அழகு முத்து மாலை (மாணவ மாலை)

 .   
அழகுமுத்துமாலைக்கு அணி சேர்க்க வந்தேன் 
 அன்புமகள் முத்து அழகம்மை
முத்து அழகு அம்மை நானே...எண்ணத்தில் அலைமோதும் நினைவுகள் அனைத்தையும் வடிக்க வார்த்தைகள் தேடுகின்றேன் . வந்து விழுந்தவை சொற்பமே . . உள்ளத்தில் உறைந்து நிற்பவை நிலைப்பவை ஓராயிரமே  . . 

எனது ஐயா பழ.முத்து அழகு சிவப்பழம் முத்து.புதுவயல் கண்டெடுத்த பொன்னான நல்முத்து . பெரிய திரு முத்து பீடுயர்ந்த அழகின் முத்து. சைவத்திரு முத்து எங்கள் சித்தாந்தத் திரு முத்து . பேச்சுத் திறத்தாலே பெரும்சபைகள்  கண்ட முத்து . செந்தமிழ்த்தேன் சேர்தெடுத்து செம்மாந்திருந்த முத்து . அம்மையாய் அப்பனாய் எமை ஆதரித்து காத்த முத்து . அழகுத்தமிழை நாளும் அள்ளி அள்ளித் தந்த முத்து . உள்ளத்தில் கனிவும் உதட்டில் கண்டிப்பும் கள்ளமின்றிக் காட்டிய நல் வாசமுத்து .  வருவது வரட்டும் வாழ்ந்துபார் என வழிகாட்டிய முத்து . தான் ஏறிய மேடைகளில் எனை ஏற்றிப் பார்த்த முத்து . உற்ற தோழனாய் உயர் ஆசானாய் ஊக்கம்கொடுத்த முத்து . எனது ஆசிரியப் பணிக்கு அன்றே ஆதாரமான முத்து . போற்றவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் அஞ்சேன் என்ற கண்ணதாசச் சிந்தனையை எம் சிந்தையில் நிறுத்தி கலங்காது நடைபோட வைத்த முத்து எம் முத்தப்ப ஐயா. ஐயாவின் கருத்தில் வாழ்ந்த நாட்கள்   . . அம்மாவின் கையால் உணவுண்ட நாட்கள் . . கல்லூரிக் காலத்தில் வசந்த நாட்கள் நெஞ்சில் படர்ந்திருக்க வாழ்த்தவில்லை . வணங்குகிறேன் ஈசன் திருவடியை எனதாயுளையும் சேர்த்தளிக்க  .. செம்மைத்தமிழுக்கு சீரிய நற்பணி தொடர்ந்திடவே.... . அழகம்மை முத்தப்பரை வணங்கி மகிழும்  .
-------------------------------------------------------------------------------------------------------------

 எனக்கும் அவர்கள் பெற்றோர்கள்                                                                                              - சிங்கமுத்து


    1988ல் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லுரிரியில் தமிழ்படிக்கச் சென்றேன். அப்பொழுது முத்தப்பன் ஐயா முதல்வராக இருந்தார். எந்த ஊர் என்று என்னைக் கேட்டார். நான் வார்ப்பட்டு என்றேன். பக்கத்தில் ஒருமலை இருக்கிறதே தெரியுமா என்று கேட்டார். நான் பறம்புமலை என்றேன். பறம்புமலை பற்றி வேறு என்ன தெரியும் என்று கேட்டார். பாரி ஆண்டமலை என்றேன். சங்கஇலக்கியச் சிறப்புமிக்க பகுதியிலிருந்து வருகிறாய். தகுதியுடையவனாக உன்னைஉருவாக்கிகொள் என்றுவாழ்த்தி வகுப்பறைக்கு அனுப்பினார்.
    முத்தப்பன் ஐயா மகன் பழனியப்பனும் சேதுபதியும் ஏற்கனவே வகுப்பறையில் இருந்தனர் நானும் சேதுபதியும் பள்ளித் தோழர்கள் என்பதால் சேதுபதிமூலம் பழனியப்பன் நட்பு கிடைத்தது வெவ்வேறு சூழலிலிருந்து வந்த மூவரும் ஒன்றானோம். எப்பொழுதும் மூவரும் ஒன்றாகவே இருப்போம். அதனாலேயே நாங்கள் மும்மூர்த்திகள் என்று பெயரெடுத்திருந்தோம்.
    ஒருநாள் பழனியப்பன் என்னையும் சேதுபதியையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பழனியப்பன் அம்மா எங்களைச் சாப்பிடச் சொன்னார்கள். நாங்கள் தயங்கினோம். எங்களுக்கு இன்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தால் என்ன செய்வோம்?சாப்பிடுங்கடா என்று உரிமையோடு உட்காரவைத்து சாப்பாடு கொடுத்தார்கள். நாங்கள் நெகிழ்ந்து போனோம். அன்றுமுதல் நாங்களும் அவர்களுக்குப் பிள்ளைகளானோம். அய்யாவும் அம்மாவும் எங்களுக்குப் பெற்றோர்கள் ஆனார்கள்.  அன்றிலிருந்து மதிய உணவு பெரும்பாலும் ஐயா வீட்டில் தான்.
    மற்றொரு நாள் முத்தப்பன் ஐயா பழனியப்பனோடு எங்களுக்கும் சேர்த்துத் தேர்வுக் கட்டணத்தைக் கட்டிவிட்டு அதற்கான ரசீதை மட்டும் எங்களிடம் கொடுத்தார். நாங்கள் ஒன்றும் புரியாமல் விழித்தோம். எங்களுக்கு இன்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தால் என்ன செய்வோம் என்று அம்மா சொன்னதையே அப்படியே ஐயாவும் சொன்னார். அப்பொழுதும் நாங்கள் நெகிழ்ந்து போனோம். பின்பு நடந்த எல்லாத் தேர்வுகளுக்கும் பழனியப்பனுக்கு கட்டும்போது எங்களுக்கும் சேர்த்துக் கட்டிவிடுவார். மேலும் எங்கள் படிப்பிற்குத் தேவையான அனைத்து நூல்களும் ஐயா வீட்டிலேயே கிடைத்தன அங்கேயே நாங்கள் எல்லாம் கற்றோம். எங்களின் அறிவுப் பண்ணையாகத் திகழ்ந்தது ஐயாவின் வீடு.  தொடரும் இதழ் அங்குதான் முதன் முதலில் உருளச்சு இதழாக வெளிவந்தது. தொடரும் பெயரை தேர்;ந்தெடுத்தவர் பழனியப்பன்.
    1993ல் கல்வியியல் படிப்பிற்காக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வாகி இருந்தேன். தேர்வுக் கடிதத்தை ஐயாவிடமும் அம்மாவிடமும் கொண்டு வந்து கொடுத்தேன். கல்லூரிக்கான கட்டணத்தைக் கொடுத்து கைச்செலவுக்குக் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள் அவர்களால் தான் நான் கல்வியியல் படிப்பை முடித்தேன். பிறகு மீண்டும் இரண்டு ஆண்டுகள் கணேசர் செந்தமிழ் கல்லூரியில் ஐயா அம்மாவின் அரவணைப்பில் எம்.ஃபில் படித்தேன்.
    இன்று நான் முதுகலை ஆசிரியராக பணியாற்றுகிறேன். ஏறத்தாழ 30 ஆண்டுகளாக என் நெஞ்சில் நிறைந்திருக்கும் கண்னெதிர் அன்புத் தெய்வங்கள் அவர்கள். ஒருநாள் கூட அவர்களை நினைக்காமல் இருந்ததில்லை.
    2002ல் முத்தப்பன் ஐயா தலைமையில் எனது கிராமத்தில் எனக்குத் திருணம் நடந்தது. அப்பொழுது இவன் எங்கள் வளர்ப்பு பிள்ளை. எங்கள் வீட்டில் வளர்ந்தவன். எனது பிள்ளை வேறு இவன் வேறு இல்லை என்று திருமண வாழ்த்தரங்கக் கூட்டத்தில் எல்லோரிடமும் உரக்கச் சொன்னார். அப்பொழுது எனக்கு கண்ணீர் முட்டியது. பிறகு என்னையும் என்மனைவி அமலசாந்தியையும் பார்த்து ‘நானும் என் மனைவியும் போல நீங்கள் வாழ வேண்டும்.” என்று வாழ்த்தினார். நாங்கள் அவரது பாதம் பணிந்து வாழ்த்து பெற்றோம். அவரது வாழ்த்து எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
    அதேபோல 2012ல் எனது புது இல்லத்தை முத்தப்பன் ஐயாவும் அழகம்மை அம்மாவும் தங்கள் கரங்களால் திறந்து வைத்து வாழ்த்தினார்கள். அவர்களது இல்லத்தைப் போலவே எல்லாரும் வந்து செல்லும் இல்லமாக எங்கள் இல்லமும் விளங்குகிறது.
    பழனியப்பனுக்கும் மீனாட்சிக்கும் மட்டுமல்ல எனக்கும் அவர்கள் பெற்றோர்கள். ஏனெனில் எனக்கான இந்த வாழ்க்கை அவர்கள் தந்தது. என்றும் அவர்களுக்கு நான் நன்றியுடையேன்.
        இந்நாளில் அவர்களுக்கு பெருமை சேர்க்க எனக்கு இது ஒரு வாய்ப்பு. அவர்களது ஆசீர் வேண்டி அவர்கள் தாள் பணிகிறேன்.


 ----------------------------------------------------------------------------------------------------------------------

நும்கோ  யாரென வினவுவீராயின்
மா. சிதம்பரம்

அது 1992 ஆம் வருடம் . பன்னிராண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அடுத்து என்ன படிக்கலாம் என்ற சிந்தனையோடு பயணித்த காலம். இயற்பியலில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தததால் இயற்பில் படிக்கலாம் எனச் சிலர் ஆற்றுப்படுத்திய நேரம். அந்தப் பொழுதில் தான் எனக்கு பள்ளிநாட்களில் தமிழாசிரியராக இருந்த தர்மலிங்கம் ஐயா அவர்கள் தமிழ் படி என அறிவுறுத்தினார். அவர் வழிகாட்டுதலின்படி மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ் கல்லூரியில் தமிழ் படிக்கச் சேருவதற்காக தந்தையோடு சென்று காத்திருந்தேன்  எனக்கான அழைப்பு வந்ததும் முதல்வர் என பெயர்ப்பலகையிட்ட அறைக்குள் நுழைந்தேன். அங்கு முதல்வராய் அமர்ந்திருந்தவர் தான். என் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு வித்திடப்போகிறார் என்பதை நான் அப்போது உணர்ந்திருக்க நியாயமில்லை. எனினும் நெற்றியில் திருநீறும், கண்டிப்புடன் கூடிய புன்னகையும், யாரையும் முதல்பார்வையிலேயே அளந்துவிடும் நுட்பமான பார்வையும் , ஒருவித உயரிய மதிப்பை என்னுள் உருவாக்கின என்பது உண்மைதான்.
கல்லூரியில் சேர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் கடந்திருக்கும் , எங்கள் கல்லூரியில் ~நன்னெறிக்கழகம் என்ற அமைப்பு உண்டு. மாணவர்கள் இலக்கண இலக்கியப் பேச்சு, எழுத்துப் பயிற்சிகளைப் பெறுவதற்கான பயிலரங்கம் அது, பரதனைப் பற்றிய பேச்சு அது. அதனைக் கேட்ட முதல்வர் ஐயா அவர்கள் அடுத்த வாரத்தில் சிங்கம்புணரியில் மேடையேற்றினார். என்னை ஒரு பேச்சாளனாக அவர் தேர்ந்தெடுத்த முதல் அனுபவம் அது. அதன்பின் இலக்கியத் தலைப்புகள் தான் . கல்லூரி வகுப்பறையில் படித்ததைவிட இரவு நேர வகுப்பறை எனில் அது மிகையன்று. நடுவராக தலைப்புகளை நுட்பமாக ஆராய்ந்து முதல்வர் ஐயா அவர்கள் தீர்ப்பு சொல்லும் முறையினை வேறு யாரிடமும் இதுவரை கண்டதில்லை என்பது தான் உண்மை.
கல்லூரியில் பயின்ற காலத்தில் இலக்கிய அமைப்புகள் நடத்தும் போட்டிகளில் பெறும் பரிசுகள் தனித்ததொரு கவனத்தை ஈர்க்கும். அந்நிலையில் ஐயா அவர்களின் வழிகாட்டுதலில் பெற்ற பரிசுகள் அதிகம், அவற்றுள் குறிப்பிடத்தக்கவை சென்னை கம்பன் கழகத்தில் பெற்ற பரிசுகள். கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் சென்னை கம்பன் கழகத்தில் செயலராக இருந்து போட்டிகளைத் திறம்பட நடத்திய காலம், எங்கள் கல்லூரியில் எங்களுக்கு முன்னோர்களான மு. பழனியப்பன் அண்ணன் அவர்களும், சொ. சேதுபதி அண்ணன் அவர்களும் பரிசுகள் பல பெற்று ராஜபாட்டையே அமைத்திருந்தனர். அடுத்த தலைமுறையாக நானும், நண்பர் மலைப்பாண்டியும் சென்னைக்கு நோக்கி பயணித்தோம். அதற்கான பேருந்துச் செலவையும் தந்து வாழ்த்தி வழியனுப்பிய பெருமை முத்தப்பன் ஐயா அவர்களையேச்சாரும். ஆறு இலக்கியப் போட்டிகளில் ஐந்தில் பரிசுகள் பெற்றேன். நானும், மலைப்பாண்டியும் சுழற்கோப்பைகளையும் பெற்றோம். வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை அறிந்தவுடன் ஐயா அவர்கள் எங்களுக்காக மேலைச்சிவபுரியிலிருந்து சென்னை வந்த நிகழ்வு, ஒரு கல்லூரியின் முதல்வர் என்பதையும் கடந்து அவர்கள் எங்கள் பால் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பினையும். அக்கறையையும் வெளிப்படுத்தி நெகிழச்செய்தது. அந்த அன்பு தான் அடுத்த வருடமும் நானும், சி.சு. முருகேசனும் பரிசுகளும் , கோப்பைகளும் பெற ஊக்கப்படுத்தியது.
நானும் முருகேசன் மற்றும் மலைப்பாண்டி போன்றோரும் எங்கள் வீடுகளில் இருந்த காலத்தை விட ஐயா அவர்களின் வீட்டில் இருந்த காலமே அதிகம். ஐயா அவர்கள் இல்லத்தில் இருந்த நூல்கள் தான் அறிவுக்கண்களைத் திறந்தன. அவைதான் கல்லூரிப் பாடங்களைப் படித்தல் என்ற மனநிலையை மடைமாற்றம் செய்து புதிய இலக்கிய உலகினை அறிமுகப்படுத்தின. நான் முதுகலைத் தேர்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக முதல் மாணவனாக தேறியமைக்கு அந்நூல்களும் அடிப்படைக் காரணமாகும். வீட்டிற்கு வரும் எங்களுக்கு அருகிலிருந்து உணவளிக்கும் அழகம்மை முத்தப்பன் அவர்களின் அன்பு கிடைத்தற்கரிய பெரும்பேறு ஆகும்.
அவர்கள் வீட்டில் அறிவும், அன்பும் பெற்று  வளர்ந்த என்னை தன் ~வளர்ப்பு மகன்| என ஐயா அவர்கள் அடையாளப்படுத்துவது, நினைக்கும் தோறும் நினைக்கும் தோறும் நெஞ்சம் நெகிழச் செய்வதாகும்.
    ஐயா அவர்கள் தேவகோட்டையில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்றுள்ளார்கள். அத்திருமண நிகழ்விற்கு சில நாட்கள் முன்புதான் தேவகோட்டையில் இலக்கியச் சொற்பொழிவினை நிகழ்த்தியிருந்தேன். அதனைக்கேட்ட சான்றோர்கள் ஐயா அவர்களிடம் சிதம்பரம் உங்கள் மாணவர் தானே, மிக நன்றாக பேசுகிறார் என்று கூறியிருக்கிறார்கள். உடனே அகமகிழ்ந்த ஐயா அவர்கள் தேவகோட்டையிலிருந்து காரைக்குடி அழக்கப்பா அரசு கலைக்கல்லூரிக்கு வந்து என்னைப் பார்த்து பாராட்டிவிட்டுத்தான் திருச்சிக்குச் சென்றார்கள். இந்த அன்பும், அக்கறையும் , பரந்த மனமும் யாருக்கு வரும் ! யாருக்கு கிடைக்கும் ! எனக்கும் , என் N;பான்ற சகோதரர்களுக்கும் அது கிடைத்தது. இன்றிருக்கும் நிலையில் மட்டுமல்ல, இதனினும், இதனினும் உயர்ந்ததாலும் முத்தப்பன் ஐயா அவர்களின் மாணவர் என்கிற அடையாளம் தான் பெரிதினும் பெரிதாகும். நான் இக்கட்டுரையை இப்படித்தான் நிறைவு செய்ய விரும்புகின்றேன். ~~இன்றிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்.
------------------------------------------------------------------------



பழ.முத்தப்பன்  - பாங்கறிந்து ஏறிய பட்டிமண்டபச்செல்வர்.



                                          முனைவர்.இரா.இலக்குவன்.
நான் 1996 ஆம் ஆண்டு மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் பிலிட் பயில சேர்ந்த போது, பழ.முத்தப்பன் கல்லூரி முதல்வராக இருந்தார். நீறு பூசிய முகமும் வெள்ளை உடையுமாக அவர் பளிச்சென்று வழக்கமான கல்லூரி முதல்வர் போல் அவர் இல்லை என்பதன் மூலம் அந்தக்கல்லூரியும் வழக்கமான கல்லூரி அன்று. கண்டிப்பு நிறைந்த இடம் என்பதையும் வெளிப்படுத்தியது. அக்கல்லூரியின் முதல்வராக மட்டும் இராது பல்வேறு நிலைகளில் அக்கல்லூரியின் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் அவர் காரணமாக இருந்தார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அவருடைய நிர்வாகத் திறமை கல்லூரியின் ஒழுங்கிற்கு முக்கிய காரணமாக விளங்கியது.
பழ.முத்தப்பன் என்ற பட்டிமன்ற பேச்சாளருக்கு இருந்த விலாசம் அந்தக்கல்லூரியையும் விசாலப்படுத்தியது. பட்டிமன்ற பேச்சு , சைவசித்தாந்த ஈடுபாடு போன்றவற்றை அவரது சிறப்பாகக்குறிப்பிடலாம்.வடமொழியில் உள்ளது போன்று தருக்க சாஸ்திரம் பற்றிய இலக்கண நூல்கள் தமிழில் இல்லை என்ற கருத்து உண்டு. வடமொழியில் தருக்கம் நியாயம் என்று அழைக்கப்படும். அது தொடர்பான பல் நூல்கள் உண்டு.  மணிமேகலைக்காப்பியம் தருக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இலக்கியமாகும்.
பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் என்பது மணிமேகலை.
பன்ன அரும் கலைதெரி பட்டி மண்டபம் என்ற தொடர் கம்பனில் பயின்று வந்துள்ளது. பட்டி மண்டபம் என்ற கலைவடிவம் தருக்கசாஸ்திரத்தின் அடிப்படையில் எழுந்ததாகும். அவ்வகையில் தருக்கம் கற்று முற்றுணர்ந்தோர்களே ஒரு காலத்தில் பட்டிமண்டபத்தில் ஏறினர் என்பது வெளிப்படை. ஒரு காலத்தில் மத அடிப்படையிலான தத்துவச்சண்டைகளுக்கே பட்டிமண்டபங்கள் பயன்பட்டன. பின்னர் அது இலக்கிய விசாரத்திற்கும் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் மக்களுக்கு நெருங்கிய ஊடகமாக (mediam) மாறிப்போனது. காரைக்குடி கம்பன் கழகம் போன்ற அமைப்புகளும் குன்றக்குடி அடிகளார் போன்ற நாயகர்களும் பட்டிமண்டபத்தை மேலும் மேலும் அழகுடையதாக்கினார்கள். கம்பன் குறித்து ரா.பி.சேதுப்பிள்ளைக்கும் திராவிட கழகத்தினருக்கும் நடந்த பட்டிமன்றம் நாடறிந்தது. எனினும்மதுரைக்குத் தெற்கே பட்டிமண்டபம் அபகீர்த்தியுடனே விளங்குகிறது. மதுரை சார்ந்த பகுதிகளில் அது பெரும்புகழ் பெற்றது. பலர் இன்று அதை குத்தாட்டம் நிலைக்குக்கொண்டு வந்து பட்டிமன்றத்தைக் கழுவேற்றிவிட்டார்கள். பழ.முத்தப்பன் ஒரு சிறந்த பட்டிமண்டப நடுவர்.அவர் தமது வாழ்வில் இன்றுள்ள பல பட்டிமன்றப்பேச்சாளர்கள் போல தரங்கெட்ட சபையாக பட்டிமன்றத்தை நடத்தியதில்லைகணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் அவர் முதல்வராக இருந்தபோது அவர் அவ்வட்டாரம் முழுக்க பட்டிமன்றம் நடத்துவார். அவர் நடுவராகவும் ஓரளவு பேசும் ஆர்வமுள்ள மாணவர்கள் அணிப்பேச்சாளர்களாகவும் இருப்பர். கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்த முதல் மாதத்திலேயே அப்படிப்பட்ட மாணவர்களை கூட்டத்திலிருந்து கொத்தி எடுக்கும் திறமை அவருக்கு மட்டுமே உள்ள சிறப்பு. அறிவையும் திறமையையும் கண்டுணர்ந்து அவர் செய்யும் மரியாதை அவர் சிறந்த ஆசிரியர் என்பதை அணியம் செய்யும். மேலும் அந்த மாணவர்களை வாசிக்கத்தூண்டுவதும் வாசித்த நூல்கள் பற்றி உரையாடுவதும் செய்வார்.மாணவர்களை தனது வீட்டுக்கு அழைத்து தமது நூலகத்திலுள்ள புத்தகங்களையும் மாணவர்களுக்குப் படிக்கத்தருவார். இதெல்லாம் அந்த சிறு கிராமத்தில் என்னைப்போன்ற ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பெரும் கொடையாக இருந்தது. மாணவர்கள் குழாமுடன் முதல்வர் மேலைச்சிவபுரிப்பகுதியில் உள்ள கோயில்கள், விழாக்கள், திருமண விழாக்கள் போன்றவற்றிற்கு பட்டிமன்றம் நடத்தச்செல்வார். பெரும்பாலும் தலைப்பு பெரியபுராணம் பற்றியதாக இருக்கும். சில நேரங்களில் குடும்ப முன்னேற்றத்தில் அதிகப்பங்களிப்பளிப்போர் ஆண்களா பெண்களா? என்று இருக்கும். எந்தத் தலைப்பாக இருந்தாலும் மிகுந்த உற்சாகத்துடன், திருக்குறள், பெரியபுராண மேற்கோள்களுடன் அவரது சொற்பொழிவு அமையும். அந்த கூட்டங்கள் எதற்கும் பணம் கிடைக்காது. அதற்காக அவர் ஒருநாளும் வருந்தியதில்லை. மேடையில் நடுவராக அமர்ந்து இலக்கியம் பேசுவதென்றால் அவர் முகத்தில் உவகை பூத்திருக்கும். அந்தப்பேச்சின் முடிவில் கோயிலில் உடைத்த தேங்காய் பழமும் சிறிது சர்க்கரைப்பொங்கலும் கொடுப்பார்கள். அந்த கூட்டங்களெல்லாம் தேங்காய் முறி கச்சேரி என்று செல்லமாக அழைப்போம்.  பணம் ஒன்றும் இருக்காது. தேங்காய் முறி கச்சேரிதானே என்று அலட்சியமாகவும் இருப்பதில்லை. சிங்கப்பூருக்குப் பேசச்செல்லும் மனநிலைக்கும் தேங்காய்முறி கச்சேரிக்குப் பேசச்செல்லும் மனநிலைக்கும் அவரிடம் வேறுபாடு காணமுடியாது. இது அவர் கற்ற தமிழின் மீது அவர் எவ்வளவு ஈடுபாட்டோடு விளங்கினார்  என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
ஒருதடவை அவரிடம் நான்,’ஏன் இப்படி தொடர்ந்து தேங்காய்முறி பட்டிமன்றங்கள் நடத்துகிறீர்கள்? என்ற பொருளில் அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் அவர் தமது முதல்வர் பணியையும் கணேசர் செந்தமிழ்க்கல்லூரியையும் எவ்வள்வு விரும்பினார் என்பதை அறிந்து கொண்டேன்.
‘டேய்..நாம இப்படி ஊரைச்சுத்தி பட்டி மன்றம் நடத்துனாதான் இங்குள்ள மக்களுக்கு தமிழ்க்கல்லூரி இருக்கிறது தெரியும். இவங்கெல்லாம் கிராம மக்கள். தமிழின் சிறப்பை நாம இப்படி அடிக்கடி ஞாபக படுத்தினால்தான் மக்கள் தம்பிள்ளைகளை நம்கல்லூரியில் சேர்ப்பார்கள். ஒரு காலத்தில் நமது கல்லூரியின் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பமாக இருந்தது உனக்குத்தெரியுமா?  என்று சொன்னார் பழ.முத்தப்பனார். அவர் எப்போதுமே எடுத்த காரியத்தை செட்டாக செய்யவேண்டுமென்ற நகரத்தார்களுக்கே உரிய குணம் கொண்டவர். அந்த வகையில் தமது நாவன்மையால் கல்லூரியில் சேர்க்கையை அதிகரித்தார். பெரியபுராணத்தையும் சைவசித்தாந்ததையும் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் விளக்கக்கூடியவர் உனது முதல்வர் பழ.முத்தப்பன் அவர்களே என எனது தந்தை அடிக்கடி சொல்வார். அவர் ஒரு நாள் கல்லூரியில் எடுத்த நன்னூல் இலக்கண வகுப்பு இன்றும் என் நினைவில் இனிக்கிறது. அன்று நன்னூலை அவ்வளவு இனிமையாக நடத்தினார். பிலிட் படித்து முடிக்கும் முன்பே பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை நேரடியாக உரையின்றி படிக்கச்செல்லி ஊக்கப்படுத்தியவர் அவரே. என்னுடன் பயின்ற மாணவர்கள் பாடத்திட்டத்தில் உள்ள பத்திருபது செய்யுள்களைப் படித்துக்கொண்டிருந்தபோது நான் நூல் முழுமையும் படித்துக்கொண்டிருந்த்தேன். எல்லாரும் சனரஞ்சக நாவல்களைத்தேடிக்கொண்டிருந்தபோது நான் பழந்தமிழ் ஆய்வு நூல்களாகத்தேடிப்படித்துக்கொண்டிருந்த்தேன் அதற்கான ஆர்வத்தை அளித்தவர்கள் எனது தந்தையும் எனது முதல்வர் பழ.முத்தப்பன் அவர்களுமே ஆவர். மங்காத தமிழின் சங்காக அவர் குரல் தமிழகம் முழுவதும் மேடை தோறும் ஒலிக்க வேண்டும். அய்யா பழ.முத்தப்பனார் தம்பதியர் நூறாண்டு வாழ வேண்டும் என தமிழை வழுத்துகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக