புதன், 26 ஜனவரி, 2022

பெரியநாயகி அம்மை கலித்துறை - ஒரு மீள்பார்வை.



சித்தாந்த செம்மணி, முனைவர். பழ, முத்தப்பன்.

மேனாள் முதல்வர்,

கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி. 


கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய நூல்களில் ஒன்று பெரியநாயகி அம்மை கலித்துறை என்பதாகும். இந்நூல் பத்தொன்பது கலித்துறைப் பாடல்களைக் கொண்டது. விருத்தாசலம் என்று அழைக்கப்படும் திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியுள்ள பெரியநாயகி அம்மை உடனாகிய விருத்தகிரிஸ்வரர் திருக்கோவில் தலம், தீர்த்தம், மூர்த்தி சிறப்புகளைக் கொண்டது. இத்திருக்கோவிலில் எழுந்தருளி இருந்து அருள் வழங்கும் பெரியநாயகி அம்மையின் மீது சிவப்பிரகாச சுவாமிகளால் போற்றிப் பாடப்பெற்ற நூல் இது. இந்நூலை மீள்பார்வையில் பயிலும் பொழுது எழுந்த சிந்தனைகளை மயிலம் திருமடத்தில் நிகழ்ந்த சமயமும் சமுதாயமும் என்ற பொருள் பற்றிய கருத்தரங்கில் பதிவு செய்தது இக்கட்டுரையாகும். 


நூல் பாடப்பெற்ற சூழல்:

விருத்தாசலத்தில் பெரியமடம் என்று அழைக்கப் படுகின்ற குமாரதேவர் மடம் புகழுக்குரிய மடமாகும். இது துறையூர் ஆதீனத்தோடு தொடர்புடையதாகும். இத்திருமடத்தில் முதன்மை குருவாக விளங்கியவர் ஆதிசிவப்பிரகாசர். இவர் திருவாவடுதுறை ஆதி முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள்பால் சீடராய் விளங்கியவர்.  திருவாவடுதுறையில் வாழ்ந்த பொழுது தில்லைத் திருக்கோவிலின் சைவ வைணவப் போராட்டத்தில் லிங்ககண்ணா என்பவரைச் சந்திப்பதற்காக லிங்கதாரணம் செய்து கொண்டவர். குமாரதேவர் மடத்தோடு நம் சிவப்பிரகாச சுவாமிகளின் தந்தை குமாரசாமி தேசிகர் பெற்ற திருநீற்றுத்  திருவருளால், அவர்தம் இல்லற வாழ்வில் நான்கு மக்களைப் பெற்றிடும் திருவருள் கிடைக்கப் பெற்றார். எனவே சிவப்பிரகாச சுவாமிகள் தாம் தோன்றுவதற்குரிய திருமடத்திற்குச் சென்று சிலநாள் தங்கியிருந்த பொழுது, பெரியநாயகி அம்மையின் மீது இப்பாடலைப் பாடியிருக்க வேண்டும் எனக் கருதப் பெறுகிறது. 


நூலில் இடம் பெறும் சமயச் செய்திகள்:

இந்நூலுள் சிவப்பிரகாச சுவாமிகள் அம்பிகையுடன் நேரில் பேசுவது போன்ற நடையில் பாடல்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கின்றன. நூலில் பல புராணச் செய்திகளைச் சிவப்பிரகாச சுவாமிகள் நகைச்சுவையோடு விமர்சனம் செய்திருப்பது படித்து இன்புறத் தக்கதாகும். பாடல்களில பத்திச்சுவை இருப்பதோடு, சைவசமய ஆன்மீகச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன.  

ஷஷசத்திதன் வடிவு ஏதுஎன்னில்

தடையிலா ஞான மாகும்'


என்பது சிவஞானசித்தியாரின் 82- வது பாடலின் பகுதியாகும். முழுமுதல் இறைவனின் திருவருளாக வெளிப்படும் சத்தியாம் அம்மை ஞானம் வழங்கும் தெய்வ வடிவாகும். அதன் அடிப்படையில் பெரியநாயகி அம்மை கருணை உள்ளம் படைத்தவள் என்பதைப் பல பாடல்களில் சிவப்பிரகாச சுவாமிகள் குறித்துள்ளார். 

  ஷஷ இறைவற்குத் தக்க இறுமாப்பு என்னும்மொழி இன்றி ஒரு

   மறுவற்ற தன்மனை யாட்(கு)ஏற்ற தாம்இறு மாப்பன் எனக்

   குறைவற்ற நெல்கொண்டு உலகுஏற்றும் உன்னைப்பலி கொள்ளும்அரன்

   பெறஉற் றனை யன்னை ஏகுன்றை வாழும் பெரியம்மையே.'   (1)


இப்பாலில் சிவபெருமானுக்கு இறுமாப்பு ஏற்படுவதற்குக் காரணம் , அவரால் தரப்பெற்ற இருநாழி நெல்லைக் கொண்டு உலக உயிர்களை எல்லாம் காப்பாற்றிய அம்மையின் கருணைச் செயலே அவ்இறுமாப்பைத் தருகிறது. ஏனென்றால் எல்லாவற்றையும் ஆளுகின்ற தன்மை சிவபெருமானுக்கு இருப்பினும், பிச்சை ஏற்று உண்ணும் புராண நிகழ்வைச் சிவபெருமான் பெற்றிருந்ததினால் தமக்குத் தாமே இறுமாப்புக் கொள்ள இயலாது. அம்பிகையின் அருள் கருணையினால்தான் சிவபெருமானுக்கு அப்பெருமை கிடைத்தது என்று இப்பாடலில் குறிப்பிட்டுள்ளமை அறியத் தக்கதாகும். திருவள்ளுவப் பேராசானின் ,

ஷஷபுகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை'   (குறள் - 59)

என்று குறளின் கருத்தை வழிமொழிந்து , அம்பிகையின் அருட் கருணையால் இறைவனுக்குப் பீடுநடையாம் இறுமாப்பு உண்டு என்பதைச் சிவப்பிரகாச சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். 


அடுத்து ஒரு பாடலில் இறைவியின் கருணையை வேறு எவரிடத்தும் காணமுடியாது என்பதைச் சிவப்பிரகாச சுவாமிகள் எடுத்துக் காட்டியுள்ளார். 

ஷஷநின்போல் இலர்அரு ளாளர்என் றேசொல நின்கொழுநன் 

என்போல் ஒருவன் மகன்பூங் கழுத்தினை ஈர்வல் என்றே

அன்புஓர் சிறிதும் இலனாகப் போகஅதற்கு இசைந்து

பின்போய் விடாதுகண் டாய்குன்றை வாழும் பெரியம்மையே' (7)


என்ற பாடலி;ல் பெரியபுராண  அடியார்களில் ஒருவரான சிறுத்தொண்டரின் வரலாற்றுச் செய்தியை இடம்பெற வைத்து, அம்பிகையின் கருணையை உட்பொருளாகப் பாடியுள்ளார். இப்பாடலின் பொருள் --- எம்போன்ற அடியவர்களில் ஒருவனாகிய சிறுத்தொண்டர் மகனைக் யமுதாக்க இறைவன் சென்ற பொழுது, அவருடன் நீயும் செல்லாது இருந்தது உன் கருணை உள்ளத்தை வெளிப்படுத்துவதாகும். இத்தகைய அருள் வேறு யாரிடத்தும் காணமுடியாது. சிறுத்தொண்டர் மகனை அரியச் சென்ற பொழுது, நீ உடன் செல்லாது , சிறுத்தொண்டருக்கு அருள் வழங்கும் பொழுது சிவபெருமானுடன் உமையவள் காட்சி தந்த நிகழ்வைச் சேக்கிழார் குறிப்பிட்டிருப்பதை உட்பொருளாகக் காணும்;படிச் சிவப்பிரகாச சுவாமிகள் பாடலை அமைத்திருப்பது நினைந்து இன்புறத் தக்கதாகும். 


ஷஷமையல் கொண்டு புறத்தணைய மறைந்த அவர்தாம் மலைபயந்த 

தைய லோடுஞ் சரவணத்துத் தனய ரோடும்  தாம்அணைவார்.'

(சிறுத். பா. 84)

என்ற பெரியபுராணப் பகுதி மகனைக் கேட்கச் சென்ற பொழுது, சிவபெருமானோடு உடன் செல்லாத அம்பிகை, மகனின் பாசத்திலிருந்து விடுபட்ட சிறுத்தொண்டர் குடும்பத்திற்கு அருள் வழங்கும்பொழுது, சிவபெருமானோடு சேர்ந்து காட்சி தந்த நிகழ்வைச் சேக்கிழார் கூறியிருப்பதைச் சிவப்பிரகாச சுவாமிகள் பெரியநாயகி அம்பிகையின் மீது ஏற்றிச் சொல்லியிருப்பது  நினைந்து இன்பறத் தக்கதாகும். 


மற்றொரு பாடலில் ஆன்மாவிற்குரிய ஆணவம் என்ற இருளைக் குறைப்பது இறைவியின் அருள் என்று அவளது அருளைப் பிறிதொரு முகமாகக் காட்டுகிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.  


ஷஷஉள்ளத்து உறுபிணி யேற்கு மருந்திற்குஎன் றுன்னைவந்து

 வெள்ளத் தொழவும் திருமுலைப் பால்நெல் விரல்நுதியால்

 தௌ;ளித் துளியளவு ஆயினும் தொட்டுத் தெறித்திலைஉன்

 பிள்ளைக்கும் கிள்ளைக்கும் பால்கொடுத்தால்என் பெரியம்மையே' (பா.15)


இப்பாடலில் உள்ளத்தில் ஏற்படுகின்ற நோயாகிய ஆணவமலத்தைக் குறைப்பதற்காக உன்னை நான் வந்தடைந்தேன், பெருமாட்டியே, ஞானசம்பந்தராம் பிள்ளைக்கும், கிளியாகிய உன் கையிலிருக்கும் பறவைக்கும் பால் அமுதத்தைக் கொடுக்கும் நீ,  எனக்கு அவ்வாறு பாலைக் கொடுக்கவில்லை என்றாலும், பாற்கிண்ணத்திலிருக்கும் பாலை ஒருவிரலால் ஒருதுளி எடுத்து  என்வாயில் தெளிக்க மாட்டாயோ என்று சிவப்பிரகாச சுவாமிகள் அம்மையிடம் வேண்டுகிறார். ஞானப்பாலில் ஒருதுளி கிடைத்தால் தன்னிடத்தில் இருக்கின்ற ஆணவநோய் அகலும் என்று  வேண்டுவது, இறைவியின் அருளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  இவ்வாறு கலித்துறை நூலில் இறைவன் என்பவர் அருளை வழங்கும் அருட்செல்வர்தான் என்பதை வேறு வேறு கோணங்களில் சிவப்பிராசாச சுவாமிகள் காட்டியிருப்பது மீள் பார்வையால் பெறப்படுகிறது. 




நூலில் இடம்பெறும் சமுதாயச் செய்திகள்:

சிவப்பிரகாச சுவாமிகள் தாம் அருளிய பெரியநாயகி அம்மை கலித்தொகையில், சமுதாயத்திற்கு வேண்டிய நடைமுறை வாழ்வியலை எடுத்துக் காட்டியுள்ளமையைச் சில பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.    


பெண்மையின் சிறப்பு:

கலித்துறை நூல் பெண்பால் இறைவியைப் போற்றிப் பாடும் நூல் ஆதலால் சிவப்பிரகாச சுவாமிகள் பாடல்கள் தோறும் அம்பிகையாம் பெண்மையின் சிறப்பினை எடுத்துக் காட்டியிருப்பது இயல்பாகும். என்றாலும் தாம் வாழ்ந்த காலத்தில் பெண்மைக்கு ஏற்றம் இல்லாததை எண்ணிச் சமுதாயத்தில் பெண்பிள்ளை பிறப்பைப் போற்ற வேண்டும் என்ற கருத்தை ஒரு பாடலில் தெளிவாக விளக்கியுள்ளார். 


ஷஷகற்றார் அறிகுவர் மக்கள்தம் பேறுஎனக் கட்டுரைத்த

சொல்தான் ஒருபெண் ஒழித்;ததுஎன் பாரொடு தொல்உலகில்

நற்றாண் மகற்பெறுக என்றஆசி சொல்பவர் நாணஉனைப்

பெற்றான் மலையரை யன்குன்றை வாழும் பெரியம்மையே' (பா.12)


இப்பாடலில் முதல் இரண்டு வரியில் அமைந்த செய்தி , திருக்குறளில் புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தில் முலாவது குறள்,  


ஷஷபெறுமவற்றுள் யாம்அறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற.'   


என்பதாகும். இதற்கு உரையெழுத வந்த பரிமேலழகர், மக்கள் என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது என்று எழுதியுள்ளார். இதனால் மக்கட் பேற்றின் பெருமைக்கு உரியவர்கள் ஆண்மக்கள்தான் என்பது பரிமேலழகர் கருத்தாக அமைகிறது. எனவே சிவப்பிரகாச சுவாமிகள் கற்றோர் பெண்ஒழித்து என்று கூறியது, பரிமேலழகர் கருத்தை ஒட்டியதாகும்.   கற்றோர்கள் பெண்ணையை ஒதுக்கிட, கல்லாத மற்றவர்கள் மணமக்களை வாழ்த்துகின்ற பொழுது நல்ல ஆண்மக்களைப் பெறவேண்டும் என்று வாழ்த்துவதும் பெண்மையைப் போற்றாத செயல்களாகும். ஆனால் பெரிய நாயகி அம்மையே, உன்னுடைய பிறப்பு பெண்மையை உயர்த்துவதற்காக அமைந்து, சமுதாய மக்கள் பெண்மக்களைப் பெறுவதில் சிறுமை கொள்ளாது பெருமை கொள்ளவேண்டும் என்ற கருத்தை இப்பாடலில் சிவப்பிரகாச சுவாமிகள் வலியறுத்துகிறார். 


பொறுமை வேண்டும்:

பெண்மையைப் போற்ற வேண்டும் என்று கூறிய சிவப்பிரகாச சுவாமிகள் , சமுதாய மக்களுக்குப் பொறுமைக் குணம் இன்றியமையாதது என்பதைப் பிறதோர் பாடலில் வலியுறுத்துகிறார். 


    ஷஷஇழைபொறுத் தாற்பொறை தான்என்ப ரால்நல் இசைப்புலவர்

மழைபொறுத் தார்பு னல்முக்காற் பொறுக்கும் வழுக்கதுண்டே

உழைபொறுத் தார்நல் இயற்பகை யார்மனைக்கு உற்றவொரு

பிழைபொறுத் தாய்;நன்று காண்குன்றை வாழும் பெரியம்மையே'

(பா. 3) 

இப்பாடலில் நல்லிசைப் புலவர் என்று சிவப்பிராகச சுவாமிகள் குறிப்பிட்டிருப்பது திருவள்ளுவரையாகும். திருவள்ளுவர், 


ஷஷஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை' (குறள் - 151)


என்ற குறள் மூலம் பிறர் தரும் துன்பத்தைப் பொறுத்தலே பொறையுடைமை என்று கூறியியுள்ளார். இயல்பாக சமுதாய வழக்கில் நீரில் மூழ்குகின்ற ஒருவனை நீரானது பொறுத்து மூன்றுமுறை எழுப்பிவித்து அவனைக் காப்பாற்றுகிறது என்ற இலக்கியச் சான்று ஒன்றினையும், நடைமுறைச் சான்ற ஒன்றினையும் காட்டிப் பொறுமையின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார். இத்தகைய பொறுமையுடைமை பெரியநாயகி அம்மைக்கு அமைற்திருந்தது என்பதை இயற்பகையார் வரலாறு மூலம் அறிய வைக்கிறார். அதாவது  இறைவன் இயற்பகையாரின் மனைவியை வேண்டிப் பெற்றுத் தம்மை  வந்து அடைந்த பொழுதும், : இறைவன் மீது சினம் கொள்ளாது, அவர்  தமக்களித்த துன்பத்தைத் தாங்கிக் கொண்டவள் என்று குறிப்பிட்டுச் சமுதாய மக்களுக்குப் பொறுமை மிகவும் இன்றியமையாதாகும் என்று வலியுறுத்துகிறார். 


காலில் விழுந்து வணக்கம் ஒழிதல் வேண்டும்:

பெண்மையைப் பாராட்டிய சிவப்பிரகாச சுவாமிகள் சமுதாய மக்களுக்குப் பொறுமை வேண்டும் என்று வலியுறுத்தி, மேலும் இன்றையச் சமுதாய வழக்கு ஒன்றை அம்பிகையினிடத்தில் கூறுவதன் மூலம் கடிந்து விலக்க வேண்டும் என்கிறார். அதாவது ஒருவர் காலில் மற்றொருவர் வீழ்ந்து வணங்கும் வழக்கம் இன்று சமுதாயத்திலும் அரசியல் நிலைகளிலும் மிகுதியாக வழங்கப் பெற்று வருகிறது. இதனைச் சிவப்பிராகச சுவாமிகள் பெரியநாயகி அம்மையைப் பார்த்து , ஊடல் காலத்தில் உன் கணவன் உன் காலில் விழுந்து வணங்கினால் அதனை ஏற்காது நீ பின்வாங்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்குரிய காரணமாகச் சிவபெருமான் தலையில் உள்ள பாம்பு உன் காலைச் சுற்றும், சிவபெருமான் தலையில் உள்ள பிறைச்சந்திரனின் முனை இரண்டும் உன்காலைக் குத்தும், மேலும் அவர் அணிந்துள்ள மண்டையோட்டு மாலைகள் உன் காலில் பட்டு அனுசிதம் உண்டாக்கும் என்றும் குறிப்பிட்டு, இக்காரணங்களால் நீ பின்வாங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இது பெரியநாயகி அம்மையைப் பார்த்துக் கூறுவது போல் இருந்தாலும், தற்கால வாழ்க்கைக்கும் பொருத்தமாக அமைகிறது. இத்தகைய கருத்தமைந்த பாடல், 


ஷஷபொன்வாங்கு செஞ்சடைப் பாம்பு கள்சுற்றும் பதுமதியின்

தன்வாங்கு கோடு கிழிக்கும் நகுவெண் தலைபடும் கல்

முன்வாங்கும் எந்தைநின் பாதாம்பு யத்தில் முடிவணங்கின்

பின்வாங்கி நில்அன்ன மேகுன்றை வாழும் பெரியம்மையே'

(பா.5)

இப்பாடலில் பெரியநாயகி அம்மைக்குக் கூறுவது போல் சமுதாயக் கருத்தை வெளிப்படுத்திய சிவப்பிரகாசர் , பிறிதொரு பாடலில் ( பாடல். 8), பெரியநாயகி அம்மையே, தாருகாவனத்து முனிவர் மனைவியரிடம் உன் கணவன் யாசிக்கச் சென்றதை நீ நினைந்து, இனிமேல் பிறர் இடத்தில் ஓடு ஏந்தி யாசிக்கக் கூடாது என்ற ஒரு சொல் சொல்லி, அவரைத் திருத்த வேண்டும் என்று கூறிச் சமுதாயத்தில் யாரும் பிச்சையெடுத்து உண்ணுதல் கூடாது என்பதையும், இல்லறவாழ்வில் கணவன் மனைவியருள் ஒருவர் தவறு செய்தால் மற்றவர் திருத்த வேண்டும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தி இது போன்ற சமுதாயச் சிந்தனைகளைத் தாம் பாடிய நூலில் சிவப்பிரகாச சுவாமிகள் வைத்துள்ளமை போற்றுதற்கு உரியவை ஆகும். 


இவ்வாறு சிவப்பிரகாச சுவாமிகள் பாடியருளிய பெரியநாயகி அம்மை கலித்துறை நூலை மீள்பார்வையில் வாசிக்கும் பொழுது நூலின் மூலமாகச் சிவப்பிரகாச சுவாமிகள் உணர்த்தும் சமய, சமுதாயச் சிந்தனைகளை அறிய முடிகிறது.  


  திருச்சிற்றம்பலம். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக