புதன், 26 ஜனவரி, 2022

பரமஹம்ஸ தாசரின் பக்தி உணர்வு


முனைவர். பழ. முத்தப்பன்,

முன்னாள் முதல்வர்

கணேசர் செந்தமிழ்க் கல்லூரி,

மேலைச்சிவபுரி. 

பதினெட்டு அல்லது பத்தொன்பதாம்  நூற்றாண்டில் வாழ்ந்த இலங்கை வாழ் கவிஞர் பெருமக்களில் குறிப்பிடத் தக்கவர் பரமஹம்சதாஸர் ஆவார். பாரத நாட்டில் தமிழகத்தில்  பிறந்தவர் ஆயினும்  பொருளாதார அடிப்படையில் இலங்கையில் வாழ்ந்த கவிஞர் இவர். இளமையிலேயே கவி பாடும் வல்லமை பெற்றிருந்திருக்கிறார். அவரின் கவிதை; தொகுப்புகளில் பக்திக் கவிதைகள் என்ற பொருளில் தனியொரு தொகுப்பு அமைகின்ற வண்ணம் அவரின் கவிதைகள் கிடைத்திருக்கின்றன. கவிதைகளைத் தொகுத்த அவர்தம் உறவினர் குன்றக்குடிக் கவிஞர் பரமகுரு அவர்கள் பக்திக் கவிஞர் பரமஹம்சதாஸர் பக்திக் கவிதைகள் என்ற ஒரு தனித் தொகுப்பாகத் தொகுத்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். 


பக்திக் கவிதைத் தொகுப்பில் 1. தெய்வப் பாடல்கள். 2. ஸ்ரீராமகிருஷ்ணா அஞ்சலி, 3. பரமஹம்ஸ அருளமுதம், 4. அன்னை சாரதா தேவி, 5. ஸ்ரீ விவேகானந்தர், 6. சமயாசாரியர்கள் அருள்மணிகள் என்ற தலைப்புகளில் பாடல்களின் தொகுப்பு அமைந்துள்ளது. பரமஹம்சதாஸர் என்ற புனைப் பெயருக்கு ஏற்ப, சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றி 54 தலைப்புகளில் பாடல்கள் அமைந்துள்ளன. அப்பாடல்களில் சுவாமி இராமகிருஷ்ணரைப் பற்றிய வாழ்வியல் வரலாறும், அவரின் துறவற இயல்பும், அவரின் அருட் குணங்களும் கவிஞரால் போற்றப் பெற்று , தன்னை அவரின் தாசனாகப் படைத்துக் கொண்டமை நன்கு புலனாகின்றது. 


பக்திப் பாடல்களில் முதல் பகுதி கவிஞரின் சமயப் பொதுமையை அழகுற எடுத்துக் காட்டுகிறது. விநாயகர், முருகன், நடராசர், சத்தி, கலைமகள், ஐயப்பர் ஆகிய சைவக் கடவுளர்களையும், திருமால், இயேசு பெருமான், நபிகள் நாயகம் ஆகிய பிற சமயத் தெய்வங்களைப் பற்றியும் கவிஞர் போற்றிப் புகழ்ந்து பாடல்களைத் தந்துள்ளார். குறிப்பிட்ட சமய வாதியாக மட்டும் அமையாது, அனைத்துத் தெய்வங்களைப் பற்றியும் கவிஞர் போற்றிப் பாடல்களைத் தந்திருப்பதால், கவிஞரின் சமயப் பொதுமை வெளிப்படுகிறது. 


கவிஞர் மரபுக் கவிதைகளின் வழி விருத்தப் பாக்கள், வெண்பாக்கள், கட்டளைத் கலித்துறைப் பாவினம் ஆகிய பாடல் வகைகளைத் தன் கவி அனுபவத்தில் கையாண்டிருப்பதால் , கவிஞரின் கவியுணர்வு வெளிப்படுகிறது. கவிஞர் பெருமான் பக்திக் கவிதைகளைப் பல்வகை நோக்கில் பாடியிருக்கின்ற கவிதைகளின் தொகுப்பை நோக்கும் பொழுது, கவிஞர் பக்தி நெறியில் மேன்மையுற விளங்கியிருப்பமையும் தெரிய வருகிறது.

2

தலப்பெருமை சுட்டல்

கவிஞர் இலங்கை நாட்டுத் தெய்வங்களைப் பாடுகின்ற பொழுது, அத்திருத் தலங்களின் வரலாறுகளையும் பதிவு செய்து பாடுகின்ற மரபினைக் கொண்டிருக்கின்றார். காரைத் தீவு , பாலையடி, விக்னேசுவரரைப் போற்றுகின்ற பகுதியில், அத்தலத்தின் இயற்கை வருணனைநலம் இடம் பெற்றுள்ளது. 


தெங்குடன் கமுகு போட்டி 

செய்து, கார்தழுவ ஓங்கும்

மங்கலத் தமிழின் பத்தேன்

மல்குகா ரேறு தீவில்

ஐங்கரத் தொடுமெய் யன்பர்க்

கருள்தர விரைந்து நோக்கும்

துங்கவெண் கொம்பன் இன்பச்

சுடரடி சிரத்திற் கொள்வாம். ( பா.2)

இப்பகுதியில் காரைத் தீவின் இயற்கை வருணனையைக் கவிஞர் வெளிப்படுத்தியுள்ளார்.   

அதுபோல மாவைக் கந்தன் பாடலில் அத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகன் வடிவம் கடலலைகளால் கரைசேர்ந்த வடிவம் என்பதைக் கீழ்வரும் பகுதியில் கவிஞர் குறிப்பிடுகிறார். 


ஓங்கும் எழிலார் காங்கேய

உனது கருணைச் சிலைவடிவைத்

தாங்கிக் கரைசேர்த் தெடுத்தணைத்துத்

தமதாய்க் கொண்ட தலமான

காங்கே யன்மா துறையதனைக்

கணித்தே இடபால் கொண்டவர்

(பா. 4)

என்ற பகுதியில் குறிப்பிடுவதோ:டு காங்கேயன் துறைக்குப் பக்கத்தில் மாவைக் கந்தன் திருத்தலம் அமைந்துள்ளது என்பதையும் கவிஞர் குறிப்பிட்டுள்ளார். 

அதுபோலத் திரிகோண மலைத் திருத்தலத்தின் சிறப்பைத் திருக் கோணேச திக்விஜயம் என்ற தலைப்பில் கவிஞர் பெருமையாகப் போற்றிப் பாடியுள்ளார். 

பரதகண்ட மெனும்மாலைக் கமைந்த ஈழப்

பதக்கதின் மேற்பதிந்த மதிக்க ஒண்ணாத்

திரிகோண மலையென்னும் சுடர் மணிக்குத் 

தெய்வீக ஒளிதந்த செம்பொற் சோதி

வரராம தேவனெனும் சோழ மன்னன்

வடித்தகலைக் கோயிலிலே வளர்ந்து தூய

3

திருஞான சம்பந்தர் கொடியில் பூத்த

செழுந்தமிழ்த்தே வாரமதைப் புனைந்து நின்றாய். 

(பா. 2)

என்ற பாடலில் திரிகோணமலை பரதமாலையின் நடுவிலே அமைந்த பதக்கம் போல் பெருமை பெற்று விளங்குகிறது என்றும், அங்கு வரராமதேவன் என்னும் சோழமன்னன் கோயில் கட்டினான் என்றும், அத்தலத்தைத் திருஞான சம்பந்தர் போற்றிப் பரவியுள்ளார் என்றும் தலத்தின் பெருமைக்குரிய செய்திகளைக் கவிஞர் இடம்பெற வைத்திருப்பது தல வரலாற்றை அறிந்து கொள்ள உதவி செய்கிறது. இத்தகைய எடுத்துக் காட்டுகள் கவிஞரின் தனித்தன்மையை உணர்த்துகின்றன. 


சத்திதாசர் 

பரமஹம்சரின் தாசராக விளங்கும் கவிஞர் சத்தியைப் பற்றிப் பாடும் பொழுது சத்திதாசனாகவே மாறி விடுகிறார். சைவ சமயக் கோட்பாட்டில் சத்தி என்பது இறைவனின் திருவருளைக் குறிக்கும் வடிவமாகும். இதனைச் சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றான சிவஞான சித்தியார் எனும் சாத்திர நூல் குறிப்பிடும் பொழுது, 

அருளது சத்தி ஆகும் 

அரன்தனக்கு அருளை இன்றித்

தெருள்சிவம் இல்லை அந்தச்

சிவம்இன்றிச் சத்தி இல்லை

(சித். சுப. 240)

இப்பகுதியில் சத்தி இறைவன் அருளைக் குறித்தது என்பது தெளிவாகக் கூறப் பெற்றுள்ளது. இந்தநிலையில் கவிஞர் சத்திக்கனல், அன்னை வேட்கை, சத்தி ஒம் சத்தி, தேவயின் திருநாம அருச்சனை, அன்பு வரம் ஆகிய தலைப்புகளில் சத்தியைப் போற்றிப் புகழுகிறார். 


சத்தியைப் போற்றும் பொழுது, 

அணுவுள் அணுவாய் மகத்துள் மகத்தான

ஆத்ம சத்தி வளர்த்தே 

என்றும், 

எண்ணற்ற கோடியண் டங்களைக் கைப்பந்தாய்

எற்றி விளையாடும் 


என்றும், சத்தியைப் போற்றிச் சத்தியினிடத்தில் :

தளர்வி லாஇளம் கட்டுடல் வேண்டும்

தாக்கும் நோய்த்துயர் போக்கிட வேண்டும்

கலக மற்றுணை உள்ளும் புறத்தும்

கண்டு களித்துன் கழற்கே

4

இலகு கோடிநற் கவிமலர் சூடும்

இனிய வாழ்வருள் சத்திஒம் சத்தி.

என்றும் கவிஞர் வேண்டுவது அவரின் உள்ளகிடக்கையை வெளிப்படு;த்தும் வரிகளாகும். மேலும் அன்புவரம் என்ற தலைப்பில்,

கல்வி வளம் தருவாய்  - நல்ல

  கற்பனை ஊற்று அருள்வாய் - இன்

சொல்லின் அருவி யென - என்னுள்

சொக்கும் கவி பொழிவாய்

என்றும் வேண்டிக் கவிஞர் தம் கவி உள்ளத்தை வெளிப்படுத்துகிறார். இவ்வாறு கவிஞர் சத்தி தாசனாக விளங்கித் தன் கவிப்புலமையை வெளிப் படுத்தியுள்ளார். 


வேண்டுதல் வேண்டாமை

பக்தி வலையில் பட்டவர்கள் அல்லும் பகலும் இறைமையைப் போற்றி வணங்குவதோடு , தங்களுக்கு வேண்டிய வரங்களைக் கூறிப் பெற்றுக் கொள்ளுதல் இயல்பாகும். பக்தர்கள் இறைவனிடத்தில் வேண்டுவதைப் போல, கவிஞர்கள் இறைவனிடத்தில் வேண்டும் பகுதிகள் அமைந்துள்ளன. ஆன்மீகக் கவிஞர்களின் பாடல்களில் இயல்பாக அமைந்திருக்கும். இத்தகைய நிலையைத் தாஸரிடமும் காணமுடிகிறது. வேண்டுகோள் (பா.12) என்ற தலைப்பில் கவிஞர் தன் வேண்டுகோள்களைப் பட்டியலிட்டுக் கேட்கிறார். 

நற்றவம் பொலிய வேண்டும்

நலம்பல மலிய வேண்டும்

குற்றங்கள் நலிய வேண்டும்

குணம்பல குவிய வேண்டும். 

(பா.1)


தன்னலம் ஒழிய வேண்டும்

பொதுநலம் தழைக்க வேண்டும்

இன்னலில் இன்பம் காணும்

இதயம் தந்தருள வேண்டும்

எனக் கவிஞர் வேண்டுவது பொதுநல வேண்டுதல்களாக அமைந்துள்ளன. மேலும் அருள்பாலிப்பாய் என்ற தலைப்பில், 

மண்ணாசை வெறியரக்கர் மாழ வேண்டும்

வையமெலாம் அடிமையின்றி வாழ வேண்டும்

புண்ணான உலகெங்கும் பார தத்தி;ன்

குளிராத்ம சத்திஒளி பொலிய வேண்டும். 

(பா.5)

என்ற பகுதியில் கவிஞரின் வேண்டுதல் சமய வேண்டுதலாக மட்டும் அமையாது,  பிறந்த நாட்டுப் பற்றுடன் கூடிய பொது வேண்டுதல்களாக அமைந்திருப்பது படித்து இன்புறத் தக்கதாகும். 

5

  மரபுக் கவிதை பாடும் கவிஞர் சந்தக் கவிதை பாடுவதிலும் வல்லவர் என்பதை ஐயப்ப பாடல்கள் மூலம் உணரலாம். 

ஹரிகர புத்திரனே     -  ஐயப்பா சரணம்

அமரர் குலக்கொழுந்தே - ஐயப்பா சரணம்

அரியா சனக்குகனே    - ஐயப்பா சரணம்

அற்புத வித்தகனே - ஐயப்பா சரணம்

என்ற பகுதி அவரின் சந்தப் புலமையை நினைவூட்டும். தாயுமானவரின் 

பராபரக்கண்ணி போன்ற ஈரடிப் பாடல்களில் கவிஞர்க்குத் தோய்வுண்டு என்பதை எக்காலம் என்ற தலைப்புக் கவிதைகள் உணர்த்துகின்றன. 


நாசப் பொறமைதனை நைத்துப் பொடிப்படுத்தி

பாசமுடன் அன்பர் பதந்தொடர்வது எக்காலம். 

(கண்ணி - 16)

குரோதம் என்னும் கொடியோன் கொட்டம் அடக்கி முன்வர சாதத்தேன் உண்டு இன்பதாதல் எக்காலம்

(கண்ணி - 17)

என்பன போன்ற வரிகளில் எவையெவை வேண்டாம் என்பதையும் கவிஞர் வெளிப்படுத்தி விடுகிறார். இவ்வாறு தன் கவிதைகளில் தன் இன்ப வேண்டுதல்களையும் , துன்ப வேண்டாமைகளையும் , இறைவன் பால் கூறிக் கவிஞர் தம் உணர்ச்சியை வெளிப்படுத்துவதை உணரலாம். 


அகத்துறைப் பாடல்கள்

சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான ஆன்மாக்கள் தங்களைத் தலைவியாக எண்ணிக் கொண்டு இறைவனைத் தலைவனாக எண்ணிப் பாடுகின்ற முறைமை அகத்துறைப் பாடல்களாகத்; திருமுறைகளில் அமைந்திருப்பதைக் காணலாம். இதனைத் தொல்காப்பியம் ஷஷமானுடப் பெண்டிர் கடவுளை நயந்த பக்கம்' என்று குறிப்பிட்டுத் தொடங்கி வைத்துள்ளது. அதன்படிக் கவிஞரும் அகத்துறைப் பாடல்களைப் பக்திப் பாடல்களாகப் பாடியுள்ளார் இவனோ உன்கணவன் என்ற தலைப்பில் பித்தனான சிவபெருமானைக் காதலித்த பெண்ணிற்கு அன்னை கூறுவதாக அமைந்துள்ள பாடல்கள் இடம்பெற்றுள்ளன. செப்பிட மாட்டாயோ என்ற தலைப்பில் ஒரு தலைவியின் ஏக்க உணர்வுகள் வெளிப்படு;த்தப் பெற்றுள்ளன. 

செங்கனி வாய்இதழால்  - அவன் இந்த

ஜீவக்குழல் இசைக்கும்  - சுப

மங்கலம் கிட்டிவிட்டால்  - வேறினி

வாழ்வின்பம் வேண்டுமோடி. 

(பா.5)

இப்பகுதி பூங்கழற் கண்ணனை நினைந்து ஏங்கும் தலைவி ஒருத்தியின் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது. 

6

மேலும், சத்திய வேட்கை யி;ல்லை

சத்சங்க நாட்ட மில்லை

பித்துறும் ஆர்வ மில்லை

பேரன்பர் பணியு மில்லை

(எப்படி வாய்க்கும். பா.2)

இப்பகுதி ஷஷசலம் பூவொடு தூபம் மறந்தறியேன் - தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்' என்ற திருநாவுக்கரசரின் வரிகளின் தாக்கமாக அமைந்துள்ளமையை உணரலாம்.


சத்சங்க வாழ்த்து

கவிஞர் பெருமானின் பக்திப் பாடல்கள் தொகுப்பில் ஆன்மீகச் சங்கங்களையும், ஆன்மீகப் புலவர்களையும் போற்றிப் பாடுகின்ற பாடல்களும் அமைந்தள்ளமை நினைவு கூறத் தக்கனவாகும். திரகோணமலை அருள்நெறி மன்றம், இராமச்சந்திரா மணிவிழா வாழ்த்து, சுத்தானந்தர் மணிவிழாப் பிரார்த்தனை, ஈழத்தவமணி முத்தமிழ் யோகி அவிநாசிச் செட்டியார் வரவேற்பு பா, சித்திர முத்த அடிகள் போற்றி ஆகிய தலைப்புகள் கொண்ட பாடல்கள் ஆன்மீக இயக்கங்களையும் , ஆன்மீகப் பெரியோர்களையும் போற்றுகின்ற பகுதிகளாக அமைந்துள்ளன. திருமூலர் பாடியது போல ஷஷநடமாடும் நம்பர்க்கு ஒன்று ஈதல் படமாடக் கோயில் பரமர்க்கு ஆகுமே' என்ற தத்துவத்திற்கு இணையாக , இறைவனைப் பாடுகின்ற கவிஞர் இறையருளாளர்களைப் பாடுவது ஏற்புடையதாக அமைகின்றது. மணிவாசகர் துதி என்ற பகுதியில் ,

புல்லாகி பூடாய்ப் புழுவாய்

மரமாகிப் போந்து லகில்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத் 

திட்ட இழி  மனிதன் 

வல்லான் பதத்தை வழிகண்டு

போற்றிநல் வாழ்வுறத் தேன்

சொல்லால் உணர்த்திய செந்தமிழ்

ஞானச் சுடர் கொழுந்தே. 

(பா 2)

என்ற பாடல் அமைந்துள்ளது.  இதில் மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்துள்ள சிவபுராணத் தொடரைக் கையாளுவதோடு, மணிவாசகரைப் பெருமையாக, மனித வாழ்க்கை மேம்படத் தேன் போன்ற வாசகத்தைத் தந்தார் என்று கவிஞர் குறிப்பிட்டிருப்பது அவரின் சமய உணர்வை வெளிப்படுத்துவதாகும். அதுபோல வள்ளலாரைப் போற்றிப் பாடுகின்ற சோதி இராமலிங்கர் என்ற தலைப்பில் உள்ள ,

தண்ணீர் சொரிந்து விளக் கெரித்த

சக்திக் கனலே நெஞ்சுருகிக்

7

கண்ணீர் சொரிந்து பேரின்பக்

காடு வளர்த்த கற்பகமே 

(பா.3)

என்றும், அரவிந்தர் துதி என்ற தலைப்பில் ,

வைய கமெல்லாம் - இன்ப

வாழ்க்கை பெற்றிடவே

தெய்வ ஜீவனம் - தந்த 

திவ்ய யோகியாம்

(பா.3)

என்றும், ரமணாஞ்சலி என்ற தலைப்பில்,

இருள்நாச முறவாட்டம் கருணையரு

ணாசலனை எண்ணி எண்ணிக்

குருநோக்கும் வேறின்றிக் குறித்தபரஞ்

சோதியருள் குன்றாய் நின்ற

பெருரமணக் கற்பகமே.

(பா.3)

என்றும், இலங்கை பூபதிதாசரைப் போற்றும் பகுதியில்,

அன்பகம் மலர்த்தி கல்வி

அறிவொளி துலக்கி மக்கள்

துன்பநோய் துடைத்து ஆன்மத்

தொண்டுக்கே வாழ்வை நல்கி

இன்புறும் பித்தன். 

(பா.2)

என்றும், புத்தரைப் பற்றிப் பாடும்பொழுது,

வையத் துயர்க்கு வருந்தி - இளம்

மனைவி குழந்தை அனைத்தும் துறந்த

துய்ய கருணைக் கொழுந்து


என்றும், இயேசு பெருமானைப் பாடும் பொழுது, 

அன்புவழிச் செல்லுங்கள் 

அகந்தையைக் கொல்லுங்கள்

அனைத்துயிர்க்கும் உயிரான

ஆன்மஒளி கண்டு

இன்புறுங்கள் என்று எங்கும்

என்புருகக் கூவி

இன்னுயிர்க்கே வாழ்வனைத்தும்

ஈந்த பெருமான்


என்றும், நபிகள் நாயகத்தைப் பாடும் பொழுது,

பொன்பிறை அன்ன வளர்ந்தனர் ஒட்டகம்

போற்ற மேய்த்திடு நாள் 

8

மிகப் பண்புறு இயற்கை நல்தாயிடம் கல்வி

படியாமலே படித்தார்.


என்றும், அல்லாவைப் போற்றும் பொழுது, 

ஐம்பிழையைத் தவிர்த்து

ஐம்புலனை அடக்கி

ஐந்துமுறை தினமும்


என்று பாகுபாடின்றி அனைத்து ஆன்மீகப் பெரியார்களைப் போற்றி வணங்கியிருக்கும் கவிஞரின் உள்ளம் போற்றத் தக்கதாகும். 


மேலும் அன்னை சாரதா அம்மையாரைக் கவிஞர் பல பாடல்களில் போற்றியிருக்கும் பாங்கு நம் கண்முன் சாரதாதேவியாரைக் கொண்டு வந்து நிறுத்துகிறது எனலாம். ஞானத்தாய் என்றும், சுத்தஞான வீறு என்றும், அன்னை என்றும், சாரதாமணி என்றும் தலைப்புகளிட்டுப் பாமலர்;களால் அவரைப் போற்றியுள்ளார். சாரதாதேவியாரின் வரலாற்றைச் சரிதைத் தியானம் என்ற தலைப்பில் எளிய முறையில் படித்தவுடன் உணரும் பாங்கில் கவிஞர் தந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். 

கங்கை வளந்திகழ் வங்கமிசைக்

கவினுறு ஜெயராம் பாடியதில்

துங்க இராமச் சந்திரனார்

தூய சியாம சுந்தரியாம்

உத்தம தம்பதி புத்திரியாய்

உதி;த்து வளர்ந்த பொற்சித்திரமே.

(பா.2)


என்று சாராதா அம்மையாரின் பிறப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.  இவ்வாறு கவிஞர் ஆன்மீகத்தை வளர்த்த கூட்டத்தினரையும், ஆன்றோர்களையும் போற்றி வணங்கித் தன்னை ஆன்மீக அடியவராகப் புலப்படுத்தியுள்ளார். 

கருத்துவளம் மிக்க கவினுறு வரிகள்

கவிஞரின் பாடல்களைப் பயின்றோர்க்கு அழுத்தமாகப் பதியும் சில வரிகள் அவர் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒருசில இங்கு நினைவு கொள்வது சாலப் பொருத்தமாகும். 

நம்பிக்கை யற்றபெரும் பக்திவேடம்

நாத்திகத்தி னும்கொடிதாம். 

(அருள்நெறி விளக்கம் , பா.4)

என்றும், கடவுளின் கற்சிலை வடிவத்தின் உட்பொருளை விளக்கும் விக்கிரகம் தந்த விளக்கம் என்ற தலைப்பில்,

ஒருமனிதன் படம் அவனே யலவென்றாலும்

உளத்தில் அவன் நினைப்பினையே உணர்த்தும் அன்றோ

(பா.5)

9

என்றும், மனிதன் என்ற தலைப்பில் ,

கிடைத்தற் கரிய மனுப்பிறவி

கிடைத்தும் இதிலே இறைவனடி

அடையும் முயற்சி இல்லெனில்

அவலப் பிறவியாம்.

(பா.2)

என்றும், அதே பகுதியில் உள்ள ,

ஒன்றைச் சார்ந்த பூஜ்ய மெலாம்

உயர்ந்த மதிப்பைப் பெறும் இறையாம்

ஒன்றைச் சார்ந்து நினைந்து செய்யும்

ஒவ்வோர் செயலும் உயர்ந்து ஓங்கும். 

(பா.15)

என்றும், அதே பகுதியில் உள்ள, 

காந்தம் இரும்புக் குள தொடர்பே

கடவுளோடு மனிதனுக் காம்.

(பா. 17) 

என்றும், மயக்கும் மாயை என்ற தலைப்பில் உள்ள, 

யாவையும் யான்தியாகம் செய்திட்ட பின்பும்

இறைவனைக் காண்கிலன் என்கின்றாய்

மேவியதோர் குடத்தெண்ணைத் தீர்ந்த பின்பும்

ஒட்டிநிற்கும் மேலும் கீழும்

போவதில்லை எண்ணை மணம் 

(பா. 61)

என்றும் அமைந்துள்ள வரிகள் படித்தவுடனே படிப்போர் மனதில் கல்லில் எழுத்துப்போல் பதிந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. 

இத்தகைய இலங்கைப் பக்திக் கவிஞர் பரமஹம்சதாஸரின் பக்திக் கவிதைத் தொகுப்பில் செய்திகள் அமைந்து இக்காலத் தலைமுறைகளுக்குக் கவிதை நெறியை வழிகாட்டுவதாகவும், ஆன்மீகச் சிந்தனையாளர்களுக்கு அரிய கருத்துப் பெட்டகமாகவும் , இசை வல்லுநர்ககு எளிய பதங்களைக் கொண்டதாகவும் பாடல்கள் அமைந்து, படிப்போர் உள்ளத்தைத் தன்வயப் படுத்துகின்றன. கவிஞர்  நிறைவில், 

நாடு முழுதும் மங்கள மருள்

ஞான சபைகள் மங்களம்

அறநெறிகளும் மங்களம் - புவி

யறிஞர் கடமை மங்களம் 

என்று நிறைவு படுத்துவது போல நாமும் நிறைவு கொள்வோமாக. 


திருச்சிற்றம்பலம். 

---------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக