சித்தாந்த செம்மணி.முனைவர்.பழ.முத்தப்பன்
மேனாள் முதல்வர்,
கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி.
நமது மயிலம் பொம்மபுர ஆதீனத் தலைமைப் புலவராகிய சிவப்பிரகாசர் படைத்து அருளிய திருவெங்கைக்கோவையில் இடம் பெற்ற தொடர் உவமைச் சிறப்புப் பற்றிச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கோவை இலக்கியங்கள் ஒரு தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கைகைய நாடகப் பாங்கில் நாநூறு பாடல்கள் மூலம் கூறுவதாகும். அந்த அடிப்படையில் திருவெங்கைக்கோவைத் தலைவன், தலைவியைச் சந்தித்து இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கர் கூட்டம் முதலியவை நிகழ்த்திய பின்னர், பாங்கி மதியுடம்பாடு என்ற கட்டத்திற்கு வருகிறான்;. தலைவியின் நெருங்கிய தோழி மூலமாகத் தலைவியைச் சந்திக்க முற்படுகின்றான். இத் தலைவன் தலைவியின் காதலைக் குறிப்பாக உணர்ந்த தோழி தலைவனால் கூறப் பெற்ற தலைவியை அறியாதாள் போல் தலைவனிடம் உரையாடுகிறாள். அவ்வாறு உரையாடி நீ கூறுகின்ற அவயவங்களை உடைய தலைவியை நீ அடைய முடியாது என்று கூறுகின்றாள். அதனைக் கேட்ட தலைவன் ஊழ்வினையின் பயனால் நானும் தலைவியும் முன்பு சோலையில் சந்தித்திருக்கின்றோம். எனவே நீ என்னுடைய விருப்பத்தை அவளிடத்தில் கூறினால் அவள் ஏற்றுக்கொள்வாள் என்று கூறுகின்றான். அதனைக் கேட்ட தோழி தன்னுடைய உதவியின்றித் தலைவனும் தலைவியும் முன்பே சந்தித்திருக்கின்றார்களே என்று சினங்கொண்டு தலைவனை நோக்கி, முன்பு சந்தித்தது போல் யாருடைய உதவியும் இன்றி அதே ஊழின் உதவியால் தலைவியை நீ போய்ச் சந்தித்துக்கொள் என்று கூறுகின்றாள். அதற்குரிய துறையாகத் திருவெங்கைக் கோவையில் , 'பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல்' என்ற தலைப்பில் கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது.
'மருவுஈற வெண்மதி வேணிப் பிpரான்லெங்கை வான்பொழில்வாய ;
இருவீரும் ஒத்துப் புணர்ந்தால் பயன்நுமக்கு என்னைஒன்னார்
பொருவீர வாள்விழிக் காப்பதி னாயிரம் பொய்உரைத்து
வருவீர் அறிந்திலி ரேஉலகு ஓதும் வழக்குரையே'
(திருவெங்கைக்கோவை, பா. 95)
இப்பாடலின் பொருள்:
பகைவர்கள் ஒருவரோடு ஒருவர் பொருகின்ற வீரவாள் போன்ற விழிகளை உடைய எமது தலைவியின் பொருட்டுப் பதினாயிரம் பொய் வார்த்தைகளைச் சொல்லி வருகின்றவரே, குளிர்ச்சி பொருந்திய வெள்ளிய பிறைச்சந்திரனை அணிந்த தலைமுடிப் பாரத்தை உடைய சிவபெருமானது திருவெங்கைப் பதியைச் சூழ்ந்த பெருஞ்சோலையின் கண் நீங்கள் இருவீரும் மனம் ஒத்துக் கூடினால் உங்களுக்குப் பயன்யாது? உலகத்தார் சொல்லும் வழக்குச் சொல்லை அறிந்திலீரோ என்பதாகும்.
இப்பாடலின்படி அழகிய கண்களை உடைய தலைவியும், தலைவனும் திருவெங்கைச் சோலையில் யாருக்கும் தெரியாமல் சேர்வதினால் அவர்களுக்கு என்ன பயன்?
என்ற வினா இடம்பெற்றுள்ளது. இதனால் சிவப்பிரகாசர் சமுதாயத்திற்கு அறிவிக்கும் செய்தியானது , ஒரு ஆணும் பெண்ணும் கூடும் இல்வாழ்க்கை பலர் அறிய நிகழ வேண்டும். அவ்வாறு ஏற்படுவதால் இல்லற வாழ்க்கை சிறந்து, திருவள்ளுவரின் கூற்றுப்படி தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு ஐம்புலத்தாரை ஓம்புகின்ற கடமை நிகழும். இல்லையென்றால் பிறர் அறியாது நிகழ்ந்த இல்லறம் யாருக்கும் உதவாது பயன் கிடைக்காமல் போய்விடும் என்ற இல்லறத் தத்துவத்தைச் சிவப்பிரகாசர் குறிப்பிடுகிறார்.
மேலும் இப்பாடலில் உலகம் சொல்லுகின்ற வழக்கை அறியவில்லையோ? என்ற வினாவும் அமைந்திருக்கிறது. அந்த வினா குறிப்பிடும் உலகம் சொல்லும் வழக்கு எது? என்பது பாடலால் அறிந்து கொள்ள இயலவில்லை. திருவெங்கைக் கோவையைப் பயில்வோருக்கும் அந்த வழக்கம் எது என்று புரியாது நிற்கும். எனவே சிவப்பிரகாசர் அடுத்த பாடலில் அந்த உலக வழக்கைத் தலைவன் கூறுவதாக அமைக்கின்றார். அது ஒரு உவமையாக அமைகிறது. எனவேதான் இக்கட்டுரை அந்த உவமையைத் தொடர் உவமை என்று குறிப்பிடுகிறது. அடுத்த பாடல் 'தன்னிலை தலைவன் சாற்றல்' என்ற துறையாக அமைந்துள்ளது.
'மண்ணைக்கொண்டு உண்ட பெருமான் தொழும்வெங்கை வாணர்வெற்பில்
பண்ணைக்கொண்டு உற்ற மொழியாய் உனைஅன்றி;ப் பாரமுலை
பெண்ணைக்கொண்டு இன்பம் பெறநான் விரும்பப் பெறில்அதுதான்
கண்ணைக்கொண்டு அன்றி வழிதான் நடப்பக் கருதுதலே.
(திருவெங்கைக்கோவை, பா. 96)
பாடலின் பொருள்:
மண்ணை எடுத்து உண்ட பெருமை உடையவனாகிய திருமாலும் வணங்குகின்ற திருவெங்கைவாணரது மலையில் உள்ள, பண்களால் இயன்ற சொல்லை உடைய தோழியே, உன்னை அல்லாது பெருத்த மார்பகத்தை உடைய பெண்ணை இன்பம் துய்க்க நான் விருப்பம் கொண்டால் அச்செயல், கண் உதவி இல்லாது வழிநடப்பக் கருதுவதோடு ஒக்கும் என்பதாகும்.
எனவே தலைவன் பாங்கியின் துணை இல்லாது தலைவியைக் கூடுவது என்பது எதுபோல என்றால், கண்ணின் உதவியில்லாது நடப்பது போன்றதாகும் என்ற உவமை இப்பாடலில் அமைந்துள்ளது. எனவே இரண்டு பாடல்களையும் பொருள் உணர்ந்து படிக்கும் பொழுது, முதல் பாட்டில் கூறிய உலக வழக்குச் சொல் என்பது கண்ணின் துணை இல்லாது வழி நடப்பதைப் போன்றதாகும் எனப் பெறப்படுகிறது. அதாவது தலைவனும் தலைவியும் கூடித் தொடங்குகின்ற இல்லறம் ஒன்றிய பாலது ஆணையின் என்று தொல்காப்பியர் குறிப்பிடுவது போல ஊழின் வழியே நடைபெறுவதற்கு உரியது என்றாலும், பலரும் அறிய நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெறவில்லை என்றால் கண் தெரியாத குருடர் நடந்து செல்லும் பொழுது சந்திக்கின்ற விபத்துக்களைப் போலத் துன்பங்களைச் சந்திக்க நேரிடும் என்ற உவமை முதல் பாடலில் குறிப்பாகக் காட்டப் பெற்று இரண்டாவது பாடலில் தலைவன் அந்த உவமையைத் தொடர் உவமையாக அமைத்துக் கூறுகின்ற பாங்கினைச் சிவப்பிரகாசர் அமைத்திருக்கிறார். முதல் பாடலில் அறிந்து கொள்ளமுடியாத உவமை அடுத்த பாடலில் விளக்கமாக இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இவ்வாறு நாம் பொருள் கொள்ளுவதற்கு ஏற்ப அடுத்த பாடலில் சிவப்பிரகாசர், தலைவன் தலைவி சேர்வது என்பது தனித்து நடக்கின்ற ஒழுக்கம் அல்ல. அது பலரும் அறிகின்ற வரைதல் என்ற திருமணத்தின் மூலம் நடப்பது என்பதை , 'பாங்கி உலகியல் உரைத்தல்' என்ற தலைப்பில் சமுதாயத்திற்குச் சிவப்பிரகாசர் எடுத்துக் காட்டுகிறார்.
'வெண்தாம ரைமுளைப் பாலிகை வாள்அர விந்தச்செந்தீக்
கொண்டுஆவி யில்சங்கம் ஆர்ப்பக் குவளை மணம்புணர்ந்து
வண்டுஆடும் நல்இயல் ஊரஎம் மான்வெங்கை மாதினைநீ
கண்டுஆசைப் பட்டனை யேல்வரைந் தேகொள் கடைப்பிடித்தே'
(திருவெங்கைக்கோவை, பா. 97)
இப்பாட்டின் பொருள்:
வெண்;தாமரையாகிய முளைப் பாலிகையையும், செந்தாமரை மலராகிய தீயையும் (திருமணச் சடங்கிற்குரிய உபகரணங்களாகக் ) கொண்டு, சங்குகள் ஊதக் குளத்தில் உள்ள குவளை மலர்மீது வண்டுகள் மணந்து கொண்டு விளையாடுகின்ற நல் இயல்பை உடைய ஊரை உடையவனே, எம்பெருமானது திருவெங்கைப் பதியில் உள்ள எமது தலைவியாகிய பெண்ணை நீ கண்டு விருப்பப் பட்டால், மன உறுதி கொண்டு அவளைத் திருமணம் செய்து கொள் என்று தோழி கூறினாள்.
கற்பனைக் களஞ்சியம் என்று அழைக்கப் படுவதற்கு ஏற்பச் சிவப்பிரகாசர் திருமணக் காட்சியைக் குளத்தில் மொய்க்கும் வண்டுகளைக் கொண்டு இப்பாடலில் பாடியிருப்பது படித்து இன்புறத் தக்கதாகும். எனவே பாடலின் தொடர்ச்சியாக இந்தப் பாடலில் இல்லறம் என்பது திருமணத்தில் தொடங்க வேண்டும் என்ற செய்தியைத் தோழி, தலைவனுக்குக் கூறித் தலைவியைத் திருமணம் செய்துகொள் என்று வேண்டுகிறாள். இந்த மூன்று பாடல்களும் உலகியல் வழக்கை எடுத்துக் கூறுகின்ற பாடல்களாக அமைகின்றன.
முதற் பாடலில் சிவப்பிரகாசர் தலைவனும் தலைவியும் தனியே சந்தித்துக் கூடுவதால் பயன் இல்லை எனக்குறிப்பிட்டு, அதற்குரிய உவமையைத் தொடங்கி வைத்தார். இரண்டாவது பாடலில் பிறரின் துணைகொண்டு அதாவது மத்தியஸ்தம் இல்லாது ஒரு காரியமும் உலகத்தில் நடக்காது என்ற அடிப்படைக் கருத்தைக் கண்களின் துணையால் கால்கள் நடப்பது போல் என்ற உவமையைக் குறிப்பிட்டு, அந்த உவமை மூன்றாவது பாடலில் குளத்தில் வண்டுகள் மணம் புரிந்து ஒன்றோடு ஒன்று சேர்ந்து விளையாடுகின்ற உவமையாக வளர்ந்து, தலைவன் தலைவி சேர்வது பலரும் அறிகின்ற திருமணமாக அமைய வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறது.
இந்த மூன்று பாடல்களையும் எண்ணுகின்ற பொழுது அடுத்த பாடலில் அமைந்துள்ள உவமையும் படிப்பவரின் சிந்தனையை மகிழ்விப்பதாக அமைகிறது. அடுத்த பாடல் தலைவன் கூற்றாக அமைந்து , இத் தொடக்க காதல் திருமணம் செய்து கொள்வதில் முடிய வேண்டும் என்றால் பெருமுயற்சியில் அது முடிய வேண்டும் என்ற கருத்தை விளக்கும் உவமையாக நிறைவு பெறுகிறது. அதற்குரிய துறை 'தலைமகன் மறுத்தல்' என்ற தலைப்பில் அமைந்துள்ள பாடலாகும்.
'தாமக் குழலை வரைந்துகொண் டேவெங்கைத் தாணுவெற்பில்
காமக் கனலைத் தணிப்பாய்என்று ஓதிய காரிகைநீ
நாமக் கிணறுஅகழ்ந்து அந்நீர் கொடுநல் நகரில்பற்றி
வேம்அக் கனலை அறிவிப்பாய்என் பார்களின் வேறுஅல்லையே.
(திருவெங்கைக்கோவை, பா. 98)
இப்பாடலின் பொருள்:
திருவெங்கைப் பதியில் எழுந்தருளிய சிவபெருமானது மலையில் உள்ள பூமாலை அணிந்த கூந்தலை உடைய தலைவியைத் திருமணம் செய்து கொண்டு, காமத் தீயைத் தணிப்பாய் என்று கூறுகின்ற தோழியே, நல்ல நகரத்தில் பற்றி எரிகின்ற நெருப்பை, அச்சத்தை உண்டாக்குகின்ற கிணறைத் தோண்டி, அக்கிணற்று நீரைக் கொண்டு நகரத் தீயை அணைப்பீர் என்று கூறுகின்றவரை நீ ஒத்திருக்கிறாய் என்று தலைவன் கூறினான்.
இப்பாடலின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்வது உலக இயல்பு என்றாலும், இப்பொழுது அது உடனே நிகழக் கூடியது அல்ல. தலைவியைத் திருமணம் செய்து கொள்வதற்குப் பெருமுயற்சி செய்ய வேண்டும். அது எது போல என்றால் ஒரு நகரத்தைப் பற்றிய தீயை, இல்லாத கிணத்தைத் தோண்டி அதில் ஊறுகின்ற நீரைக் கொண்டு, நகரத் தீயை அணைப்பதற்கு ஒக்கும் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. எனவே தொடர் உவமைகளால் சிவப்பிரகாசர் திருவெங்கைக் கோவையில் காதல் நிலையில் அடிப்படைச் சேர்க்கை தோழி போன்றோரின் உதவியால் நடக்கும் என்பதும், பின் தலைவன் தலைவியினுடைய திருமணம் பல தடைகளைக் கடந்து பெரு முயற்சியால் நடைபெற வேண்டும் என்பதையும் தொடர் உவமைகளால் விளக்கியிருப்பது படித்து இன்புறத் தக்கதாகும்.
திருச்சிற்றம்பலம்.
-------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக