புதன், 26 ஜனவரி, 2022

வீரசைவ நோக்கில் நால்வர் நான்மணிமாலை


சித்தாந்த செம்மணி. முனைவர்.பழ.முத்தப்பன்,

மேனாள் முதல்வர்,

கணேசர் செந்தமிழ்க் கல்லூரி,மேலைச்சிவபுரி.


மயிலம் திருமடத்தின் ஆதீனப் புலவராகத் திகழ்ந்த நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள் படைத்தருளிய நால்வர் நான்மணிமாலை நூலுக்கு அறிஞர்கள் பலர் உரையெழுதி வெளியிட்டுள்ளனர்.  இருப்பினும் நம் வழிபாட்டிற்கும் போற்றுதற்கும் உரிய மயிலம் திருமடத்தின் இருபதாம் பட்டத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் குருமகாசந்நிதானம் அவர்களின் திருவருள் ஆணைக்கிணங்க நால்வர் நான்மணிமாலைப் பாடல்களுக்கு மறுவாசிப்பின் மூலம் வீரசைவ நோக்கில் கருத்துரை காணும் அமைப்பில் இக்கட்டுரை வெளியாகிறது.  கிருத்திகை தோறும் மயிலம் திருமடத்தில் நடைபெறும் பாலசித்தரும் வீரசைவமும் என்ற பொதுத் தலைப்பில் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய கருத்தரங்குச் சொற்பொழிவின் எழுத்து வடிவம் இக்கட்டுரையாகும். 


முன் இதழ்களில் காப்புச் செய்யுள் உள்பட முப்பத்து எட்டாவது பாடல்வரை வீரசைவ நோக்கில் பொருள் காணப்பெற்றது. 


பாடல் - 39

பெருமிழலைக் குறும்பர்எனும் பரம யோகி

பெரிதுஉவந்துஉன் திருவடித் தாமரையைப் போற்றி

விரைமலர்தூய் வந்தனை செய்கின்றான் என்றால்   

விளங்கிழையார் இருவருரொடும் முயங்கலாமோ

உரைமதிநின் தனைவெறுப்பது என்கொல் நின்னை

உடையனுக்கு அடுத்தசெயல் உனக்கும் ஆயின்

சுரர்முனிவர் பரவல்உறும் பெருஞ்சீர்த் தொண்டத்

தொகை செய்தோய் அறம்முதல்நால் வகைசெய்தோயே


இப்பாடல் சுந்தரமூர்த்தி மீது பாடப்பெற்ற விருத்தப்பா ஆகும்; 


 முன்னை உரையாசிரியரின் உரை: (திரு.வை. இரத்தினசபாபதியின் உரை)

 

தேவர்களும் முனிவர்களும் சிரமேற் கொண்டு வணங்குவதற்கு ஒத்த பெருஞ் சிறப்பினை உடைய திருத்தொண்டத் தொகை எனும் நூலைச் செய்தவரே, அறம் பொருள் இன்பம் , வீடு , என்ற நான்கினையும் , தேவாரங்களினால் எடுத்துக் காட்டியும், மக்கள் அனைவரும் உணருமாறு வாழ்ந்து காட்டியும், வகைப்படுத்திய பெரு வீரரே, பெருமிழலை என்னும் ஊரி;ல் இருக்கும் குறும்பர் எனப் பெயர் பெறும் பரமயோகியானவர் மிகவும் மகிழ்ந்து, தமக்கு வாழ்வளிக்கும் புகலிடமாக மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபாடு செய்கின்றார் என்று சான்றோர் சொல்லக் கேட்டும், விளங்கும் அணி அணிந்த இரு தேவியரோடும் கலந்து, அணைந்து வாழ்வது தகுதியுடையதாமோ. உம்மை உடையவனாகிய சிவனுக்குப் பொருந்திய செயல் உமக்கும் பொருந்துமானால் உம்மை வெறுப்பதில் பயன் என்? தெளியச் சொல்லுவாயாக. 


பாடற் பொருள் நயவுரை:

இப்பாடலில் இரண்டு கோணங்களில் பொருள்கள் அமைந்துள்ளன. ஒன்று – சுந்தரமூர்த்தியின் பெருமையைச் சொல்லுகின்ற பகுதி. இரண்டாவது – அறிவியல் உலகில் சுந்தரமூர்த்தி வரலாற்றில் எழுப்பப் படுகின்ற கேள்வி. அதற்குரிய சமாதானம் என்பவை ஆகும். முதல் பகுதியில் சுந்தர மூர்த்தியின் பெருமைகள் கூறப்படுகின்றன. அதில் முதல் பெருமை அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான பெருமிழலைக் குறும்பர் மற்ற எத் தெய்வங்களையும் வணங்காது, சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடிகளையே தமக்கு அடைக்கலமாகக் கொண்டு , அவருடைய திருவடிகளைப் போற்றி, மூன்று காலங்களையும் உணருகின்ற சித்தி கைவரப்பெற்ற தன்மை. இரண்டாவது – உலகத்தார் போற்றும் திருத்தொண்டத்தொகை என்ற அடியவர் வரலாற்றைத் தந்த பெருமை. மூன்றாவது அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகைப் பொருளைத் தாம் இறைவன் மீது பாடிய தேவாரப் பாக்களால் விளக்கியமை என்ற மூன்று சிறப்புக்கள் அமைந்துள்ளன. 


சிவப்பிரகாசர் நால்வர் நான்மணி மாலையைப் பாட நினைத்த பொழுது அமைத்துக் கொண்ட உட்பொருள் நால்வரைப் போற்றுவதாகும். அந்த அடிப்படையில் மூன்று பெருமைகளும் சுந்தரரின் பெருமைகளைப் பற்றிக் கூறுவதாகும். அடுத்து நால்வரின் வரலாற்றில் உலகத்தார் மனதில் எழுந்த சந்தேகங்களை அவ்வவர் பாடல்களில் எழுப்பி, அதற்கு ஒரு அமைதியையும் சுட்டிக் காட்டுவது அவரின் அடிப்படை எண்ணம் என்பதையும் இப்பாடல் தருகிறது, அதாவது சுந்தரரின் வரலாற்றில் சிவனடியாராக விளங்கும் பெருமான், சங்கிலி, பரவை என்ற இரு பெண்களை மனைவியாகக் கொண்டு வாழ்ந்தமை இறை நெறிக்குப் பொருந்துமோ என்ற வினாவும், அதற்கு அமைதியாக அவர் போற்றும் சிவபெருமானுக்கு உமையும், கங்கையும் இரண்டு பெண்கள் அமைந்திருப்பது போல, இவரும் தனக்கு இரு பெண்களை அமைத்துக் கொண்டார் .  எனவே அதனைக் குறை கூற முடியாது என்று கூறுகின்ற சமாதானம் ஆகும். 


இப்பாடலின் அடிப்படைக் கருத்து – தெய்வ நெறியில் வாழுகின்றவர்கள் இல்லற நெறியில் வாழ்ந்து கொண்டு, சிற்றின்பத்தை இறையருளால் அனுபவித்துக் கொண்டு வாழ்வது எத்தகைய ஒழுக்கக் கேடும் அல்ல என்பதை வலியுறுத்துவதாகும். இந்த இல்லற நெறியைச் சாத்திரங்களும், பிற சங்க இலக்கியங்களும், பிற தமிழ் இலக்கியங்களும் , சிவனடியார்களின் வரலாறுகளும் எடுத்து இயம்புகின்றன. சிவஞான சித்தியார் என்ற சாத்திர நூல், உலகில் உள்ள உயிர்கள் ஆண், பெண் வடிவம் கொண்டு இணைந்து வாழ்வது, சிவபெருமான் சத்தியோடு வாழ்வதினால் ஏற்பட்ட பேரின்ப நிலையாகும் என்பதைக் கீ;ழ்வரும் பாடலால் தெளிவாக விளக்குகிறது. 

 

 'சத்தியும் சிவமும் ஆய தன்மைஇவ்; உலகம் எல்லாம்

  ஒத்துஒவ்வா ஆணும் பெண்ணும் ஆக உணர்குண குணியும் ஆகி

  வைத்தனன், அவளால் வந்த ஆக்கம், இவ் வாழ்க்கை எல்லாம்

  இத்தையும் அறியார், பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார். 

(சிவஞான சித்தியார், சுபக்கம்,பா.89)


இப்பாடலின் கருத்துச் சுருக்கம் - இறைவன், தான் ,சத்தி. சிவம் என இரு தன்மையாய் இருப்பதால் அன்றோ, உலகம் முழுவதும் ஆண், பெண் என்ற இரு வடிவங்களை இறைவன் விளங்க வைத்தான். சிவமும் சத்தியும் ஒன்ற  லிங்க வடிவம் அவ் இருவகையால் இருப்பதற்குக் காட்சி அளவைச் சான்றாகும் என்பதாம். எனவே உலக ஆண், பெண் வாழ்க்கை இறைவனால் படைக்கப்பட்ட வாழ்க்கையாகும். அதனால் எந்த உயிரும் ஆண், பெண்ணாச் சேர்ந்து வாழ்வது இறைவன் கட்டளையாகும். இதனையே திருக்குறள் வலியுறுத்தும் பொழுது, 

'அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றின்

போஒய்ப் பெறுவது எவன்'   (திருக்குறள் - 46)


குறள் தரும் குறிப்புப் பொருள்:

நல்வழியில் இல்வாழ்க்கை நடத்தினால் , அத்தகைய வாழ்வில் உள்ளவன், பிற நெறியில் சென்று அடைகின்ற பயன் யாது? ஒன்றும் இல்லை என்பதாகும். எனவே இல்லறத்தில் வாழ்வதே பயனுடையதாகும். துறவறம் போன்ற பிறதுறையில் வாழ்வது மானிட வாழ்வில் பயனற்றதாகும் எனக் குறிக்கப் பெறுகிறது. எனவே சாத்திரங்களும் இலக்கியங்களும் மானிட வாழ்க்கை ஆண், பெண் உறவில்தான் பெருமை பெறுகிறது என்று வலியுறுத்துகின்றன. எனவே சுந்தரர் முன்பிறப்பு வினையால் இப்பிறப்பில் இரண்டு பெண்களோடு வாழ்வது பொருத்தமுடையதே என்பது பெறப்படுகிறது. 


சிவப்பிரகாசர் இதற்கு மேலும் ஒரு அமைதியைப் பாடலில் குறித்துள்ளார். அதாவது ஒரு மனைவியோடு வாழாது இரு மனைவியரோடு வாழ்வதும் தவறல்ல.  ஏனென்றால் இறைவனே உமையவள், கங்கை என்ற இரண்டு பெண்களோடு உறவுடையவர் என்பதால் இறைவருக்கு அடுத்த செயல் அடியவருக்கும் ஆயிற்று என்று அமைதி தருகிறார். இறைவன் வாழ்ந்து காட்டியபடி சுந்தரரும் வாழ்ந்ததால் அவ்வொழுக்கத்தை வெறுக்கக் கூடாது என்கிறார். 




வீரசைவ நோக்கில் பாடற்பொருள்:

வீரசைவத்தின் சமய மரபு மனிதப் பிறப்புத் தோன்றியவுடன், உலக இன்பங்களை வெறுத்து, துறவு வாழ்க்கைக்;குச் செல்வது அல்ல, அங்கத்தில் லிங்கத்தை ஏற்று, இல்லறத்தில் வாழ்ந்து பின் அதில் வெறுப்பு அடைந்து இறைவனையே பற்றுக் கோடாக வாழ்வதுதான் வீரசைவ மரபாகும். இந்த மரபு இன்றுவரை வீரசைவ தனமுனிவர்களாலும் கையாளப் பெற்று வருகிறது. பிரபுலிங்கலீலை இலக்கியத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்து பெருமை பெற்ற அறிஞர்கள் தம் வாழ்க்கை இடம் பெற்றுள்ளதையும், அந்நூலில் இடம் பெற்றுள்ள கீழ்வரும் பாடலும் வலியுறுத்துவதை உணரலாம். 


'மானிடப் பிறவி அரிது அதில் அரசர் மக்களாகுதல் அரிது அதனில்

ஊனுறுப்பு அமைதல்அரிது அதில்அரிதால் உணர்வொடு போகங்கள் நுகர்தல்

ஆறெனப் பெரியர் கூறலால் '   (பாடல் - 298)


பாடலில் பொருத்தமான உறுப்புக்கள் அமைந்து, போகங்களைத் துய்த்தல் அரிதிலும் அரிது என்று கூறப் பெற்றிருப்பதால், உறுப்புக்களால் பெறுகின்ற இல்லற இன்பத்தை வீரசைவ மரபு முழுமையாக ஏற்றுக் கொள்ளுகிறது என்பதால் இப்பாடல் வீரசைவ நோக்கில் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது. 


அருஞ்சொற் பொருள்:

பரமயோகி – சிவனையே நினைக்கின்ற அன்பர், விரை – மணம், விளங்கிழையார் - அணிகலன்கள் அணிந்த பெண்கள், இருவர் - பரவை, சங்கிலி, உரை - கூறுவாயாக. உடையவன் - சிவபெருமான், சுரர் - தேவர், அறம் முதல் நால்வகை – அறம்,பொருள், இன்பம், வீடு. 


பாடல் 40:

செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி

பாதம் போற்றும் வாதவூர் அன்பர்

பா எனப் படுவது உன்பாட்டுப்

பூ எனப்படுவது பொறிவாழ் பூவே .


இப்பாடல் மாணிக்கவாசகரைப் போற்றிய அகவற்பா ஆகும். 


முன்னை உரையாசிரியர் உரை:

சிவந்த நீண்ட சடையினை உடையவரும், தெய்வங்களுக்கு எல்லாம் தத்தம் முடிகளில் இரத்தினமாக வைத்துக் கொண்டாடும் தலைமைத் தன்மை உடையவருமாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கித் துதிக்கும் அன்பர் , திருவாதவூரில் திருஅவதாரம் செய்த அன்பர், மலர் என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுவது திருமகள் வாழ்கின்ற தாமரை மலர்தான். அவ்வாறே பாட்டு என்று சிறப்பித்துச் சொல்லப் பெறும் பெருமை வாய்ந்தது உம்முடைய பாட்டே ஆகும். 


பாடற்பொருள் நயவுரை:

மாணிக்கவாசகர் இறைவனையே எப்பொழுதும் நினைந்து வாழ்பவர் என்பதை இப்பாடல் குறிப்பிடுவதோடு, அவருடைய பாடல்தான் தெய்வப் பாடல்களில் எல்லாம் சிறந்தது என்ற செய்யைத் தருகிறது. மாணிக்கவாசகரின் பாடல் சிறந்தது என்பதை விளக்க வந்த சிவப்பிரகாசர், வயிணவக் கடவுளான இலக்குமியை உவமையாகப் பதிவு செய்திருப்பது நினைவு கூறத் தக்கதாகும். தமிழ் வழிபாட்டு முறையில் பண்டு தொட்டு இன்றுவரை சைவமும் வைணவமும் பாகுபாடு இன்றிக் கலந்திருக்கும் வழிபாடே ஆகும். சிவவழிபாட்டில் திருமாலும் அவருடைய சத்தியான இலக்குமியும் இடம்பெற வேண்டிய முறைமையில் இடம்பெற்று வருவது அறியத் தக்கதாகும்.  எனவே சமயக் கடவுளர் வேறுபாடு அற்ற ஒரு வழிபாட்டைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்,  சிவப்பிரகாசர் இலக்குமியை அதாவது அருள்சத்தியை மாணிக்கவாசகரின் திருவாசக, திருக்கோவையாருக்கு ஒப்பிட்டுக் காட்டியிருப்பது நினைவு கூறத் தக்கதாகும். 


மாணிக்கவாசகரைக் குறிப்பிடும் பொழுது, பாதம் போற்றும் வாதவூர் அன்பர் என்று சிவப்பிரகாசர் குறிப்பிடுகின்றார். பாதம் என்பது சிவபெருமானின் திருவடிகளைக் குறிப்பதோடு, சிவபெருமானுடைய அருட்சத்தியைக் குறிப்பதாகும்.  எனவேதான் திருப்பெருந்துறையில் அம்பிகைக்குப் பதிலாக அம்பிகையின் பாதத்தையே உருவத் திருமேனியாக இன்றைக்கும் வழிபடுகின்ற முறைமை காணப்பெறுகிறது. திருப்பெருந் துறையில் அம்மன் திருவுரும் திருவடிகள் அமைப்பிலேதான் அமைக்கப் பெற்றிருக்கிறது. மற்றும் ஒரு சிறப்புண்டு திருப்பெருந்துறைக்கு. மற்ற எல்லாத் திருத்தலங்களிலும் திருத்தேர் விழாவில் , திருத்தேரில் சோமாஸ்கந்த மூர்த்தி எழுந்தருளி அருள்பாலிப்பார். திருப்பெருந்துறையில் மட்டும் திருத்தேரில் மாணிக்கவாசகரின் திருவுரும், அதாவது அடியார் திருவுரும் எழுந்தருளப் பெற்றுத் தேரோட்டம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கதாகும். எனவே சிவப்பிராகசார் மாணிக்கவாசகர் பாடலுக்குச் சிறப்புக் கொடுக்கும் பொருட்டுத் தலைமைப் பண்பையும். தெய்வப் பண்பையும் அளித்திருப்பது பாடலுக்குரிய சிறப்பாகும். 


வீரசைவ நோக்கில் பாடற் பொருள்:

பாடலில் பாதம் என்ற சொல் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். வீரசைவ எண்வகைக் காப்பில் பாதோதகம் என்பது ஏழாவது காப்பு  ஆகும். புது தேவரின் திருவடிகளை திருமஞ்சனம் ஆட்டிய நீரைச் சேகரித்து வைத்து உண்ணும் நீரோடு உண்ணுகின்ற வழக்கம் இன்றியமையாததாகும். இதை ஞான நன்னீர் என்று குறிப்பிடுவார்கள். எனவே பாதம் போற்றும் வாதவூரர் என்பது , திருப்பெருந்துறையில் ஞானாசிரியராக எழுந்துருளி உபதேசம் செய்த ஆத்மநாதரின் ஞான நீரைப் போற்றுகின்ற மாணிக்கவாசகர் என்ற குறிப்பைத் தருவது போல் பாதம் என்ற சொல் அமைந்திருக்கிறது. எனவே வீரசைவ மரபிற்கேற்பத் தத்துவத்தை விளக்கும் பாடலாக இப்பாடலைக் கொள்வதற்கு இடமுள்ளது. 


சொ.பொ.வி:

செய்ய – சிவந்த, பாதம் - திருவடி, பா – பாடல், பூ - மலர், பொறி வாழ் பூவே - இலக்குமி தங்கியுள்ள தாமரை,


             திருச்சிற்றம்பலம். 

---------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக