புதன், 26 ஜனவரி, 2022

திருவாசகப் பதிகக் குறிப்புப் பொருள்


-----------------------------------------------------


திருவாசகம் என்ற பெயர் திருவுடைய சொற்களால் ஆகிய நூல் எனப் பொருள் தருவதாகும். திருவாசகத்தைத் தொகுத்த அருளாளர்கள் சிவபுராணம், கீர்த்தித் திருஅகவல், திருஅண்டப்பகுதி, போற்றித் திருஅகவல் என்ற நான்கு பதிகங்களும் அகவற்பா அமைப்பி;ல் அமைந்ததால் முதல் நான்கு பதிகங்களாக அமைத்தனர். பின் நூறு பாடல்கள் கொண்ட திருச்சதகம் தொகுக்கப் பெற்றது. அதன்பின் ஐம்பது பாடல்கள் கொண்ட நீத்தல் விண்ணப்பம் சேர்க்கப் பெற்றது. அதன்பின் இருபது பாடல்கள் கொண்ட பதிகங்கள் சேர்க்கப் பெற்றன. அதன்பின் பத்துப் பாடல்களும், அதற்குக் குறைவான பாடல்களும் உள்ள பதிகங்கள் தொகுக்கப் பெற்று ஐம்பத்தோரு பதிகங்கள் கொண்ட தொகுப்பு நூலாக ஆக்கினர். 


1. சிவபுராணம் :

சிவபெருமானது அனாதி முறைமையான பழைமை வரலாற்றுச் செய்திகளைக் கூறுவதாக மணிவாசகப் பெருமான் கருத்தில் கொண்டு சிவபெருமானின் படைத்தல் முதலாகிய ஐந்து தொழில்களையும் ஆன்மாக்களுக்கு அருளிய அருள் உபதேசங்களையும் தொகுத்துக் கூறிய பதிகம் ஆகும். புராணம் என்பது வரலாறு என்ற பொருள் தரும். எனவே சிவபெருமானின் வரலாற்றுச் செய்திகளைக் கூறும் பதிகம் ஆகும். 


2. கீர்த்தித் திருஅகவல் :

சிவபெருமானின் தொன்மையான வரலாற்றை முதல் பதிகத்தில் கூறி அருளிய மணிவாசகப் பெருமான், இப்பதிகத்தில் தில்லை முதலாகப் புலியூர் ஈறாக உள்ள இறைவன் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களின் சிறப்புக்களைப் போற்றிப் பாடிய பதிகமாகும். கீர்த்தி என்பது புகழ் என்ற பொருளை உடையது. திருத்தலங்களின் புகழைச் சொல்லும் பதிகமாகும். 


3. திருவண்டப்பகுதி:

சிவபெருமான் அண்டங்களாகிய உலகங்களை எல்லாம் படைத்து, அவற்றைத் தனக்குள் அடக்கிக் கொண்டு, அவற்றின் மேலாக இருந்து உயிர்களுக்குப் பக்குவம் பெற அருளிய அருட் செயல்களை மணிவாசகர் தொகுத்துக் கூறும் பதிகமாகும். 


4.  போற்றித் திரு அகவல்:

சிவபெருமான் உயிர்களுக்கு அருளிய அருட்செயல்களுக்கு நன்றி கூறும் முகத்தான் போற்றிச் சொற்களாலும், மலர்களாலும் திருவடிகளை வணங்குவது போலப் பாடப் பெற்ற பதிகம் ஆகும். 


5.  திருச்சதகம்:

சதம் என்ற வடசொல்லுக்கு நூறு என்பது பொருள்.  எனவே நூறு பாடல்களைக் கொண்ட இப்பதிகம் திருச்சதகம் எனப் பெயர் பெற்றது. இப் பதிகத்துள் ஒரு ஆன்மா இறைவனை நினைந்து போற்றத் தொடங்கி அதன் வளர்ச்சியில் இறைவனைச் சரணடைந்து, வீடு பேறு பெறும் சிறப்பினை மணிவாசகப் பெருமான் பரிணாம வளர்ச்சியாகப் பாடி அருளிய பதிகம். 


6.  நீத்தல் விண்ணப்பம்:

மணிவாசகர் திருப்பெருந்துறையிலிருந்து திருஉத்தரகோசமங்கை திருத் தலத்தலத்திற்குச் சென்று, திருப்பெருந்துறையில் தனக்கு அருள் உபதேசம் செய்தருளிய ஞானாசிரியரைக் காண முடியாத வருத்தத்தால், உத்திரகோச மங்ககைக்கு அரசே, என்னைக் கைவிட்டு விடாதே என்று நெஞ்சம் நெக்கு உருகிப் பாடிய பதிகம். நீத்தல் என்பதற்கு என்னைக் கைவிட்டு விடாதே என்பது பொருளாகும். 


7. திருவெம்பாவை:

மணிவாசகர் திருவண்ணாமலைக்குச் சென்று இறைவனை வழிபட்டு வாழும் காலத்தில், மார்கழி மாதத்தில் பெண்மக்கள் பாவை என்ற பொம்மை உருவத்தை மணலால் பிடித்து நோன்பிருந்து வழிபடுவதைக் கண்டு, அந்த வழிபாட்டிற்குப் பெண்கள் பாடுவதைப் போல, நாட்டில் மழை பொழியவும், வீட்டில் பெண்களுக்கு நல்ல கணவன் அமையவும் வேண்டிப் பாடிய பதிகமாகும். 


8.  திருவம்மானை:

தேவாரம் பாடிய மூவரைக் காட்டிலும் மணிவாசகர் பெண்களின் விளையாடல்களை மையமாக வைத்துப் பல பதிகங்கள் பாடியிருக்கிறார். அதில் முதல் பதிகம் இது. அம்மானை என்பது காய்களைக் கொண்டு மகளிர் விளையாடும் வரிப் பாடலாகும். சங்க இலக்கியம் இன்றைய இலக்கியங்கள் வரை அம்மானைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பதிகத்தில் சிவபெருமானின் புகழைப் பாடிப் பெண்மக்கள் மகிழுகின்றனர். 


9. திருப்பொற் சுண்ணம் :

திருக்கோயில்களில் இறைவனின் திருமேனிக்குப் பொன்னிறமான நறுமணம் பொடியினை இடிக்கும் பொழுது மகளிர் பாடும் வரிப்பாடல் உலக்கைப் பாடல் எனப்படும். இந்த உலக்கைப் பாடல் முறைமையைத் தான் மணிவாசகர் பொற்சுண்ணம் இடித்து மகளிர் சிவபெருமானின் புகழைக் கூறிப் பாடுவது போல அமைத்துள்ள பதிகம் ஆகும். 


10;  திருக்கோத்தும்பி:

தும்பி என்பது ஒருவகை வண்டாகும். இவ்வண்டு வண்டுகளுக்கு எல்லாம் தலைமை தாங்குவதாகும். வண்டு மலரைச் சுற்றிப் பறப்பது போல விளையாடும் பெண்மக்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக் கொண்டு விளையாடுவர். அவ்வாறு விளையாடும் பொழுது இந்தத் தும்பியாகிய வண்டினை முன்னிலைப் படுத்தி, சிவபெருமானின் திருவடித் தாமரைகளின் புகழை இடைவிடாது போற்றிப் பாடுவது போல அமைந்த பதிகமாகும். 


11. திருத்தௌ;ளேணம் :

தௌ;ளேணம் என்பது பெண்கள் விளையாடல்களில் ஒன்றாகும். பெண் மக்கள் முச்சில் என்னும் பெரிய உலக்கையைக் கையில் கொண்டு, தானியங்களைப் புடைக்கும் பொழுது இறைவனின் சிறப்புக்களைப் பாடிப் போற்றுவதாக அமைந்த பதிகம். 


12. திருச்சாழல்:

சாழல் என்பது மகளிர் விளையாடல்களில் ஒன்று. ஒரு பெண் ஒரு செயலைப் பற்றிக் கேள்வி கேட்க, மற்றொருத்தி அந்தச் செயலை முரண் பாடுகளை நீக்கி அதன் உட்பொருள்களைக் கூறி , பாடல்களைப் பாடி விளையாடுவர். இதனை எதிர்ப்பாட்டுப் பாடி விளையாடுதல் என்பர். இதனைச் சிலப்பதிகாரம் நற்சாழல் எனக் குறிப்பிடுகிறது. இவ்விளையாட்டில் சிவபெருமானின் நிகழ்வுகள் இடம்பெற்றுப் பாடல்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்தாகும். குறிப்பாகச் சொன்னால் இப்பதிகம் தான் புத்தமதத்தைச் சார்ந்த இலங்கை அரசனின் மகள் ஊமையாய் இருந்தவளை மணிவாசகர் தான் பெண்ணாகிக் கேள்வியைக் கேட்க, அக்கேள்விக்குரிய உட்பொருளை அந்த ஊமைப் பெண் பேசுவது போல அமைந்த பதிகமாகும். 


13. திருப்பூவல்லி:

அழகிய பூக்களை உடைய கொடிக்குத் திருப்பூவல்லி என்பது பெயர். பெண்மக்கள் பூக்கொய்தல் தொழிலைச் செய்யும் பொழுது, இறைவனின் பெருமைகளைக் கூறி, பூப்பறிப்பது போல் பொருளமைந்த பதிகம் ஆகும். 


14. திருவுந்தியார்:

உந்தி பறத்தல் என்பது மகளிர் விளையாட்டுக்களில் ஒன்று. விளையாடும் மகளிர் சிவபெருமானின் வெற்றியைப் புகழ்ந்து பாடிக் கொண்டு, உயர எழுந்து குதித்தலாகும். இன்றைய விளையாட்டில் கயிறு தாண்டுதல் என்று இதைக் குறிப்பர். இப்பதிகத்தில் சிவபெருமானி வீரச் செயல்கள் இடம்பெற்றிருப்பது அறியத் தக்கதாகும். 


15. திருத்தோள் நோக்கம்:

மகிழ்ச்சிப் பெருக்கினால் பெண்மக்கள் தங்கள் தோள்கள் பூரித்து மேலோங்க , அவற்றை நோக்கிக் கைவீசிக் கொண்டு விளையாடும் விளையாட்டு ஆகும். இதனைச் சிலப்பதிகாரம் நல்லார்தம் தோள்வீச்சு என்று குறிப்பிடும். 


16. திருப்பொன்னூசல்:

ஊஞ்சல் விளையாட்டு என்பது  மகளிர் விளையாட்டுக்களில் ஒன்று.  இப்பதிகத்தில் பெண்மக்கள் பொன் ஊஞ்சலில் சத்தி தெய்வத்தை எழுந்தருளச் செய்து, இறைவனின் பெருமைகளையும் சத்தியின் அருள் திறத்தையும் பாடி, ஊஞ்சலை ஆட்டி விளையாடுவர். இதனைப் பண்டை இலக்கியங்கள் ஊசல்வரி என்று குறிப்பிடும். 


17. அன்னைப் பத்து:

மணிவாசகர் தம்மை ஆட்கொண்டு அருளிய இறைவன், குதிரைச் சேவகனாய் மதுரையில் எழுந்தருளிய பொழுது, அவனது பேரழகில் ஈடுபட்டுக் காதல் கொண்ட தலைவி ஒருத்தி, தன்னுடைய அன்னையை நோக்கி அவனுடைய பெருமைகளைக் கூறுவது போல் பாடப்பெற்ற பதிகமாகும். 


18. குயில்பத்து :

சிவபெருமானைக் காதலித்த பெண் ஒருத்தி, பூஞ்சோலையில் வாழும் குயிலை நோக்கி, எம் தலைவன் வருமாறு கூவி அருள்வாயாக என வேண்டுவது போல் பாடப்பெற்ற பதிகம். மணிவாசகர் காலத்தில் குயில் கூவினால் விருந்து வரும் என்ற நம்பிக்கை புலனாகிறது. 


19. திருத்தசாங்கம் :

மணிவாசகர் பாண்டிய அரசனிடம் அமைச்சராய்ப் பணி புரிந்தவர். எனவே ஒரு மன்னனுக்கு நாடு, ஊர், கொடி என்ற பத்து உறுப்புக்கள் இருப்பது போலச், சிவபெருமானுக்கும் பத்து உறுப்புக்களைப் படைத்துக் கொண்டு பாடப் பெற்ற பதிகம். இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் கிளியைக் குறிக்கும் பெயர்கள் அமைந்து, சிவபெருமானின் உறுப்புக்களைக் கேள்வியாகக் கேட்டுக் கிளி பதில் சொல்வது போல் பாடல்கள் அமைந்துள்ளன. 


20. திருப்பள்ளியெழுச்சி:

தமிழ் இலக்கண் நூலான தொல்காப்பியத்தில் துயில் எடை நிலை என்ற ஒரு துறை அமைந்துள்ளது. அதற்கு உரையாசிரியர்கள் மன்னனைத் துயில் எழுப்புதல் என்று பொருள் எழுதுவர். அதாவது பள்ளியெழுச்சி பாடுதல். இப் பதிகமும் சிவபெருமான் பள்ளி எழுவதற்குரிய பாடல்களைக் கொண்டு விளங்குகிறது. 


21;. கோயில் மூத்த திருப்பதிகம்:

தில்லைச் சிற்றம்பலத்தில் அருள் நடனம் ஆடும் இறைவனது, பொருள் சேர் புகழ்த்திறத்தை விரித்துரைக்கின்ற திருப்பதிகம். திருமுறையில் முதன்மையான காரைக்கால் அம்மையார் பாடிய மூத்த திருப்பதிகம் என்ற பெயரைப் பெற்று, முன்னோர் மொழி காத்தல் என்ற செய்தியை வலியுறுத்துகிறது. 


22.  கோயில் திருப்பதிகம்:

Nhயில் என்ற பெயர் தில்லைத் திருத்தலத்திற்கே உரியதாகும். என்றாலும் திருப்பெருந்துறைக் கோயிலை இப்பெயர் நினைவூட்டுகிறது. மணிவாசகப் பெருமான் தான் பெற்ற சிவப்பேற்றைப் புலப்படுத்தும் நிலையில் அருளிச் செய்யப் பெற்ற பதிகம் இது. இப்பதிகப் பாடல்கள் அந்தாதி அமைப்பில் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். 


23. செத்திலாப் பத்து:

செத்தல் என்பது சாதல் என்ற பொருளைத் தரும். சாதல் என்பது ஒரு ஆன்மா தன் பசுத் தன்மை முற்றும் கெட, இறைவனுடைய பதி ஞானத்தை உள்ளடக்கிக் கொண்டு, உணர்வை அமைதிப் படுத்தல் அதாவது தன் உணர்வு இல்லாது இருத்தல் என்ற நிலையில் மணிவாசகர் தம்மை அமைத்துக் கொண்டு பாடிய பதிகம். திருவாசகம் மணிவாசகரின் தன்உணர்வு நூல் என்பதை வலியுறுத்துவதற்குரிய எடுத்துக்காட்டுப் பதிகங்களில் இதுவும் ஒன்று. 


24.  அடைக்கலப்பத்து :

மணிவாசகர் சிவபெருமானிடம் தம்மைப் பிறவி நோயிலிருந்து விடுவித்து, சிவபெருமானின் உடைமைப் பொருளாகத் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டும் பதிகமாகும். அடைக்கலம் என்பது பிறரிடத்தில் தம்மை அடிமைப் படுத்திக் கொள்ளுதல் ஆகும். 


25.  ஆசைப் பத்து:

மணிவாசகர் உலகப் பொருள்களின் மேல் தனக்கிருக்கும் ஆசையை முழுவதும் நீக்கி, இறைவனின் திருவருளே தன்னை ஆட்கொண்டு அருளுவதற்கு இறைவனிடம் இறைஞ்சி வேண்டுவது போல் பாடப்பெற்ற பதிகம். இங்கு ஆசை என்பது சிவபெருமானை அடைதல் என்ற மணிவாசகரின் ஆசையைப் புலப்படுத்திச் சிவன்மீது நம்மையும் ஆசைப்பட வைப்பதாகும். 


26. அதிசயப்பத்து:

அதிசயம் என்ற சொல்லுக்கு மிகுதி என்பது பொருளாகும். வியப்பு என்றும் கூறலாம். மணிவாசகர் தனக்குத் திருவருள் புரிந்த இறைவனது திருவருள் தன்மையை எடுத்துச் சொல்லும் பதிகமாகும். மணிவாசகரின் எண்ணம் எல்லாம் சிவனடியார்களில் தானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதாகும். அத்தகைய திருவருளை இறைவன் தர அடியவரில் தான் ஒருவனாக இருக்கும் அதிசயத்தை மணிவாசகர் வியந்து பாடிய பதிகம் இப்பதிகம். 


27.  புணர்ச்சிப் பத்து :

திருப்பெருந்துறையில் குருவாக எழுந்தருளி வந்து தன்னை ஆட் கொண்ட இறைவனைப் பிரியாது போற்றும் பண்பினை உடைய மணிவாசகர், அம் முதல்வனோடு இணைந்து பிரிவில்லாது இருக்கும் நிலையினை விரும்பி, நெஞ்சம் நெக்குருகிப் போற்றும் நிலையில் அமைந்த பதிகம் இது. 


28.  வாழாப் பத்து:

இறைவனே, உன்னுடைய திருவடியைப் பற்றி நின்று, இவ்வுலகப் பொருளில் பற்றில்லாது உன்னை அடைய விரும்புகின்றேன். இந்த உலக வாழ்வில் சிக்குண்டு வாழ விரும்ப மாட்டேன். என்னை உன்பால் வருக என்று அழைத்து ஏற்றுக் கொள்வாயாக என்று மணிவாசகர் ஏங்கிப் பாடிப் போற்றிய பதிகம். 


29.  அருள்பத்து :

தம்மை ஆட்கொண்டு அருளிய ஆத்மநாத சுவாமி மேலும் அருள் தந்து வீட்டுப்பேறாம் திருவடியைச் சாரும் ந்pலையைத் தமக்கு அருளவேண்டும் என்று மணிவாசகர் வேண்டும் பதிகம். தன் வேண்டுகோளை ஏற்றதற்கு அறிகுறியாக அதெந்துவே அதாவது என்ன என்று கேட்டு அருள வேண்டும் என்று பாடல்தோறும் அதெந்துவே என்ற சொல்லைப் பயன்படுத்திப் பாடப்பட்ட பதிகம். 


30.  திருக்கழுக்குன்றப் பதிகம்:

மணிவாசகர் திருப்பெருந்துறையிலிருந்து பயணம் மேற்கொண்டு திருக்கழுக்குன்று திருத்தலத்தை அடைகின்றார். அங்கு எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் தானே திருப்பெருந்துறையில் குருவடிவாகக் காட்சி தந்த பெருமான். அத்தகைய காட்சியை மீண்டும் இத்தலத்தில் காட்ட விரும்பி வேண்டினார். அவரின் வேண்டுகோளை ஏற்றுச் சிவபெருமான் மீண்டும் குருவடிவாகக் காட்சி தர, அந்த இன்ப நிலையைப் பெற்ற மணிவாசகர் போற்றிப் பாடிய பதிகம் இது. 


31. கண்டபத்து :

திருக்கழுக்குன்றத்தில் இருந்து புறப்பட்டுத் தி;ல்லைத் திருத்தலத்தை அடைந்த மணிவாசகர், பொன்னம்பலத்தில் இறைவன் ஆடும் நடனத்தைக் கண்டு மகிழ்ந்து பாடிய பதிகம். 


32. பிரார்த்தனைப் பத்து:

தம்மை ஆட்கொண்ட இறைவனை நோக்கித் தங்களை விட்டு நீங்காத வண்ணம் அடியவனை, உம்முடைய திருவருள் வெள்ளத்துள் மூழ்குவித்து அருள்வீராக என்று வேண்டுவதாக அமைந்த பதிகம். 


33.  குழைத்த பத்து :

பண்டைக் கொடுவினை நோய்கள் தம்மைத் தொடர்;ந்து வருத்தும் துன்பத்திற்கு ஆற்றாது வருந்தும் மணிவாசகர், அத்துன்பங்களுக்கு உரிய தன்னுடைய பிழைகளை, இறைவன் கருணைத் திறத்தால் ஏற்று அருள் செய்யும் வண்ணம் குழைந்து வேண்டிப் பாடிய பதிகம். 


34. உயிருண்ணிப் பத்து :

தன்னுடைய அறியாமையாகிய பசு ஞானத்தை இறைவன் உண்டு, சிவ ஞானத்தை அருளுகின்ற நிலையினை வேண்டி மணிவாசகர் இறைவனைப் போற்றிப் பாடிய பதிகம். உயிரை இறைவன் உண்டுவிடுதல் என்பது மீண்டும் பிறப்பிற்கு ஆளாகாமல் திருவடித் தாமரையில் ஆட்கொண்டு அருளும் நிலையாகும். அத்தகைய பேரின்ப நிலையை நினைந்து போற்றிப் பாடிய பதிகம் இது. 


35. அச்சப்பத்து:

அடியவர்கள் கூட்டத்தில் ஒருவனாம் தன்மை அருளிய இறைவனிடத்தில், தான் உலகத்தில் பார்க்கின்ற பொருளில் அச்சத்தை ஏற்படுத்துகின்ற பொருளை மணிவாசகர் பட்டியலிட்டு இவற்றிற்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என்று கூறி, சிவத்தன்மை பெறாதாரைக் கண்டாலே அச்சப் படுவேன் என்று தன் நிலையை உணர்த்திய பதிகம் இது. 


36. திருப்பாண்டிப் பதிகம்:

முடிமன்னனைக் காணின் இறைவனைக் கண்டதாகும் என்பதற்கு ஏற்ப, தமக்குத் திருவருள் தந்த இறைவனைப் பாண்டியனாகக் கண்டு , நெஞ்சம் நெகிழ்ந்து போற்றிய பதிகம். 


37. பிடித்தபத்து :

உலகத்தின் எல்லாத் தொடர்புகளையும் நீக்கி, உன் திருவடிகளையே சிக்கெனப் பிடித்துக் கொண்டேன் என்று மணிவாசகர் இறைவனைப் போற்றிப் பாடும் நிலையில் அமைந்த திருப்பதிகம். பற்றற்றான் பற்றினைப் பற்றுவதற்காகப் போற்றிப் பாடிய பதிகம். 


38.  திருவேசறவு :

பெருங் கருணையாளனாகிய சிவபெருமான், தம் பொருட்டு எளிவந்து மானுடச் சட்டை தாங்கி, ஆட்கொண்டு அருளிய கருணைத் திறத்தை நினைந்து நினைந்து , உள்ளம் குழைந்து மணிவாசகர் இரங்கிப் போற்றும் பதிகம் இது. ஏசறவு என்புது தன்னுடைய எளிய நிலையை எடுத்துக் காட்டுவது. 


39. திருப்புலம்பல் :

மணிவாசகர் தனித்து நின்று வருந்திப் பாடும் பதிகம். இப்பதிகத்தில் இருந்த இடத்தில் இருந்து திருவாரூர், திருப்பெருந்துறை, திருக்குற்றாலம் ஆகிய மூன்று திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவனை நினைந்து, புலம்பிப் பாடிய பதிகம். 


40.  குலாப் பத்து:

தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவனின் திருநடனத்தைக் கண்டு மகிழ்ந்த மணிவாசகர், தன் மகி;ழ்ச்சிக்கு எல்லாம் காரணம் தில்லைக் கூத்தனே என்று ஆனந்த நடனப் பெருமானைப் போற்றிப் பாடிய பதிகம்.  


41.  அற்புதப் பத்து:

அற்புதம் என்பது நிகழாத ஒன்று நிகழ்ந்தால் தோன்றுகின்ற உள்ளக் கிளர்ச்சி. அதிசயம் என்றால் மிகுதி என்பதும், அற்புதம் என்றால் வியப்பு என்று கொள்ளுதலும் உண்டு.  திருவருள் பெறுவதற்குச் சிறிதும் தகுதி இல்லாத தனக்கு இறைவன் ஞானாசிரியனாய் எழுந்தருளி அருள்புரிந்த திறத்தை வியந்து மணிவாசகர் போற்றிப் பாடிய பதிகம். 


42;. சென்னிப்பத்து:

திருப்பெருந்துறையில் ஞானாசிரிய வடிவில் வந்து தன் தலையில் சூட்டிய திருவடித் தாமரைகளை என்றும் நீங்காது நிற்குமாறு வேண்டிப் பாடிய பதிகம். சென்னி  என்பது தலை எனப் பொருள்படும். 


43. திருவார்த்தை :

சிவபெருமான் திருப்பெருந்துறையில் குருவாக எழுந்தருளி, தன்னை ஆட்கொண்ட திறத்தை நினைந்து போற்றி, எனக்கென்று ஒரு தலைவன் சிவனே ஆவான் என்று தன்னுடைய அடிமையை வெளிப்படுத்தி மணிவாசகர் பாடிய பதிகம். திருவார்த்தை என்பது சிவபெருமான் ஒருவனே என்பதை வெளிப்படுத்தும் சொல்லாகும். 


44. எண்ணப்பதிகம்:

மணிவாசகர் தனது உள்ளத்தில் எழுந்த எண்ணங்களை, தம்மை ஆட்கொண்டு அருளிய இறைவனுக்குத் தெரிவிக்கும் முறையில் பாடப்பெற்ற பதிகம். 


45. யாத்திரைப் பத்து:

உலகப் பாசத் தொடர்புகளை விடுத்துப் பேரின்ப வாழ்வாகிய முத்திப் பேற்றினை விரும்பி, சிவபெருமானுடைய மாநகரத்திற்கு அன்புடைய அடியார்களை அழைத்துச் செல்வதைப் போல் அமைந்த பதிகம். 


46.  திருப்படையெழுச்சி:

உலக வாழ்க்கையில் இருக்கும் பொழுது தீவினைகளாகிய மாயப் படைகள் வந்து தாக்கும். அவற்றை எதிர்க்க அடியவர்கள் திருநீறாகிய கவசத்தை அணிந்து, இறைவனின் அருளாகிய வாட்படையை ஏந்தி,  ஞானம் என்னும் பெருங் குதிரையில் அமர்ந்து, அருள் ஞானப் பறை முழங்க ஆன்மாக்களை மணிவாசகர் புறப்படுங்கள் என்று கூறுவதாக அமைந்த பதிகம். 


47. திருவெண்பா:

திருவாசக முற்றோதலில் இப்பதிகத்தை முற்றோதலை ஏற்றிப் போற்றுகிறவர்கள் பாட வேண்டும் என்பதாக வழக்கத்தில் இருக்கின்ற பதிகம். அதாவது நாற்பத்தி ஆறு பதிகங்களையும் தங்கள் இடத்திற்கு வந்து, பாடி அருளிய இறைத் தொண்டர்கள் என்று எண்ணி அவ் அடியவர்களுக்குச் சிறப்புச் செய்வது போலப் பாடுவது ஆகும். இப் பதிகம் மணிவாசகர் தான் பெற்ற சிவப்பேற்றினை ஏனையோரும் பெறவேண்டும் என்பதனை அறிவுறுத்த வெண்பா அமைப்பில் பாடிய பதிகமாகும். 


48. பண்டாய நான்மறை:

இது பதிகத் தொடக்கச் சொல்லால் பெயர் பெற்ற பதிகமாகும். காலத்தால் அறிய முடியாத இறைவனின் வாய்மொழியாகிய நான்கு மறைகளை மணிவாசகர் போற்றிப் பாடிய பதிகம். 


49. திருப்படையாட்சி:

இறைவனின் ஆணைச் சக்கரமான ஆளுமை நடைபெறவில்லை என்றால் உலகத்தில் எந்தச் செயலும் நடைபெறாது. அவன் ஆட்டுவித்தால்தான் பொருள்கள் 





இயங்கும்.  எனவே இறைவனின் திருவருளைக் கூறி. அதனால் நடைபெறும் செயல்களை மணிவாசகர் பட்டியலிட்டுக் காட்டும் பதிகமாகும். 


50.  ஆனந்த மாலை :

  என்றைக்கும் நீங்காத அன்பினைக் கொண்ட சிவனடியார்களுடன் கூடி, இறைவனது பேரின்பத்திலிருந்து விலகாத இன்ப இயல்பினை, ஆனந்த மகிழ்வை, தான் பெற்ற பேரின்பத்தை மணிவாசகர் பாடி மகிழ்ந்த பதிகம். 


51;. அச்சோப் பதிகம் :

திருவாசகத்தின் நிறைவுப் பதிகம். அனைத்திற்கும் மேலாகிய சிவபெருமான், மிகவும் எளியனாகிய தன்பொருட்டு, திருப்பெருந்துறையில் மானுடச் சட்டை தாங்கிக் குருவாக எழுந்தருளி , ஆட்கொண்டு அருளிய திறத்தை நினைந்து நன்றியுடன் போற்றிப் பாடிய பதிகம். 


------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக