புதன், 26 ஜனவரி, 2022

அந்தம் ஆதி


சித்தாந்தச் செம்மணி, முனைவர்.பழ.முத்தப்பன்,

திருச்சிராப்பள்ளி


அந்தம் ஆதி என்ற தொடர் சிவஞானபோதம் முதற் சூத்திரத்தின் நிறைவில் இடம் பெற்ற தொடராகும். இதன் பொருள் சிவஞான முனிவரின் உரைப்படி சங்காரத் தொழிலைச் செய்யும் கடவுளே உலகிற்கு முதற் கடவுள் என்பதாகும். சங்காரம் என்பது அழித்தல் அல்லது ஒடுக்குதல் என்ற பொருளைத் தரும். சங்காரகாரன் என்பது யாவற்றையம் ஒழித்து நிற்பவன் என்ற பொருளைத் தரும். உலகம் படைத்தல், காத்தல், ஒடுக்குதல் என்ற மூன்று தொழில்களுக்கு உட்பட்டு நடப்பதாகும்.  அந்த மூன்று தொழில்களையும் செய்யும் கடவுளர்கள் உலகத்திற்குக் காரணம் ஆவார்கள் என்று கூறப்படுவதுண்டு.  யார் ஒருவன் யாவற்றையும் ஒடுக்கித் தான் மட்டும் நிலையாக நிற்கின்றானோ அவனே உலகத்தை மீண்டும் தோற்றுவிக்கும் ஆற்றல் உடையவன்.  ஆகையால் சங்காரகாரணன் ஆகிய முதல்வனையே முதலாக இவ்வுலகம் உடைத்து எனச் சித்தாந்திகள் கூறுவர் 


சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் முழுமுதற் கடவுளாகிய இறைவன் சிவன் என்றும், பரமசிவன் என்றும், மகாருத்திரன் என்றும் குறிக்கப் படுகின்ற பரம்பொருள் ஆவார். இப்பெருமான் குணதத்துவங்கள் கடந்த உலகங்களுக்கு அப்பாற்பட்ட மூன்று தலைகளையும் ஒடுக்கி,அதன் பின்னர் அவற்றை மீளவும் தோற்றுவிக்கும் ஒப்பற்ற பரம்பொருள் ஆவார். ஆதலால் அவரை மகாசங்கார காரணன் என்றும், அல்லது சர்வ சங்கார காரணன் என்று குறிப்பதும் சித்தாந்த மரபாகும். இத்தகைய சங்கார காரணனே முதலாக அமைவது இவ்வுலகம் என்பதால் அந்தம் ஆதி என்ற சொல்லால் சங்கார தொழிலைச் செய்யும் கடவுளே உலகிற்கு முதற் கடவுள் என்று சிவஞானபோதம் குறிப்பிடுகிறது. 


அந்தம் ஆதி என்ற சொல்லுக்குரிய விளக்கமாக சிவஞானபோதத்தின் முதற் சூத்திரத்தின் மூன்றாம் அதிகரணம் அமைந்துள்ளது. மூன்றாவது அதிகரணத்தின் மேற்கோள் சங்காரனே முதல் என்பதாகும்.  இதனுடைய பொருள் சங்கார கர்த்தா ஒருவனே உலகிற்கு முதற் கடவுள் என்ற பொருளைத் தரும். சங்கார கடவுள் ஒன்றா  அல்லது பலவா என்ற ஐயத்தைப் போக்குவதற்காக எழுந்த மேற்கோளகும் இது.  மேற்கோளுக்குப் பொருளாகச் சிவஞான முனிவர் தன் சிற்றுரையில் தரும் விளக்கமாவது --

ஷஷஇரண்டாம் அதிகரணத்தில் ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி

இல்லை எனக் கூறியதனால் உலகிற்கு முதற் கடவுள் சங்கார கர்த்தா எனப் பெறப் படுகிறது.  ஆயினும் தேர் முதலாயின பலர் கூடிச் செய்யக் காண்பது போல, உலகிற்குச் சங்காரக் கடவுள் பலர் உண்டெனக் கொள்ளலாம் என்று பிறமதத்தார் கூறுவர். இதனை ஆசிரியர் எடுத்துக்கொண்டு இந்த அதிகரணத்தின் மூலம் சங்காரக் கடவுள் ஒன்றே என்று பொருள் பொதிய எழுதியுள்ளார்.||

இதற்குரிய ஏது ஷஷசுட்டு உணர்வாகிய பிரபஞ்சம் , சுட்டு உணர்வு இன்றி நின்ற சங்காரத்தின வழி அல்லது, சுதந்திரம் இன்றி நிற்றலான்|| என்பதாகும்.  இதற்குப் பொருள் ஷஷஒன்று ஒன்றாய் அறிவதாகிய உருவும் அருவும் என்று இருவேறு வகைப்பட்ட சேதனப் பிரபஞ்சம் ( அறிவு உலகம்) ஆகிய உயிர் அவ்வாறு சுட்டி அறிதல் இன்றி, எவ்வுலகும் ஒன்றாய் அறிந்து நின்ற சங்கார கருத்தாவாகிய இறைவனின் வசப்பட்டு, பரதந்திரமாய் நிற்பது அல்லது தனக்கெனச் சுதந்திரம் உடைத்தாய் நிற்காது . ஆதலால் சுதந்திரம் உடைய சங்காரகாரணனே உலகிற்கு முதற் கடவுள் என்றும் , ஏனையோர் முதற் கடவுள் அல்ல|| என்பதும் இம்மேற்கோளால் அறிகின்ற பொருளாகும். 

இந்த ஏது மேற்கோளால் தடைகளும் விடைகளும் கிடைக்கின்றன.  தடை எழுப்புகின்றவர்கள் இந்த உலகத்திற்கு முதற் காரணம் பல கடவுளர்கள் என்ற கருத்தினை உடையவர்கள் ஆவார்கள். எனவே தேர் முதலியன பலர்கூடிச் செய்யப் படுவது போல. இவ்வுலகத்தை ஒருவனே செய்வான் என்பதற்குப் பிரமாணம் ஏதும் இல்லை - வேதத்தில் சிற்சில இடங்களில் நாராயணன், பிரமன், இந்திரன், அக்கினி, சூரியன் எனப் பல கடவுளர்களையும் முதற் கடவுள் என்று கூறப்பட்டுள்ளது.  எனவே கடவுளர் பலர் என்று கூறுவதே பொருந்தும் என்பது இவர்களுடைய வாதம். 

அதுபோல மற்றொரு விதத்திலும் தடை எழுப்புவது உண்டு. உலகத்தில் இயற்கைப் பொருள்கள் பல உள்ளன. அவற்றை எல்லாம் சங்காரக் கடவுளாகிய சிவபெருமானே படைத்தான் என்று ஏற்றுக் கொண்டாலும், செயற்கைப் பொருளாகிய குடம், ஆடை, தேர் போன்றவற்றைக் குயவன், நெசவாளி, தச்சன் ஆகியோர் செய்வது போல, உலகத்தைப் படைப்போரும் பலவகையாக இருக்கலாம் என்று தடை எழுப்புவார்கள். 

இந்த மூன்றாவது அதிகரணம் இவற்றை எல்லாம் மறுத்து, சங்கார காரணனாகிய சிவபெருமான் ஒருவனே முழுமுதற் காரணன் ஆவான்  என்பதை நிலை நாட்டுகிறது. மேற்;கோளில் உலகம் தானே படைத்துக் கொள்ளச் சுதந்திரம் இல்லை என்பதைக் குறிக்கச் சுட்டு உணர்வாகிய பிரபஞ்சம் என்று குறிக்கப் பெற்றிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இறைவனுக்குத் தன்வயத்தனாதல் என்ற சுதந்திரம் உண்டு என்பதைக் குறிக்கச் சுட்டுணர்வு இன்றி நின்ற சங்காரம் என்று குறிக்கப் பெற்றிருக்கிறது. முன் கூறிய தடைகளுக்கு விடையாகக் கீழ்வரும் செய்திகளைக் குறிக்கலாம். 

தேர் போன்ற பொருளைப் பலர் ஒருங்கு சேர்ந்து செய்தாலும் அவர்கள், தலைமைத் தச்சர் ஒருவரின் ஏவல்படியே செய்வார்கள் என்பது உலக இயற்கையாகும். அவ்வாறு பணியாற்றவில்லை என்றால் தேர் அழகாக அமையாது.  அது போலத்தான் முதற் கடவுள் ஒருவன் இல்லை என்றால் உலகம் செவ்விதமாக அமையாது. வேதத்தின் சில இடங்களில் நாராயணன், பிரமன் ஆகியோர் முதற் கடவுளராகக் குறிக்கப் பெற்றாலும், அவர்கள் ஏவுதல் கர்த்தாவாகிய இறைவனுக்குக் கீழே பணியாற்றுகின்ற இயற்றுதல் கர்த்தாக்கள் ஆவார்கள்.  மேலும் சங்கார கடவுளாகிய சிவனே மூன்று தொழில்களையும் செய்பவனாக விளங்குவான் என்பது தோத்திரங்கள் கூறுகின்ற செய்தியாகும். 

ஷஷநம்மவர் அவரே மூவர் என்றே எம்பிரானோடும் எண்ணி - விண்ஆண்டு மண்மேல்- தேவர் என்றே இறுமாந்து என்னபாவம் திரிதவரே|| (திருவாசகம், திருச்சதகம் -4)

ஷஷமலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் மூவராகிய முதல்வர் ஒருவன் மேயது முதுகுன்றே||(திருஞானசம்பந்தர், 1-53-1) 

ஷஷமூவரு ருத்தனதாம் மூல முதற் கருவை||என்று சுந்தரரும் (7 - 84 -7)

ஷஷமூவர் கோனாய் நின்ற முதல்வன் ||(திருவாசகம், திருச்சதகம் - 30)

ஷஷஅரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனும் தானே|| என்று திருக்கயிலாய ஞான உலாவும் கூறுவதால், மூவராய் நின்ற சிவனே அதாவது சங்கார காரணனே உலகிற்கு முதலாவான் என்பது வலியுறுத்தப் பெறுகிறது.  

மேலும் செயற்கைப் பொருளைச் செய்கின்ற குயவரை உதாரணமாகக் கொள்ளலாகாது. ஏனென்றால் அக்குயவன் முதலானவர்களையும் தொழில் படுத்துகின்ற இறைவன் ஒருவன் உண்டு என்பதை உணரவேண்டும். ஏனென்றால் குயவன் போன்றவர்கள் முதற் காரணமாக ஆக மாட்டார்கள்.  அவர்கள் இடைக்காரண கர்த்தாக்கள் ஆவார்கள் என்று பிறரின் தடைக்குரிய விடைகள் சிவஞானபோத உரையாசிரியர்களால் கூறப் பெற்றுள்ளன. 

முதல் சூத்திரம் மூன்றாம் அதிகரணத்திற்கு ஒரு உதாரணப் பாடலே அமைந்துள்ளது. அப்பாடலின் கருத்துப்படி உயிர்களானவை பரம்பொருளாம் இறைவனால் முத்;தொழில் படுதலானும், முத்தி பெற்ற காலத்தும் அடிமையாதலாலும்  அப்பரம்பொருளாகிய சங்காரக் கடவுள் ஒன்றேயாகும் என்பதனை வலியுறுத்துகிறது. எனவே சிவஞானபோத முதற் சூத்திரத்தின் மூன்றாம் அதிகரணத்தால் அந்தம் என்ற சங்காரத்தினை நடத்துகின்;ற ஆதி என்னும் முதல்வனாகிய சிவபெருமானே காரணம் என்பது வலியுறுத்தப் பெறுகிறது. 

இதனை அடியொற்றிச் சிவஞான சித்தியார் ,

ஷஷஉரைத்தஇத் தொழில்கள் மூன்றும் மூவருக்கு உலகம் ஒத

வரைத்துஒரு வனுக்கே ஆக்கி வைத்ததுஇங்கு என்னை?  என்னின்,

விரைக்கம லத்தோன்  மாலும், எவலான் மேவி னோர்கள்

புரைத்தஅதி கார சத்தி, புண்ணியம் நண்ண லாலே|| (சுபக்கம், பா. 54)

இப்பாடல் மூலம் முத்தொழில்களும் அயன் மால் அரன் என்னும் மூவருக்கும் உரியன என்று உலகம் சொல்ல, சிவபெருமானுக்கே உரியது என வரைந்தெடுத்துச் சொல்வது என்படி என்றால், அயல், மால் இருவரும் முன்செய்த புண்ணிய விசேடத்தால் அரனது அதிகார சத்தியைப் பெற்றுத் தத்தம் தொழில் செய்வரே அன்றி, அத்தொழிலுக்கு அவர் சுதந்திரர் அல்லர்.  முத்தொழிலும் செய்யும் சுதந்திரம் சங்காரணன் ஆகிய அரனுக்கே உரியது என்று அருணந்தி சிவாசாரியார் உணர்த்துகிறார். 

இவரின் இக்கூற்றின் படியும் , அந்தமாகிய சங்காரணனே ஆதியாகிய சிவபெருமான் என்பது பெறப்படுகிறது. 

இறைவன் தான் ஆதியாகிய முதல்வன் என்பதைத் திருமுறைகள் பலவாறு உரைக்கின்றன. 

ஷஷஅடியார் தமக்கு ஆதியாகி நின்றார் அன்னி யூரரே||( 5 - 8 - 4)

ஷஷஆதியைக் கெடுமா செய்த சங்கரன் - ஆதியை பழையாறை வடதளிச் சோதியை|| ( 5 55 6)

ஷநல்லூர் அருட்துறையுள் ஆதி உனக்கு ஆளாய் எனலாமே||( 7 - 1 -5)

ஷஷபோற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே||(திருவாசகம்,திருப்பள்ளிஎழுச்சி_பா.1)

ஷஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே

மாதர் மேல் மனம் வைத்தனை|| ( பெரியபுராணம் , பா. 37)

     ஷஷஆதி மூர்த்தி கழல் வணங்கி

  அங்கண் இனிதின் அமரும் நாள்||( பெரியபுராணம் ,பா.2875) 

என்று சிவபெருமானை ஆதி முதல்வன் என்று குறிப்பிடுகின்றன. 

எனவே அந்தம் ஆதி என்ற தொடருக்குரிய பொருளில் ஆதி என்பதைத்  திருமுறைகள் முதல்வன் அல்லது தலைவன் என்ற பொருளில் குறிக்க, சாத்திரங்கள்  அந்தமாகிய தொழிலைச்; செய்கின்ற ஆதி காரணன் என்று உலகிற்கு முதல்வன் சிவபெருமானே என்று வலியுறுத்துகின்றன. 

      திருச்சிற்றம்பலம். 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக