புதன், 26 ஜனவரி, 2022

திருக்குறளில் மெய்ப்பொருளியல்


முனைவர்.பழ.முத்தப்பன்,

மேனாள் முதல்வர், 

கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி


மெய்ப்பொருளியல் என்பது மனித குலம் அனைத்திற்கும் பொதுவான எல்லாத் தளங்களோடும் பொருந்தியிருக்கக் கூடிய ஒரு துறையாகும். நம் கண் முன்னே பரந்து பட்டுக் கிடக்கும் இவ்வுலகமும், இவ்வுலகத்தி;;ல் பல்வேறு இனங்களாக வாழும் உயிர்களும் படைக்கப் பட்டது எப்படி? படைத்தவன் யார்? பிறப்பு, இறப்பு எத்தகைய அடிப்படையில் நிகழுகிறது? இத்தகைய வினாக்களுக்கு விடைகாண முயல்வதே மெய்ப்பொருளியல் துறையாகும். இத்துறை மனித வாழ்விற்கும் அவ்வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வியலால் காண இயலாத ஒரு உந்து சக்தியை ஆய்வது இவ்வாய்வின் அடிப்படைத் தளமாகும். 


இத்துறை மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்து கிடப்பதால் மனித வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்ற திருவள்ளுவப் பேராசானும் மெய் உணர்தல் என்ற தலைப்புடைய அதிகாரத்தில் இத்துறைக்கு அடிக்கோலிட்டிருக்கிறார் எனலாம். அறத்துப்பாலில் துறவற இயலில் 36-வது அதிகாரமாக மெய்யுணர்தல் என்ற அதிகாரம் அமைந்துள்ளது.  இதற்கு உரையெழுத வந்த பரிமேலழகர்,

'அஃதாவது பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரத ஐயங்களால் அன்றி , உண்மையால் உணர்தல். இதனை வடநூலார் தத்துவ ஞானம் என்பர். இதுவும் பற்றற்றான் பற்றினைப் பற்றிய வழி உளதாவதால் துறவின் பின் வைக்கப் பட்டது' என எழுதுவார். இக்கருத்தின்படி பிறப்பு முத்தியை உருவாக்குகின்ற இறை உணர்ச்சியின் உண்மைப் பொருளை உணர்தல் மெய்ப் பொருளியல் துறை என்பது ஆகின்றது. இத்தகைய பொருளை ஆராய்வானுடைய அறிவின் கண்ணதே தான் உலகம் இருக்கிறது என்பதையும் திருவள்ளுவர் சுட்டிக் காட்டுவார். 

'சுவைஒளிஊறு ஓசை நாற்றம்என்று ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு' (27)

என்ற குறட்பாவின்படி, 

தத்துவ உலகத்தார் கூறுவதன்படி தன்மாத்திரையாக விளங்கும் சுவை, ஒளி:, ஊறு, ஒசை,நாற்றம் என்ற ஐந்தின் கூறுபாட்டை ஆய்வு செய்கின்ற நல்ல அறிஞனிடத்தே தான் உலகம் உள்ளது என்பது இக்குறட்பாவின் பொருளாகும். 

எனவே, திருவள்ளுவர் காலத்தே தத்துவ விசாரணை நிகழ்ந்திருக்கிறது என்பது புலனாகிறது. 


சைவ சித்தாந்தத்தின் கோட்பாட்டின்படி ஆன்ம தத்துவங்களில் ஒரு கூறு தான் தன்மாத்திரையாகும்.  தன்மாத்திரையில் இருந்து ஒரு வளர்நிலைதான் ஐம்பெரும் பூதங்களாகும். அந்த அடிப்படையில் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐந்தினை ஆய்வு செய்கின்ற  ஒரு தத்துவ நிலை மனித உலகிற்கு வேண்டுவதாகிறது. அத்தகைய ஆய்வுதான் மெய்ப்பொருளியலாக இன்றைக்கு வளர்ந்திருக்கிறது.  


தத்துவ விசாரணையில் உண்மைப் பொருளாக இருக்கின்ற செம்பொருளை ஆய்ந்து கண்டவர்கள் மீண்டும்; பிறவி என்ற துன்பத்தை அனுபவிக்க மாட்டார்கள் என்பது திருவள்ளுவரின் அடித்தளமான கொள்கையாகும். இதைத்தான் கீழ்வரும் குறட்பாவில் குறிப்பிடுகிறார். 

'கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றுஈண்டு வாரா நெறி.' (356)

மெய்ப்பொருள் நிலையில் ஆய்வினை மேற்கொண்டு கிடைக்கப் பெற்றிருக்கும் ஞானிகளின் உபதேச மொழிகளைக் கேட்டு அனுபவித்து , அதனால் உண்மைப் பொருளை உணர்ந்தவர்கள் மீண்டும் பிறவி என்ற துன்பத்திற்கு வாராத நெறியை எய்துவர் என்பது இக்குறட்பாவினுடைய பொருளாகும். இதற்குச் சிறப்புரை எழுதவந்த பரிமேலழகர், 'வாரா நெறி என்பதற்கு வீட்டுநெறி' என்று எழுதுவார். மேலும் பலராலும் பலநிலையிலும் உபதேசங்களைக் கேட்டவர்கள் வீட்டு நெறியை அடைவார்கள் என்று குறிப்பிடுவதால், மெய்ப்பொருள் நெறியில் தத்துவ விசாரணையை மேற்கொள்பவர்கள் பிறப்பற்ற நிலையை அடைந்து என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தெய்வீக நெறியை அடைவார்கள் என்பதும், அத்தகைய தெய்வீக நெறியை அடைந்தவர்களை இற்றைய உலகில் தெய்வத்திற்குரிய மறு உருவமாக, ஞானாசிரியராக உளத்தில் கொண்டு தெய்வமாகப் போற்றி வருகிறது. இதனையே ஆன்மீக உலகம் என்று பிரித்துக் காட்டுவது உண்டு. எனவே திருவள்ளுவர்,  வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற மெய்ப் பொருள் துறையின் பயனைக் குறிப்பிடுகிறார். 


இதனை மேலும் வலியுறுத்த கீழ்வரும் எதிரமறைப்  பொருளமைந்த குறட்பாவைத் தருகிறார். 

'பொருள்அல்ல பற்றைப் பொருளென்று உணரும்

மருளான்ஆம் மாணாப் பிறப்பு' (351)

தத்துவ விசாரணையால் கிடைக்கப் பெற்ற உண்மைப் பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணர்கின்ற விபரீத உணர்வு இன்பமல்லாத பிறப்பைத் தரும் என்பது இக்குறட்பாவின் பொருளாகும். இதற்கு உரையெழுத வந்த பரிமேலழகர், 

'விபரீத உணர்வாவது மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுள் இல்லை எனவும், மற்றும் இத்தன்மைகளைக் கூறும் மயக்கநூல் வழக்குகளை உண்மையான நூல்கள் எனத் துணிகின்ற மயக்க நிலை உடையவர்கள் , பிறப்பு என்ற துன்பத்தை அனுபவிப்பார்கள்' என்று குறிப்பிடுகின்றார். 


இந்த இரு குறட்பாக்களையும் , அக்குறட்பாக்களுக்குரிய விளக்க உரைகளையும் உள்ளம் கொள்ளும் பொழுது, மனித வாழ்விற்கு அப்பாற்பட்ட ஆன்மீக வாழ்வை அனுபவித்து விசாரணை செய்கின்ற வாழ்வியல் , பிறவித் துன்பத்தை நீக்கும் என்பதை வள்ளுவர் தம் கொள்கையாக, ஆன்மீக உணர்வாக வெளிப்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகும். 

இந்தத் தத்துவ விசாரணையால் உணரப் பெற்ற மெய்ப்பொருள் ,

'யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்' (346)

என்ற குறட்பாவின்படி, ஆன்மீக உணர்வுடையார் குறிப்பிடுகின்ற தற்பவம் என்ற தன்முனைப்பு நிலை அற்று, வானோர் வாழுகின்ற இடத்திற்கு மேலான பிறப்பற்ற நிலையைத் தரும் வீட்டு நிலையை எய்த முடியும் என்பது திருவள்ளுவர் கூறும் பயன் நிலையாகும். 


மெய்யியல் துறையில் உண்மைப் பொருளை அறியப் பிறர்வாய் உபதேசம் கேட்டல் ஒரு நிலை என்பதால், பிறர்வாய்க் கேட்கின்ற நிலைக்கும் திருவள்ளுவர் இரு கோணங்களைப் பதிவு செய்துள்ளார்.


'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு' (423)


'எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு' (355)


என்ற குறட்பாக்கள் திருவள்ளுவர் அமைத்துத் தந்த செம்பொருளை உணர்வதற்குரிய உபதேசப் பொருள் நிலையாகும்.  உண்மைப் பொருளை யார் சொன்னாலும் அதனையும் ஆய்ந்து, அதன் உண்மைப் பொருளை அறிவதுதான் அறிவாகும் என்று அறிவுடைமையில் குறிப்பிடுவார். 


எனவே அறிவுடைமை என்பது இயல்பாகப் பருவத்திற்குப் பருவம் ஆசானைச் சார்ந்து அமைவுறக் கேட்கின்ற உலகியல் அறிவோடு, பரம்பரை பரம்பரையாக ஞானாசிரியர்களைச் சார்ந்து, உபதேச மொழிகளைக் கேட்டு , அந்த உபதேச மொழிகளிலும் உண்மைப் பொருளை அறிவதுதான் அறிவுடைமை என்பதை திருவள்ளுவர் ஏற்கிறார். யார் சொல்லுகிறார் என்பதல்லாமல் எத்தகைய பொருளைக் கூறுகிறார்கள் என்று எண்ணி, அப்பொருளின் உண்மைப் பொருளை அறிவதுதான் அறிவுடைமை என்பது திருவள்ளுவரின் கருத்தாதலின், மெய்ப் பொருள் விசாரணைக்குரிய அறிவுடைமை முதன்மையாகிறது எனக் கொள்ளலாம். 

எடுத்துக் காட்டாகிய இரண்டாவது குறட்பா எத்தகைய பொருளைக் கேட்டாலும், அதாவது எத்தன்மையதாக இருந்தாலும்,கேட்ட பொருளில்  உண்மைத் தன்மையை உணர்வது அறிவாகும் என்று துறவியலில் கூறி, துறவிகள் கூறும் உபதேச வார்த்தை இடம் நோக்காது அறிய வேண்டிய உரையாகும் என்பதைக் குறிப்பிடுகிறது.  எனவே இவ்விரண்டு குறட்பாக்களினாலும் திருவள்ளுவர் மெய்ப்பொருள் இயல் துறையில் ஆன்மீக ஆசிரியரகளாகிய ஞானாசிரியரகளைச் சார்ந்து, அவர்கள் கூறுகின்ற பொருளைக் கேட்டு ஆய்ந்து , அதன் உண்மைப் பொருளை ஆராய்வது மெய்ப்பொருள் இயலின் தன்மையாகும் என்பதை அறியலாம். 


இத்தகைய உபதேச மொழிகளால் பெறுகின்ற பயன் ஆசையை நீக்குவதாகும் என்பது திருவள்ளுவரின் கோட்பாடாகும். மெய்ப்பொருள் இயலின் கருத்து விசாரணை நேரடியாக  பிறவிப் பெருங்கடலை நீந்துவதற்குரிய நிலையைத் தரவில்லை என்றாலும் ஆசையை அறுக்கின்ற நிலையைத் தந்து அந்த மெய்ப்பொருள் விசாரணை பிறவியை நீக்கும் என்பதைக் கீழ்வரும் பாடலால் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். 


'ஆரா இயகை அவாநீப்பின் அந்நிலையே

தேரா இயகை தரும்' (370)


நீங்காத இயல்பினை உடைய ஆசை என்னும் நிலையை நீத்து விடுவோமாகில் அந்நீத்தல் நீக்குகின்றவனுக்கு எக்காலத்தும் நீங்காத இயல்பைத் தரும் என்பது இப்பாடலின் கருத்தாகும்.  தேரா இயற்கை என்பதற்குப் பரிமேலழகர் உரை எழுதும் பொழுது, 'பிறப்பு, பிணி, மூப்பு, இறப்புக்களும் இன்றி உயிரானது ஒருதலைப்பட்ட இன்பத்திலிருக்கும் வீட்டுப்பேறு' என்று எழுதுவார். எனவே மெய்ப்பொருள் இயல் விசாரணையின் மூலம் செம்பொருளை உணர்கின்ற பொழுது, இயல்பான பிறப்பு, இறப்பெல்லாம் நீங்கி வீடாகிய பிறப்பற்ற தன்மையை ஒரு ஆன்மா அடையும் என்பது இக்குறட்பாவின் கருத்தாகும். 


இவ்வாறு வாழ்வியல் புலவராம் திருவள்ளுவர் பண்டைக் காலத்திலேயே மெய்ப்பொருள் இயல் துறை சிந்தனையாளராகத் தோன்றி மெய்ப்பொருள் துறையில் ஆய்வு நிகழ்த்துவது இன்றியமையாதது என்பதையும், மெய்ப்பொருள் துறை பரம்பரையாக ஞானாசிரியரைச் சேர்ந்து  உபதேச நூல்களைக் கேட்டு அதனையும் ஆய்ந்து செம்பொருளைக் காண்பதும், காண்பதன் அடிப்படையில் அவாவை அறுத்து வீடுபேறாகிய முத்தி என்ற முழுநிலையை அடைவதே மனித வாழ்க்கையின் வாழ்க்கைத் தத்துவமாகும் என்பதை எடுத்துக்காட்டிய குறள்கள் மூலம் பதிவு செய்துள்ளார். 


-----------------------------------------


 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக