புதன், 26 ஜனவரி, 2022

சீவகசிந்தாமணியின் உவமை நலம்.

  சீவகசிந்தாமணியின் உவமை நலம். 

மேல்நாட்டுத் தமிழறிஞர் ஜி.யு.போப்பையர் திருத்தக்கத் தேவரைத் தமிழ்க் கவிஞருள் அரசர் என்றும், சிந்தாமணியைக் கிரேக்கக் காப்பியங்களுக்கு இணையானது என்றும் புகழ்கின்றார்.   இவ்வாறு போற்றப் பெறும் சீவகசிந்தாமணி தமிழ்மொழியின் உள்ள காப்பியமே அன்றித் தமிழ்க் காப்பியம் அன்று. அதன் கதை தமிழ் மரபுக் கதையுமன்று. இக்கதை வடமொழியில் சந்திரசூடாமணி, கத்திய சிந்தாமணி, சீவந்திர நாடகம், சீவந்திர சம்பு ஆகிய நூல்களில் காணப்படுகிறது.  வடமொழி நூலான மகாபுராணத்திலும், அதன் தமிழ்மொழி பெயர்ப்பான ஸ்ரீபுராணத்திலும் உண்டு என்பர்.   இச்சிந்தாமணியின் காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி அல்லது பத்தாம் ந}ற்றாண்டின் தொடக்கம் என்று ஆய்வாளர் குறிப்பிடுவர்;. அதிலும் பேராசிரியர் கா.சு. பிளளை அவர்கள் சீவகசிந்தாமணியின் பாயிரத்தில் வரும் பொய்யாமொழி என்ற தொடர் மைசூர் கங்கமன்னர் சத்தியவாக்கியன் என்று கூறப்படுவதால் இதன் காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாகவே அமையும் என்று கருதுவார்.   இவ்வாறு ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாக விளங்கும் சீவகசிந்தாமணிக் காப்பியம் காப்பிய வளர்ச்சியில் பல மாற்றங்களைத் தந்ததாகும.  சங்க இலக்கியங்கள் ஆசிரியப்பாவில் அமைந்திருக்க, சீவகசிந்தாமணி விருத்தப் பாவில் அமைந்தது. ஒரே வகையான விருத்தப் பாக்கள் இல்லாமல் காப்பியத்தின் கருத்திற்கேற்ப வௌ;வேறு சந்தங்களை அமைத்துக் கொண்ட பல விருத்தப் பாக்களைப் பெற்றதாகும். இதனை ஒட்டியே பிற்காலப் புலவர்கள் விருத்தப்பாக்களைக் கொண்டு தங்கள் நூல்களைப் படைத்தார்கள்.  சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்கள் நேரிடையாகக் கதைத் தொடர்பைத் தொடங்க, சீவகசிந்தாமணி நாட்டுப்படலம், நகரப் படலம் என்ற பகுதியை அமைத்து ஒரு புரட்சியைச் செய்தது. 

முதலில் தாம் வழிபடும் தெய்வத்தை வாழ்த்தி, பின் அவையடக்கம் கூறிக் காப்பியம் தொடங்குகிறது.  இந்த அமைப்பு சிலப்பதிகாரத்திலோ, மணிமேகலையிலோ காணப் பெறவில்லை. சீவக சிந்தாமணி தொடங்கிய இப்புதியமுறையைப் பின்னால் வந்த காப்பியங்களும், புராணங்களும் பின்பற்றத் தொடங்கின. இத்தகைய சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் நாட்டுப்படலத்தில் அமைந்த உவமைகளில் ஒரு சிலவற்றை எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 

உவமையின் சிறப்பு

உவமை தோன்றுவதற்குரிய நிலைக்களன்களாக ஒரு பொருளின் சிறப்பு, அதன் நலன், அதன்மேல் கொண்டுள்ள பேரன்பு, அதன் வலிமை என்ற நான்கினைத் தொல்காப்பியர் குறிப்பிடுவார். 

ஷஷசிறப்பே நலனே காதல் வலியொடு 

அந்நால் பண்பும் நிலைக்களம் என்ப|| 

என்பது உவமையின் நிலைக்களத்தைக் குறிப்பிடவந்த சூத்திரமாகும். ஷஷஏதேனும் ஒப்புமைக் கூறு பற்றி வேறுபட்ட இரு பொருட்களை ஒன்றனைப் போன்றது பிறிது ஒன்று எனக் கூறுவது உவமையாகும்.  இந்த உவமை இக்காலத்தில் உத்தி நிலையில் ஒன்றாகக் கொள்ளப் படுகிறது.||  இத்தகைய உவமையின் ஆட்சியைச் சீவகசிந்தாமணியில் பரக்கக் காணலாம். சீவகசிந்தாமணி 13 இலம்பகங்களைக் கொண்டது. அதில் முதல் இலம்பகமான நாமகள் இலம்பகம் இறைவாழ்த்து, அவையடக்கம், பதிகம் ஆகியவற்றோடு நாட்டுவளம் என்ற பகுதியைக் கொண்டதாகும்.  இந்த நாட்டுவளம் மொத்தம் 49 பாடல்களைக் கொண்டது.   இப்பகுதியில் காணப்படுகின்ற உவமைகள் படித்துப் படித்துச் சுவைக்கத் தக்கனவாகும்.  அவற்றில் ஒரு சிலவற்றைக் காண்போம். 

இறை உவமை

சீவகசிந்தாமணி ஒரு சமயக் காப்பியம் என்பதில் ஐயமில்லை.  சமண மதத்தைச் சார்ந்த சீவகன் வரலாற்றைக் கூறும் இக்காப்பியத்தில் சமண சமயத்தின் கருத்துக்கள் மட்டும் அமையாது பிற சமயங்களின் புராணச் செய்திகள், கடவுளரின் சிறப்புக்கள் ஆகியவையும் அமைந்து காப்பியப் புலவராம் திருத்தக்கத் தேவரின் சமயப்பொறை வெளிப் படுகிறது. நாட்டுவளத்தைக் கூறும் தொடக்கத்திலேயே சமணத் தெய்வத்தையும், சைவத் தெய்வத்தையும் உவமையாக ஒரே பாடலில் அமைத்துச் சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத் தேவர் தம் பொதுஉணர்வை வெளிப்படுத்தி விடுகிறார். ஏமாங்கதநாடு என்னும் காப்பியத் தலைவனின் நாட்டில் மழையின் வளத்தைக் கூறவந்த ஆசிரியர் பின்வருமாறு செய்தியை அமைக்கிறார். 

விளங்குகின்ற ஆணைச்சக்கரத்தை உடைய பரதேஸ்வரர் என்னும் சக்கரவர்த்தியின் யானைக் கூட்டம் போன்ற மேகங்கள் , அலைகளை உடைய கடல்நீரைப் பருகின. கரு முற்றும் அளவும் மலையைச் சார்ந்திருந்தன.  பிறகு வானிலே பரவி பொன்னின் நிறத்தைக் கொண்ட கொன்றை மலர் அணிந்த சிவபெருமானின் சடையைப் போல் மின்னி வாய்விட்டு முழங்கின என்று உவமை அமைந்துள்ளது.  

இலங்க லாழியி னான்களிற்று ஈட்டம்போல்

கலங்கு தெண்திரை மேய்ந்து கணமழை

பொலம்கொள் கொன்றையினால் சடைபோல் மின்னி

விலங்கல் சேர்ந்துவிண் ஏறிவிட்டு ஆர்த்தவே|| 

என்பது உவமை அமைந்த பாடலாகும்.  இப்பாடலில் இலங்கலாழியினான் என்ற சொல் சூரிய குலத்தில் பிறந்த நாபி மகாராஜாவின் பௌத்திரரும், ஆதி தீர்த்தங்கரரான விருஷபஸ்வாமியின் புத்திரருமான பரதேஸ்வர சக்கரவர்த்தியைக் குறிக்கும் என்றும், இவர் பரதராச சக்கரவர்த்தி என்றும் , இவர் நாற்பத்தெட்டு லட்சம் யானைகைள உடையவர் என்றும், இவர் பனிரெண்டு மகா சக்கரவர்த்திகளில் முதல்வர் என்றும் மகாபுராணம் குறிப்பிடும்.    இக்குறிப்பின்படி மழை மேகம் சமணர்களின் தெய்வமான தீர்த்தங்கரரின் யானைக் கூட்டம் போல் பரந்திருந்தது என்ற உவமையையும், அது  சைவக் கடவுளாகிய சிவபெருமானின் சடையைப் போல் மின்னியது என்றும் உவமைகளையும் பெற்று இப்பாடல் விளங்குகிறது. இதன் மூலம் திருத்தக்கத் தேவரின் சமயப்பொறை விளங்குவதோடு தொடங்குகின்ற முதல் உவமையே கடவுளரைப் பற்றிய உவமையாக அமைந்து சிறப்பினைத் தருகிறது. 

சீவகசிந்தாமணி ஆசிரியரின் இந்த உணர்வைப் பின்வந்த காப்பியமான கம்ப இராமாயணத்திலும் காணமுடிகிறது. 

நீறுஅணிந்த கடவுள் நிறத்த வான்

ஆறுஅணிந்து சென்று ஆர்கலி மேய்ந்துஅகில்

சேறுஅணிந்த முலைத் திருமங்தைதன்

வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே||  

என்ற பாடலைச் சீவகசிந்தாமணிப் பாடலோடு ஒப்பிடும் போது உவமையின் இன்பம் உணரப்படும். 

கல்வி உவமை

மழை பொழிந்து நீர்வளம் மிக்கு வயல்களில் நிறைந்து உழவுத் தொழில் சிறப்பாக நடைபெற்றது. அதன் பயனாகிய நெற்கதிரின் தோற்றத்தைச் சீவகசிந்தாமணி ஆசிரியர் ஒரு பாடலில் விளக்குகிறார்.  அப்பாடலில் இயற்கைநலம் கொஞ்சி விளையாடுவதை அறிய முடிகிறது. 

சொல்அருஞ்சூல் பசும்பாம்பின் தோற்றம் போல்

மெல்லவே கருஇருந்து ஈன்று மேல்அலார்

செல்வமே போல் தலைநிறுவித் தேர்ந்தநூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே|| 

இப்பாடலின் பொருள் - நெற்பயிர்கள் சூல்கொண்ட பச்சைப்பாம்பின் தோற்றம் போலக் கருவினைப் பெற்றுச் செல்வம் பெற்ற கீழ்மக்களைப் போலக் கதிர்விட்டுத் தலைநிமிர்ந்து நின்று, முற்றினவுடன் தெளிந்த நூலைக் கற்ற நல்லவர்களைப் போலத் தலை வணங்கி விளைந்தன என்பதாகும்.  இதில் பச்சைப்பாம்பு, செல்வத்தார், கற்றவர் ஆகிய மூன்று பொருள்கள் உவமையாக அமைந்துள்ளன. கல்லாதவரும் தாழ்ந்த குடியில் பிறந்தவரும் செல்வம் பெற்றால் எப்படி இருக்குமோ அதுபோல நெற்கதிர் பயிரை ஈன்றது என்றும், கற்ற்வர்கள் எவ்வாறு பணிந்து இருப்பார்களோ அதுபோலக் கதிர்முற்றி தாழ்ந்தது என்றும் உவமை இடம் பெற்றிருப்பதால் கல்வி உவமை இங்கு சிறப்பாக அமைந்துள்ளது எனலாம்.  சூல்கொண்ட பாம்பு இங்கு உவமையாய் இருப்பது போலக் குறுந்தொகையிலும் இவ்வுவமை கையாளப் பெற்றிருக்கிறது. 

சினைப் பசும்பாம்பின் சூல்முதிரப்பு அன்ன

கனைத்த கரும்பின் பூம்பபொதி அவிழ|| 

என்ற சங்கஇலக்கியப் பகுதி இவ்வுவமையோடு ஒப்பிட்டுக் காணத் தக்கதாகும். 

நாடக உவமை

ஏமாங்கத நாட்டு வளத்தைக் கூறவந்த ஆசிரியர் ஒரு நாடகக் காட்சியை உவமையாக்கி மகிழ்விக்கின்றார்.  அன்னச் சேவல்கள் சோலையில் கூடு கட்டிக் கொள்வதற்காக இதழ் விரிந்த அழகு மிக்க தாமரைப் பூக்களைக் கவ்வின. அவ் அன்னச் சேவல்கள் நீர்த்தடாகத்தில் விளக்குப் போலக் காட்சி அளித்தன.  நீர்த்தடாகம் நாடக மேடைபோல் காட்சி அளித்தது. அங்கு ஒலித்துக் கொண்டிருந்த குயிலோசை முழவு போல் ஒலித்தது.  பீலியை உடைய மயில் ஆடல் மகளிர்போல் தோன்றி மறைந்தது என்று காட்சியை அமைத்துள்ளார் திருத்தக்கத்தேவர். 

சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்விப்பூக்

காவில் கூடு எடுக்கிய கவ்விக் கொண்டிருந்தன

தாஇல் பொன்விளக்கமாம் தண்குயில் முழவமாத்

தூவி மஞ்சை நன்மணம் புகுத்தும் தும்பிக் கொம்பரோ|| 

என்பது பாடலாகும்.  இப்பாடலோடு சூளாமணியில் வருகின்ற பாடல் ஒப்பிடத் தக்கதாகும். 

தும்பிவாய் துளைக்கப்பட்ட கீசகம் வாயுத்தன்னால்

வம்ப வான் குழலி னேங்க மணியறை அரங்கமாக

உம்பர்வான் மேகசால மொலி முழாக் கருவியாக

நம்பதேன் பாட மஞ்சை நாடக நவில்வ காணாய்|| 

என்பது பாடலாகும். 

கழைக் கூத்து உவமை

நாள்தோறும் நிகழும் நிகழ்ச்சிகளை உவமையாக்கிப் பாடுகின்ற மரபு கவிஞர்களிடையே உண்டு.  அதற்கு எடுத்துக்காட்டாகச் சீவகசிந்தாமணியின் கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது. 

கூடினார்கள் அம்மலர்க் குவளைஅம் குழியிடை

வாடு வள்ளை மேலெலாம் வாளை ஏறப் பாய்வன

பாடுசால் கயிற்றில் பாய்ந்து பல்கலன் ஒலிப்பப் போந்து

ஆடுகூத்தி ஆடல் போன்ற நாரை காண்பது ஒத்தவே|| 

என்பது பாடல். இப்பாடலின் பொருள் - காதலரோடு கலந்த பெண்களின் கண்கள்போல, மலர்ந்த குவளைகள் நிறைந்த நீரோடையில் நீர் குறைதலால் சிறிதே வாடிய வள்ளைக் கொடிமேல் வாளை மீன்கள் ஏறிப் பாய்ந்தன.  அவ்வாறு பாய்வது எதுபோல இருந்தது என்றால் கழைக்கூத்தாடி ஒருத்தி கழையினின்றும் இறங்கி அருகில் உள்ள கயிற்றிலே குதித்து ஆடுவதைப் போல் இருந்தது . கரையில் இருந்த நாரைகளின் கூட்டம் அந்தக் கூத்தினைக் காணுகின்ற மக்களை ஒத்திருந்தன என்பதாகும்.  இங்கு வாளை மீன்கள் வள்ளைக் கொடியில் பாய்வது கழைக்கூத்தாடும் பெண் மூங்கில் கம்பிலிருந்து மூங்கில் கட்டப் பெற்ற கயிற்றில் குதித்தது போல் இருந்தது என்ற உவமை அன்றாட நிகழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. இப்பாடலில் உவமையாக வேண்டிய குவளைப்பூ உவமேயமாகவும், பொருளாக வேண்டிய கண்கள் உவமையாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.  அதாவது கணவரோடு கூடி இன்பம் துய்த்த பெண்களின் கண்கள் எவ்வாறு மலர்ந்து காட்சி அளிக்கின்றதோ அதுபோலக் குவளை மலரந்தது என்ற செய்தி பாடலில் அமைந்துள்ளது. இப்பகுதியோடு கீழ்;வரும் பெருங்கதைப் பாடற்பகுதியை ஒப்பிடலாம். அதாவது தம் கணவரோடு கூடிய மகளிரின் கண்கள் மலருக்கு உவமையாக்கப் பெற்றிருப்பதை அப்பாடற் பகுதியிலும் காணமுடிகிறது. 

புணர்ச்சி மகளிர் போகத்துக் கழுமித்

துயில்கண் திறந்த தோற்றம் போல|| 

என்பது அப்பகுதியாகும்.  

முடிவு

இவ்வாறு ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியின் முதற் பகுதியான நாமகள் இலம்பகத்தில் நாட்டுவளப் பகுதியில் பல்வேறுபட்ட உவமைகள் இடம்பெற்று இலக்கிய நயத்தைத்; தருகின்றன. சமயத் தெய்வங்களையும், கல்வி வல்லுநர்களையும், நாடக மேடையையும், கழைக்கூத்தாடியையும், மகளிரின் கண்களையும் உவமைகளாக்கிப் பயில்வோரின் உள்ளத்தில் உவகையை ஏற்படுத்தும் ஆசிரியரின் திறன் போற்றுதற்கு உரித்தாகும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக