சித்தாந்த செம்மணி.பழ.முத்தப்பன்,
மேனாள் முதல்வர்,
கணேசர் செந்தமிழ்க் கல்லூரி,மேலைச்சிவபுரி.
மயிலம் பொம்மபுர ஆதீனப் புலவராகிய சிவப்பிரகாசர் படைத்தருளிய திருவெங்கைக் கோவையில் இடம்பெற்ற நடுங்க நாட்டம் என்ற அகப்பொருள் துறைக்குரிய
பாடலின் சிறப்பைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அகப்பொருள் தலைவன் தெய்வத்தின் திறத்தால் தலைவியைக் கண்டு மெய் தொட்டுப் பயிறல் முதல்நாள் நிகழ்த்திய பின்னர், இடந்தலைப்பாடு என்ற முறையில் இரண்டாம் நாள் தலைவியை முதல்நாள் கண்ட இடத்தில் , மீண்டும் தலைவியைக் கண்டு மகிழ்வான். அதன் பிறகு தன் காதலை வளர்த்துக் கொள்ள அகப்பொருள் தலைவன் தன் உயிர்த் தோழனின் துணையை நாடுவான். பாங்கனால் நடைபெற்ற தலைவியின் சந்திப்பை அகப்பொருள் இலக்கியங்கள் பாங்கர் கூட்டம் என்று கூறும். அதன்பிறகு அகப்பொருள் தலைவன் , தலைவியின் உயிர்த்தோழியின் மூலம் மீண்டும் தலைவியைச் சந்திக்க நினைத்துத் தோழியினிடத்தில் தன் காதலைக் குறிப்பாக வெளிப்படுத்த முயற்சிப்பான். அவனுடைய முயற்சியைக் கண்ட தோழி, தலைவியை ஆராய்ந்து அவளுடைய காதலை உணர்ந்து கொள்ளத் தலைப்படுவாள். அவ்வாறு ஆராய்கின்ற அவளுடைய செயல்கள் பாங்கி மதியுடம்பாடு என்ற பொருளில் பாடல்களைக் கொண்டிருக்கும். பாங்கி மதியுடம்பாட்டில் இடம்பெற்ற துறைகளில் ஒன்று நடுங்க நாட்டம் என்பதாகும்.
தலைவனோடு இரண்டு நாட்களாகத் தொடர்பு கொண்ட தலைவியின் உருவத் தோற்றத்தில் சில மாறுதல்கள் ஏற்படும். தலைவியின் தோற்ற மாறுதலைக் கண்ட அவளுடைய உயிர்த்தோழி, உடலின் மாற்றத்திற்குக் காரணம் யாது? என்று ஆராய்வாள். அவ்வாறு ஆராய்கின்ற பொழுது தலைவிக்கு அச்சம் ஏற்படும்படி செய்தியைக் கூறி, அதன் மூலம் அவளுடைய காதல் நிகழ்வைத் தெரிந்து கொள்ள முற்படுவது நடுங்க நாட்டம் என்ற துறையாகும். தொல்காப்பியப் பொருளதிகாரம் இத்துறையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, 'பல்வேறு கவர் பொருள் நாட்டத்தாலும்' என்று குறிப்பிடும். இதற்கு நச்சினார்க்கினியர் உரையெழுதும் பொழுது,'உண்மைப் பொருளானும், பொய்ப் பொருளானும் தலைவிக்குக் குற்றேவல் செய்யும் தன்மையில் தப்பாது, வேறு பல் கவர்பொருள் படக்கூறி ஆராயும் ஆராய்ச்சி' என்று கூறுவார். இவ்வாறு கூறுவதோடு அமையாது தலைவி அஞ்சுமாறு பொய்ச் செயலைக் கூறுவது, தலைவி இறந்து படுமாறு செய்யவும் கூடும் என்பதால், காந்தர்வருத்திற்கு அமையாது என்று குறிப்பிடுவார்.
இதனையே இறையனார் அகப்பொருள் இலக்கண நூல் களவியலில்,
'நாண நாட்டமும் நடுங்க நாட்டமும்
அகத்திணை இலக்கணம் அன்று என்பது' (சூ.7) என்று குறிப்பிடும். இவ்வாறு உரையாசிரியர் நச்சினார்க்கினியரும், இறையனார் அகப்பொருள் இலக்கணமும் தலைவி நாண நடுங்க தோழி ஆராய்வது சில சமயத்தில் தலைவியைத் துன்பப் படுத்தும் ஆதலால்,(தலைவியை இறந்து போகச் செய்யும் என்பதால்) காந்தருவக் களவு ஒழுக்கத்திற்கு வேண்டுவது இல்லை என்று குறிப்பிடுவதால், அத்துறை தவிர்க்கப் படலாம் என்பது பெறப் படுகிறது. ஆனால் அகப்பொருள் இலக்கியமாகிய கோவை இலக்கியங்கள் அனைத்திலும் நடுங்க நாட்டம் என்ற துறை அமைந்து அதற்குரிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
திருக்கோவையாரில்,
'ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின் றோளையுன் னாரின் முன்னித்
தீவா உழுவை கிழித்ததந் தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட வாறின்றொ ராண்தகையே' (பா.72)
இதன் பொருள் - 'ஆ ஆ மாலும் பிரமனும் ஆகிய இருவரும் அறியாத திருவடியை மூவாயிரவர் கூடி வணங்கத், தில்லையம்பலத்து எளிவந்து நின்ற அம்பலப் பெருமானை நினையாதவர் போலத் தலைவன் வருந்த, எதிர்ப்பட்டுத் தன் கொடிய வாயைப் புலி திறந்து நின்றது. அவ்வாறு அது வாய் திறக்க ஒரு ஆண்மகன் அதனிடத்துத் தப்பும்படி தன் அழகிய கூர்மையான வேலைப் பணி கொண்டான் என்னோ என்றவாறு' என்பதாகும். நான் வரும் வழியில் ஒரு ஆண்மகனை ஒரு புலி எதிர்ப்பட்டு அவனை அடித்துத் தின்பதற்காகத் தன் கொடிய வாயைத் திறந்தது என்று கூறிச் சிறிது நிறுத்தினாள். அதனைக் கேட்;ட தலைவி, தோழி சந்தித்த ஆண்மகன் தன்னைக் காதலிக்கும் தலைவனாக இருப்பானோ என எண்ணி அவனைப் புலிகொல்ல நினைத்ததோ என்று அச்சப்பட்டு நிற்பாள். அவள் உடம்பில் பயத்திற்குரிய குறிப்புகள் தோன்றும். அதனைப் பார்த்த தோழி, தலைவி அத் தலைவனைக் காதலித்திருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டு, அவள் துன்பப் படாதிருக்கத் தான் கண்ட தலைமகன் புலியைக் கொல்வதற்குத் தன் கையில் இருந்த வேலை எடுத்துப் பணி செய்தான் என்று அடுத்துக் கூறி, அவளின் அச்சத்தைப் போக்கினாள் என்ற குறிப்புப் பொருள் இப்பாடலால் தெரிய வருகிறது. எனவே திருக்கோவையார் பாடல் நடுங்க நாட்டத்தை நடுங்குமாறு செய்து ஆராய்ந்ததையும், அந்த நடுக்கம் தீர உடன் நடைபெற்ற செயலையும் கூறுவதாக அமைகிறது. ஆனால் தஞ்சைவாணன் கோவையில் கீழ்வரும் பாடல் அமைகிறது.
'பால்போல் மொழிவஞ்சி யஞ்சி நின்றே இந்தப் பார்முழுதும்
மால்போற் புரந்தவன் மாறை வரோதயன் வாணன்வென்றி
வேல்போல் சிவந்து நெறிமுறை கோடிய வேந்தன்வெய்ய
கோல்போல் கொடியன வாங்கொலை யானையின் கோடுகண்டே. (பா.68)
இப்பாடலின் பொருள்- 'பால் போலும் சொல்லை உடைய வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே, இந்த உலகம் முழுவதையும் திருமாலைப் போல இடையூறுகளை நீக்கிக் காக்கின்ற மாறை நாட்டின் தலைவனான வாணனது வெற்றி வேல் போலக் குருதி படிந்த, சிவந்த நெறிமுறை தழுவிய அரசனது கொடுங்கோல் போல, அனைவருக்கும் அச்சங் கொடுக்கும், கொலைத் தொழிலைச் செய்யும் யானையின் கொம்பைக் கண்டு அஞ்சி நின்றேன்' என்று தோழி கூறினாள்.
இது போலப் பின்னால் வந்த பெயர்தெரியாத புலவர் பாடியருளிய , பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த சங்கரமூர்த்திக்கோவை என்ற கோவை இலக்கியத்தில்,
(தமிழ்நாடு அரசு, தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு – 1981)
'மெய்யாம் பலங்குழல் வாய்மொழிப் பாவை பெயர்த்தஞ்சினேன்
பெய்யாம்பல் நீலச் சுனையரு கேசங்கின் பேரொளியால்
மொய்யாம்பல் விள்ளுங்; குடநாடன் சங்கர மூர்த்திவெற்பில்
கையாம்பல் கோடுசெந் நீரால்செவ் வாம்பல் கடுத்தல் கண்டே (பா.67)
இப்பாடலின் பொருள் - 'மூங்கிலால் செய்யப் பெற்ற குழலின் ஓசை போன்ற சொல்லை உடைய பெண்ணே, நான் வியர்த்து அஞ்சினேன். எப்பொழுது என்றால் ஆம்பல் மலரும் சுனையருகே வெண்மை நிறச் சங்கின் பேரொளியால், தன்னுடைய வெற்றியைப் புலப்படுத்தும் குட நாட்டைச் சார்ந்த சங்கரமூர்த்தியின் மலையில், துதிக்கையோடு கூடிய யானையின் கொம்புகள் , இரத்தத்தால் நனைந்து செவ்வாம்பல் பூப்போல இருப்பதைக் கண்டு அஞ்சினேன்' என்று தோழி கூறினாள்.
இதே பொருள் அமைப்பில் நம்பியகப்பொருளில் நடுங்க நாட்டத் துறைக்குக் உதாரணப் பாடலாகக் கீழ்வரும் தனிப்பாடல் அமைந்துள்ளது.
'பண்டிப் புனத்துட் பகலிடத் தேனலுட்
கண்டிக் களிற்றை யறிவன்மற் - றிண்டிக்
கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணா
யுதிர முடைத்திதன் கோடு'
இவ்வாறு எடுத்துக் காட்டப் பெற்ற பாடல்களில் திருக்கோவையாரைத் தவிர மற்ற கோவைப் பாடல்களில்; தோழி இரத்தம் தோய்ந்த கொம்பினை உடைய யானையைக் கண்டதாகக் கூறி, அதன் மூலம் தலைவியை அஞ்சுமாறு செய்து அவள் காதலை ஆராய்ந்ததாகக் கூறப் பெற்றுள்ளது. திருக்கோவையார் அச்சத்தைத் தருகின்ற நிலையில் புலியின் செயலையும், அதனைத் தடுத்துக் கொண்ட தலைவனின் செயலையும் கூறுகிறது. ஆனால் சிவப்பிரகாசர் தாம் பாடியருளிய திருவெங்கைக் கோவையில் நடுங்க நாட்டத்திற்குக் கீழ்வரும் பாடலைக் கூறித் தன்னுடைய கற்பனை முத்திரையைப் பதிவு செய்துள்ளார்.
'எதிராக் கவின்உமை பங்காளர் வெங்கை இறைவர்சடை
முதிராப் பிறைஐந் தலைநாகம் ஈன்ற முழுமணியின்
கதிரால் சிவந்தது போல்சேந்த கோட்டுக் களிற்றைமலர்
உதிரா கொடிஅனை யாய்இன்று நான்கண்டு உடைந்தனனே. ( பா.71)
இப்பாடலின் பொருள் - மலர்கள் உதிர்ந்து போகாத பூங்கொடி போன்றவளே, நிகரற்ற அழகைக் கொண்ட உமாதேவியைத் தன் பாகத்தில் உடைய திருவெங்கை ஈசரின் சடையில் உள்ள பிறைச் சந்திரன், அதே சடையில் உள்ள ஐந்துதலைப் பாம்பு உமி;ழ்ந்து மாணிக்கங்களின் ஒளியால் சிவந்தது போல, சிவந்த கொம்பினை உடைய யானையை வழியில் இப்பொழுது நான் பார்த்து மனந் தளர்ந்தேன்' என்று தோழி கூறினாள். இறைவன் சடையில் உள்ள நாகம் ஐந்து தலைகளைக் கொண்டு சடையைக் கட்டும் கயிறாக அமைந்தது. அது உதிர்த்த மாணிக்கத்தின் சிவந்த ஒளியால் சடையில் உள்ள பிறைச் சந்திரன் சிவந்தது என்று சிவப்பிரகாசர் கூறியிருப்பது அவரின் கற்பனை வளத்திற்கு எடுத்துக் காட்டாகும். அத்தகைய சிவபெருமானின் இடமான திருவெங்கை நகரில் தோழி, சிவந்த கொம்பினை உடைய யானையைக் கண்டு அஞ்சினேன் என்று கூறுகிறாள். இவ்வாறு கூறுவது தான் அஞ்சுவதோடு அல்லாமல் தலைவியும் அந்த அச்சத்தைப் பெறவேண்டும், அதன் மூலம் அவளின் காதலை அறிய வேண்டும் என்ற குறிப்போடு தோழி பாடலில், யானையை இன்று கண்டு உடைந்தனனே' என்று கூறினாள்.
எனவே பிற கோவை இலக்கியங்கள் கூறுவது போல இரத்தம் தோய்ந்த யானையைக் கண்டு தோழி அஞ்சிய கற்பனை , திருவெங்கைக் கோவை பாடலில் அமைந்திருந்தாலும், தலைவி அஞ்சினால் அந்த அச்சத்தால் இறந்துபடும் நிலை ஏற்பட்டு அகன் ஐந்திணைக்கு உரியது ஆகாது, பெருந்திணையின் பாற் படும் என்பதை அறிந்த சிவப்பிரகாசர், இங்கு ஒரு தொடரை அமைத்துத் தலைவி இறந்து படாத நிலையைச் சுட்டிக் காட்டுகிறார். அதாவது பாடலில் மலர்உதிராக் கொடியனையாய் என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. இந்த உவமை தலைவியின் நிலையைக் குறிப்பதற்கு அமைந்ததாகும். அதே நேரத்தில் அவ் உவமை இல்பொருள் உவமையாகவும் அமைகிறது. அதாவது எந்தக் கொடியில் பூ பூத்தாலும் குறிப்பிட்ட நேரம் வரை இருந்து அப்பூக்கள் பின் உதிரத்தான் செய்யும். ஆனால் சிவப்பிரகாசர் தலைவியைப் பெருமைப் படுத்த மலர் உதிராத கொடி என்று கூறியது இல்பொருள் உவமையாகும். இந்த இல்பொருள் உவமையைக் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர் கையாள்வது பொருத்தமா? என்று ஆராய்கின்ற பொழுது, தோழியின் அச்சக் குறிப்பிற்குத் தலைவி அஞ்சாத, நடுங்காத நிலையை எடுத்துரைப்பதற்குத்தான் சிவப்பிரகாசர் இந்த இல்பொருள் உவமையைப் பயன் படுத்தியுள்ளார். அதாவது பூக்கள் உதிராத கொடிபோன்றவள் என்பதால் அஞ்சாது நின்றாள் என்பது பெறப்படுகிறது.
நாண நட்டம், நடுங்க நாட்டம் இவற்றை அகன் ஐந்திணைப் பகுதியில் அமைப்பது பொருத்தமில்லை என்று இலக்கண நூல்கள் கூறினாலும், சான்றோர்கள் இத்துறை அமைந்த பாடல்களைத் தங்கள் கோவை இலக்கியங்களில் பாடியிருப்பதும், நாண நாட்டம், நடுங்க நாட்டம் துறைகளைக் குறிக்கின்ற பொழுது தோழியானவள், தான் தலைவிக்குப் பணி செய்வதை மறவாது குறிப்பு மொழியால் கூறத் தகுதி உடையவள் என்று இலக்கண உரையாசிரியர்கள் குறிப்பதாலும், நாண நாட்டத்தையும், நடுங்க நாட்டத்தையும் கோவை இலக்கியங்களில் அகன் ஐந்திணைப் பகுதியில் கூறவது தவறாகாது என்பதால் சிவப்பிரகாசர் தோழியின் கூற்றில் நடுங்க நாட்டத்தை வெளிப்படுத்த இல்பொருள் உவமையை அமைத்து, அவளின் பணிவுத் தன்மையைக் காட்டி, தான் அஞ்சினாலும் தலைவிக்கு அச்சம் ஏற்படவில்லை என்பதைக் குறிப்பாகக் கூறுவது போல இந்த இல்பொருள் உவமையை அமைத்திருப்பது சிறப்புடைத்தாம். அதாவது ஒரு கொடி தன்னிடம் பூத்த மலர்களைக் காற்றின் அசைவினால் எப்படியும் உதிர்த்து விடும். இங்கு தலைவி தன் அச்சத்தினால் பூக்களை உதிராத கொடிபோல நின்றாள் என்பதால், அவள் அச்சப்படவில்லை என்பதையும், தலைவி எவ்வித அசைவும் இல்லாது இருந்தாள் என்பதையும் அந்த இல்பொருள் உவமையால் சிவப்பிரகாசர் குறிப்பிட்டிருப்பது படித்து இன்புறத் தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக