புதன், 26 ஜனவரி, 2022

கோவையில் தமிழ்க் கல்வி


சித்தாந்த செம்மணி,முனைவர்.பழ.முத்தப்பன்,

மேனாள் முதல்வர்,

கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி.


   மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் புலவர் சிவப்பிரகாச சுவாமிகள் படைத்தருளிய திருவெங்கைக்கோவை கற்பனைக் களஞ்சியத்தின் ஊற்றாக அமைந்துள்ள சிற்றிலக்கியமாகும். ஒவ்வொரு பாடலும் சிவப்பிரகாச சுவாமிகளின் நுண்மாண் நுழைபுலத்தை வெளிப்படுத்துகிறது. அவ்விலக்கியத்தில் புலவர் பெருமான் தமிழ்க்கல்வியின் சிறப்பைப் பதிவு செய்திருப்பதைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.  


      கோவை இலக்கியப் பாத்திரங்களில் ஒன்று பாங்கன் பாத்திரமாகும்.  பாங்கன் பாத்திரம் மூலமாகத் தமிழ்க் கல்வியின் சிறப்பை புலவர் பெருந்தகை எடுத்துக் கூறியுள்ளார். கோவைத் தலைவனும் தலைவியும் ஒருவருக்கொருவர் தெய்வத்தின் அருளால் அன்பினைப் பரிமாறிக் கொண்டபின், தலைவியின் நினைவால் தலைவன் உள்ளம் மெலிந்து உடல் வாட்டம் கொள்கின்றான்.  அவனின் உடல் வாட்டத்தைக் கண்ட பாங்கனாகிய அவனின் தோழன் அதற்குரிய காரணத்தை வினவுகின்றான்.  ஒரு தலைவியின் கடைக்கண் பார்வையால் தன் உள்ளமும் உணர்வும் பிணிபட்டது என்று தலைவன் பாங்கனிடம் கூறுகின்றான். அதனைக் கேட்ட பாங்கன் தலைவனின் உயர்வை எடுத்துக் கூறி, ஒரு பெண்ணினால் வாட்டமுறுவது தவறு என்ற இடித்துரைக்கின்றான். இந்த நிகழ்வைக் கோவை இலக்கியம் பாங்கன் கழறுதல் என்ற துறையாக வெளிப்படுத்தும்.  அத்துறைக்குரிய பாடலில்தான் தமிழ்க்கல்வியின் சிறப்பைச் சிவப்பிரகாசர் எடுத்துக் காட்டுகிறார். 


     நட்புடைய தோழன் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதை வள்ளுவப் பேராசான் நட்பு என்ற அதிகாரத்தில் வரையறுத்துக் காட்டுவார். அந்த அதிகாரத்தில் ஒரு குறள், 


'அழிவி னவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு' (7)


இக்குறட்பாவிற்குப் பரிமேலழகர் உரை – கேட்டினைத் தரும் தீய நெறிகளில் செல்லுங்கால், அதனை விலக்கி ஏனை நன்னெறிகளைச் செல்லாக்கால் செலுத்தித் தெய்வத்தால் கேடு வந்துழி , அது விலக்கப் படாமையால் அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே ஒருவனுக்கு நட்பாகும் என்று எழுதுவார்.  இக்குறள் கோவை இலக்கியத்தின் பாங்கன் பாத்திரத்தின் செயல்முறையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.  எவ்வாறு எனில் அகப்பொருள் பாங்கன் , தலைவன் ஒரு பெண்ணைக் காதலித்து அதனால் தன்னுடைய வலிமையை இழப்பது தவறு என்று சுட்டிக் காட்டுவான். ஆனால் அந்தக் காதல் தெய்வத்தின் அருளால் (தொல்காப்பியத்தின்;படி – ஒன்றிய பாலது ஆணையினால்)  நடந்தது என்பதால் அந்தக் காதல் நெறியைத் தானும் ஏற்றுக் கொண்டு, தலைவனின் காதலுக்கு உதவி செய்வது பாங்கனின் செயலாக அமையும். இதனைத்தான் இத்திருக்குறள் உள்ளடக்கிக் காட்டுகிறது எனலாம். இதன்படி பாங்கன் தலைவனின் காதல் உணர்வை முதலில் கண்டிப்பது என்பது அகப்பொருள் நெறியாக அமைகிறது.  தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தலைவனின் காதல் உணர்வைப் பாங்கன் முதலில் கண்டிப்பதாகக் குறிப்பிடுகின்றன. 


    சங்க இலக்கியத்தில் ஒன்றான குறுந்தொகையில் தலைவனைப் பாங்கன் இடித்துரைப்பதாக (கழறுவதாக)ப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது. 


'காமங் காம மென்ப காமம்

அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்

முதைச்சுவற் கலித்த முற்றா விளம்பும்

மூதா தைவந் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோ ளோயே'   (204)


இப்பாடலின் பொருள் - பெருந்தோளை உடைய தலைவனே, காமம் , காமம் என்று அதனை அறியாதார் இகழ்ந்து கூறுவர். காமம் வருத்தமும் நோயும் அன்று.  மேட்டு நிலத்தில் தழைத்த முதிராத இளைய புல்லை முதிய பசு நாவால் தடவி இன்புற்றாற் போல, நினைக்கும் காலத்து அக்காமம் புதிய இன்பத்தை உடையதாகும் என்பதாகும்.  இப்பாடலுக்கு உரை எழுதிய ஒளவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் ஒரு குறிப்பினைத் தருவாரகள்;. 'பாடலில் அமைந்துள்ள விருந்து என்ற சொல் புதிதாக் தோன்றிச் சிறுபொழுதில் அழிவது என்றும், என்றும் நிலை நிற்கும் நல்ல குணம் அல்ல என்றும் பொருளை உணர்த்துகின்றது' என்ற குறிப்புத் தருவார்.  மேலும் 'அறிவுடையார்பால் காமம் தோன்றாது என்றும், அறிவின்றி மனத்தின் வழியே செல்வார்க்கு அது விருந்தாவது என்றும் புலப்படுத்திப் பாங்கன் இடித்துரைத்தான் ஆயிற்று' என்றும் குறிப்பிடுவார்.


பின்னால் வந்த கோவை இலக்கியங்கள் தலைவனின் காதல் உணர்வைப் பாங்கன் கழறுதல் என்ற துறையில் பாடல்களை அமைத்துள்ளன.

'சூரார் சிலம்பிற் சிலம்பிமென் னூல்கொண்டு சுற்றவெற்றிப்

போரார் களிறு, புலம்பிநைந் தாங்கொரு பூவைகொங்கை

வாரா லணைப்ப வருந்தினை நீதஞ்சை வாணன்வெற்பா

ஓராழி சூழுல கத்தெவ ரேநின்னை யொப்பவரே'  

(தஞ்சைவாணன் கோவை, பாடல்.44)

இப்பாடலின் உட்கருத்து – தெய்வம் பொருந்திய மலையிடத்து சிலந்தி மெல்லிய நூலைக் கொண்டு யானையைச் சுற்ற, பகைவர் படையோடு போர்செய்து வெற்றி பெற்ற அந்த யானையானது புலம்பி நைந்தாற் போல, ஒரு பெண்ணினுடைய மார்பகத்தால் நீ வருந்துகின்றாய். எனவே உன்னை ஒப்பார் யாருமில்லை என்று தலைவனைப் பாங்கன் கழறி உரைப்பதாகப் பொருள் அமைந்துள்ளது. 


பின்னால் வந்த சிராமலைக்கோவை என்ற கோவை இலக்கியத்திலும் இதே அமைப்பில் கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது.  

'தானே தனக்கு நிகராஞ் சிராமலைச் சங்கரனை

ஊனே யருக வுயிரிடை நோக்கி யுணருமதி

மானே கலைக ளனைத்துமுன் னாமுன் மருவவுமெம்

கோனே யொருமட மானான் மெலிவது கொள்கையன்றே' (பாடல் -47)


பெயர் அறியமுடியாத புலவர் இயற்றிய இக்கோவையில் பாங்கன் தலைவனைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, கலைகள்(சாத்திரங்கள்) அனைத்தையும் நினைப்பதற்கு  முன்னே கற்றுத் தெளியும் தலைவன் என்றும், அவன் ஒரு மான்போன்ற பெண்ணால் மெலிவது சிறப்புடையது அல்ல என்றும் பொருள் அமைந்துள்ளது. 


     தொட்டிக்கலை சுப்பிரமணி முனிவர் இயற்றிய கலசைக்கோவையில் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.  

'சீதக் கமலத் தடஞ்சூழ் கலைசைத் தியாகரருள்

வேதக் கடலி னெறியறி வேந்தற்கும் வேந்தவொரு

மாதக் கவலையுற் றேனென்று தேம்பிமெய் வாடன்மிக

நோதந்த தாலிது வோதிட்ப மானநின் னுண்ணறிவே.' (பாடல் . 47)


இப்பாடலின் உட்கருத்து – வேதக்கடலை நன்கு அறிந்த தலைவன் , ஒரு பெண்ணினால் தேம்பி மெய்வாடுதல் தவறு என்பதாகும். இதைப்போல, வைத்தியநாத தேசிகரின் குமாரர் தியாகராய தேசிகர் பாடியருளிய ஆனந்தரங்கன் கோவையில் கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது. 

'மானொன்று நின்று மருட்டக் கரட மதகளிறு

தானொன்று தற்குத் தளர்ந்ததென் றாய்செழுந் தாமரையின்

மீனொன்று கண்ணியர் வேள்பிரம் பூரன் விரும்புநறுந்

தேனொன்று முல்லைகொ ளாநந்த ரங்கன் சிலம்பிடத்தே' (பாடல் - 44)

இப்பாடலின் உட்கருத்து – ஒரு மான் அச்சுறுத்த ஒரு மதயானை அதனை அணுகுவதற்குத் தளர்ந்தது போல, தலைவன் மீனைப் போன்ற கண்ணினை உடைய பெண்ணிற்காகத் தளர்வது தவறு என்று குறிக்கப் பெறுகிறது.  இவ்வாறு கோவை இலக்கியங்கள் எல்லாம் தலைவனை வேதம் படித்தவன் என்றும், மதயானை போன்ற வீரம் படைத்தவன் என்றும் குறிப்பிட்டிருக்க, இக்கோவைகளுக்கு எல்லாம் தலைமையான அரசகோவை என்று குறிக்கப் பெறுகின்ற திருக்கோவையாரில் பாங்கன் தலைவனை வினவுதாகக் கீழ்வரும் பாடல் அமைந்து தலைவனைத் தமிழ் கற்றவனாகக் குறிப்பிடுகிறது.  

'சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளும்

உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண் டீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ?

இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே' (பாடல்.20)

 

இப்பாடலின் உட்கருத்து – சிற்றம்பலத்திலும் என் சிந்தையிடத்திலும் ஒத்து வாழுகின்ற சிவபெருமானின் திருஆலவாயில் இருந்து  இனிய தமிழில் அமைந்த அக இலக்கியத்தையும், புற இலக்கியத்தையும் ஆராய்ந்ததாலோ, அல்லது ஏழிசைக்குரிய பண்ணை ஆராய்ந்ததாலோ, தலைவனே, உன்னுடைய மலையை ஒத்த தோள்கள் மெலிவடைந்தன என்பதாகும்.  இதில் தலைவனின் சிறப்பாக அவன் தமிழையும், ஏழிசைப் பண்ணையும் ஆராய்ந்தவன் என்று குறிப்பிட்டிருப்பதை நினைவு கொள்ளுதல் வேண்டும். 


      இவ்வாறு தலைவனின் புகழைக் கூறிய பாங்கன் தலைவனின் வாட்டத்தைப் பற்றிக் கேட்க அதற்குத் தலைவன், துடி போன்ற இடையை உடைய பெண்ணால் நிகழ்ந்தது என்று கூறப் பாங்கன் அவனைக் கழறி உரைக்கின்றான். அவ்வாறு கழறி உரைக்கும் பொழுது, பாங்கன், அது அழகல்ல என்று கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.  இவ்வாறு இரண்டு பாடல்கள் பாங்கனின் கூற்றாக அமைந்துள்ளமை படித்து இன்புறத் தக்கதாகும். 


திருக்கோவையாரில் தலைவனின் சிறப்பைக் கூறும் பொழுது மதுரையில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் தமிழை ஆராய்ந்தவன் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுவது, பிற கோவை இலக்கியங்கள் கூறும் வேதக் கல்வியிலிருந்து வேறுபட்டுத் தமிழ்க் கல்வியைச் சிறப்பிப்பதாக அமைகிறது. அரசகோவையின் பின்னால் வந்த அமைச்சர் கோவையாகிய திருவெங்கைக் கோவையில் சிவப்பிரகாசர், அனைத்துக் கோவைகளுக்கும் மகுடமாகத் தமிழ்க் கல்வியின் சிறப்பைத் தலைவனுக்குக் கொடுத்துத் தன்னுடைய தமிழ் உணர்வைப் புலப்படுத்தியுள்ளமை கீழ்வரும் பாடலால் உணரமுடிகிறது. கற்றுஅறி பாங்கன் கழறல் என்ற தலைப்பில் கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது. 


'போதைப் பொதிந்திட்டு இருந்தூங்கு அளகப் பொருப்பஇமைய

மாதைக் கலந்த திருவெங்கை வாணர் மதுரைச்சங்க

மேதைப் பசுந்தமிழ்ப் பாற்கடல் நீந்திய வீரம்ஒரு

பேதைக்கு உடைந்துநின் றாய்தகு மோசொல் பெருந்தகையே'  (பாடல்.178)


இப்பாடலின் பொருள் - பெருந்தகையே, மலரைச் சூடி இருளானது உறக்கம் கொள்கின்ற கூந்தலை உடைய இமயமலை ஈன்ற உமாதேவியைச் சேர்ந்த திருவெங்கை வாணனது, தென்மதுரையில் உள்ள சங்கத்தில் பயிலுகின்ற அறிவு கொடுத்தற்குரிய பைந்தமிழாகிய பாற்கடலைக் கடந்த வீரத்தன்மையானது, ஒரு மாதுக்கு உடைந்தது என்றால் இது உனக்குத் தகுதியோ கூறுவாயாக என்பதாகும்.  இப்பாடலில் சிவப்பிரகாசர் மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நிகழ்வைக் குறிப்பிடுகிறார். அவ்வாறு குறிப்பிடும் பொழுது மதுரைச் சங்கத்தில் தமிழ் பயின்றால் மேதை ஆகலாம் என்று குறிப்பிடுகின்றார். இந்த மேதை என்ற சொல் ஆய்வுக்கு உரியதாகும்.  யார் ஒருவர் அறிவில் மிகச்சிறந்து விளங்குகிறாரோ அவரைத்தான் மேதை என்று குறிப்பிடுவது தமிழ் வழக்கம். சிவப்பிரகாசர் மதுரைச் சங்க மேதை என்று குறிப்பிடுவதால், மதுரைச் சங்கத்தில் தமிழ் பயின்றவர் மிகச் சிறந்த அறிவுடையவராவர் என்பது பெறப்படுகிறது.  பிறதுறைகளைக் கற்று அறிவுடையவர் ஆவதை விடத் தமிழைக் கற்று அறிவுடையவர் ஆதலும், தமிழைக் கற்றால் மிகுந்த அறிவுடையவர் ஆவதும் இத்தொடரால் பெறப்படுவதாகும். தமிழ் கற்றவன் என்றும் சாவதில்லை என்ற தொடருக்கு ஏற்பச் சிவப்பிராகசார் தமிழ் கற்றவர் மேதையாகலாம் என்று தமிழ்க் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறார். 


மேலும் பசுந்தமிழ்ப் பாற்கடல் என்ற தொடரால் தமிழ் இலக்கிய இலக்கண வளம் பெற்றது என்பதையும்; சிவப்பிரகாசர் பதிவு செய்கின்றார்.  மற்ற கோவைகள் எல்லாம் வேதங்களைக் கற்றும், வீரத்திலும் சிறந்து விளங்கும்  தலைவனை அறிமுகப் படுத்த, திருக்கோவையார் சங்கத் தமிழை ஆராய்ந்த செய்தியைக் குறிப்பாகக் காட்ட, திருவெங்கைக் கோவையில் சிவப்பிரகாசர் தன்னுடைய தலைவனைச் சங்கத்தமிழ் கற்ற மேதை என்று குறிப்பிட்டுத் தமிழ்க் கல்வியின் சிறப்பை எடுத்துரைப்பது உண்மையன்றோ. 


ஆதீனப் புலவர் குறிப்பிட்டது போல நமது ஆதீனத்தின் வணக்கத்திற்குரிய பதினெட்டாம் பட்டத்து சுவாமிகள் மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வை எழுதும் வண்ணம் திருமடங்களிலேயே முதன்முறையாகத் தமிழ்க் கல்லூரியைத் தோற்றுவித்து , தமிழ்க் கல்வியின் பெருமையை உலகறியச் செய்தார்கள்.  எனவே திருவெங்கைக்கோவை தமிழ்க் கல்வியைச் சிறப்பித்திருப்பதை ஒரு சிறிது எடுத்துக் காட்ட இக்கட்டுரை உதவுகின்றது. 


            திருச்சிற்றம்பலம். 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக