அழகு முத்து மாலை (கவி மாலை)




பேராசிரியர் முனைவர் தமிழாகரர் சித்தாந்த செம்மணி
சிவ ஞானக் கலாநிதி
பழ. முத்தப்பன் அவர்களின் எழுபத்தோறாம் ஆண்டு பிறந்தநாள் நல்வாழ்த்து
28-05-2017
(புதுவயல் செல்லப்பன்)





ஒப்பரிய அளகையுறை அரனார் நல்கும்
                உயர்வான மழை போன்ற அருளி னாலே
செப்பரிய பன்னலங்கள் குவிந்தி ருக்கும்
                   திருநகராம் புதுவயலின் பெருமை எல்லாம் 
     எப்படித்தான் முயன்றாலும் இயம்பொ ணாது!
எழிலார்ந்த முத்தமிழை நிதம்வ ளர்த்து
நற்பயன்கள் ஆயிரமாய்க் கொண்டு சேர்க்கும்
நகரத்தார் நாட்டார்கள் வாழ்வார் அங்கே

சிவநெறியில் புதுவயலில் வாழ்ந்திருந்த
      திருவாளர் பழநியப்பர் அன்பினுக்கோர்
                உவமையிலாப் பெருநிதியாய்த் திகழ்ந்து முன்னோர்
                         உயர்குடும்பப் பெருமையினைப் பேணிக் காத்தார்.
தவப்பயனால் அந்நகரில் அமைந்தி ருக்கும்
            சரஸ்வதிவித் யாசாலை சிறப்புற் றோங்கக் 
கவனமுடன் பணி செய்யதா ரோடி ணைந்து
                   காலமெலாம் தொண்டு செய்த குணக்கின்றாவார்!

அத்தகைய பழநியப்பர் பெற்றெடுத்தே
              அருந்தமிழும் சிவநெறியும் வளர்ப்ப தற்கு
மெத்தவிருப் பொடளித்த அன்பு மைந்தர்
         மெய்யறிவைத் துலக்கமுறப் பெற்ற செல்வர்
முத்தப்பர் எனச் சொன்னார் முற்றும் உண்மை!
           முடித்தழும்பர் திருவடியை உளத்திருத்தி
எத்திசையும் சைவ நெறி தழைக்கும் வண்ணம்
              எப்பொழுதும் பணிபுரியும் தலைமைத் தொண்டர்!

கண்ணனைய கல்வியினை இவரி டத்தே
             கற்றறிந்த மாணவர்கள் எண்ணி லாதார்
மண்ணுலகில் எப்புறமும் பரவி நின்றே
            மாண்பொளிரும் செந்தமிழை வளர்க்கின்றார்கள்
திண்ணமுறச் சைவநெறி பரப்ப வந்த
             சித்தாந்தச் செம்மணியாய் விளங்கு கின்ற
 அண்ணிலிவர் திருப்பணியோ மெய்ஞ்ஞா னத்தை
           அனைவர்க்கும் உணர்த்தியுயர் வெய்தச் செய்தல்

முத்துகளைக் கோப்பதுபோல் சொற்கள் கோத்து
       முத்தப்பர் வழங்குதமிழ்ப் பொழிவைக் கேட்போர்                 
சித்திரையில் கனிந்துதிரும் மாம்பழத்தின்
            தீஞ்சுவைதம் காதுகளில் இனிமை சேர்த்த
    வித்தையினை எண்ணியெண்ணி வியந்து நிற்பர்!
         விளக்கமுற இவருரைத்த நெறியைப் பற்றி
 நித்தமும் தம் வாழ்நாளில் நடப்பதற்கு
          நெஞ்சத்தில் மாற்றமிலா உறுதி யேற்பர்!

செவியிரண்டும் திருமுறையின் ஒலியை மாந்திச்
    சிறந்தபயன் யாவருமே எய்து மாறும்
புவிமுழுதும் உவகையுடன் வாழ்ந்துமாறும்
      புதுமுறையில் பிறந்தநாள் காணுகின்ற
சிவஞானக் கலாநிதியாம் பழ.முத் தப்பர்
     திருமதியோ டன்புமக்கள் சூழ்ந்தி ருக்க
நவநிதியும் நல்வாழ்வும் வாய்க்கப் பெற்று
     நம்அளகைச் சிவனருளால் நீடுவாழ்க!

------------------------------------------------------------------------------------------------------------------



வாழ்க முத்தப்பர்

பொற்கிழிக் கவிஞர் ச. ஜவகர்லால்


சித்தாந்தக் கடலுக்குள் முத்தெ டுப்பவர்அந்தச்
   சிவனருளை முழுமையாகப் பெற்றி ருப்பவர்
சித்தமெல்லாம் கிறுகிறுக்க உரைதொ டுப்பவர்கேட்போர்
   சிலிர்த்திடவே உணர்ச்சியுடன் சொல்வி டுப்பவர்.

நல்லதமிழ் வெல்லமெனப் பொழிந்து நிற்பவர் –தன்
   நாவிலொரு நாட்டியத்தைக் காட்டி நிற்பவர்
வெல்லுவகை வாதமதைத் தொடுத்து வைப்பவர் –இவர்
   விளையாட்டாய் அவையினரை ஆட்டி வைப்பவர்.

நல்லநண்பர் கூட்டினிலே இனிமை காண்பவர் –அவர்
   நாடிவந்தே உரையாட மகிழ்ந்தி ருப்பவர்
நல்லவரைக் கெட்டவரைக் கண்டு ணர்பவர் –கண்டும்
   நல்லஉரை அல்லவர்க்கும் கொட்டி நிற்பவர்.

மகனையொரு தமிழறிஞ ராக்கி வைத்தவர் அன்னார்
   மனமகிழக் கருத்துரைகள் தந்து நிற்பவர்
மகனுயரத் தான்மகிழும் பேறு பெற்றவர் –அந்த
   மாண்பினிலே தலைசிறந்த தந்தை யானவர்.

என்னையொரு நண்பனாக ஏற்றி ருப்பவர் அவர்தம்
   இயக்கத்தில் என்னையுமே இயங்க வைப்பவர்
பொன்னைவைத்துப் பாராட்ட எண்ணு கின்றநான் –என்றன்
   பாட்டைவைத்துப் பாராட்டி மகிழு கின்றேன்.

வாழ்கவாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்வேன் –அவர்
   வளத்தோடும் நலத்தோடும் வாழ்ந்தி டுகவே!
சூழ்ந்தசுற்றம் படர்ந்தநலம் பெற்றி லங்கியே –அவர்
   சூழ்புவியில் நீண்டகாலம் வாழ்ந்தி டுகவே!


-----------------------------------------------------------------------------------------------------

தெரிந்த அப்பா

     - அஜாய் குமார் கோஷ். அறந்தாங்கி 

அப்பாவை
தெரியும் பழனி
அப்பன் அப்பாவை
தெரியும்..
இலக்கிய
உலாவில் அறவியல்
வாழ்வியல் நீள அகல
விஸ்தரிப்பை உரைக்கும்
போது பழனியப்பன்
உயரம் பிரமிப்பு
அந்த உயரம்
அவர் தந்தையிடமே
கிரகிப்பு அந்த
அப்பாவை தெரியும்
அறந்தாங்கியிலே
கம்பன் விழா
TAN அப்துல்லா
தலைமையில்
பேருரை அப்பாவே
தேனிலே முதலில்
எறும்பு நடக்கும்
தேன் குடித்த பின்
தேனிலேயே மூழ்கிவிடும்
அந்த கிறக்கத்தில்
நான் இருக்கேன் என
நன்றி உரையில்
என் உண்மை நிலை
உரைத்தேன்
அன்று கிறங்க
வைத்த அப்பாவை
தெரியும் பழனியப்பன்
அப்பாவை தெரியும்...


------------------------------------------------------------------------------------------------------------------------------
எழுபதாம் ஆண்டு நிறைவு காணும் முத்தப்பனார்  முத்தமிழாய் நீடுவாழ்க!

அரி்மா கவிஞர் வெ. பழநியப்பன்.

Image may contain: 9 people, people standing and outdoor


பேச்சும் தமிழ்! மூச்சும் தமிழ்! 
பேச்சினிக்கப் பேசுகிற பிள்ளைகளும் தமிழ்! 
வாழ்வே தமிழ்! வாழ்வுக்குத் தமிழ்!
 வாழுகிற காலமெலாம் துணைநிற்கும் தமிழ்!
 மேலைச் சிவல்புரியின் மேன்மையுறு தமிழ்! 
மேலாக்கிப் பார்த்த மேலான தமிழ்!
 மேடையெலாம் முழுங்குகிற மென்மைத் தமிழ்! 
வாடை பனிக்கு வாரி அணைக்கின்ற தமிழ்!
எந்த நாளும் தழைத்தோங்கும் இனிய தமிழ்!
அந்தத் தமிழ் முத்தப்பரின் அன்புத்தமிழ்!
சைவத் தமிழ்! சைவம் கலந்த தமிழ்!
சைவமாய் வாழும் சன்மார்க்கத் தமிழ்!
சித்தாந்தத் தமிழ்! சிந்தனைத் தமிழ்!
எத்திக்கும் புகழுகிற எளிய தமிழ்!
ஆச்சியொடு பேசுகிற செட்டிநாட்டுத் தமிழை 
பூச்சூடி வாழ்த்துகிறேன்!பொலிவோடு வாழ்க! 


----------------------------------------------------------------------------------------------------------------------------------
இறையருளைக் காட்டுகின்ற குருவாய் வாழ்க!
பேராசிரியர் தேவநாவே
(முன்னாள் முதல்வர், சரசுவதி நாராயணன் கல்லூரி, மதுரை)
No automatic alt text available.


புதுவயலாம் முதுநிலத்தின் தவப்புதல்வர் 
பொற்புடைய நற்குடியில் பிறந்தமகன்
மதுவயலாம் தமிழ்வயலில் பயிர்செய்து
மாநிதியம் தேடிவைத்த பெரும்புலவர்
தமிழ்மொழியைக் கொலுவேற்றிக் கொண்டாடும்
கலைநிலையத் தலைவராய்த் தொண்டுசெய்து 
அமிழ்தமென உயர்கல்வி பயிற்றுவித்து
அறியாமை இருளகற்றிப் புகழுற்றார்
ஓய்வுபெற்ற பின்னாலும் ஓய்வின்றி 
ஒப்பற்ற பணிசெய்து உள்ளந்தான்
தோய்ந்துள்ள சைவத்தில் உரைநூல்கள்
உலகுக்கு உவந்தளித்து உயர்வுற்றார்
எட்டாமல் இருந்திருக் கோவையார்
எளிதாகப் படித்தறிய உரையெழுதி
எட்டாம்திரு முறைக்கே ஏற்றந்தந்தார்
ஏழிரண்டு சாத்திரத்தின் பொழிப்புரைத்தார்
ஊர்தோறும் சிவனடியார் திருக்கூட்டம்
உவப்புடனே செவிமடுக்கச் சாத்திரங்கள்
ஆர்வமுடன் பயிற்றுவித்து அனைவரையும் 
அரன்கழலே சிந்திக்க அரணமைத்தார்
ஆறாறு தத்துவத்தை ஆணவத்தைக்
கன்மத்தை அளப்பரிய மாயைதனைப்
பேறாறாய்ப் பெருகிவரும் பெருமான்தன்
பேரருளைப் பிரியமுடன் புரியவைப்பார்
திருத்தொண்டர் வரலாறும் திருமுறையும்
தேர்ந்தெடுத்துச் சைவநெறி தெளிவாக 
வருந்தொண்டர் அனைவர்க்கும் வகுத்துரைப்பார்
வாழும்நெறி இதுவென்று காட்டிடுவார்
மேடையிலே தமிழ்பேசி வந்தசெல்வம்
மனைவிக்கும் மக்களுக்கும் சேர்க்காமல்
தேடரிய கல்விதரும் பள்ளிக்குக்
கட்டிடமாய்ப் புதுவயலில் திகழவைத்தார்
ஒப்பற்ற ஒரு மகனாம் பழனியப்பன்
உலகுபுகழ் ஆசனாய் உயரவைத்தாற்
தப்பாமல் இவன்தந்தை எந்நோற்றார்
எனப்போற்றத் தனயனுந்தான் இலங்குகின்றார்
அன்புநிறை அழகம்மை ஆச்சியுடன்
ஆற்றல்மிகு முத்தப்பர் பல்லாண்டு
இன்புநிறை வாழ்வுகாண்க! யாவர்க்கும்
இறையருளைக் கூட்டுகின்ற குருவேயாக!
-----------------------------------------------------------------------------------------------------------------


பல்லாண்டு வாழ்க சொல்லின் செல்வர்

கவிஞர் தமிழரசி், வி்ழுப்புரம்



இல்லறம் ஏற்றபோது வந்திருந்து
வாழ்த்துரைத்து……
இட்டிலிக் கதையொன்றால்
இதயத்தில் இடம்பிடித்தவர்
பிடித்த இடத்தை நெகிழவிடாது 
இன்றுவரைக் காப்பவர்

நட்பின் மிகநல்ல வார்த்தையாம்
எடுக்கவோ …கோர்க்கவோ.. எனும்
அந்தத் தோழமைக்கு
இணையாய் வைத்து எடைபோட்டாலும்
தாழாத தட்டுக்குச் சொந்தக்காரர்

தேவைக்குக் கடலளவு செலவிட்டு
தேவையின்றிக் கடுகளவும் வீணாக்காதவர்
நிலையற்றது வாழ்வென்பதறிந்து
நிலைத்த பணிகளில் 
கவனம் குவிப்பவர்…

சொற்சிக்கனம் கொண்ட
இவரின் தொலைபேசி உரையாடலை
முன்னம் கேட்டிருந்தால்
‘சொல்லின் செல்வர்’ இவர்தானென்று
கம்பனும்கூட கதைத்திருப்பான்.
ஆனாலென்ன 
தொலைத் தொடர்புத்துறைதான்
இன்றுவரை வருத்தம் கொள்கிறது…

பட்டிமண்டபத்தில் 
நடுநாயகமாய் வீற்று
பக்கத்து இருக்கைக்கு 
தன்னம்பிக்கை ஊட்டுகையிலும்….
கருத்தரங்குகளில் 
கண்ணியம் காட்டுகையிலும்…
ஆய்வரங்குகளில் வாதி கையிறைஞ்ச
நுட்பம் எடுத்துரைக்கையிலும்…
அம்மாவின் உள்ளங்கைச்சூட்டை
உணரும் மகவாகியிருக்கிறேன்.

புலவர் படிப்பு…..
புகழத்தக்க முனைவர் பட்டம்…..
சைவசித்தாந்த ஆராய்ச்சி……
சமய வகுப்பு…..இலக்கணம்…
சாத்திரம்…புராணம்...திறனாய்வு….
உரைவளம் காண்பது கடந்து
மனித மனங்களை வாசிக்கும்
மகோன்னதம் வாய்த்தவர்…

விருந்தாக வருகையிலும்
சொந்த வீட்டில் இருப்பதுபோன்றே
எளிமைபேணி…
ஒரு காரக்குழம்பையும்….
உருளைக்கிழங்கு பொரியலையும்…
திருமணவிருந்துக்கு இணையாய்வைத்து
மெச்சிப் புகழ்பவர்…
பக்குவம் தவறினும்கூட
இனிது என உண்ணும்
மனப்பக்குவம் வாய்த்தவர்.

கண்களிரண்டும் ஒத்து 
காரியம் ஆற்றுமாறு…
இல்லறச் சகடம் இனிதாய் உருள
அழகம்மை என்னும் 
அன்பு அம்மையைப்பெற்றதால்
குடும்பம் கோயிலானது..
குழந்தைகள் குலவிளக்காயினர்.

‘இவன் தந்தை என்நோற்றான் கொல்’
எனச் சொல்லுமாறு
அறிவுக்கொழுந்தாய் பழனியப்பன்..
கொடுத்த தந்தை கர்வம்கொள்ள
மதுரையையாளும் மீனாட்சியாய்…
கொண்ட கொழுநனையும்..
அவர்தம்  குடும்பத்தையும் ஆளும்
மீனாட்சி….
அன்னவர்தம் குலக்கொழுந்துகள் என
எதிர்காலத்திலும் பேசப்பெறுமாறு
தலைமுறையைத் தழைக்கச்செய்தவர்

முன்னத்தி ஏராய் மனத்துள்கொண்டு
எம்போன்றோர் பின்தொடருமாறு
இன்னும் பல்லாண்டு நீளட்டும்
இவர்களின் இனிதான வாழ்க்கைப்பயணம்..
இவர்களின் வாழ்நாளை நரைதொடாது
இவர்களின் நாட்காட்டித்தாள்கள் கிழிபடாது
அனுபவங்களை எங்களுக்குக் கடத்தி
ஆயுளை அவர்களுக்குக் கூட்ட
இறைஞ்சுகிறேன் இறையருளை
என்றென்றும்….!!!!!!!!!!!!!!!!!!!!!!!


--------------------------------------------------------------------------------------------------------------------------
பைந்தமிழ்போல் பல்லாண்டு பழ.மு. வாழ்க!
முனைவர் மா.சற்குணம்

மா. சற்குணம் க்கான பட முடிவு
சீர்மிகுநல் நகரத்தார் மரபில் தோன்றி
செழுமையுற தமிழ்க்கல்வி தனைப்ப யின்று
ஏர்மிகுநல் புதுவயலின் பெயர்வி ளங்க
ஏற்றதொரு தகவமைந்த குலவி ளக்காம்
ஊர்புகழும் அழகம்மை தனைம ணந்து
உயர்பண்பின் பழனியப்பன் நல்மீனா தம்மை
பார்போற்ற தமிழ்த்துறையில் வளர்த்து இன்று
பலர்முன்னே அரங்கின்முன் இருக்கச் செய்தார்
கனித்தமிழ்நல் ஆசானாய் இருந்த தோடு
கற்போர்க்கு உதவும்பல் பனுவல் செய்தார்
இனித்தமுடன் எவரோடும் பழகும் நல்லார்
ஏறாதமே டையெங்கும் இலரே என்பேன்
நுனிப்புல்லை மேயாமல் பயிற்றல் செய்வார்
நுட்பமுடன் நூல்களுக்கு ஆய்வும் செய்வார்
தனித்தவகை விருதுகளைக் குவித்த தோடு
தக்கவகை அறச்செயல்கள் புரிவார் உண்மை!
அழகம்மை இவர்துணையாய் அமைந்த தாலே
அதிகாலை துயிலெழுந்து இருவர் தாமும்
பழம்நூல்கள் பலதெரிந்து பதிப்பும் செய்ய
பாங்குடனே உரைகள்தமை எழுதச் செய்வார்
இழப்பெதுவும் இல்லாமல் பொருளைச் சேர்த்து
எல்லோரும் வியக்கும்வகை விழாக்கள் காண்பார்
பழ.மு.தாம் எழுபதாண்டு நிறைந்தார் போல
பைந்தமிழ்போல் பல்லாண்டு பழ.மு. வாழ்க!
---------------------------------------------------------------------------------------------------------------
28-05-2017 இல் 71 ஆம்ஆண்டுபிறந்தநாள்காணும்
பழ.முத்தப்பன்ஐயாவுக்குவாழ்த்து.

 (அ. கி. வரதராசன்,சிங்கப்பூர்)




        கட்டிக் கரும்பொப்பக் கன்னலிதுவென்னக்


       கொட்டித் தமிழின்பம் கூட்டிடுவார் – செட்டிக்

       குலத்துதித்தமுத்தப்பர் கூத்தனருள் கொண்டு

       நலத்துடன் வாழ்வார் பன்னாள்.                            (1)



       ஏசார் ஒருவரையும்;  இம்மியும் தற்பெருமை

       பேசார் எங்கள் பெருமகனார் -  ஆசானாய்ச்

       சொல்லுகிற பாடத்தில் சொக்கிடுவார் மாணாக்கர்,

       வெல்லு நெறிதன்னை வியந்து.                           (2)



           இத்தாரணி காணா இன்னமுதம் கூட்டிடவே

            சித்தாந்தம் கற்பிப்பார் சீரோங்கி- அத்தாவுன்

            ஆழியெனும் அன்புதனை ஆசான் முத்தப்பர்பால்

            வாழியெனச் சொல்லி வழங்கு.                         (3)





       பாசமுடன் பாடம்பயிற் றுவிக்கும் பண்புதனை,

       நேசமுடன் கற்போர் நினைந்திருப்பார் - ஈசனருள்

       என்றென்றும் கிட்ட, இவரை அணைந்திடும்,

       சென்றவிட மெல்லாம் சிறப்பு.                               (4)



       கன்னல் தமிழோடு கற்கண்டுச் சைவத்தைப்

       பொன்னென்று போற்றிப் பொலிவுற்றார் – தன்னிகர்

       இல்லாத முத்தப்பர் ஏதும்குறையின்றிப்

       பல்லாண் டுறைவாரிப் பார்.                               (5)



       ”பையனே நீயும்படிப்பாய் தமிழ்தன்னை,

       வையமிதில் மாறாவளஞ் சேர்க்க”– ஐயமறச்

       சொன்னார் பழனியிடம் சொன்னதை ஏற்றவனும்

       மின்னுகிறான் சோதியில் மிளிர்ந்து.                       (6)





     கல்லி அளித்திடணும் கன்னல் சுவைமிகுந்து,

     சொல்லில் தமிழமுதம் சூழ்ந்திருக்க – வல்லவராய்

     இத்தரணி தன்னில் எவரெடுத்துக்காட்டென்றால்,

     முத்தப்பர் வந்துறைவார் முன்.                               (7)



      காதல்மிகக் கொண்டு, கற்பிப்பார் பாடமெலாம்,

      கோதணுவும் சேராக்குணந் தன்னில்–ஆதலினால்

      நாற்றிசை மாணவரும் நாளும் மறவாமல்,

      போற்றுகிறார் மேன்மை புகன்று.                            (8)



      அன்னைத் தமிழ்மொழிக்(கு)  ஆராதனை செய்து,

      பன்னுவார் கற்போர் பயன்காண – சென்னிதனை,

      ஈசனடி வைத்தே இயம்பும் திருமுறையால்

      வாசமுறக் காண்பார் நல்வாழ்வு.                             (9)


        அன்புக் குடும்பத்தை ஆண்டவன் தன்னருளால்,

      இன்பம் கொளவைப்பான் என்றென்றும் – மன்பதை

      போற்றிட முத்தப்பர் பூதலம் வாழ்ந்திருப்பார் “

      சாற்றிடுவேன் உண்மைதனைச் சார்ந்து.                      (10)



       எத்தனை செல்வங்கள் இப்புவியில் உள்ளனவோ

       அத்தனையும் ஈவான் அரனன்பால் – முத்தப்பர்

       ஈடின்றிக் காண்பார் இனியநல்வாழ் வென்ற

       பாடியது கைகூடும் பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக