புதன், 26 ஜனவரி, 2022

கோவையில் கையுறை


சித்தாந்த செம்மணி.முனைவர்.பழ. முத்தப்பன்,

      மேனாள் முதல்வர்,

கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி.


      நமது திருமடத்தில் ஆதீனப் புலவராகிய சிவப்பிரகாசர் படைத்து அருளிய திருவெங்கைக்கோவை இலக்கியம் கோவை இலக்கியங்களில் இடம்பெறும் அகத்துறைகளையே பெற்றிருக்கிறது. என்றாலும், மற்ற கோவை இலக்கியங்கள் அவ்வத்துறைகளுக்குக்; கூறுகின்ற செய்திகளையே கூறாமல் தன்னுடைய கற்பனைக் களஞ்சியமாம் இலக்கியப் புலமை கொண்டு சில அகத்துறைகளுக்குப் புதிய செய்தியைப் படைத்து மொழிதல் உண்டு. அதற்கு ஒரு எடுத்துக்காட்டை குறிப்பிடுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 


       திருவெங்கைக் கோவையில் மதியுடம்பாடு பகுதியில் தோழியின் துணையால் தலைவியைச் சந்திக்க எண்ணும் தலைவன், தலைவியின் உயிர்த் தோழியை நேரில் சந்திக்கின்றான். அவளிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்துகின்றான்.  அத்தோழி தலைவன் தலைவியின் காதலைக் குறிப்பாக அறிந்திருந்தாலும், அறியாதாள் போல் அவனிடம் சொல்லாடுகிறாள்.  தலைவன் தலைவிக்குக் கையுறை என்னும் பரிசுப்பொருளைக் கொடுக்கின்றான்.  அவ்வாறு கொடுக்கும் பொழுது கையுறைப் பொருளின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றான்.  கையுறையின் சிறப்பு பிற கோவை இலக்கியங்களில் காண்பதைவிடச் சிவப்பிரகாசர் நோக்கில் ஒரு புதிய பாணியைப் பெற்றிருக்கிறது. 


சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையின் முதற் பாடலிலேயே தலைவிக்குத் தலைவன் அளிக்கும் கையுறை இடம் பெற்றிருக்கின்றது.  


'செங்களம் படக்கொன் றவுணர் தேய்த்த

    செங்கோல் அம்பிற் செங்கோட்டி யானைக்

கழல்தொடிச் சேஏய் குன்றம்

குருதிப் பூவின் குலைக் காந்தட்டே'   

(பாடியவர் - திப்புத்தோளார்) 

இப்பாடலின் கருத்து – அசுரரைக் கொன்ற முருகவேள் எழுந்தருளியிருக்கும் தலைவியின் மலை, இரத்தம் போன்ற சிவந்த பூக்களை உடைய காந்தள் மலரினை நிரம்ப உடைத்து என்பதாம். இப்பாடலின் கருத்தால் தலைவன் தலைவிக்குத் தோழியிடம் காந்தள் மலர்க் கொத்தைக் கையுறையாகக் கொடுத்திருக்கின்றான் என்றும், அக்காந்தள் மலர் தலைவியின் மலையில் அதிகம் உள்ளது, ஆதலால் , கிடைக்கின்ற பொருளைக்; கையுறையாகப் பெற்றுக் கொள்வதற்குத் தோழி சம்மதிக்கவில்லை எனவும் தெரிகிறது.  இதன் அடிப்படையில் சங்க காலத்திலேயே பூக்களைத் தலைவன் தலைவிக்குக் கையுறையாகக் கொடுக்கும் வழக்கம் இருந்தமை புலப்படுகிறது. 


மேலும் மற்றொரு சங்க இலக்கியமான நற்றிணையில், பூங்கொத்து மட்டுமின்றி, தழைகளாகிய இலைகளையும் கையுறையாகத் தலைவன் கொடுத்திருக்கின்றான் என்பது புலப்படுகிறது. அதற்குரிய பகுதி – 


'கன்றுதாய் மருளும் குன்ற நாடன்

உடுக்கும் தழைதந் தனனே அவையாம்

உடுப்பின் யாய்அஞ் சுதுமே' (பாடல்; 359, வரி – 3-5)


என்பது அப்பகுதியாகும்.  இப்பாடற் பகுதியின் மூலம் தலைவன் , தலைவிக்கு அவள் உடம்பில் அணிந்து கொள்ளும் வண்ணம் தழையாடையைக் கையுறையாகக் கொடுத்திருக்கிறான் என்பதையும், அதனைத் தலைவி அணிந்தால் தாய் கண்டு , இப்புதிய ஆடை தலைவிக்கு எவ்வாறு கிடைத்தது என்று எண்ணி, அதன் விளைவைக் கருதி அஞ்சுவாள் என்ற செய்தி கிடைக்கின்றது.  இப்பாடற் பகுதியின் மூலம் தலைவன் கொடுக்கும் கையுறைப் பொருளாகப் பசுமை இலைகளாகிய தழைகளும் அமைந்தன என்பது பெறப்படுகிறது. 

சங்க இலக்கியங்கள் வழியி;ல், அரசகோவையாம் திருக்கோவையாரில் கோவைத் தலைவன் தலைவிக்குத் தழைகளையும், பூக்களையும் கையுறையாகக் கொண்டு வந்திருக்கிறான் என்பது தெரிகிறது. அதற்குரிய பாடல் - 

'தேமென் கிளவிதன் பங்கத்து இறையுறை தில்லையன்னீர்

பூமென் தழையும்அப் போதும்கொள் ளீர்தமி யேன்புலம்ப' (பா. 90)


இப்பாடலின் கருத்து – தேன் போன்ற சொற்களை உடைய உமையவளைத் தன் பாகத்தில் கொண்ட சிவபெருமான் வாழும் தில்லைநகர் போன்றவர்களே, நான் கொண்டு வந்த பூவையும் தழைகளையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர் என்று தலைவன் கூறுவதாகச் செய்தி இடம் பெற்றிருக்கிறது.  இச்செய்தியால் திருவெங்கைக்கோவைக்கு முன் :கோவையான திருக்கோவையாரில் தலைவன், தலைவிக்குப் பூவையும் தழைகளையும் கையுறையாகக் கொண்டு வந்திருக்கிறான் என்பது தெரிகிறது. 


கோவை இலக்கியத்தில் மற்றொரு கோவையான தஞ்சைவாணன் கோவையில், இத்துறைக்குரிய பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது. 

'சிமையார்  மலயந் தமிழத்;தஞ்சைவாணன் சிறுமலைமேல்

அமையா  கியதடந் தோளன்ன மேயணி யத்தருமால்

உமையாள் இறைவன் பயில்கயி லாயத்தும் உம்பர்தங்கும்

இமையா சலத்துமெல் லாமில்லை யால்நிகர் இத்தழைக்கே'

(பா. 97)

இப்பாடலின் கருத்து – சிகரத்தை உடை பொதிய மலையில் பிறந்த தமிழ் வளர்க்கும் தஞ்சை வாணனது சிறுமலைமேல் இருக்கும் , மூங்கிலைப் போன்ற பெரிய தோளை உடைய அன்னம் போன்றவளே, இத்தழைக்கு நிகர் உமையாள் கணவனாகிய சிவபெருமானின் கயிலாய மலையிடத்தும், தேவர்கள் பிரியாது இருக்கும் இமய மலையிடத்தும் முற்றும் இல்லை.  ஆதலால் இத்தழை அணியத் தகும் என்று தலைவன் கூறினான். 


இப்பாடல் திருக்கோவையாருக்கும் மேலாக ஒரு புதிய செய்தியைக் குறிப்பிடுகிறது. அதாவது கையுறையாகத் தழைகளைக் கொண்டு வந்த தலைவன், அத் தழையின் சிறப்பையும் கூறுவதான ஒரு புதிய செய்தி கூறப் பெற்றிருக்கிறது.  எனவே கையுறை கொண்டுவரும் தலைவன் தான் கொண்டுவந்த கையுறைப் பொருளின் சிறப்பைக் கூறித் தலைவிக்காகத் தோழியிடம் கொடுப்பான் என்பதும் பெறப்படுகிறது. 


தஞ்சைவாணன் கோவை போலவே பெயர் தெரியாத புலவர் எழுதிய, உ.வே. சுவாமிநாதையர் பதிப்பித்த சிராமலைக் கோவையில் தலைவன், தான் கொண்டு வந்த கையுறைப் பொருளின் சிறப்பைக் கூறித் தோழியிடம் கொடுப்பதாகத் துறையும், அதற்குரிய பாடலும் அமைந்துள்ளது. 

'வளந்திகழ் சீருங் கவினும் வழங்கு மலர்த்திருப்பேர்

உளந்திகழ் வாய்அருள் இத்தழை நும்வடி வொக்குமன்பாற்

குளந்திகழ் பான்மொழி யீர்;நீ; ரணிந்து கொளத்தகுங்காரக்;

களந்திகழ் வானவன் எம்மான் சிராமலைக் காவ கத்தே'

(பா. 109)

இப்பாடலின் கருத்து – சிறப்பும் அழகும் உடைய தோழியே, நான் கொண்டு வந்த இத்தழை உங்கள் திருவுருவைப் போல மென்மையானதாகும்.  எனவே வெல்லம் போன்ற இனிய சொற்களை உடைய நீங்கள் அணிந்து கொள்வதற்கு உரியதாகும் என்று தலைவன் தழையின் சிறப்பைக் கூறித் தோழியிடம் கொடுத்திருக்கின்றான். இதில் தழையின் சிறப்பாகத் தழையின் மென்மைத் தன்மை கூறப்பெற்றிருக்கிறது.  அத்துடன் தலைவியின் உடம்பிற்குப் பொருத்தமாகவும் அமைந்துள்ளது என்பதும் இடம் பெற்றுள்ளது. 


தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் இயற்றிய, உ,வே. சாமிநாதைய்யர் பதிப்பித்த கலசைக் கோவையில் இத்துறைக்குரிய பாடல் அமைந்துள்ளது. 

'தன்கையிற் கங்கொள் கலசைக் கலசவு தாரன்வெற்பில்

மின்கையிற்; கொண்டு தரிக்கத் தருமொரு வேடன்கண்ட

தென்கயி லாயம் வடகயிலா யத்துஞ் சீர்த்திகொண்ட

தென்கையிற் பூந்தழைக் கொப்பாந் தழையில்லை எங்ஙணுமே'

(பாடல் - 110)

இப்பாடற் கருத்து – தலையோட்டைக் கையில் உடைய சிவபெருமானது  மலைகளில், வில் தொழிலால் பெற்ற உணவைக் கொடுத்த கண்ணப்பனாம் வேடனின் காளத்தி மலையிலும், சிவபெருமானது கயிலாயத்திலும் நான் கொண்டு வந்த தழைக்கு ஒப்பில்லை என்று தழையின் சிறப்பைத் தலைவன் கூறினான் என்பதாகும். 


இவ்வாறு சங்க இலக்கியங்களும், பிற கோவை இலக்கியங்களும் தலைவன் தலைவிக்குத் தோழியின் வாயிலாகக் கையுறை கொடுத்த பொருள் பூங்கொத்தும், தழையுமாக அமைந்திருக்கின்ற நிலையில், கற்பனைக் களஞ்சியமாம் சிவப்பிரகாசர் இத் துறைக்குரிய பாடலில் தலைவனின் கையுறையாகப் பூவும் தழையும் இல்லாது முத்து மாலையைக் கொண்டு வந்தான் என்றும், அந்த முத்து மாலையின் சிறப்பையும் பாடலில் குறிப்பிடுகின்றார். அப்பாடல் சுவைத்து இன்புறத் தக்கதாகும். 


'கொண்டல்அம் கண்டர் திருவெங்கை வாணர் குளிர்சிலம்பில்

தண்தளிர் வென்றசெந் தாழ்மட வீர்நும் தடமுலையாம்

முண்டக மென்முகை மேல்வாழ ஊசி முனையில்நின்று

வன்தவம் செய்துஇங்கு வந்தகண் டீர்இம் மணிவடமே

(பாங்கி மதியுடம்பாடு, பா. 100)


இப்பாடலின் பொருள்:

நீலமேகம் போன்ற அழகிய திருக்கழுத்தினை உடையவர் திருவெங்கை வாணர். அவரது குளிர்ந்த மலையில் உள்ள குளிர்ச்சி பொருந்திய மாந்தளிரை வென்ற பாதங்களை உடைய பெண்ணே, நான் கொண்டு வந்த இம்முத்துமாலை தலைவியின் பெரிய முலையாகிய

தாமரை அரும்பில்; வாழும் பொருட்டு, ஊசி முனையில் நின்று பெருந்தவம் செய்து இவ்விடத்தில் வந்தது, ஆதலால் நீர் ஏற்றுக் கொள்வீர் என்று தலைவன் கூறினான். 


சிவப்பிரகாசர் தலைவன் கொண்டு வந்த பொருளாக, மற்றவர்கள் கூறிய கையுறைப் பொருளைக் கூறாது, திருவெங்கைக்கோவையில் தலைவன் கையுறைப் பொருளாக முத்துமாலையைக் கொண்டுவந்தான் என்று ஒரு புதிய செய்தியைக் கூறியுள்ளார்.  மேலும் அதன் சிறப்பைக் கூறும் பொழுது தலைவியின் மார்பகத்தில் விளங்குவதற்காக அம்மாலையில் உள்ள முத்துக்கள் ஊசி முனையில் நின்று பெருந்தவம் செய்தது என்றும் கூறியிருக்கிறார்.  முத்துக்களை மாலையாகத் தொடுக்கும் பொழுது ஊசியால் முத்துக்களைக் கோர்ப்பது வழக்கம். அந்த வழக்கத்தைச் சிவப்பிரகாசர் தம் கற்பனையில் முத்துக்கள் ஊசிமுனையில் நின்று தவம் செய்திருப்பதாகக் கூறியிருப்பது படித்து இன்புறத் தக்கதாகும். 


தலைவன் கொடுத்த கையுறையைத் தோழி முதலில் வாங்க மறுக்கிறாள். அவ்வாறு மறுப்பதற்குக் காரணம் மற்ற பெண்களின் இடையைப் போலத் தலைவியின் இடை வலிமை உடையது அல்ல.  இடையில்லை என்ற தன்மை உடையது.  மேலும் மாலையைத் தலைவியினிடத்தில் கண்டால் எம் தந்தையராகிய வேடர் சினங்கொள்வர். எனவே நீ முத்து மாலையைக் கொடுப்பது, அவள் அணிவது, உறங்கும் புலியின் வாயை இடர்வது போன்றதாகும் என்று அடுத்த பாடலில் சிவப்பிரகாசர் பொருளைப் பதிவு செய்துள்ளார்.  பின் மறுத்த தோழி அதனை ஏற்று, அதன் பெருமையைத் தலைவியிடம் கூற, தலைவி மன்மதன் செய்யும் போருக்கு இம்முத்துமாலை குளிர்ச்சி பொருந்திய மருந்தாய் அமையும் என்று கூறி ஏற்பதாகவும் பின்வரும் பாடலில் குறிப்பிடுகின்றார். 

எனவே, திருவெங்கைக் கோவையில் பிற கோவைகளில் இருந்து வேறுபட்டு சில துறைச் செய்திகளைச் சிவப்பிரகாசர் கற்பனையோடு குறிப்பிடுவார் என்பது பெறப்படுகிறது. திருவெங்கைக் கோவையைப் பயின்று சிவப்பிரகாசரின் கற்பனைத் திறனை உணர்வோமாக. 

திருச்சிற்றம்பலம். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக