புதன், 26 ஜனவரி, 2022

கண்டனூர் சிட்டாள் ஆச்சி பள்ளி நினைவுகள்

 முனைவர். பழ.முத்தப்பன்,புதுவயல்,

முன்னாள் மாணவர் மற்றும்

மேனாள் முதல்வர்,க.செ. கல்லூரி, மேலைச்சிவபுரி. 

இன்றைய இலக்கிய மேடைகளிலும், ஆன்மீக மேடைகளிலும் என்னுடைய சிற்றறிவால் புகழ்பெற்று விளங்குகிறேன் என்று சொன்னால் அதற்கு அடிப்படை கண்டனூர் சிட்டாள் ஆச்சி நினைவு உயர்நிலைப் பள்ளிக் கலையரங்க மேடைதான். 1950 –களில் புதுவயல் நகரில் உயர்நிலைப் பள்ளி இல்லாத காரணத்தால், என்னுடைய உயர் கல்வியைப் பெற , பழ மரத்தைத் தேடிச் செல்லும் பறவை போல, கையில் புத்தகப் பையையும், தோத்துச் சட்டியையும் ஏந்திக் கொண்டு, கால் நடையாகக் கண்டனூர் பள்ளியை அடைவேன். இமயத்தின் எல்லை கண்ட எந்தமி;ழ் என்றும் வாழ்க என்று உயர்மொழி பதிக்கப் பெற்ற தலைவாசல் என்னை வரவேற்று ஆட்கொண்டது. அக்காலத்தில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை எனக்குக் கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியத் தெய்வங்கள் மாண்புமிகு நடராஜ ஐயர், அழகர்சாமி ஐயர், வைத்தியநாத ஐயர் ஆகியோர் இன்றும் உயிரில் இறைவன் கலந்திருப்பது போலக் கலந்து நிழலாடிக் கொண்டிருக்கிறார்கள்.  நீண்ட நெடு வடிவினராம் , மூக்குப்பொடி வேந்தர் நடராஜ ஐயர் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற என்னையும் ஒருவனாகத் தேர்ந்தெடுத்துப் பயிற்றுவித்ததை என்னால் மறக்க இயலாது. 


மேல் வகுப்பிற்கு வரும் பொழுது, தமிழ்த் தெய்வமாம் மு. பழனிவேல் என்ற தெய்வத் திருவுருவம் , என் கையைப் பிடித்து அழைத்துத் தமிழ் மொழிக் களஞ்சியத்தை அறிவதற்குக் கூட்டிச் சென்றதையும் என்னால் மறக்க இயலாது.  அக்காலத்தில் தேவகோட்டைக் கல்வி வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையே நம் பள்ளியில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் என்னைப் பங்குபெற வைத்து, தமிழ்த் தெய்வம் பழனிவேல் ஐயா அவர்கள் பேச்சுப் பயிற்சியை அளித்து, இரண்டு ஆண்டுகள் முதல் பரிசைப் பெறவைத்ததால் தான் இன்று ஒரு மேடைப் பேச்சாளனாக விளங்கி வருகிறேன். முதல் ஆண்டில் எனக்குப் பரிசாகக் கிடைத்த திரு.வி.க.வின் வாழ்வு என்ற புத்தகம் என்னுடைய வாழ்வின் வழிகாட்டியாக அமைந்தது என்பதை இந்த நேரத்தில் நினைவு கொள்வதை மன நிறைவாகக் கொள்ளுகிறேன். 


பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்த இராமசாமி ஆசிரியர் அவர்களும், ஓவிய ஆசிரியராக இருந்த ஆதிமூலம் அவர்களும், பள்ளியின் ஆண்டுவிழாக்கள் தோறும் நடைபெறும் நாடகக் கலை நிகழ்ச்சியில் என்னைப் பங்குபெற வைத்து, நடிப்புப் பயிற்சியைத் தந்தமை என் வாழ்வில் மறக்க இயலா நிகழ்வாகும்.  பதினொன்றாம் வகுப்பு பயிலும் பொழுது, திருமணம் என்ற நாடகம் பள்ளிக் கலையரங்கில் அரங்கேற்றப் பெற்றது. அதில் நாடகத் தலைமைப் பெண் பாத்திரமாக என்னை நடிக்க வைத்தார்கள். அந்த நிகழ்வை என்னால் என்றைக்கும் மறக்க இயலாது. காரணம்  பெண் வேடத்திற்கு என் தாயாரின் வைரத்தோட்டினை நான் பெற்று வந்து அணிந்து கொண்டு நடித்தேன். தோடு பத்திரமான இருக்க வேண்டுமே என்று என்னுடன் வந்த என் அன்புத் தாய் இலக்குமி ஆச்சி அவர்கள், தோடுகளை என் காதில் அணிவித்தவுடன் புதுவயலில் இருந்து உடன் வந்து நாடகம் முழுவதையும் கண்டு, நாடகத்தின் முடிவில் ஒப்பனை அறைக்கு அவர்களே நேரே வந்து தோடுகளைக் கழற்றிப் பெற்றுக் கொண்டதுடன், எனக்கு வேடம் புனைந்த ஆதிமூலம் ஐயா அவர்களை வணங்கி, என்; பிள்ளையைப் பெண்பிள்ளையாக ஆக்கி விட்டீர்களே என்று பாராட்டி, போற்றிய காட்சி இன்றும் என் அகக் கண்களில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இத்தகைய ஆசிரியத் தெய்வங்களால்தான் என்னுடைய இலக்கிய வாழ்வு மலர்ந்து மணம் வீசுகிறது என்று நினைக்கின்ற பொழுதெல்லாம் , சிட்டாள் ஆச்சி நினைவு உயர்நிலைப் பள்ளியாம் கலைக் கோயிலில் எழுந்தருளிய தெய்வங்களான அவர்களை நன்றியோடு நினைந்து மகிழ்கிறேன். 

கண்டனூரில் இப்பள்ளி தோற்றுவிக்கப்பட வில்லையென்றால் அக்காலத்தில் என்னுடைய கல்வி நிலை என்னாகியிருக்கும் என்று இப்பொழுது நினைக்கும் பொழுது, மனதில் அச்சம் ஏற்பட்டு உடல் நடுங்குகிறது. இத்தகைய கல்விக் கோயிலைத் தன் தாயின் பெயரால் அமைத்து, எம்மைப் போன்ற இளைய தலைமுறைகளைக் கல்வி வல்லுநராக உருவாக்கிய கொடை வள்ளல் அமரர் வீ. தெ. வீரப்பச் செட்டியாராம் திருவுருவை உள்ளத்தால் நினைந்து போற்றுகிறேன்.  பள்ளி விட்டு மாலையில் புதுவயல் நோக்கி நெடுஞ் சாலையில் செல்லும் பொழுது , வீரப்ப வள்ளல் அவர்கள் வீட்டு முகப்புத் திண்ணையில் உள்ள இடது பக்கத் தூணைப் பிடித்துக்; கொண்டு சாய்ந்து நின்று , பள்ளி விட்டு வீடு; செல்லும் பாலகராம் எங்களை அருள் நோக்கோடு பார்த்த பார்வைதான் எங்களுக்குக் கிடைத்த திருஅருட்பார்வையாகும்.  அவ்வள்ளல் பெருமானின் அருட்கண் பார்வை பெற்றதால்தான் தமிழில் முனைவர் பட்டம் வரை என்னால் பெறமுடிந்தது என்பதை உண்மையாக, உணர்ச்சி பொங்கக் கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன். 

நான் பயின்ற காலத்தில் தலைமை ஆசிரியராக இருந்தவர்கள், பாலசுப்பிரமணியம் ஆவார்கள். கண்டிப்பிற்குப் பேர் போனவர்கள். அவர்களின் கண்டிப்பால் தான் எம் போன்ற மாணவர்களின்  வாழ்வில் ஒழுக்கம் என்ற தீபம் இன்றும் அணையாதிருக்கிறது. அதுபோல அலுவலகத்தில் பணியாற்றிய ஐயப்பச் செட்டியார் , அலுவலர் பெருமாள் ஆகியோர் எங்களைப் பெற்ற மக்கள் போலக் கருதி, வளர்த்தமையையும் மறக்க இயலாது. இத்தகைய கலைக்கோயிலின் தெய்வங்களை என் நெஞ்சார நினைந்து, எனக்கு வாழ்வும் உயர்வும் தந்த அவர்களின் திருவடிகளைப் போற்றி, இந்தப் பொன்விழா நாளில் சொல் மலர்களைத் தூவிப் போற்றி மகிழுகின்றேன். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக