புதன், 26 ஜனவரி, 2022

கோவையில் சிபிச்சக்கரவர்த்தி


முனைவர்.பழ.முத்தப்பன்,

மேனாள் முதல்வர்,

கணேசர் செந்தமிழ்க் கல்லூரி.


சங்ககால வள்ளல்களில் ஒருவரான சிபிச்சக்கரவர்த்தியின் வள்ளல் தன்மையைச் சங்க இலக்கியங்கள்; தொட்டு, பிற்காலச் சிற்றிலக்கியங்கள் வரை தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.  அவை பதிவு செய்துள்ள வள்ளல் தன்மையைச் சிவப்பிரகாசர் ஒரு முழுமைப் படுத்தித் திருவெங்கைக் கோவையில் பதிவு செய்ததைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.  


சங்ககால வரலாற்றில் சோழமண்டலத்தில் ஒரு அரண்மனையில் திருவோலக்க மண்டபம். அதில் சோழ பரம்பரையில் சிறந்த மன்னனாக விளங்கிய சோழன் நலங்கிள்ளியின் தம்பியான மாவளத்தான் என்பவனும், புலவர் தாமப்பல் கண்ணனாரும் வட்டாடல் என்று கூறுகின்ற விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த விளையாட்டுக் கருவிகளில் ஒன்று புலவராகிய தாமப்பல்கண்ணனார் அறியாமல் அவர் மடியின்கீழ் மறைந்து விட்டது. அதனால் மன்னன் மாவளத்தான் சினங்கொண்டு புலவரைக் கடிந்து கூறி , மறைந்த அக்கருவியை எடுத்து அவர்மீது எறிந்தான்.  புலவர் பெருமான் உண்மையைக் கூறினாலும் அவன் ஏற்கவில்லை.  அதனால் வருந்திய புலவர் அம்மன்னனை நோக்கி, மன்னனே, உன்செயல் தவறானது. உன்னுடைய குலத்திற்கும் இச்செயல் இயல்பானது அன்று.  எனவே உன்னுடைய பிறப்பின்கண் நான் சந்தேகப் படுகின்றேன் என்று உரைத்தார்.  அதனைக் கேட்டதும் மன்னன் மாவளத்தான் தன் தவறினை உணர்ந்து வெட்கமுற்று மனம் கலங்கினான். அவனின் வருத்தத்தைக் கண்ட புலவர் பெருமான் மனத்தை ஆற்றுப்படுத்திக் கொண்டு, அவன் மகிழும் வண்ணம்  அவன் தன் தவறை உணர்ந்ததைப் பாராட்டிப் பாடினார். அப்பாடல் புறநானூற்றுப் பதிப்பில் 43-ஆவது பாடலாக அமைந்துள்ளது. 


'நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

   தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்

   கால் உணவாகச் சுடரொடு கொட்கும்

   அவிர்சடை முனிவரும் மருள, கொடுஞ்சிறைக்

   கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்கு ஒரீஇத்

   தன்னகம் புக்க குறுநடைப் புறவின்

   தபுதி அஞ்சிச் சீரை புக்க

   வரையா ஈகை உரவோன் மருக' 

(புறம்.43, 1 – 8)


என்பது அப்பாடலின் முன்பகுதியாகும். 

இப்பகுதியின் பொருள் - நிலத்தில் வாழுகின்ற உயிர்களுக்கு வெப்பத்தால் உண்டாகின்ற துன்பத்தை அவ்வுயிர்கள் பொறுக்க இயலாது என்று கருதி, தமது அருளினால் ஒளியோடு   தருகின்ற சூரியனின் வெப்பத்தைப் பொறுக்கின்றவரும், காற்றை உணவாகக் கொண்டவரும், ஒளி பொருந்தி விளங்குகின்ற சடையைக் கொண்டவரும் ஆகிய சிறந்த தவத்தைச் செய்யும் முனிவர்கள்; வியப்பினால் மயங்க ----  சிறகுகளையும் கூரிய நகத்தையும் உடைய பருந்து கொத்துவதைக் கருதி, அப்பருந்தினிடத்தில் இருந்து தப்பிக்கத் தன்னிடம் அடைக்கலம் புகுந்த, சிறிய நடையை உடைய புறாவின் துன்பத்திற்கு அஞ்சி, தன் அழிவிற்கு அஞ்சாது தராசுத் தட்டில் புகுந்த, வரையறுக்க முடியாத வல்லமையை உடையவனின் மரபில் வந்தவனே என்பதாகும். இவ்வரிகள் வீரத்தோடு கூடிய வள்ளல் தன்மைக்கு எடுத்துக் காட்டாகும் என்று உ.வே.சா.அவர்கள் குறிப்புரை எழுதுவார். 


அதுபோல,  

     'புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற்

  சினங்கெழு தானைச் செம்பியன் மருக'

(புறம். 37, 5 – 6)

என்றும்,

'புறவி னல்லல் சொல்லிய கறையடி

    யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்

கோனிறை துலாஅம் புக்கோன் மருக'

(புறம். 39, 1 – 3)

என்றும், 

'நீயே புறவி னல்ல லன்றியும் பிறவும்

இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை'

(பா. 46, 1 – 2)

என்றும், புறநானூற்றில் சிபிச்சக்கரவர்த்தியின் வள்ளல் தன்மை பதிவு செய்யப் பெற்றுள்ளது.  இப்பதிவுகளில் பருந்து தன் உணவிற்காகப் புறாவைக் கொல்லக் கருதியதற்கு, புறாவின் எடைக்குஎடை தன் அறுத்த தசைகள் சமப்படாததால், தராசில் தன் உடல் முழுவதையும் அளிக்கச் சிபிச்சக்கரவர்த்;தி  ஏறியதைக் குறிப்பிடுகின்றனவே தவிர, அறுத்த தசைகள் மீண்டும் கூடி, சிபிச்சக்கரவர்த்தி உருவம் பெற்றானா? பருந்தின் பசி தீர்;ந்ததா? என்பன போன்றவை பதிவு செய்யப்படவில்லை.  


இதுபோலச் சிலப்பதிகாரத்தில்,

'எள்ளறு சிறப்பி னிமையவர் வியப்ப

புள்ளுறு புன்கண் டீர்த்தோ னன்றியும்'

(கொலைக்களக்காதை, 51 – 52)


என்ற பகுதியிலும் தேவர்கள் வியக்கும் வண்ணம் புறாவின் துன்பத்தைத் தீர்த்தவன் சிபிச்சக்கரவர்த்தி என்று குறிக்கப் பெற்றுள்ளது. மேலும் பிற்காலச் சிற்றிலக்கியமாகிய ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப் பரணியில்,

'உடல் கலக்கு அற அரிந்து தசையிட்டும், ஒருவன்

   ஒரு துலைப் புறவொடு ஒக்க நிறை புக்க புகழும்'

(இராசபாரம்பரியம், கண்ணி- 191)

என்ற பகுதியில் அவன் தராசில் புகுந்ததோடு, தசையை அரிந்து கொடுத்தான் என்ற செய்தி பதிவு செய்யப் பெற்றுள்ளது.  


மேலும் ஒட்டக்கூத்தர் பாடிய இராசஇராசசோழன் உலாவில், 

'மறானிறை யென்று சரணடைந்த வஞ்சப்

புறாநிறை புக்க புகழோன் '

(கண்ணி – 6)

என்றும், மேலும் அவர்பாடிய விக்கிரமசோழன் உலாவில்,

'காக்குஞ் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து

தூக்குந் துலைபுக்க தூயோனும்'

(கண்ணி – 11)

என்று சிபிச்சக்கரவர்த்தியின் செயல் கூறப்பெற்றுள்ளது. இவ்வாறு ஒட்டக்கூத்தர் பாடிய உலா நூல்களில் சிபிச்சக்கரவர்த்தி தராசத் தட்டில், துன்புற்ற புறாவிற்காகத் தானே தராசில் புகுந்ததே கூறப்பெறுகிறது. 


இதுகாறும் எடுத்துக் காட்டப்பெற்ற எடுத்துக்காட்டுக்களால் பருந்து உணவாகக் கருதிய புறாவிற்காகச் சிபிச்சக்கரவர்த்தி  முழுமையாகத் தராசுத் தட்டில் ஏறினான் என்ற செய்தியே இடம்பெற்றிருக்கிறது.  அதன் பிறகு நடந்த செய்திகள் இடம்பெறவில்லை.  ஆனால் நம் ஆதீனப் புலவர் சிவப்பிரகாசர் பின் நிகழ்ந்த செய்தியைத் திருவெங்கைக்கோவை இலக்கியத்தில் குறிப்பிட்டிருப்பது அறியத் தக்க சிறப்புடையதாகும்.  புலவர் பெருந்தகை சிபிச்சக்கரவர்த்தியைப் பதிவு செய்த பாடல்  ---


'அகலாது அடைக்கலம் புக்கபுட் காகத்தன் ஆகம்எல்லாம்

   மிகலா அரிந்து புரந்தவற் காத்தவர் வெங்கையிலே

   இகலாது அயல்சந் தனம்படர்ந்து ஏறும் இளங்கொடியே

   புகலாய் எனக்குஉயிர் போலும்நல் நாணைப் புரந்தருளே'

(பா. 14)

இப்பாடல் அமைந்த களவியல் துறை வழிபாடு மறுத்தல் என்பதாகும். அதாவது களவியல் தலைவன் , தலைவியிடம் இரந்து பின்னிலை நிற்றல் முதலாக, பொய் பாராட்டல் ஈறாக, தலைவன் கூறியதைத் தலைவி மறுத்து உரைத்தலாகும். அத்துறைக்குரிய இப்பாடலின் பொருள் -----  நீங்காமல் அடைக்கலம் புகுந்த ஒரு புறாவின் பொருட்டு ,மன உறுதியோடு உடல் முழுவதும் அரிந்து கொடுத்து, புறாவைக் காத்தருளிய சிபிச்சக்கரவர்த்தியைக் காத்து அருளியவராகிய சிவபெருமானது திருவெங்கைப் பதியில், நீங்காத சந்தன மரத்தில் படர்ந்திருக்கின்ற இளங்கொடியே, எனக்கு அடைக்கலமாகிய என் உயிர் போன்ற சிறந்த நாணத்தைக் காத்து அருள்வாயாக என்பதாகும்.    இப்பாடற் பகுதியில் சிவபெருமான் புறாவைக் காத்தவனாகிய சிபிச் சக்கரவர்த்தியைக் காத்தவர் என்ற செய்தியைப்' புரந்தவற் காத்தவர்'  என்ற தொடரால் சிவப்பிரகாசர் குறித்திருப்பது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும்.


தன் உடல் முழுவதையும் மன உறுதியோடு அறுத்துக் கொடுத்தவர் சிபிச்சக்கரவர்த்தி. அவ்வாறு புறாவிற்குப் பதிலாகக் கொடுத்த தசைகளை உணவாகப் பருந்து உண்ணவில்லை.  அறுத்துக் கொடுத்ததை உலகவர் வியந்து பாராட்ட, சிபிச்சக்கரவர்த்தியின் வலிமை மிகுந்த கொடையை உலகுக்கு உணர்த்தியபின் இறைவர் சிவபெருமான் , சிபிச்சக்கரவர்த்தியின் தசைகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து மீண்டும் உயிர்பெற்ற உடலாக அருளிச் செய்தார் என்ற செய்தியை , 'புரந்தவற் காத்தவர்' என்ற சொற்கள்  மூலம் சிவப்பிரகாசர் விளக்குகிறார். அதாவது தன் தசையைக் கொடுத்துப் புறாவைப் புரந்தவராகிய (காத்தவராகிய) சிபிச்சக்கரவர்த்தியைக் காத்தவர் என்பது பொருளாகும்.  


முன் இலக்கியங்கள்  சிபிச்சக்கரவர்த்தி புறாவிற்குத் தன் தசைகளை அரிந்து கொடுத்ததோடு, பருந்திற்குத் தானே உணவாக அமைந்ததை மட்டும் கூறியிருக்க, சிவப்பிரகாசரோ திருவெங்கைக் கோவையில் அரிந்து கொடுத்த அவனுடைய வீரம் படைத்த கொடையைக் கண்டு, இறைவனாகிய சிவபெருமான் அவனுக்கு மீண்டும் உடலோடு கூடிய உயிரைக் கொடுத்துக் காத்தார் என்று கூறியுள்ளமை நினைவு கூரத் தக்கதாகும்.  பெரியபுராண அடியார்கள் மகனை அரிந்து கொடுத்த பொழுதும், மகளின் கூந்தலை அறுத்துக் கொடுத்த பொழுதும், மனைவியின் மூக்கை, கையை வெட்டிய பொழுதும் அவர்கள் அவற்றை மீண்டும் பெற, சிவபெருமான் அருளியதைப் போலச் சிபிச்சக்கரவர்த்திக்கு மீண்டும் உயிர் கொடுத்தார் என்ற சிவப்பிரகாசரின் செய்தி, ஆன்மீகம் சார்ந்த வீரம் பொருந்திய கொடையைப் புலப்படுத்துவதாகும். 


திருச்சிற்றம்பலம்.  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக