சிந்தாந்தச் சிந்தனைகள்

   பசு

                          சித்தாந்தச் செம்மணி முனைவர்.பழ. முத்தப்பன்,

                                                திருச்சிராப்பள்ளி.

 

      சைவ சித்தாந்த முப்பொருள்களில் ஒன்று பசு. முப்பொருள்களும் நிலைத்த பொருள்கள். என்றும் அழிவற்றவை. முப்பொருள்களில் ஒன்றான பசு உயிர் என்றும் அழைக்கப பெறும். உயிரின் குணம் சார்ந்ததன் வண்ணமாகும்.  இந்த உயிர் உண்டு என்பதை ஆராய்ந்து கூறுவது சைவ சித்தாந்தத்தின் முதன்மை நிலையாகும்.  உயிர் உண்டு என்ற சித்தாந்தக் கொள்கைக்கு அடிப்படையாகச் சங்க இலக்கியச் செய்திகள் விளங்குகின்றன.

 

      சைவ சமயத்தின் மூலக்கூறுகளை வெளிப்படுத்தும் சங்க இலக்கியங்களில் உயிர் உண்டு என்பதற்கும், அவ் உயிர் உடம்போடு இணைந்திருக்கிறது என்பதற்கும்  பல சான்றுகள் கிடைக்கின்றன. ஆதனுங்கன் என்ற குறுநில மன்னனைக் கள்ளில் ஆத்ரேயனார் பாடிய புறநானூற்றுப் பாடல் இதற்குச் சான்றாகும்.  அதனுடைய பகுதி,

                 

                  ‘‘நெஞ்சந் திறப்போர் இக் காண்குவரே

                    நின்யான் மறப்பின் மறக்குங் காலை

                    என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்

                    என்னின் யான் மறப்பின் மறக்குவன் ’’ (பா. 165)

 

என்பதாகும்.இப்பகுதியில் உயிர் உண்டு என்பதும், உயிர் உடம்பைச் சார்ந்திருக்கிறது என்பதும் தெளிவாகக் கூறப்பெற்றுள்ளது. அதுபோல உயிர் நிலையானது என்பதற்கும் சங்க இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன. மன்னுதல் என்ற சொல்லால் அடைமொழி கொடுத்து உயிர் குறிக்கப் பெற்றிருக்கிறது. 

 

                  ‘‘மன்னுயிர் அறியா துன்னரும் பொதியில்’’(குறுந்- 376)

                  ‘‘மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்ககு எஞ்சாது’’(பதிற் 1 15)

                  ‘‘மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும்

                   முரசு முழங்கு தானை மூவருள்ளும் ’’( பெரும்பாண் -32-33)

 

இவ்வாறு சங்க இலக்கியங்கள் உயிர் என்ற பொருள் உண்டு, அது உடம்பைச் சார்ந்து நிலை பெற்று விளங்குகின்ற பொருளாகும் என்று சாத்திர நூல்கள் உருவாவதற்கு முன்னே அடிப்படைக் கூறுகளாகச் சுட்டிக் காட்டுகின்றன.

 

      சங்க இலக்கியங்களில் இடம் பெறுகின்ற அளவிற்குச் சைவ தத்துவங்கள் பெருமை பெற்றிருந்தன என எண்ணும் பொழுது - வழக்கில் பல ஆண்டுகளுக்கு முன்னே மக்களிடையே வழங்கப் பெற்றிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.  எனவே வரையறுக்க இயலாத காலந் தொட்டு முப்பொருளில் ஒன்றான பசு பற்றிய சிந்தனைகள்  வளர்ந்து வந்திருக்கின்றன எனத் தெரிகிறது. .  அவற்றை எல்லாம் தொகுத்து நமக்குத் திருமுறைகளும் சாத்திரங்களும் தந்திருக்கின்றன.  அதன்வழி பசுவின் இலக்கணத்தில் தரப்பெற்றுள்ள காரண அவத்தை பற்றி விரிவான செய்தியை இக்கட்டுரையில் காண்போம்.

பொதுநிலை  - உயிர் உண்டு என்பதைச் சைவ சமய நூல்களும், சாத்திர நூல்களும் வலியுறுத்திய பின்னர்  உயிரின் இலக்கணத்தை வரையறுக்கின்றன.  இலக்கணத்தை வரையறுக்கும் பொழுது, சொரூப இலக்கணம் என்றும் தடத்த இலக்கணம் என்றும் இரண்டு வகையாக வரையறுக்கின்றன. உயிர் அறிவுடைப் பொருள் என்றாலும், தானாக அறிய மாட்டாது. வேறொன்றின் துணையாலே அறியும்.  அறியும் பொழுது ஒவ்வொன்றாய்ப் படி முறையால் அறிதல், அறிந்தே நில்லாமல் இடைவிட்டு இடைவிட்டு அறிதல், அறியப் படும் பொருளில் அழுந்தி அதுவேயாதல் இவையெல்லாம் உயிருக்கு உள்ள தன்னியல்பாகிய சொரூப இலக்கணமாகும்.

 

      உயிரின் இலக்கணங்கள் பற்றிச் சாத்திர நூல்கள் ஒவ்வொன்றும் தெளிவாக உணர்த்துகின்றன.  சிவஞான போதத்தில் மூன்றாம் சூத்திரத்தில் ‘‘தனுவினுள் ஆன்மா’’ என்று குறிப்பிட்டுப் பின்னர் நான்காம் சூத்திரத்தில் அதன் இலக்கணத்தை மெய்கண்டார் குறிப்பிடுவார். சிவப்பிரகாசத்தில் உயிரின் இலக்கணம் பற்றி ஒரே பாடலில் உமாபதிசிவம் குறிப்பிடுவதை இங்கு எடுத்துக் காட்டாகத் தரலாம்.

 

                  ‘‘எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தில் அழுந்தி

                           இருவினையின் தன்மைகளுக்கு ஈடான யாக்கை

                    அண்ணலரு லால்நண்ணி அவையவராய் அதனால்

                           அலகில்நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால்

                     புண்ணியபாவம் புரிந்து போக்குவரவு உடைத்தாய்ப்

                            புணரும்இருள் மலபாகம் பொருந்திய்ககால் அருளால்

                     உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்

                            உற்றிடும்நல் பசுவருக்கம் எனஉரைப்போர் உணர்ந்தோர்’’(பா.19)

 

            இந்த ஒரே பாடலில் சைவ சித்தாந்தத்தில் கூறப்படுகின்ற  உயிர் இயல்பு முற்றிலுமாக அறிவிக்கப் பெற்றுள்ளது.  உயிர்கள் காரண அவத்தைகளாம் மூன்றினைக் கொண்டது என்பதை நுட்பமாக இப்பாடலில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ‘‘ எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தில் அழுந்தி’’ என்பதால் கேவலநிலை உணர்த்தப் பெற்றுள்ளது. இருவினையின் தன்மைகளுக்கு ஈடான யாக்கை அண்ணல் அருளால் ந்ணிண அவையவராய் அதனால் என்பது முதல் மலபாகம் பொருந்தியக்கால் வரை அமைந்துள்ள தொடரால்  சகலநிலை உணர்த்தப் பெறுகிறது.  அடுத்து ‘‘உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம் உற்றிடும்’’ என்ற தொடரால் சுத்த நிலை உணர்த்தப் பெறுகிறது.  மேலும் அலகில்நிகழ் போகங்கள் என்ற தொடரால் உயிர்களுக்கு விளைகின்ற இன்ப துன்பங்கள் காலம், நியதி என்ற வரம்புகளுக்கு உட்பட்டே திகழும் என்பதைத் தருகிறது. எண்ணரிதாய் என்பது உயிர்கள் எண்ணிலடங்காதவை என்பதையும், அவை நித்தமானவை என்பதையும்,ஆணவ மலத்தில் மறைக்கப் பட்டிருப்பது என்பதையும் இப்பாடல் குறிப்பிடுகிறது. உயிர்களுக்கு உரிய உடல் அவரவர் புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப இறைவன் அருளால் தரப்பெறுகிறது என்பதும் சுட்டப் பெற்றிருக்கிறது. அவையவராய் என்ற தொடர் மூலம் அவன், அவள்.அதுவாகிய  அந்த உடம்பு உயிருடன் பிரிவற்று நிற்கிறது  என்பதும் குறிக்கப் பெறுகிறது. உடம்பு நிலையில் போக்குவரவு புரிகிறது என்பதும் இப்பாடல் மூலம் அறிவிக்கப் பெறுகிறது. இவ்வாறு உயிரினுடைய தன்மையைச் சிவப்பிரகாசத்தின் ஒருபாடல் குறிப்பிட்டு உணர வைக்கிறது எனலாம்.

 

      உயிரின் தன்மையைச் சுருக்கமாகவும் அதே நிலையில் முழுமையாகவும் தருகின்ற இச் சிவப்பிரகசப் பாடலில் காரண அவத்தைகளான கேவலம், சகலம், சுத்தம் முழுமையாகத் தரப் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.  மெய்கண்டாரின் நான்காம் சூத்திரமும் சிவப்பிரகாசத்தின் அறுபதாம் பாடலும் காரண அவத்தை செயல்படுகின்ற நனவு முதலாகிய காரிய அவத்தைகளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லுகின்றன.  எனவே உயிரின் நிலைகளைக் காரண அவத்தை என்றும, காரிய அவத்தை என்றும் சைவ சித்தாந்தம் இரண்டு வகையாகக் குறிப்பிடும்.  கட்டுரையின் உட்பிரிவுப் பொருள் காரண அவத்தைகள் என்பது பற்றி என்பதால்  அவைகள் கட்டுரையின் முதன்மைப் பொருளாகின்றன. .

 

       முப்பொருளில் ஒன்றாகிய பாசம் இறைவனைப் பற்ற மாட்டாது. ஆனால் பசுவினால் பற்றப் படுவதாகும்.  அதனால் பாசம் காரணமாகப் பசுவினிடத்தில் காணப் படும் யாவும் பொது இயல்பாகிய தடத்த இலக்கணமாகும்.  அவை அவத்தை என வைத்து விளக்கப் படும் என்பர் சித்தாந்தப் பெருமக்கள். ( சி. அருணைவடிவேலு முதலியார்- முப்பொருள் இயல்பு, சமாச வெளியீடு, ப. 55) அவததை என்பது நிலை என்ற பொருளை உடையதாகும்.  .எனவே  காரண அவத்தை பற்றிக் கிடைத்திருக்கும் சித்தாந்த நூல்கள் கூறுவனவற்றைத் தொகுத்து அவற்றின் மூலமாக அந்தக் காரண அவத்தை பற்றி அறிந்து கொள்ளும் செய்தியை உணர்வது கடமையாகிறது.

 

திருமந்திரம் - தோத்திர நூலாகவும் சாத்திர நூலாகவும் அமைந்த திருமந்திரம் மூன்று அவத்தைகளைப் பற்றிய செய்திகளைச் சூத்திரமாகத் தொடங்கி வைக்கிறது.  பின்னர் ஞானாமிர்தமும், சித்தாந்த சாத்திரங்களும் மூன்று அவத்தைகளைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன. அதில் திருமந்திரம்,

 

                  ‘‘தன்னை யறிசுத்தன் தற்கேவ லன்தானும்

                   பின்ன முறநின்ற பேத சகலனும்

                          மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்

                   துன்னவர் தந்தந் தொழில்கள வாகவே’’

 

(பழநியப்பா பிரதர்ஸ், 2227) என்று குறிப்பிடுகிறது. இப்பாடலின் பொருள் - தன் உண்மையை அறிந்த சுத்தரும, தான் ஒன்றையும் அறியாது கிடக்கும் கேவலனும் , இவர்களுக்கு வேறான பலவகைப் பட்ட பரிபாகம் உள்ள சகலனும், முறையே சத்தையும், அசத்தையும்,  உடனாகத் தத்தம் அறியும் திறனுக்கு ஏற்பப் பொருந்தி நிற்பர் என்பதாகும். எனவே தொடக்கத்தில் தன்னை அறிதல் சுத்த அவத்தை என்றும், ஒன்றையும் அறியாது இருத்தல் கேவல அவத்தை என்றும், போகங்களைப் பல பிறவிகளில் அனுபவித்துப் பக்குவப் படுகின்ற சகல அவத்தையும்  ஆக மூன்று  அவத்தைகள் உயிருக்குரிய அவத்தைகளாகப் பெறப்படுகின்றன..

 

ஞானாமிர்தம் - சிவஞான போதத்திற்கு முந்திய நூலாகக் கருதப் படும் வாகீச முனிவர் அருளிய ஞானாமிர்தம் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். கிடைத்திருக்கும் அந் நூலின் எழுபது பாடல்களில் எட்டாவது பாடல் மூன்று அவத்தைகளைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அப்பாடலின் பொருளைக் கீழ்க்கண்டவாறு உணரலாம்.

     

       ஞானம் என்னும் பெரும் பெயரை உடைத்தாகிய குற்றமற்ற ஞான மார்க்கத்தின் முறைமையை அறியக் கூறினால்  அது பசு, பதி, பாசம் என மூன்றையும் ஆராயும் முறைமை உடைத்தாகும்.  ஞான அறிவுடையவர்கள் அம்மூன்றில் ஒன்றான பசு என்று சொல்லப் பட்ட ஆன்மா மூன்று அவத்தைகளை உடையவை ஆதலால் அவை மூன்று வகைப்படும் என்பர். அவைகளைக் குறிப்பிட்டுச் சொன்னால் கேவலம், சகலம், இனிய இயல்புடைய சுத்தம் என்பதாகும்.

 

      இவற்றில் கேவல அவத்தை உடையதாக நிற்கும் உயிரின் நிலையை எடுத்துச் சொன்னால் ஆன்மா நித்தியம் ஆவான். உடம்புடன் கூடியிருக்கின்ற புத்தி, குணம், எட்டும் இல்லாதவன் ஆவான். சர்வ வியாபியாக இருப்பவன்.  ஆணவ மலம் மிக்கு இருப்பதால் தன்னுடைய சொரூபத்தை அறியாதவன். தனக்கென எத்தகைய செயலும் இல்லாதவன். அறிவில்லாதவன். உடல் சம்பந்தம் இல்லாமையால்  அரூபியாக இருப்பவன்.  அசேதனம் போன்று இச்சை இல்லாது இருப்பவன். பிரகாசம் அல்லாதவன். ஒன்றுக்கும் தலைமை உடையவன் அல்லன் என்று அப்பாடலின் முதற் பகுதி குறிப்பிடுகின்றது. அப்பாடற் பகுதி,

                  ‘‘பிறழா நிலைமைப் பெரும்பெயர் ஞானக்

                   கறையறு பாதம் முறையுறக் கழறில்

                   பசுபா சத்தோடு பதியாய் பெற்றி

                   மதியோர் பசுமூ வகையென மதிப்பர்

                   பன்னில் கேவலன் சகலன் இன்னியல்

                   சுத்தன் கேவலன் சொற்றிடின் நித்தன்

                   மெய்த்தகு குணமிலி வியாபி மொய்த்து

                   மலம்நனி புணர மறைவோன் இலன்எனைச்

                   செய்தியும் அறியோன் மையில் அமூர்த்தன்

                   வலியிலன் அசேதனன் ஒளியிலி  இறையலன்’’

                       

 

என்பது மேற்குறித்த பொருளைத் தருகின்ற பகுதியாகும். 

 

      அடுத்துச் சகல அவத்தை பற்றிக் கூறப்படும் பகுதியின் பொருளாவது - இனி சகல அவத்தை முறைமை கூறின் - புருடன் ( உயிர்) மாயையின் காரியமான தேகத்தை உடையவனாய் அளவிறந்த போகத்தைத் துய்க்க நினைந்த சகலனை சகலாவத்தை எவ்வாறு எய்தியது என்றால் - கூற்றுவனை அழித்த பரமசிவனது சத்தியினால் பெரிய கலா தத்துவமானது சிறிது ஞானம் உண்டாகும்படி ஆணவத்தை நீக்க - மகத்தான சித்துநிலை விரிந்து பெறுதற்கரிய வித்தியா தத்துவம் வந்து அடையும். அவவாறு வந்து அடைதலால் தடுத்தற்கு இயலாத சத்தாதி விஷயங்கள் ஐந்தனையும் விரவும்.  காணும் பக்கம் எல்லாம் சென்று அராக தத்துவம் கூடுதலால் தடையில்லாத ஆசை எவ்விடத்தும்  நிமிரும். பிரகிருதியில் இருந்து பிறந்த ஒழுக்கம் இல்லாத குண தத்துவத்தோடு புத்தி தத்துவம் முதல் பிருதிவி வரை உள்ள தத்துவ வர்க்கங்கள் இனிதாகக் கூடுதலால் உயிர் பந்திப்புடைய பசுவாகிறது . அதாவது மலக் கட்டுடையவன் ஆவான்.             அடுத்து பரமசிவன் நினைத்த நியதித் தத்துவம்  கூறின் முற் பிறவிகளில் செய்து பக்குவப் பட்ட புண்ணிய பாவங்களால் வரும் போகங்களைத் தவறாது இறைவன் நியமித்துக் கொடுக்க, பின்பு முடிவில்லாத கால தத்துவம் கால எல்லைகளை முறைப்படி பகிர்ந்து கொடுக்க, கன்மத்தோடு போகங்களின் ஆசையில் அலைப்புண்டு நீங்காத தத்துவக் கலையில் பந்தத்தைப் பதித்து ஒரு வழி சிறிது காரண அறிவு கூடி , மாயையினுடைய காரியமாய் வந்த பெரிய போகத்தைத் தான் என எண்ணி அளவில்லாத பூர்வ கன்மங்களைப் புசித்து உயிர் ஆசைப் பட்டு வாழ்வான் என்பது பாட்டின் இடைப்பகுதியாகும். அப்பாடற் பகுதி,

                       

             ‘‘மாய வுதரம் மரீஇத் தேயாப்

              போக நினைந்த சகலற்கு எய்திய

              முரண்மிகு  கூற்றை முரித்த அரனது

              இருங்கலை யமர விரிந்திருஞ சேதனம்

              அடையா விச்சை யடையத் தடையில்

              விடயப் பகுதி விரவிப் புடையே

              பொங்கி அராகம் புணரத் தங்கா

              ஆசை எங்கணும் ஆசர நிமிர

              எற்பிர தானம் ஒற்கமில் குணத்தொடு

              புத்தி முதலிய தொத்தினி துறழப்

              பிணித்தலிற் பிணிப்பினன் பசுமற் றிணைத்த

              நியதி முன்னர் இயலிரு வினையின்

              பிறழா துறழப் பின்னர்க் குறையாக்

              காலங் காலத் தளவைப் பாலிற்

              காட்டத் தொழிலொடு போகத்து ஆட்டுண்டு

              இரியாத் தத்துவ கலையினில் இவ்வணம்

              பரியாப் பந்தம் பந்தித்து ஒருவழி

              அறிவு சிறிதமர்ந்து ஆக மாய

              பிரியா மோகினிப் பெரும் போகத்தைத்

              தான்என எண்ணி யானா முன்வினைப்

              பயன்பல மாந்தி வியந்துறை காலை’’ 

 

என்று சகல அவத்தை பற்றிய பகுதி அமைந்துள்ளது.

 

      அடுத்து சுத்த அவத்தை பற்றிக் கூறும் இறுதிப் பகுதியின் பொருளாவது -  எண்ணிறந்த காலத்தில் மலபரிபாகம் பட்டு இருவினை ஒப்பு நிகழ்ந்தபோது உயர்ந்த பெரும் பரமசிவனது சத்திநிபாதம் உண்டாகும்.  அவ்வாறு உண்டானதால் திருமேனி சட்டை தாங்கி எழுந்தருளிய ஞானாசிரியன் என்னும் மேலான பரமசிவனின் அருளுக்குப் பாத்திரமாய் ஞானாவதியான தீக்கை என்னும் அழகிய ஒளி பிரகாசமாகும். அக்காலத்தில் இன்னவாறு இருப்பன் என்று சொல்லுதற்கு அரியானாய் அழிவின்றிச் சேதன, அசேதனப் பிரபஞ்சம் முழுவதும் தானேயாகி, முப்பத்தாறு தத்துவங்களை உயிர் புதைக்கவும் இடமின்றி வியாபித்து , எல்லாவற்றையும் அறிகின்ற சர்வஞானன் ஆன பரமசிவனது பெருமையை உடைய நின்மல சிவானந்தப் பரம யோகத்தில் இணைந்திடுவான். மீண்டும் ஆணவ மலத்தில் கூடான் என்று குறிப்பிடுகிறது. இப்பகுதிக்குரிய பாடற்பகுதி ,

                 

                  ‘‘வல்வினை யெல்லை செல்லாக் காலத்து

                   ஒல்லென யொப்ப வுயர்பெருஞ் சிவனது

                   சத்திநி பாதந் தழைப்ப மெய்த்தகு

                   கருபரம் பரனது அருளின் செவ்வி

                   வம்பறு சம்பிர தாயத் தஞ்சுடர்

                   உற்ற காலைச் சொற்றொடர் பற்றுத்

                   தேயாது யாவு மாய்அறி வகன்ற

                   ஆயாச் சிவனது அணிகிளர் சீர்த்தி

                   நின்மலத் தியையும் பின்மலத் தியையான்

                   அந்தமில் பந்தமற்று இவணம்

                   சிந்துதல் சிந்தல் தெரியுங் காலே’’

 

 

அமைந்துள்ளது.  இவ்வாறு ஞானாமிர்தம் மூவகை அவத்தைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. ஞனாமிர்தத்தினால் உயிரின் தன்நிலை, கலப்புநிலை, தூயநிலை என்று சொல்லப் பெறுகினற மூன்று அவத்தைகளையும் விரிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

 

சிவஞான போதம் -  மெய்கண்டார் நான்காம் சூத்திரத்தில் ஐந்து அவத்தைகளாகிய காரிய அவத்தைகளைக் கூறுவது போல, மூன்று அவத்தைகளாகிய காரண  அவத்தைகளை நேரிடையாகக் குறிப்பிடவில்லை. ஐந்து அவத்தைகளுக்கு விளக்கம் தருகின்ற சிவஞான முனிவர் தனது பேருரையில் மூன்றாவது அதிகரணத்தில் - ‘‘இவ்விரண்டு வெண்பாக்களாலும் கூறிப் போந்த முத்திறத்து ஐந்து அவத்தைகளுக்கு முறையே காரணம் ஆகிய கேவலம், சகலம், சுத்தம் என்னும் மூன்றினுள் வைத்துத் தன் உண்மையாகிய கேவல அவத்தையில் நிகழும் இயல்பு  சகச மலத்து உணராது என்பதால் பெற்றாம். ஏனைச் சகல அவத்தையில் நிகழும் இயல்பு வரும் சூத்திரத்தினும் (ஐந்தாம் சூத்திரம்) , சுத்த அவத்தையின் இயல்பு  அப்பாலைச் சூத்திரத்தினும் (ஆறாம் சூத்திரம்) பெறுதும்’’  என்று குறிப்பிடுவார்.

 

      கேவல அவத்தை நான்காம் சூத்திரத்துச் சகச மலத்து உணராது என்ற தொடராலும், சகல அவத்தை நிலையை அடைவதற்கு சிவசத்தியின் துணை இன்றியமையாதது என்பதைக் குறிப்பிடுகின்ற ஐந்தாம் சூத்திரத்தின் தமியருள் என்ற தொடராலும் , சுத்த அவத்தை நிலையை ஆறாம் சூத்திரத்தில்  இரண்டு வகையின் என்ற தொடரால் பெறப்படும் இறைவனை அறிகின்ற ஆன்மாவின் நிலையிலும்  சிவஞான முனிவர் தம் பேருரையில் உணர்த்தியுள்ளார்.

 

சிவஞான சித்தியார் -  அருணந்தி சிவாசாரியார் தம்முடைய சிவஞான சித்தியார் சுப்க்கப் பகுதியில் இம் மூன்று அவத்தைகளைப் பற்றிய செய்திகளை நான்கு பாடல்களில் விரிவாகச் சுட்டிக் காட்டுகிறார். அவற்றின் கருத்துப் பின்வருமாறு அமைந்துள்ளது.

 

      காரிய அவத்தைகளுக்குக் காரணமாகிய கேவலம், சகலம், சுத்தம் என்ற மூன்று அவத்தைகளை ஆன்மா எய்துவன். கேவலம் இச்சா ஞான கிரியைகளின் நிகழ்ச்சி சிறிதும் இன்றி, தான் மாத்திரம் உளனாதல் ஆகும். பின்பு தனு கரணாதிகள் முதலியன முதல்வனால் கொடுக்கப் பெற்று , அவ் இச்சா ஞானக் கிரியைகள் சிறிது விளங்கி நிற்கும் நிலையில் உயிர் சகலன் எனப்படுவான். பின்பு மலங்கள் நீங்கிய விடத்துப் பிறவியை ஒழித்து நிற்கும் நிலையில் உயிர் சுத்தன் எனப்படுவான்.

 

      கேவலத்தில் ஆன்மா அறிவு விளங்கப் பெறதல் இல்லை.  தூல உடம்பு இல்லை. தோற்றக் கேடுகள் இல்லை. மூன்று குணங்களோடு கலப்பதில்லை.  கலை முதலிய கருவிகளோடும் சேர்தல் இல்லை. தொழில்கள் விளங்கப் பெறுதல் இல்லை.  காரண சரீரம் இல்லை. தனக்கெனச் சுதந்திரம் இல்லை. போகங்களில் பற்று இல்லை. ஆணவ மலத்தோடு பிரிவின்றி நிற்பதும், அம்மலத்தினோடு வியாபித்து நிற்பதும் மட்டுமே உள்ளது.

 

      கேவல அவத்தையில் நின்ற உயிர் சகல அவத்தையை அடையும்.  உடம்பைப் பெறும். போகத்திற்குரிய பொருள்களை மனம், வாக்கு, காயங்களால் நினைத்தல், உரைத்தல், இயற்றல் ஆகிய வினைகளைப் பொருந்தி, சத்தமாதி விஷயங்களை விரும்பி நுகர்ந்து எண்பத்தி நூறாயிரம் உடம்புகளை எடுத்துச் சுழன்று திரியும்.

 

 

       நல்வினை தீவினைகளாகிய இருவினை ஒப்பு உயிரிடத்தில் நிகழ, சிவசத்தி பதிதலால்(சத்திநிபாதம்) , ஞான குருவின் உபதேசத்தைப் பெற்று, ஞானபோகத்தை அடைந்து அநாதியான மும்மலங்களையும் நீக்கி, பழைய சிற்றறிவு நீங்கி, ஞானம் பெருகி இறைவன் திருவடியை உயிர்கள் பெறுதல் சுத்த அவத்தையாம்.  இவ்வாறு மூன்று அவத்தைகளைப் பற்றிய விளக்கங்களை நான்கு பாடல்கள் மூலமாக அருணந்தி சிவாசாரியார் குறிப்பிடுகின்றார். அதற்குரிய பாடல்களாவன - 

 

            ‘‘கேவல சகல சுத்தம் என்று மூன்று அவத்தை ஆன்மா

             மேவவன் கேவ லந்தன் உண்மை மெய்பொறிகள் எல்லாம்

             காவலன் கொடுத்த போது சகலனாம் மலங்கள் எல்லாம்

             ஓவின போது சுத்தம் உடையன் உற்பவம் துடைத்தே’’( பா. 227)

 

            ‘‘அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அரகாதி குணங்க ளோடும்

             செறிவிலன் கலாதி யோடும் சேர்விலன் செயல்கள் இல்லான்

             குறியிலன் கருத்தா அல்லன் போகத்தில் கொள்கை இல்லான்

             பிரிவிலன் மலத்தி னோடும் வியாபி கேவலத்தில் ஆன்மா’’(228)

 

           

            ‘உருவினைக் கொண்டு போக போக்கியத்து உன்னல் செப்பல்

             வருசெயல் மருவி சத்தம் ஆதியாம் விடயம் தன்னில்

             புரிவதும் செய்திங்கு எல்லா யோனியும் புக்கு உழன்று

             திரிதரும் சகல மான அவத்தையில் சீவன் சென்றே’’(229)

 

 

            ‘‘இருவினைச் செயல்கள் ஒப்பின் ஈசன்தன் சத்தி தோய

             குருவருள்  பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத்

             திரிமலம் அறுத்து்ப் பண்டைச் சிற்ற்றிவு ஒழிந்து ஞானம்

             பெருகி  நாய கன்தன் பாதம் பெறுவது சுத்த மாமே’’(230)

           

 

 

சிவப்பிரகாசம் - உமாபதி சிவம் தமது சிவப்பிரகாசத்தில் இம் மூன்று அவத்தைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவற்றின் கருத்துக்கள் கீழ்வருமாறு அமைகின்றன.

 

            எண்ணமுடியாத உயிர்கள்  மூன்று அவத்தைகளைப் பொருந்தி நிற்கும். அவற்றைக் கேவல, சகல, சுத்தம் என்று அறிஞர் கூறுவர். அவற்றுள் கேவல அவத்தை என்பது , சகல அவத்தையில் கொள்ளுகின்ற கலை முதலிய தத்துவங்களும், சூக்கும தூலங்களாக இருக்கும் உடம்புகளும் இன்றி ஆணவ மலம் ஒன்றே கொண்டு நிற்பது, வேறு எதுவும் இல்லாத தன்மை உடையதாகும்.  அறிவதற்கு ஏதுவாகிய கருவிகள் அவ் அவத்தையில் கூடாத காரணத்தால் அவ் அவத்தையில் உயிர்கள் ஒரு பொருளையும் அறியாது.  இருளில் பொருந்திய கண் போல ஆணவ இருளில் அழுந்தி அதனை விட்டு நீங்கும் வகையில்லாது, பிறப்பும் இறப்பும் ஏகதேச தன்மையும் இன்றி ஆணவத்தோடு மட்டும் கூடி நிற்கின்ற நிலையாகும் என்று ஆகமங்கள் கூறும்.

 

                  ‘‘ஓங்கிவரும் பலஉயிர்கள் மூன்றவத்தை பற்றி

                              உற்றிடும் கேவலம் சகலம் சுத்தமென  உணர்க

                    ஈங்குவரும் கலாதியோடு குறிஉருவம் ஒன்றும்

                              இன்றிமலம் அன்றிஒன்றும் இல்லைஎனும் இயல்பாய்

                    ஆங்கறிவை அறிவறிதாய் அறிகருதி அணையா

                              ஆதலினால் இருள்மருவும் அலர்விழிபோல் அதுவாய்

                     நீங்கும்வகை இன்றிநித்த வியாபகமாய் அங்ஙண்

                               நிற்பது கேவலம்என்று நிகழ்த்தும் நூலே ( பா. 33)

 

            இவவாறு கேவல அவத்தையின் விளக்கத்தைத் தந்த உமாபதிசிவம் அடுத்து வரும் மூன்று பாடல்களில் ஆணவம் என்பது உண்டா? என்ற கேள்வியும், அதற்கு விடையும் தந்து , ஆணவத்தின் விளக்கத்தையும் தந்து கேவல அவத்தையை உணர வைக்கின்றார். அதன்பின் சகல அவத்தை பற்றிக் கூறுகையில் வாக்கு, கலை, வித்தை,அராகம், நியதி, காலம் , புருடன், பிரகிருதி, முக்குணங்கள், அகங்காரம், மனம், சித்து, ஞானேந்திரியம், கன்மேந்திரியம், ஐம்பூதங்கள் ஆகிய இவற்றைப் பற்றிய விளக்கங்களைச் சகல அவத்தையின் விளக்கமாகத் தந்து ( பாடல் 37 முதல் 47 வரை) உணர வைக்கின்றார். அதன்பின் சுத்த அவத்தைக்குரிய இருவினை ஒப்பு, சத்திநிபாதம், முத்தி இவற்றை மூன்று பாடல்களில் தந்து சுத்த அவத்தைக்கு விளக்கம் தருகிறார்.

 

வினாவெண்பா - உமாபதிசிவம் தமது மற்றொரு நூலாகிய வினாவெண்பா இரண்டாவது பாடலில் மூன்று அவத்தைகளைக் குறிப்பாகக் காட்டுகிறார். அப்பாடல்களின் பொருள் வருமாறு -  மருதூரில் வாழுகின்ற சம்பந்தப் பெருமானே, என்னிடத்தில் ஆணவ மலம் மேலிட்டு இருக்கும் பொழுது  ஞானஒளி என்னிடத்தில் இருப்பதில்லை. மேலும் கலை முதலிய தத்துவங்களைப் பொருந்தி உடமபு எடுத்த காலத்திலும் , உலக போக மயக்கத்தால் ஞானஒளி கிடைப்பதில்லை.  எனவே இந்த உடல் பொருள் கருவிகளை நீக்கிக் கொள்ளலாம் என்றால் மீண்டும் ஆணவம் மேற்பட்டிருக்கின்ற பழைய நிலைக்கே சென்றடைகின்றேன். இப்படிப்பட்ட நிலையில் உன் திருவருளால் எனக்கு என்ன பயன் கிடைக்கும்?  என்ற பொருளை அப்பாடல் தருகிறது.

            ‘‘இருளில் ஒளிபுரையும் எய்தும் கலாதி

              மருளில் நிலையருளும் மானுங் - கருவியிவை

              நீங்கின் இருளாம் நிறைமருதச் சம்பந்தா

              ஈங்குன் அருளால் என்பெற’’

 

என்பது பாடலாகும். இந்தப் பாடலில் கேவலத்தில் ஆணவம் மேலிட்டு நிற்கும் சகலத்தில் கருவிகளாகிய உடல் அமைந்து, உயிர் போகத்தைத் துய்க்கும். சுத்த நிலையில் கருவிகள் அழிந்து விடுகின்றன. இக்கருத்தின் அடிப்படையில் வினா அமைந்துள்ளது. அதாவது கேவலத்தில் ஆணவம் மட்டும் இருப்பதால் திருவருள் கிடைப்பதில்லை.  சகலத்தில் போகம் துய்ப்பதால் மயக்கம் ஏற்பட்டுத் திருவருள் கிடைப்பதில்லை.  எனவே உயிர் எப்படித் திருவருளாகிய பயனைப் பெறுவது? என்ற வினா எழுப்பப் பெற்றிருக்கின்றது.

 

போற்றிப் பஃறொடை -  உமாபதிசிவம் தாம் எழுதிய மற்றொரு நூலாகிய போற்றிப் பஃறொடையில் காரண அவத்தைகளாகிய இம்மூன்று அவத்தைகளைக் குறிப்பிடுகின்றார். ஆனால் நேரிடையாக மூன்று அவத்தைகளைப் பெயர் சுட்டிக் குறிப்பிடாமல் நிகழ்ச்சி போல் மூன்று அவத்தைகளின் தன்மைகளைக் குறிப்பிடுகின்றார். ஆணவ மலமானது நிலைபேறு உடையதாய் , வடிவற்றதாய், எல்லா உயிர்களையும் தனக்குள் அடக்கும் தன்மை உடையதாய் அமைந்து, மணியைத் தன்னுள் அடக்கியிருக்கும் பாம்பினைப் போல உயிரின் அறிவை மறைத்து, நெருப்பைத் தன்னுள் அடக்கியிருக்கும் விறகைப் போல ஆணவம் உயிரை மறைத்து உயிர்களுக்கு அறியாமையைத் தருகின்றது.  இத்தகைய ஆணவ மலத்தால் எல்லா உயிர்களும் செயல் இழந்து கிடக்கின்றன என்பது கேவல அவத்தை பற்றிப் போற்றிப் பஃறொடை தரும் செய்தியாகும்.

 

                       

                         ‘‘அருவமாய் எவ்வுயிரும் ஆர்த்தே - உருவுடைய

                         மாமணியை உள்ளடக்கும் மாநாகம் வன்னிதனைத்

                         தானடக்கும் காட்டத் தகுதியும்போல் - ஞானத்தின

                         கண்ணை மறைத்த கடியதொழில் ஆணவத்தால்

                         எண்ணும் செயல்மாண்ட எவ்வுயிர்க்கும்’’

என்பது அப்பாடற் பகுதியாகும்.

           

      அடுத்துச் சகல அவத்தை பற்றிக் கூறப்படுகிறது.  ஆணவத்தால் செயல் இழந்து கிடக்கும் உயிர்களுக்கு உதவுவதற்காகக் கண்ணற்ற குருடருக்குக் கோல் கொடுதது உதவுதல் போல மாயையைக் கூட்டுவித்து, அதன் மூலம் உடல், கருவி, உலகு, நுகர்ச்சிப் பொருள்களைத் தந்து, நல்வினை தீவினைப் பயன்களைப் பொருந்தி, வினைப் பயனை நுகர்வதற்காகப் பல பிறப்புக்களையும் இறைவன் தருவான் என்பது் சகல அவத்தையைக் குறிப்பதாகும். இதற்குரிய பாடற் பகுதி -

 

                  ‘‘உள்நாடிக் கட்புலனால் காணார்தம் கைக்கொடுத்த கோலேபோல்

                   பொற்புடைய மாயை புணர்ப்பின்கண்  - முற்பால்

                   தனுகரணமும் புவனமும் தந்து அவற்றால்

                   மனமுதலால் வந்த விகாரத்தால் - வினைஇரண்டும்

                   காட்டி அதனால் பிறப்பாக்கி’’

என்பதாகும்.

            அடுத்துச் சுத்த அவத்தை பற்றி ஒரே வரியில் ‘‘கைக்கொண்டு மீட்டறிவு காட்டும் வினை போற்றி’’ என்பதால் பல பிறப்புக்களைத் தந்து , மல நீக்கத்தைச் செய்து பக்குவம் பெற்றிருக்கின்ற உயிர்களுக்கு எல்லையற்ற தன் பேரின்பத்தைத் தந்தருளுகின்ற இறைவன் கருணையைப் போற்றுகின்றேன் என்று மூன்று அவத்தைகளைப் பற்றி உமாபதி சிவம் போற்றிப் பஃறொடையில் குறிப்பிடுகின்றார்.  இப்பகுதி மூன்று அவத்தைகளையும் இறைவன் திருவருளால் உயிர் பெறுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதாகும்.

 

நெஞ்சுவிடு தூது -  உமாபதிசிவம் தாம் எழுதிய மற்றொரு நூலான நெஞ்சுவிடு தூதிலும் அவத்தை பற்றிக் குறிப்பிடுகின்றார். ஆனால் அந்நூலில் விரிவான விளக்கம் தராது  உயிர் மூன்று குற்றம், மூன்று குணம், மூன்று மலம், மூன்று அவத்தை ஆகியவற்றால் ஆட்பட்டுள்ளது என்பதைப் பத்தொன்பதாவது கண்ணியில் குறிப்பிடுகின்றார். இந்த மூன்று அவத்தை என்ற பெயர் மட்டுமே இடம் பெற்றிருப்பதை அறியலாம்.

 

தத்துவப் பிரகாசம் -  சீர்காழித் தத்துவப் பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த தத்துவப் பிரகாசம் என்னும் நூலும் மூன்று அவத்தைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இரண்டு பாடல்களில்(267,268) அவத்தை பற்றிய விளக்கம் காணப்படுகிறது.  அவத்தையானது கேவலம், சகலம், சுத்தம் என்னும் மூன்று பேதமாம். இம்மூன்றும்  பெத்த கேவலம், முத்தி கேவலம், பெத்த சகலம் , முத்தி சகலம், பெத்த சுத்தம், முத்தி சுத்தம் என ஆறு பேதமாக விளங்கும் என்று அப்பாடல் குறிப்பிடுகிறது. இவ்வாசிரியர் ஆணவத்தோடு மட்டும் இருக்கக் கூடிய உயிரை எவ்வாறு பெத்த நிலை கேவலம் என்று சொல்லுகின்றோமோ அதுபோல முத்தி நிலையிலும் ஆணவம் அடங்கி உயிர் இருப்பதால் முத்திநிலை கேவலம் என்று குறிப்பிடுகிறது. அதுபோல சகலத்தையும் சுத்தத்தையும் பெத்தத்திலும் முத்தியிலும் குறிப்பிட்டுச் சொல்கின்றது.  இது ஆய்வுக்குரிய கருத்தாகும்.   இதற்குரிய பாடல்,

                        ‘‘தெரியவத்தை கேவலமும் சகலமும் சுத்தமுமாம்

                          திகழுமிவை  பெத்தமும் முத்தியும்எனவே ஆறாம்

                          விரிவிவற்றில்  சகலமும் முன்விரித்த வாறாம்

                          மிஞ்சுகேவல பெத்தம் மெயயொடுங்குங் காலம்

                          துரியாதீதம் சொல்லும் முத்தி கேவல நீ

                          தோன்றாது என்றிருந்த விடமது கலைகள் குறிகள்

                          உருவருவே நெறிகொள் இச்சாஞானம் இன்றி மலமது

                          ஒன்றுமே வியாத்தமாய் உறுதல் காணே.’’(பா. 268)

என்பது பாடற் பகுதியாகும்.  இப்பாடலில் மூன்று அவத்தைகளும் பெத்த நிலையிலும், முத்தி நிலையிலும் இருக்கக் கூடியதே என்று கொண்டு ஆறாகக் குறிப்பிடுவது சிந்தனைக்கு உரியதாகும். 

            இவ்வாறு சாத்திர நூல்கள் உயிருக்குரிய காரண அவத்தைகளாகிய கேவலம், சகலம், சுத்தம் இவைகளைப் பற்றிக் குறிப்பிடுவனவற்றைத் தொகுக்கலாம்.  , இவ்வாறு தொகத்துப் பெறப்பட்ட மூன்று காரண அவத்தைகள் பற்றிய செய்திகளைக் கீழ்வருமாறு தொகுத்துக் காணலாம்.

1.  பாசம் காரணமாகக் காணப் பெறுகின்ற உயிரின் தடத்த இலக்கணத்தில் அவத்தைகள் நிகழ்

   கின்றன.

2.  சைவசித்தாந்தம் உயிரின் நிலைகளைக் காரண அவத்தை என்றும் காரிய அவத்தை

    என்றும் இரு நிலையில் பகுத்துக் காட்டுகிறது.

3.  காரண அவத்தை என்பது உயிரின் தோற்றம், வளர்ச்சி, முடிவு என்ற மூன்றுநிலைகளுக்கு

    உரிய அடிப்படையை அதாவது உயிர் பெற்றிருக்கின்ற நிலையைக் குறிப்பது ஆகும். பெத்த

    நிலையைக் கொண்டு உடம்பெடுத்த உயிர் அவ்வவ் நிலையில் போகங்களைத் துய்க்கின்ற

    செயல்பாட்டினைக் காரிய அவத்தை என்று சைவ சித்தாந்தம் குறிப்பிடுகிறது.

4.  காரண அவத்தை கேவலம் என்றும் , சகலம் என்றும், சுத்தம் என்றும் சைவ சித்தாந்தம்

    குறிப்பிடுகிறது. இதனை இருள்நிலை என்றும், மருள்நிலை என்றும், அருள்நிலை என்றும்

    குறிப்பிடுவர்.

5.  கேவலம் என்பதற்குத் தனிமை என்பது பொருள். சகலம் என்பதற்குக் கலையோடு கூடுதல்

    என்பது பொருள். சுத்தம் என்பதற்குத் தூய்மை என்பது பொருள்.

6.   இந்த மூன்று அடிப்படையான காரணங்களைக் கொண்டு கனவு முதலாகிய காரிய

    அவத்தைகளில் உயிர் நிலைபெற்று வாழுகிறது.

7.   இறைவனைப் போல உயிர் அநாதி என்றாலும், இறைவனுக்கும் ஆன்மாவுக்கும்

     உள்ள வேற்றுமை , ஆன்மா இறைவனைப் போல முற்ற்றிவு உடையவனாய்த் தோன்

     றாது, அறிவிக்க அறியும் அறிவினை உடையதாய் விளங்குவதாகும். அநாதிகாலத்தில்

      அறியாமையாகிய ஆணவத்தோடு தான் இருக்கிறது.  

8.    உயிரில் அறியாமை உடன் இருப்பதால்  அந்த நிலையில் மாயை, கன்மங்கள்

      கூடவிலலை.  அதனால் இசசை இல்லை, செயல் இல்லை, உடம்பு இல்லை, கருவி

      களும் இல்லை.  அதனால் வினைகளை ஈட்டுவதும் இல்லை. வினை இல்லாததால்

      இன்ப துன்பங்கள் இல்லை. ஆதலால் உயிர் அநாதி காலத்தில் அறியாமையாகிய

      ஆணவத்தோடு இருக்கும் நிலையே கேவல நிலை எனப்படும்.

9.    கேவல நிலையில் தனிமையோடு நின்ற உயிரின் மீது இரக்கம் கொண்ட இறைவன்,

      அறியாமை நீங்கும் பொருட்டு இருளை ஓட்டும் விளக்கு போல, ஆணவத்தைக்

      குறைக்க மாயை கன்மம் இரண்டையும் கூட்டுகிறான். இந்த நிலையில் இறைவனுடைய                          அ   அருள்நிலை தோன்றுகிறது.      இதனால் தன, கரண, புவன, போகங்கள் ஏற்படுகின்றன.  

10.   உயிருக்குச் சிற்றறிவு ஏற்படுகிறது. இச்சை தோன்றி வளர்கின்றது. வினைகள் ஈட்டப் படு

      கின்றன. என்றாலும் துய்க்கும் போகத்தையே உண்மை எனக் கருதி மயங்கிக் கிடக்கின்

      றது,  இதுவே மருள் நிலையாம் சகல அவத்தையாகும். சகல அவத்தையில் உயிரானது

      தன் வினையின் அடிப்படையில் உடம்பைப் பெற்று வினைகளை அனுபவிக்கிறது. இவ்

      வாறு வினைகளை அனுபவிப்பதை ஆறு அத்துவாக்களாகச் சித்தாந்த சாத்திரங்கள்

      குறிப்பிடுகின்றன. அத்துவாக்கள் என்பதற்குப் பொருள் வழி என்பதாகும். இந்த அத்துவாக்

      கள் , ‘‘ஆன்மாக்களுக்குக் கன்மம் ஏறுதற்கும்,பரகதி அடைதற்கும் காரணமாகிய வழி

      என்று சித்தாந்த அறிஞர் இலங்கை மு. திருவிளங்கம் பிள்ளை அவர்கள் தம் சிவப்பிர

      காசம் உரையில் (ப.243) என்று குறிப்பிடுவார்.  சி.சு.மணி அவர்கள் தன்னுடைய சிவப்

      பிரகாச உரையில் ‘‘அத்துவாக்கள் உயிரை உலகோடு இணைவிப்பன ’’ என்று குறிப்பிடு

      வார்.  எனவே சகல அவத்தையில் உயிருக்கு உரிய தத்துவங்களோடு ஆறு அத்துவாக்

      களும் வழிநிலைகளாக அமைகின்றன. மந்திரங்கள், பதங்கள், வன்னங்கள்,புவனங்கள்,

      தத்துவங்கள், கலைகள் என்பன அந்த ஆறு அத்துவாக்களாகும்.  முதல் மூன்றும்

      சொல்பிரபஞ்சம் என்றும், பின் மூன்றும் பொருள் பிரபஞ்சம் என்றும் கூறப்படுவதுண்டு.

           

                  இந்த ஆறு அத்துவாக்களையும் சுத்தி பண்ணி மலம் அகற்றிச் சிவம் பிர

      காசித்தறகுக் குருவாய் ஆச்சாரியன் தீட்கை செய்து அருள்வார் என்பதைச் சிவஞான

      சித்தியார் சுபக்கப் பாடல் 258ம், சிவப்பிரகாசம் 9 ம் பாடலும் குறிப்பிடுகின்றன. எனவே

      உயிருக்குரிய வினைகள் சகல நிலையில் ஆறு அத்துவாக்களால் வினைகளை அனுப

      வித்து அவ்வாத்துவாக்கள் நீங்க ,இறையருள் ஆச்சாரிய வடிவத்தில் தோன்றி தீட்கை

      செய்து வைப்பார் என்பது பெறப்படுகிறது. இது பற்றிய செய்திகளைச் சித்தாந்த வித்தகர்

      கள் கீழ்வருமாறு குறிப்பிடுவார்கள்.

           

            மந்திரம் முதலிய அத்துவாக்களை 1. உயிருக்கு நல்வினை தீவினை என்னும் கன்மம் வருகின்ற வழி எனவும், 2.  உயிர் இறைவனை அடைவதற்குரிய வழி எனவும் இருவகையாகக் குறிப்பிடலாம். அவற்றுள் கன்மம் வரும் வழி ...........

 

1.  மந்திரங்களை உரத்திச் சொல்வது, மெல்லச் சொல்வது, உச்சரிப்பின் பேதம் என்னும் என்ற மூன்று முறையில் எந்த மந்திரத்தை எவ்வாறு சொல்ல வேண்டுமோ அவ்வாறு சொல்லுவது புண்ணியமும் முறைதவறிச் சொல்லுவது பாவமும் ஆகும்.

 

2.  பதங்களில் பிரிக்கக் கூடிய பதமாய் இருந்தால் பிரித்தும் , பிரிக்கக் கூடாத பதமாய் இருந்தால் பிரிக்காமலும் இருப்பின் புண்ணியமாகும். இதற்கு மாறுபட்டது பாவமாகும்.

 

3.  வன்னம் என்பது எழுத்து. அந்த எழுத்துக்களில் குறிலைக் குறிலாகவும், நெடிலை நெடிலாகவும், அளபெடையை அளபெடையாகவும் அந்தந்த இடங்களில் உச்சரித்தால் புண்ணியம் ஆகும்.  மாறுபட்டால் பாவம் ஆகும்.

 

.4.  புவனங்களுக்குப் பதியாகிய தெய்வத்தைப் பூசித்தால் புண்ணியம்.  பூசிக்காமல் நிந்தனை செய்தால் பாவமாகும்.

 

5.  தத்துவங்களாகிய ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம் ஆகியவற்றால் பிறருக்குச் செய்யும் நன்மை நல்வினையாகும்.  தீமை தீவினையாகும்.  நல்வினையில் பொருளைத் தேடிப் போகம் அனுபவிப்பது புண்ணியம்.  தீயவழியில் திரவியத்தைத் தேடிப் போகம் அனுபவிப்பது பாவம்.

 

6.  பஞ்ச கலைகளுக்கு அதாவது நிவர்த்தி கலைககுரிய கிரியா சத்தி, பிரதிட்டா கலைக்கு உரிய ஞானசத்தி, வித்தியா கலைக்குரிய இச்சா சத்தி, சாந்தி கலைக்குரிய ஆதி சத்தி, சாந்தீய தீத கலைக்குரிய பராசத்தி ஆகிய உரிய சத்திகளுக்குப் பூசை செய்வது புண்ணியம். பூசை செய்யாமல் இருப்பது பாவம். 

 

      இந்த ஆறு வழிகளாலும் கன்மம் வரும் என்பது அறியத் தக்கதாகும். இத்தகைய ஆறு அத்துவாக்களும் - அநாதியே ஆணவ மலத்தைப் பற்றி கேவலத்தில் கிடந்து அறிவு விளங்காத ஆன்மாக்களுக்கு அறிவு விள்ங்குவதற்கு உரிய வழிகளாகத் தோன்றும். அதனால் அறிவு விளங்கும். அந்த அறிவு விளக்கமும் ஏகதேச விளக்கமே என்பதை ஆன்மா உணர்ந்த பிறகு இந்த அத்துவாக்கள் ஆறும் திருவருளால் ஒன்றில் ஒன்று ஒடுங்கும் முறைமையினால் இறைவனை அடைவதற்குரிய வழிகளாக ஆகின்றன.

 

      ஒன்றில் ஒன்று ஒடுங்குவதற்குக் காரணம் மந்திரம் எனும் சொல் பதம் இன்றி இல்லாததால் மந்திர பதத்தில் ஒடுங்கும்.  பதம் எழுத்து இல்லாமல் நில்லாதது ஆதலால் பதம் எழுத்தில் ஒடுங்கும். மந்திரம் , பதம், வன்னம் என்ற இந்த மூன்றும் சொல் என்பதால் சொல் பொருள் இல்லாது நிற்காது ஆதலால் பொருளில் மூன்றும் அடங்கும்,  பொருள் என்பது புவனம், தத்துவம், கலை ஆதலால் வெளிப்படையாகக் காணப்படும் புவனத்தில் முதற்கண் சொல் ஒடுங்கும்.  புவனம் தத்துவம் இல்லாது நில்லாமையால் தத்துவத்தில் புவனம் ஒடுங்கும். தத்துவம் கலையை இன்றித் தோன்றாமையால் கலையில் தத்துவம் ஒடுங்கும். அதாவது பேச்சை நிறுத்தி உலகை வெறுத்து, உடலைத் தான் அல்ல என்று அறிந்து திருவருளால் தன்னையும் தலைவனையும் அறியும் முறையாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு அருணந்தி சிவாசாரியார் தத்துவக் கருத்துக்களைத் தந்துள்ளார்.

                  ‘‘அழிவு இலாக் கிரியையினால் ஆதல் சத்தி மத்தால்

                          ஆதல் அத்துவா சுத்திபண்ணி மலமகற்றி

                    ஒழிவிலாச் சிவம் பிரகாசித்தற்கு ஞானம்

                            உதிப்பித்து உற்பவம் துடைப்பன் அரன்ஒருமூவர்க்கும்

                    வழுவிலா வழிஆறாம் மந்திரங்கள் பதங்கள்

                            வன்னங்கள், புவனங்கள், தத்துவங்கள், கலைகள்

                   கழுவிலாது உரைத்த முறை ஒன்றின்ஒன்று வியாத்தி

                              கருதுகலை சத்தியின்கண் சத்தி சிவன்கண்ணாம்’’

                                                      (சித்தியார்- பர- 258)

 

இதனை உமாபதி சிவம்,

                  ‘‘பரந்த நெறி அறுவகையும் ஒருவி நினைவரிதாம்

                   பரபதத்துள் உயிர்விரவப் பயிற்று மன்றே’’  (சிவப்பிரகாசம் -9)

என்று குறிப்பிடுவார்.  இவ்வாறு சகல அவத்தையில் ஆறு அத்துவாக்களை அனுபவித்து அவற்றைக் குருவருளால் நீக்கி, இறையருளை உயிர் பெறுகிறது.

 

11.  ஆறு அத்துவாக்களின் வழி வினையை ஈட்டி போகத்தில் ஆழ்ந்த உயிர் வினைகளைச்

    சேகரித்து, வினைகளை அனுபவித்துக் கழிக்கப் பல பிறப்புக்களை எடுக்கிறது. உயிர் தான

    அடைந்த பிறப்பு இறப்புக்களால் வினைகளைத் துய்த்து, இறைய்ருளால் இருவினை

     ஒப்புக்கு வருகிறது. அத்தகைய இருவினை ஒப்பு நிகழும் காலத்து இறைவன் குருவடி

     வாய் வந்து அத்துவாக்கள் ஆறினை நீக்கி உயிருக்கு ஞானத்தை வழங்குகிறான்.

     அத்தகைய ஞனாத்தால் உயிர் பொய்மையை மெய்மை என்று எண்ணிய நிலை,மாறி

     மெய்மையாம் இறையருளை உணருகின்றது.  அவ் உணர்வினால் மும்மலங்கள் நீங்கி

      நின்மலனாகிய இறைவனை அடைந்து இன்புறுநிலை அடைகின்றது.  இதுவே சுத்த

      அவத்தையாகும்.

 

12.   அநாதியாகிய உயிர் கேவல நிலையில் தானே தனித்து இருந்தாலும்,அதன்பின் வருகின்ற

      சகலத்திலும், சுத்தத்திலும், நிமித்த காரணனாகிய இறைவனின் திருவருளைப் பெற்றே

      ஆகிறது.  இறையருள் இன்றி உயிர்நிலை அமையாது என்பதை மூன்று காரண அவத்

      தைகளும் இயம்புகின்றன.

 

            இத்தகைய நிலையில் உயிரின் மூன்று காரண அவத்தைகளைச் சாத்திரங்களின வழி நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

 

                                    திருச்சிற்றம்பலம்.

                 --------------------------------------------------------------------------------------------------------------------------

                             சித்தியாரில் ஒரு வித்து.

முனைவர்.பழ.முத்தப்பன்,

திருச்சிராப்பள்ளி.


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளில் மயிலம் தமிழ்க் கல்லூரியில் பணியாற்றிய பொழுது, சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சித்தாந்தம் என்ற பொதுத் தலைப்பில், முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவு செய்தேன்.  பல்கலைக் கழக விதிப்படி தனிஒரு தலைப்பில் ஆய்வு செய்ய வேண்டும் என்றநிலை ஏற்பட்ட பொழுது, இறையருளால் குருகுலம் ஆதீன முதல்வர் சிவத்திரு அழகரடிகளின் தொடர்பு கிடைத்தது.  அன்னார் அவர்கள் அருள்நந்தி சிவாசாரியார் நூல்களில் ஆய்வு செய்யலாமே என்று வழிகாட்டி அருள் புரிந்தார்கள். இறையருளாலும் குருவருளாலும் சனி, ஞாயிறு விடுமுறைகளில் குருகுலத்தில் தங்கியிருந்து குருமுதல்வர்பால் சிவஞான சித்தியார் நூலைப் பாடம் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது.  அந்தக்;; காலகட்டத்தை நானும் என் குடும்பமும் மறத்தல் இயலாது.  


பாடம் கேட்கும் பொழுது ஒருநாள் இறைவனின் அருள் வழிபடுவோர் அனைவருக்கும் ஏற்றத் தாழ்வு இன்றி சமமாகக் கிடைக்கவில்லையே என்று ஒருதாளில் எழுதி வினவினேன்.  அதற்குப் பதிலாக ஏறக்குறைய ஒருமணி நேர அளவில் சிவஞான சித்தியாரின் ஒருபாடலை எடுத்துக் காட்டி அதற்கு விளக்கம் தந்தார்கள்.  அந்த விளக்கம் என்மனதில் நிழலாடியது தான் இக்கட்டுரையாக வெளிவருகிறது.  


ஆன்மாக்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை இறைவன்தான் அருளுகின்றான்.  அவ்வாறு அருளும் பொழுது ஆன்மாக்களின் வழிபாட்டிற்கு ஏற்ப அருள் புரிவதில்லை.  அவர்களின்  பக்குவத்திற்கு ஏற்பத்தான் அருள் புரிகின்றான் என்று கூறி, அதனை ஒரு நிகழ்ச்சியாக உரைத்தார்கள். அதாவது ஞானாசிரியரிடம் ஒரு மாணவன் இந்தக் கேள்வியைக் கேட்டான். அவனுக்குப் பதில் கூற அவனை அழைத்துக் கொண்டு அந்த ஊரில் உள்ள தாமரைக் குளத்திற்கு ஞானாசிரியர் சென்றார்.  அவர்கள் சென்ற நேரம்  சூரியன் மறையும் அந்தி மாலையாகும்.  குளத்தருகே சென்ற ஞானாசிரியர் மாணவனை நோக்கி, இக்குளத்தில் பூத்த தாமரைகள் இருக்கின்றனவா என்று கேட்டார். மாணவன் சூரியன் மறைந்து விட்டதால் பூத்த தாமரைகள் கூம்பி விட்டன என்று கூறினான்.  அப்படியானால் பூக்கக் கூடிய மொட்டுக்கள் உன் கண்களுக்குத் தெரிகிறதா? அப்படித் தெரிந்தால் அந்த மொட்டுக்கள் எத்தனை என்று எண்ணிக் கூறு என்று ஞானாசிரியர் கட்டளையிட்டார். ஞானாசிரியரின் ஆணைப்படி மாணவன் தன் கண்களுக்குத் தெரிந்த மொட்டுக்களை எண்ணி முப்பது மொட்டுக்கள் என்று கூறினான்.  உடனே ஞானாசிரியர் மாணவனை அழைத்துக் கொண்டு தன் இருப்பிடம் வந்தார். இருப்பிடம் வந்தவர் நாம் நாளை மீண்டும் குளத்திற்குச் சென்று விடையைத் தெரிந்து கொள்வோம் என்றார். 


மறுநாள் காலை ஞானாசிரியரின் ஆணைப்படி மாணவன் வர, இருவரும் அதே குளத்திற்குச் சென்றார்கள்.  நேற்றுப் பார்த்த இடத்தில் மாணவனை நிறுத்தி, மாணவன் கண்களுக்குத் தெரிந்த பூத்த மலர்களை எண்ணிக் கூற ஆணையிட்டார். மாணவனும் பூத்திருந்த தாமரை மலர்களை எண்ணி இருபது பூக்கள் தெரிகின்றன என்று கூறினான்.  ஞானாசிரியர் அவனை நோக்கி நீ நேற்றுப் பார்த்த முப்பது மொட்டுக்களில் இப்பொழுது இருபது மொட்டுக்கள் தானே பூத்திருக்கின்றன. மற்ற மொட்டுகள் ஏன் பூக்கவில்லை என்று மாணவனைக் கேட்டார். 


அதற்கு அம்மாணவன் சூரியன் உதித்ததால் இருபது மொட்டுக்கள் பூத்தன. மற்ற பத்துப் பூக்கள் பூப்பதற்கு உரிய பக்குவம் அடையாததால் பூக்கவில்லை என்று கூறினான்.  அதனைக் கேட்ட ஞானாசிரியர் நீ நேற்றுக் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் என்று கூறினார். அதாவது உதித்த சூரிய ஒளிக்கு முன்னே பூப்பதற்குரிய பக்குவம் அடைந்த மொட்டுக்கள் எவ்வாறு பூத்தனவோ, அவ்வாறே இறைவனின் திருமுன்னர் வழிபாடு செய்கின்ற பக்குவம் அடைந்த ஆன்மாக்களுக்கு அருள் செய்கின்றான்.  இறையருளை அடைவதற்குரிய பக்குவம் அடையாத ஆன்மாக்களுக்கு இறைவன் அருள் செய்யாது, அவ் ஆன்மாக்கள் பக்குவம் அடையும் காலத்தில் அருள் செய்கின்றான். எனவேதான் இறைவனை வழிபடும் அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவனின் அருள் ஏற்றத் தாழ்வுடன் கிடைக்கிறது.  இக்கருத்தினை அருள்நந்தி சிவாசாரியார் சிவஞானசித்தியாரில் குறிப்பிடுகிறார் என்று ஆதீனக் குருமுதல்வர் அழகரடிகள் கூறி அப்பாடலின் கருத்தை விளக்கினார்கள்.  அப்பாடல் --


'இறைவனே அறிவிப்பானேல் ஈண்டு அறிவு எவர்க்கும் ஒக்கும்

குறைவுஅதி கங்கள் தத்தம் கன்மமேல் கோமான் வேண்டா

முறைதரு செயற்குப் பாரும் முளரிகட்கு இரவி யும்போல்

   அறைதரு தத்தம் கன்மத்து அளவினுக்கு அளிப்பன் ஆதி'

(பா. 232)

இப்பாடலின் பொருள்: இறைவனே தருவானேயானால் இவ்விடத்து அறிவு யாவர்க்கும் ஒரு தன்மையாய் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் அவை ஏற்றத் தாழ்வுகளால் நிகழ்கின்றனவே. அவ் ஏற்றத் தாழ்வுகள் அவரவர் கன்ம வினைக்கு நிகழ்வன என்றால், கோமகனாம் இறைவன் வேண்டாமே?( என்பது வினா) அவ்வாறு அல்ல. உழுதல், எருவிடுதல், விதைத்தல், நீர்பாய்ச்சல், காத்தல் என்ற முறைப்படிச் செய்யப் படுகின்ற செயல்களுக்கு ஏற்ப வயல் பயனைத் தருவது போலவும், பக்குவப்பட்ட தாமரை மொட்டுக்களைச் சூரியன் மலரச் செய்வது போலவும், இறைவன் கூறப்பட்ட ஆன்மாக்களுக்கு அவரவர் செய்த கன்ம வினைகளுக்கு ஏற்ப, மலபரிபாகம் பெற்ற நிலையில் அருளைக் கொடுப்பன் என்பதாகும். 

ஆதீனக் குருமுதல்வர் அழகரடிகள் இத்தகைய தெளிவான விளக்கத்தைத் தந்து என் மடமையைப் போக்கிய அந்த நாள் இன்றுவரை என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.  இதனைப் பல மேடைகளில் நான் கூறி இறையருளையும், குருவருளையும் பெற்று வருகின்றேன்.  

திருச்சிற்றம்பலம்.

--------------------------------------------


சித்தியாரில் காரண மாயை

முனைவர். பழ.முத்தப்பன்,

திருச்சிராப்பள்ளி. 

திருக்குறள் பீடத்தின் முதலாம் ஞானாசிரியர் அடிகளார் அவர்களிடம் ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பதுகளில் சிவஞான சித்தியார் பாடங் கேட்ட பொழுது, கிடைத்த தெளிவின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகிறது. சைவ சித்தாந்தக் கொள்கைகளில் மாயை என்ற சொல் குறிப்பிடத் தக்கதாகும். இறைவனின் படைத்தல் தொழிலுக்கு முதற்காரணமாக அமைவது மாயை என்ற ஆற்றலாகும். அது மட்டுமல்லாது ஆன்மாவைப் பிணிக்கின்ற மலங்களில் ஒன்றாகவும் மாயை குறிக்கப் பெறுகிறது. இவ்வாறு இரண்டு இடங்களில் மாயை என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது.  

சென்ற கட்டுரையில் இறைவனின் படைத்தல் தொழிலுக்குச் சித்தாந்த அடிப்படையில் துணைக் காரணங்களாக அமைவன ஆன்மாவின் வினையும், இறைவனின் திருவருளாகிய சத்தியும் என்பதோடு அருணந்தி சிவாசாரியார் கருத்துப்படிக் காலமும் துணைக் காரணமாக அமைவதைக் கண்டோம்.  

ஒரு பொருள் தோன்றுகின்ற காரியத்திற்குக் காரணங்களாக மூன்று குறிக்கப் பெறுகின்றன.  காரியப் படுத்தப்படும் காரியத்திற்கு முதற்காரணம் என்றும், துணைக்காரணம் என்றும், நிமித்த காரணம் என்றும் அவை குறிக்கப் பெறுகின்றன.  இறைவனின் படைப்புத் தொழிலுக்குத் துணைக் காரணங்களாக வினையும், திருவருளும், காலமும் குறிக்கப் பெற்றதால், முதற் காரணமும் நிமித்த காரணமும் வேண்டும் என்பது பெறப்படுகிறது. உலகத் தோற்றத்திற்கு நிமித்த காரணன் சிவபெருமான்தான் என்பதைச் சிவஞான சித்தியாரின் முதல் சூத்திரம் குறிப்பதோடு, மாயை என்பதை முதல் காரணமாகக் குறிக்கிறது. அதற்குரிய பாடல், 

    'தோற்றமும் நிலையும் ஈறும் மாயையின் தொழிலது என்றே

சாற்றிடும் , உலகம்;, வித்துச் சாகாதி அணுக்க ளாக

ஏற்றதேல், ஈண்டு நிற்கும், இல்;லதேல், இயைவது இன்றாம்,

மாற்றம்நீ மறந்தாய், இத்தால் மாயையை மதித்தி டாயே. ' (34)


இப்பாடலில் அருணந்தி சிவாசாரியார் உலகத் தோற்றத்திற்கு முதற் காரணம் மாயை என்பதை உரையளவையாலும் அதாவது உலகமாகிய வேதங்கள் குறிப்பிடுகின்றன என்றும், காட்சி அளவையில் விதையினை எடுத்துக் காட்டியும் நிறுவுகிறார். இப்பாடலின் பொருள் - தோற்றம், நிலைத்தல், இறுதி என்ற முத்தொழிலும் மாயையினது செயலே என்று உலகமாகிய வேதங்கள் கூறுகின்றன. மேலும் விதையினிடத்தில் சூட்சுமமாக இருந்த கிளை, இலை ஆகியவைகள் மண்ணில் விதைக்கப் பெற்ற பிறகு அவை தூலமாக வெளிப்படுகின்றன. அதுபோலத்தான் மாயை சூட்சுமமாக இருந்து தூலமாகிய உலகத் தோற்றத்திற்குக் காரணம் ஆகிறது.  இவ்வாறு இல்லை என்றால் உலகம் தோன்ற முடியாது. இதை மாணவனாகிய நீ மறந்து விட்டாய். மாயையை மதிக்க வேண்டும் என்பதாகும்.  எனவே சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான இல்லது தோன்றாது, உள்ளது அழியாது என்ற சற்காரிய வாதம் இப்பாடலில் அருணந்தி சிவாசாரியாரால் குறிப்பாக உணர்த்தப் பெறுவதையும் உணரலாம். 

மாயை என்ற சொல்லுக்கு 'மாயா என்ற வடசொல் தமிழில் மாயை என வந்துள்ளது. மா – என்பது ஒடுங்குதல், யா – என்பது வருதல். எனவே உலகம் ஒடுங்குவதற்கும் மீள வருவதற்கும் இடமாய் உள்ளது என்பது மாயை என்ற சொல்லின் நேர் பொருளாகும்.' ( சித்தாந்த விளக்கம், ப.169) என்று ஆ.ஆனந்தராசன் அவர்கள் குறிப்பிடுவார்கள். இதன் அடிப்படையில் உலகம் ஒடுங்கித் தோன்றுகின்ற காரியத்திற்கு மாயை முதற்காரணம் என்று அறியலாம். அத்துடன் சற்காரிய வாதத்தின் சிறப்பையும் கீழ்வரும் பாடலில் அருணந்தி சிவாசாரியார் குறிப்பிடுவார். 


'மாயையின், உள்ள வஞ்சம் வருவது போவது ஆகும்,

 நீ அது இங்கு இல்லை என்னில் நிகழ்ந்திடும் முயலின் கோடு,

 போய்உகும் இலைகள் எல்லாம் மரங்களின் புக்குப் போதின்,

 ஆயிடும், அதுவும் என்னில் காரணம் கிடக்க ஆமே'  (35)


இப்பாடலின் சிறப்பை எடுத்துக் காட்டுவதே கட்டுரையின் அடிப்படை நோக்கம். வஞ்சம் என்பது பிரபஞ்சத்தைக் குறிக்கும்.  இல்லது தோன்றாது என்ற சற்காரிய வாதத்தின் முதற் பகுதிக்கு மாயை இல்லாது உலகம் தோன்றாது என்ற கருத்தை வலியுறுத்த, முயலுக்கு இயற்கையிலேயே இல்லாத கொம்பு தோன்றாது என்ற உவமையை அருணந்தியார் எடுத்துக் காட்டுகிறார். அதுபோல உள்ளது தோன்றும் என்ற சற்காரியவாத பிற்பகுதிக்கு மரத்தில் உதிர்ந்த இலைகள் மக்கி உரமாகி மரத்தைச் சார்ந்து , மீண்டும் இலையாக வெளிப்படுகிறன என்ற உவமையையும் எடுத்துக் காட்டுகிறார்.  எனவே மாயை என்ற முதற்காரணப் பொருள்தான் உலகத் தோற்றத்திற்கு முதற் காரணம் என்பதோடு , சற்காரிய வாதத்தை நிரூபணம் செய்வதற்கு இப்பாடலை அருணந்தியார் குறிப்பிடுகிறார் எனலாம்.  

இந்த மாயை என்பது சூட்சுமமாக இருந்து ஆன்மாவால் அறியப்படாத பொருளாக அமைகிறது. உலக வழக்கில் மாயமாய் மறைந்தது என்றால் யாரும் அறியாதபடி ஒருபொருள் மறைந்ததைக் குறிப்பிடுவார்கள். அதுபோல உலகத் தோற்றத்திற்கு இறைவனுக்கு முதற்காரணமாய் அமைகின்ற பொருளை நம்மால் அறிய முடியாது. இறைவன் தான் அதனை அறிவான், நாம் அறிந்திருந்தால் உலகத்தில் ஒரு பொருளான உடம்பின் தோற்றத்திற்குரிய எலும்பு, தசை ஆகியவற்றிற்குரிய மூலப்பொருளை நாம் அறிந்து புதிதாகத் தோற்றுவித்துப் பழுது பட்டவர்க்கு இணைத்து விடலாம். அவ்வாறு இணைக்க முடியவில்லையே. பழுது பட்டவரின் உறுப்புக்கு மற்றொருவர் உடலிலிருந்து உடலின் உறுப்புக்களை எடுத்து இணைக்கிறோம்.  எனவே மாயை என்பதற்கு நம்மால் அறியமுடியாத ஒரு சூட்சுமப் பொருள் என்பதை உணரவேண்டும்.  மாiயாயகிய முதற்காரணத்தை நிமித்த காரணனாகிய இறைவன் அறிந்து தன் படைத்தல் தொழிலுக்குரிய பொருளாகிய தனு, கரண, புவன , போகங்களைப் படைக்கிறான் என்பது உறுதியாகிறது. 


--------------------------------------------------------------------- 






இவற்றின் முதற்காரணம் அறிய முடியாததால் , நம்மால் அவற்றைப புதிதாகப் படைக்க முடியாது.  பழுதுபட்டவரின் உடம்பில் இணைக்கிறோம். எனவே அருணந்தி சிவாசாரியாரின் உவமைகளின்படி உலகத் தோற்றத்திற்கு முதற் காரணமாக மயை அமைகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 



































 சித்தியாரில் காலம்.

சித்தாந்த செம்மணி,முனைவர்.பழ.முத்தப்பன்,

திருச்சிராப்பள்ளி.


குருகுல ஆதீனக் குரு முதல்வர் அவர்களிடம் சித்தியார் பாடங் கேட்ட கால கட்டத்தில், கிடைத்த செய்தியை மீண்டும் மீட்டுருவாக்கம் என்ற நிலையில் சிறிது நினைவுபடுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும். சித்தாந்த நூல்கள் வரையறுத்துக் காட்டும் முப்பத்தாறு தத்துவங்களுள் காலம் என்பது ஒரு தத்துவமாகும். அசுத்தமாயையிலிருந்து தோன்றுகின்ற வித்தியா தத்துவங்களில் காலம் என்பது ஒன்றாகும்.  இது பற்றிய விளக்கத்தைச் சிவஞான சித்தியாரில், அருணந்தி சிவாசாரியார், 

'மாயையின் காலமோடு நியதி பின் கலாதி தோன்றும்

ஆய அக்காலம் மூன்றாய், ஆக்கியும் அளித்தும் போக்கிக்

காயமோடு உலகுக்கு எல்லாம் காலசங் கையினைப் பண்ணி,

நாயகன் ஆணை யாலே நடத்திடும் சகத்தை எல்லாம்' (சுப.144)


என்ற பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.   இப்பாடலுக்கு மாதவச் சிவஞான முனிவரின் உரையின் அடிப்படையில், தூத்துக்குடி முத்தையா பிள்ளை அவர்கள் உரை எழுதும் பொழுது, 'அசுத்த மாயையில் இருந்து கால தத்துவம், நியதி தத்துவம், கலா தத்துவம் முதலியன முறையே தோன்றவனவாகும். அவற்றுள் ஒன்றாகிய கால தத்துவம் முதல்வன் ஆணையால் இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என முத்திறத்தில் செயல்படும்.  அக்காலம் தோற்றம் , திதி, சங்காரம் என்னும் முத்தொழிலை உடையதாகும்.  மேலும் உடலும் உலகமும் ஆகிய காரியப் பிரபஞ்சம் அனைத்தையும் கால வரையறைக்கு உட்படுத்தி உலகத்தை எல்லாம், கன்மத்தின் அளவில் நடத்தி வைக்கும் 'என்ற எழுதியுள்ளார். இதன்படி கால தத்துவம் இறைவனால் படைக்கக் கூடிய தனு, கரண, புவன, போகம் என்ற நான்கிற்கு அடிப்படைத் தத்துவமாக அமைகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இவ்வாறு கூறுவது அனைத்துச் சாத்திர நூல்களின் அமைப்பாகும். 


இந்தச் செய்தியோடு அருணந்தி சிவாசாரியார் மேலும் ஒரு விபரத்ததை முதல் சூத்திரத்தின் முதல் அதிகரணத்திற்கு விளக்கம் தரும் பொழுது பதிவு செய்துள்ளார்.  உலகமானது தோன்றி நின்று அழியக்கூடிய பொருளாகும் என்பதை விளக்க வரும்பொழுது, கீழ்வரும் பாடலை அருளிச் செய்துள்ளார். 

     'ஓர்இடம் அழியப் பின்னும் ஓர் இடம் நிற்கும், ஒக்கப்

   பாரிடம் அழிவது இன்றாம் என்றிடில், பயில் வித்து எல்லாம்

   கார்இடம் அதனில் காட்டும் அங்குரம், கழியும் வேனில்,

   சீர்உடைத்து உலகு, காலம் சேர்ந்திடப் பெயர்ந்து செல்லும்'

(சுப. 29)


இப்பாடலுக்கு முத்தையா பிள்ளை அவர்கள் உரை, 'நிலம், மலை, கடல் முதலிய வடிவுகளை உலகம் அவயப் பகுப்புகளாக உடைமையால், தோன்றி நின்று அழிதல் பெறப்படுவதாகும். மேலும் நம்மால் பார்க்கப் படுகின்ற உலகம், ஒருசேர அழியும் என்று கூறுவது பொருத்தமோ? ஒருசேர அழியும் என்று கூறினால் உலகம் அநாதியானது என்று கருதப்படும்.  மேலும் அழிந்து மீளத் தோன்றுவதற்குச்  சம்பந்தம்; கூற முடியாது போகும்.  எனவே உலகம் ஒருசேர அழியாது என்றும் ஒருபக்கம் அழிகின்ற பொழுது, பிறிதொரு பக்கம் அழியாது நிற்கும் என்று மீமாம்ச மதத்தார் கூறினால் அது பொருந்தாது. ஏனென்றால் பூமியில் விதைக்கும் விதைகள் எல்லாம் கார்காலத்தில் முளைகளைத் தோன்றும், வேனிற் காலத்தில் அழியும்.  தோன்றும் பொழுதும் அழியும் பொழுதும் ஒருசேரத் தோன்றி அழிகின்றன. அதுபோலச் சடப்பொருளாகிய உலகமும் அழிவதற்குரிய காலம் நேரும் பொழுது ஒருசேர முழுமையாக அழியும்' என்பதாகும். 


இப்பாடலை அடுத்து மேலும் ஒரு கேள்வியைக் கேட்டு அருணந்தி சிவாசாரியார் யாரும் கூறாத பதிலைக் குறிப்பிடுகிறார். அதனைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 


'காலமே கடவு ளாகக் கண்டனம், தொழிலுக்கு என்னில்,

காலமோ அறிவுஇன் றாகும், ஆயினும் காரியங்கள்

காலமே தரவே காண்டும், காரணன் விதியி னுக்குக்

காலமும் , கடவுள் ஏவ லால்,துணைக் கரணம் காண்'

(சுப. 30)


இப்பாடலுக்கு முத்தையா பிள்ளை அவர்களின் உரை – 'முன் பாடலில் கூறியவாறு உரிய காலம் வந்து தோன்றி உலகம் அழிதலால், உலகத்தின் தோற்றக் கேடுகளுக்குக் காலமே கடவுளாக முடியும் என்று மீமாம்சர் கூறலாம். அவ்வாறு கூறுவது சரி என்றாலும், காலம் என்பது அறிவற்ற சடப் பொருள் ஆகும். அதனால் எதனையும் செய்ய இயலாது.  ஆனால் நாம் தோற்றக் கேடுகளைப் பார்க்கின்றோமே என்றால், முற்றறிவு உடைய முழுமுதற் கடவுளின் ஆணையால் காலம் தோற்றக் கேடுகளைச் செய்கிறது.  எனவே காலம் உலகத்தின் தோற்றக் கேடுகளுக்கு நிமித்த காரணனாகிய இறைவனுக்குத் துணைக் காரணமாக அமைகிறது எனலாம்' என்று எழுதுவார். 


மேற்கூறிய இரண்டு பாடல்களால் தனு, கரண, புவன, போகங்களின் தோற்றத்திற்கும், நிலைத்து நிற்பதற்கும் , ஒருசேர அழிவதற்கும்  நிமித்த காரணனாம் முழுமுதற் கடவுளாகிய இறைவனுக்குக் காலம் ஒரு துணைக் காரணமாக அமைகிறது என்று காலத்தை அருணந்தி சிவாசாரியார் நிமித்த காரணனாகிய கடவுளுக்குத் துணைக் காரணமாகப் பதிவு செய்துள்ளமையை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த வழக்கில்தான் நாட்டு வழக்கில் கடவுள் செய்யாததைக் காலம் செய்யும் என்று குறிப்பிடுகின்றனர் போலும். மேலும் உலகச் செயல்களுக்குக் காலம் இன்றியமையாதது என்பதை வலியுறுத்த, திருவள்ளுவப் பேராசான் காலம் அறிதல் என்ற அதிகாரத்தைத் திருக்குறளில் சேர்த்துள்ளார் எனத் தெரிகிறது.  

எனவே அருணந்தி சிவாசாரியாரின் கருத்துப்படி காலம் என்பது முப்பத்தாறு தத்துவங்களில் ஒன்றாக இருப்பதோடு, இறைவனின் தொழிலுக்கு ஒரு துணைக்காரணமாகவும் அமைகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இது அவரின் தனித்தன்மை அன்றோ. 

------------------------------------







 சித்தியாரில் சற்காரியவாதம்

முனைவர். பழ. முத்தப்பன்

திருச்சிராப்பள்ளி.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளில் திருக்குறள் பீடம் ஆதீனத்தின் திருமடத்தில் குருமுதல்வர் அழகரடிகள்  அவர்களிடம் சிவஞான சித்தியார் நூலைப் பாடம் கேட்டுவரும் நாளில் ஒருநாள், அடிகளிடம் சைவசித்தாந்த அடிப்படைக் கொள்கையான சற்காரியவாதம் பற்றிய விளக்கத்தை அறிந்து கொள்ள முயன்றேன்.  


அடிகள் சித்தாந்தத்தின் அடிப்படையைச் சுருக்கமாகக் கூறுங்களேன் என்றார்கள்;. அதற்குப் பதி,பசு, பாசம் என்ற மூன்றும் அநாதியானது, என்றும் அழியாதது என்று பதில் கூறப் பெற்றது.  உடனே அடிகள் இன்னும் சுருக்கமாகக் கூறுங்கள் என்று கூறினார்கள். அதற்கு 'இல்லது தோன்றாது, உள்ளது அழியாது' என்று பதில் சொல்லப் பெற்றது.  அதனை விளக்குவதுதான் சற்காரியவாதம் என்று அடிகள் குறிப்பிட்டார்கள். மேலும் அவர்கள் கூறிய விளக்கம் இக்கட்டுரையாக வெளிவருகிறது.


பௌத்த மதத்தார் உலகம், உயிர், கடவுள் என்ற மூன்றும் உள்ளதும் இல்லை இல்லதும் இல்லை, அவை சூன்யம் என்று கூறுவர். அக்கருத்தை மறுக்க வந்த சைவ சித்தாந்தம், உலகம் பற்றிய விளக்கத்தைக் கூறும் பொழுது, உலகம் என்றும் உள்ளது என்று விடைகூறி, அதற்குரிய விளக்கத்தைத் தரும்.  அதாவது உலகம் காணப்படாத நுண் அணுக்களிலிருந்து (மாயையிலிருந்து) தோன்றி -  தோன்றல், இருத்தல், அடங்குதல் என்ற மூன்று நிலைகளை அடைகின்றது.  அதாவது மாயையாகிய காணமுடியாத நுண் அணுவிலிருந்து காணப்படுகின்ற பருப்பொருளாய் வளர்ந்து, மீண்டும் ஒடுங்கும் போது நுண் அணுவாக ஒடுங்குகிறது. இந்தத் தொழிலைச் செய்வதற்கு ஒருவன் வேண்டும். அவன்தான் இறைவன். இதனை யாருக்காகத் தோற்றுகிறான் என்றால், தானே தோன்றிய உயிர்களுக்காக இத் தொழிலைச் செய்கின்றான்.  அவ்வாறு தோற்றுகின்ற இறைவனும் தானே தோன்றியவன் ஆவான் என்று விளக்கத்தைக் கூறுகிறது. இதன் சுருக்கம் - உலகம் மாயையின் நுண் பொருளிலிருந்து தோன்றி பருப்பொருளாய் நின்று (காணப்படும் பொருளாய்) மீண்டும் ஒடுங்கும் போது நுண்பொருளில் ஒடுங்குகிறது.  இதனை விளக்குவதுதான் சற்காரியவாதம். 


இதனை முதன் முதலில் வகுத்துக் காட்டியவர் ஞானாமிர்தம் என்ற நூலை அருளிச் செய்த வாகீச முனிவர் ஆவார்.  அந்நூலின் தந்து முதல என்று தொடங்கும் 22 – வது பாடலில்,

'ஒரு பொருள் உற்பத்தி ஆகிய காரியப் பொருளுக்கு முன் காரணப் பொருள் உள்ளது' என்பதை விளக்க வருகின்ற பொழுது, இச்சற்காரியவாதம் கூறப் பெறுகிறது. 

பஞ்சு என்ற காரணப் பொருளால் புடவை என்ற காரியப் பொருள் தோன்றுகிறது.  காரணமாகிய பஞ்சினைப் பார்த்தால் புடவை தோன்றாது. அப்பஞ்சை நெய்வதற்குரிய கருவிகள் மூலம் நெசவாளன் தொழிற்படுத்தும் பொழுது புடவை உண்டாகிறது. பஞ்சில் இருந்து புடவை தானே தோன்றாது.  அதைப் புடவையாக்க நெசவாளி வேண்டும். அவன் தானே தோற்றிவிட முடியாது. கருவிகளாகிய துணைக் காரணங்களைக் கொண்டுதான் புடவையை உற்பத்தி செய்ய வேண்டும். நெசவாளன் இல்லாமல், பஞ்சும் இல்லாமல், நெசவுக் கருவிகள் புடவையைத் தானே தோற்றுவிக்க முடியாது.  எனவே பஞ்சிலிருந்து புடவை தோன்ற வேண்டுமானால், பஞ்சில் உள்ள நுண் பொருள்களிலிருந்து கருவிகளால் நூல் எடுக்கப் பெற்று, அதனைக் கருவிகளால் நெசவாளன் நெய்து, புடவை உண்டாகின்றது. இது போலத்தான் இறைவன் மாயை என்ற நுண் பொருளில் இருந்து, உலகம் என்ற காணப்படுகின்ற பருப்பொருளை உண்டாக்குகிறான் என்று அப்பாடல் குறிப்பிடுகிறது. 


(இக்கருத்தை அடிகள் கூறிய பொழுது அந்நூலைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடான ஒளவை துரைசாமிப் பிள்ளையின் பதிப்பை வாங்கிப் படித்து, அந்நூலின் தாக்கத்தால் 2013 - ல் எம்மால் உரிய எளிய உரையுடன் வெளியிடப் பெற்று, அதன் இரண்டாம் பதிப்பு சென்னை உமா பதிப்பகத்தாரால் 2014-ல் வெளியிடப் பெற்றது. )


மேலும் அடிகளார் விளக்கும் பொழுது, சற்காரிய வாதத்தை மெய்கண்டார் முதல் சூத்திரத்தின் இரண்டாவது அதிகரணத்தில், முதல் உதாரண வெண்பாவாகத் தருகிறார் என்றார்கள். 

'இலயித்த தன்னில் இலயித்த தாம் மலத்தால்

இலயித்தவாறு உளதா வேண்டும்'


என்பது   அவ் உதாரணப் பாடலின் முதற்பகுதியாகும். இதன் பொருள் - ஒரு உள்ள பொருள் ஒடுங்கும் காலத்தில் ஒடுங்கும். (அழியும் காலத்தில் அழியும்). அவ்வாறு காரணத்தில் ஒடுங்கிய ஒரு பொருள், அவ் ஒடுங்கிய பொருளில் இருந்து படைப்புக் காலத்தில், படைப்பவனால் (இறைவனால்) மீண்டும் தோன்றும்.  அவ்வாறு ஒடுங்கித் தோன்றுவது ஏன் என்றால் மலத்தால் ஆகும். அதாவது உள் பொருளாகிய ஒருபொருள் கன்ம மலத்தால் பரிபக்குவம் அடைதற் பொருட்டு ஒடுங்கி, ஆணவ மலம் பரிபக்குவமாதற் பொருட்டு மீள உண்டாகும்.  இவ்வாறு ஒருபொருள், எவ்வாறு ஒடுங்கிற்றோ அவ்வாறே தோன்றுவது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதாகும். இதன் சுருக்கமே உள்பொருள் அழியாது, இல்பொருள் தோன்றாது என்ற சற்காரியவாதம் என்பதாகும்.


இதனை விளக்கவந்த சிவஞான சித்தியார்,

       'மாயையின் உள்ள வஞ்சம்,

              வருவது போவது ஆகும்,

            நீ அது இங்கு இல்லை என்னில்,

நிகழ்ந்திடும், முயலின் கோடு,

        போய்உகும் இலைகள் எல்லாம்

மரங்களின் புக்குப் போதி

        ஆயிடும், அதுவும், என்னில்

காரணம் கிடக்க ஆமே' (பா.35)


என்ற இப்பாடலை அடிகளார் கூறிச் சித்தியார்தான் சற்காரிய வாதத்தைத் தெளிவாக ஒரே பாடலில் குறிப்பிட்டுள்ளது என்றார்கள். அதாவது ஞானாமிர்தத்தில் உள் பொருளாகிய பஞ்சில் உள்ள நூல் காரியமாகிய புடவையாக ஆகிறது என்று சொல்ல, அதன் அழிவு பற்றிக் கூறவில்லை.  சிவஞானபோதம் அழிந்து தோன்றுவதற்குக் காரணம் மலங்கள் என்று கூறுகிறது. சித்தியார் இல்லாத பொருள் தோன்றாது என்பதற்கு முயலிடத்தில் கொம்பு தோன்றுவதற்குரிய அணுக்கள் இல்லாததால் கொம்பு தோன்றவில்லை என்றும், இலைகள் உதிர்ந்து உரமாகி அது மீண்டும் மரத்தில் சேர்ந்து இலைகளாக உருவாகிறது என்று உள்பொருள் தோன்றுகிறது என்றும் விளக்குகிறது என்று சிவஞான சித்தியாரின் பெருமையைக் குறிப்பிட்டார்கள். 


சித்தியார் பாடலின் பொருள் - மாயையினிடத்தில் சூட்சுமப் பொருளாய் ஒடுங்கி இருந்த உலகம், பின் தூல உருவமாகத் தோன்றி ஒடுங்குவதாகும். இத்தகைய சற்காரிய வாதக் கொள்கையைக் கொள்ளாது, இல்லது தோன்றும் என்று கூறினால் முயலிடத்தில் கொம்பு தோன்ற வேண்டும். மரத்தில் முதிர்ந்து உதிர்ந்த இலைகள் எல்லாம் மண்ணி;ல் விழுந்து உரமாகி , மரமாக இலையாக மீண்டும் தோன்றுகின்றது. (உள்ளது தோன்றும் என்பது இதன் கருத்து_.. அதுபோலப் பிரபஞ்சமும் மாயையிலே ஒடுங்கி மீளத் தோன்றும். உதிர்;ந்த இலைகள் சூட்சுமப் பொருளாகிய காரணத்திலிருந்து தோன்றி நின்று பின் ஒடுங்கி மீண்டும் தோன்றுகிறது.  எனவே காரணத்திலிருந்து காரியம் தோன்றி, மீண்டும் காரணத்தில் ஒடுங்குகிறது என்பதாகும் என்று அடிகளார் விளக்கினார்கள். 


அடிகளார் அவர்களிடம் பாடம் கேட்கும் பொழுது அவர்கள், தன் நுண்மாண் நுழைபுலத்தால் , அவர்களிடத்தில் இறையருள் உந்துவிப்பதால் பிற இலக்கியங்களுடன் ஒப்பிட்டு எளிமையாக விளக்கிக் கூறும் மாண்பினை உணரலாம். 

மேற்கூறப் பெற்ற செய்திகளால் சிவஞானசித்தியார் சற்காரிய வாதம் பற்றி 35-ஆம் பாடலில் விளக்கும் பொழுது உள்ளது தோன்றும் என்பதற்கு, இலையாகத் தோன்றிய ஒன்று மண்ணிலே அழிந்து பின் மீண்டும் மரமாக, இலையாக மாறுகிறது என்றும், இல்லது தோன்றாது என்பதற்கு முயலிடத்தே கொம்புகள் தோன்றுவதற்கு அணுக்கள் இல்லாததால் தோன்றவில்லை என்றும்,(கன்றுக்குட்டியினிடத்துக் கொம்பு தோன்றுவதற்கு அணுக்கள் இருப்பதால் பருவகாலத்தில் கொம்பு தோன்றுகிறது என்பது அருத்தாபத்தி) குறிப்பிட்டு விளக்கம் தருகிறது என்று கூறச் சற்காரிய வாதக் கொள்கை உணரப் பெற்றது.          ----------------------------------------




சித்தியாரில் ஆன்ம தண்டனை


முனைவர்.பழ.முத்தப்பன்,

  திருச்சிராப்பள்ளி.


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளில் மயிலம் தமிழ்க் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சிவஞானசித்தியார் ஆய்வு நூலாக எடுத்துக் கொள்ளப் பெற்றது.  சிவஞான சித்தியார் நூலைப் பாடங் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தி;ல் குருகுலம் திருக்குறள் பீடம் முதல்குரு தவத்திரு அழகரடிகள் அவர்களைச் சார்ந்து பாடம் கேட்கும் வாய்ப்பு இறையருளால் கிடைத்தது.  கல்லூரி விடுமுறை நாட்களில் குருகுலத்தில் தங்கிப் பாடம் கேட்கும் காலத்தில் ஒருவாரம் சனிக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை இரவே குருகுலம் சென்று தங்க நேரிட்டது. மறுநாள் சனிக்கிழமை காலைக் கடன்களை முடித்து, தவத்திரு அழகரடிகளின் சிவவழிபாட்டில் கலந்து கொண்டு உணவுக்கு முன்னால் சிவஞான சித்தியாரின் இரண்டாம் சூத்திரம் பற்றிய கருத்துக்களை விளக்கி அருள வேண்டும் என்று குருமுதல்வர் திருவடிகளை வணங்கி விண்ணப்பிக்கப் பெற்றது. அவர்கள் இரண்டாம் சூத்திரத்தின்  'கன்மத்தாணையில் அமர்ந்து செல்ல' என்ற தொடருக்கு அரியதொரு விளக்கத்தைத் தந்தார்கள்.  அதி;ல் ஒரு பகுதியை எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 


ஒரு ஆன்மா தன்னுடைய முன்வினைக் கன்மமும், அதன் பயன்களாகிய இன்ப துன்பங்களையும், மாயா காரியமான உடம்பு, உறுப்புக்கள் ஆகியவற்றைப் பெறுவதும்,  ஆன்மாவினுடைய பிறப்பு இறப்புக்கள் நிகழ்வதும் முதல்வன் ஆணையால் ஆன்மாவிற்கு அளிக்கப் பெறுகின்றன என்பது அத்தொடருக்குப் பொருள் என்று கூறினார்கள். அவ் விளக்கத்தைக் கேட்டு வழக்கம்போல் வினைகளே இன்ப துன்பங்களைத் தருகிறது என்றால், இறைவன் தேவiயில்லையே என்று கேள்வி எழுதிக் கேட்கப் பெற்றது. அதற்கு அவர்கள் சிரித்துக் கொண்டு உணவிற்குப் பின் இதற்குரிய விடையைக் கூறுவேன், உணவு உண்டு வாருங்கள் என்றார்கள். அவர்கள் ஆணையை ஏற்றுக் கொண்டு உணவு உண்டு வந்தபின் அவர்களைச் சார்ந்தேன். பசியாறி முடிந்ததா? என்று கேட்டபின், ஒரு விளக்கத்தைக் கொடுத்தார்கள்.  ஒரு உழவன் விளைந்திருக்கும் பயிர் நல்ல பலனைத் தருவதற்குத் தழை உரங்களையும், பூச்சிகொல்லி மருந்துகளையும் இடுகிறான் அல்லவா? அவை நேரடியாகப் பயிரைச் சார்வதில்லை. அவை வயலில் உள்ள நீரில் கலந்து , அழிந்து பின் நிலத்தின் திரிபால் உரமும், தீமை நீக்கமும் நிகழ்ந்து பயிருக்கு நல்ல விளைச்சலைத் தருகிறது அல்லவா?  எனவே தழையாகிய இன்பமும், பூச்சி கொல்லி மருந்தாகிய துன்பமும் நேரடியாகப் பயிருக்குச் செல்லாமல் அழிந்து பின் நிலத்தின் உதவியால் பயனைத் தருகின்றது. அதுபோல ஒரு ஆன்மா ஒரு பிறவியில் செய்த நல்வினை, தீவினைகளை அந்தப் பிறவியிலேயே அனுபவித்து அழித்து விடுகின்றன. அவை  இறைவனால்  பதிவு செய்து கொள்ளப் பெற்று, அவற்றின் பயன்கள் பின் அடுத்த பிறப்புகளுக்கு இறைவனுடைய சக்தியினால் இன்ப துன்பங்களாக அனுபவத்திற்கு வருகின்றன என்று கூறி, அதற்குரிய சிவஞான சித்தியார் பாடலை நினைவூட்டினார்கள். 


'செயல்களே பலத்தைச் செய்யும்;, தெய்வம்வேண்டா இங்கு என்னின்,

முயலும் இச்செயல்கள் இங்கே முழுவதும் அழியும், எங்கே

பயன் அளிப்பன? அழிந்தே பலன்களைப் பண்ணும் கெட்டே

வயல்இடும் தழையும் தின்னும் மருந்தும் பின்பலிக்கு மாபோல்'   (பா.107)


இப்பாடலின் பொருள் - இன்ப துன்பங்களாகிய வினைகளே தத்தம் பயன்களை அடுத்த பிறவியில் தரும், ஆதலால் பயனைத் தருவதற்கு இறைவன் வேண்டுவதில்லை என்றால்,

ஒரு பிறவியில் செய்த வினைகள் செய்த பொழுதே இப்பிறவியில் முழுவதும் கெட்டு அழியும். எவ்விடத்து நின்று அவை பயனைத் தரும். வயலில் இட்ட தழைகளும், உண்ணப்பட்ட மருந்தும் கெட்டுப் பின் பயன் தருமாறு போல வினைகளும் கெட்டே, பின் பயன் தருவனவாம் என்பதாகும். 


இப்பொருளைக் கேட்ட பிறகு மீண்டும் ஒரு வினா எழுந்தது. உலகில் ஆன்மாக்கள் பெரிதும் துன்பங்களையே அனுபவிக்கின்றனவே, அந்தத் துன்பங்களையே இறைவன் தருவதற்குக் காரணம் என்ன? என்று எழுதிக் கேட்கப் பெற்றது. அந்த நேரத்தில் குருகுலம் ஆண்கள் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் அடிகள்பால் வந்து நின்று, புதிதாகக் கட்டப்பெறும் கட்டிடத்தைப் பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே தவத்திரு அடிகளாரும் என்னையும் உடன் அழைத்துக்கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டார்கள். அப்பொழுது மதுராந்தகம் செல்லும் நெடுஞ்சாலையைக் குறுக்கே கடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். 


அவ்வாறு நாங்கள் மூவரும் சென்ற பொழுது, அந்தச் சாலையின் ஓரத்தில் இரண்டு புளிய மரங்களுக்கு நடுவில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு வாழுகின்ற குடும்பத்தின் தாய் ஒருத்தி, தன்னுடைய ஐந்து வயது மகனைப் புளிய விளாரினால் கடுஞ்சொல் சொல்லிக் கொண்டே அடித்துக் கொண்டிருந்தாள். அதனைக் கண்ட அடிகளார் என்னை அழைத்து அந்தத் தாய் சிறுவனை அடிப்பதற்குக் காரணத்தைக் கேட்டுவா என்றார்கள். அத்தாயின் அருகில் சென்று ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்கப் பெற்றது. அதற்கு அவர் தந்தையுடன் கடைக்கு வேலைக்குச் செல் என்று கூறினேன். அவன் என் சொல்லைக் கேட்காது தெருவில் விளையாடிக் கொண்டே இருந்தான். ஆதலால் அவனை அடிக்கிறேன் என்று கூறி இனி மேலாவது அவன் திருந்துவான் என்று நினைக்கிறேன் என அவர் கூறிய அப்பதிலைத் தவத்திரு அடிகளிடம் பணிவுடன் கூறினேன். அடிகளார் அவர்கள் பள்ளிக்குச் சென்றவுடன் என்னை அருகில் அழைத்து நீங்கள் கேட்ட கேள்விக்கு இந்தத் தாயினுடைய பதில் தான் பதிலாகும் என்று கூறி, இப்பதிலைத் தாய் மட்டும் கூறவில்லை. சிவஞான சித்தியாரின் ஆசிரியர் அருணந்தி சிவாசாரியாரும் பாடலாகக் கூறுகின்றார் என்று பாடலைக் கூறி விளக்கமும் தந்தார்கள். காட்சி அளவையோடு அவர்கள் தந்த விளக்கம் என் நெஞ்சத்தி;ல் பதிவு செய்யப் பெற்றது.  அப்பாடல் - 

'தந்தைதாய், பெற்ற தத்தம் புதல்வர்கள் தம்சொல் ஆற்றின்

வந்திடா விடின், உறுக்கி வளாரினால் அடித்து, தீய

         பந்தமும் இடுவர்;, எல்லாம் பார்த்திடின், பரிவே ஆகும்,

இந்த நீர் முறைமை யன்றோ-- ஈசனார்; முனிவும், என்றும்?'  (பா.106)

இப்பாடலின் பொருள் - தந்தை தாயர்கள், தம்முடைய புதல்வர்கள் தம்முடைய சொற்களின் வழியில் நடக்கவில்லை என்றால், அவர்கள் திருந்துவதற்காகச் சிறு குச்சியால் (புளியம்விளாரால்) அடித்துக், கொடிய விலங்கும் இடுவர். (கட்டிப்போடுவர்) இதனை ஆராயுமிடத்து இந்தச் செயல்கள் எல்லாம் தாயின் கோபம் போல் தோன்றினாலும், புதல்வர்கள் திருந்த வேண்டும் என்ற அன்பு காரணமான செயல்களாகும்.  முதல்வன் ஆன்மாக்களுக்கு அளிக்கும் துன்பமும்  இத்தன்மையே போலும் முறைமை உடையதாகும் என்பதாகும். 


இப்பொருளை அவர்கள் கூறி, மேலும் சுருக்கமாகப் பொருள் சொல்லும் பொழுது கீழ்க்கண்டவாறு கூறினார்கள். 

'ஒரு ஆன்மா முன் பிறவியில்  செய்த நல்வினை தீவினைக்கு ஏற்ப , இப்பிறவியில் இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றது. அவ்வாறு அனுபவிக்கும் பொழுது அந்த இன்ப துன்பங்களைத் தானே அனுபவிக்க இயலாது. இறைவன்தான் தன் ஆணையால் அனுபவிக்க அளிக்க முடியும். அதாவது உடலாக, உறுப்புக்களாக, இன்ப துன்பங்களாக, பிறப்பு இறப்புக்களாகத் தருகின்றான். அவ்வாறு தரும்பொழுது அவன் தருகின்ற துன்பங்கள் ஒரு தாய் தவறு செய்யும் தன் மகனைத் தண்டித்துத் திருத்துவது போல, முன் பிறவியில் செய்த வினைகளை இப்பிறவியில் ஆன்மாவை அனுபவிக்கச் செய்து, முன் தீவினைப்பயன்களை அழித்து அருளைத் தருகின்றான்'  என்று கூறிப் பின் ஒரு செய்தியை வலியுறுத்தினார்கள்.

அதாவது ஒரு ஆன்மா ஒரு பிறவியில் இன்பத்தை அனுபவிப்பது மட்டும் இறைவன் அருளல்ல. வினை நீக்கத்திற்காக அனுபவிக்கும் துன்பங்களும் இறைவனுடைய அருளே ஆகும் என்று உறுதிபடக் கூறினார்கள்.  இதனைக் கேட்டதும் உள்ளத்தில் இனி ஏற்படும் துன்பங்களை இறைவன் அருளாகத்தான் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இத்தகைய விளக்கத்தைத் தந்த திருக்குறள் பீடத்து முதல் ஞானாசிரியரின் திருவுருவமும் அவர்களின் கருத்தும் மனதில் நீங்கா இடம்பெற்றன.

----------------------------------------------------------------------------------

ஐந்தாம் சூத்திரம்

சித்தாந்த செம்மணி.முனைவர்.பழ.முத்தப்பன்,

திருச்சிராப்பள்ளி.


'சிவஞான போதமாம் இந்நூல் மெய்யுணர்வு பெற்று அருட் கண்ணால் பொருள் உண்மை கண்ட பெரியார் தந்த பெருந்தனம்' (பாளையங்கோட்டை, திரு.அ. முத்தையா பிள்ளை, பிஏ.பிஎல் - சிவஞானபோதக் கட்டுரை, ப.6, தருமையாதீன வெளியீடு, 1944) என்று போற்றிப் புகழப் பெறுகின்ற சிவஞ hன போதத்தின் ஐந்தாம் சூத்திர விளக்கமாக இக்கட்டுரை அமைகிறது.  சிவஞானபோத மெய்கண்ட நூலிற்கு மாதவச் சிவஞான முனிவர் படைத்து அருளிய சிற்றுரைக்கும் பேருரைக்கும் மேலான பொருள் கூற இயலாது.  எனவேதான் பத்தொன்பது , இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழகத்துச் சித்தாந்த அறிஞர்கள் , சிவஞான போதத்திற்குப் புத்துரை காணாது மாதவச் சிவஞான முனிவரின் இரண்டு உரைகளுக்கும் விளக்கம் தந்தார்கள். அவற்றுள் குறிப்பிடத் தக்கன –


1.  சிவஞான போதச் சிற்றுரை விளக்கம் - தூத்துக்குடி. பொ. முத்தையா பிள்ளை,

சென்னை, சைவ வித்தியானுபாலன இயந்திரசாலை, 1918.


2.  சிவஞான போத மூலமும் சிற்றுரையும் - ஒளவை. சு.துரைசாமிப் பிள்ளை,

அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1968.


 3. சிவஞான பாடியத் திறவு- கா. வச்சிரவேலு முதலியார், சென்னைப் பல்கலைக் 

கழகம், 1977.


4.  சிவஞான மாபாடியம் , விளக்கம் - சி.சு.மணி, 1994


5.  சிவஞான போதம், வழித்துணை விளக்கவுரை – முனைவர்,ஆ.ஆனந்தராசன்,

அருள்நந்தி சிவம், அருட்பணி மன்றம், 1994.


  இத்தகைய நூல்களையும் மாதவச் சிவஞான முனிவரின் நூல்களையும் அடிப்படையாகக் கொள்ளப் பெற்று, சிவஞானபோத ஐந்தாம் சூத்திரத்தின் பொருள் அமைப்பைப் பகுத்தும், வகுத்தும் காட்டுவதற்கு முற்படுவது இக்கட்டுரை. 


சூத்திர முறைமை :

தமிழ் இலக்கண நூல்களின் உரையாசிரியர்களும், திருக்குறள் உள்ளிட்ட இலக்கிய உரையாசிரியர்களும் தங்கள்; உரையில் முதன்மைiயாகக் கூறுவது , தாங்கள் எடுத்துக்கொண்ட நூல்களில் உள்ள இயலும் அதிகாரமும் முன் அமைந்த  இயலும்; அதிகாரமும் கொண்டுள்ள  தொடர்பைப் பொருத்திக் காட்டுவார்கள்.  அதன் அடிப்படையில் ஐந்தாம் சூத்திரத்தின் முறை வைப்பை முதற்கண் அறிந்து கொள்ள வேண்டும். ஐந்தாம் சூத்திரத்தின் முறை வைப்பைப் பற்றிச் சிவஞான முனிவர் குறிப்பிடுகையில்,முறைமை பற்றிய இயைபு என்றும், ஆசங்கை பற்றிய இயைபு என்றும், அவாய் நிலை பற்றிய இயைபு என்றும் மூன்று முறை வைப்புக்களைக் குறிப்பிடுவார். 


2


'நான்காம் சூத்திரத்தில் பசு இலக்கணம் கூறப்பெற்று, அதனை அடுத்த ஐந்தாம் சூத்திரமாகிய இச்சூத்திரத்தில் இலக்கண இயலுக்கு ஏற்ப பாச இலக்கணமாம் திரோதான சத்தியில் அடங்கிய கன்ம, மாயை ஆகிய பாச இலக்கணம் கூறப் பெறுவதால் , முறைமை பற்றிய இயைபு உடையதாகிறது.' 


'நான்காம் சூத்திரத்தின் இறுதி அதிகரணம் அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று ஐஞ்சவத்தைத்தே என்று கூறிய உவமை பற்றி, அந்நிலையில் இறைவனது உதவி வேண்டுவது இல்லை போலும் என்று ஏற்படுகின்ற ஐயமாமம் சந்தேகத்தை இச் சூத்திரம் நீக்குவதால், அந்த அதிகரணத்தோடு இயைபுடையதாகி ஆசங்கைக்கு (ஐயத்திற்கு) விளக்கம் தரும் இயைபு உடையதாக அமைகிறது.' 


'பசு இலக்கணத்தை உணர்த்தியபின், இனிப் பாச இலக்கணம் யாது என அவாய் நிற்க, அந்த அவாய் நிலையை இச்சூத்திரம் குறிப்பிடுவதால் அவாய் நிலை பற்றிய இயைபும் உடையதாக ஆகிறது' என்று தன்னுடைய சிற்றுரையில் குறிப்பிடுவார். 


இவ்வாறு முனிவர் அவர்கள் ஐந்தாம் சூத்திரத்தின் முறைவைப்பைக் கூறுவதால் இச்சூத்திரம் இறைவியின் சத்தியாகிய திரோதான சத்தியைக் குறிப்பிடுவதன் மூலம், அதனுள் அடங்கிய பாசஇலக்கணம் கூறுகிறது என்பதையும் , நான்காம்    சூத்திரத்தில் ஆன்மா சகச மலத்து( ஆணவமலம்)  உணராது என்ற செய்தி கூறப்பெற்று இங்கு ஐந்தாம் சூத்திரத்தில் மற்ற இரண்டு மலங்களாம் கன்ம , மாயையின் இலக்கணம் கூறப்பெறுகிறது என்ற செய்தியும் கிடைக்கிறது.  


திரோதான சத்தியின் விளக்கம் :

இச்சூத்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்கு முன், சூத்திரத்தில் இடம் பெற்ற தாம் தம் உணர்வின் தமியருள் என்ற தொடரால் பெறப்படுகின்ற இறைவியின் சத்தியாகிய திரோதான சத்தியை அறிந்து கொள்ள வேண்டும்.  இத்திரோதான சத்தியை மாதவச் சிவஞான முனிவர், இரண்டாம் சூத்திரத்தின் இரண்டாம் அதிகரணத்தில்,'நெல்லுக்கு உமியும்' என்று தொடங்கும் பாடலுக்கு உரை எழுதும் பொழுது, திரோதான சத்தி பற்றிய குறிப்பைக் காட்டுவார் .  அந்த உதாரணப் பாட்டில்  இடம் பெற்றுள்ள வள்ளல் என்ற சொல்; திரோதான சத்தியின் உண்மையைப் புலப்படுத்துகிறது என்று குறிப்பைக் காட்டுவார்;. சிற்றுரைக்கு விளக்கம் தரும் தூத்துக்குடி முத்தையா பிள்ளை அவர்கள் அந்தப் பகுதியில் திரோதான சத்திக்கு விளக்கம் தருவார்.  அவர்தரும் விளக்கம் -----


'திரோதானம் என்பது மறைத்தல் என்பதாகும். உயிர்களுக்குப் பக்குவம் வரும் பொருட்டு அனுபவிக்க வேண்டிய வினைப்பயன்களைக் கூட்டுவித்து, அனுபவிக்கச் செய்யும் இறைவனுடைய சத்தியானது, அனுபவிக்க வேண்டிய விடயங்களில் உள்ள குண தோஷங்களை அவ்வுயிர்களுக்குத் தெரிய ஒட்டாமல் மறைக்கும். இதுவே திரோதான சத்தி எனப்படும்.  மேலும் குண தோஷங்களை மறைக்கவில்லையாயின் அனுபவம் கூடாது.  அனுபவம் கூடாதாயின் மும்மலங்களைக் காரியப் படுத்தியும் பயன் இல்லை. ஆதலால் மும்மலங்களை இறைவன் காரியப் படுத்துவன் என்றதனாலேயே திரோதான சத்தி உண்டு என்பது பெறப்பட்டது .  மேலும் உயிர்களுக்குப் பக்குவம் வருவித்தற் பொருட்டு, இத் திரோதான சத்தி ஆணவ

3

 மலத்தின் வழியாய் நின்று மோகம் முதலியவற்றைச் செய்விக்கும் சிவசங்கற்பத்திற்கு ஏதுவாகும். இச்சத்தி இல்லையென்றால் மோகம் முதலியவற்றைக் காரியப் படுத்த முடியாது. எனவே ஆணவ மலத்தின் காரியத்திற்கு ஏதுவாய் இச்சத்தி இருப்பதால் இச்சத்தியை மலம் என்றும் கூறுவர்' (சிற்றுரை விளக்கம், ப.118) என்று குறிப்பிடுவார். 


எனவே இந்த ஐந்தாம் சூத்திரம் திரோதான சத்தியைக் குறிப்பிட்டு, அது ஒரு நிலையில் ஆன்மாவிற்கு அருள் சத்தியாக விளங்க, பிறிதொரு நிலையில் மலமாகவும் விளங்குகிறது என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது.  


இவ்வாறு மாதவச் சிவஞான முனிவரின் உரையாலும், விளக்கத்திற்குரிய விளக்க உரையாலும்  இச்சூத்திரம் பாச இலக்கணம் கூறுகிறது என்பது அறியப் படுகின்றது. ஆனால் பின்வந்த விளக்க உரையாசிரியர்; ஆ. ஆனந்தராசன் அவர்கள் தன் வழித்துணை விளக்க உரையில் இச்சூத்திரம் பற்றிக் குறிப்பிடும் பொழுது மேலும் ஒரு செய்தியைக் குறிப்பிடுவார். அதாவது இறைவனுக்குரிய தடத்த இலக்கணமாகிய 'தூல ஐந்தொழில் , சூக்கும ஐந்தொழில், அதிசூக்கும ஐந்தொழில் என்ற மூவகை ஐந்தொழிலில்  தூல ஐந்தொழிலும், சூக்கும ஐந்தொழிலும் இரண்டாம் சூத்திரத்தில் கூறப்பெற்று, இச்சூத்திரத்தில் அதி சூக்குமத் தொழில் கூறப்பெறுகிறது.


அதி சூக்கும ஐந்தொழில் --'உயிரானது புருவ நடுவில் நின்று கருவிகளுடன் கூடி உலகப் பொருள்களை அறிந்து கொள்ளும் விழிப்பு நிலையில் ஐந்து அவத்தைகள் அமைகின்றன. (நனவு முதலாகிய ஐந்து அவத்தைகளை அடைகிறது) அவ் ஐந்து அவத்தைகளில் உயிருக்கு அறிவை நிகழ்விக்கும் இறைவனது செயலே அதிசூக்கும ஐந்தொழில் எனப்படும்.  இந்த அருள் இல்லையெனில் உயிர்களுக்கு அறிவும் செயலும் இல்லை.  எனவே இது இறைவனின் அருள்செயலாக அமைகிறது' என்று குறிப்பிட்டு:, இரண்டாம் சூத்திரமும் , ஐந்தாம் சூத்திரமும்  இறைவனுக்குரிய தடத்த இலக்கணம் கூறுவன என்பது அறியத் தகும் (ஆ. ஆனந்தராசன், சிவஞானபோதம், வழித்துணை விளக்கவுரை, ப. 135) என்று குறிப்பிடுவார்.  இப்புத்துரையால் ஐந்தாம் சூத்திரம் கன்ம, மாயை ஆகிய பாச இலக்கணம் கூறுவதோடு, இறைவனின் தடத்த இலக்கணத்தையும் கூறுகிறது என்ற புதிய செய்தி கிடைக்கப் பெறுகிறது.  


சூத்திர அதிகரணங்களின் பொருள் சுருக்கம் :

'விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு

அளந்தறிந்து அறியா, ஆங்கு அவை போலத்

தாம் தம் உணர்வின் தமி யருள்,

காந்தம் கண்ட பசாசத்து அவையே.'


என்;பது  ஐந்தாம் சூத்திரமாகும்.  இச்சூத்திரத்திற்கு மாதவச் சிவஞான முனிவர் அவர்கள் தந்தருளிய சிற்றுரையின்படி அமைந்த பதவுரை – 


'மேலைச் சூத்திரங்களில் அங்ஙனம் கூறிப் போந்த உயிரானே மெய், வாய், கண்,மூக்குச் ( செவி)  என்பன தத்தம் விடயங்களை இது இன்னது என்று அளவிட்டு அறிந்தும், அங்ஙனம் அறியும் தம்மையும், தம்மை அதிட்டித்து (நிலைக்களமாக) நின்று செலுத்தும் அவ்வுயிரையும் அறிய மாட்டா. அவ் இந்திரியங்களைப் போல் உயிர்களும் தமது அறிவிற்கு வியஞ்சகமாகிய (துணையாகிய) முதல்வனது சிற்சத்தியான்  மேற்

4

 கூறிப் போந்த இருவகை ஐஞ்சவத்தையிலிருந்து வினைப்பயன்களை அறிந்து அனுபவிக்கும் தம்மையும், தம்மைச் செலுத்தி நிற்கும் திருவருளையும் அறிய மாட்டா. உயிர்கள் அவ்வாறு உணர்தல் காந்தத்தைக் கண்ட இரும்பு அதன் சந்நிதி மாத்திரையின் வலித்துக் கொள்ளப்படுமாறு போல, கரணத்தால் அன்றி சங்கற்பத்தான் அதிட்டிக்கும் ( நின்று) முதல்வன் சந்நிதி மாத்திரையினாம்.  ஆதலால் அதுபற்றி முதல்வன் விகாரியாதல் இன்று என்றவாறு' .


எனவே இச்சூத்திரத்தின் கருத்து – மனித உடலில் அமைந்த மெய் முதலாகிய ஐந்து கருவிகளும் உயிரால் இயங்குகின்றன.  அவ்வாறு இயங்கும் அக்கருவிகள் தம்மை இயக்குகின்ற அறிவையும், இயங்குகின்ற தம்மையும் அறியாதவாறு போல, உயிரானது தம்மை இயக்குகின்ற இறைவனின் திரோதான அருள் சத்தியையும், உயிரான தம்மையும் அறியாது என்பதாகும். மேலும் கருவிகள் உயிரால் அறிகின்ற பொழுது, காந்தத்தைக் கண்ட இரும்பு அதன் சந்நிதி மாத்திரையில் வலித்துக் கொள்ளப்படுமாறு போல, உலகப் பொருள்களை அறிகிறது. அவ்வாறு உயிர்கள் அறிய உதவும் இறைவன் அச்செயலால் தான் எந்த விதத்திலும் விகாரப்பட மாட்டான் என்பதையும் அறியமுடிகிறது. 


இச்சூத்திரம் இரண்டு அதிகரணங்களாகிய விளக்கத்தை உடையது. முதல் அதிகரணத்திற்கு ஒரு உதாரணப் பாடலும், இரண்டாம் அதிகரணத்திற்கு மூன்று உதாரணப் பாடல்களும் அமைந்துள்ளன.  முதல் அதிகரணம் விளக்கும் பொருளை பொ.முத்தையா பிள்ளை அவர்கள் குறிக்கும் பொழுது, முதல் அதிகரணத்தால் சாங்கியரின் கொள்கையை மறுத்து இந்திரியங்கள் விடயங்களை உணர்தல், ஆன்மாவினாலே அன்றி புத்தி தத்துவத்தினால் அன்று என்று கூறப்பட்டது என்று கூறுவார். (ப.286) 


முதல் அதிகரணமான கருவிகள் உயிரால் அறிகின்றன, உயிர் கருவிகளின் துணைகொண்டு அறிகிறது என்ற பகுதிக்குரிய உதாரணப் பாடலின் கருத்துச் சுருக்கம்-

(பொ.முத்தையா பிள்ளை) உயிர் இந்திரியங்களோடு ஒற்றுமைப் பட்டு நின்று, அவ் இந்திரியங்களை உலக விஷயங்களில் செலுத்துதலும், அவ் இந்திரியங்கள் உயிரை அன்றி விஷயங்களை அறிய முடியாது என்நும் கூறினால் அதற்குக் காரணம் என்ன? என்று சாங்கியர் கேட்கும் வினாவிற்கு விடையாக, ஆன்மா கருவிகளோடு ஒன்றித்துக் காணின் அல்லால் கருவிகள் உலக விஷயங்களை அறியா என்பதை விளக்குகிறது. இந்த விளக்கத்திற்;கு உரிய உதாரணப் பாடலில், அரசன் அத்தாணி மண்டபத்தில் வீற்றிருந்து தன் ஆணையின் கீழ் பணிசெய்வாரை அவரவர் பணியைச் செய்யும்படிச் செய்யவைத்து, உலகத்தைக் காக்கும் முறைமை போன்றது என்ற உவமை அமைந்து விளக்கம் தருகிறது. 


இரண்டாம் அதிகரணமான ஆன்மா திருவருள் உணர்த்த உணரும் என்ற கருத்தை விளக்க மூன்று உதாரணப் பாடல்கள் அமைந்துள்ளன. முதல் உதாரணப் பாட்டின் கருத்து ----- உயிரினால் அறியும் இந்திரியங்களை உயிர் முதல்வனால் அறியும் என்பதற்கு உவமை கூறின் , இந்திரியங்கள் அறிதலால் உண்டாகும் பயன் அந்த இந்திரியங்களோடு உடன்நின்று அறியும். உயிருக்கே அன்றி இந்திரியங்களுக்கு இல்லாதவாறு போல முதல்வனால் உயிர் அறியும் இன்ப துன்பப் பயனும் உயிரோடு உடன் நின்று அறியும் அம்முதல்வனுக்கே அன்றி உயிருக்கு இல்லையாதல் வேண்டும் என்று ஈசுர அவிகார வாதிகள் குறிப்பிடுவர். அவர்களுக்குப் பதிலாக இந்திரியங்கள் 

5

அறியும் பயன் உயிருக்கு ஆவது போல, உயிர் அறியும் பயன் முதல்வனுக்கு ஆகாது என்று அவர்களுக்கு உரிய மறுப்பு கூறப்பெறுகிறது. 


இரண்டாவது பாட்டின் கருத்து ----  முன் கூறியவாறு முதல்வன் உணர்த்த உயிர் உணருங்கால், அவ்வுயிர் முதல்வனின் வேறாய் நின்று உணருமோ? முதல்வனோடு ஒன்றாய் நின்று உணருமோ என்ற ஐயம் ஏற்படும். அந்த ஐயத்தை நீக்குதற் பொருட்டு, ஒன்றுதல், வேறுபடுதல் என்ற இரண்டு இயல்பும் இன்றி உயிர் உணரும் முறைமையை உணர்த்தி, முதல்வன் உணர்த்த உயிர் உணரும் என்பதை வலியுறுத்துகிறது. அதற்கொரு உவமையும் இடம் பெற்றுள்ளது.  நட்சத்திரங்கள் சூரியனிடத்து ஒளியைப் பெற்று விளங்கினாலும், பகற் பொழுதில் வேறாய் நின்று தன்னை வெளிப்படுத்திக் காட்டாமல் சூரியனது ஒளியில் ஒடுங்கி உடனாய் நிற்பது போல, இறைவனின் வியாபகத்துள் உயிர் அடங்கி உலகப் பொருளை அறிகிறது என்ற கருத்து இடம் பெற்றுள்ளது. 


மூன்றாவது பாட்டின் கருத்து -----  முதல்வனோடு உடனாய் நின்று முதல்வன் அறிவிக்க உயிர் அறியுமாயினும் உயிர்கட்குப் பலவிதமான அறிவு நிகழக் காண்பதால், அவ்வாறு நிகழ்தல் முதல்வன் உணர்த்தும் வேறுபாட்டால் ஆயின என்று கூறவேண்டும். அவ்வாறு கூறினால் முதல்வன் நிர்விகாரி (விகாரப்படாதவன்) என்னும் கருத்தோடு மாறுபடும் என்ற ஈசுர அவிகார வாதிகள் கருத்தை மறுத்து இறைவன் விகாரப்படான் என்பதை அறிவித்து, முதல்வன் அறிவிக்க உயிர் அறியும் என்பதனை வலியுறுத்துகிறது. 


இவ்வாறு சூத்திரமும் சூத்திர விளக்கத்திற்குரிய அதிகரண உதாரணப் பாடல்களும் விளக்கம் தருகின்றன. 


எனவே உரையாசிரியர், விளக்க உரையாசிரியர் கருத்துப்படி சூத்திரம் உலக விடயங்களை மெய் முதலாகிய ஐம்பொறிகள் உயிரால் அறிகின்றன என்பதும், உயிர் மெய் முதலிய கருவிகளால் உலக விடயங்களை அறிகின்றது என்பதும் பெறப்பட்டு, ஐம் பொறிகளும் உயிரும் ஒன்றுக்கொன்று  தேவைப் படுகின்றன என்;பதை அறிய முடிகிறது. மேலும் இறைவனால் உயிர் உலகப் பொருள்களை அறிகின்ற பொழுது, இறைவன் விகாரப்பட மாட்டான் என்பதும் அறியப் பெறுகிறது. 


ஐந்தாம் சூத்திரத்தி;ல் இடம்பெற்ற உவமைகள்;:

சிவஞான போதம் ஒரு இலக்கண நூலாக மட்டும் அமையாமல், இலக்கியச் சுவை உடையதாகவும் அமைந்திருக்கிறது. அதாவது அணி நலன்கள் அமைந்து இலக்கிய நயத்தை உணர்த்துகின்றன.  அணிகளில் சிறந்தது உவமையணியாகும். உவமையணி அமைந்த சூத்திரங்களில் ஒன்றாக ஐந்தாம் சூத்திரம் விளங்குகிறது.


சூத்திரப் பகுதியில் இரண்டு உவமைகள் அமைந்துள்ளன. 

1.  'விளம்பிய உள்ளத்து மெய்,வாய்,கண், மூக்கு 

   அளந்தறிந்து அறியா ஆங்கவை போல' என்பது முதல் உவமைப் பகுதியாகும். 

உயிரானது தன்னை இயக்குகின்ற இறைவனையும், தன்னையும் அறிதல் இல்லை என்ற பொருளை விளக்குவதற்கு இந்த உவமை இடம் பெற்றுள்ளது.  உவமையை விளக்கமாகக் கூறிய மெய்கண்டார், பொருளைக் குறிப்பிடும் பொழுது, 'தாம் தம் 

6

உணர்வின் தமியருளை அறியா' என்று விளக்கமாகக் கூறாது, அளந்தறிந்தறியா என்ற வினையை உவமைக்கும் பொருளுக்கும் ஆக்கிப் பொருளை அறிய வைக்கிறார். சூத்திரம் என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாகும் என்பதற்கேற்ப, பொருளை

விரித்துச் சொல்லாது உவமையால் அறிய வைக்கின்ற பாங்கினை இந்த உவமையால்

 அறிகிறோம். 


2.  சூத்திரத்தில் 'காந்தம் கண்ட பசாசத்து ' என்பது இரண்டாவது உவமைப் பகுதியாகும்.  இந்த உவமை எடுத்துக்காட்டு உவமையாகும். அதாவது உவம உருவு வெளிப்படையாக இல்லாது பொருளை அறிய வைப்பது எடுத்துக்காட்டு உவமையாகும். (உதாரணத்திற்கு 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற குறட்பாவை நினைவு கொள்ளலாம்.) உயிர்கள் இறைவன் திருவருளால் அறிகின்ற பொழுது அவன் எவ்வித மாற்றத்திற்கும் ஆகாது , உயிர்கள் அவனால் செலுத்தப் பட்டு அறிகின்றன. (காரியப் படுகின்றன) இறைவன் கரணங்களால்(கருவிகளால்) அவற்றைச் செலுத்தாமல், தன் உள்ளக் குறிப்பினாலே (சங்கற்ப மாத்திரையினாலே) ஆன்மாக்களை அறியச் செலுத்துகிறான். ஆதலால் முதல்வன் எவ்வித மாறுபாடும் அடைவதில்லை என்ற பொருளை விளக்க இந்த உவமை பயன்படுகிறது. அதாவது காந்தத்தின் முன்னிலையில் இரும்பு காந்தத்தை நோக்கி ஈர்க்கப்படுவது போன்றது. தன்னில் எந்த மாற்றமும் இல்லாத காந்தத்தினால் (எவ்விதக் கருவியாகிய துணையும் இல்லாமல்) இரும்பு ஈர்க்கப் படுவது போல என்பது உவமையின் விளக்கமாகும்.  எனவே சூத்திரத்தி;ல் இடம்பெற்ற இரண்டாவது உவமை, இறைவன் விகாரப் படான் என்பதை அறிவதற்குப் பயன்படும் உவமையாகும். (முதல் உவமை உயிர்கள் தன்னையும், தன்னைச் செலுத்தும் இறைவனையும் அறியாதது என்பதற்குக் கூறப்பட்ட உவமையாகும். ) இவ்வாறு இரண்டு உவமைகள் இடம்பெற்றுச் சூத்திரத்தை இலக்கிய நோக்கில் பொருள்நயம் காண்பதற்கு உதவுகிறது. 

 

உதாரணப் பாடல்களில் அமைந்துள்ள உவமைகள்:

சூத்திரத்தில் அமைந்துள்ள நான்கு உதாரண வெண்பாக்களில் முதல் வெண்பாவில் உவமை அமைந்துள்ளது.  

'ஐம்பொறியை ஆண்டு அங்கு அரசாய்' என்பது வெண்பாவில் அமைந்துள்ள தொடர் உவமைத் தொடராகும்.  உயிர்கள் இலாட தானமாகிய புருவ நடுவில் நின்று ஐந்து இந்திரியங்களும், அந்தந்த இந்திரியங்களுக்கு உரிய உலக விஷயங்களை அறியும்படி செய்கிறது.  அதே நேரத்தில் தன்னை அறிய வைக்கின்ற உயிரை ஐம்பொறிகள் அறியாது என்பதை  விளக்க இந்த உவமை பயன்படுகிறது. அதாவது அரசனால் ஏவப்பட்ட அதிகாரிகள் அரசன் ஏவிய செயல்களை மட்டும் செய்தலே அன்றி, அதிகமாய்ச் செய்ய முடியாதது போல என்பது உவமையின் விளக்கமாகும்.  இவ்வாறு அரச உவமை உவம உருபு இல்லாது எடுத்துக்காட்டு உவமையாக அமைந்து இலக்கிய நயம் தருகிறது. மெய்கண்டார் காலம் முடியாட்சிக் காலம் ஆதலால் சிவஞானபோத சூத்திரங்களில், உதாரண வெண்பாக்களில் பெரும்பாலான உவமைகள் அரச உவமைகளாக அமைகின்றன. அக்காலத்தில் மக்கள் அறிய வேண்டுமானால் அரச உவமைகளைப் பயன்படுத்திப் பொருளை விளக்குவதற்கு இலக்கியத் திறம் படைப்பாளர்கள்பால் அமைவது இயல்பு. அந்த முறையில் இங்கு ஆண்ட அரசாய் என்ற உவமை இடம் பெற்றுள்ளது. 


இரண்டாம் அதிகரணத்தில் இரண்டாம் உதாரணப் பாடலில், 

'வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது

வெய்யோனை ஆகாத மீன் போல'

என்ற உவமை இடம் பெற்றுள்ளது.  உயிர்கள் கண்டும் கேட்டும், உண்டும், உவந்தும், தீண்டியும் அறியப் படும் ஐவகை விஷயங்களை, மெய்ப்பொருளாகிய 

முதல்வனால் உணர்ந்து, அவ்வாறு உணரும் பொழுது முதல்வனிடத்தில் இருந்து வேறாகமலும், ஒன்றி இராமலும் அவ்விரண்டிற்கும் பொதுவாய் முதல்;வனுக்குள் அடங்கி, அம்முதல்வனோடு உடனாய் நிலைபெற்றிருக்கும் என்பதனை விளக்குவது இவ் உவமையாகும். அதாவது பகலில் நட்சத்திரங்கள் ஒளி உடையவனவாய் விளங்கித் தோன்றுங்கால், சூரியன் ஒளியின் வேறாய்த் தனியே தோன்றாமலும், சூரியனே ஆகாமலும், அச்சூரியன் ஒளியில் அடங்கித் தோன்றுமா போல் என்பது உவமையின் பொருளாகும்.  இவ்வாறு சூரிய நட்சத்திரங்களை உவமையாக்கி உயிரின் தன்மையைப் பாடல் விளக்கி நிற்பது இலக்கியச்சுவை உடையதாகும். இப்பாடல் உவமையையும் பொருளையும் ஒப்பக் கூறி விளக்குகிறது. 

இரண்டாம் அதிகரணத்தில் மூன்றாம் உதாரணப் பாடலில், 

'அருட்கண்ணார் கண்ணுக்கு

இரவி போல நிற்கும் அரன் ஏய்ந்து.'

என்ற உவமைப் பகுதி அமைந்துள்ளது. முதல்வன் அருளோடு பிரிப்பின்றி நின்று உயிருக்குப் பலவேறு வகைப்பட்ட அறிவு நிகழும்படிச் செய்வான் ஆயினும், அவன் விகாரத்தை அடைய மாட்டான் என்பதை இந்த உவமை விளக்குகிறது. அதாவது சூரியன் தன் ஒளியோடு பிரிப்பின்றி நின்று மாசில்லாத உயிரின் கண்ணுக்கு ஒளியோடு நின்று உலகப் பொருள்களை விளக்கித் தோன்றுமாறு போல் என்பது உவமையின் பொருளாகும்  அதாவது முதல்வன் தன் திரோதான சத்தியோடு பிரிவு இன்றி நின்று உயிர்களுக்கு விளக்கம் தருவதற்கு இந்த உவமை பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு ஐந்தாம் சூத்திரத்திலும், அச்சூத்திரத்தை விளக்குவதற்குரிய உதாரணப் பாடல்களிலும் உவமையணி அமைந்து இலக்கியச்சுவை தருகின்றது. 


சூத்திரப் பகுதியில் அமைந்த சொற்களின் நயம்:

மெய்கண்டார் அருளிச் செய்த சிவஞானபோதம் இலக்கியச்சுவை தரும் பெட்டகமாய் விளங்குகிறது. சூத்திரங்களிலும் , உதாரண வெண்பாக்களிலும் இடம் பெற்ற சொற்கள் ஆய்ந்து நோக்கும் பொழுது இலக்கியச் சுவை தந்து இன்பம் பயக்கின்றன. அத்தகு நிலையில் ஐந்தாம் சூத்திரத்தில் இலக்கிய நயம் தரும் சொற்கள் அமைந்துள்ளன. 


1.  'அளந்தறிந்து அறியா' என்ற சொற்றொடர் சூத்திரத்தில் அமைந்துள்ளது. இச்சொல்லுக்கு விளக்கம் தரும் சி.சு.மணி அவர்கள் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார். 'ஆன்மாக்கள் பொருள்களை அறியும் பொழுது இறைவன் உடன் நின்று செலுத்துவான் என்றால் அவற்றோடு ஒப்ப இறைவனையும் ஆன்மாக்கள் அறிதல் வேண்டுமன்றோ என்ற ஐயம் எழும். அந்த ஐயத்தை நீக்குவதற்காக ஐம்பொறிகள் புலன்களை அறியும் என்றாலும் தம்மைச் செலுத்துகின்ற ஆன்மாவை அறியாதது போல, ஆன்மாக்களும் இறைவன் திருவருளை அறிய மாட்டா என்று விளக்கும் பொருட்டு அளந்து அறிந்து என்பதோடு நில்லாது அறியா என்ற சொல்லையும் கூட்டி உரைத்தார்' என்று குறிப்பிடுவார். (சிவஞான மாபாடியம் விளக்கம். ப. 650)


2.  ஐந்தாம் சூத்திரத்தின் இரண்டாம் அதிகரணத்தின் முதற்பாடல்,

'மன்னுசிவன் சந்நிதியில் மற்று உலகம் சேட்டித்தது

என்னும் மறையின் இயல் மறந்தாய், - சொன்னசிவன்

8

கண்ணா உளம்வினையால் கண்டறிந்து நிற்கும்காண்,

எண்ணான் சிவன் அசத்தை இன்று'

இப்பாடலுக்குச் சிவஞானபோத மாபாடிய பொருள்நிலை விளக்கம் தந்த அருணை வடிவேல் முதலியார் அவர்கள் கீழ்க்கண்ட செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். 

'இவ்வெண்பாவில் சிவன் என்னும் பெயர் மூன்று முறை வந்துள்ளது.  சொல் ஒன்றாயினும் அது அங்கங்கே வேறு வேறு கருத்தை உணர்த்தி நிற்கின்றது. முதலில் உள்ள மன்னுசிவன் என்பது உலகம் செயற்படுதற்குக் காரணமாய் நிற்கின்றவனைக் குறிக்கிறது. அது பேரின்பத்திற்குக் காரணன் என்னும் பொருளைத் தந்தது. இரண்டாவதாக வந்த சொன்னசிவன் என்பது, உயிர்களின் அறிவை விளக்கி நிற்பவனைக் குறித்ததால் அது முற்றுணர்வினன் என்ற பொருள் தந்தது. மூன்றாவதாக வந்த எண்ணான் சிவன் என்பது அசத்துப் பொருளை எண்ணாதவனைக் குறித்ததால் அது தூய தன்மையன் என்ற பொருளைத் தந்தது.  சிவன் என்னும் சொல் இம்மூன்று பொருள்களைத் தரும் என்பதைச் சோமசம்பு பத்ததியின் வியாக்கியானம் முதலியவற்றால் அறியலாம். சிவசத்து விவேகம் என்னும் நூலிலும் சிவன் இவ்வாறு மூன்று தன்மைகளை உடையவனாகக் கூறப்பட்டுள்ளது.  எனவே சிவன் என்னும் சொல் இம்மூன்று பொருளையும் தருதலேயாகும்' (ப.554) 


3.  இறைவன் உயிர்களைத் தன்னுடைய சங்கற்ப மாத்திரையால் அறியும்படிச் செலுத்தும் பொழுது விகாரப்பட மாட்டான் என்பதை விளக்கச் சிவஞான முனிவர் இரண்டாம் அதிகரணத்தில் முதற் பாடலில் குறிப்பிடத், திருக்களிற்றுப்படியாரின் எண்பத்தேழாவது பாடலை எடுத்துக்காட்டிற்காகக் குறிப்பிடுவார். அப்பகுதியும் இலக்கிய நயம் தருகின்ற பகுதியாகும்.  முனிவர் காட்டும் திருக்களிற்றப்படியார் பாடல்---

'உன்உதரத் தேகிடந்த கீடம் உறுவதெல்லாம்

உன்னுடைய தென்னாநீ உற்றனையோ -  மன்னுயிர்கள்

அவ்வகையே காண்இங்(கு) அழிவதுவும் ஆவதுவும்

செல்வகையே நின்றசிவன் பால்' 


ஒருவனுடைய வயிற்றில் உள்ள பூச்சி புழுக்கள் அடைகின்ற மாறுதல்களை அவன் உணர்வதும், அதனால் வரும் இன்ப துன்பங்கள் அடைவதும் இ;ல்லை. அது போலவே சேதனமும், அசேதனமும் ஆகிய (உயிர்ப்பொருள், ஜடப்பொருள்) ஆகிய இரு வகைப் பிரபஞ்சங்களும் இறைவனுடைய வியாபகத்திற்குள்ளே இருப்பினும், அவைகளை இறைவன் அனுபவித்தலும், அதனால் தான் விகாரப்படுதலும் இல்லை என்பதை இங்கு எடுத்துக்காட்டிய திருக்களிற்றுப்படி வெண்பா கூறுகிறது. 


4.  இரண்டாம் அதிகரணத்தில் மூன்றாவது உதாரணப் பாடலில், 

'அருளுண்டாம் ஈசற்கு' என்ற தொடர் அமைந்துள்ளது.  அது உயிர்களுக்குப் பசு தத்துவத்தை நீக்கி, சிவ தத்துவத்தை அளிக்க வேண்டும் என்ற இறைவனது இரக்க குணத்தைச் சுட்டிக் காட்டுவதாகும்.  அந்த இரக்க குணம் இறைவனுக்கு என்றும் உள்ள இயற்கைக் குணம் என்பதை விளக்க 'ஈசற்கு அன்றே அருளுண்டாம்' என்று வெண்பாவில் குறிக்கப் பெற்றுள்ளது. மேலும் அந்த அருட்குணம் அநாதியாய், சத்தியாய் அமையும் என்பதால், 'அது சத்தி' என்ற தொடர் அமைந்துள்ளது. 


9

இவ்வாறு சூத்திரத்திலும், உதாரண வெண்பாக்களிலும் அமைந்துள்ள சொற்கள் சித்தாந்தக் கொள்கையை வெளிப்படுத்துவதோடு, இலக்கிய நயம் தோன்ற அமைந்துள்ளன. 


சூத்திரத்தால் பெறப்படுகின்ற பிற சமயக் கொள்கைகளும் மறுப்பும் :

  தொல்காப்பியத்தில் மரபியலில் நூலின் உத்திகளை வரிசைப் படுத்தும் பெழுது, 'மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல்' என்ற உத்தியைத் தொல்காப்பியர் குறிப்பிடுவார். இதன் பொருள் - எதிர்ப்புக் கூறுவோர் கருத்தை மறுத்துத் தன் கருத்தைக் கூறுதல் என்பதாகும். இலக்கண ஞானம் பெற்ற சிவஞான முனிவர் இந்த உத்தியின் அடிப்படையில் பிற சமயக் கொள்கைகளைச் சூத்திர வெண்பாக்களின் உரைகளில் குறிப்பிட்டு, அக்கொள்கைகளை மறுத்துச்  சைவ சித்தாந்தக் கொள்கைகளை நிலைநாட்டுவார். 


சிவஞானபோத சூத்திரங்களிளோ வெண்பாக்களிலோ மெய்கண்டார், பிற சமயக் கொள்கைகளை நேரிடையாகக் குறிக்கவில்லை என்றாலும், சிவஞான முனிவர் தன்னுடைய இலக்கணப் புலமையால் அவற்றில் அமைந்துள்ள குறிப்பினால் பிற சமயக் கொள்கைகளைக் குறிப்பிட்டு , அவற்றை மறுத்துச் சிந்தாந்தக் கொள்கையை மாபாடியத்தில் நிலைநாட்டுகிறார்.  அவையடக்கப் பாடலில் 'உடங்கி இயைந்து தம்மில் புணரார்' என்ற தொடருக்கு விளக்கம் தரும்பொழுது சிவஞானமுனிவர், புறப்புறச் சமயம், புறச்சமயம், அகப்புறச் சமயம், அகச் சமயம் என்ற நான்குவகைப் பட்ட சமயங்களைக் குறிப்பிட்டு, அவற்றுள் அடங்கிய சமயங்களின் கொள்கைகளை சிறிது விளக்கிச் செல்வார். அதன்பிறகு சூத்திர உரைகளில் வாய்ப்புக் கிடைக்கின்ற பொழுதெல்லாம் பிற சமயக் கொள்கைகளைக் குறிப்பிட்டு அவற்றை மறுத்து உரைப்பார். 


அந்த அடிப்படையில் ஐந்தாம் சூத்திரத்தில் முதல் அதிகரணத்தில்; சாங்கியரின் கொள்கையைக் குறிப்பிட்டு, அதற்குரிய மறுப்பைத் தருகிறார். இரண்டாம் அதிகரணத்தில் ஈசுவர அவிகாரவாத சைவக் கொள்கையைக் குறிப்பிட்டு அதன் மறுப்பையும் தருகிறார். முதல் அதிகரணத்தில் அவர் பதிவு செய்துள்ள உரைப்பகுதி—

'ஆன்மா தாமரை இலையின் நீர்போலப் பற்றற்று நிற்ப, ஆன்மாவின் சந்நிதியில் புத்தி தத்துவமே ஐம்பொறி வழியான் விடயங்களை அறியும் ஆதலான், ஆன்மா கருவிகளோடு கூடி அவத்தைப் படும் என்று கூறுவது பொருந்தாது என்னும் சாங்கியர் மதத்தை மறுத்து, உலகப் பொருளை உயிர்  அறிவதற்குப் பொறி முதலியனவும் இன்றியமையாதன ஆகும் என்பதைச் சாதித்தற்கு எழுந்தது முதல் அதிகரணம்'. 


சிவஞான முனிவரின் கருத்துப்படி ஆன்மா, தாமரை இலையின்மீது உள்ள நீர்த்துளி போலப் பற்றற்று நிற்க, அதன் சந்நிதியில் புத்தி தத்துவமே ஐம்பொறிகளின் வழியாகப் பொருள்களை அறிகிறது என்பது சாங்கியர் கொள்கையாகத் தெரிகிறது. அவர்கள் அக்கொள்கையால் சூத்திரத்தி;ல் இடம்பெற்ற ஆன்மா ஐம்பொறிகளைச் செலுத்துதல் போல என்ற உவமையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதும் தெரிகிறது. அதனை மறுத்துச் சிவஞான முனிவர் ஆன்மாவே ஐம்பொறிகளையும் செலுத்தும் என்ற கொள்கையை முதல் அதிகரணத்தில் நிறுவுகிறார் என்பதும் அறியலாகிறது. 


10

இரண்டாம் அதிகரணம் ஈசுவர அவிகாரவாதி சமயத்தை மறுத்துச் சித்தாந்த சைவக் கொள்கையை நிலைநாட்டுவதாகும். சிவஞான முனிவர் அவ் அதிகரணத் தொடக்கத்தில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார். 


'மேல் அதிகரணத்தில் சாங்கியர் முதலாயினாரை மறுத்துக் கருவிகளின் தொழிற்பாடு ஆன்மாவின் இச்சா, ஞானக் கிரியைகளை இன்றியமையாமை சாதித்தவழி, அதனை உவமையாக வைத்து அவையும் தமது முதல் உபகாரம் இன்றியமையாமை சாதித்து, ஈசுவர அவிகாரவாதி முதலியோரை மறுத்தற்கு எழுந்தது இரண்டாம் அதிகரணம்' 


சிவஞான முனிவரின் பதிவால், சாங்கியர்கள் போல ஈசுவர அவிகாரவாதிகள் ஆன்மாவால் கருவிகள் செயல்படா என்பதை ஏற்காது, ஆன்மாவால் கருவிகள் செயல்படுகின்றன என்பதை ஏற்பர். ஆனால் ஆன்மா இறைவனின் துணையின்றி எதனையும் அறிய இயலாது என்ற கொள்கையை அவர்கள் மறுப்பார்கள். ஐம் பொறிகள் சடம் ஆகையினால் அவற்றிற்கு அறிவித்தல் பொருட்டு ஆன்மா என்ற சித்துப்பொருள் தேவைப்படும். ஆனால் சித்துப் பொருளாகிய ஆன்மாவிற்கு அறிவிப்பதற்கு இன்னொரு சித்துப்பொருள் தேவைப்படும் என்றால் அதற்கும் ஒரு துணை வேண்டும் எனப்பட்டு வரம்பின்றி ஓடும்.  எனவே இறைவனால் உயிர் அறிகின்றது என்பது பொருந்தாது என்ற ஈசுவர அவிகாரவாதிகளின் கொள்கைகளை மறுத்து, இறைவனின் திருவருளால்தான் உயிர்கள் கருவிகள் மூலம் உலகப் பொருள்களை அறிகின்றன என்ற சித்தாந்தக் கொள்கையை நிலைநாட்டுகிறார்.  


இவ்வாறு ஐந்தாம் சூத்திரம் சாங்கிய சமயக் கொள்கைகளையும், ஈசுவர  அவிகார வாதிகளின் சமயக் கொள்கைகளையும் குறிப்பிட்டு மறுக்கிறது. 

முடிபு:

1. ஐந்தாம் சூத்திரக் கட்டுரைக்கு உதவுகின்ற துணை நூற் பட்டியல் குறிக்கப் பெற்றிருக்கிறது. அதன் அடிப்படையில் இக்கட்டுரை ஐந்தாம் சூத்திர சிவஞான முனிவரின் உரையை வகுத்தும் தொகுத்தும் காட்டுகிறது. 


2.  சூத்திர வைப்புமுறை குறிக்கப் பெற்றிருக்கிறது. 


3.  சூத்திர அதிகரண உதாரணப் பாடல்களின் பொருட்சுருக்கம் தரப் பெற்றிருக்கிறது. 


4.  சூத்திர வெண்பாக்களில் இடம்பெற்ற உவமைகள் தொகுத்து விளக்கப் பெற்றுள்ளன.


5.   சூத்திர உதாரணப் பாடல்களில் அமைந்துள்ள சொற்களின் இலக்கியநயம் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. 


6.  சூத்திரப் உரையால் பிறசமயக் கொள்கைகள் மறுக்கப் பெற்றமையும் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. 


திருச்சிற்றம்பலம்.  

----------------------------------------------------

சீவன் முத்தர் 


முனைவர் பழ. முத்தப்பன்,

முதல்வர், செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி


உள்பொருள்கள் அனைத்தையும் முப்பொருள் என்று மூன்று வகையாகக் காண்பது சைவ சித்தாந்த மரபு ஆகும். பதி, பசு, பாசம் என்பன அம்முப்பொருள்கள். இறை, உயிர், தளை என இவற்றைக் குறிப்பிடுவதும் உண்டு. இம்மூன்றின் இயல்பைத் தெளிவாகச் சைவ சித்தாந்தம் வரையறுத்துக்காட்டுகிறது. இம்முப்பொருள்கள் பற்றிய எல்லா ஐயங்களுக்கும் சித்தாந்தம் தெளிவு தந்து நிற்கிறது. ஒருவனே ஆகிய இறைவன். எண்ணற்றவையாகிய உயிர்கள்.  இறைவனைச் சேர இயலாத அதே நேரத்தில் உயிர்களோடு சேர்ந்து நிற்கின்ற பாசம் என்ற தளைகள் ஆகிய இம்மூன்று பொருள்களும் என்றென்றும் உள்ளன என்பது சைவ சித்தாந்த அடிப்படைக் கொள்கை. இவை மூன்றும் அநாதி நித்தப் பொருள்கள். அதாவது இவற்றிற்கு தோற்றம் என்பது இல்லை. ஆகவே இவற்றிற்கு அழிவு என்பதும் இல்லை. இவற்றுள் இறைவன் அறிவே வடிவானவன். எங்கும் நிறைந்து எல்லா வல்லமையும் உடையவன். பசுவாகிய உயிர்களும் அறிவுடையனவே இருப்பினும் அவற்றின் அறிவு குறையுடை அறிவு. அறிவித்தாலன்றி உயிர்கள் எதனையும் அறியா. பாசம் என்னும் தளை அறிவற்ற சடப் பொருள். உயிரின் அறிவை மறைத்து  உயரறிவைக் குறையுடைய அறிவாக ஆக்கி நிற்பது. இத்தகைய அடிப்படைக் கொள்கையில் சைவ சித்தாந்தத் தத்துவக் கருத்துக்கள் விரிவடைந்து உலக தத்துவங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.


உயிர் குறைவுடை அறிவைப் பெற்றிருப்பதால்த்தான் தனித்து நில்லாது மற்ற இரு பொருள்களையும் சார்ந்தே நிற்கிறது. இதனாலேயே சார்ந்ததன் வண்ணம் நிற்பது உயிர் எனக் கூறப் பெறுகிறது. சார்ந்ததன்வண்ணம் உள்ளதால்தான் உயிர் என்பது இது என்றுச் சுட்டிக்காட்ட இயலாத பொருளாக இருக்கிறது. ~~ உயிர் எத்தன்மைத்து எனின் உயிர்  உணர்தல் தன்மைத்து~~ என்று கூறப்படுகிறது.  இந்தச் சார்ந்ததன் வண்ணம் இருக்கும் நிலையினால் உயிர் சதசத்து ( சத்து ூ அசத்து) என்று அழைக்கப்படுகிறது.


 


உயிர் இறைவனிடத்தில் இருநிலையில் சார்ந்ததன் வண்ணமாக காட்சிதருகிறது. தோற்றமில் காலம் தொட்டு உயிரானது ஆணவ மலத்தொடு இணைந்து அறியாமையால் மூழ்கியிருப்பது கேவல நிலையாகும். அக்கேவல நிலையில் உயிரோடு இறைவன் கலந்து இருக்கிறான் (எல்லாப் பொருளிலும் எங்கும் என்றும் நிறைந்திருக்கிறான் என்ற அடிப்படையில்). இக்கேவல நிலையில் தன்னோடு இறைவன் கலந்திருப்பதை ஆணவ மலக்கட்டினால் உயிர் அறிவதில்லை. எனவே உயிர் அறியாமலேயே இறைவனைச் சார்ந்து இருக்கிறது. இந்த நிலையைச் சைவசித்தாந்தம்  பெத்தநிலை என்கிறது. இப்பெத்த நிலைதான் உயிர் இறைவனோடு சார்ந்ததன் வண்ணத்தில் இருப்பதற்கான முதல்நிலையாகும். 


 தன்னேரில்லாத இறைவன் உயிர்கள் செய்துவரும் வினைகளுக்கு ஏற்ப உயிர்களை இறப்பு, பிறப்புகளுக்கு ஆளாக்கி கடைநிலையில் தன்னருள் பெறும் நிலைக்குத் தகுதியுடைய காலத்தில் தானே குருவாகி வந்துத் தன்னை உணர்த்தித்; தன்னிடத்தில் உயிர்களை முழுமையாகச் சார வைப்பான். இதனை முத்திநிலை என்று சைவ சித்தாந்தம் குறி;ப்பிடும். உயிர் இறைவனிடத்தில் சார்ந்ததன் வண்ணத்தில் இம்முத்திநிலை இரண்டாவது நிலையாகும். இவ்வாறு இறைவன் உயிர்களோடு கலந்து இருக்கும் முதல் நிலை பெத்தம் எனப்பட்டு, உயிர் இறைவனோடு சார்ந்திருக்கும் இரண்டாம் நிலை முத்தி எனப்பட்டு  உயிரின் சார்ந்தவண்ணம் விளங்குகிறது.

முத்தி பற்றி சைவசித்தாந்தம் தெளிவான விளக்கம் தருகிறது. சிவஞான சித்தியாரின் இருநூற்று அறுபத்து நான்காவது பாடல் பிறமதங்கள் கூறும் முத்தி நிலையை எடுத்துக் காட்டி இறுதியில் ~~சிவனடியைச் சேரும் முத்தி செப்புவது இங்கு யாமே~~ என்று உயிர் சிவனடியைச் சேருவதை முத்தி என்று கூறுகிறது. இம்முத்தி பதமுத்தி என்றும் பரமுத்தி என்றும் இரண்டு வகையாக வகுக்கப் பெற்றிருக்கிறது. பத முத்தி என்பது  சரியை, கிரியை, யோகம் ஆகிய புண்ணியங்களைச் செய்து அவற்றிற்கு உரிய பயனாகிய சாலோகம், சாமீபம், சாரூபம் என்னும் நிலையில் இறையடியைச் சாருவது ஆகும். இப்பதமுத்தி அடைந்தோர் மீண்டும் நிலவுலகில் பிறந்து ஞானம் பெறுவதற்கு உரிய நல்ல வாய்ப்;பைப் பெறுவர். இதனைச் சிவஞான போதம் எட்டாம் சூத்திரத்தில் முதல் அதிகரணத்தில் இரண்டாவது உதாரணப்பாடல் குறிப்பிடுகிறது. இந்த நல்ல வாய்ப்பில் இறையருள் ஞானாசிரியராகத் தோன்ற ஞானம் பெற்று உயிர் பரமுத்தியை அடையும். பரமுத்தி என்பது இறையருளால் ஞானத்தைப் பெற்று உடம்பைக் கழற்றி (நீக்கி) இறைவனைச் சார்ந்து அவன் திருவடியை அடைவதாகும். உடம்பை விடுத்து உயிர்  ஞானம் பெறுவது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். அதே நேரத்தில் இப்பரமுத்தியை இவ்வுலகில் உடம்போடு கூடி வாழ்கின்ற போதும் பெறமுடியும். இவ்வாறு உடம்புடன் கூடிய பரமுத்தியைப் பெற்றவர்கள் சீவன் முத்தர்கள் ஆவார்கள். இச்சீவன் முத்தர்கள் பற்றிச் சாத்திரங்கள் குறித்த செய்திகளை முறைப்படுத்திக் காட்டுவது இக்கட்டுரையாகும்.

சீவன் முத்தர் உருவாகும் நிலை

     உடம்பொடு இருக்கும் உயிர்களின் வகைகளைக் குறிப்பிடுகிறபொழுது சைவ சித்தாந்தம் மூன்று வகைகளைக் குறிப்பிடுகிறது. சகலர், பிரளாயகலர், விஞ்ஞானகலர் என்பன அம்மூவகை ஆகும்.

      இம்மூவருள் ஆணவமலம் ஒன்றை மட்டும் உடையவர் விஞ்ஞானகலர் ஆவர். ஆணவத்தோடு கன்மத்தையும் உடையவர் பிரளாயகலர் ஆவர். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் உடையவர் சகலர் ஆவர். விஞ்ஞானகலர் என்பது மேலான அறிவு கொண்ட உடம்பை உடையவர் என்ற பொருள் தரும். ( வி- மேலான, ஞான- அறிவு, கலர்- கலை என்ற மாயையால் வரும் உடம்;பு). பிரளாயகலர் என்பது பிரளயத்தில் கலர் உடையவர் என்ற பொருள் தரும். சகலர் என்பது உடம்புடன் கூடியவர் என்ற பொருளைத் தரும். இந்தச் சகலரே சீவன் முத்தராய் வாழ்வதற்கு உரியவர். ஏனென்றால் இவர்களுக்குத்தான் இறைவன் ஞானாசிரியனாய் எழுந்தருளி ஞானம் தந்து முத்தியை அடையச் செய்கின்றான்.


          ~~மெய்ஞ்ஞானம் தானே விளையும்விஞ் ஞானகலர்க்கு

          அஞ்ஞான அச்சகலருக்கு அக்குருவாய் - மெய்ஞானம்   

          பின்னுணர்த்தும் அன்றிப் பிரள யாகலர்க்கு

          முன்னுணர்த்தும் தாம்குருவாய் முன்.||ஜ1ஸ

 என்ற வெண்பாவில் காணப்பெறும் ~அச்சகலர்க்கு அக்குருவாய் மெய்ஞ்ஞானம் பின்னுணர்த்தும் | என்ற தொடர் இதனைக் குறிப்பிடும். சகலராகிய உயிர் சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களைச் செய்து ஞானத்தைப் பெறுவதற்காக ஒரு பிறப்பில் நற்சார்பில் வந்து தோன்றும்.ஜ2ஸ நற்சார்பில் வந்து உதித்த உயிர் அப்பிறப்பில் தன்னுடைய இருவினை ஒப்பால் சத்தினிபாதத்தை அடையும். அப்பொழுது இறையருள் ஞானாசிரியராகத் தோன்றும். அந்த ஞானாசிரியர் தன்னுடைய தீட்சையால் ஞானத்தைப் புகட்டுவதால் சகல உயிர்  சீவன் முத்தநிலையை அடைகிறது. இதுவே சீவன் முத்தர் உருவாகும் நிலையாகும்.

     இக்கருத்தைத் தெளிவுபடுத்துவது போல் திருஞானசம்பந்திரின் வாழ்வியல் அமைந்துள்ளது. ~மூவாண்டில் எண்ணறிய சிவஞானத்து இன்னமுதம்  கருணைத்திருவடிவான சீரணங்கு (உமையவள்) குழைத்து அருள உவமையிலாக் கலை ஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் பெற்றார் என்பது | பெரியபுராணச் செய்தியாகும்.ஜ3ஸ மூவாண்டில் ஞானம் பெறவேண்டுமானல் முன்பிறப்புக்களில்தான்   ஞானசம்பந்தரின் உயிர் சரியை, கிரியை, யோகம் செய்திருக்க வேண்டும். இப்பிறப்பு மூவாண்டில் அவற்றைச் செய்திருக்க முடியாது. இவ்வரலாற்றில் முன்பு செய்த தவத்தைச் சேக்கிழார் ~தம் மேலைச் சார்புணர்ந்தோ|ஜ4ஸ என்று குறிப்பிடுவது இக்கருத்தை வலியுறுத்தும். எனவே முன் செய் தவத்தால் சகலர் ஞானாசிரியர் கிடைக்கப் பெற்று ஞானம் கைவரப்பெற்ற நிலையில் சகலர் சீவன் முத்தர் ஆகின்றார் என்பது உண்மையாகின்றது.

 சீவன்முத்தர் நிலை

     சகலர் சத்தினிபாதத்தால் ஞானாசிரியரைப் பெற்று சீவன் முத்தர் நிலையை எய்திவிட்டால் அவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் சாத்திர நூல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. குறிப்பிட்டுச் சொன்னால் சீவன் முத்தர் ஆகியவருக்கு மலக்குற்றங்கள் நீங்க வேண்டும். மலக்குற்றங்கள் நீங்க வேண்டுமானால் மலங்களைக் கூட்டுகின்ற உடம்பின் செயல்கள் விலக்கப்பட வேண்டும். இவற்றைச் சாத்திரங்கள் தெளிவாகத் தருகின்றன.  மலக்குற்றம் நீங்க வேண்டுமானால் என்ன நிகழ வேண்டும் என்பதை உமாபதி சிவம் தந்தருளிய சிவப்பிரகாசப் பாடல் தெளிவாகத் தருகிறது.


     ~~காட்டிடும் கரண மொன்று  மில்லையேற் காணொணாதாம்

     நாட்டிய விவற்றான் ஞான நணுகவு மொண்ணா முன்னம்  

     ஈட்டிய தவத்தி னாலே இறையரு ளுருவாய் வந்து

     கூட்டிடு மிவற்றை நீக்கிக் குரைகழல் குறுகு மாறே||ஜ5ஸ

      உயிர் உடலோடு இருக்கும் சகல நிலையில் இறை பெத்தநிலையாக இருக்கிறது. அப்பொழுது உயிர் தனக்குக் கிடைத்த கருவிகளாகிய உடல் உறுப்புக்களைக் கொண்டுதான் பொருளை அறிகிறது. கருவிகளாகிய உறுப்புக்கள் இல்லாமல் ஒரு பொருளை அறியமுடியாது. அக்கருவிகளோடு கூடி அறிகின்ற அறிவு பாச ஞானம் பசுஞானமாகி ஏகதேச (சிற்றறிவு) அறிவாகின்றது. இந்த அறிவால் அல்லது அந்தக் கருவிகளால் மெய்ஞ்ஞானத்தை அறிய இயலாது. அதாவது உடல் உறுப்புக்களால் ஞானத்தை அறிய முடியாது. அவை ஞானத்தைத் தரவும் முடியாது.


      ஆதலால் உயிர்கள் தாம் முன்பு செய்த தவத்தால் இருவினை ஒப்பும் இறையருளாகிய சத்தினிபாதமும் நிகழ இறைவன் அருள் திருமேனி கொண்டு ஞானாசிரியராக ( குருமூர்த்தமாக )  எழுந்தருளும் பயனைப்பெறுகிறது.  முத்திக்குரிய தகுதி பெற்ற இந்த உயிர்களுக்கு ஞானாசிரியர் உபதேச முறையால் ஞானத்தைத் தருவார். குருவின் ஞானம் பெற்றவர்களே சீவன் முத்தர்கள் ஆவார்கள் என்று இப்பாடல் குறிப்பிடுகின்றது.

             இப்பாடல் மூலம் சீவன் முத்தர் உருவாவதற்கு உரிய வழியைப் பெறமுடிகின்றது. ஞானாசிரியரால் உபதேசம் பெற்ற உடம்பொடு கூடிய உயிர் தன்னுடைய உறுப்புக்களாகிய சடப் பொருள்கள் பொய்ப்பொருள்கள் என்றும் உயிராகிய தான் அவற்றிலிருந்து வேறாகிய சித்துப்பொருள் என்றும் அறிந்து உடம்பு உறுப்புக்களில் இருந்துத் தன்னை விடுவித்துக் கொள்ளும். இதனை உணர்த்துவது பாடலில் உள்ள ~~குருவாய் வந்து இவற்றை நீக்கிக் கூட்டிடும்|| என்ற தொடராகும். எனவே சீவன் முத்தர்கள்; முன் பிறப்புக்களில் தவம் செய்து இப்பிறப்பில் ஞானாசிரியரைப் பெற்று உடம்பு உறுப்புக்களில் இருந்து தங்களை நீக்கிக் கொண்டு  எல்லாம் இறையருளே என்று சிந்தித்த வண்ணம் இருப்பார்கள்.

     சீவன் முத்தர் என்ற தொடருக்கு சித்தாந்த அறிஞர் ஆ. ஆனந்தராசன் அவர்கள் விளக்கம் தருகிறபொழுது ~~பரமுத்தியாகிய பேரின்ப நிலையை இவ்வுலகில் இவ்வுடம்போடு கூடியுள்ளபோதே பெற்றிருத்தல் சீவன் முத்தி எனப்படும்.  சீவன் முத்தியை அடைந்தோர் உலக நினைவின்றி எப்பொழுதும் இறைவனிடையே அழுந்தியிருப்பர். இந்நிலையில் பகல், இரவு முதலிய கால வேறுபாடுகளும் உலக நிகழ்ச்சிகளும் புலனாகா. சீவன் முத்தி நிலைக்கும், பரமுத்தியாகிய வீட்டுநிலைக்கும் இன்ப நுகர்ச்சியில் வேறுபாடு இல்லை. உடம்பு இருத்தலும் இல்லாமையுமாகிய ஒன்றே வேறுபாடு. எனவே பரமுத்தியில் உடம்பு நீங்கிப் பெறும் பேரின்பத்தைச் சீவன்முத்தர் உடம்பொடு கூடியே பெறுகின்றனர் எனலாம்.||ஜ6ஸ என்று குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவு கூறலாம்.


     இத்தகைய சீவன் முத்தர் நிலையைத் தான் அடைந்ததாக உமாபதி சிவம் போற்றிப்பஃறொடை என்ற நூலில் குறிப்பிடுகிறார். மறைஞானசம்பந்தர் தனக்கு ஞானாசிரியராக எழுந்தருளி உபதேசம் செய்த சிறப்பை

     ~~ இறவாத இன்பத்து எமைஇருத்த வேண்டிப்

       பிறவா முதல்வன் பிறந்து- நறவாரும்

       காருலாவும் புயத்துச் சம்பந்த நாதனென்று

       பேரிலா நாதனொரு பேர்புனைந்து – பாரோர்தம் 

       உண்டி உறக்கம் பயமின்பம் ஒத்தொழுகி     

       கொண்டு மகிழ்ந்த குணம் போற்றி ||

என்று குறிப்பிடுகிறார். இப்பகுதியின்  மூலம் இறைவனாகிய திருவருள்தான் பிறந்து மறைஞான சம்பந்தர் வடிவாமாகத் தோன்றியது என்பது பெறப்படுகிறது. அந்த மானிட வடிவம் கூட மானிட வடிவத்திற்கு உரிய அனைத்துச் செயல்களையும் கொண்டிருந்தது என்பதையும் உண்டி உறக்கம் பயமின்பம் ஒத்து என்ற அடி உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு மறைஞான சம்பந்தராகத் தோன்றிய இறையருள் தன்னை எவ்வாறு சீவன் முத்தராக ஆக்கியது என்பதை


     ~~ சைவ நெறியில் சமய முதலாக

     எய்தும் அபிடேகம் எய்துவித்துச் -  செய்யதிரு

     கண்ணருளால் நோக்கிக் கடியபிறப் பாற்பட்ட

     புண்ணும் இருவினையும் போயகல -  வண்ணமலர்

     கைத்தலத்தை வைத்தருளிக் கல்லாய நெஞ்சுருகி

     மெய்த்தகைமை எல்லாம் விரித்தோதி ஒத்தொழுகும்

     சேணார் இருள்வடிவும் செய்கதிரோன் பால்நிற்பக்  

     காணா தொழியும் கணக்கேபோல ஆணவத்தின்

     ஆதி குறையாமல் என்பால் அணுகாமல்   

     நீதி நிறுத்தும் நிலை போற்றி ~~

என்ற இந்தப் பகுதியின் மூலம் பாடிப் போற்றுகிறார். அபிடேகமாகிய தீட்சைகளைத் தந்தார் என்பதும் அதிலும் நயன தீட்சை செய்து இருவினைகளும் அகலுமாறு செய்து பிறகு ஸ்பரிச தீட்சை செய்து நெஞ்சத்தை உருகுமாறு செய்தார் என்றும் குறிப்பிடுகிறார் உமாபதி சிவம். மேலும் ஞானாசிரியரின் இத்தீட்சை முறைகளால் கதிரவன் தோன்றியவுடன் ஒழியும் இருள்போல தன்னைப் பற்றியிருந்த ஆணவத்தை வலிமை அழியச் செய்து மேலும் அது பற்றாமல் செய்து நீதி வழங்கினார் என்று உமாபதிசிவம் குறிப்பிடுவது அவர் பெற்ற சீவன் முத்தர் நிலையைப் படம் பிடித்துக் காட்டுவது ஆகும்.

     எனவே உண்மை விளக்கம் சிவப்பிரகாசம் போற்றிப் பஃ;றொடை நூல்கள் மூலமாக முன் செய் தவத்தால் இப்பிறப்பில் திருவருளை ஞானாசிரியராகப் பெற்று கன்ம மாயை நீக்கி ஆணவத்தை வலியிழக்கச் செய்து உடம்பொடு இறையருளைப் பெறுவது சீவன் முத்தர் நிலையாகும் என்பது பெறப்படுகிறது.


சீவன் முத்தரின் கன்மவினை

     சகலர் இப்பிறப்பில் ஞானாசிரியராக வாழ்கிற பொழுது அவர்கள் பிறப்பதற்கு உரிய கன்ம வினைகள் என்னாயிற்று என்பதையும் சாத்திர நூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. கன்ம வினை அனுபவிப்பதற்கு உரிய மாயா மலத்தால் உண்டாகிய உடம்பு இவ்வுலகில் வாழும் காலம் வரை வாழ்ந்து அழியும் என்று குறிப்பிட்டு அவர்களின் கன்மநிலையைப் பற்றியும் சாத்திரங்கள் கூறுகின்றன.


      கன்ம வினையை  எல்லா உயிரும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். ஆனால் எப்பொழுது சகலர் சீவன்முத்தர் நிலைக்கு உயர்ந்தார்களோ அவர்களுக்கு கன்ம நுகர்ச்சி இல்லாமல் அவர்களுக்கு  இறைவன் அருள் புரிகிறான். அதாவது சகலரை ஞானம் பெற வைத்து தன் உருவாகவே அவர்களை ஆக்கி விடுகிறான். குறிப்பிட்டுச் சொன்னால் சகலர் உடம்;பி;ல் இறைவன் காட்சி தருகிறான். எவ்வாறு இறைவனுக்குக் கன்மவினை இல்லையோ அதுபோல இறைவன் காட்சி தரும் சகலருக்கும் கன்ம வினைகள் இல்லை.


     கன்ம வினை சஞ்சிதம் என்றும், பிராரத்தம் என்றும் ஆகாமிகம் என்றும் மூன்று வகைப்படும். இம்மூன்றும் சகலருக்கு முன்னே ஞானாசிரியன் தோன்றவே சீவன் முத்தராகிய அவர்களைவிட்டு; ஓடிவிடும் என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகிறது.

           ~~தான் செவ்வே நின்றிட அத்தத்துவம்தான் நேரே

                தனையளித்து முன்நிற்கும் வினை ஒழித்திட்டு ஓடும் ||ஜ7ஸ

என்ற பாடல்பகுதி கன்மவினை நிற்காது என்பதைக்  குறிப்பாகக் காட்டுகிறது. இச்செய்தியை பின்னால் வந்த சிவப்பிரகாசம் விளக்கமாக எடுத்துரைக்கிறது.


      ~~எல்லையில் பிறவி நல்கும் இருவினை எரிசேர் வித்தின்

     ஒல்லையி;ல் அகலும் என்ற உடல்பழ வினைகள் ஊட்டும் 

     தொல்லையின் வருதல் போலத் தோன்றிரு வினையது உண்டேல்

     அல்லொளி குரையும் ஞானத்தழல் உற அழிந்துபோம்||ஜ8ஸ


இப்பாட்டின் பொருள் அளவற்ற பிறவிகளைத் தரும் புண்ணிய பாவங்களாகிய சஞ்சிதநிலை தீயில் சேர்ந்த வித்துப்போல ஆச்சாரியனது திருநோக்கால் விரைவில் நீங்கும். வினையால் ஏற்றுக் கொண்ட உடம்பை இடமாகப் பெற்ற பிராரத்த வினை உடம்பு உள்ள அளவும் நின்று அனுபவிக்கத் தீரும். பிராரத்தவினை துய்க்கின்றபோது ஏறுகின்ற ஆகாமிக வினை- இருளைக் கெடுக்கும் சூரியனை ஒத்த ஞான அக்கினி வந்துப் பொருந்த அழிந்து போகும் என்பதாகும். இங்கு ஞான அக்கினி என்பது ஞானாசிரியன் அருளும் தீட்சையாகிய ஞானத்தைக் குறிக்கும். இவ்வாறு சாத்திரங்கள் சீவன் முத்தருக்கு மாயையும், கன்மவினையும் இல்லை என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.


     பிறிதொரு மூலமலமாகிய ஆணவமலம் அழியாது என்றாலும் ஞானம் பெற்ற சகலருக்குத் தன்னுடைய வலிமையிழந்து அவர்களைப் பற்றி இருக்கும் என்று சாத்திரநூல்கள் குறிப்பிடுகின்றன. இதனைக் குறிப்பிடும் சிவப்பிரகாசப் பாடல் சாத்திரம் பயில்வோர் பயிலவேண்டிய இன்றியமையாத பாடலாகும்.


     ~~அழிந்திடும் பாசம் என்னின் நித்தம் என்று உரைத்தல் வேண்டா

     அழிந்திடாது என்னின் ஞானம் அடைவது கருதவேண்டா

     அழிந்திடும் சக்தி நித்தம் அழிந்திடாது ஒளியின் முன்னர்

     அழிந்திடும் இருளும் நாசம் அடைந்திடாம் இடைந்திடாவே||ஜ9ஸ

 

     இப்பாடலின் பொருள் அத்துவித நிலையில் ஆணவ மலம் அழிந்திடும் என்றால் ஆணவமலம் நித்தம் என்று உரைக்க முடியாது. அழியாது என்றால் ஞானம் பெறமுடியாது. அப்படியானால் அழிவது எது. ஆன்மாவின் அறிவை மறைக்கின்ற ஆணவமலத்தின் காரியமாக சத்தியே அழியும். ஆணவ மலத்தின் நித்தியத்தன்மை அழியாது. எதுபோல என்றால் சூரிய ஒளியின் முன் நிற்க முடியாத இருள் நாசம் அடைவதில்லை. அதே நேரத்தில் அவ்வொளியின்முன் முனைந்து நிற்பதும் இல்லை என்பதாகும். இவ்வாறு மும்;மலத்தின் நீக்கம் சீவன்முத்தருக்குச் சிவப்பேறாக அமைகிறது.


சீவன் முத்தருக்கு நினைவு சிவம்

     உடம்பின் செயலை மறந்து தாங்கள் செய்த  வினைகளை ஞானத்தால் நீக்கப் பெற்று வாழுகின்ற சீவன் முத்தர்கள் எத்தகைய வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் சாத்திரங்கள் வகைப்படுத்திக் காட்டுகின்றன.


     தீக்குறும் மாயா காரியங்கள் வந்து சேராதபடி சஞ்சிதம் முதலிய மூவினைகளும் மூவிதத்தால் ஒழிந்திட் மூலமலமாகிய பேரிருளும் அகன்றுபோக சிவத்தின் அருளிலே தான் அடங்கிச் சிவத்தினால் தாங்கப் பெற்றுத் தம் அறிவுக்குள்ளே பேரின்பம் அடங்க மலவாசனை சிறிதும் தாக்காது பேரானந்தம் உறுவர்.ஜ10ஸ

     புண்ணியத் தலங்கள், காலசங்கற்பம், திக்குகள், ஆசனங்கள் ஆகிவயவற்றின் அடிப்படையி;ல் நிகழ்த்துகின்ற சமயக் கோட்பாடுகள் சாதியும் குணமும் சீரும்  சிறப்புமுடைய விரதங்களும், தவங்களும,; செபங்களும், தியானங்களும் ஆகிய இவை எல்லாம் சீவன் முத்தர் தாமாகச் செய்வதும் இல்லை. தாமாக விடுவதும் இல்லை. உண்மைப் பொருளாகிய சிவத்தையே கண்டு கொண்டு இருப்பர். ஏனைய வழிபாட்டு நியமங்கள் எல்லாம் தூங்குகின்றவரின் கைப்பொருள் நழுவுவது போல சீவன் முத்தருக்குத் தாமாக அழிந்து போகும். ஜ11ஸ


      எல்லாவற்றையும் அறியும் ஞானத்தில் கலந்து நின்றாலும் சீவன் முத்தர்கள் சிவம் ஒன்றையே அன்றி மற்றொன்றையும் சிறிதும் காணார். ஜ12ஸ

     அகப்பூசை, புறப்பூசை என்றிருவித அர்ச்சனை செய்யும் இந்தப் பூமியில் இவ்விரண்டுப் பூசைகளும் இன்றி, அவற்றைப் பிரித்து அறியாது பிராரத்த வினைகளையும் கருதாது சிவம் ஒன்றிலேயே நின்றுப் பேரின்பத்தை அனுபவிப்பர்.

      ஐந்தெழுத்தை எண்ணுவது சிவத்தினது அத்துவித நிலையை நினைந்து துதிப்பது இதுவே அவர்களுக்கு உரிய ஞானபூசை ஆகும். ஜ14ஸ


     இவ்வாறு சீவன் முத்தர்கள் உடம்பொடு வாழுகின்ற பொழுது தங்கள் வாழ்வைச்  சிவனையே நினைந்து வாழும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள்.

 

சீவன் முத்தரின் வாழ்வியல்

     சத்தினிபாதம் விளைந்து ஆச்சாரிய உபதேசம் பெற்று எடுத்த உடம்பை கழற்றிவிட்டு எப்பொழுதும் சிவச்சிந்தனையில் இருக்கும் சீவன் முத்தர்களின் வாழ்வியல் எவ்வாறு இருக்கும் என்பதைச் சித்தாந்தச் சாத்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. சீவன் முத்தர்கள் உடம்புடன் வாழ்வதால் அந்த உடம்பின் நிகழ்வுகள் சீவன் முத்தர்களைப் பாதிக்காதா என்ற வினாவை எழுப்பிக் கொண்டு அதற்கு விடை தருவதுபோல தத்துவக் கருத்துக்களை சிவஞான சித்தியார் விளக்கமுறத் தருகிறது.


     ~~இவன் உலகில் இதம்அகிதம் செய்த எல்லாம்

           இதம் அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும்

     அவன்இவனாய் நின்றமுறை ஏகனாகி

           அரன்பணியில் நின்றிடவும் அகலும் குற்றம் 

     சிவனும்இவன் செய்திஎல்லாம் என்செய்தி என்றும் 

           செய்தது எனக்கு இவனுக்குச் செய்தது என்றும்  

     பவமகல உடனாகி நின்று கொள்வான் பரிவால்   

           பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே.||ஜ15ஸ

     சீவன் முத்தர்கள் உலக வாழ்வில் செய்கின்ற நல்வினை தீவினைகளின் பயன்கள் யாவும் சீவன் முத்தர்களுக்கு அமையாமல் அவ்வினைகள் யார் யாரிடத்தில் நிகழ்கிறதோ அவர்களுக்கே அவை பொருந்தும். ஏனென்றால் சீவன் முத்தர்களோடு இறைவன் பிரிப்பின்றி இருப்பதனால் யாருக்காகச் செய்யப் பெற்றதோ அவர்களுக்கே அமையும். மேலும் தங்கள் செயலற்று இறைவன் பணியிலேயே நின்று வருவதால் மலக்குற்றங்கள் சீவன் முத்தர்;களிடத்தில் இருந்து அகலும். சீவன் முத்தர் செய்கின்ற செயல்களை எல்லாம் சிவன் தன்னுடைய செயலாகவே கொள்வான். சீவன் முத்தர்களுக்கு அடுத்தவர் (பிறர்) செய்யும் வினைகள் அனைத்தும் இறைவன் தனக்குச் செய்ததாகக் கொள்வான். இதன் காரணத்தால் சீவன் முத்தர்களுக்கு மேற்கொண்டு பிறவி ஏற்படாது அவர்களுடன் உடனாய் நின்று வினைகளை ஏற்றுக் கொள்வான். சீவன் முத்தர்கள் பாதகச் செயல்களைச் செய்தாலும் தனக்குரிய பணியாக அதனைச் செய்து கொள்வான் என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.

      இப்பாடலின் கருத்தைச் சுருக்கமாக அறிவிப்பதானால் உடம்;பொடு வாழ்கின்ற சீவன்முத்தர்கள் உலகில் செய்கின்ற செயல்கள் அனைத்தும் இறைவன் செயலாக அமையும். சீவன் முத்தர்களுக்குப் பிறர் செய்யும் வினைகள் இறைவனுக்குச் செய்த செயல்கள் ஆகும் என்பது பெறப்படுகிறது. இத்தத்துவ விளக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத்  திருநாவுக்கரசர் சுண்ணாம்புக் காளவாயில் இடப்பட்ட பொழுது அவருக்கேற்பட்ட அனுபவம் அமைந்துள்ளது.  சமணர்களால் கொடுமையான வெப்பத்தை உடைய சுண்ணாம்புக்காளவாயில் திருநாவுக்கரசப்பெருமான் தள்ளப் பெறுகிறார். இது சமணர்கள் சீவன் முத்தராக இருக்கின்ற திருநாவுக்கரசருக்குச் செய்த தீவினையாகும். இந்தத் தீவினையைப் பற்றி எந்தவிதக் கவலையும் கொள்ளாது இறைவனது திருவடியையே திருநாவுக்கரசர் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார். எனவே தீவினையை இறைவன் ஏற்றுக் கொண்டான். திருநாவுக்கரசருக்கோ இறைவனின் திருவருள் சுண்ணாம்புக் காளவாயிலில் மாசில் வீணை உள்ளிட்டவையாகக் குளிர்ச்சியைத் தந்தது.

      சிவஞான சித்தியார் மேலும் குறி;ப்பிடும்;;பொழுது சீவன் முத்தர்கள் எங்கும் யாம் ஒருவருக்கும்  எளியோம் அல்லோம், யாவருக்கும் மேலானோம் என்று இருமாப்பு எய்தி (பெருமிதம் எய்தி) திங்கள் முடியார் அடியாராவோம் என்று திரிந்திடுவர் என்றும் கூறுகிறது.ஜ16ஸ

      இதனை வலியுறுத்துவது போல திருநாவுக்கரசரின் திருவாக்கான நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ஏமாப்போம் பிணியறியோம் என்ற தொடரும் அமைந்துள்ளது. இவ்வாறு சீவன் முத்தரின் இவ்வுலக உடம்பு செய்கின்ற வினை அனைத்தும் அவர்களைப் பந்திக்காமல் இறைவன் அருள் செய்வான் என்பது தெளிவாக உணரப்படுகிறது.  

மலவாசனை நீக்கம்

     சீவன் முத்தர்கள் ஞானம் பெற்ற பிறகும் உடம்பொடு இவ்வுலகில் வாழ்வதால் அவர்களின் உடம்பு உள்ளவரை பசி, நீர்வேட்கை, உறக்கம் ஆகியவை இருக்கத்தான் செய்யும். அவற்றுக்காக காரியங்களைச் செய்கின்றபொழுது அவர்களை அடங்கியிருந்த மலங்கள் தலைப்பட்டு மீண்டும் மல வாசனையை உருவாக்கலாம். அந்த மலவாசனையை நீக்குவதற்கும் சாத்திரங்கள் சாதனங்களைக் கூறுகின்றன. சீவன் முத்தர்களுக்கு மும்மலங்களும் இல்லாவிட்டாலும் உடம்பு உள்ளவரை அவற்றின் வாசனை இருக்கத்தான் செய்யும். அந்த மல வாசனை அவர்களை இறைவனது திருவடியில் நிலைத்திருக்க விடாது உலக வாழ்வியலி;ல் செலுத்தத்ததான் செய்யும். அவ்வாறு வருகின்ற மலவாசனைகளை அவர்கள் விரைந்து கழுவுதல் வேண்டும்.

     இதனை ~~செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா, அம்மலம் கழீஇ||ஜ17ஸ என்று சிவஞானபோதம் குறி;ப்பிடும். அழுக்கை நீர் கழுவுவது போல இறைவனது சிந்தனையால் அம்மல வாசனைகளைக் கழுவ வேண்டும். இவ்வாறு மலவாசனையைக் கழுவுகின்ற செயலில் தொய்வு ஏற்படா வண்ணம் நிகழ்வதற்கு உண்மைச் சிவனடியார்களோடு கலந்து இருத்தல் வேண்டும் என்று அச்சூத்திரம் குறிப்பிடுகிறது. அடியவர்கள் அல்லாத அல்லல் தரும் உலகத்தவர்களோடு பழகினால் தம் அறிவை இழக்கும்படி செய்து மீண்டும் பிறப்பாகிய துன்பத்தில் வீழும்படிச் செய்துவிடுவார்கள். ஆதலால் அவர்களை விடுத்து சிவனடியார்கள் பக்கம் பேரன்பு கொண்டவர்களாக விளங்க வேண்டும்ஜ18ஸ


      மேலும் இறைவன்  தன்னை அறிவதற்கு உரிய திருநீறு, உருத்திராட்சம் அணிந்த தனது உருத்தை சீவன் முத்தர்களிடத்தில் கொடுத்ததாலும், சத்தினி பாதத்தால் தன்னை அறியச் செய்ததாலும், தனது வியாபத்துக்குள்ளே அவர்களை இருக்கச் செய்தலாலும் சீவன் முத்தர்கள் இடத்தில் தயிரில் நெய்போல்  வெளிப்பட்டுத் தோன்றுவான். அவ்வாறு தோன்றிய இறைவனை நினைப்பதோடு இறையடியார்களையும் திருஆலயங்களையும் சிவனாகவே கண்டு சீவன் முத்தர்கள் வழிபட வழிபட அவர்களின் மல வாசனை நீங்கும்.


      திருக்கோயிலில் இருக்கும் சிவலிங்க வடிவத்தில் இறைவன் காட்சி தருவான் என்பதைப் பற்றிச் சிவஞான போதம் குறிப்பிடும் பொழுது ஒரு சிறப்புச் செய்தியைக் குறிப்பிடுகிறது. எல்லா இடத்திலும் நிறைந்திருக்கும் இறைவன் திருக்கோயிலில் இருக்கும் சிவலிங்கமாக இருக்கிறான் என்றால் இறைவனையும் சிவலிங்கத்தையும் வேறு வேறாகக் கண்டதாக அமையும். அதாவது சிவலிங்கம்தான் இறைவன் என்றால் மற்ற இடங்களில் நிறைந்திருக்கும் இறைவன் வேறாகக் கருதப்படுவான். அது தவறு. இறைவன் விறகுக் கடையும் பொழுது எழும் தீப்போல (விறகில் தீப் போல) இறைவனை முழுமையாக அறியாதவர்களுக்குத் திருக்கோயிலில் சிவலிங்கமாகத் தோன்றுவான். ஆனால் சிவனையே நினைத்துக் கொண்டிருக்கிற சீவன் முத்தர்கள் கோயிலாக, சிவனடியார்களாக, எல்லா இடமுமாக சிவபெருமானைக் காண்பதால் சீவன் முத்தர்களுக்கு அந்தச் சிவலிங்க வடிவத்திலும் தோன்றுவான் என்று குறிப்பிடுகிறான். இவ்வாறு மலவாசனை நீங்க சிவனடியார்களைச் சார்ந்துச் சிவனையே நினைத்துக் கொண்டிருத்தல் சீவன் முத்தர்களின் செயல்களாக சாத்திரங்கள் கூறுகின்றன.

 முடிவுகள்

     பன்னிரு திருமுறைகளைத் தந்த அருளாளர்களும்,  தாயுமணவர், அருணகிரிநாதர், குமரகுருபரர் உள்ளிட்ட சிவஞானிகளும், திருமடங்களின் தலைவர்களாக வீற்றிருந்துச் சிவஞானிகளாக வாழ்வு நடத்திய ஆசாரியர்களும் சைவ சமய தத்துவ உலகில் சீவன் முத்தர்கள் எனப்போற்றப் பெறுகின்றனர். இவருடைய சிறப்புக்களைத் தமிழில் கூறும்; பொழுது அணைந்தோர் தன்மை என்ற பொருளில் சைவ சமயம் போற்றி வணங்கும். இத்தகைய சீவன் முத்தர்களின் தூய நிலையையும் அருள் உணர்வையும் அவர்களின் செயல் முறைகளையும் சாத்திரங்களின் வழி இக்கட்டுரை கருத்துகளைத் தந்திருக்கிறது.

     தத்துவ அடிப்படையில் மேலும் மேலும் ஆய்கின்ற பொழுது சைவ சமய உணர்வுடையோர் தாங்களும் சீவன் முத்தராய் வாழவேண்டும் என்ற உணர்வு ஏற்பட சீவன் முத்தர்களின் ஆய்வு பயன்படும் என்பதை இக்கட்டுரை நினைவூட்டுகிறது எனலாம்.


                திருச்சிற்றம்பலம்

---------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக