புதன், 26 ஜனவரி, 2022

கோவையில் பெண் தெய்வம்

 

   சித்தாந்த செம்மணி. முனைவர்.பழ.முத்தப்பன்

           மேனாள் முதல்வர்,

   கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி.


      மயிலம் பொம்மபுர ஆதீனப் புலவர் பெருந்தகை சிவப்பிரகாச சுவாமிகள் தமி;ழ் மொழிக்குக் கொடையாக அளித்த சிற்றிலக்கியங்களில் திருவெங்கைக்கோவை தனிச் சிறப்பு உடையதாகும்.  தமிழக வரலாற்றில் சங்க காலத்திற்குப் பிறகு இடைக்காலத்தில் கோவை இலக்கியங்கள் பல்கிப் பெருகி வளர்ந்தன.  பேராசிரியர். ந.வீ. செயராமன் அவர்களின் சிற்றிலக்கிய அகராதியின்படி (பாரிநிலையம்,1983) சுமார் 70 கோவை இலக்கியங்கள் தமிழில் இயற்றப் பெற்றுள்ளன எனத் தெரிகிறது. அக்கோவை நூல்களில் தலையாய கோவையான மாணிக்கவாசகப் பெருமான் இயற்றிய திருக்கோவையார் அரசகோவை என்றும், நம் ஆதீனப் புலவர் இயற்றிய திருவெங்கைக்கோவை அமைச்சர் கோவை என்றும்  பாராட்டப் பெறுகின்றன. திருவெங்கைக்கோவை சிவப்பிரகாசரின் தமிழ்ப் புலமைக்கும், கற்பனை ஆற்றலுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  சிவப்பிரகாசரின் கற்பனைக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்கும் பாடல் ஒன்றின் நயத்தை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 


தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் களவியலில் தோழியின் கூற்றுக்களை வரையறை செய்கின்ற சூத்திரத்தில்,(சூ. 23) தோழி தலைவனை நோக்கித் தலைவியின் அருமையைக் கூறுகின்ற துறையாக 'அருமையின் அகற்றியும்' என்ற ஒருதுறை அமைந்துள்ளது. இத்துறையின் விளக்கம் -  பாங்கியர் கூட்டம் பகுதியில் தலைவன் பாங்கியின் (தோழியின்) மூலமாகத் தலைவியைக் கூட எண்ணி, தலைவிக்குப் பரிசுப் பொருளாக மலர்களைக் கையுறையாகக் கொண்டு வருவான். அவன் கொண்டு வந்த கையுறை மலர்களை ஏற்க மறுத்த தோழி, தலைவனால் குறிக்கப் படும் தலைவி அருமை உடையவள் என்று கூறி, அவளை நீ அடைய முடியாது என்று தடுப்பாள். இத்தகைய செய்தியை விளக்குவது அத்துறையாகும்.  இத்துறைக்கு விளக்கம் தரும் நச்சினார்க்கினியர் இத்துறைக்குரிய உதாரணப் பாடலாகக் கீழ்வரும் பாடற்பகுதியைத் தருவார். 


'எற்குறை யுறுதி ராயிற் சொற்குறை

எம்பதத் தெளிய ளல்ல ளெமக்கோர்

கட்காண் கடவு ளல்லளோ பெரும

வாய்கோன் மிளகின் மலையங் கொழுங்கொடி

துஞ்சுபுலி வரிப்புறந் தைவரும்

மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே'  (பொருளியல்)


என்று உரையில் பதிவு செய்துள்ளார். இப்பதிவின்படி தலைவனே, எம்மிடத்தில் உம் குறையைக் கூறுவதானால் சுருங்கச் சொல்வாயாக. நீ விரும்பும் தலைவி எளியல் அல்லள். அவள் தெய்வப் பெண்ணாவாள்.  மிளகுக்கொடி படர்ந்த மலை சூழ்ந்த நாட்டை ஆளும் மன்னனின் மகளுமாவாள் என்ற பொருள் அமைந்துள்ளது.  இப்பகுதியில் தலைவன் தலைவியை அடைவதற்கு இயலாது.  ஏனென்றால் அவள் தெய்வக் கற்புடைய பெண் என்பதோடு, சிறந்த குலத்திற்குரிய மன்னனின் மகளுமாவாள்  என்ற செய்தி அமைந்துள்ளது. இதன் அடிப்படையில்தான் கோவை இலக்கியங்கள் தோழி, தலைவியின் அருமையைக் கூறுகின்ற பொழுது, தலைவியைத் தெய்வப் பெண்ணாகக் குறிப்பிடுகின்றன. 


'புகழார் வரையெம் புரவலன் காதல் புதல்வியைநீர்

இகழா எளியள் என்றுஎண்ணப் பெறீர்எமக்கு என்றும்வண்மை

திகழா பரணன் செழுந்தஞ்சை வாணன் சிலம்பினுள்ளீர்

அகழார் கலியுலகில் புலனான அணங்கவளே'                             (தஞ்சைவாணன்கோவை,பா.86)

இக்கோவைப் பாடலின்படி தலைவி, கிடைத்தற்குரிய எளிமை உடையவள் அல்ல, அவள் ஆழமாகத் தோண்டப்பெற்ற கடல் சூழ்ந்த உலகில் அறிவுருவான தெய்வப்பெண் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.  

      தஞ்சைவாணன் கோவை கருத்தை ஒட்டியே பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொட்டிக்கலை ஸ்ரீசுப்பிரமணிய முனிவர் இயற்றிய கலசைக்கோவையில் பின்வரும் பாடற் பகுதி அமைந்துள்ளது. 


'தௌ;ளார் கலியினில் திங்களின் பின்வரு சீரணங்கை

எள்ளா எளியள் என்று எண்ணுதி போலும் இதயத்திலே' (பா.99)


இதே கருத்தின் அடிப்படையில், ஆசிரியர் பெயர் தெரியாத தமிழ்நாடு தொல்லியல்துறை வெளியிட்டுள்ள கப்பற்கோவையிலும் தலைவியின் அருமை சாற்றல் பகுதி அமைந்துள்ளது. 


'துன்போட வந்தருளும் தொண்டை வேந்தன் துவரை வெற்பில்

அன்போடு நின்றவள் பொன்னடி போற்றும் அணங்கினளே.'  (பா.73)


இப்பாடற் பகுதியின் பொருள் --- துன்பங்களை நீக்க வருகின்ற தொண்டை வேந்தன் மலையில் அன்புடன் நின்ற தலைவி, நான் அவள் திருவடியைப் போற்றுகின்ற அணங்கு ஆவாள் (தெய்வம் ஆவாள்) என்பதாகும். 


       இத்துறையை விளக்க வந்த பெயர் தெரியாத தமிழகத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள சங்கரமூர்த்தி கோவையில், (1981) தலைவியின் அருமையை இயம்பும் பாடல் அமைந்துள்ளது.  அப்பாடலின் பகுதி –


'இலையில் பிறழ்ந்தவை வேலா எளியன்என்று எண்ணல்செய்யாள்

அலையில் பிறந்ததினால் வீரை மாதுஎன்பர் அம்பொன்மின்னார்

முலையார் பிறந்திட மால்பூட்டும் சங்கரமூர்த்தி நல்லூர்

மலையில் பிறந்ததினால் வீரமாது எங்கள்மாது என்பரே.' (பா. 86)


முன்சுட்டிக் காட்டப்பெற்ற பாடல்கள் அணங்கு என்ற சொல்லால் தலைவியைத் தெய்வப் பெண்ணாகக் குறிப்பிட்டிருக்க இப்பாடல் சிறிது வளர்ச்சியுற்று, வீரத்தெய்வம் என்று வகுத்துக் காட்டுகிறது. அதாவது கடலில் தோன்றியதால் அவளைத் திருமகள் என்றும், மலையில் பிறந்ததால் கொற்றவை என்றும் கூறுவதோடு, எங்கள் தோழிமார்கள் அவளைப் பொதுவாக வீரமாது என்பார்கள் என்று குறிப்பிட்டுத் தலைவியை வீரமாது என்று அழைக்கிறது. 


      இலக்கண விளக்க வைத்தியநாத நாவலரின் மகனான தியாகராய தேசிகர் இயற்றிய ஆனந்தரங்கன் கோவையில் (1955) தலைவியின் அருமை சாற்றல் துறைக்குரிய பாடலாகக் கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது. 


  'மின்போல் நுடங்கு மருங்குல் கருங்கழல் வெண்ணகையாள்

என்போல் பவருக்கு எளியவ ளோஇசை வாணருக்குப்

பொன்போலு மாநந்த ரங்கன் பிரம்பையம் பொன்னகர்வாய்

அன்போர் உருக்கொள அணங்கெனலாம் எனக் காண்டகையே. (பா.84)


இப்பாடல் தலைவியாகிய தெய்வப்பெண் இம்மண்ணுலகில் மானுட உருக்கொண்டு வருகை தந்திருக்கிறாள் என்று முன்காட்டிய கோவைப் பாடல்களக்கு மேலும் ஓர் விளக்கமாக, கோவை இலக்கியப் பாட்டுடைத் தலைவி விண்ணுலகத்துத் தெய்வமாவாள் என்றும், அவள் இப்பொழுது ஆநந்தரங்கனுடைய நகரில் மானிட உருவு கொண்டு வந்திருக்கிறாள் என்று குறிப்பிடுகிறது. 


    இவ்வாறு பிற கோவை இலக்கியங்கள் கோவையின் பாட்டுடைத் தலைவிதை; தெய்வமாக வருணித்திருக்கச் சிவப்பிரகாசர் இக்கோவைகளுக்கு எல்லாம் வேறுபட்டுத் தன் கற்பனைத் திறத்தால் தலைவியின் அருமையை இலக்கியநயம் தோன்றக் குறிப்பிட்டுள்ளார். அப்பாடல் ------

'ஓறுத்துப் புறம்சுடும் எம்மான் திருவெங்கை ஊரில்மலர்

பொறுத்துக் கொளும் பொன்என்று எண்ணேல் இராசிப் புதுத்துலையால்

         கறுத்துத் தழைந்த குழலோடு கொங்கைக் கனத்தசெம்பொன்

நிறுத்துக் கொளும்பொன் அன்றோஎளி தோசொல் நெடுந்தகையே' (பா.89)


இப்பாடலின் பொருள் --- பெருந்தகையே, முப்புரத்தை வருத்தி எரித்த எம்பெருமானது திருவெங்கை நகரில் (எம் தலைவியை) தாமரை மலர் தாங்கிக் கொண்டிருக்கின்ற, பொன் என்று நினையற்க. புது துலாக்கோலினால் -- கறுத்துச் செழித்த கூந்;தலோடு தனம் கனத்த செம்பொன்னாவது நிறுத்து வாங்குவதற்குரிய பொன் ஆவாள், அப்பொன்னைக்; கொள்ளுதல் எளிதாமோ சொல்வாயாக. 


திருவெங்கைக்கோவைத் தோழி தலைவியைத் தாமரை மலர் தாங்கிக் கொண்டிருக்கும் பொன் அல்ல.  எம் தலைவி இருபத்தேழு இராசிகளில் ஒன்றாகிய துலா இராசியாம் தராசில் எடைபார்த்து வாங்கக் கூடிய பொன்னாவாள் என்று தலைவனிடம் கூறுவது போன்ற பொருள் பாடலில் அமைந்திருக்கிறது. 


மற்ற கோவை நூல்கள் எல்லாம் தோழி, தலைவியின் அருமை சாற்றல் துறையில் தலைவியைத் தெய்வப் பெண்ணாகப் பதிவு செய்திருக்க, சிவப்பிரகாசர் கோவைத் தலைவியைப் பொன்னாக (தங்கமாக)க் கூறியிருப்பது சிறப்பாகுமா? என்று எண்ணத் தோன்றும்.  மேற்கூறிய பாடலை மீண்டும் மீண்டும் படிக்கின்ற பொழுது, சிவப்பிரகாசரின் கற்பனைத் திறமும், பாடலின் உள்ளுறையும் புலனாவது உறுதியாகும்.  


பாடலில் 'மலர்கொடுத்துக் கொளும் பொன்என்று எண்ணேல்' என்ற தொடர், தாமரை மலர் தாங்கிக் கொண்டிருக்கும் பொன் என்ற பொருளை மேலோட்டமாகத் தந்தாலும், அதன் உள்ளுறை தாமரை மலர் தாங்கிக் கொண்டிருக்கும் பொன் என்பது தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் குறிப்பதாகும்.  எனவே கோவைத் தலைவியைத் திருமகளாகிய தெய்வம் என்று நினைக்காதீர் என்ற உள்ளுறைப் பொருள் கிடைக்கிறது.  பாடலில் இடம் பெற்ற இராசி என்ற சொல் துலா இராசியைக் குறிப்பதாகும். 


பாடலின் பிற்பகுதியில் தலைவியின் அழகைக் குறிப்பிடும் பொழுது, கறுத்துத் தழைத்த கூந்தலை உடையவள் என்று குறிப்பிடுவதோடு, 'கொங்கைக் கனத்த செம்பொன்'; என்ற தொடர் அமைந்து,  பொன் போன்ற தேமல் படரப் பெற்ற மார்பகம் என்ற அழகையும் தலைவிக்குத் தருகிறது. பெண்களின் மார்பகங்களுக்குக் கவிஞர்கள் மலையை உவமையாகக் கூறுவதுண்டு. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது கொங்கை கனத்த செம்பொன் என்பது, இமயமலையைக் குறிப்பிட்டு மலையத்துவசன் மகளாகிய உமையவளை உள்ளுறைப் பொருளாகக் குறிப்பிடுகிறது. 


எனவே இப்பாடல் கோவை இலக்கியங்களின் மரபுப்படி தோழி, தலைவியைத் தாமரை மலரில் இருக்கும் திருமகளாக எண்ணாதீர். அவள் மலையில் பிறந்த பெண்ணாகிய உமையவள் ஆவாள் என்று உள்ளுறைப் பொருளை அமைத்துத் தலைவியின் அழகை வருணனை செய்கிறது. 

இத்தகைய உள்ளுறைப் பொருள் அமைந்திருப்பது , கோவை இலக்கிய மரபுப்படி தலைவி தெய்வப் பெண்ணாவாள் என்ற குறிப்பைத் தருவதோடு சிவப்பிரகாசர், வீரசைவ மரபைச் சார்ந்தவர் என்பதால் வைணவத் தெய்வமாம் திருமகளைத் தலைவிக்கு ஒப்பிடக் கூடாது என்று எண்ணி, மலையின் மகளாகிய உமையவளாகச் சைவ மரபுப்படித் தெய்வப் பெண்ணாக உருவகித்து  உள்ளுறையை அமைத்திருப்பது நினைந்து இன்புறத் தக்கதாகும். 

கோவை இலக்கியங்களில் தலைமை பெற்ற அரசகோவையாகிய திருக்கோவையாருக்குப் பின், தமிழகத்தில் எழுந்த கோவைகளுக்கு எல்லாம் மிகச் சிறப்புடையதாய்த் திருவெங்கைக்கோவை அமைச்சர் கோவையாக விளங்குவதற்கு இது போன்ற கோவையின் பாடல்கள் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.  கல்லூரிகளில் திருவெங்கைக் கோவையைப் பாடநூலாகத் தமிழகப் பல்கலைக் கழகங்கள் அமைக்குமானால், தமிழ் கற்கும் மாணவர்கள் சிறந்த இலக்கியப் பயிற்சியைப் பெறுவார்கள் என்பது உண்மையாகும். 

திருச்சிற்றம்பலம். 


சிவஞானியின் அருள் மழையில்

   சித்தாந்த செம்மணி முனைவர். பழ.முத்தப்பன்,

       முன்னாள் விரிவுரையாளர்,

   சி.பா.சு. தமிழ் கலை அறிவியல் கல்லூரி.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதில் பி.ஓ.எல். பட்ட வகுப்பில், புலவர் கல்வியோடு பயின்ற காலத்தில் ஒருநாள், பெரும் பேராசிரியர் உயர்திரு. வை. இரத்தினசபாபதி அவர்கள் அழைத்திட, அவர்கள்பால் சென்று சேர்ந்தேன்.  அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு, பொம்மைய பாளையம் என்ற திருத்தலத்திற்குச் சென்றார்கள்.  பொம்மைய பாளையம் பெரிய மடத்தில் அருளாட்சி செய்து கொண்டிருந்த பத்தொன்பதாம் பட்டம் அருள்திரு குருமகா சந்நிதானத்தின் திருமுன்னர் அறிமுகப் படுத்தினார்கள்.  அக்காலத்தில் மயிலம் சி.பா.சு. தமிழ்க் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளர்கள் தேவைப்பட்ட காலம். அப்பணிக்குப் பேராசிரியர் அவர்கள் சுவாமிகள் அவர்களிடம் பரிந்துரை செய்தார்கள்.  பத்தொன்பதாம் பட்டம் சுவாமிகள் அருள்பார்வையோடு என்னை நோக்கி, நீங்கள் நகரத்தாரா? திருமணம் ஆகி விட்டதா? என்ற வினாக்களைக் கேட்டார்கள். இரண்டிற்கும் ஆம் என்று பதில் கூறினேன். சிறிது நேரம் அருள் பார்வையோடு என்னை நோக்கியிருந்து, என்னுடைய புலவர் பட்டச் சான்றிதழைப் பார்வையிட்டுக் கல்லூரியில் பணியில் சேர அனுமதி தந்தார்கள்.  அந்த அருள் மழை வெள்ளத்தில் அன்று நனையத் தொடங்கினேன். 


ஜூன் மாதத்தில் சிவஞானியின் அருளால் மதிப்பு மிக்க முதல்வர் பெருந்தகை ஆ. சிவலிங்கனார் முன் பணியில் சேர்ந்தேன்.  பணியில் சேர்ந்த பிறகு சிவஞானியின் திருவருள் என் குடும்பம் வாழ்வதற்கு மிகக் குறைந்த வாடகையில் கல்லூரிப் பெண்கள் விடுதியின் ஒருபகுதியில் இடம் அளித்தார்கள்.  முதல்வர் ஆ. சிவலிங்கனாரின் வழி காட்டுதலில், சிவஞானியின் அருள் நோக்கத்தால் கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடம் புகட்டுவதோடு, மேடையேறிப் பேசுகின்ற வாய்ப்புக்கு அடித்தளம் போடப் பெற்றது. அதாவது முருகன் செந்தமிழ்க்கழக வாரக்கூட்டம் , கிருத்திகை மாதக்கூட்டம், பொம்மபுர திருமடத்துக் குருபூஜை ஆண்டுக் கூட்டம், நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள் ஆண்டுக் கூட்டம், மயிலம் திருக்கோயில் பங்குனி உத்திரக் கூட்டம் ஆகியவற்றில் கல்லூரிப் பேராசிரியர்கள் பங்கு பெற்று உரையாற்றும் வாய்ப்பை அளித்து, அதன் மூலம் பிற்காலத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் மேடைப் பேச்சாளர்களாக, கட்டுரை ஆசிரியர்களாக ஆகும் வாய்ப்புக் கிட்டியது. 


இத்தகைய நிகழ்வுகளுக்கு மேலாகச் சிவஞானியின் திருவருள் முருகன் செந்தமிழ்க் கழகத் தொண்டர்படை என்ற அமைப்பின் மூலம் , ஆசிரியர்களையும் மாணவர்களையும் பக்கத்துக் கிராமங்களுக்கு எல்லாம் மாட்டு வண்டியில் ஒலிபெருக்கிச் சாதனங்களோடு அனுப்பி வைத்து, ஆன்மீகக் கூட்டங்களை நடத்துவதற்கு அருள் பாலித்ததினால் என்னுடைய வாழ்க்கையில் மேடைப் பேச்சாளர் என்ற பெருமை கிடைத்தது. தொண்டர்படை அனுபவம் வார்த்தைகளால் அளவிட முடியாத அளவிற்கு என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தது.  சிவஞானியின் இத்திருவருளே என் பேச்ச வாழ்க்கைக்கு மையமாக அமைந்தது.  


கல்லூரியில் புலவர் பட்டம் மட்டும் பெற்றுப் பணிபுரிந்த வாழ்க்கை கல்வியில் உயர்வு பெற மதுரைக் காமராசர் பல்கலைக் கழக அஞ்சல்வழிக் கல்வியில் எம்.ஏ. பயிலச் சிவஞானியின் அருளின் பரிந்துரை முதல்வரின் மூலமாகக் கிடைத்தது.  அத்துடன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் 'அருணந்தி சிவாசாரியார் நூல்கள் ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்யச் சிவஞானியின் திருவருள் கைகூடியது.  கல்லூரி வாழ்க்கையில் பணிபுரிந்த ஆசிரியர்களில் முதன்முதலாகப் பணிபுரிந்து கொண்டே தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமை சிவஞானியின் திருவருளால் கிடைத்தது.  எனவே பேச்சுத்துறைக்கும், கல்வித் துறையின் முன்னேற்றத்திற்கும்; சிவஞானியின் குருவருள் பெரிதும் துணைபுரிந்தமை மறக்க இயலாது. 


பதினேழு ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றிய பொழுது, பலவித விழாக்கள் எடுப்பதற்குச் சிவஞானியின் திருவருள் ஆணை பிறப்பித்து, விழாக்களைச் சிறப்புற நடத்தச் செய்தது.  கல்லூரிப் பணியின் பயிற்சியினால் அடியவன் புலவர் பட்டம் பயின்ற கல்லூரியாம் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரிக்கு முதல்வர் பணிக்குத் தகுதியானர் தேவைப் பட்ட பொழுது, அதன் கல்லூரித் தலைவர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் (1987ல்)என்னைத் தேர்ந்தெடுத்து, மயிலம் கல்லூரியின் செயலராகிய சிவஞானியின்பால் கடிதம் அனுப்ப, சிவஞானியின் குருவருள் அதற்கு அனுமதி அளித்து, தனியார் கல்லூரியில் ஒரு கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்குப் பணி உயர்வோடு மாறுதல் பெற்றிட, அதாவது விரிவுரையாளர் பணியிலிருந்து முதல்வர் பணிக்கு மாறுதல் பெற்றிடச்,  சென்னை கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் அனுமதி அளித்திடச் சிவஞானியின் திருவருள் முன் நின்றது. இப்பதவி உயர்வு பத்தொன்பதாம் பட்டத்துச் சுவாமிகளின் குருவருளால் நடைபெற்றது என்பது வரலாற்றில் மறைக்க முடியாத செய்தியாகும். 

மாறுதல் பெற்று மயிலத்திலிருந்து மேலைச்சிவபுரிக்கு விடைபெற்ற நாளில், மாணவர்கள் ஆசிரியர்களால் சிறப்போடு எடுக்கப் பெற்ற விடைதரு விழாவில் இப்பொழுது இருபதாம் பட்டத்தில் கொலுவிருக்கும் சிவஞானபாலய சுவாமிகள் அன்றைக்குத் தலைமை ஏற்று என்னை வழியனுப்பிய நிகழ்வு பசுமரத்தாணிபோல் இன்றும் பசுமையாகக் காட்சி தருகிறது. இத்தகைய மயிலம் வாழ்க்கை பத்தொன்பதாம் பட்டத்துச் சுவாமிகளின் குருவருள் மழையால் கிடைத்த பெரும்பயன் என்பதை அடியவன் மட்டுமின்றி என் இல்லத்தாரும் மறக்க மாட்டர்கள். 

இப்பொழுது மயிலம் பொம்மபுர பெரிய மடத்தின் இருபதாம் பட்டத்தில் எழுந்தருளியிருக்கும் சிவஞானியின் திருவருளால், 19 – 10 – 2016ல் கற்பனைக் களஞ்சிய நம்பி என்ற விருது அளிக்கப் பெற்று, அன்றைய சொற்பொழிவாக அமைந்த சிவப்பிரகாச சுவாமிகள் நோக்கில் சமுதாயம் என்ற தலைப்பின் சொற்பொழிவை நூலாக ஆக்கி,        28 – 3 – 2015 ல் திருச்சியில் நடைபெற்ற சிவப்பிரகாச சுவாமிகள் திருநாள் விழாவில் இருபதாம் பட்டத்து சுவாமிகள் நேரில் வருகை தந்து நூலை வெளியிட்டு அருள்மழை பொழிந்தார்கள். 

இருபதாம் பட்ட சிவஞானியின் குருவருளால் திருமடத்தின் சார்பில் பாலசித்தர் என்ற திங்கள் இதழ் வெளியிடும் தமிழ்ப்பணி மலர்ந்தது.  அந்த இதழை ஒட்டி வீரசைவ சமய சமுதாய மேம்பாட்டுக் கருத்தரங்கம் என்ற கருத்தரங்கத்தைக் கல்லூரி மாணவ மாணவியரோடு ஆன்மீக அன்பர்களும் பயன்படும்படி, கிருத்திகை தோறும் நடைபெற அருள் கிடைத்து வருகிறது. இந்தக் கருத்தரங்கில் 1917 டிசம்பர் முதல் அடியவனைக் கலந்து கொள்ளச் செய்து, சிவப்பிரகாசரின் சிந்தனைகளை வழங்கும்படி இருபதாம் பட்டத்து சிவஞானியின் ஆணை கிடைத்தது. அதன்படி கடந்த நான்கு ஆண்டுகளாகக் கிருத்திகை தோறும் சிவப்பிரகாசரின் இலக்கியங்கள் மற்றும் வீரசைவ நோக்கில் நால்வர் நான்மணிமாலை என்ற தலைப்பில் நாற்பது பாடல்களுக்கும் புத்துரை வழங்கும் பணி கிடைக்கப் பெற்றது. மேலும் திருவெங்கைக்கோவை பற்றிய சிந்தனையையும் வழங்குவதற்கும் திருவருள் கிடைத்தது. அக்கருத்தரங்க உரையைச் சிவஞானியின் குருவருள் பாலசித்தர் இதழில் எழுத்து வடிவத்தில் வெளியிடும் சிறப்புக் கிடைத்தது. இதனிடையில் இக்கருத்தரங்கின் சார்பில் அடியவன் சிவப்பிரகாசர் நூல்கள் பற்றி ஆய்வுப்பணி ஆற்றியமைக்குச் சிவஞானி இலக்கிய விருது 2 – 7 – 2019ல் பாலசித்தர் மகா குருபூசை விழாவில் வழங்கப்பெற்று, உயர்ந்த பொற்கிழியும் அளிக்கப் பெற்று உயர்வும் தரப்பெற்றது. இத்தகைய பெருமைகளைத் தந்த  இருபதாம் பட்டத்துச் சிவஞானியின் குருவருளை நினைந்து உள்ளம் பூரிக்கிறது. 

நம்முடைய இருபதாம் பட்டத்துச் சுவாமிகள் தாம் பட்டம் ஏற்ற பிறகு தமிழ்க் கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் நாட்டங் கொண்டு பல அறிவியல்துறை வகுப்புகளையும், உயர்ந்த அழகு மிக்க கட்டிடங்களையும் உருவாக்கித் தமிழ்ப்பணி செய்து வருவதை நினைந்து நினைந்து போற்றுகிறேன். அத்துடன் நில்லாது சிவப்பிரகாசரின் அடிகளாசிரியரின் உரையுடன் கூடிய பிரபுலிங்கலீலை உள்ளிட்ட நூல்களை வெளியிட்டும் , அவர்கள் ஆற்றி வரும் தமி;ழ்ப்பணிக்கு எம் போன்ற தமிழ் அடியவர்கள் என்றும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம். 

மயிலம் பொம்மபுர ஆதீன சிவஞானிகளின் திருவருள் மழையால் வாழ்வில் பெற்ற பயன்கள் இன்னும் அதிகம் என்றாலும், கட்டுரையின் அளவு கருதி மீண்டும் மீண்டும் சிவஞானியின் அருள்மழையை எண்ணிப் போற்றி வணங்கி மகிழ்வு கொள்கின்றேன். 

திருச்சிற்றம்பலம். 

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக