ் விரிந்த அழகு மிக்க தாமரைப் பூக்களைக் கவ்வின. அவ் அன்னச் சேவல்கள் நீர்த்தடாகத்தில் விளக்குப் போலக் காட்சி அளித்தன.  நீர்த்தடாகம் நாடக மேடைபோல் காட்சி அளித்தது. அங்கு ஒலித்துக் கொண்டிருந்த குயிலோசை முழவு போல் ஒலித்தது.  பீலியை உடைய மயில் ஆடல் மகளிர்போல் தோன்றி மறைந்தது என்று காட்சியை அமைத்துள்ளார் திருத்தக்கத்தேவர். 

சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்விப்பூக்

காவில் கூடு எடுக்கிய கவ்விக் கொண்டிருந்தன

தாஇல் பொன்விளக்கமாம் தண்குயில் முழவமாத்

தூவி மஞ்சை நன்மணம் புகுத்தும் தும்பிக் கொம்பரோ|| 

என்பது பாடலாகும்.  இப்பாடலோடு சூளாமணியில் வருகின்ற பாடல் ஒப்பிடத் தக்கதாகும். 

தும்பிவாய் துளைக்கப்பட்ட கீசகம் வாயுத்தன்னால்

வம்ப வான் குழலி னேங்க மணியறை அரங்கமாக

உம்பர்வான் மேகசால மொலி முழாக் கருவியாக

நம்பதேன் பாட மஞ்சை நாடக நவில்வ காணாய்|| 

என்பது பாடலாகும். 

கழைக் கூத்து உவமை

நாள்தோறும் நிகழும் நிகழ்ச்சிகளை உவமையாக்கிப் பாடுகின்ற மரபு கவிஞர்களிடையே உண்டு.  அதற்கு எடுத்துக்காட்டாகச் சீவகசிந்தாமணியின் கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது. 

கூடினார்கள் அம்மலர்க் குவளைஅம் குழியிடை

வாடு வள்ளை மேலெலாம் வாளை ஏறப் பாய்வன

பாடுசால் கயிற்றில் பாய்ந்து பல்கலன் ஒலிப்பப் போந்து

ஆடுகூத்தி ஆடல் போன்ற நாரை காண்பது ஒத்தவே|| 

என்பது பாடல். இப்பாடலின் பொருள் - காதலரோடு கலந்த பெண்களின் கண்கள்போல, மலர்ந்த குவளைகள் நிறைந்த நீரோடையில் நீர் குறைதலால் சிறிதே வாடிய வள்ளைக் கொடிமேல் வாளை மீன்கள் ஏறிப் பாய்ந்தன.  அவ்வாறு பாய்வது எதுபோல இருந்தது என்றால் கழைக்கூத்தாடி ஒருத்தி கழையினின்றும் இறங்கி அருகில் உள்ள கயிற்றிலே குதித்து ஆடுவதைப் போல் இருந்தது . கரையில் இருந்த நாரைகளின் கூட்டம் அந்தக் கூத்தினைக் காணுகின்ற மக்களை ஒத்திருந்தன என்பதாகும்.  இங்கு வாளை மீன்கள் வள்ளைக் கொடியில் பாய்வது கழைக்கூத்தாடும் பெண் மூங்கில் கம்பிலிருந்து மூங்கில் கட்டப் பெற்ற கயிற்றில் குதித்தது போல் இருந்தது என்ற உவமை அன்றாட நிகழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. இப்பாடலில் உவமையாக வேண்டிய குவளைப்பூ உவமேயமாகவும், பொருளாக வேண்டிய கண்கள் உவமையாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.  அதாவது கணவரோடு கூடி இன்பம் துய்த்த பெண்களின் கண்கள் எவ்வாறு மலர்ந்து காட்சி அளிக்கின்றதோ அதுபோலக் குவளை மலரந்தது என்ற செய்தி பாடலில் அமைந்துள்ளது. இப்பகுதியோடு கீழ்;வரும் பெருங்கதைப் பாடற்பகுதியை ஒப்பிடலாம். அதாவது தம் கணவரோடு கூடிய மகளிரின் கண்கள் மலருக்கு உவமையாக்கப் பெற்றிருப்பதை அப்பாடற் பகுதியிலும் காணமுடிகிறது. 

புணர்ச்சி மகளிர் போகத்துக் கழுமித்

துயில்கண் திறந்த தோற்றம் போல|| 

என்பது அப்பகுதியாகும்.  

முடிவு

இவ்வாறு ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியின் முதற் பகுதியான நாமகள் இலம்பகத்தில் நாட்டுவளப் பகுதியில் பல்வேறுபட்ட உவமைகள் இடம்பெற்று இலக்கிய நயத்தைத்; தருகின்றன. சமயத் தெய்வங்களையும், கல்வி வல்லுநர்களையும், நாடக மேடையையும், கழைக்கூத்தாடியையும், மகளிரின் கண்களையும் உவமைகளாக்கிப் பயில்வோரின் உள்ளத்தில் உவகையை ஏற்படுத்தும் ஆசிரியரின் திறன் போற்றுதற்கு உரித்தாகும். 


சீவகசிந்தாமணியில் இயற்கை இகந்த நிகழ்வகள்



சீவகசிந்தாமணிக் காப்பியம் தமிழில் வாழும் தலைசிறந்த இலக்கியம் ஆகும். இது காதலைப் பாடும் உணர்ச்சி மிகுந்த பெருங்காப்பியம். ஹோமர் படைத்துள்ள இலியத், ஒதிவி ஆகிய பெருங்காப்பியங்களுக்கு நிகரானது. உலகப் பெருங் காப்பியங்களில் இதுவும் ஒன்று என்று குறிப்பிடுவார் ஜி.யு.போப்.   சீவகசிந்தாமணி என்பது செந்தமிழின் முதல் பேரிலக்கியம். சமணசமயக் காவியம். அந்நூலில் மறைமலை அடிகளார்க்கு இருந்த ஆழ்ந்த சுவை உணர்ச்சியின் வெளி உருவம்தான் சிந்தாமணி என்று தன் பெண்ணின் பெயராக அமைந்தது.   இத்தகைய சீவகசிந்தாமணி தமிழுக்கே உரிய காப்பியம் இல்லை என்றாலும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட காப்பியம் ஆகும்.  சீவகன் கதையை வடமொழியில் கூறும் நூல்கள் பலவற்றுள் ஒன்று சீவந்திரசம்பு என்பதாகும். இதனை இயற்றியவர் அரிச்சந்திரகவி என்பவராவார். இக்கதையில் இடம்பெற்ற செய்திகள் சீவகசிந்தாமணிக்கு அடிகோலின. இக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள இயற்கை இகந்த நிகழ்வுகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 

ஷஷஇயற்கை இகந்த ஆற்றல்கள் காப்பியக் கவிஞரால் இலக்கிய உத்தியாகப் பயன் படுத்தப் பெறுகிறது.  அரிஸ்டாட்டிலின்  கவிதை இயல் இதனைக் காப்பியக் கூறாகவே நினைக்கின்றது. மிகத் தேவையானதாகவும் எண்ணுகின்றது என்பர்   மீவியற்கை என்று கூறப்படும் இந்த இயற்கை இகந்த ஆற்றல் மூவகையாகப் பகுத்துக் கூறப்படும். 1. கவிதைச் சிறப்பிற்காக அமைக்கப் படுவது. 2.  நடப்பில் காண்பதை விடச் சிறந்ததாக அமைவது. 3.  பழைய மரபில் உள்ளனவற்றைக் குறிப்பிடுவது என்று மூன்று வகையாக ஆய்வாளர்கள் கருதுவார்கள்.   

சீவகசிந்தாமணியில் இயற்கை இகந்த நிகழ்வகள் காப்பியக் கட்டுக்கோப்பிற்கு இன்றியமையாதனவாக அமைகின்றன.  இந்த நிகழ்வு இல்லையென்றால் காப்பியச் சுவை குறைந்து விடும் என்ற அளவிற்குக் காப்பிய நடையோடு இந்த நிகழ்வுகள் இணைந்துள்ளன. 

பாத்திரங்கள் 

இயற்கை இகந்த நிகழ்வுகளை இயக்கும் பாத்திரங்கள் பல சிந்தாமணியில் இடம் பெற்றுள்ளன. கலுழவேகன் என்பவன் வித்தியாதர அரசனாகப் படைக்கப் பெற்றிருக்கிறான். இவன் தரன் என்ற ஒருவனால் சீதத்தனை விச்சாதர உலகிற்கு வரவழைக்கிறான். சீதத்தன் இவ்வுலகத்து மானுடன். இவன் கப்பலில் செல்லும் போது தரன் மயக்கி கலுழவேகன் தன்பால் அழைத்துக் கொள்கிறான்.  எனவே தேவர் உலகத்துப் பாத்திரமான விளங்குகின்ற கலுழவேகனும் அவனுடைய பணியாளாகிய தரனும் இயற்கை இகந்த பாத்திரங்களாக நம்மால் காணமுடிகிறது. 

அதுபோல மந்திரச் சொற்களால் நாய் ஒன்று இயற்கை இகந்த பாத்திரமாக அமைகிறது. சீவகன் அருகதேவனின் மந்திரத்தைக் கூற, அந்தணர்களின் உணவை வெளவித் தின்ற நாயானது சுதஞ்சனன் என்ற தேவனாக மாறுகிறது. அவன் சீவகனுக்கு நண்பனாகிப் பலவிதத்திலும் உதவி செய்கின்றான்.  எனவே இயற்கை இகந்த பாத்திரமாகச் சுதஞ்சனன் விளங்குகின்றான். 

இக்காப்பியத்தில் குணமாலை தூது விட்ட கிளியும் சீவகனிடம் பேசுவது போல் படைக்கப் பெற்றிருக்கிறது. அக்கிளி பேசுவதோடு அல்லாமல் மடல் ஒன்று பெற்று வந்து குணமாலையிடம் கொடுக்கிறது. எனவே சொல் கூற இயலாத கிளி பேசுகின்ற மானுடன் போல் படைக்கப் பெற்றது இயற்கை இகந்த பாத்திர அமைப்பாகும். 


சிந்தாமணியில் அசரீரி என்ற தேவலோக ஒலி ஒரு இயற்கை இகந்த பாத்திரமாகப் படைக்கப் பெற்றிருக்கிறது. கட்டியங்காரன் இறப்பான் என்பதை அசரீரி கூறியதாக  அமைக்கப் பெற்றிருப்பது இதற்கொரு சான்றாகும். இவ்வாறு இயற்கை இகந்த பாத்திரங்கள் சீவகசிந்தாமணியில் இடம் பெற்றுக் கதையின் கட்டுக்கோப்பிற்கு உதவுகின்றன. 


மயிற்பொறி

வானவூர்திகள் பயன்படுத்தப் பெறுகின்ற இக்காலத்திய இயந்திர அறிவு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சீவகசிந்தாமணியிலேயே இருந்தமை புலனாகின்றது. சச்சந்தன் விசயையினிடத்துக் காமம் மிகுதியுடையவனாய் வாழ்ந்த பொழுது அவளைக் காப்பதற்காக மயில் ஊர்தி ஒன்றைத் தச்சன் ஒருவனிடம் செய்யுமாறு கூறுகின்றான். அந்த மயில் ஊர்தி எந்திர ஊர்தி என்பதனைத் திருத்தக்கத்தேவர் குறிப்பிடுகின்றார். 

ஷஷவெந்திறலான் பெருந்தச்சனைக் கூவிஓர் 

எந்திரஊர்தி இயற்றுமின் என்றான்|| 

என்ற பகுதி மயில்ஊர்தியை எந்திரஊர்தி என்று குறிப்பிடுவது சிறப்புடையதாகும். பொறிஇயல் திறன் இல்லாத காலத்தில் திருத்தக்கத்தேவரால் கற்பனையாக ஒரு எந்திர ஊர்தி கண்டுபிடிக்கப் பட்டது என்பது இயற்கை இகந்த நிகழ்வுதானே. இந்த ஊர்தியைப் பல்வகைத்துணி, பச்சை வெள்ளை நூல், நல்ல அரககு,  மெழுகு இன்னும் பல பொருள்கள் சேர்த்து ஏழு நாட்களில் வானத்தில் பறக்கக் கூடியதாகத் தச்சன் செய்தான் என்று திருத்தக்கதேவர் குறிப்பிடுகிறார். இதனைக் கரட எந்திரம் என்று ஸ்ரீபுராணம் குறிப்பிடுவதாகக் கூறுவர்.   எனவே இரும்பு உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்படாது கற்பனையாகக் காப்பியப் புலவரால் படைத்துக் கொள்ளப் பெற்ற ஒரு எந்திரப்பொறி என்பதால் இயற்கைஇகந்த கருவியாக இதனைக் கொள்ளலாம்.  இது விசயையை ஏற்றிக் கொண்டு பறந்து செல்கிறது. இதனைத் திருத்தக்கத்தேவர் குறிப்பிடும் பொழுது, மயிலானது தன் தோகையைச் சுருக்கிக் கொண்டு கீழே இறங்குவது போல இயந்திரம் இறங்கியது என்றும், மயிலானது தன்னுடைய கால்களைக் குவித்து இறங்கியது போல இறங்கியது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.  எனவே எந்திர அமைப்பை ஒரு புலவரின் கற்பனையில் காணமுடிகிறது. 

மாயை நிகழ்வு

இயற்கை இகந்த நிகழ்வுகளில் மாயா வித்தை போலச் சில நிகழ்வுகள் அமைவது உண்டு. கலுழவேகன் சீதத்தனுடைய மரக்கலத்தை திடீரெனத் தோன்றிய புயற்காற்று மறைத்தது என்பதும், பின்பு சீதத்தன் தன்நாடு திரும்பும் பொழுது பழமையில் இருந்த படியே மீண்டும் அந்த மரக்கலம் தோன்றியது என்று கதையின் கட்டுக்கோப்பில் மாயா வித்தை போல அமைந்திருக்கிறது.  இதனைக் கீழ்க்கண்டவாறு புலவர் படைத்துள்ளார்.

ஷஷஓம்பிப் படைத்த பொருளும் உறுகாதலாரும்

வேம்பு உற்ற முந்நீர் விழுங்கல் விரையாது நின்றான்||  

என்ற பகுதியின் மூலம் சீதத்தனுடைய பொருளும், அவனுடைய உற்றாரும் மறைந்தமை கூறப்படுகிறது. இதே பொருள்கள் மீண்டும் தோன்றின என்பதும் மாயாவித்தையாகப் படைக்கப் பெற்றிருக்கின்றது. 

ஷஷபீழை செய்து பெற்றனன் வாழிஎன்று மாக்கடல்

ஆழ்வித்திட்ட அம்பியைத் தோழற்குச் சுட்டிக் காட்டினான்|| 

இப்பகுதியில் அம்பி என்று கூறப்படுகின்ற மரக்கலம் மீண்டும் தோன்றியது என்பது இயற்கை இகந்த நிகழ்வு ஆகும். 

மந்திரம்

மந்திரச் சொற்களால் இயற்கை இகந்த நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. குணமாலையார் இலம்பகத்தில் புறநகர்ச் சோலையில் அந்தணருடைய சோற்றுக் குவியலை நாய் ஒன்று தீண்ட அதனை அவர்கள் கல்லையும் தடியையும் கொண்டு தாக்கினார்கள். அடியின் துன்பத்தால் வலி பொறுக்க மாட்டாது நாய் வருந்திய பொழுது, அவ்வழியே வந்த சீவகன் பஞ்சநமஸ்காரம் என்னும் ஐம்பத மந்திரத்தை அதன் காதில் ஓதினான். உடனே அந்த நாய் விலங்குப் பிறப்பு ந்Pங்கிச் சுதஞ்சனன் என்ற பெயரோடு தேவனாக மாறிற்று என்பது கதையின் அமைப்பாகும்.  இது ஒரு இயற்கை இகந்த நிகழ்வாகும். பஞ்சநமஸ்காரம் என்ற மந்திரத்தைச் சீவகன் நாயின் காதில் கூறியதைக் கீழ்க்கண்டவாறு புலவர் பாடுகிறார். 

ஷஷமுற்செய்த வினையின் நீங்கி நல்வினை விளைக்கும் வித்து

மற்செய்து வீங்கும் தோளான் மந்திரம் ஐந்தும் மாதோ

தற்செய்கை தளிர்ப்பத் தாழ்ந்தாங்கு அதன்செவியில் செப்புகின்றான்|| 

என்று பாடற்பகுதி அமைந்துள்ளது. இங்கு நல்லவினை விளைவிக்கக் கூடிய அந்த வித்து ஐந்து மந்திரம் என்று கூறப்பெற்று அதன் வலிமையால் நாய்ப்பிறப்பு நீங்கித் தேவர் பிறப்பு அடைந்தது என்பதையும் கீழ்வருமாறு புலவர் குறிப்பிடுவார். 


ஷஷகூடிக் கோலம் குயிற்றிப் படங்களைந்து 

     ஆடுங் கூத்தரின் ஐயெனத் தோன்றினான்||  

என்பது அப்பாடற் பகுதி. இவ்வாறு பிறப்பு மாறிய நிகழ்ச்சி இயற்கை இகந்த நிகழ்ச்சியாகக் காப்பியத்தில் அமைந்துள்ளது. 

பிறநிகழ்வுகள்

குணமாலை தூது விட்ட கிளி சீவகனிடத்தில் பேசுவது இயற்கை இகந்த நிகழ்ச்சிக்கு ஒரு சான்றாகும்.  தன்னிடம் வந்த கிளியிடம் சீவகன் தான் அணிந்திருந்த மோதிரம் ஒளியை வீசப் பறவையை வரவேற்றுக் கையிலே அமர்த்திக் கொண்டான்.  அப்பொழுது அக்கிளி குணமாலை பெற்ற காமத் துன்பத்தை அழகுற எடுத்துக் கூறுகிறது. அவ்வாறு கூறுகின்ற சொற்கள் எல்லாம் இயற்கை இகந்த நிகழ்வாகும்.  

அதுபோல அச்சணந்தி முனிவர்  துறவு பூண்டு யானைத்தீ என்ற நோயுற்றதும் , சீவகனுக்கு மயிற் நீக்க வந்த நாவிதர் முற்பிறவியில் முனிவர் என்று கூறப் பெறுவதும், சீவகனுடைய முற்பிறப்புக் கதை நிகழ்வுகளும்  இயற்கை இகந்த நிகழ்வுகளாக அமைந்துள்ளன. 

பழமைக் கூறுகள்

காப்பியங்களில் இயற்கை இகந்த நிகழ்ச்சிக் கூறுகளில் ஒன்று பழமை நிகழ்வுகளை மீண்டும் கூறுவதாகும்.  சீவகசிந்தாமணியில் மிகப் பழைய புராணக் கதைகள் இடம் பெற்றுள்ளன. முருகன் பற்றிய குறிப்பு காப்பியத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளது.  முருகனின் பிறப்பு இயற்கை இகந்த நிகழ்வுகளில் ஒன்றாகும்.  அதுபோலத் திருமால் பாற்கடல் கடைந்தது( பா.492),சிவபெருமான் முப்புரம் எரித்தது(பா.2537), காமன், இந்திரன் இவர்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் இயற்கை இகந்த நிகழ்வுகளே ஆகும். 

புத்தரின் அருள் காரணமாக ஒரு பெண் கழுதை ஆனது; (பா.210) இயற்கை இகந்த நிகழ்வாகும்.  அதுபோல அணங்காமாவீணை பவதத்தன் வாழ்வும் இயற்கை இகந்த நிகழ்ச்சியாகப் படைக்கப் பெற்றுள்ளது. 

முடிவு

இவ்வாறு காப்பியப் போக்கிற்கு இன்றியமையாத நிலையில் நிகழாத ஒன்று நிகழ்வதாகக் கூறப்பெறும் மீவியற்கை நிகழ்வான இயற்கை இகந்த நிகழ்வுகள் சிந்தாமணியில் அமைந்து காப்பியத்திற்குச் சுவையூட்டுகின்றன எனலாம். இந்த நிகழ்வுகளைப் படைப்பாசிரியர் பல கோணங்களில் படைத்துள்ளார். பாத்திரங்களின் மூலமாகவும் ஒரு பிறப்பு மற்றொரு பிறப்பாக மாறுவதன் மூலமும், திடீரெனப் பொருள்கள் மறைவதும், பொருள்கள் மீண்டும் தோன்றுவனவாகவும், பேசாத உயிரினங்கள் பேசுவதாகவும், புராணச் செய்திகளாகவும் , கடவுளரின் அருட் செயல்களாகவும் இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் சீவகசிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கத் தேவரால் படைக்கப் பெற்றுள்ளன. 


கொண்டும் கொடுத்தும்.


முனைவர. பழ.முத்தப்பன்,

    முன்னாள் முதல்வர்,

கணேசர் செந்தமிழ்க் கல்லூரி


சைவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகும். திருப்பல்லாண்டில் இரண்டாவது பாடல் ,

ஷஷமிண்டு மணத்தவர் போமின்கள் 

மெய்யடியார்கள் விரைந்து வம்மின்

கொண்டும் கொடுத்தும் குடிகுடி

ஈசற்கு ஆட்செய் மின்'

என்பது அப்பாடலின் முன்பகுதியாகும்.   மதம் கொண்ட மனத்தவர்கள் அகலுங்கள், மெய்யடியார்கள் விரைந்து வாருங்கள். இறைவனின் அருளை ஏற்றுக் கொண்டு உடலையும் உயிரையும் இறைவனுக்கு அடிமையாக்கி வாழுங்கள் என்பதுபாடல் பகுதியின் பொருளாகும். இப்பாடற் பகுதியின் மூலம் ஆன்மாக்கள் இறைவனின் அருளைப் பெற்று, இறைவனுக்கு ஆட்பட வேண்டும் என்பது வலியுறுத்தப் பெறுகிறது ஆனால். ஆன்மாவுக்குக் கூறப்பட்ட இச்செய்தி இறைவனுக்கு ஆகிய முறைமையைச் சுந்தரர் வரலாற்றில் காண முடிகிறது. அதாவது சுந்தரர் பெருமானைத் தோழமையாகக் கொண்டு இறைவன் அவருக்கு ஆட்செய்தமையைச் சுந்தரர் வரலாற்றின் பல நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. எனவே இறைவன் சுந்தரரிடம் nகொண்டும் கொடுத்தும் எவ்வாறு விளங்கினான் என்பதைச் சிறிது சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 


தோழமை கொள்ளல்:

ஓலை காட்டி இறைவன் திருவெண்ணெய் நல்லூரில் ஆட்கொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பல திருத்தலங்களையும் வழிபட்டுச் சுந்தரர் திருவாரூர் திருத் தலத்திற்கு வருகிறார்.  திருத்தலத்து இறைவனாம் புற்றிடங்கொண்டாரை வணங்கிப் பதிகம் பாடிப் போற்றினார்.  அப்பொழுது ஒரு வாக்கு எழுந்தது என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் சுந்தரர் வரலாற்றில் குறிப்பிடுகிறார். 

ஷஷவாழிய மாமறை புற்றிடங் கொள்

மன்னவன் அரனருளால் ஒரு வாக்கு

தோழ மையாக உனக்கு நம்மைத்

தந்தனம் ' (பா121    )


என்று சே;கிகிழார் கூறுவதால் ; சுந்தரரை இறைவனே விருப்பமுற்றுத் தோழமையாக்கிக் கொண்டான் என்பது புலனாகின்றது.  சுந்தரர் இறைவனைத் தோழமையாகக் கொள்ள வேண்டும் என்று நிகழ்வு சுந்தரிடம் அமையாது இறைவனே சுந்தரரைத் தோழமையாகக் கொண்டார் என்று நிகழ்வைச் சேக்கிழார் அமைக்கிறார்.  இவ்வாறு அவர் அமைப்பதற்கு ஆதாரம் சுந்தரர் பாடிய திருநள்ளாற்றுப் பதிகத்தில் அமைந்த, 

ஷஅடியற்கு எளிவந்த தூதனைத் 

தம்மைத் தோழமை அருளி

தொண்டனேன் செய்யும் துரிசுகள் பொறுக்கும்

நாதனே' ( பா  )


2


என்று பாடிய பகுதி அமைகிறது.  எனவே சுந்தரரை இறைவன் தோழமையாகக் கொண்டான் என்பது பெறப்படுகிறது.  இவ்வாறு தோழமையாகக் கொண்ட இறைவன் எத்தகைய அருளைக் கொடுத்தான் என்பதைச் சுந்தரரின் வரலாற்றுச் செய்திகள் மூலம் சேக்கிழார் பல நிகழ்வுகளைத் தருகிறார். 

தந்தை, மாமன் உறவு:

திருவாரூரில் சுந்தரர் தங்கியிருந்த பொழுது பரவை நாச்சியாரைத் திருக் கோயிலில் சந்திக்கிறார். பரவையாரும் சுந்தரரை நோக்கினார். இருவரின் உள்ளத்திலும் காதல் அரும்பிற்று. காதல் வேட்கையால் சுந்தரர் இறைவனிடத்தில் பரவையைத் திருமணம் புரிந்து  கொள்ள உதவ வேண்டுகிறார்.  பரவையைத் திருமணம் செய்து கொள்ள மானிடர்களை நாடாது இறைவனை நாடிய சுந்தரரின் செயல் இன்றைய சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.  சுந்தரரின் வேண்டுகோளை ஏற்ற இறைவன் கனவில் சுந்தரரிடம், 

ஷஷமன்னும் புகழ் நாவலர்கோன் மகிழ

மங்கை பரவை தன்னைத் தந்தோம்

இன்ன இவ்வகை நம்அடியார் அறியும்

படியே உரைசெய்தனம் என்று அருளி' (பா50.  )


என்று அருளியதாகச் சேக்கிழார் குறிப்பிடுவார். இதன்படி இறைவன் தாமே பரவையாருக்குப் பெற்றோராகிச் சுந்தரருக்குப் பரவையை மணம் முடிக்கும் நிகழ்வை நிகழ்த்தியருக்கிறான் எனத் தெரிகிறது.  இவ்வாறு சேக்கிழார் பாடுவதற்குச் சுந்தரரின் திருவொற்றியூர் பதிகப் பாடல் அடிப்படையாக அமைகிறது. 

ஷஷஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய

தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு இடனாய்

மாழை ஒண்கண் பரவையைத் தந்து ஆண்டானை' (பா.   )


என்பது அப்பாடற் பகுதியாகும்.  சுந்தரரின் பரவையைத் தந்து என்ற தொடர் சேக்கிழார் பரவை தன்னைத் தந்தோம் என்று பாட வழிவகுத்தது எனத் தெரிகிறது.  எனவே மணப்பெண்ணைப் பெற்றோர் இன்றித் தாமே தருகின்ற அளவிற்குத் தந்தை, மாமனாய் உறவு முறையை இறைவன் சுந்தரருக்கு வழங்கியமை பெறப்படுகிறது. 


ஒப்பந்தக்காரர் பணி:

சுந்தரர் வரலாற்றில் இறைவன் சுந்தரருக்காகப் பல செயல்களைச் செய்திருக்கிறான். அதில் ஒன்று குண்டையூர் நெல்லை இறைவன் திருவாரூரில் நிரப்பிய பணி குறிப்பிடத் தக்கதாகும்.  இந்தச் செய்தியைச் சுந்தரர் பாடல் மூலமாகவும், சேக்கிழாரின் கவி மூலமாகவும் நடந்த நிகழ்வுகள் தற்கால ஒப்பந்தக் காரர் (கான்ட்ராக்டர்) பணியை நினைவூட்டுகிறது. 

இறைவனிடத்தில் சுந்தரர் ஷஷநீளநினைந்தடியேன் 'எனத் தொடங்கிக்' குண்டையூர் சில நெல்லுப் பெற்றேன்,ஆளில்லை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே' என வேண்டுகிறார்.  சுந்தரரின் வேண்டுகோள் இறைவன் மூலம் நடைபெறாது அவனின் ஆட்கள் மூலம் நடைபெற வேண்டுவது போல அமைகின்றது. இதனைக் கொண்டு சேக்கிழார் பெருமான் இந்த நிகழ்வைப் படைக்கும் பொழுது கீழ்வரும் தொடர்களை அமைக்கிறார். 

ஷஷபகற்பொழுது கழிந்ததன்பின் பரவைமனை 

அளவின்றி ஆரூர் நிறையப்

புகப்பெய்து தருவன நம் பூதங்களென

விசும்பில் நிகழ்ந்தது ஒரு வாக்கு'(பா.ஏய.21   )


என்பன அக்கவித் தொடர்களாகும். இன்றைய ஒப்பந்தக்காரர்கள் கட்டிடத்திற்குரிய பொருள்களைப் போக்குவரவுக்கு இடையூறு இல்லாமல் இரவுப் பொழுதில் கட்டும் கட்டிடத்திற்கு முன்னே எவ்வாறு நிரப்புவார்களோ, அதுபோலச் சேக்கிழார் பகற்பொழுது கழிந்து என்று குறிப்பிட்டு; இரவுப்பொழுதில் நெல்லைக் கொண்டு வந்து திருவாரூரில் சேர்ப்பதாகக் குறிப்பிடுகிறார்.  மேலும் ஒப்பந்தக்காரர்கள் தங்களுடைய தொழிலாளிகள் மூலம் பொருள்களை ஏற்றி இறக்குவார்கள் என்பதற்கேற்பச் சேக்கிழாரும் தருவன நம் பூதங்கள் என்று குறிப்பிட்டுச் சிவபெருமானின் பூதப் படைகள் அத்தொழிலைச் செய்யும் என்று குறிப்பிடுகின்றார்.  இத்தகைய அமைப்பு இன்றைய ஒப்பந்தக்காரர்களின் பணியை நினைவு படுத்துவதால் இறைவன் சுந்தரருக்கு ஒப்பந்தக்காரர் அடிப்படையில் நெல்லை ஏற்றி இறக்கியிருக்கிறார் எனத் தெரிகிறது. 


செல்வழித்துணை: (டூரிஸ்ட்டர்)


சுந்தரர் திருபபுறம்;பயத்தில் இருந்து திருமுதுகுன்றம் செல்ல முற்படுகின்றார். செல்லும் வழியில் திருக்கூடலையாற்றூர் திருத்தலம் உள்ளது. ஆனால் சுந்தரர் அத் திருத்தலத்திற்குச் செல்லாது நேரே திருமுதுகுன்றம் செல்வதற்கு முற்படுகின்றார். அந்த நேரத்தில் இறைவன் அவரைக் கூடலையாற்றூர் திருத்தலத்தை வணங்கச் செய்ய வேண்டும் என்று நினைந்து வேதியர் வடிவில் சுந்தரருக்கு எதிரே செல்கின்றான். அவரிடம் சுந்தரர் திருமுதுகுன்றத்திற்கு வழிகேட்க, அவருக்கு இது திருக்கூடலையாற்றூர் செல்வதற்கு வழி என்று கூறி அவரை அந்நகருக்கு அழைத்துச் சென்று விடுகிறார்.  இச்செயல் இன்றைய டூரிஸ்ட்டரின் செயல் போல் அமைந்துள்ளது என்பது சேக்கிழாரால் தெரிய வருகிறது. வேதியரிடம் சுந்தரர் ,

ஷஷஇன்றுயாம் முதுகுன்றம் எய்தவழி எமக்கியம்பும்

குன்றிமல்லாளி யாரும் கூடலையாற்றூர் ஏறச்

சென்றது இவ்வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல' (பா.120  )


என்று கேட்டதற்கு விடை கிடைத்ததாகச் சேக்கிழார் குறிப்பிடுவார்.  இதில் சுந்தரருக்கு இறைவன் செல்வழித் துணையாய்ச் சென்றார் என்று குறிப்பிடுவது இங்கே டூரிஸ்ட்டர் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு ஏற்ற தமிழ்ச் சொல்லாக அமைந்து , தோழமை ஏற்ற சுந்தரருக்கு இறைவன் செல்வழித்துணைப் பணி செய்து அருள் கொடுத்தது பெறப்படுகிறது. 


காவல்துறை:ப் பணி:

சேரமான் பெருமாள் அளித்த செல்வத்தோடு திருவாரூர்க்குப் புறப்பட்ட சுந்தரரை வழியில் வேடர்கள் தடுத்துச் செல்வத்தைப் பறித்துச் சென்றனர்.  இந்நிகழ்வைக் கூறவந்த சேக்கிழார் , 

ஷஷபொருவிடையார் நம்பிக்குத் தாமே பொன்கொடுப்ப தல்லால்

ஒருவர் கொடுப்பக் கொள்ள ஒண்ணாமைக்கு அதுவாங்கிப்

பெருகருளால் தாம்கொடுக்கப் பெறுவதற்கோ அது அறியோம்'(பா.கழ 185

என்று குறிப்பிடுவார். இந்நிகழ்வுமுலம் சேக்கிழார் இன்றயைக் காவல்துறைப் பணியை நினைவு படுத்துகிறர்.  அதாவது இழந்த பொருள்களை இன்றையக் காவல் துறையினர் பறித்துச் சென்றவரிடம் இருந்து பெற்று, இழந்தவர்களிடம் கொடுப்பதைத் தங்கள் பணியாகக் கொள்வார்கள்.  அதுபோலத்தான் இறைவனும் வேடர்களைத் தானே அனுப்பிப் பறிக்கச் செய்து மீண்டும் சுந்தரருக்குக் கொடுக்கிறான். தாமே  ஆட்கள மூலம் பறிப்பதும் பின் கொடுப்பதும் ஆகிய செயலை இறைவன் ஏன் செய்தான்? என்று சேக்கிழார் சிந்தித்து ஓர் கருத்தை இப்பகுதியின் மூலம் வெளிப்படுத்துகிறார். அதாவது தான் தோழமையாகக் கொண்ட நண்பனுக்குத் தான்தான் பொருள் கொடுக்க வேண்டுமே தவிரச் சுந்தரன் மற்றவர் கொடுக்கக் கொள்வதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்கோ இவ்வாறு பறித்துக் கொடுத்தான் என்று சேக்கிழார் தம் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் இப்பகுதியைப் படிக்கும் பொழுது சேக்கிழாரின் பெருமை உள்ளத்தில் மகிழ்வைத் தருகிறது. எனவே சுந்தரரைத் தோழமையாகக் கொண்டு இறைவன் காவல்துறைப் பணியையும் செய்து அருள் கொடுத்திருக்கிறான் எனத் தெரிகிறது. 

இதுபோலச் சுந்தரரைத் தோழமையாகக் கொண்ட இறைவன் வங்கிப் பணியைத் திருக்கச்சிமேற்றளியில் சுந்தரருக்கு வேண்டும் பொருளைக் கொடுத்து நிகழ்த்தியதும், வலக்கண் இடக்கண்களைக் கொடுத்து மருத்துவப் பணியாளராக அருளியதும் , தாய்மை உறவாகப் பொதிசோறும், வீடு தோறும் இரந்த உணவும் கொடுத்து தாய்மை உறவைச் சுந்தரரோடு ஏற்படுத்திக் கொண்டதும், தூதுவராகத் திகழ்ந்ததும் அரிய செயல்களாக அமைந்து, சுந்தரர் வாழ்க்கையில் இறைவன் கொண்டும் கொடுத்ததைக் காணமுடிகிறது இதனால் .இக்கால வாழ்வியலோடு சுந்தரரின் வாழ்வியல் செய்திகளை ஒப்பிட்டுக் காணமுடிகிறது. திருமுறையின் சிறப்பும் வெளிப்படுகிறது. 

திருச்சிற்றம்பலம். 



மூதுரை சிந்தனைகள்


முனைவர்.பழ. முத்தப்பன்


தமிழ் மொழி இலக்கிய வளம் மிக்கது. தமிழ் இலக்கியங்களை அவை கூறும் அடிப்படைக் கருத்துகளுக்கு ஏற்ப இலக்கிய ஆய்வாளர்கள் அதனைப் பலவகையாக வகைப்படுத்துவர். பண்டைத் தமிழரின் அக வாழ்க்கையையும் , புற வாழ்க்கையையும் வெளிப்படுத்துகின்ற இலக்கியங்களைச் சங்ககால இலக்கியங்கள் என்றும், தமிழரின் வரலாற்றை அதிலும் தனிமனித வரலாற்றைச் சுட்டிக் காட்டுகின்ற இலக்கியங்களைக் காப்பிய இலக்கியங்கள் என்றும், தெய்வ உணர்வை வெளிப்படுத்தும் இலக்கியங்களைப் பக்தி இலக்கியங்கள் என்றும், அறக்கருத்துகளை வலியுறுத்தும் இலக்கியங்களை நீதி இலக்கியங்கள் என்றும் பலவாறாக வகைப்படுத்துவர். இவ்விலக்கிய வகையில் சிறப்புப் பெற்று விளங்கும் நீதி இலக்கியங்கள் உலக அரங்கில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

நீதி இலக்கியம் என்ற வடிவு பிற்காலத்தே தோன்றியதாகும். பண்டைக் காலத்தில் கருத்துகள் அடிப்படையில்தான் அறம் வலியுறுத்தப் பெற்றது. அறக்கருத்துகளின் தோற்றம் சங்க இலக்கியங்களிலேயே அமைந்து , பின் வரும் நூல்களுக்கு முன்னோடியாக அமைந்தது என்பது உறுதி. சங்க இலக்கியங்கள் தோற்றுவித்த அறக்கருத்துகள் பதினெண்கீழ்க்கணக்கு என்ற பகுப்பில் தனித்தனி இலக்கியங்களாக வளர்ந்தன.


அப் பதினெணகீழ்க்கணக்கு நூல்களை அடுத்து அறக்கருத்துகளை இளம் பருவத்திலேயே மனதில் பதிய வைக்க வேண்டும் என்று நீதி நூல்கள் என்ற வடிவில் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் பிற்கால நீதி இலக்கியங்கள்  தோன்றின.  பிற்கால நீதி இலக்கியங்களின் தோற்றத்திற்கு வித்திட்டவர் பெண்பாற் புலவர்களில் ஒருவரான ஒளவையார் ஆவார். தமிழகப் புலவர் வரலாற்றில் ஒளவையார் என்ற பெயரில் அந்தந்தக் கால கட்டங்களில் பல புலவர் பெருமக்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களில் மூவர் குறிப்பிடத் தக்கவர். சங்ககாலத்தில் கபிலர், பரணர் இவர்களோடு ஒத்து வாழ்ந்து, சங்கப் பாடல்களில சுமார் ஐம்பத்தொன்பது பாடல்களைப் பாடிய சங்ககாலத்து ஒளவiயார் ஒருவர். பின்னர் கடையெழு வள்ளல்களின் காலத்தில் வாழ்ந்து, 

ஷஷபாரி பறித்த பறியும், பழையனூர்க்

காரியன்று ஈந்த களைக்கோலும் , - சேரமான்

வாராய் என அழைத்த வாய்மையும் - இம்மூன்றும்

நீலச் சிற்றாடைக்கு நேர்'

என்பன போன்ற தனிப்பாடல்களைப் பாடிய ஒளவையார் மற்றொருவர். அதன்பின் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்து தமிழ்க் கடவுள் முருகனோடு தொடர்புடையவர் மூன்றாவதாக இடம்பெறும் ஒளவையார் ஆவார்.  சுட்டகனி சுடாதகனி என்ற வரலாற்றோடு தொடர்பு உடையவராய் ஆத்திசூடி , கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்ற நீதி இலக்கியங்களைப் படைத்தருளியவர் அவ் ஒளவையார். 


கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் தோன்றிய அந்த ஒளவையார் பாடிய ஆத்திசூடி உயிர்எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் ஆகியவற்றை முதல் எழுத்தாகக் கொண்டு 109 வரிகளில் நீதிக்கருத்துகளை வலியுறுத்தும் தனிஒரு நூலாகும். ஆத்திசூடி போலவே நான்கு சீர்களில் தனித்தனி வரியாக 91 வரிகளைக் கொண்டு நீதிக்கருத்துகளை வலியுறுத்துவது கொன்றைவேந்தன் என்ற மற்றொரு நூலாகும். 

மூதுரை என்பது விநாயகர் காப்புச் செய்யுளுடன் முப்பது வெண்பாக்களைத் தன்னகத்துக் கொண்டதாகும்.  வாக்குண்டாம் என்று விநாயகர் காப்புச் செய்யுள்  தொடங்குவதால்  இந்நூலுக்கு வாக்குண்டாம் என்ற பெயரும் உண்டு. தனித்தனி வரிகளில் நீதிக்கருத்துகளை வலியுறுத்திய ஒளவையார் , நான்கு வரிகள் கொண்ட நேரிசை வெண்பா முப்பதினால் நீதிக்கருத்துகளை இந்நூலில் வலியுறுத்தியுள்ளார். முதுமொழி என்ற பொருளில் இந்நூல் மூதுரை என்ற பெயரைப் பெற்றுள்ளது.   இந்நூல் எளிய நீதிகளை ஒவ்வொரு பாடலிலும் உவமைகளைக் கொண்டு விளக்குகின்றது. காப்புச் செய்யுளைத் தவிர முப்பது பாடல்களும் ஏதேனும் ஒரு உவமையைப் பெற்றுள்ளமை இந்நூலுக்குரிய சிறப்பாகும். 

விநாயகப் பெருமானை மலர்கொண்டு போற்றி அவருடைய திருவடிகளை வணங்கினால் திறமையான பேச்சு உண்டாகும், இலக்குமியின் கருணையால் செல்வம் உண்டாகும் , உடல் நலமும் கிடைக்கும் என்று காப்புச் செய்யுள் , கல்வி நலமும், உடல் நலமும், செல்வ வளமும் பெற வழிகாட்டுகின்றது. தும்பிக்கையான் பாதம் சார்கின்றவர்களுக்கு முதலில் கிடைக்கின்ற பயன் சொல் திறமையாகும் என்பது இப்பாடலின் முதன்மைக் கருத்தாகும். கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்று குறிப்பிடும் திருவள்ளுவரின் கருத்தை அடியொற்றி மூதுரை கடவுளின் நம்பிக்கை கல்வி, செல்வம். உடல் ஆகியவற்றின் வளத்திற்கு அடிப்படையாகும் என்று குறிப்பிடுவது உணரத் தக்கது.  இவ்வாறு தமிழ் இலக்கிய மரபிற்கு ஏற்ப விநாயகர் வாழ்த்து கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது. அப்பாடல்,

ஷஷவாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு'

என்பதாகும். இப்பாடலில் மலர்கொண்டு வணங்குகின்ற எளிய வணக்கத்தையும், கடவுளின் திருவடியைச் சார்வதுதான் இறைவழிபாட்டு நோக்கம் என்பதையும், அவ்வாறு வழிபாடு செய்தால் திறமையான பேச்சு முதலியவை உண்டாகும் என்று மூதுரை குறிப்பிடுவதால் , அறிவு நலம் பெருக, ஆற்றல் மிக்க செயல்கள் விளங்க, செல்வ வளம் ஓங்க இறைப்பற்றுத் தேவை என்பதை மூதுரை வலியுறுத்துகிறது எனலாம். 

மூதுரை சிந்தனைகள் - 2

தமிழகப் புலவர்களின் வரிசையில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர் பெண்பாற் புலவராகிய ஒளவையார். சங்க அரசர்களுக்கு இடையே தூது சென்று போர் வெறியை மாற்றிய சங்ககால ஒளவையார் முதல், அறஞ்செய விரும்பு என்ற ஆத்திச்சூடி பாடிய ஒளவையார் வரை தமிழகத்தில் பல ஒளவையார்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களில்ஒருவர் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்;த ஒளவையார் ஆவார். அவரால் பாடப்பெற்ற ஆத்திசூடி , கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்ற நான்கு நூல்கள் பிற்கால நீதி இலக்கியங்களுக்குத் தொடக்கமாக அமைந்தன. 

கடவுள் வாழ்த்துப் பாடல் தவிர முப்பது வெண்பாக்களால் ஆன மூதுரையில்;  உவமை என்னும் தவலருங்கூத்தி ஆனந்த நடனமிடுகிறாள். உவமையில்லாத பாடல்களை மூதுரையில் காண்பது அரிது. ஒருமுறை தென்னந்தோப்பு வழியே புலவர் ஒளவையார் நடந்து செல்கிறார். சின்னஞ்சிறு தென்னை மரங்களைக் காணுகிறார்.  ஓங்கி வளர்ந்து காய்கள் காய்த்துக் குலுங்கும் தென்னை மரங்களையும் காணுகிறார்.  அத்தென்னை மரங்களின் வேர்ப் பகுதியில் வரப்புக் கட்டித் தண்ணீர் பாய்ச்சுகின்ற உழைப்பாளிகளையும் காணுகின்றார். இக்காட்சியைக் கண்டவுடன் ஒளவையார் மனதில் சிந்தனை எழுகின்றது. தண்ணீர் ஊற்றுகின்ற நல்ல செயலைச் செய்கின்றவர் உடனே பயன்கிடைக்கும் என்ற நினைப்பில் தண்ணீர் பாய்ச்சவில்லை.  எத்தனையோ ஆண்டுகள் கழித்துத்தான் அதன் பயனாகிய இளநீர் கிடைக்கும் என்ற சிந்தனை ஒளவையார் மனதில் சிந்தனை எழுந்;தது.  பாடல் ஒன்று பிறந்தது.  

ஷஷநன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கொல் எனவேண்டா - நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்'

என்பது அப்பாடல்.  இப்பாடல் தரும் சிந்தனை - தென்னை மரம் தன் வேரினால் உண்ட நீரைத் தலையால் இளநீராகத் தருகிறது.  அதுபோலப் பிறர் ஒருவர்க்கு நாம் நல்லது செய்தோமானால் , அது உடனே பயன் தரவில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் நல்ல பயனைத் தரும்.  ஆதலால் வாழ்க்கையில் நல்லதையே செய்ய வேண்டும் என்ற கருத்து கிடைக்கிறது. 

தமிழ்ப் புலவர்கள் தனியொரு இடத்தில் வாழ்வதில்லை.  தமிழகமெங்கும் ஊர்தோறும் சென்று அங்குள்ள வள்ளல்களையும், சான்றோர்களையும் பாடிப் பரிசில் பெறுவதுண்டு. பெண்பாற் புலவர் ஒளவையாரும் பல ஊர்களுக்கு யாத்திரையாகச் சென்றவர்தான். அவ்வாறு செல்லுகின்ற நேரத்தில் தஞ்சைத் தரணிக்கும் சென்றிருக்கலாம். பெருவுடையார் திருக்கோயில் அவர் பார்வையில் பட்டிருக்கலாம். பெருவுடையார் திருக்கோயிலில் இடம்பெற்ற வரலாற்றுச் சான்றுகளைத் தரும் கல்வெட்டுக்களைக் காணும் பேறு பெற்றிருக்கலாம்.  அக்கல்வெட்டுக்களில் ஒன்று சோழன் இராசராசேச்சுவரன் தனது 29ஆவது ஆட்சியாண்டில் தஞ்சை இறைவர் இராசராசேச்சுவரமுடையாருக்குத் திருமுறைகளை விண்ணப்பம் செய்தவர்களான சதாசிவன் , ஞானசிவன், பூர்வசிவன், திருநாவுக்கரையன் உள்ளிட்டவர்களுக்கு நன்கொடைகள் பல அளித்தமையைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்றையும் கண்டிருக்கலாம்.தஞ்சை மன்னன் இராராசேச்சுவரன் திருமுறை பாடுகின்ற சான்றோர்களான அவர்களுக்குப் பலவித உதவிகளையும் சிறப்புகளையும் செய்தமையை அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.   அதுபோன்ற கல்வெட்டுக்களைப் பார்த்ததினால்; மூதுரையில் ஒருபாடல் இடம்பெறுகிறது.  நல்லவர்கள் யாருக்கேனும் உதவி செய்தால் கல்லில் வெட்டப்பட்ட கல்வெட்டுப் போன்று அது என்றைக்கும் நிலைத்திருக்கும். அதே வேளையில் ஈரமில்லாத நெஞ்சத்தார்க்குச் செய்த உதவி ஓடுகின்ற தண்ணீரில் எழுதுகின்ற எழுத்து எப்படி மறையுமோ அதுபோலச் செய்த உடனே மறைந்துவிடும். உதவியைப் பெற்றவர்களும் உடனே மறந்துவிடுவார்கள் என்ற சிந்தனை கொண்ட பாடலாக அப்பாடல் எழுந்தது. அப்பாடல், ஷஷநல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப்போற் காணுமே - அல்லாத

ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர்மேல் எழுத்திற்கு நேர்'

என்பது அது.  உலகத்தில் உதவி வேண்டாதார் எவரும் இல்லை. எனவே உதவி வேண்டுவார்க்குச் செய்யும்பொழுது தக்கவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமே தவிரப் பொல்லாதார்க்கு உதவி செய்தல் கூடாது என்ற கருத்தை இப்பாடலால் உணரமுடிகிறது. 

அத்தக்கவர்கள் யார் என்பதையும் மற்றோர் மூதுரைப் பாடல் அறிமுகம் செய்கிறது. அப்பாடலை உணரும் பொழுது சைவப் பெருநூலாம் பெரியபுராணத்தில் இடம்பெற்ற சான்றோர்களே நினைவிற்கு வருகின்றனர். அச்சான்றோர்கள் தங்களுடைய பணியை வறுமையுற்ற காலத்திலும் தங்களுடைய குணம் மாறாது , பண்பு அழியாது வாழ்ந்திருக்கிறார்கள். எதுபோல என்றால் இனியபாலை எவ்வளவு காய்ச்சினாலும் அது சுவை குன்றாது, சங்கு, கிளிஞ்சல் ஆகியவற்றைச் சுண்ணாம்புக் காளவாயில் இட்டுச் சுட்டாலும் வெண்மை மாறாது. அதுபோல வறுமையால் வாழ்வில் துன்பப் பட்டாலும் சான்றோர்கள் உயர்ந்த பண்புடனே விளங்குவர். மேன்மக்கள் மேன்மக்களாகவே திகழ்வார்கள் என்று அப்பாடல் குறிப்பிடுகிறது. நல்லார் ஒருவருக்கு உதவி புரிய வேண்டும். ஏனென்றால் அவர்கள் வறுமையுற்ற காலத்திலும் பண்பு மாறாது மேன்மக்களாய் விளங்குவர். அவர்களுக்குச் செய்த உதவி கல்மேல் எழுத்துப்போல் விளங்கும். 

ஷஷஅட்டாலும் பால்சுவையில் குன்றா தளவளாய்

நட்டாலும் நண்பல்லார் - நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு

      சுட்டாலும் வெண்மை தரும்.:

என்பது அது.  எனவே இன்றைய மூதுரை தரும் சிந்தனையாக நல்லார் ஒருவருக்கு உதவி புரிய வேண்டும். அது என்றைக்கும் கல்மேல் எழுத்துப் 

மூதுரை சிந்தனைகள் -3

தமிழில் தோன்றிய இலக்கியங்கள் அவ்வக்கால தமிழகத்து வரலாற்றைத் தந்தாலும், மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அறநெறிகளையும் பதிவு செய்துள்ள நூல்களாகவே அமைந்துள்ளன. அத்தகைய இலக்கியங்களில் வாழும் நெறியைக் காட்டுகின்ற இலக்கியங்கள் , நீதி இலக்கியங்கள் என்ற வகையில் அடக்கப் பெறுகின்றன. பிற்கால நீதி இலக்கியங்களின் முன்னோடியாகத் திகழ்வது கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு ஒளவையார் பாடிய நீதிநூல்களாகும். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்ற நாற்;பெரும் நூலில் மூதுரை முப்பது பாடல்களால் சிறந்த நீதிகளைக் குறிப்பிட்டு வாழ்விற்கு வழிகாட்டுகிறது. 

வாழ்வாங்கு வாழுகின்ற மனிதன் பொன்னுக்கும் பொருளுக்குமாக மட்டும் வாழாது தன்மானம்; இழக்காது வாழவேண்டும். பண்டைக் காலத்து முடி மன்னர்களில் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவன், சோழன் செங்கணான் என்பவனால் சிறைப்பிடிக்கப் பட்டபோது, சிறையில் குடிக்கத் தண்ணீரை யாசித்துப் பெறுவது தனது குலத்திற்குப் பெருமை உடையது அல்ல என்று,தன்மானம் காப்பதற்காக இறந்துபட்ட வரலாற்றுச் செய்தி புறநானூற்று 74ஆவது பாடலில் கிடைக்கிறது. அதுபோல மானம் காப்பவரின் பெருமையையும், பண்பாட்டினையும்  மூதுரையின் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. 

ஷஷஉற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டால் பணிவரோ - கல்தூண்

பிளந்துறுவ தல்லாற் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வளையுமோ தான்'

என்பது அப்பாடல்.  இப்பாடல் கருத்தை வலியுறுத்தும்பொழுது ஒரு உவமையையும் கொண்டுள்ளது.  கல்தூணானது தான் தாங்கக் கூடிய பாரத்திற்கு மேல் பாரம் ஏற்றினால் பாரம் தாங்காமல் அது பிளந்து துண்டாகி விடுமேயன்றி , வளையாது.  அதுபோல மானத்தைப் பெரிதாக விரும்புகின்றவர்கள் மானத்திற்காக உயிரை விடுவார்களே அன்றி மாற்றாரிடத்தில் பணிந்து வாழ மாட்டார்கள் என்ற அரிய கருத்தை உவமையின் மூலம் மூதுரை விளக்குகிறது. 

மானம் காத்து வாழுகின்றவர்கள் உறுதியாக நூலறிவு பெற்றவர்களாக விளங்குவார்கள். அந்த நூலறிவும் தாங்கள் கற்ற நூலின் அடிப்படையில் அமையும்.  மேலும் நூலறிவு பெற்றவர்கள் பெறுகின்ற செல்வமும் , அவர்கள் செய்த தவத்தால் அமையும். எனவே கல்வி வளமும் செல்வ வளமும் ஒருவருக்குத் தானாக அமைந்துவிடாது.  அவர்கள் கற்ற நூலின் அடிப்படையிலும்; அவர்கள் செய்கின்ற தவம் போன்ற செயல்களின் அடிப்படையிலும் தான் கல்வியும் செல்வமும் அமையும். இக்கருத்தை மூதுரைப் பாடல் விளக்குகிறது. 

ஷஷநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற

நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்

தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்

குலத்தளவே யாகும் குணம்:.

என்பது மூதுரைப் பாடலாகும்.  இப்பாடலில் உவமையும் அமைந்து பாடற் கருத்தினை விளக்குவது சிறப்புடையதாகும்.  நீரில் படர்ந்து பூத்திருக்கும் அல்லிச்செடி நீரின் அளவிற்கேற்பப் படர்ந்து பூத்துக் குலுங்கும். அதுபோலத் தான் கற்றவர்களின் நுண்ணறிவு அவர்கள் கற்ற நூல்களின் அடிப்படையில் அமையும்.  அவர்கள் பெற்ற செல்வம் அவர்கள் செய்த தவத்தின் அடிப்படையில் கிடைக்கும். இத்தகைய அறிவையும், செல்வத்தையும் பெற நல்ல குணம் அவர்களின் பிறப்புவழி கிடைக்கும் என்பதை மூதுரைப்பாடல் உவமையால் விளக்குகிறது.  

தனியொரு மனிதன் தானே சிறந்தவனாக விளங்கிவிட முடியாது. பிறரோடு சார்ந்து வாழ்ந்து அவர்தம் குணங்களையும், பண்பாடுகளையும் அறிந்து அவற்றைத் தானும் மேற்கொண்டு வாழுகின்ற பொழுதுதூன், தனிமனிதன் ஒழுக்க சீலனாக அமையமுடிகிறது. திருவள்ளுவப் பெருமானும் பெரியாரைத் துணைக்கோடல் என்ற அதிகாரத்தின் மூலம் இக்கருத்தினை வலியுறுத்துவார்.  பண்டைக்காலத்து அரசர்களும் தங்கள் ஆட்சி சிறந்திடத் தக்க அறிவுசால் புலவர்களை அவைப்புலவர்களாகப் பெற்று அவர்கள்வழி நடந்திருக்கிறார்கள். சங்ககாலத்தில் அதியமான் நெடுமான்அஞ்சிக்கும் தொண்டைமானுக்கும் பிணக்கு ஏற்பட்டபொழுது, அப்பிணக்கைத் தீர்ப்பதற்கு அதியமான் ஒளவையாரைத் தூதனுப்பிய செய்தி புறநானூற்றால் கிடைக்கிறது. தூதுவந்த ஒளவையாம் நல்லோர் சொன்ன சொல்லைக்கேட்டு, தொண்டைமான் தன் பகையைத் தீர்த்துக் கொண்டதும் புறநானூற்று ஒளவையார் பாடல்களால் தெரியவருகிறது. எனவே தக்க சான்றோர் பெருமக்களை , நல்லோர்களை நட்பாகக் கொள்ளுவது வாழ்விற்கு நலம் பயக்கும். இதனை மூதுரைப்பாடல் சிறப்பாகக் கூறுகிறது.

ஷஷநல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று'

என்பது பாடல்.  நல்லவர்களைக் காண்பதுவும் நல்லவர் சொல் கேட்பதுவும் நன்று என்று கூறுவதோடு , நல்லார் குணங்களைப் பிறர்கேட்க எடுத்துரைப்பதும் நன்று என்றும் பாடல் குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கதாகும். நல்லார் குணங்களைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது அக்குணங்களைக் கேட்போர் அக்குணமுடைய நல்லோரைப்போலத் தாங்களும் வாழவேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆளாவார்கள் என்ற கருத்தைப் பாடல் வலியுறுத்துகிறது. எனவேதான் பண்டைத் தமிழ்ப் புலவர்களும் தாங்கள் சார்ந்து வாழ்ந்த மன்னர்களின் பெருமைகளை எடுத்துக் கூறியது இன்றைக்கு வாழுகின்றவர்களுக்கும் வழிகாட்டியாக அமைகிறது. இன்றைய மூதுரைச் சிந்தனையாக மானம் காத்து வாழவேண்டும் என்பதும், நல்ல நூல்களைக் கற்று அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும், நற்செயல்களால் செல்வத்தைச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பதும், தக்க சான்றோர்களோடு. 

மூதுரை சிந்தனைகள் - 4 

இலக்கியங்கள் என்பன தாங்கள் தோன்றிய காலத்து வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் , படிக்கின்ற வாசகர்களின் வாழ்வு வளம்பெற அறக்கருத்துகளையும்  கூறுகின்றன. இத்தகைய இலக்கியங்களின் வெற்றிதான் ஒருமொழியின் உயர்விற்கு அடித் தளமாக அமைகின்றது. அறக்கருத்துகளைத் தந்து வெற்றி பெறும் இலக்கியங்களைத் தன்னகத்துக் கொண்டது தமிழ்மொழியாகும். தமிழ்மொழி அற இலக்கியங்களை நீதி இலக்கியங்கள் என்பர்.  தமிழில் நீதி இலக்கியங்கள் காலந் தோறும் தோன்றியுள்ளன.  கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் தோன்றிய ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நூல்களைத் தந்தவர் ஒளவையாராம் பெண்பாற் புலவராவார். நான்கு நூல்களில் முப்பது வெண்பாக்களைக் கொண்ட மூதுரை , வாழ்விற்குரிய அரிய சிந்தனைகளை அள்ளித் தருகின்றது. 


சைவ அடியார்கள் அறுபத்திமூவரி;ல் ஒருவர் சண்டேசுவர நாயனார். விசாரசர்மர் என்ற இயற்பெயரை உடைய சண்டேசுவரர் பசுமாடுகள் தாமே கறந்த பாலைத் , தாம் எழுந்தருளச் செய்த இறைவனுக்கு அபிடேகம் செய்தார். அதன் உண்மைப் பொருளை அறியாத அவரின் தந்தையான எச்சதத்தன் அதற்கு இடையூறு செய்திட, இடையூறு செய்த தந்தையின் காலை விசாரசர்மர் வெட்டினார். அப்பக்தியின் முதிர்ச்சி கண்ட இறைவன் விசாரசர்மருக்குச் சண்டீசர் பதம் தந்து அருளியதோடு , எச்சதத்தன் தவறு செய்திருந்தாலும் விசாரசர்மரோடு சார்ந்த காரணத்தால் இறைவன் எச்சதத்தனுக்கும் திருவருள் புரிந்தான். இச்செய்தியிலிருந்து ஒருவருக்கு விளையும் நன்மை அவரைச் சார்ந்தோர்க்கு எல்லாம் கிடைக்கும் என்பது பெறப்படுகிறது.  இதனை மூதுரை ,


ஷஷநெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளறேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை'

என்ற பாடலாகத் தருகிறது. விளையும் நெல்லுக்குப் பாய்ச்சப் படுகின்ற தண்ணீர், வாய்க்கால் வழியாக ஓடும். அவ்வாறு ஓடும் பொழுது வாய்க்காலின் இரு பக்கங்களிலும் முளைத்திருக்கும் புல்லுக்கும் தண்ணீர் கிடைக்கிறது.  அதுபோலத்தான் நல்லவர்கள் வாழுகின்ற நாட்டில் பெய்கின்ற மழை , நல்லவர்களுக்கு மட்டும் பயன்தராது வெற்றுவாழ்க்கை வாழும் மற்றவர்க்கும் பயனாகிறது என்பது இப்பாடல் கருத்தாக அமைந்துள்ளது.  எனவே நல்லோரைச் சார்ந்து வாழவேண்டும் என்ற அடிப்படைக் கருத்து மூதுரைப் பாடலால் வெளிப்படுகிறது எனலாம். 


தமிழ்மொழியின் வரலாற்றில் பொதியமலையில் வாழ்ந்த அகத்தியர் சிறப்பிடம் பெறுகிறார்.  புராணங்களில் இடம்பெற்ற செய்தியாக அகத்தியர் மூலம் தமிழ் வளர்க்கப் பட்டது என்ற செய்தியும் கிடைக்கிறது.  அகத்திய முனிவரை இலக்கியங்கள் குள்ள உருவமுடைய முனிவராகவே படைத்துக் காட்டுகின்றன. . ஷஷகுன்றெறிந்த வேள் வழிபடு குறுமுனிக்கு உரைத்தான்' என்ற திருவிளையாடற் புராணப் பாடலின் தொடர்( (புராணவரலாறு , பா. 15) அகத்தியரைக் குறுமுனி என்று குறிப்pடுவதை இங்கு நினைவு கொள்ளலாம். குறுமுனிவராகிய அகத்தியர் காவிரி நதியை உருவாக்கியது, தமிழின் வளர்ச்சிக்கு இலக்கணம் தந்தது ஆகிய  செயல்கள் பெருமையாகப் புராணங்களில் பேசப்படுகின்றன.  எனவே உருவத்தைக் கண்டு ஒருவரை எடைபோடுதல் கூடாது என்ற கருத்து, குறுமுனிவராம் அகத்தியர் மூலம் வெளிப்படுகிறது.  இதனை மூதுரையும் வலியுறுத்துகிறது. ஷஷமடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்

உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா - கடல்பெரிது

மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்

உண்ணீரு மாகி விடும். '

என்பது பாடலாகும்.  சிறியவரை இகழக்கூடாது என்பதற்குச் சிறிய பூவாகிய மகிழம்பூ , பெரிய தாழைமடல் தராத மணத்தைத் தருவதையும், பெரியகடல் தராத நீர்ச்சுவையை அதன் அருகில் உள்ள சிறிய ஊற்றுநீர் தருவதையும் மூதுரை உவமைகளாகக் காட்டி நிற்பது படித்துச் சுவைக்கத் தக்கதாகும்.  எனவே உருவம் சிறியதாயினும் கீர்த்தி பெரிது என்பதை உணரவேண்டும். 

நீண்ட உருவமுடைய ஒருவன் அவையத்தார்க்கு முன்னே கல்வி அறிவு இல்லாது விளங்கினால் அவன் மதிக்கப்பட மாட்டான். உருவத்தால் அவன் பெரியவனாக இருக்கலாம்.  ஆனால் அறிவில் அவன் குறைவுடையவன் ஆவான்.  அவனுக்கு ஒப்புமையாக மூதுரைக் காட்டு மரங்களைச் சுட்டிக்காட்டி ,காட்டு மரங்கள் மட்டும் மரமல்ல, அவனும் ஒரு மரம்தான் என்று குறிப்பிடுகிறது. 

ஷஷகவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டா தவன்நன் மரம்.'

என்பது பாடல். பாடலால் அறிவற்றவனும் பிறர் மனம் அறியாதவனும் மரம் போன்றவர்கள் என்ற கருத்து வெளிப்படுத்தப் படுகிறது. இக்கருத்து திருவள்ளுவர் கூறிய ஷஷஅரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர்'(997) என்ற திருக்குறள் கருத்தின் வளர்நிலையாகும். என்னதான் படித்திருந்தாலும் மக்கட் பண்பு இல்லாதவர்கள் மரம் போன்றவர்கள் என்கிறார் வள்ளுவர்.  மூதுரையோ மக்கட் பண்பிற்குரிய கல்வியறிவும், பிறர் மனத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் இல்லாதவர்களை மரம் என்று குறிப்பிடுவது வளர்நிலையாகும். 

எனவே இன்றறைய மூதுரைச் சிந்தனைகளாக நல்லார் ஒருவருக்குக் கிடைக்கும் பலன் அவரைச் சார்ந்தவர்களுக்கும் கிடைக்கும் என்பதும், உருவத்தை வைத்துக்கொண்டு ஒருவரை எடைபோடக் கூடாது என்பதும், தக்க அறிவும் பண்பும் இல்லாதவர்கள் காட்டு மரங்கள் ஆவார்கள் என்பதும் பெறப்படுகின்றன. 

மூதுரை சிந்தனைகள் - 5

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடிய புதிய ஆத்திசூடி , சுத்தானந்த பாரதியார் பாடிய பொதுநெறியாம் புது ஆத்திசூடி, வாணிதாசன் பாடிய புதிய ஆத்திசூடி உள்ளிட்ட ஆத்திசூடிகள் தோன்றுவதற்கு மூலமாக அமைந்த ஆத்திசூடி கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு ஒளவையார் பாடியதாகும். ஒளவையார் என்ற பெயரில் பல புலவர் பெருமக்கள் வௌ;வேறு காலக் கட்டங்களில் வாழ்ந்திருக்கிறார்கள்.  அதில் ஒருவர்தான் ஆத்திசூடி தந்த ஒளவையார்.  ஆத்திசூடியோடு கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்ற நீதி நூல்களையும் படைத்தருளியவர் அவர். இந்நான்கு நூல்களும் மக்களின் வாழ்க்கை செம்மையாக அமையப் பல்வேறு கோணங்களில் அறக்கருத்துகளாம் நீதிக் கருத்துகளைத் தருகின்றன. 

இன்றைய சமுதாயத்தில் போலிப் பொருள்கள் அதிகமாக வழக்கில் இருக்கின்றன. மருந்துப் பொருள்களில் போலி மருந்துகள், உணவுப் பொருட்களில் போலி உணவுகள், அறிவியல் பொருள்களில் தரமற்ற போலி சாதனங்கள் எனப் பல்வேறு வகையில் போலிகள் பரவிக் கிடக்கின்றன.  இவற்றைவிட மிகவும் வருத்தத்திற்கு உரியது, படித்து பட்டங்களைப் பெறாதவர்கள் தாங்கள் படித்ததாகப் போலிச் சான்றிதழ்களைத் தயாரித்துப் பணியில் அமர்ந்து விடுகின்ற கொடுமையும் நடக்கின்றது.  இத்தகைய போலித்தன்மை விரும்பத் தக்கது அல்ல என்பதை மூதுரை சிறப்பாகக் குறிப்பிடுகிறது. 

ஷஷகான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் - தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி'

என்பது போலிகளை அடையாளம் காட்டும் மூதுரைப் பாடலாகும். காட்டில் தோகை விரித்து ஆடுகின்ற மயிலைக் கண்டு தானும் அதுபோல ஆடவேண்டும் என்று , வான்கோழியானது சிறகை விரித்து ஆடுகின்றது.  ஆனாலும் தோகை விரித்தாடும் மயிலின் அழகை வான்கோழியிடம் காண இயலாது.  அதுபோலத்தான் உண்மையாகக் கல்வியில் மேம்பட்டவரின் கவிதைச் சிறப்பை , வருணனை அழகை , நீதிக்கருத்தை , நல்லறிவைப் பெறாதவனின் கவிதையில் காண இயலாது என்பது பாடலின் கருத்தாகும். இ;ப்பாடலால் அறிவுடையவர்கள் போல் தன்னைக் காட்டிக் கொள்பவர்கள் சமுதாயத்தில் சிறப்பினைப் பெறமுடியாது என்பது தெளிவாகிறது. 

சமுதாயத்தில் தாம் கற்றதினால் உயர்ந்த புகழைப் பெறவேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கு மூதுரை ஒரு அற்புதமான சிந்தனையை வழங்குகிறது. அறிவுடையோரும் வல்லமை உடையவரும் தக்க காலம் வரும்வரை காத்திருந்து அடங்கியிருந்து செயல்களைச் செய்தால் புகழ் கிடைக்கும்.எனவே எவ்வளவுதான் உயர்ந்தவராயினும் காலம் கருதிச் செயல்களைச் செய்திடல் வேண்டும்.இதற்கு  எடுத்துக்காட்டாக விளங்குவன பூத்துக் குலுங்கும் மரங்களாகும். எந்த ஒரு மரமோ அல்லது செடியோ தனக்குரிய காலத்தில்தான் பூக்கவும் செய்யும், காய்த்துப் பழுக்கவும் செய்யும்.  அதுபோலத்தான் தங்கள் செயல் வெற்றி பெற அனைவரும் தக்க காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.  

ஷஷஅடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தா லன்றி;ப் பழா.'

என்பது மூதுரை தரும் சிந்தனையாகும்.  

இவ்வாறு காலம் வரும்வரை அடக்கத்தோடு இருப்பதைக் கண்டு குறைவாக மதிப்பிடக் கூடாது.  அத்துடன் அவர்களை அலட்சியப் படுத்தவும் கூடாது.  யார் ஒருவர் அமைதியாக இருந்து செயல்களைச் செய்து முடிக்கின்றார்களோ அவர்களை உலகம் பாராட்டும்.  உலகம் பாராட்டும் அளவிற்கு அவர்கள் அமைதியாக இருப்பதை மூதுரை உவமையின் மூலமாகப் பாராட்டிப் போற்றுகின்றது. 

ஷஷஅடக்க முடையான் அறிவிலரென் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி யிருக்குமாம் கொக்கு'

என்பது பாடல். நீரில் வாழும் கொக்கு பெரிய மீன் கடைக்கும்வரை நீரில் காத்துக் கொண்டிருக்கும் என்பது உவமையாகும்.  இதனை, வள்ளுவப் பேராசானும் ஷஷகொக்கு ஒக்கக் கூம்பும்பருவத்து மற்றுஅதன் குத்துஒக்க சீர்த்த விடத்து ' (490) என்று குறிப்பிட்டு , மூதுரைக்கு முன்னோடியாகத் திகழுகிறார்.  எனவே பயன் வரும் காலம் வரை காத்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. 

சார்ந்தாரைக் கொண்டுதான் ஒருவர் வாழ்வின் சிறப்பு அமையும் . சார்ந்தாரின் ஒருவகையினர் உறவினர் ஆவார்கள்.  எனவே தக்க உறவினரோடு உறவு கொள்வது மிக இன்றியமையாததாகும். தக்க உறவினர் யார் என்பதை மூதுரை படம்பிடித்துக் காட்டுகிறது.  சார்ந்தவர்க்குத் துன்பம் வருகின்ற பொழுது உற்றுழி உதவுகின்றவர்கள் தான் உறவினர் ஆவர். துன்பம் கண்டு விலகுவோர் உறவினர் ஆகமாட்டார்கள்.  இதனைச் சிறந்த உவமை மூலம் மூதுரை விளக்குகிறது. 

ஷஷஅற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வர் உறவல்லர் - அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவார் உறவு'

என்பது பாடல்.  குளத்தில் நீர்வற்றும் பொழுது அந்நீரை உண்டு வாழ்ந்த பறவைகள் பறந்து விடுகின்றன.  நீரை உண்டு வாழ்ந்த ஆம்பலும், நெய்தலுமாகிய மலர்க்கொடிகள் அந்நீரைவிட்டு அகலாது நீரில்லாததால் வாடிக்கிடக்குமே அன்றி அகலாது என்ற உவமை மூலம் உற்றாரை அiடாளம் காட்டுகிறது மூதுரை.  இவ்வாறு இன்றயை மூதுரைச் சிந்தனையாக போலிக் கல்வி பயன்தராது என்பதும், கற்ற அறிவுடையோரும் சான்றோரும் காலம் கனியும் வரை காத்திருந்து செயல்களைச் செய்வர் 


    மூதுரை சிந்தனைகள் - 6


தமிழ் வழங்குமிடம் எங்கும் குழந்தைப்பருவ நிலையில் கற்க வேண்டிய நூல்களாக ஆத்திசூடி கொன்றைவேந்தன் என்ற நீதி நூல்கள் வழங்கி வந்தன. அண்மைக் காலத்தில் கல்வித் திட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் அவற்றுக்கு முக்கியம் அளிக்கத் தவறிவிட்டன. என்றாலும் ஆத்திசூடி கொன்றைவேந்தன் என்ற  நூல்களோடு அவற்றை ஒட்டி எழுந்த மூதுரை, நல்வழி நூல்கள் என்றைக்கும் தமிழர்தம் வாழ்விற்கு வழிகாட்டும் நீதி இலக்கியங்கள் என்பதை மறுக்க இயலாது.  ஆத்திசூடி முதலிய நான்கு நூல்களைப் படைத்தவர் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் ஆவார். அவருடைய நான்கு நூல்களில் ஒன்றான மூதுரை முப்பது வெண்பாக்களைக் கொண்டதாகும். அந்நூலில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லறங்கள் கூறப்பெறுவதோடு விலக்க வேண்டிய தீயவைகளும் வலியுறுத்தப் பெறுகின்றன. 


பாரதத் தந்தை காந்தியின் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு அவர் அருகே கொலுவீற்றிருந்த மூன்று பொம்மைகள் நினைவிற்கு வரலாம். ஒன்று கண்ணை இருகைகளால் மூடியிருக்கும்.  ஒன்று காதை மூடியிருக்கும், ஒன்று வாயை மூடியிருக்கும்.  அதன் பொருள் தீமையைக் காணாதே, தீமையைக் கேளாதே, தீமையைப் பேசாதே என்பதாகும். இச் சிந்தனையை காந்தியடிகளின் காலத்திற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே ஒளவையார் பாடிய மூதுரையில் காணமுடிகிறது. 


ஷஷதீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார்சொற் கேட்பதுவும் தீதே - தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோ(டு)

இணங்கி இருப்பதுவும் தீதே'

என்பது அப்பாடல்.  காந்தியடிகளின் சிந்தனையைப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன் பாடலாகத் தந்த மூதுரை, அவரின் சிந்தனைக்கும் அப்பாற் சென்று , தீயவரோடு இணங்கி வாழ்வதும் தீது என்று நான்காவதாக உரைத்திருப்பது தமிழுக்குச் சிறப்பைத் தருகிறது. எனவே தீமையை விலக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.  


அதுபோல தீயகுணம் உடையவர்களுக்கு உபகாரம் செய்தலை விலக்க வேண்டும் என்ற சிந்தனையையும் பிறிதொரு பாடலில் மூதுரை பதிவு செய்துள்ளது.  சீவகசிந்தாமணியில் இக்கருத்து இடம்பெற்றிருப்பதைக் காப்பிய நோக்கில் அறியமுடிகிறது.  ஏமாங்கத நாட்டுத் தலைவனாக விளங்கிய அரசன் சச்சந்தன்.  அவன்; தன் மனைவி விசயையின் மேல் கொண்ட காதலால் , தீய குணமுடைய அமைச்சனாகிய கட்டியங்காரனிடம் அரசாளும் அதிகாரத்தை கொடுத்துத் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொண்டான் என்பதை அவ்விலக்கியத்தின் மூலம் உணரலாம். எனவே தீயவர்களுக்கு உதவி செய்தால்  செய்தவர்க்கே அழிவு ஏற்படும் என்பது தெளிவாகிறது. இதனை மூதுரை, 

ஷஷவேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்கதனுக் காகாரம் ஆனாற்போல்  - பாங்கறியாப்

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின்மேல் இட்ட கலம்'

என்ற பாடலாகத் தருகிறது.  பாடலின் பொருள் - பாம்பு கடித்துக் குற்றுயிராகக் கிடந்த வரிப்புலிக்கு விஷம் நீக்கும் வைத்தியத்தைச் செய்த மருத்துவனே அந்தப் புலிக்கு இரையானாற் போல , அற்பப் புத்தி உடையவர்க்கு உபகாரம் செய்தால் , உபகாரம் செய்தவர்க்கே தீமையாய் முடியும். அந்த உபகாரம் கூட முழுமையாகப் பயன்படாது , கல்லின் மேல் எறிந்த மண்பானை சிதறுவது போலப் பயனற்றுப் போய்விடும் என்பதாகும். எனவே பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழிக்கு ஏற்ப , உதவி செய்கின்ற பொழுது , தக்கவர்க்கே உதவி செய்ய வேண்டும் என்ற சிந்தனை மூதுரைப் பாடலால் கிடைக்கின்றது. 

வாழ்க்கையில் சுற்றந் தழால் என்பதற்கேற்;ப உடன்பிறந்தார், சுற்றத்தாருடன் சேர்ந்துதான் வாழ வேண்டும். ஆனால் அதே நேரத்தில் அச்சுற்றத்தார்களை முழுமையும் நம்பி விடக் கூடாது. ஏன்? உடன் பிறந்தவர்களை; கூட ஆய்ந்து பார்த்துத்தான் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மூதுரை சிந்தனையாகத் தருகிறது. 

ஷஷஉடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா

உடன்பிறந்தே கொல்லும்  வியாதி - உடன்பிறவா

மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரும் உண்டு'

என்பது பாடலாகும். இதன் பொருள் - உடலில் தோன்றிய நோயே உயிரைக் கொல்லுகிறது.  அதுபோல உடன் பிறந்தோரும் , உற்றாரும் என்றைக்கும் நமக்குத் துணையாக இருப்பார்கள் என்று எண்ணிச் சேர்ந்து வாழ்தல் கூடாது. சில நேரங்களில் அவர்களே நம் அழிவிற்குக் காரணமாகவும் அமைந்து விடுவார்கள். அதே நேரத்தில் முன்பின் தொடர்போ, உறவோ இல்லாத யாரோ ஒருவர் மலையில் தோன்றிய மூலிகை மருந்து போல , நம் துன்பமாகிய நோயைத் தீர்க்க உதவுவார்கள். இக்கருத்தை வலியுறுத்துவது போல் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய குமணனுக்கு அவன் தம்பி இளங்குமணனே உயிர்கொல்லும் நோயாக அமைந்தான் என்ற செய்தி புறநானூற்;றில் இடம்பெற்றுள்ளது. இச்செய்தி அறிந்த பெருஞ்சித்திரனார் என்ற புலவர் தம் கவி முயற்சியால் அக்கொடுஞ்செயலை நீக்கி , இளங்குமணனை உணரவைத்துக் குமணனுக்கு நலம் செய்தார். எனவே உடன்பிறந்தாரும் , உற்றாரும் ஆராய்ந்து  பார்க்க வேண்டியவர்கள் என்பது புலனாகின்றது. 

இத்தகைய பாடல்களால் தீயவரோடு வாழ்வதும்,  தீயவர்களுக்கு உதவுவதும், உடன்பிறந்தாரை ஆராயாது ஏற்றுக் கொள்வதுமாகிய அல்ல செயல்கள் நீக்கப்பட வேண்டும் என்ற மூதுரை சிந்தனைக் கருத்துகள் கிடைக்கின்றன. 

மூதுரை சிந்தனைகள் - 7

தமிழ்மொழி இலக்கியங்களில் மக்கள் ஏற்றுப் பயன்கொள்ளத் தக்க அறச்சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன.  பண்டைத்தமிழ் இலக்கியங்களான சங்கஇலக்கியங்கள் தமிழர்தம் செம்மாந்த அறவாழ்வை எடுத்தியம்புகின்றன. பின் சமுதாயத்தில் அறக்கொள்கைகள்  சிறிது விலகுமானால் அவை மீண்டும் மீள்பார்வைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வப்போது , தனித்தனி அற இலக்கியங்கள் தோன்றியதும் உண்டு. அத்தகைய அடிப்படையில் எழுந்தவைதான் திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை வழிக்கொண்டு பிற்கால நீதி இலக்கியங்களும் தோன்றின. அந்த வரிசையில் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு ஒளவையாரின் படைப்புகளான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நீதிஇலக்கியங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. ஒளவையாரால் படைத்தளிக்கப் பெற்ற மூதுரை நூலில் தமிழ்ச் சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உரிய நீதி முறைமைகள் நன்கு வலியுறுத்தப் பெறுகின்றன. தமிழ்ச் சமுதாயம் வினைக்கொள்கையில் நம்பிக்கை உடையதாகும். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற கொள்கை தமிழரிடம் வலுப்பெற்ற கொள்கையாகும்.  இதனைச் சிலப்பதிகாரம் முதலிய நூல்களும் பின்னர்  மூதுரையும் வலியுறுத்துகின்றன. 

ஷஷஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர

நாழி முகவாது நானாழி - தோழி

நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்

விதியின் பயனே பயன்:'

என்ற மூதுரைப் பாடல் விதியின் வலியை வலியுறுத்தும் பாடலாகும். அளவற்ற நீரை உடைய கடலுள்  ஒருபடி என்னும் அளவு கொண்ட படியை ஆழ அமுக்கி முகந்தாலும் , அது நாலு படி நீரைக் கொள்ளாது.  அதுபோல ஒரு பெண்ணுக்கு மிக்க பொருளும் , தக்க கணவனும் கிடைத்தாலும் அவள் செய்த முன்வினையின் அடிப்படையில் தான் இன்ப வாழ்வை அனுபவிக்க முடியுமே அன்றி, விதியை மீறி அனுபவிக்க இயலாது என்ற பொருளை இப்பாடல் தருகிறது. சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் , கோவலனும் மாதவியும் அனுபவித்த வாழ்க்கைக்கு ஊழ்வினை தான் காரணம் என்பதை நூலாசிரியர் இளங்கோவடிகள் ஆங்காங்கு வலியுறுத்துச் செல்வதை இங்கு நினைவு கூரலாம்.இதன்மூலம் மூதுரை தமிழர்களின் வினைக்கொள்கை நம்பிக்கையைத் தனது சிந்தனையாகத் தருகிறது. 

மற்றொரு பாடலில் மூதுரை எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் பயன் கிடைக்கும் பொழுது ஊழ்வினைக்கு ஏற்பத்தான் பயன் கிடைக்கும் என்பதை வலியுறுத்த , ஒரு உவமை நிகழ்ச்சியைப் பாடலில் பதிய வைத்துள்ளது. அதாவது கேட்டதைக் கொடுக்கும் கற்பகத்தருவை அடைய வேண்டும் என்று பல்லாற்றானும் முயற்சி செய்த ஒருவனுக்கு , அக்கற்பகத்தரு அவன் விரும்பிய பொருளைக் கொடுக்காது , எதற்கும் பயன்படாத காஞ்சிரங்காயைக் கொடுத்தாலும் கொடுக்கும் என்ற செய்தியை அப்பாடல் பதிவு செய்துள்ளது. இப்பதிவோடு முற்பிறப்பில் செய்த தீவினைதான் விரும்பியதற்கேற்பப் பயன் கிடைக்காது விதிப்படிதான் பயன் கிடைக்கும் என்று காரணக் கருத்தையும் பாடல் பதிவு செய்துள்ளது. இப்பதிவுக்குரிய பாடல். 

ஷஷஎழுதியவா றேகாண் இறங்கும்மட நெஞ்சே

கருதியவா றாமோ கருமம் - கருதிபோய்க்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்

முற்பவத்தில் செய்த வினை.'

என்பது பாடலாகும். பாடலில் எழுதியவறே காண் என்ற தொடர் விதிப்படிதான் அனைத்தும் நடக்கும் என்ற கருத்தை வலியுறுத்துவதால் தமிழரின் வினை நம்பிக்கை புலனாகின்றது.  

தமிழரின் வினைக் கொள்கை நம்பிக்கையில் மற்றொரு கோணம் உயிர்கள் அவ்வப் பிறப்பில் செய்த வினைகள் தாமே வந்து சேராது. அந்த வினைகளைக் கடவுள்தான் பதிவு செய்து கொண்டு அடுத்தடுத்து வரும் பிறவிகளில் உயிர்களை நுகர வைக்கின்றான் என்ற கொள்கையை நம்புவதும் தமிழரின் வினைக் கொள்கையாகும். தமிழரின் சமயங்களில் ஒன்றான சைவ சித்தாந்தக் கொள்கையில் இக்கொள்கை பெரிதும் வலியுறுத்தப் படுவதாகும். சைவ சித்தாந்தத்தின் தலைமை நூலான சிவஞானபோத உதாரண வெண்பாவில் , ஷஷஎத்தனுவில் நின்றும் இறைபணிவார்க்கு முன்செய் வினையும் தருவான்முன்' என்ற தொடர் அமைந்து இக்கருத்து வலியுறுத்தப் பெறுகிறது. சித்தாந்த சாத்திரங்களில் இக்கருத்து அமைவதற்கு முன்னோடியாகத் திகழ்வது மூதுரைப் பாடல் எனக் கொள்ளலாம். இலக்குமியாகிய தெய்வத்தால் தான் வாழ்வில் வளம் கிடைக்கிறது.  அவள் இல்லையென்றால் வளம் கிடைக்காது என்ற செய்தியை அப்பாடல் தருகிறது. 

ஷஷமருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை

ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து

போம்போ தவளோடும் போம்'

என்பது பாடலாகும். இறைவனது ஆணையால் உயிர் செய்த வினைக்கேற்ப இலக்குமியின் திருவருள் ஓர் ஆன்மாவில் இணைந்திருக்கும் பொழுது சுற்றம், உயர்ந்த செல்வம், நல்ல உருவம் , உயர்வான குடிப்பிறப்பு ஆகியவை கிடைத்திடும். தீவினை வரின் இலக்குமி நீங்கிடக் கிடைத்தது அனைத்தும் நீங்கிவிடும் என்ற கருத்தை இப்பாடல் தருகிறது. இதன்படி ஒரு உயிரினுடைய உயர்வும் தாழ்வும் இறைவனருளால் உயிர்களின் விதிப்படி கிடைக்கிறது என்பது பெறப்படுகிறது. 

இத்தகைய பாடல்களால் ஒருவரின் வாழ்வியல் விதிப்படிதான் இன்பமாக அமையும் என்பதும், ஓர் மனிதனின் விருப்பம் அவன் செய்த முன்வினைப் படிதான் கிடைக்கும் என்பதும், முன்வினைப் பயனை இறைவன் ஊட்டுவதால் வினைப்படி உயிர்கள் நல்லதையும் கெட்டதையும் அனுபவிக்கின்றன என்பதையும் இன்றைய மூதுரைச் சிந்தனைகளாக அறிகின்றோம். 


மூதுரை சிந்தனைகள் - 8


ஷஷஆத்தி சேர் கொன்றை அழகு தமிழ் மூதுரை

பாத்தி சேர் நல்வழி பண்புலகம் - பூத்த

      நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக்

குறுந்தமிழ் என்றறிந்து கொள்'

என்பது தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் நீதி நூல்களைப் போற்றிய பாடலாகும்.  ஆத்திசூடி முதலிய நீதி நூல்கள் பண்டைக் காலத்தில் திண்ணைப் பள்ளிகளில் முறையாகச் சிறுவர்களுக்குப் பயிற்றுவிக்கப் பட்டன.  எனவே குழந்தைப் பருவத்திலேயே முறையாகத் தமிழ் அறிவும், வாழ்க்கையில் நல்லொழுக்கக் கடைப்பிடிப்பும் வாய்க்கப் பெற்றன. அந்த வாய்ப்பு முதுமை வரை துணை செய்தது. ஆனால் இன்றைக்கோ புதிய கல்விமுறையால் நீதி இலக்கியப் பயிற்சி குறைந்துவிட்டது. என்றாலும் நீதி இலக்கியச் சிந்தனை தேவை. அதிலும் இக்காலத்து நீதி இலக்கியங்களின் முன்னோடியாக விளங்கிய ஒளவையாரின் நூல்களில் ஒன்றான மூதுரை இலக்கியச் சிந்தனை  இன்றைய அவசர உலகத்திற்கு மிகவும் தேவையானதாகும்.  

கி.பி. பனிரெண்டாம் நூற்றண்டு ஒளவையார் பாடிய மூதுரை அறச்சிந்தனைகளை வலியுறுத்தும் பொழுது ஒரே பாடலில் தொடர்புடைய இரு கருத்துகளைக் குறிப்பிடுகிற நடையைப் பெற்றிருக்கிறது. அத்தகைய பாடல்கள் மூலம் மிகச்சிறந்த சிந்தனைகளை அறிய முடிகிறது. சிறந்த குணங்களையும் சீரான ஒழுக்கங்களையும் பெற்றிருக்கின்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு துன்பப் பட்டாலும் துன்பத்தைப் பெரிதாகக் கருதாது தங்கள் பண்பு குன்றாமல் வாழ்வார்கள்.  ஆனால் பண்பற்ற மக்கள் தாழ்வுற்றால் செய்யக் கூடாத செயல்களைச் செய்து சமுதாயத்தில் சீரழிவார்கள். இக்கருத்தை,

ஷஷசீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்

றல்லாதார் கெட்டாலங் கென்னாகும் - சீரிய

பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும் என்னாகும்

மண்ணின் குடமுடைந்தக் கால்'

என்ற மூதுரைப் பாடல் விவரிக்கிறது.  பொன்னால் செய்யப் பெற்ற ஒரு குடம் உடைந்தால் பானை என்ற வடிவம் நீங்கினாலும் பொன்னுக்குரிய சிறப்பு உடைந்த பகுதிகளில் என்றும் இருக்கும்.  அதுபோலப் பண்புடையவர்கள் தாழ்வுற்றால் அதற்காக வருந்தாமல் என்றைக்கும் சால்பு உடையவர்களாகவே வாழ்வர்.  ஆனால் மண்பாண்டம் உடைந்தால் உடைந்தவை எதற்கும் பயன்படாது மண்ணாக அழிவது போலப் பண்பற்றவர்கள் தாழுற்றால் சீரழிவார்கள் என்று தக்க உவமைகள் மூலம் பண்புடையாரையும், பண்பற்றவரையும் மூதுரை அடையாளம் காட்டுகிறது. 


அதுபோலப் பிறிதொரு பாடலில் அரசனையும் கற்றவனையும் ஒப்பிட்டுப் பேசுகின்ற பாங்கினைக் காணமுடிகிறது. 

ஷஷமன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்

தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்றவிட மெல்லாம் சிறப்பு'

என்பது மூதுரைப் பாடலாகும்.  நாடாளும் மன்னனையும் , கல்வி நலம் கொண்ட கற்றவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நாடாளும் மன்னவனைக் காட்டிலும் கற்ற அறிவுடையோரே சிறப்புடையவராவார்.  எவ்வாறு என்றால் மன்னனுக்கு அவன் ஆளும் நாட்டில் மட்டும்தான் சிறப்புண்டு.  ஆனால் கற்றவர்க்கோ சென்ற இடமெல்லாம் புகழும் சிறப்பும் கிட்டும்.  எனவே கற்ற அறிஞரே சிறப்புடையவர் என்று சிந்தனையை மூதுரை வழங்குவது சிந்தனைக்கு விருந்தாகும். 

பிறிதொரு பாடலில் கற்ற அறிஞரையும் கல்லாத மூடரையும் எடுத்துக்காட்டி அறச்சிந்தனையைத் தருகிறது மூதுரை. 

ஷஷநற்றாமரைக் கயத்தில் நல்லன்னம்  சேர்ந்தாற்போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் 

காக்கை உகக்கும் பிணம்'

என்பது மூதுரைப் பாடலாகும். நல்ல தாமரை மலர் மலர்ந்திருக்கும் குளத்தைத் தேடிச் செல்லுகின்ற அன்னப் பறவை போல , அறிஞர்களை நட்புக் கொள்ள கற்ற அறிஞர்கள் நாடிச் செல்வர். ஆனால் சு:டுகாட்டுக் காக்கையானது பிணத்தைத் தேடிச் செல்வது போல அறிவில்லாத மூர்க்கர் மூர்க்கரைத் தேடிச்சென்று அவரோடு வாழ எண்ணுவர் என்று அன்னத்தையும் காக்கையையும் கற்றவர்களுக்கும் மூடர்களுக்கும் முறையான உவமைகளாக்கி மூதுரை நூல் சிந்தனையை வழங்குகிறது. 

அதுபோல மற்றொரு பாடலில் வஞ்சனை உள்ள நெஞ்சத்தாரையும், வஞ்சனை இல்லாத நெஞ்சத்தாரையும் அடையாளம் காட்ட இரு உவமைகளை மூதுரை கையாண்டு அரிய சிந்தனையைத் தருகிறது. 

ஷஷநஞ்சுடைமை தானறிந்து நாகங் கரைந்துறையும்

அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பார்  கரவார்

கரவிலா நெஞ்சத் தவர்'.

என்பது பாடல். விஷமுள்ள நாகப்பாம்பு புற்றில் ஒளிந்து வாழும். அதுபோல  வஞ்சனை உள்ளவர்கள் உள்ளத்தில் எண்ணத்தை மறைத்து வெளியில் வெளிப்படையாகப் பேசமாட்டார்கள.; நீர்ப்பாம்பிற்கு விஷமில்லாததால் அது எங்கும் பயமின்றித் திரிவது போல , உள்ளத்தில் வஞ்சனை இல்லாதவர்கள் வெளிப்படப் பேசுவார்கள் என்ற கருத்து தக்க உவமைகள் மூலம் வெளிப் படுத்தப் படுகிறது. 

இத்தகைய பாடல்களால் சீர்மை உடையோர், சீர்மை அற்றோர் பண்புகளையும், மன்னர் - கற்றோர் சிறப்புகளையும், அறிஞர் - மூடர்களின் நடைமுறைகளையும், வஞ்சகர் - வஞ்சகமற்றோர் தன்மைகளையும் மூதுரை உவமைகளால் விளக்கும் கருத்துகள் இன்றயைச் சிந்தனைகளாகக் கிடைக்கின்றன. 

மூதுரை சிந்தனைகள் - 9


தமிழ்மொழியின் எழுத்து வடிவத்தைக் கற்பதற்கு முன்னரே கருத்தின் வடிவத்தை நெஞ்சி;ல் நிறுத்தப் பயன்பட்டவை நீதி இலக்கியங்களாகும்.  ஆம். குழந்தைப் பருவத்தில் எழுத்தின் வடிவத்தை எழுதிப் பழகுவதற்கு முன்னரே தமிழ்மொழி கூறும் நல்ல அறக்கருத்துகளை குழந்தை மனதில் பதிய வைக்க ஆத்திசூடி ,கொன்றைவேந்தன் நூல்களின்; தொடர்களைக் கூறிக் கேட்கவைத்துத் தமிழ்கூறும் நல்லுலகத்தார் குழந்தைகளின் மனதில் பதிய வைத்தனர்.  அத்தகைய பதிவுகள் முதுமைக் காலம் வரை  பயன்பட்டன. எனவே நீதி நூல்கள் சமயம் கடந்து , உயர்வு தாழ்வு மறைந்து, கற்றுக்கொள்ளத் தக்க நூல்களாகக் கருதப் பெற்றன. அந்த அடிச்சுவட்டில் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமுதாயம் வாழ்வாங்கு வாழ , ஒளவைப்பாட்டி எனும் பெரும்புலவரால் படைத்தளிக்கப் பெற்ற நான்கு இலக்கியங்களுள் மூதுரை ஒன்றாகும்.  இதற்குக் காப்புச் செய்யள் வாக்குண்டாம் என்று தொடங்கியதால் வாக்குண்டாம் என்ற பெயரும் வழங்கப் பெற்றது. அறக்கருத்துகளைக் கூற ஒளவையார் முப்பது வெண்பாக்களை மூதுரையாகத் தந்து இன்றைக்கும் அந்நூல்வழி வாழ்ந்து வருகிறார்.  அவரின் மூதுரை சிந்தனைக் கருத்துகளைப் படிக்கப் படிக்க வாழ்வு மேம்படும் என்பது உண்மை. 


வாழ்வு மேம்பட நீதிக் கருத்துகளை அடுக்கிச் சொல்கிற முறைமையையும் மூதுரை நூலில் காணமுடிகிறது. முதலில் நான்குவகை யமன்களைக் குறிப்பிடும் பாடல் நினைவிற்கு வருகிறது.  கல்லாத மனிதர்களுக்குப் படித்தவர்களின் அறவுரை யமன் போலத் தோன்றும், அறநெறியில் நில்லாதவர்களுக்கு அறச்செய்திகள் யமனாகத் தெரியும். வாழை மரம் குலையை ஈன்றபின் அழிந்து விடுவதால் வாழைக்குலை அம்மரத்திற்கு யமனாய் விடும். குடும்பத்தில் வாழும் கணவனாகிய ஒரு ஆண்மகனுக்குத் தன் இல்வாழ்க்கையில் தனக்கு ஒத்து நடவாத மனiவி யமனாகத் தோன்றுவாள் என்று நால்வகை யமன்களை மூதுரை வரிசைப்படுத்திக் கூறுகிறது. 


ஷஷகல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்

அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம் - மெல்லிய

வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் கூற்றமே

இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்'

என்பது அம்மூதுரைப் பாடல். இப்பாடல் மூலம் வாழ்க்கைக்கு உபதேச மொழிகளும் . அறச்சிந்தனைகளும், உடன்பட்டு வரும் மனைவியும் நன்றாக அமைதல் வேண்டும் என்பது பெறப்பட்டு அவை அமையாதபோது வாழை மரத்திற்கு அதன் குலையே யமனாகத் தோன்றுவது போல உபதேச மொழியும், அறச்சிந்தனையும், அறிவற்றவர்களுக்கு யமனாகவும், உடன்படா மனைவி வாழத்துடிக்கும் கணவனுக்கு யமனாகவும் அமைவதை ஓர் அஃறிணை உவமை மூலம் ஒளவையார் விளக்கியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். 


மற்றொரு பாடலில் கோபத்தினுடைய வகையை மூன்று வகையாக மூதுரை வகுத்துக் காட்டுகின்றது. கீழ்மக்களுக்குச் சினம் வந்தால் கல்பிளந்தது போல், வேறுபட்ட இருவர் பிரிந்து விடுவர். இடையினராய் விளங்கும் கூட்டத்தார் சினம் கொள்வாரேயானால் பொன் ஆபரணங்கள் பிளந்தால் ஒட்டவைப்பது போல , வேறுபட்ட இருவரிடத்தில் வேறொருவர் சமாதானம் செய்யக் கூடுவார்கள்.  உயர்ந்த சான்றோர்களுக்கு இடையே கோபம் ஏற்பட்டால் அம்பினால் கிழித்து நீரில் ஏற்பட்ட வடுப் போலக்  கோபம் வந்த நேரத்தில் பிரிந்து உடனே தங்களுக்குள்ளே சமாதானமாகிக் கூடிவிடுவர் என்ற கருத்தை இப்பாடல் குறிப்பிட்டுச் சினம் கொண்டோர் வகையை மூவகையாகக் கூறுகிறது.  .

ஷஷகற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்

பொற்பிளவோ n;டாப்பாரும் போல்வரே - விற்பிடித்து

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே

சீரொழுகு சான்றோர் சினம்.' 

என்பது பாடல்.  பாடலில் சினம் கொண்டவரைக் கயவர் என்றும், இடையர் என்றும், சான்றோர் என்றும் மூன்று வகையாகப் பிரிக்கப் பெற்றிருக்கிறது. . அவர்களின் கோபத்திற்குக் கல் பிளவும்;, பொன் பிளவும்;, தண்ணீர் பிளவும் உவமைகளாகக் குறிக்கப் பெற்றுள்ளன.  இத்தகைய வரிசை அமைப்புப் பாடலுக்குச் சிறப்பைத் தருகின்றது எனலாம். 

வேறொரு பாடலில் மனைவியின் சிறப்பினை உடைய மனைவியும், மாறுபட்ட குணத்தினை உடை மனைவியும் ஆகிய இருவகையினரை எடுத்துக்கூறி , அவரகள்; வாழும் வீட்டை அறிமுகப் படுத்துகிறது மூதுரை. 

இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை

இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்' 

என்பது பாடல். இப்பாடலில் மனைவியின் இரண்டு விதமான குணங்கள் கூறப்பெற்று நற்குண நற்செயல்கள் கொண்ட மனைவி வாழும் வீட்டில் நன்மை நினலைத்திருக்கும் என்றும்,  நற்குணம் இல்லாதவள் வீட்டில் வளம் இல்லாது புலிவாழும் குகை போல வெறுமை காணப்படும் என்றும் கூறப்பெற்றுள்ளது. இவ்வாறு நற்குண மனைவியையும், கணவனுக்கு எதிராகப் பேசும் குணமற்ற மனைவியையும் மூதுரை இரண்டு வகையாகக் குறிப்பிட்டு, இரண்டாவதாகிய மனைவிக்கு மட்டும் உவமை கூறியிருப்பது சிறப்புடையதாகும். 

எடுத்துக் கொள்ளப் பட்ட மூன்று பாடல்களில் முதல் பாடல் நான்கு வகையான யமன்களையும், இரண்டாவது பாடல் மூன்று வகையான சினங்கொண்ட மக்களையும், மூன்றாவது பாடல் இரண்டு வகையான மனைவியரையும் அடையாளம் காட்டி , வாழ்வியல் சிந்தனைகளை மூதுரை தருகின்றது . 

மூதுரை சிந்தனைகள் - 10


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாட்டுக்கொரு புலவன் பாரதியார் தமிழ்மொழியின் சிறப்பைப் பாடுகிறார்.  அதற்குக் காரணம் சிலப்பதிகாரம், திருக்குறள், கம்ப இராமாயணம் ஆகியவை உள்ளிட்ட இலக்கிய வளங்களே ஆகும் என்பதும் அவரது சிந்தனையாகும்.  தமிழ்மொழியின் இலக்கிய வளங்களில் நீதி இலக்கியங்கள் என்ற வகைப்பாடு அமைந்து , அது பல இலக்கியங்களைப் பெற்றிருக்கிறது. அவ் இலக்கியங்கள் பண்டைக்காலப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும், பிற்கால நீதி இலக்கியங்கள் என்றும், தற்கால நீதி இலக்கியங்கள் என்றும் பிரிக்கப் பெற்றுள்ளன. பிற்கால நீதி இலக்கியங்களுக்கு முன்னோடியாகத் திகழ்வன கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டில் ஒளவையார் என்ற பெண்பாற் புலவர் பாடிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை , நல்வழி என்ற நான்கு நூல்கள் ஆகும். முன்னிரு நூல்களும் தனித்தனி வரிகளைக் கொண்டு விளங்க, பின்னிரு நூல்கள் செய்யுள் அமைப்பில் விளங்குகின்றன. பின்னிரு நூல்களில் மூதுரை என்ற நீதிநூல் கடவுள் வாழ்த்துச் செய்தியோடு முப்பது வெண்பாக்களைப் பெற்று, ஆக 31 செய்யுட்களைக் கொண்டுள்ளது. அம் 31 பாடல்களும் தனித்தனிச் செய்யுட்களாக , வௌ;வேறு காலக் கட்டங்களில் பாடப்பெற்றுப் பின் தொகுக்கப் பெற்றனபோல் அமைப்பினைப் பெற்றுள்ளது. 

மூதுரை தரும் முப்பது பாடல்களில் குறிப்பிடத் தக்க சில பாடல்கள் நல்ஒழுக்கமும் உயர்ந்த அறிவும் கொண்ட சான்றோர்களை அடையாளப் படுத்தி, அச்சான்றோர்கள் போல் வாழவேண்டும் என்ற நீதிக்கருத்தை வலியுறுத்துகின்றன. அத்தகைய பாடல்களில் ஒன்று. 


சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்

கந்தம் குறைபடா தாதலால் - தந்தம்

தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர் கெட்டால்

மனஞ்சிறிய ராவரோ மற்று'

என்ற பாடலாகும்.  இப்பாடலின் பொருள் - மெல்லியதாகிய சந்தனக் கட்டை தேய்க்கத் தேய்க்கத் தேய்ந்து போன காலத்திலும் மணம் தருவதில் குறையாது. அதுபோல வெற்றிமாலை சூடிய அரசர், சான்றோர் தங்கள் செல்வம் கொடுத்துத் கொடுத்துக் குறைந்து பட்டாலும் கொடுப்பதில் சிறிதும் தளரமாட்டார்கள் என்ற கருத்தினைத் தருகிறது. அங்கத நாட்டுக்கு அரசனாக விளங்கிய கர்ணன் கொடை மடம் கொண்டவன். அவன் போர்க்களத்தில் கூடத் தன்னிடம் யாசித்த கண்ணனுக்குக் கொடுப்பதற்குப் பொன்னும் பொருளும் இல்லை என்றாலும் , அவன் கேட்டபடி தான் செய்த தருமத்தையே தானமாகக் கொடுத்தான் என்ற பாராத நிகழ்வு இப்பாடலைப் படிக்கும் பொழுது நம் உள்ளத்தில் நிழலாடும். பண்டைக் காலத்தில் அரசர்கள் என்றும் குடிமக்கள் என்றும் சமுதாயம் இரண்டு வகையாகப் பிரிக்கப் பெற்றிருந்தமையால் இப்பாடல் அரசராகிய சான்றோரின் கொடைச் சிறப்பைச் சுட்டிக் காட்டிற்று. 

அதுபோல மற்றொரு பாடல் கல்வி அறிவில் சிறந்த குடிமக்களாம் சான்றோரின் சிறப்பினை எடுத்துக் காட்டுகிறது. 

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்

குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம். '

என்பது பாடல். மரங்கள் தம்மை வெட்டிச் சாய்க்கும்வரை, வெட்டுகின்ற மனிதர்க்கு நல்ல நிழலைத் தந்து வெயிலை மறைத்து இன்பத்தைத் தரும். அதுபோல அறிவிற் சிறந்தவர்கள் தங்கள் உயிர் போகும்வரை தனக்குத் தீமை செய்தாலும், தமக்குத் தீமை செய்தவரைத் தவிர்க்காது தம்மால் இயன்றவரை அவரைக் காத்திடுவார்கள் என்பதாகும்.; முதற்பாடலில் சந்தன மரத்தின் ஒரு பகுதியான சிறிய கட்டையை உவமையாகக் கூறிச் சிந்தனையைத் தந்த மூதுரை இப்பாடலில் முழுமையான மரத்தையே உவமையாக்கி அறிவுடையோரின் செயலைச் சிந்தனைக் கருத்தாகத் தந்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும். 

மற்றொரு பாடலில் வலிமை மிக்க துணை இல்லாமல் குடிமக்கள் வாழ இயலாது என்ற கருத்தில் துணையாகிய சான்றோர் குறிப்பாகக் காட்டப் பெற்றுள்ளனர். 

ஷஷபண்டு முளைப்ப தரிசியே ஆனாலும்

விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகா தளவின்றி

ஏற்ற கருமம் செயல்'

என்பது பாடல். இப்பாடலின் கருத்து - நெற்பயிர் விளையும் பொழுது முதலில் தோன்றுவது பால்அரிசி. பால் முற்ற முற்ற அடுத்துத் தோன்றுவது உமியாகும். உமி பின்னால் தோன்றினாலும் அந்த உமியை நீக்கிவிட்டால் வெற்று அரிசி மீண்டும் முளைக்காது.  உமியோடு கூடிய நெல்தான் முளைக்கும். அதுபோல மிகச்சிறந்த ஆற்றலுடையவரும் தம் காரியத்தைச் செய்யும் பொழுது தன்னுடைய திறமையன்றிப் பிறருடைய துணை இல்லாமல் தானே தனித்து நின்று செய்து வெற்றிபெற முடியாது என்பதாகும். இக்கருத்தினால் சமுதாயத்தில் வாழுகின்ற தனிமனிதர் , தன் செய்கையினால் மட்டும் வெற்றியடைய முடியாது என்பதால் , பக்கத் துணiயாகப் பிற அறிவுடையாரையும் துணையாகக் கொண்டு வாழவேண்டும் என்பது பெறப்படுகிறது. 

எடுத்துக் கொள்ளப் பெற்ற மூன்று பாடல்களின் மூலமாகத் தலைமை சான்ற அரசர், சான்றோர் தாழ்விலும் கொடை நல்குவர் என்பதும், சான்றோர்கள் தமக்குத் தீமை செய்தவரையும் காப்பாற்றுவர் என்பதும், சமுதாயத்தில் தனிமனிதர் வெற்றி பெற அறிவுடையோரைத் துணைவராகக் கொள்ள வேண்டும் என்ற மூதுரைச் சிந்தனைகள் பெறப்படுகின்றன. 




திருச்சிற்றம்பலக்கோவை உணர்த்தும் செந்நெறி


சித்தாந்தச் செம்மணி , சிவஞானக் கலாநிதி, முனைவர்.பழ.முத்தப்பன். 


தேனூறும் திருவாசகம் தந்த மணிவாசகர் படைத்த சிற்றிலக்கியம் திருச்சிற்றம்பலக் கோவையாகும். நானூறு கட்டளைக் கலித்துறை செய்யுட்களைப் பெற்ற அக்கோவை தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த பெருங் கருவூலமாகும். திருச்சிற்றம்பலக் கோவையின் பாட்டுடைத் தலைவர் தில்லை மூதூர் பொதுவினில் தோன்றி , எல்லையில்லா ஆனந்தநடனம் புரிகின்ற சிவபெருமான் ஆவார்.  அம்முதல்வனது திருவடியைத் தன் சிந்தையிலும், சென்னியிலும் கொண்டு போற்றும் திருத்தகவுடைய தலைமகனே கிளவித் தலைவன் ஆவான். செய்யுளில் இடம் பெறும் காதல் தலைவி சிவத்தலைவி ஆவாள். தலைவியின் தோழி திருவருள் ஆகும். இத்தகைய பாத்திரங்களைக் கொண்ட திருச்சிற்றம்பலக் கோவையை அறிமுகப் படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது. 


இக்கோவையில் தில்லையில் புத்தர்களை வாதில் வென்ற பிறகு, சிற்றம்பலமுடையாரால் பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று ஆணையிட , மணிவாசகர் இக்கோவையைப் பாடினார் என்பது செவிவழிச் செய்தியாகும். மேலும் திருச்சிற்றம்பலமுடையாரே தம் திருக்கரத்தால் இக் கோவையை ஏட்டில் எழுதினார் என்பதும் மரபுவழிச் செய்தியாகும்;. செய்யுட்கள் தோறும் திருச்சிற்றம்பலமுடையாரின் சிற்றம்பலமும், திருத்தலமும் , தத்ததுவ நிலையும் நற்றமிழ்ச் சொற்களால் தீட்டப் பெற்றுள்ளன. . அப்பகுதிகளை எல்லாம் தொகுத்துரைக்கின் சிற்றம்பலமுடையாரின் தடத்த இலக்கணமும், சொரூப இலக்கணமும் கிடைக்கப் பெறும். மேலும் மணிவாசகர் காலத்துத் தமிழர்தம் வாழ்வியல் பண்பாடும் தெற்றெனப் புலப்படும். 


தில்லைச் சிற்றம்பலமுடையார் அனைவருக்கும் வழிபடு தெய்வம் என்றாலும் , தில்லை மூவாயிரவரின் தனிப்பெருந் தெய்வமாக விளங்குவதை மணிவாசகரும் மறந்தாரில்லை.  தில்லை மூவாயிரப் பெருமக்களைச் சிறப்பித்து அப்பெருமக்களால் வழிபடப் பெறுகின்ற திருவருள் நிலையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். 


ஷஷஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து

மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின்முன்னித்

தீவாய் உழுவை கிழித்த(து)அந் தோசிறி தேபிழைப்பித்(து)

ஆவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோர் ஆண்டகையே' (பா. 72)


இச்செய்யுள்  நடுங்க நாட்டம் என்ற  துறைக்குரிய பாடலாகும். திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாத திருவடியை , மூவாயிரவர்கள் கூடி வணங்கிடத் தில்லையம்பலத்து எளிவந்த நின்ற , அம்பலவாணர் என்று தில்லைப் பெருமான் முதற் பகுதியில் பாராட்டப் பெறுகிறார். முப்பெரும் தெய்வங்களில் இருபெரும் தெய்வங்களைக் காட்டிலும் தில்லை மூவயிரவர்க்கு அம்பலக்கூத்தன் எளிவந்த நிலையில் தோன்றி , தன் திருவடியைப் போற்றும் சிறப்பை அளித்துள்ளார் என்ற பொருளை உணர்கின்ற பொழுது , தில்லை மூவாயிரப் பெருமக்களின் அருமையும் பெருமையும் வெளிப்படுகிறது. இச்செய்தி தில்லை வரலாற்றுக்குப் பெருந்துணை புரியும் என்பதையும் மறுத்தற்கியலாது. இத்தகைய மூவாயிரவர் போற்றும் அம்பலவாணப் பெருமானை நினையாதவர்கள் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்ற செய்தியும் செய்யுளில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். இத்தகைய அம்பலக்கூத்தர் பிறவி நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறவர் என்ற செய்தியையும் பிறிதொரு செய்யுளில் மணிவாசகர் குறிப்பிடுகிறார்.


ஷஷஇருந்துதி என்வயின் கொண்டவன் யான்எப் பொழுதுமுன்னும்

மருந்து திசைமுகன் மாற்கரி யோன் தில்லை' (300)


இச்செய்யுள் பகுதியில் அன்பர்கள் செய்யும் பெரிய துதிமொழிகளை என்னிடமும் கொண்டவன் என்றும் , யான் எப்பொழுதும் நினையும் வண்ணம் மருந்தாக விளங்குகின்றவன் என்றும், பிரமனுக்கும் திருமாலுக்கும் அரியவனாவான் என்றும், அத்தகையோன் வாழுகின்ற தில்லை நகர் என்றும் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. இச்செய்திகளைக் கூறுகின்ற பாத்திரமாகத் தோழி படைக்கப் பெற்றிருக்கிறாள். தோழியின் கூற்றில் தில்லைக் கூத்தனைத் துதித்துப் பாடுவோர்களுக்கு அப்பெருமான் பிறவிநோயைத் தீர்க்கக் கூடிய மருந்தாக விளங்குவான் என்ற சிறப்புடைச் செய்தி இடம் பெற்றுள்ளது. இறைவன் மருந்தாக விளங்குவான் என்ற செய்தி சாத்திர நூல்களிலும் இடம் பெற்றிருப்பது இங்கு ஒப்புநோக்கத் தக்கதாகும். 

ஷஷஉன்னும் உளது , ஐயமிலது உணர்வாய்  ஓவாது

மன்னு பவம் தீர்க்கும் மருந்து ' (திருவருட்பயன், பா.10)

என்பது சாத்திரப் பகுதியாகும். இவ்வாறு திருச்சிற்றம்பலமுடையானின் பொன்னம்பலமும் , திருத்தலமும் கோவைத் தமிழால் சிறப்புடன் கூறப் பெற்றுள்ளன. 


திருச்சிற்றம்பலமுடையாரை உணர்ந்து அருள்பெற வேண்டுமானால் , ஞானாசிரியரின் திருவருள் மூலம்தான் பெறமுடியும் என்பதையும் கோவைத் தமிழ் உறுதிபட மொழிகிறது. 


ஷஷஉள்ளமெல்லாம்

காட்டியன் றேநின்ற தில்லைத்தொல் லோனைக்கல் லாதவர்போல்' (284)

தலைவி தன் எண்ணத்தை முழுமையும் புலப்படுத்தி , அன்று தொட்டு இன்று வரை இந்த தில்லை நகரத்துப் பழையோனே, ஆசிரியர் மூலம் கல்லாதவரைப் போலத் தலைவி வருந்தினாள் என்று கட்டுவிச்சி கூறியதாக இச்செய்யுட் பகுதியின் பொருள் அமைந்துள்ளது.  தில்லைத் தொல்லோனே கல்லாதவர் என்ற செய்யுட்பகுதிக்குத் தில்லைக் கூத்தனை ஆசாரியன் மூலம் கல்லாதவர் என்று முன்னோர்கள் உரை தந்துள்ளனர். இவ்வுரை மூலம் சைவ சமயத்தின் அடிப்படைக் கருத்தான் ஆசிரியன் வழிதான் முத்திப் பேறு கிடைக்கும் என்ற கருத்து வலியுறுத்தப் பெறுவதை அறியலாம். 

ஞானாசிரியர் மூலம் பாச ஞானத்தையும், பசு ஞானத்தையும் அகற்றி , பதி ஞானம் பெற்ற சீவன் முத்தர்கள் நிலையையும் கோவைத் தமிழ் குறிப்பிடுவது சிறப்புடையதாகும். 


ஷஷஎலும்பால் அணியிறை அம்பலத் தோன்எல்லை செல்குறுவேர்

நலம்பா விமுற்றம் நல்கினும் '  (197)


என்ற செய்யுட் பகுதி , உலகத்தில் உடம்போடு வாழுகின்ற பொழுதே , இறைவனின் திருவருளுக்கு ஆட்பட்டுத் தங்களை மறந்து வாழுகின்ற சீவன் முத்தரை அடையாளப் படுத்தும் பகுதியாகும்.  எலும்பு மாலை அணிந்திருக்கின்ற அம்பலத்தாரின் எல்லையாக விளங்கும் முத்தி உலகத்திற்குச் செல்ல விரும்புவோர் வாழும் இவவுலகத்தையே தலைவிக்கு விலையாகக் கொடுத்தாலும், தலைவியின் சுற்றத்தார் ஏற்க மாட்டார்கள் என்ற செய்தி செய்யுட் பொருளாக அமைந்துள்ளது. முத்திக்குச் செல்வோர் வாழும் உலகம் என்பதால் இவ்வுலக வாழ்வு பெறப்படுகிறது.  அத்துடன் மண்ணகமாம் இவ்வுலகத்தில் வாழும் உடம்போடு முத்தி பெறக் கூடிய சீவன்முத்தர் சிறப்பும் உணர்த்தப் பெறுகிறது. இறைவனின் பெருமையையும் திருத்தலத்தையும் சிறப்பித்த கோவைத்தமிழ் மண்ணுலகில் வாழும் ஆன்மா , குருமூர்த்தத்தால் ஞானம் கைவரப் பெற்றுச் சீவன்முத்தராக வாழலாம் என்ற செய்தியையும் கோவைத் தமிழ் தருகிறது என்பது தெளிவாகிறது. 


கோவைத் தமிழ் இலக்கியச் சுவையோடு பக்திச் சுவையையும் தரும் என்பதற்குச் சான்றாக அமைந்த பாடல்களில் கீழ்வரும் பாடல் மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். 


ஷஷஈசற்(கு) யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியஎன்

பாசத்தின் காரென்(று) அவன்தில்லை யின்ஒளி போன்றவன்தோள்

பூ(சு)அத் திருநீ(று) எனவெளுத்;(து) ஆங்கவன் பூங்கழல்யாம்

பே(சு)அத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே' (109)


இது காதல் தலைவன் கூறும் செய்யுளாகும்.  தன் காதலியின் கண்களின் அழகைத் தோழியிடம் கூறுவதாக அமைந்த செய்யுளாகும்.  தலைவியின் கண்கள் இறைவனிடத்தில் தான் வைத்த அன்பு போல் அகன்று , இறைவனால் தன்னிடமிருந்து வாங்கப் பெற்ற பாசம் போல் கறுத்து, இறைவனது தில்லையின் ஒளியை ஒத்து, இறைவனின் திருத்தோள்களில் அணியப் பெற்ற திருநீறு போல் வெளுத்து, இறைவனுடைய திருவடித் தாமரைகளைப் போற்றித் தான் பேசுகின்ற திருவார்த்தை போல நீண்டிருந்தது என்று காதல் தலைவன் கூறுவதாகப் செய்யுளின் பொருள் அமைந்துள்ளது. 

மானிடப் பெண்ணின் கண்கள்  தெய்வ உணர்வோடு கூறப்பெற்றிருப்பது சிறப்புடையதாகும். 


இறைவன் திருநீற்றினை அணிந்திருக்கின்ற அழகினை மணிவாசகர்  குறிப்பிடுகின்ற பொழுது ஒரு புதிய கருத்தைக் கோவைச் செய்யுளில் அமைத்திருக்கிறார்.  


  ஷஷதொழுதெழுவார்

வினைவளம் நீறெழ நீறணி அம்பல வன்தன்வெற்பில்

புனைவளர் கொம்பர்அன் னாய் அன்னாய்'   (118)

என்ற செய்யுட் பகுதியில் தொழுது கொண்டே எழுவாருடைய வினைப் பெருக்கம் அனைத்தும் சாம்பர் ஆகும்படித் தான் திருநீற்றை அணிந்திருக்கின்ற அம்பலவாணப் பெருமானுடைய மலையில், ஒப்பனை செய்யப் பெற்ற பூங்கொம்பை ஒத்த தலைவியே என்று தலைவி அழைக்கப் படுவதாகப் பொருள் அமைந்துள்ளது. இப்பகுதியில் உயிர்களின் வினைத் தொகுதி கெட, இறைவன் நீறணிகின்றான் என்ற பொருள் நயம் புலப்படுவது நினைந்து இன்புறத் தக்கதாகும். இறைவன் திருநீறை அணிவதற்குக் காரணம் தன்னை வணங்குகின்றவர்களுடைய வினைகள் எல்லாம் தான் அணிந்திருக்கின்ற திருநீறு போலத் தன்னுடைய அருளால் எரிந்து சாம்பராகும் என்று குறிப்பிட்டு மணிவாசகர் இறைவன் திருநீறை அணிந்திருப்பதற்குக் காரணத்தைப் புதிய நோக்கில் கூறிப் பக்திச் சுவையைத் தத்துவத்தோடு தந்திருக்கிறார்.  


பக்திச் சுவையைத் திருச்சிற்றம்பலக்கோவை தருவதோடு , பண்டைத் தமிழரின் பண்பாட்டையும் புலப்படுத்தத் தவறவில்லை. 

ஷஷமீண்டார் எனஉவந் தேன்கண்டு நும்மைஇம் மேதகவே

பூண்டார் இருவர்முன் போயின ரேபுலி யூர்எனைநின்று

ஆண்டான் அருவரை ஆளியன் னானைக்கண் டேன்அயலே

தூண்டா விளக்கனை யாய்என்னை யோஅன்னை சொல்லியதே'

(244)

என்ற செய்யுள் காதல் கொண்ட தலைவன் தலைவி இருவரும் தம் ஊரை விட்டுச் சென்ற பொழுது , அவர்களைத் தேடிச் சென்ற செவிலித்தாய் தன் நகரத்திற்கு வருகின்ற வேறொரு தலைவன் தலைவியரைக் கண்டாள். அவர்கள் பால் தன்னுடைய தலைவியையும் அவள் காதலனையும் கண்டீரோ எனக் கேட்ட பொழுது எதிர்வந்த தலைவன் பதில் கூறுவதாக அமைந்தது இச்செய்யுள். இதனை ஒரு நாடகக் காட்சி போல மணிவாசகர் படைத்திருக்கிறார். செவிலித்தாய் எதிர் வந்த தலைவன் தலைவியை நோக்கி , ஷஷஉம்மைக்கண்டு என்னுடைய தலைவியும் தலைவனும் மீண்டார் என்று மகிழ்ந்தேன்.  ஆனால் நீங்கள் வேறு . அவர்கள் வேறு என்பதை உணர்கின்றேன்.  உங்களைப் போன்ற மேன்மை தாங்கிய இருவர் முன்பு சென்றனரோ? கூறுங்கள் ' எனச் செவிலித்தாய் கேட்க அதற்கு எதிர்வந்த தலைவன் , ஷஷபுலியூரின் கண் என்னையம் ஒரு பொருளாக மதித்து ஆட்கொண்ட அம்பலவாணப் பெருமானது அணுகுவதற்கு அரிய மலையில் சிங்கம் போன்றவனை(ஆண்மகனை) யான் கண்டேன் ' என்று கூறிவிட்டுத் தன்னுடன் வந்த தலைவியைப் பார்த்து,ஷஷதூண்டா விளக்கனையாய் ,அன்னை சொல்லியது யாது? உனக்குத் தெரியுமோ ' என்று கேட்டு, தலைவனோடு வந்த தலைவியைப் பற்றி நான் அறியமாட்டேன், நீ அறிந்திருப்பாய் , கூறுவாயாக என்று கூறுவதாகச் செய்யுளின் பொருள் அமைந்துள்ளது. இச்செய்யுளில் ஆண்மகன் ஒருவன் எதிர்வந்த, வேறொரு ஆண்மகனும் பெண்மகளும் வந்தாலும் , அந்த ஆண் மகனைப் பார்ப்பானே தவிர. ஆண்மகனோடு அவனுக்கு உரியவளாய் உடன்வந்த பெண்ணை ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்ற தமிழ்ப் பண்பாடு வெளிப்படுத்தப் பெற்றுள்ளமை பெருமைக்குரிய செய்தியாகும்.  


இவ்வாறு தில்லைப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு மணிவாசகர் போற்றிப் பாடிய திருச்சிற்றம்பலக்கோவையில் பொருட் சிறப்பும், தத்துவக் கருத்தும், பக்திச் சுவையும் அமைந்து , 


ஷஷஆரணங் காணென்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின்

காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்

ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்

சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே' 


என்று பாராட்டப்பெறும் சிறப்பினைப் பெற்று விளங்குகிறது. கோவைத் தமிழை உளங்குளிரப் போற்றித் தில்லைக் கூத்தப்பெருமானின் திருவருளைப் பெறுவோமாக. 


______________________________________