புதன், 26 ஜனவரி, 2022

ஒன்றனக்கு இரண்டு


சித்தாந்த செம்மணி, முனைவர். பழ.முத்தப்பன்,

மேனாள் முதல்வர்,

கணேசர் செந்தமிழ்க்கல்லூரி, மேலைச்சிவபுரி.


கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர் நம் மயிலம் பொம்மபுர ஆதீனப் புலவராக விளங்கியவர். அப்பெருமான் படைத்தருளிய திருவெங்கைக்கோவையில் இடம் பெற்றுள்ள ஒரு பொருளுக்கு இரண்டு உவமைகள் பற்றிய செய்தியை வெளிப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 


கடைச்சங்க காலத்தில் ஒரு காட்சி – பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் அரண்மனை. பாண்டியன் அரசவையில் ஒருநாள் வீற்றிருந்தான். அப்பொழுது அரசனைக் குடபுலவியனார் என்ற சங்கப்புலவர் காண வந்தார். தம்மைக் காணவந்த புலவரைப் பாண்டியன் வரவேற்றுச் சிறப்புச் செய்து இருக்கையில் அமர வைத்தான். பின் புலவரை நோக்கித் தாங்கள் வந்த காரணம் யாது? தங்களுக்கு என்ன பரிசுப் பொருள் வேண்டும்? என வினவினான். புலவர் அவனை நோக்கித் தான் வாழும் பாண்டிய நாட்டின் மேற்குப் பகுதி நீர்நிலை இன்றி, விளைநலம் குன்றி வாடுகின்றது. எனவே நீர்நிலை பெருக ஆவன செய்ய வேண்டும் என்ற கருத்து அமைந்த ஒரு பாடலைப் பாண்டியன் மீது சிறப்பித்துப் பாடினார்.  அப்பாட்டின் கருத்து - இம்மைப் பிறவியில் ஒரு பேரரசனாய் புகழ் எய்த வேண்டினும், நாட்டில் நீர்நிலை பெருக ஆட்சி செய்ய வேண்டும். வித்தானது வான்நோக்கி வாழுகின்ற நிலங்கள் வேந்தனுடைய ஆட்சிக்கு இன்றியமையாதது ஆகும். அந்த நிலங்களில் நீர்நிலை பெருக நீ வழிவகை செய்ய வேண்டும் என்ற கருத்தை அமைத்து அவன் வீரத்தைப் போற்றிப் பாடினார். இப்பாடல் புறநானூற்றில் 18- வது பாடலாக அமைந்துள்ளது.  இக்காலத்திலும் நம்முடைய நாட்டில் அரசாட்சி சிறந்து விளங்க நீர் நிலைகளைப் பெரிதும் அமைக்க வேண்டும் என்ற கருத்து நிலவுவது போலச் சங்க காலத்திலும் இத்தகைய தேவை வேண்டியிருந்தது என்பதை அப்பாடல் மூலம் அறிகிறோம். 


சங்கப் புலவர் தாம் பாடிய பாடலில் பயிர்களின் விதையானது நிலத்தி;ல் விதைக்கப் பெற்று, அது தான் வளர வானத்தை நோக்கிக் காத்திருக்கிறது என்ற கருத்தை வெளிப்படுத்துவதாக, 'வித்தி வான் நோக்கும் புன்புலம்' என்ற தொடர் அமைந்துள்ளது. இத்தொடர் கூறும் கருத்து , திருக்குறளை நினனவு படுத்துகிறது. திருக்குறளில் செங்கோண்மை அதிகாரத்தில்,

'வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்

கோனோக்கி வாழுங் குடி.   (542)

என்ற குறள்தான் அது.  இக்குறளின் கருத்து – உலகத்து உயிர்கள் எல்லாம் வானிலிருந்து பொழியும் மழையை நோக்கி வாழுகின்றன. அதுபோல ஒரு அரசனின் செங்கோண்மையை நோக்கி அந்நாட்டு மக்கள் வாழுகின்றனர் என்பதாகும். இங்கு பொருள் பாட்டில் அமைந்திருக்கும் மன்னவனின் குற்றம் கடிந்து, நல்லதைப் பெருக்கும் செங்கோல் திறத்தை நாட்டு மக்கள் நோக்கி வாழுகின்றார்கள் என்பதாகும். அதற்குரிய உவமை மண்ணுலகத்து உயிர்கள் வான் மழையை நோக்கி வாழுகின்றன என்பதாகும். இக்குறளில் அமைந்த வான்நோக்கி வாழும் உலகு என்ற உவமையின் சிறப்பை உணர்ந்த சங்கப்புலவரும் அதனை வலியுறுத்தித் தம் பாடலைப் பாடினார். இக்குறளின் கருத்து வலிமையுடையது, நாட்டிற்கு இன்றியமையாதது என்பதால், பின்னால் வந்த நான்மணிக்கடிகை பின்வரும் பாடலை அமைக்கிறது. 


'கோனோக்கி வாழுங் குடியெல்லாந் தாய்முலையின்,

பானோக்கி வாழுங் குழவிகள் - வானத்,

துளிநோக்கி வாழு முலகமுலகின்,

விளிநோக்கி யின்புறூஉங் கூற்று'      (பா.47)


நான்மணிக்கடிகை ஆசிரியர் இப்பாடலில் அரசனின் செங்கோலை நோக்கி வாழும் குடிமக்கள் என்ற பொருளுக்குத் தாயினுடைய மார்பகத்துப் பாலை நோக்கி வாழுகின்ற குழந்தையையும், வான்மழையை நோக்கி வாழுகின்ற உலக உயிர்களையும் உவமையாக்கிப் பாடியிருக்கிறார். திருவள்ளுவர் மன்னவன் செங்கோலுக்கு ஒரு உவமையாக வான்நோக்கி வாழும் உயிரைக் குறிப்பிட்டிருக்க, அதன் சிறப்பை உணர்ந்த நான்மணிக்கடிகை ஆசிரியர் அதனை வலியுறுத்த, மேலும் ஒரு உவமையாகத் தாய்ப்பாலை நோக்கி வாழும் குழந்தையை உவமையாக்கினார். வான்நோக்கி வாழும் உயிர்களின் சிறப்பை உணர்ந்த பிற்காலத்து அருளாளர்களும் தங்கள் பாடல்களில் அதனை மிகவும் வலியுறுத்திப் பாடியுள்ளனர். எடுத்துக்காட்டிற்காகக் குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழியில்,


'எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்

மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்'  (பெருமாள் திருமொழி, 5.7)


என்று பாடியுள்ளார்.  உலகத்தில் வாழும் உயிர்களுக்கு இன்றியமையாது விளங்குவது வானிலிருந்து ஒழுகும் மழையாகும் என்பதை, வான்சிறப்பு அதிகாரத்தில் திருவள்ளுவர், பத்துப் பாடல்களால் மிகவும் வலியுறுத்தியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க ஒருபாடல்,


'நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு'.     (குறள் -20)


என்பதாகும்.  எனவே திருவள்ளுவர் முதலாகச் சங்கப் புலவர் உள்ளிட்ட பிற்காலப் புலவர்கள் உலகத்தில் வாழும் உயிர்கள்  வான்மழையை நோக்கி வாழும் என்ற கருத்தைப் பதிவு செய்து, நீர்நிலையின் சிறப்பை வலியுறுத்துவதை உணரமுடிகின்றது.  இலக்கணத்தில் உவமை  உயர்ந்ததன் மேற்றே என்பதன்படி வான்நோக்கி வாழுதல் உயர்ந்த உவமையாகும் என்பது பெறப்படுகிறது.  திருவள்ளுவர் ஒருநாட்டு மக்கள் மன்னன் ஒருபால் கோடாது நடுநிலையாக நிற்கும் துலாக்கோல் போலச் செங்கோல் செலுத்த வேண்டும். அவ்வாறு அவன் செங்கோல் செலுத்துகின்ற பொழுது, நாட்டு மக்களுக்கு ஏற்படும் பகையை நீக்கி, அவர்கள் நலம்பெறச் செயல்பாடுகளைச் செய்தல் வேண்டும். அதுவே செங்கோண்மையாகும் என்பதை வலியுறுத்த, வான்நோக்கி வாழும் உயிரை உவமையாக்கினார். பிற்காலத்துப் புலவர்களும் அதனை உவமையாகவே கூறியுள்ளார்கள். 


இவற்றை எல்லாம் உணர்ந்த நம் திருமடத்து ஆதீனப் புலவர் சிவப்பிரகாசர், தான் கூறவந்த ஒரு செய்திக்கு வான்நோக்கி வாழும் உயிரையும், மன்னவன் கோன் நோக்கி வாழும் குடியையும்  உவமைகளாக்கித் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


அவர் இவ்வாறு பதிவு செய்துள்ள பகுதி திருவெங்கைக் கோவையில் 41-வது பாடலாக அமைந்துள்ளது.  ஒத்த தலைவனும் தலைவியும் தெய்வத்தின் அருளால் ஒருவரை ஒருவர் சந்தித்துத் தங்களுடைய காதலைப் பரிமாறிக் கொண்டு, மெய்தொட்டுப் பயின்று, முதல்நாள் பிரிகின்றனர்.  அடுத்த நாள் தலைவன், தலைவியை முதல்நாளில் சந்தித்த இடத்தையே பற்றுக்கோடாகக் கொண்டு,  தலைவியை அங்கு சந்திக்கின்றான். அந்த நாளிலும் இருவரும் காதலைப் பரிமாறிக் கொண்டு பிரியமுடியாது பிரிகின்றனர். தன்னை விட்டுப் பிரிந்து செல்லும் தலைவியை அவளுடைய தோழி கூட்டத்தில் சேர்ப்பிக்கின்ற செய்தியைக் கூறுவது அப்பாடலாகும்.  அப்பாடல் அமைந்த துறை – ஆயத்து உய்த்தல் என்ற தலைப்பினைக் கொண்டதாகும். அதாவது தலைமகளைப் புகழ்ந்த தலைமகன் காலத்தை நீட்டித்துச் சந்தித்துக் கொண்டிருந்தால் , தலைவியினுடைய தோழிமார்கள் அவளைத் தேடி வருவார்கள் எனக் கருதித் தலைவியை விரைவாக அவளின் தோழியர் கூட்டத்தில் கொண்டு விடுதலாகும். அதற்குரிய பாடல் -


வான்நோக்கி நிற்கும்பைங் கூழ்போ லவும்ஒரு மன்னவன்செங்

கோல்நோக்கி நிற்கும் குடிபோல வும்தடங் கோட்டு இமயத்

தேன்நோக்கி நிற்கும் எழில்உடை யான்வெங்கைச் செல்விஉனைத்

தான்நோக்கி நிற்கும்நல் ஆயத்து ளேசென்று சார்ந்தருளே'   

(திருவெங்கைக்கோவை, பா. 41)

என்பது பாடலாகும். இப்பாடலின் பொருள் - பெரிய சிகரத்தை உடைய இமயமலையில் பிறந்த தேனானது  நோக்கி நிற்கும் அழகுடைய சிவபெருமானின் திருவெங்கைப் பதியில் உள்ள திருமகளே, மேகத்தை நோக்கி நிற்கும் பயிர் போலவும், ஒப்பற்ற ஒரு மன்னனது செங்கோலை நோக்கி வாழுகின்ற மக்கள் போலவும், உன்னை நோக்கி நிற்கின்ற நல்ல தோழியர் கூட்டத்துள் நீ போய்ச் சேர்வாயாக(என்று தலைவன் தலைவியை நோக்கிக் கூறினான்) என்பதாகும். 


இப்பாடலில் தலைவன் தலைவியை நோக்கி, தலைவியே, உன்னை எதிர் பார்த்திருக்கும் தோழியர் கூட்டத்துள் நீ சென்று சேர்வாயாக என்று கூறியிருப்பது பொருளாகும். இப்பொருளை வலியுறுத்த வான்நோக்கி வாழும் பைங்கூழும், ஒரு மன்னவன் செங்கோல் நோக்கி நிற்கும் குடிகள் போலவும் என்பன இரண்டு உவமைகளாகும். 


முன்னவர்கள் எல்லாம் உவமையும் பொருளுமாகப் பிரித்துக் கூறிய இரண்டினையும், நம் ஆதீனப் புலவர் சிவப்பிரகாசர் இரண்டையும் உவமைகளாகப் பதிவு செய்திருப்பது சிறப்புடையதாகும்.  மேலும் இப்பாடலில் சிவபெருமானைச் சிறப்பித்துக் கூறும் பொழுது, இமயமலையில் தோன்றிய தேனானது சிவபெருமானை நோக்கி வாழும் என்று கூறப்பெற்றிருக்கிறது.  தேன் என்பது உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுவதாகும். அத்தகைய இரண்டு பண்புகளைக் கொண்ட தேன் தான் அபிஷேகப் பொருளாக மாறுவதற்குச் சிவனை நோக்கிக் காத்திருக்கும் என்ற செய்தியும் பாடலில் இடம்பெற்றுள்ளது சிறப்புடையதாகும். தேன் எவ்வாறு இரண்டு நிலைகளில் பயன்படுகிறதோ அது போலத் தான் கூறவந்த தலைவியை நோக்கி எதிர்பார்த்திருக்கும் தோழியர் கூட்டமாகிய பொருளுக்கு வானை நோக்கி வாழும் உயிரையும், மன்னவனை நோக்கி வாழும் மக்களையும் சிவப்;பிரகாசர் உவமையாக்கியிருக்கிறார்.  


இப்பாடலில் தலைவியை நோக்கி எதிர்பார்த்து வாழுகின்ற தோழியர் கூட்டத்திறகு இரண்டு உவமைகள் இடம்பெற்றிருப்பது ஏன்? என்று சிந்திப்போமேயானால், அச்சிந்தனைக்குப் பெரிதும் துன்பப்பட வேண்டாம் என்பது போலத் தேனைப் பாடலில் இடம்பெற வைத்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.  முன்பு குறிப்பிட்டது போலத் தேன் இரண்டு வகைகளில் பயன்படுகின்றது. அது போல இரண்டு உவமைகள் பாடலி;ல் இடம் பெற்றுள்ளன என்பது முதல் செய்தியாகும்.  


அடுத்துத் தோழியர் கூட்டம் எதிர்பார்ப்பதற்கு முதல் உவமை – உயிர்களுக்கு நலம்தரும் மழையாகும். அதுபோலத் தலைவி தோழிமார்களுக்கு அன்பு காட்டி மகிழ்வைத் தருவாள் என்பது பெறப்படுகிறது. அடுத்த உவமை மன்னவன் செங்கோல் ஆகும். மன்னவனுடைய செங்கோல் நலம் தருவதற்கு மட்டும் அல்ல, கள்வர் போன்றவர்களால் மக்களுக்கு ஏற்படும் தீமையை நீக்குவதும் செங்கோலின் கடமையாகும். அதுபோலத் தோழிமாராகிய மங்கையர் கூட்டம் ஒழுக்கம் மாறிச் சென்றுவிடாது வழிப்படுத்துவதும் தலைவியின் கடமையாகும். அந்த முறையில் திருவெங்கைக்கோவைத் தலைவியும் அமைந்துள்ளாள் என்பதைக் குறிப்பிடவே, முன்னவர்கள் எல்லாம் பொருள் என்ற நிலையில் கூறிய செய்தியைச் சிவப்பிரகாசர் உவமையாக ஆக்கி இரண்டு உவமைகளைத் தந்திருக்கிறார். 


எனவே எடுத்துக் காட்டப் பெற்றுள்ள திருவெங்கைக்கோவை 41-வது பாடல் மூலம் அறியப்படுகின்ற இரண்டு உவமைகள், தோழியர் தலைவியை எதிர்பார்;ப்பதற்கு உரிய உவமைகளாக ஆக்கப் பெற்றிருப்பது  சிறப்புடையதாகும் என்பதும், ஆதீனப் புலவர் சிவப்பிரகாசருக்கு முன்னே வாழ்ந்த புலவர்கள், உவமையாகவும் பொருளாகவும் கூறியதை உவமைகளாக ஆக்கி இப்பாடலைப் பாடியிருப்பதும், அவ்விரண்டு உவமைகளும் தேன் என்ற சொல்லால் இரண்டுவகையில் தேவை என்பது பெறப்படுவதும் , பாடலைத்; திறனாய்வு செய்யும் பொழுது கிடைக்கிறது. 


திருச்சிற்றம்பலம்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக