புதன், 26 ஜனவரி, 2022

சிவப்பிரகாசரின் செய்ந்நன்றி

 சிவப்பிரகாசரின் செய்ந்நன்றி

  சித்தாந்த செம்மணி முனைவர்.பழ.முத்தப்பன்,

        மேனாள் முதல்வர்,

  கணேசர் செந்தமிழ்க் கல்லூரி,மேலைச்சிவபுரி.


       நம்முடைய திருமடத்தின் ஆதீனப் புலவர் சிவப்பிரகாசரின் வரலாற்றில் அவரை ஆதரித்த பெருமக்களில் முதன்மையாக விளங்குபவரகள்; திருவெங்கை மாநகரத்தின் லிங்கா ரெட்டியார் அவர்களும், அவரின் திருமகனார் அண்ணாமலை ரெட்டியாரும் ஆவார்கள். துறை மங்கலத்தில் தங்கியிருந்த சிவப்பிரகாசரை லிங்காரெட்டியார் குடும்பம் அழைத்து வந்து வெங்கனூரில் ஒரு திருமடம் அமைத்துச் சிவப்பிரகாசரை எழுந்தருளச் செய்தனர். நாள் தோறும் அவரிடத்தில் பாடம் கேட்கும் மாணவராகவும், அவருக்குத் தொண்டு செய்யும் தொண்டராகவும், ஆதரிக்கும் வள்ளலாகவும் அக்குடும்பத்தார் விளங்கினர். தந்தையார் லிங்கா ரெட்டியாரை விடத் திருமகனார் அண்ணாமலை ரெட்டியார் சிவப்பிரகாசர் பால் அதிகப் பக்தி கொண்டவராக விளங்கினார்.  எனவேதான் அண்ணாமலை ரெட்டியாரின் வேண்டுகோளின்படி திருவெங்கைக்கோவை, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கை உலா, திருவெங்கை அலங்காரம் என்ற நான்கு ஒப்பற்ற நூல்களைச் சிவப்பிரகாசர் படைத்து அருளினார். தன்பால் அன்பு கொண்டு ஆதரித்த அண்ணாமலை ரெட்டியாரை நினைவு கூர்ந்து தன்னுடைய நூலாகிய திருவெங்கை உலாவிலும், திருவெங்கைக் கோவையிலும் சிவப்பிரகாசர் அவரைப் போற்றிப் பெருமையாகப் பாடித் தன் செய்ந்நன்றி தனை வெளிப்படுத்தியுள்ளார். திருவெங்கைக் கோவையில் அண்ணாமலை ரெட்டியார் இடம்பெற்ற துறையின் விளக்கத்தை உள்ளடக்கியது இக்கட்டுரையாகும். 


          சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்;படை ஒரு பாட்டாகும். தொண்டைமான் இளந்திரையனை கடியலூர் உருத்திரங்கண்ணனார் போற்றிப் பாடியது அப்பாட்டாகும். அப்பாட்டின் இறுதிப் பகுதியில் இளந்திரையனைக் குறிப்பிடுகின்ற பகுதி சிறப்;புடைய பகுதியாகும். 


'மஞ்ஞை ஆலும் மரம்பயில் இறும்பின்

கலை பாய்ந்து உதிர்ந்த மலர் வீழ்புறவின்

மந்தி சீக்கும் மாதுஞ்சு முன்றில்

செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்

களிறு தரு விறகின் வேட்கும் 

ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே'    (வரி 495 – 500)


      இப்பாடற் பகுதியின் கருத்து -  கின்னரப் பறவைகள் வாழும் சாரலில் மயில்கள் ஆடி ஆரவாரிக்கும் மரங்கள் நெருங்கிய இளமரக் காட்டில், கருங்குரங்குகள் பாய உதிர்ந்த மலர்களை மந்திக் குரங்குகள் தூரால் வாரும்.  மானும் புலியும் ஓரிடத்தில் உறங்கும். வேள்வியைச் செய்கின்ற முனிவர்கள் தங்கள் வேள்விக்குரிய சிவந்த தீ அணையாது காத்திட வெண்மையான தந்தங்களை உடைய யானை விறகுகளைச் சேமித்துக் கொண்டு  வந்து உதவும். இத்தகைய வளங்கொண்ட மலையருவி பாயும் மலைநாட்டுக்கு உரியவன் இளந்திரையன் ஆவான் என்பதாகும். 


இந்தப் பாடலின் கருத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டு பிற்காலத்தில் தோன்றிய தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் தாம் இயற்றிய கலசைக் கோவையில

ஒரு பாடலை அமைத்திருக்கின்றார்.  அந்தப் பாடலுக்கு உரிய துறை 'இறைவி அறியாள் போன்று குறியாள் கூறல்' ஆகும். இந்தத் துறையைத் தமிழகத்தில் உலாவரும் பெரும்பாலான கோவை நூல்கள் அமைத்துக் கொண்டுள்ளன. தலைவனின் குறையை ஏற்றுக் கொண்ட தோழி, தலைவன் தலைவியைச் சேர்வதற்கு உதவி செய்வதாக உறுதி அளித்துத் தலைவியிடம் வருகின்றாள்.  வந்த அவள் கையுறையோடு தலைவன் ஒருவன் வந்துள்ளான், அவனை என் செய்வது? என்று கேட்டாள். இக் கேள்வி மூலம் அவனுடைய நினைவு தலைவிக்கு இருக்கிறதா? என்று சோதனை செய்கிறாள். ஆனால் தலைவி அவள் கூறுவதை ஏற்காதது போல அதற்குப் பதிலாக வேறொரு நிகழ்ச்சியைக் கூறுவது இத்துறையாகும். இத்துறைக்குரிய பாடல்,


'நாகந் திசைகொள் கலசைத் தியாகர் என்நாதர் நந்தி

நாகந்; தனின்முனி வோர்வாழ் குகைக்கு நயந்துமத

நாகங்கை யான்மயிற் றோகை யலகிட்டு நன்னுதலாய்

நாகந் தருசெம் மணிவிளக் கேற்றிடும் நாடொறுமே'   

(கலசைக் கோவை ,பாடல் -38)


இப்பாடலின் பொருள் - நல்ல நுதலை உடைய தோழியே, திசைகளையே ஆடையாகக் கொண்ட, கலசைத் தியாகராசராம் என் தலைவரின் நந்தி மலையில் முனிவர்கள் வாழும் குகையில் , யானையானது விரும்பி தன் துதிக்கையால் கங்கை நீரைக் கொண்டு வந்து தெளித்து, மயில் தோகையால் அலகிட்டு, பாம்புகள் தருகின்ற மாணிக்கங்களை விளக்காக நாள்தோறும் ஏற்றுகின்றன என்றாள். பெரும்பாணாற்றுப் படையில் முனிவர்களுக்கு வேள்வி செய்ய யானை உதவியது போல இ;க்கோவைப் பாடலிலும் முனிவர்கள் வாழும் குகையில் யானை தொண்டு செய்தமை குறிக்கப் பெற்றிருப்பது ஒப்புநோக்கி உணரப் பெறுவதாகும். தோழி தலைவனைப் பற்றிக் கூறத் தலைவி அவனைத் தெரியும், தெரியாது என்று பதில் கூறாது, பெண்மைக்கே உரிய நாணத்தாலும், கற்பின் திறத்தாலும் வேறொரு செய்தியைக் கூறுவது இலக்கண முறைப்படி தவறல்ல.  (முன்னத்தில் உணரும் கிளவியும் உளவே - இன்ன என்னும் சொன் முறையான – தொல்காப்பியம் எச்சவியல் - 36) 


இத்துறைக்குரிய பாடலாகக் கோவை இலக்கியங்களில் தலைமை சான்ற திருக்கோவையார் கீழ்வரும் பாடலைக் கொண்டுள்ளது. 


'புறங்கடந் தானடி காண்பான் புவிpவண்டு புக்கரியாது

இரங்கிடுஎந்; தாய்என்று இரப்பத்தன் ஈரடிக்கு என்இரண்டு

  கரங்கள்தந் தான்ஒன்று காட்டமற்று ஆங்கதும் காட்டிடென்று

வரங்கிடந் தான்தில்லை அம்பல முன்றில்அம் மாயவனே'  (பா. 86) 


இப்பாடலின் பொருள் -  முப்புரங்களை வென்ற சிவபெருமானுடைய திருவடிகளைக் காண்பதற்குப் பூமியில் தோண்டிக்கொண்டு சென்று, அத்திருவடியைக் காணாத திருமால்,  எந்தையே எனக்கு அருள் செய்வாயாக என்று வேண்டினான். சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் வணங்குவதற்கு எனக்கு(தலைவிக்கு) இரண்டு கரங்களைத் தந்த சிவபெருமான், திருமாலின் வேண்டுதலுக்கு இரங்கி ஒரு திருவடியைத் தூக்கிக் காட்ட, மற்றொரு திருவடியையும் காட்டுக என்று தில்லை முற்றத்தில் திருமால் கிடந்தான் என்பதாகும். 


இப்பாடலில்  தலைவனை அறியாதவள் போலத் தலைவி வேறொன்றைச் சொல்லுவாள்.  திருமாலுடைய செய்தியை அதாவது வேறொரு கடவுளைச் சொல்லுவதாக அமைந்திருப்பதை அறிதல் வேண்டும்.  இவ்வாறே பின்வந்த கோவை இலக்கியங்களும் இத்துறைக்குரிய வேறொரு செயலாகத் திருமாலைப் பற்றிய செய்திகளையே கூறுகின்றன.  சிராமலைக்  கோவையில் 'தலைவி அறியாள் போன்று குறியாள் கூறியது' என்ற துறைக்குக் கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது. 


'குன்றினை யேந்து நிரைகாக்கு மாழி கொடுமறைக்கும்

என்றினை வேதன் தனையீ;னு நாகத்தி னிற்றுயிலும்

  கன்றினை யோச்சிக் கனியுதிர் விக்குங் கருணையினால்

மன்றினு ளாடுஞ் சிராமலை நாதர்தம்  வாகனமே' ( பா. 39)


இப்பாடலின் பொருள் -  சிராமலைச் சிவபெருமானின் வாகனமாகிய திருமால், கோவர்த்தன மலையைத் தூக்கி நின்று பசுக்கூட்டங்களைக் காத்தவன்.  பாரதப் போரில் சக்கரத்தைக் கொண்டு சூரிய ஒளியை மறைத்தவன். வேதங்களைத் தந்த நான்முகனைப் பெற்றவன். ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் துயில்பவன்.  தன்னை அழிக்க வந்த அரக்கனாம் கன்றினை எறிந்து கனிகளை உதிர்த்தவன். அத்தகையவன் சோலையில் விளையாடிக் கொண்டிருக்கின்றான் என்பதாகும்.  இதில் திருமால் சிவபெருமானது வாகனமாகிய புராண வரலாறு இடம் பெற்றுள்ளது. 


ஆனந்தரங்கன் கோவையில் இத்துறைக்குக் கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது. 

'சிந்திக்க நல்குந் திறத்தசிந் தாமணி செந்தமிழோர்;

சந்திக்க வெல்லாந் தருமைந் தருமுக்கட்; சங்கரனை

வந்திக்கு மாநந்த ரங்கன் பிரம்பை வரோதயனே

தந்திக்கு முன்வந்த சக்ரா யுதனென்பர் தாழ்குழலே' (பா – 113)


இப்பாடலின் பொருள் - கஜேந்திர யானைக்கு முன்னே வந்து அருளிய சக்கரப் படையை உடைய திருமால், ஐந்து முகங்களையும், அதில் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களையும் கொண்ட சங்கரனைச் சிந்தாமணியாக, செந்தமிழ்ப் புலவர்க்கு வேண்டியதை விரும்பிக் கொடுக்கும் ஆனந்தரங்கனின் நாட்டில் வழிபட்டு நிற்பான் என்பதாகும். 


கோவை இலக்கியங்களில் சில மற்றொன்று என்பதற்குத் திருமால் செய்தியைக் குறிக்கின்றன என்றாலும், முன்காட்டிய சிராமலைக் கோவை போலத் தஞ்சைவாணன் கோவையும் இத்துறைக்கு மற்றொன்றான இயற்கை வருணiயை அமைத்துப் பாடுகின்றது. அக்கோவையில் அமைந்த  பாடல் -


'கலைதொடக் கீண்ட கருவியந் தேன்;பல கால்கொடுமா

மலைதொடுத் தூர்ந்து வருகின்ற தாற்றஞ்சை வாணன்வென்றிச்

சிலைதொடுத் தாங்கெழில் சேர்நுத லாய்பயில் செம்பழுக்காய்

குலைதொடுத்  தோங்குபைங் கேழ்பூக நாகக் குழாங்கவர்ந்தே' (பா- 118)


இப்பாடலின் பொருள் - அழகிய நுதலை உடைய பெண்ணே, சந்திரனின் கோடு தீண்டியதால் கிழிந்த தேனடையானது பல வழிகளாகப் பெய்து, மலைகளைக் கடந்து சிவந்து பழுத்தனவும், பச்சை நிறத்தையுங் கொண்ட பூகக் காய்களையும், புன்னைக் காய்களையும் கவர்ந்து கொண்டு வருகின்றது. அதனைப் பார்ப்பாயாக என்பதாகும்.  இந்தப் பாடலில் திருமால் பற்றிய செய்தி இடம்பெறாது, இயற்கை வருணனைச் செய்தி மற்றொன்று கூறுதலாக அமைந்துள்ளது. இவ்வாறு கோவை இலக்கியங்களில் மற்றொன்று விரித்தல் என்பதற்குத்; திருமாலைப் பற்றிய செய்தியும், இயற்கை வருணனை பற்றிய செய்தியும் ஆகிய இரண்டு விதங்களாகச் செய்திகள் இடம் பெற்றுள்ளன என்பதை அறியலாம்.  எனவேதான் சிவப்பிரகாசரும் இத்துறைக்குரிய பாடலில் திருமால் பற்றிய குறிப்பையும், தன் நன்றிப் பெருக்காகிய பிற செய்தியையும் இடம் பெற வைத்திருக்கிறார். 


இவ்வாறு பிற கோவைகள் தலைவி அறியாள் போன்று குறியாள் கூறல் என்ற துறைக்குச் சம்பந்தம் இல்லாது தலைவி கூறுவாள் என்ற பொருளில், மற்றொரு செய்தியாகத் திருமாலைப் பற்றிய செய்தியும், பிற  இயற்கைச் செய்தியும் கூறியிருக்கப் பிறசெய்தியில்; சிவப்பிரகாசர் இத்துறைக்குக் கீழ்க்கண்ட பாடலை அமைத்துள்ளார். 


'வேலுக்கும் அம்புக்கும் மாறுகொண்டு ஓடும் விழிமடவாய்

  மாலுக்கு நல்மனை யாள்மனை ஆகி வழங்கும்வல்ல

கோலுக்கு வல்லஅண் ணாமலை யார்கட்டு கோயில்அகப்

பாலுக்கு வந்தது கண்டாய்நம் வெங்கைப் பழமலையே '  (பா.254)


இப்பாடலின் பொருள் - வேல் படைக்கும் அம்புக்கும் பகைமை கொண்டு ஓடுகின்ற கண்களை உடைய தோழியே, திருமாலுக்கு நல்ல மனைவியாகிய திருமகளது வீடாகித் திகழுகின்ற , செங்கோலுக்கு வல்ல அண்ணாமலையார் கட்டிய கோயிலின் உள்ளே நமது திருவெங்கைப் பழமலை நாதராம் இறைவர் வந்தார் என்பதாகும். பிற கோவைகள் எல்லாம் திருமாலை இடம்பெற வைத்துப் பாடிய துறைக்குரிய பாடலைச் சிவப்பிரகாசர் தரும்பொழுது, அண்ணாமலையார் கட்டிய கோயிலை நினைவு படுத்துகிறார். அவ்வாறு நினைவு படுத்தும் பொழுது பிற கோவைகள் கூறியபடி, திருமாலைக் குறிப்பதற்காக அண்ணாமலையார் கட்டிய கோயில், திருமாலின் மனைவி இலக்குமி இருக்கும் வீடாகும் என்று குறிப்பிடுகின்றார்.  என்றாலும் தனக்கு ஆதரவளித்த தனது தொண்டராகிய அண்ணாமலையாரை நினைவு படுத்த அவர் கட்டிய கோயிலைக் குறிப்பிட்டு , செல்வம் கொழிக்கும் அக்கோயிலில் திருவெங்கை பழமலைநாதர் எழுந்தருளியுள்ளார் என்று குறிப்பிடுவது படித்து இன்புறத் தக்கதாகும். 


திருவெங்கையில் அண்ணாமலையார் கட்டிய சிவன்கோயில் பழமலைநாதர் கோயிலாகும்.  அதனைக் கட்டியவர்  அண்ணாமலை ரெட்டியார் என்று குறிப்பிட வந்த சிவப்பிரகாசர் செங்கோண்மை மிக்க அண்ணாமலையார் என்று அடைமொழி கொடுத்துப் பாடியிருப்பது அண்ணாமலை ரெட்டியாரைப் பெருமைப் படுத்துவதாகும்.  எனவே தன்னுடைய நன்றிப் பெருக்கை வெளிக்காட்டுவதோடு பழைய மரபுப்படி திருமால் பற்றிய குறிப்பும், பிற செய்தியும் இடம்பெறுமாறு சிவப்பிரகாசர் இப்பாடலைப் பாடியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். 


திருச்சிற்றம்பலம்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக