புதன், 26 ஜனவரி, 2022

சகலகலா வல்லி மாலை

 சகலகலா வல்லி மாலை

இப்பதிகத்தைப் பாடியவர் நெல்லைச் சீமையில் ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும் , சிவகாமி அம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்த குமரகுருபரர்; ஆவார்.  அவர் ஐந்து வயதுவரை ஊமையராய் இருந்து திருச்செந்தூர்த் திருமுருகன் திருவருளால் ஊமை நீங்கப் பெற்றவர். தருமை ஆதீனம் நான்காவது குருமகா சந்நிதானமாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகரின் குருவருளால் ஞானம் பெற்றவர். ஒருமுறை ஞானாசிரியரின் ஆணையின்படி காசி நகரத்திற்குச் சென்றார். ஆங்கு ஆட்சி புரிந்து கொண்டிருந்த டில்லி பாதுஷாவுடன் உரையாட ஹிந்துஸ்தானி மொழியைக் கற்க முனைந்தார். அம்மொழி கற்றிடக் கலைமகளை நோக்கி அவர் பாடிய பத்துப் பாடல்கள்தான் சகலகலாவல்லி மாலையாகும். இப்பதிகம் பாடிக் கலைவாணியின் அருள் பெற்று, அம்மொழியில் தேர்ச்சி பெற்றுச் சிங்கத்தின் மேல் ஏறிச்சென்று மன்னனைக் கண்டு, காசி நகரத்தில் இடம்பெற்றுத் திருமடம் அமைத்தார். இத்தகைய சிறப்புடையது இப்பதிகம். இப்பதிகத்தை ஓதினால் கலைமகளின் அருள் பெற்றுக் கல்வியில் சிறந்து விளங்கலாம். 

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்

தண் தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க ஒழித்தான் பித்து ஆக உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவை கொள் கரும்பே! சகல கலாவல்லியே!          1

பொருள்:

ஏழு உலகங்களையும் காத்து ,அதனை உண்டவனாகிய திருமால் உறங்கவும், உலகத்தை அழிக்கின்ற சங்காரத் தொழிலை உடைய சிவபெருமான்; பித்தகனாக விளங்கவும்,; செய்தவனாகிய நான்முகன், இனிதாகச் சுவைக்கும் கரும்பைப் போன்றவளே, பல கலைகளிலும் வல்லவளே, செந்தாமரை மலர் அல்லாது உன் திருவடியைத் தாங்குவதற்கு என்னுடைய வெள்ளை உள்ளமாம், அறியாமையை உடைய, குளிர்ந்த தாமரை மலர்கள் தகுதியற்றனவோ? 

சொ.பொ.வி:

நின்பதம் - உனது திருவடிகள், தண்தாமரை – குளிர்ச்சி பொருந்திய தாமரை, சகம் - உலகம், ஒழித்தான் - உலகை அழிப்பவன், கண்டான் - செய்த நான்முகன், சகலகலா – பல கலைகளையும்.

நாடும் பொருள் சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்;து அருள்வாய் பங்கயம் ஆசனத்தில்

கூடும் பசும்பொற்கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்

காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே! 2


பொருள்:

வெள்ளைத் தாமரையில் எழுந்தருளியிருக்கும் பசுமையான கொடி போன்றவளே, இரண்டு மார்பகங்களையும், ஐந்து வகையாகப் பின்னப் பெற்ற கூந்தலாகிய காட்டையும் சுமக்கின்ற கரும்பைப் போன்றவளே, கலைமகளே, விரும்புகின்ற பொருள் சுவையும் , சொற் சுவையும் பொருந்த , வெண்பா முதலிய நான்கு கவிகளையும் பாடும் பணியில் என்னை ஈடுபடுத்துவாயாக. 

சொ.பொ.வி:

நாடும் - விரும்பும்;, நாற்கவி – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, பங்கய ஆசனம் - தாமரை ஆசனம், கனதனக்குன்று – மார்பகமாகிய குன்று, ஐம்பால் - ஐந்து வகையாக, 


அளிக்கும் செழுந்தமிழ்த் தௌ;ளமுது ஆர்ந்து உன்அருட் கடலில்

குளிக்கும் படிக்கென்று கூடும் கொலோ? உளம் கொண்டு தௌ;ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு

களிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே!        3

    பொருள்:

உள்ளத்தில் தெளிவு கொண்டு , செய்யுட்களைச் செய்யும் புலவர்களின் கவியாகிய மழை பெய்யக் கண்டு மகிழ்கின்ற, தோகை உடைய மயில் போன்றவளே, கலைமகளே, உன்னால் அருளப் பெறுகின்ற தமிழாகிய அமுதத்தை மிக உண்டு, உனது அருள் என்ற கடலில் நீராடும் நிலைமையை எனக்கு அருள்வாயாக. 

சொ.பொ.வி:

அளிக்கும் - அருளுகின்ற, குளிக்கும்படி – நீராடும்படி, தௌ;ளித் தெளிக்கும் - தெளிவாக, பனுவல் - பாடல், களிக்கும் - மகிழும், கலாபம் - தோகை. 

தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூற்கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று

காக்கும் கருணைக்கடலே சகல கலாவல்லியே! 4


பொருள் :

வடமொழி நூற்கடலும், மேன்மை கொண்ட தமிழ்ச் செல்வமும் உடைய தொண்டரின், செம்மையான நாவில் நின்று காக்கும் அருள் கடலே, கலைமகளே, படிக்கின்;ற நூல்களில் மனம் தோயும் செயற்கை அறிவும், சொற்களில் சுவை கொண்டிட கவிஇயற்றும் ஆற்றலும் என்னிடம் பெருகும்படி அருள் புரிவாயாக.  

சொ.பொ.வி:

தூக்கும் - ஆராயும் (படிக்கும்), பனுவல் - நூல், வாக்கு – கவி எழுதும் ஆற்றல், தேக்கும் - மேன்மை கொண்ட, நாவு – நாக்கு, காக்கும் - காக்கின்ற. 


பஞ்சப்பு இதம்தரு செய்ய பொற்பாத பங்கேருகம் என்

நெஞ்சத் தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து

அஞ்சத் துவசம்  உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்

கஞ்சத் தவிசு ஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே!    5


பொருள்:

நீண்ட காம்பினை உடைய தாமரையில் வீற்றிருந்து, அன்னக் கொடியை உயர்த்திக் கொண்டிருக்கும் , பிரமனின் செம்மையான நாவிலும், உள்ளத்திலும், தாமரையாகிய இருக்கையிலும் ஒருசேர வீற்றிருக்கின்ற கலைமகளே, செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்ற, இன்பத்தை அருளுகின்ற ,  சிவந்த அழகிய உன் திருவடிகள் என்ற தாமரை மலர்கள் என்னுடைய நெஞ்சமாகிய குளத்தில் மலராதது ஏன்?

சொ.பொ.வி:

பஞ்சு அப்பு – செம்பஞ்சு பூசப்பெற்ற, பாத பங்கேருகம் - பொன்னிறமான திருவடிகளாகிய தாமரை , அலராததது – மலராதது, நெடுந்தாள் - நீண்டகாம்பு, அஞ்சத் துவசம் - அன்னக் கொடி, கஞ்சத் தவிசு – தாமரை இருக்கை, 


பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்;தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே!    6


பொருள்:

எழுதப் படாத வேதங்களிலும், விண்ணுலகத்திலும், மண்ணுலகத்திலும், நீரிலும், தீயிலும், காற்றிலும், அன்பர்களின் நெஞ்சத்திலும், கருத்திலும் நிறைந்திருக்கும் கலைமகளே, இசையும், நாடகமும், இயலும்,  கவியும் ஆகிய இவை எல்லாவற்றையும் நான் நினைக்கும் பொழுது எனக்கு எளிதில் அடையும்படி அருள் செய்வாயாக. 

சொ.பொ.வி:

பண் - இசை, பரதம் - நாடகம், கல்வி - இயற்றமிழ், தீஞ்சொல் - இனிய சொல், பனுவல் - கவிதை, எழுதா மறை – வேதம், கனல் - தீ, கால் - காற்று. 

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்

கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய், உளம் கொண்டு தொண்டர்

தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்

காட்டும் வெள் ஓதிமப் பேடே! சகல கலாவல்லியே.      7

பொருள்:

உள்ளம் கொண்டு, தொண்டர்கள் இயற்றுகின்ற கலைகள் பொருந்திய  இனிய தமிழ்ப் பாடலாகிய அமுதத்தையும், நீரையும் பிரித்து அறியும் வண்ணம், அறிவு தருகின்ற வெண்மையான பெண் அன்னப் பறவையே, கலைமகளே, செய்யுள், அதன் பொருள், அப்பொருளால் அடையும் பயனாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் எனக்குக் கிடைக்கும் வண்ணம் நீ கடைக்கண் அருள் செய்வாயாக. 

சொ.பொ.வி:

பயன் - அறம், பொருள், இன்பம், வீடு, தீட்டும் - இயற்றும், தெளிக்கும் - நீரைப் பிரிக்கும், வெள் ஓதிமப் பேடு – வெண்மையான அன்னம், 


சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல

நல் வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்

செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்

கல்விப் பெரும் செல்வப்பேறே! சகல கலாவல்லியே.        8


பொருள்:

வெண்மையான தாமரை மலர் ஆசனத்தில் வீற்றிருக்கின்ற , பொருட் செல்வத்திற்கு அருமை உடையது என்றும், ஒரு காலத்திலும் அழியாதது என்றும் கூறப் பெறுகின்ற கல்வியாகிய பெரும் செல்வமே, கலைமகளே. நாவன்மையும், அவதானங்களும், கவிகளை இயற்றவல்ல ஆற்றலும் தந்து என்னை, உன்னுடைய அடிமையாகக் கொள்வாயாக. 

சொ.பொ.வி:

சொல் விற்பனம் - நா ஆற்றல், அவதானம் - ஒரே நிலையில் பல செய்திகளைக் கவனித்தல், நல்வித்தை – ஆற்றல், நளின ஆசனம் - வெண் தாமரை இருக்கை, செல்விக்கு அரிது – திருமகளுக்கு அரிது, சிதையாத – அழியாத


சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர்  யார்? நிலம் தோய் புழைக்கை

நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை

கற்கும் பதாம் புயத்தாயே ! சகல கலாவல்லியே !          9


பொருள்:

நிலத்தில் படும்படி நீண்டிருக்கும்; துளை பொருந்திய துதிக்கை கொண்ட பெண் யானையும், அரச அன்னப் பறவையும் நாணம் அடையும்படி நடையை உடைய திருவடித் தாமரைகளைக் கொண்ட அன்னையே, கலைமகளே, சொல்லுக்கும் பொருளுக்கும் உயி;ரான மெய்ஞ்ஞானத்தின் வடிவினைப் போல் விளங்கும் உன்னை நினைக்கும் ஆற்றல் பெற்றவர் யார் தாமோ?


சொ.பொ.வி:

தோற்றம் - வடிவம், நிலம்தோய் - நிலத்தில் படும்படி, துளைக்கை – தும்பிக்கை, குஞ்சரத்தின் பிடி – பெண் யானை, பாதாம்புயம் - தாமரைத் திருவடி. 


மண் கண்ட வெண்குடைக்கீழாக மேற்பட்ட மன்னரும் என் 

பண் கண்ட அளவில் பணியச் செய்வாய்: படைப்போன் முதலாம்

விண் கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்

கண் கண்ட தெய்வம் உளதோ? சகல கலாவல்லியே!      10


பொருள்:

உலகங்களை எல்லாம் படைக்கின்ற நான்முகனைப் போன்ற தெய்வங்கள் வானத்தில் பல கோடியர் இருப்பினும், உண்மையாகக் கூறினால் உன்னைப் போல் கண் கண்ட தெய்வமாய்க் காட்சி தருகின்ற, பலனைத் தருகின்ற தெய்வம் உள்ளதோ? கலைமகளே. உலகங்களை வென்று வெண்குடைக் கீழாக வாழும் மன்னரும் , என் செய்யுளைக் கேட்டளவில் என்னை வணங்கிப் பணியும்படிச் செய்வாயாக. 

சொ.பொ.வி:

மண் கண்ட – உலகத்தை வெற்றி கொண்ட, என் பண் - என்னுடைய கவிதை, படைப்பவன் - நான்முகன், விளம்பில் - உண்மையாகக் கூறின். 


________________________________________________________________________________________________________



சரசுவதி பூஜையன்று அர்ச்சனை செய்யவேண்டிய போற்றிகள்

          

               விநாயகர் போற்றிகள் 16     

ஓம் கற்பகக் கடவுள் போற்றி

ஓம் கந்தனின் தமையனே போற்றி

ஓம் முக்கண் முதல்வா போற்றி

ஓம் உமையவள் மகனே போற்றி

ஒம் அங்குச பாசம் அணிந்தவா போற்றி

ஓம் இண்டைச் சடைமுடி இறைவா போற்றி

ஓம ஈசன் மகனே இறைவா போற்றி

ஓம் உன்னடி பணிந்தோம் போற்றி

    ஓம் ஊன்று கோலானாய் போற்றி

ஓம் எம்மைக் காப்பாய் போற்றி  

    ஓம் ஏழுலகம் தொழ நின்றாய் போற்றி   10

  ஓம் ஏற்றுக் கொள்வாய் போற்றி

ஓம் ஒற்றை மருட்பா போற்றி

ஓம் ஓங்கார வடிவே போற்றி

ஓம் கற்பகக் கணபதி போற்றி

ஓம் சங்கத்துக் கணபதியே போற்றி.       16

ஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷ

கலைமகள் போற்றி  108

ஓம் அறிவின் அறிவாய் போற்றி

ஓம் அழகின் உருவே போற்றி

ஓம் இடரைக் களைவாய் போற்றி

ஓம் ஈவாய் காப்பாய் போற்றி

ஓம் உலக நாயகியே போற்றி

ஓம் ஊற்றம் தருவாய் போற்றி

ஓம் எழுத்தாய் எண்ணாய் போற்றி

ஓம் ஏட்டில் இருப்பாய் போற்றி

ஓம் ஐயம் அறுப்பாய் போற்றி

ஓம் கலைமகள் தாயே போற்றி          10

ஓம் ஒட்டக்கூத்தர்க்கு உதவினோய் போற்றி

ஓம் ஓதுவார் அகத்து ஒளியே போற்றி

ஓம் ஒளவைக்கு அருளினோய் போற்றி

ஓம் கல்விக்கு அரசியே போற்றி

ஓம் காட்சிக்கு அரியோய் போற்றி

ஓம் இல்லக விளக்கே போற்றி

ஓம் வெள்ளைக் கமலத்தோய் போற்றி

ஓம் செங்கையில் புத்தகம் கொண்டோய் போற்றி

ஓம் உந்திக் கமலத்தோன் துணையே போற்றி

ஓம் கலைமகள் தாயே போற்றி             20

ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி

ஓம் பைந்தமிழ்ப் பா உறைவாய் போற்றி

ஓம் மன்னரை வணங்க வைத்தோய் போற்றி

ஓம் பாவலர்க்கு அருள்வாய் போற்றி

ஓம் கம்பரைக் காத்தோய் போற்றி

ஓம் அழகின் உருவே அணங்கே போற்றி

ஓம் பழகு தமிழின் பண்ணே போற்றி

ஓம் இளமை குன்றா அம்மா போற்றி

ஓம் ஊமைக்கு அருளினோய் போற்றி

ஓம் கலைமகள் தாயே போற்றி             30

ஓம் வீணைக்கை உடையவளே போற்றி

ஓம் குமரகுருபரர்க்கு உதவியோய் போற்றி

ஓம் கேள்விக்கு உரிய தேவே போற்றி

ஓம் ஆள்வினை அருளும் அமுதே போற்றி

ஓம் மனம் கடந்த பொருளே போற்றி

ஓம் சுடரே விளக்கே தூயோய் போற்றி

ஓம் செந்தமிழ்க் காக்கும் அரசியே போற்றி

ஓம் சேவடிச் செல்வம் அளிப்போய் போற்றி

ஓம் குற்றங் களைவாய் போற்றி

ஓம் கலைமகள் தாயே போற்றி           40

ஓம் சிலம்புகொள் சீரடியே போற்றி

ஓம் நலம்பல எமக்குத் தருவாய் போற்றி

ஓம் பிள்ளை மொழித் தாயே போற்றி

ஓம் வள்ளலாய் நின்றோய் திருவடியே போற்றி

ஓம் சொன்ன கலைகளின் தொடர்பே போற்றி

ஓம் எண்ணெந் கலைக்கும் தலைவியே போற்றி

ஓம் பண்ணெனும் பொருளாய் நின்றோய் போற்றி

ஓம் தேவரும் வணங்கும் தேவியே போற்றி

ஓம் யாவர்க்கும் அருளும் அன்னையே போற்றி

ஓம் கலைமகள் தாயே போற்றி             50

ஓம் மாலின் மருமகளே போற்றி

ஓம் உலகியல் நடத்தும் ஒருத்தி போற்றி

ஓம் எண்ணிலாப் புகழுடை கொண்டோய் போற்றி

ஓம் ஏழுலகும் தொழ நின்றாய் போற்றி

ஓம் சூழும் நல்அன்பரின் துணையே போற்றி

ஓம் கல்விக்கு அரசியாம் கடலே போற்றி

ஓம் மேகலை அணிந்த பொலிவே போற்றி

ஓம் சிந்தாமணி விளங்கும் செல்வியே போற்றி

ஓம் குண்டலம் காதில் அணிந்தோய் போற்றி

ஓம் கலைமகள் தாயே போற்றி             60

ஓம் வளையா பதியாய் வாழ்வோய் போற்றி 

ஓம் வள்ளுவம் தந்த வாணியே போற்றி

ஓம் காப்பியத்தின் உட்பொருள் ஆவாய் போற்றி

ஓம் நன்னூல் நவின்ற நாவே போற்றி

ஓம் சிற்றிடை கொண்ட செல்வியே போற்றி

ஓம் வெள்ளிச் சரசுவதித் தாயே போற்றி

ஓம் உள்ளம் கொள்ளைகொள் உமையே போற்றி

ஓம் எள்ளில் நெய்யாய் ஆனாய் போற்றி

ஓம் மணம் கொள்சோலை மாதே போற்றி

ஓம் கலைமகள் தாயே போற்றி               70

ஓம் பல்லோர் போற்றும் பாவே போற்றி

ஓம் அறனும் பொருளும் ஆனாய் போற்றி

ஓம் மணியின் ஒளியே சுடரே போற்றி

ஓம் எண்ணிய கருமம் முடிப்பாய் போற்றி

ஓம் கிட்டுதற்கு அரிய கிளியே போற்றி

ஓம் கீர்த்தி கொண்ட பெண்மையே போற்றி

ஓம் சங்கினை ஒத்த ஒளியே போற்றி

ஓம் அங்கண் அருள்நிலை அரசி போற்றி

ஓம் சீரார் சிந்தா தேவியே போற்றி 

ஓம் கலைமகள் தாயே போற்றி           80

ஓம் சுடரே விளக்கே சோதி போற்றி

ஓம் இடரைக் களையும் எந்தாய் போற்றி

ஓம் கூறும் நாவாய் நின்றாய் போற்றி

ஓம் சூழும் தொண்டரின் தொடர்பே போற்றி

ஓம் நான்முகனின் நங்கை நீயே போற்றி

ஓம் நாநலம் தந்து அருள்வாய் போற்றி

ஓம் சங்கம் காக்கும் தமிழே போற்றி

ஓம் எங்கள் குலத்துத் தெய்வமே போற்றி

ஓம் பொங்கும் புகழைக் கொண்டோய் போற்றி

ஓம் கலைமகள் தாயே போற்றி            90

ஓம் தங்கும் தரணி காப்போய் போற்றி

ஓம் எங்கும் பரவி நின்றாய் போற்றி

ஓம் அகரமும் பொருளும் ஆனாய் போற்றி

ஓம் இகத்தில் பரசிவம் அருளும் போற்றி

ஓம் நல்லக மாந்தரைக் காப்பாய் போற்றி

ஓம் இல்லக விளக்காய் நிற்பாய் போற்றி

ஓம் சொல்லில் நடனம் செய்வோய் போற்றி

ஓம் கண்ணே மணியே கலையே போற்றி

ஓம் எம்மதமும் சம்மதம் ஆனாய் போற்றி

ஓம் கலைமகள் தாயே போற்றி          100

ஓம் பள்ளியின் பெயராய் நின்றாய் போற்றி

ஓம் சங்கம் காக்கும் தேவி போற்றி

ஓம் நவராத்திரி நாயகி நீயே போற்றி

ஓம் நாங்கள் பணிந்தோம் உன்னடி போற்றி

ஓம் கோயில் கொண்ட குலமே போற்றி

ஓம் வாசலில் நின்று காப்பாய் போற்றி

ஓம் உன்னருளை வேண்டி நின்றோம் போற்றி 

ஓம் போற்றி போற்றி தாயே போற்றி.        108


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக