சிவஞானபோதம் (மூலமும் எளிய உரையும் ) முனைவர் பழ. முத்தப்பன்


உரையாசிரியர் 

சித்தாந்த செம்மணி முனைவர்

பழ.முத்தப்பன்.

வெளியீடு

ட நடராசன்

மற்றும்

வசந்தகுமார்

உறையூர். திருச்சிராப்பள்ளி

12. 3 . 2017.






  எங்கள் உரை


இவ் வெளியீடு எங்கள் இல்லத்தில் நடைபெறும் திவ்யா வசந்தகுமார் அவர்களின் வளைகாப்பு விழாவை நினைவு கொள்ளும் வண்ணம் வெளியிடப் பெறுகின்றது. 12. 3. 2017 - ல் இராமலிங்க சௌடேசுவரி அம்மன் கோயிலில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எங்கள் நன்றி. 


இவண்,

  டு.நடராசன்.ஆ.உழஅ.டீ.நன.ஆ.phடை

உறையூர்,

9442661010,

மற்றும்,

  N. வசந்தகுமார். டீ.நு





மற்றும் தங்கள் அன்புள்ள,


திருமதி. N. விசாலாட்சி நடராசன்

  சு. இந்திராணி ரத்தினசாமி

  டீ. சிவாகமிசுந்தரி பாலசுந்தரம்

  சு. மேகலா இராஜேந்திரன்,

  ஏ. கோகிலா வாசுதேவன்,

  சு. தினேஷ்பாபு



நாள் - 12- 3 - 2017,

நேரம் - 10. 30 - 12. 00 மணி. 






































பதிப்புரை

சைவ சமயத்தின் இரண்டு கண்களாக விளங்குபவை பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சாத்திரங்களுமாகும். பன்னிரு திருமுறைகளில் அருளாளர்களால் பதிவு செய்யப்பட்ட சைவ சமயத் தத்துவக் கருத்துக்களை கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மெய்கண்டார் பரம்பரையினர் சித்தாந்த தத்துவங்களாகத் தொகுத்து, தத்துவங்களை விளக்கிச் சாத்திர நூல்களாகப் படைத்தனர். பதினான்கு சாத்திர நூல்களில் தலையாயது சிவஞானபோதமாகும். பதினான்கு சாத்திரங்களுக்கும் முழுமையாக உரையெழுதி , சென்னை உமா பதிப்பகத்தின் மூலம் எம்முடைய எளியஉரை 2009 -ல் வெளியிடப் பெற்றது.  இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து , உறையூர் வாகீச பக்தஜனசபை சுத்தசன்மார்க்க சங்கத்தில் அதன் தலைவர், அருமை நண்பர் , படைப்பாளர், நல்ல சிந்தனையாளர், பொதுநலத் தொண்டர் பாசமிகு சு.முருகானந்தம் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கத், திங்கள் தோறும் அமாவாசை அன்று இரவு 6.30 மணியிலிருந்து 8 மணிவரை, சிவஞானபோத பனிரெண்டு சூத்திரங்களுக்கும் விளக்கம் சொல்ல வாய்ப்புக் கிட்டியது. உரையினைக் கேட்க வருகின்ற மெய்யன்பர்கள் பயன் பெறுமாறு பனிரெண்டு சூத்திரங்களுக்கும் எளிய உரையினை  எழுதி , நூலாக வெளியிடலாம் என்ற எண்ணம் அன்பர்களுக்குள் எழுந்தது. 


அந்த எண்ணத்தைத் தலைமையாசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, வாழ்நாள் முழுமையும் ஆன்மீகப் பணிக்குத் தன்னை ;அர்ப்பணித்துக் கொண்ட அருமை நண்பர் எல். நடராசன் அவர்கள் , செயல் படுத்தும் வண்ணம் இவ்வெளியீட்டைத் தம் சொந்தச் செலவில் வெளியிடுகிறார்கள். உறையூர் திருவாதவூரர் திருவாசமுற்றோதல் குழுவின் சார்பாகவும், வாகீச பக்தஜன சபை சுத்த சன்மார்க்க சங்கத்தின் சார்பாகவும் இவ்வெளியீட்டை வெளியிடுகிறார்கள். இவ்வெளியீடு பிறருக்கும் எளிமையாகக் கிடைக்கும் வண்ணம் 12 - 3 - 2017 - ல் நடைபெறுகின்ற தன் மருமகள் திவ்யா வசந்தகுமார் அவர்களின் வளைகாப்பு விழா நினைவாக அளிப்பதற்காகவும்  நூலை வெளியிடுவது மிகவும் சிறப்பிற்கு உரியதாகும். அவர்களின் இப்பணியை உளமாரப் பாராட்டி வாழ்த்துகிறேன். சிவஞானபோத உரை சொல்லுவதும் எழுதுவதும் எம்முடைய செயல் அல்ல.  எம் உள்ளத்தில் இருக்கும் எல்லாம் வல்ல இறைவனின்  திருவருளேயாகும். எனவே எல்லாம் வல்ல இறைவனின் திருவருளுக்கும் , வெளியீட்டாளர் ஆசிரியர் எல். நடராசன் அவர்களுக்கும், இதனை அச்சிட்ட திருமுறைப் பிரிண்டர்ஸ் உரிமையாளருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். 


உறையூர் இவண்,

12.3.2017 பழ. முத்தப்பன்.


கைபேசி - 9443765027.

திருச்சிற்றம்பலம்

சிவஞானபோதம் 

(மூலமும் - எளியஉரையும்)

நூல் பற்றிய குறிப்பு.


ஆசிரியர்   -  ஸ்ரீமெய்கண்டதேவ நாயனார். 

ஊர்      -   தமிழகத்து நடுநாடு திருப்பெண்ணாகடம்

தந்தைபெயர்--   அச்சுதக்களப்பாளர்

இயற்பெயர் --   சுவேதனப்பெருமாள்

காலம்     -   கி.பி. 13- ஆம் நூற்றாண்டு

நூல்அமைப்பு--   உலகப் பொருள்களைச் சைவ சித்தாந்தம் பதி,பசு, பாசம் 

என்று முப்பொருளாகக் கொள்ளும். அம் முப்பொருள் -

களைப் பற்றிய செய்திகளைச் சைவ ஆகமங்களால் 

தேர்ந்து, அத்தேர்ச்சியால் ஐயங்களைத்

தெளிவிப்பதால் சிவஞானபோதம் என்ற பெயர் கொண்டது.

இந்நூல் பொதுஅதிகாரம் என்றும், உண்மை அதிகாரம் 

என்றும் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டது. முதல்

அதிகாரம் பிரமாண இயல், இலக்கண இயல் என்ற 

இரண்டு இயல்களையும், உண்மை அதிகாரம் சாதன

இயல் என்றும், பயன் இயல் என்ற இரண்டு இயல்

களையும் கொண்டதாகும். ஒவ்வொரு இயலும் மூன்று 

சூத்திரங்களைக் கொண்டு நான்கு இயல்களுக்கும் மொத்தம் பனிரெண்டு சூத்திரங்களை இந்நூல் கொண்டது

நூலின் முதலில் மங்கல வாழ்த்து என்ற ஒரு பாடலும், அவையடக்கம் என்ற ஒரு பாடலும் அமைந்துள்ளது.  நூலின் இறுதியில் சிறப்புப் பாயிரமாக ஒரு வெண்பா அமைந்துள்ளது. ஒவ்வொரு சூத்திரத்திற்கும் அதிகரணம் என்ற அமைப்பில் விரிவான பொருள் அமைப்பும் அமைந்து , மேற்கோள், ஏது என்ற இரண்டு பகுதிகள் இடம்பெற்றுச் சூத்திரக் கருத்துகளை விளக்குகின்றன. அதன் பின் உதாரண வெண்பா அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் இந்நூலில் 39அதிகரணங்களும், 80 உதாரணப் பாடல்களும் அமைந்துள்ளன. 









மங்கல வாழ்த்து


கல்லால் நிழன்மனை

வில்லார் அருளிய

பொல்லார் இணைமலர்

நல்லார் புனைவரே. 

பொருள் -

கல்லால மரநிழலின் கீழ் (எழுந்தருளியிருந்து நந்தியம் பெருமானுக்கு) ஐயங்கள் தீர்த்து அருளிய சிவபெருமான் மேலும் அருள் செய்வதற்காக, பொல்லுதல் இல்லாத சுயம்பாகத் தோன்றிய பிள்ளையாருடைய இரண்டு திருவடித் தாமரைகளைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்த மெய்யன்பர்கள் தமது தலைமேல் சூடிக்கொண்டு வணங்குவர். 


சிறப்பு:

இம்மங்கல வாழ்த்து கல், ஆல், நிழல், மலைவு , இல்லார் அருளிய பொல்லார் இணை மலர் நல்லார் புனைவர் ஏ என்று பனிரெண்டு சொற்களால் அமைந்திருப்பது - இந்நூல் பனிரெண்டு சூத்திரங்களைக் கொண்டது என்பதைக் குறிப்பிடுவதாகும். பாடலில் உள்ள இரண்டு வினை முடிபுகள் இரண்டு அதிகாரங்களைக் குறிப்பிடுவதாகும் என்ற சிறப்புக்களை இப்பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது.

சொ.பொ.வி :

கல்லால் - கல்லாலமரம், மலைவு - ஐயம், பொல்லார் - உளியால் செதுக்கப் படாதவர், 


அவையடக்கம் 

தம்மை உணர்ந்து தமையுடைய தன்உணர்வார்

எம்மை உடைமை எமைஇகழார் - தம்மை

உணரார் உணரார் உடங்குஇயைந்து தம்மில்

புணராமை கேளாம் புறன். 

பொருள்-

உடைமைப் பொருளாகிய தம் இயல்பினை ஆசிரியரால், தத்துவ நூல்களால் அறிந்து, தம்மை உடைமைப் பொருளாகக் கொண்ட தலைவனை, உணரும் சிவஞானிகள் எம்மை உடைமைப் பொருளாகக் கொண்டவர்கள். ஆதலால் எம்முடைய குற்றங்களை இகழ்தல் செய்ய மாட்டார்கள். (குணங்களைக் கொண்டு பாராட்டுவர்). தம்முடைய இயல்பினை உணராத அறிவில்லாதவர்கள் தம்மை உடைமையாகக் கொண்ட  தலைவனையும் உணர மாட்டார்கள். மேலும் அவர்கள் அனைவரும் ஒருங்கு கூடிக்கூடித் தங்களுக்குள் முரண்பட்டும் இருப்பார்கள். ஆதலால் அவர்கள் எம்மையும் , இந்நூலையும் புறத்தே கூறும் மொழிகளை யாம் ஒரு பொருளாகக் கொள்ள மாட்டோம். 

சொ.பொ.வி :

தமை உடைய - தம்மை உடைமைப் பொருளாகக் கொண்ட இறைவனை, உடங்கு இயைந்து - தம்முள் ஒன்றுகூடி, புறன் - புறமொழிகளை, 


நூல்

பொது அதிகாரம் - பிரமாண இயல்;

(இது முதல் மூன்று சூத்திரங்களால் பதி,பசு, பாசம் என்ற மூன்று பொருள்களும் என்றும் அழியாத நிலைத்த பொருள்களாம் என்ற தத்துவக் கருத்து விளக்கப்படுகிறது. இச்சூத்திரத்தில் பதியாகிய இறைவன் நிலைத்த பொருள் என்பது வலியுறுத்தப் படுகிறது) (பிரமாணம் - அனுமானம்)


முதல் சூத்திரம் 


அவன்அவள் அதுஎனும் அவைமூ விமைமையில்

தோற்றிய திதியே ஒடுங்கிமலத்து உளதாம்

அந்தம்ஆதி என்மனார் புலவர். 

பொருள்-

அவன் அவள் அது என்று சுட்டிக் கூறப்படுகின்ற தொகுதியாகிய உலகம், தோன்றுதல், இருத்தல், மறைதல் என்ற மூன்று தொழில்களைக் கொண்டமையால், இவ்வுலகம் ஒருவனால் தோற்றுவிக்கப் பட்ட உள்பொருளே ஆகும். அவ்வுலகம் கன்ம மலத்தினால் தான் ஒடுங்குவதற்கு இடமாகிய கடவுளிடத்தில் இருந்து , ஆணவ மலத்தினால் மீண்டும் தோன்றுவது ஆகும். ஆதலால் அந்தமாகிய அழித்தல் தொழிலைச் செய்கின்ற கடவுளே உலகிற்கு முதற்கடவுள் என்று அளவைநூல் உணர்ந்தோர் கூறுவர். 

சொ.பொ.வி :

மூவினைமை - மூன்று தொழில்கள்( தோன்றுதல், இருத்தல், மறைதல்), தோற்றிய திதி - ஒருவரால் தோற்றுவிக்கப் பட்ட உள்பொருள், மலத்து - ஆணவமலம், உளதாம் - மீண்டும் தோன்றும், அந்தம் - தான் அந்தமில்லாது இருந்து பிறவற்றை அழிக்கின்ற கடவுள், 


:முதல் சூத்திரம் - முதல் அதிகரணம்.


மேற்கோள் -

(ஆசிரியர் தான் கூறவந்த பகுதியின் பொருளைச் சுருக்கமாகத் தருவதாகும்) ஈண்டு, உளதாய், ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் , உற்பத்தி ,திதி , நாசம் உடைத்து என்றது. 

பொருள் -

இவ்அதிகரணத்துள் அவன் அவள் அது என்று சுட்டிக்காட்டப் பெற்ற உலகம் , தோன்றல், இருத்தல், அழிதல் என்ற மூன்று தொழில்களை உடையது. 

ஏது -

(கூறவந்த கருத்தை வலியுறுத்தும் பொருட்டுப் பிறர் கூறும் கருத்துக்களை மறுப்பது) தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின். 


பொருள்-

உலகில் காணப்படுகின்ற ஒவ்வொரு பொருளிலும் இம் முத்தொழில்கள் நம்மால் காணப்படுவதால் இந்த உலகம் மூன்று தொழில்களை உடையது என்பது பெறப்படுகிறது. 


உதாரணம் - 1

பூதாதி ஈறும் முதலும் துணையாகப்

பேதாய் திதியாகும் பெற்றிமையின் - ஓதாரோ

ஒன்றுஒன்றில் தோன்றி உளதாய் இறக்கண்டும்

அன்றுஎன்றும் உண்டுஎன்ன ஆய்ந்து. 

பொருள்-

பேதமைத் தன்மை உடைய மடவோனே, ஐம்பூதங்களை முதற் காரணமாக உடைய உலகத்திற்கு நிலைத்தல் தொழிலாகிய இருத்தல் என்பது  - இறுதியும் ( அழிவும்) தோற்றமும் ஆகிய இரண்டையும் தனக்குத் துணைக் காரணமாகக் கொண்டு நிலைத்திருக்கும். ஒவ்வொரு காலங்களில் ஒவ்வொரு இனத்தைச் சார்ந்த பொருள்கள் உலகத்தில் ஒருங்கே தோன்றி, ஒருங்கே இருந்து, ஒருங்கே அழிவதை நாம் கண்ணாரக் காணுகிறோம். அப்படிக் கண்டும் உலகம் ஒரு காலத்தில் தனக்குரிய முடிவை உடையதாகும் என்று ஆராய்ந்து பார்த்து, அறிவுடையோர் கூறமாட்டார்களோ, (கூறுவர்).

சொ.பொ.வி -:

பூதாதி - ஐம்பூதங்கள், நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், பேதாய் - மடைமைத் தன்மை உடையவனே, திதியாகும் - நிலைத்த பொருளாகும், உளதாய இறக்கண்டும் - ஒருகாலத்தில் ஒருஇனப் பொருள்கள் ஒன்றாய்த் தோன்றி, ஒன்றாய் அழிவது. 


முதல் சூத்திரம் - இரண்டாம் அதிகரணம்

மேற்கோள் -

இனி இல்லதற்குத் தோற்றம் இன்மையின், உள்ளதற்குச் செய்வோன் இன்றிச் செய்வினை இன்மையின், ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை என்றது. 

பொருள் - இல்லாத பொருளுக்குத் தோற்றம் இல்லை. உள்பொருளும் செய்வோன் இல்லாமல் அது செய்யப்படுவதில்லை. ஒரு பொருள் ஒடுங்கின இடத்தின் அல்;லது மீண்டும் தோன்றாது.

உதாரணம் - 2. ( இவ்வதிகரணத்தை ஆசிரியர் மூன்று பகுதிகளாக்கி விளக்கம் தருவார். இதில் மூன்று உதாரணப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.)

முதல்பகுதி - முத்தொழில்களைக் கொண்ட உலகம் உள்பொருள் ஆகும்.  இல்லாத பொருளுக்குத் தோற்றம் இல்லை. 


இலயித்த தன்னில்;இல யித்ததுஆம் மலத்தால் 

இலயித்த வாறுஉளதா வேண்டும் - இலயித்தது

அத்திதியில் என்னின் அழியாது அவைஅழிவது

அத்திதியும் ஆதியுமாம் அங்கு. 

பொருள் -

கன்ம மலம் பக்குவம் ஆவதற்கு ஒடுங்கியதாகிய உலகம் - தான் ஒடுங்குவதற்கு நிலைக்களமாக அமைந்த இறைவனிடத்தில் இருந்து , ஆணவ மலம் பக்குவமாவதற்காகப் படைப்புக் காலத்தில் மீளவும் தோன்றும். எப்பொருள் எவ்வாறு ஒடுங்கிற்றோ அப்பொருள் அவ்வாறே ஒடுங்கி மீளவும் தோன்ற வேண்டும்.(என்பது விதி) உலகம் ஒடுங்கியது திதிக் கடவுளாகிய திருமாலிடம் தான் என்றால் அக்கடவுளுக்கு மேல் உள்ள உலகங்கள் அவரில்(திருமால்)  ஒடுங்காது. மேலும் அத்திதிக் கடவுளும் படைப்புக் கடவுளும் தோன்றுவதற்குக் காரணமாகிய அவ்அழித்தல் கடவுளிடத்தில்தான் அவ்விருவரும் அழிவார்கள். 

சொ.பொ.வி -

இலயித்தது - ஒடுங்கிய உலகம், மலம் - ஆணவம், திதி - காத்தல் கடவுள், அவை - காத்தல் கடவுளும், படைத்தல் கடவுளும், ஆதி - படைப்புக் கடவுள். 


இரண்டாம் பகுதி -

மேற்கோள் -

உலகம் செய்வோனை உடைத்து. உள்பொருளுக்குச் செய்வோர் இல்லாமல் செய்யப்பட்ட நிலை உண்மையால் .

பொருள் -

உலகம் முத்தொழில்களை உடையதால், அத் தொழில்களைச் செய்வதற்குச் செய்வோன் வேண்டும். செய்வோன் இல்லாது செய்யப்படும் தொழில் இல்லை. 


உதாரணம் - 3 

வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம்

அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் - வித்தகமாம்

வேட்டுவனாம் அப்புழுப்போல் வேண்டுருவைத் தான்கொடுத்துக்

கூட்டானே மண்போல் குளிர்ந்து. 

பொருள்-

நிலம் குளிர்ந்த காலத்தில், அந்நிலத்தின் கண் விதைக்கப்பட்ட விதையின் முளை அவ்விதையில் இருந்து தோன்றுவது போல, மாயையானது தனக்கு ஆதாரமாய் உள்ள இறைவனது திருவருள் சத்தியினிடத்தில் இருப்பதால் அவரவர் வினைக்கு ஏற்ப, அவ்வவச் செயல்களைத் தோன்றச் செய்யும் வித்தகத் தன்மை உடையதாகும். குளவி தான் எடுத்து வந்த புழுவிற்கு அது விரும்பிய வடிவைக் கொடுப்பது போல, அவரவர்கள் விரும்புகின்ற வினைக்குத் தக்க உருவத்தினை இறைவன் கொடுத்து வினைப் பயனைக் கூட்டுவிக்க மாட்டானோ. (கூட்டுவன்)


சொ.பொ.வி-

வித்து - விதை, மூலம் - முளை, தாரகம் - ஆதாரம், அத்தன்தாள் - ;இறைவனது சத்தி, வித்தகம் - சதுரப்பாடு, (வித்தகத் தன்மை) (இப்பாடல் இறைவனால் சத்தியின் மூலமாக மாயை என்ற முதற்காரணத்தில் இருந்து உலகம் தோற்றுவிக்கப் படுகிறது என்ற கருத்தைத் தருகிறது)


மூன்றவாது பகுதி -

மேற்கோள் -

ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை. 

பொருள்-

உலகம் ஒடுங்கிய கடவுளிடத்தில் இருந்துதான் மீண்டும் தோன்றும். 

உதாரணம் - 4

நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்தில்

தாக்காது நின்றுளத்தில் கண்டிறைவன் -ஆக்காதே

கண்ட நனவுணர்வில் கண்ட கனவுணரக்

கண்டவனில் இற்றின்றாம் கட்டு. 

பொருள் -

இறைவன் கால தத்துவம் போல விகாரப்படாமல் நின்று, உலகத்தைக் கருவிகளால் படைக்காது, கருத்தினால் (சங்கற்பத்தால்) மட்டும் படைத்து, தான் அழியாது உலகத்தை அழித்தலால் இறைவனுக்கு எவ்விதமான பந்தமாகிய பிணிப்பு இல்லை. எதுபோல என்றால் ஒருவன் கற்ற நூலின் கண் உள்ள சொல்லும் பொருளும் மனதில் தோன்றும்பொழுது, அம்மனம் அச்சொல்லிலும் பொருளிலும் கட்டுப்படாதவாறு போன்றதாகும். மேலும் கனவின் கண் கண்டவற்றை நனவில் அறிந்தாலும் கனவு கண்டதில் அவன் கட்டுப்படாத தன்மை போன்றதாகும். 

சொ.பொ.வி -

நோக்காது நோக்கி - காவாது காத்து, நொடித்து - அழித்து, காலத்தில் - முக்கால நிகழ்வில், 


முதல் சூத்திரம் -மூன்றாம் அதிகரணம்

(ஆன்மா இறைவனால் படைக்கப்பட்டு, காக்கப் பட்டு, அழிக்கப் படுவதால் அத்தகைய தொழிலைச் செய்யும் கடவுளே முதற்கடவுள் என்பதைக் கூறுகிறது)

மேற்கோள் -

இனிச் சங்காரமே முதல் என்றது. 

பொருள் - 

சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே உலகிற்கு முதற் கடவுள். 

ஏது -

சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர்வு இன்றி நின்ற சங்காரத்தின் வழி அல்லது சுதந்திரமின்றி நிற்றலால். 

பொருள் -

சுட்டி அறியப்படும் உலகம் சுட்டி அறியமுடியாத சிவபெருமானின் வசப்பட்டு, தோன்றி நின்று அழியும். எனவே சங்கார காரணன் உலகிற்கு முதற் கடவுள் ஆவான். 


உதாரணம் - 5


ஒன்றலா ஒன்றால் உளதாகி நின்றவாறு

ஒன்றலா ஒன்றில்அவை ஈறாதல் - ஒன்றலா

ஈறே முதல்அதனின் ஈறலா ஒன்றுபல

வாறே தொழும்பாகும் அங்கு. 

பொருள் -

அறிவுடைய உலகத்து உயிர்கள் எல்லாம் உருவம், அருவம் ஒன்றும் இல்லாத ஒப்பற்ற பரம்பொருளால் தோற்றுவிக்கப் பட்டுக் காக்கப் படுவது போல, அறிவற்ற அறிவுடைய பொருள்களில்  அவை ஒன்றும் அல்லாத  பரம்பொருளால் அவ்விரு பொருள்களும் அழிவதால் , அந்த அழித்தற் கடவுளே முதற் கடவுள் ஆவார். பரம்பொருளைப் போல அழிவின்றி நிற்கின்ற உயிர்க் கூட்டங்கள் முத்திப் பேற்றின்கண் அப்பரம்பொருளுக்கு அடிமையாகும். 

சொ.பொ.வி -

ஒன்றலா - உருவம் அருவமாகிய ஒன்றுஇல்லாத , அவை - உயிர்க்கூட்டங்கள், தொழும்பு - அடிமை. 


இரண்டாம் சூத்திரம் 

 (இச்சூத்திரத்தில் பாசமாகிய வினை உண்டு என்பது வலியுறுத்தப்படுகிறது)


அவையே தானே யாய்இரு வினையிற்

போக்கு வரவு புரிய ஆணையின்

நீக்க மின்றி நிற்கும் அன்றே. 

பொருள் -

இறைவன் உயிர்களோடு உயிராய்க் கலந்திருப்பதால் ஒன்றாயும், அவன் வேறு உயிர் வேறு என்ற பொருள் தன்மையால் உயிர்களிலிருந்து வேறாயும், உயிருக்கு உயிராகிய தன்மையால் அவ்வுயிர்களோடு உடனாகியும், தனது சத்தியாகிய ஆணையால் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளால் உயிர்கள் இறக்குமாறும் பிறக்குமாறும் செய்து, அதனைச் செய்கின்ற சத்தியிலிருந்து நீக்கமின்றித் தொன்று தொட்டு நிற்பான். 

சொ.பொ.வி -

அவையே - உயிர்களோடு ஒன்றாய், தானேயாய் - தான் தனிப்பொருளாய், இருவினை - நல்வினை தீவினை, போக்குவரவு - இறப்பு பிறப்பு , ஆணை - இறைவனின் சத்தி, 


இரண்டாம் சூத்திரம் - முதல் அதிகரணம்.

(இது இறைவன் உயிர்களோடு ஒன்றாய் இருப்பதை உணரத்துகிறது)

மேற்கோள் -

ஈண்டு இவ்வான்மாக்கள் பலவும் முதல்வன் தானேயாய் நிற்கும் என்றவாறு. 

பொருள் -

இறைவன் ஒவ்வொரு உயிரிடத்தும் கலந்து நிற்பதால் உயிர்களே ஆகித் , தான் தனிப்பொருளாய் இருப்பதால் வேறுமாகி, உடனாகி நிற்பதால் உயிர்கள் பலவுமாகி  நிற்கின்றான். 


ஏது -

அத்துவிதம் என்ற சொல்லாலே ஏகம் என்னில் ஏகம் என்று சுட்டுவது உண்மையின், அத்துவிதம் என்ற சொல்லே அந்நிய நாத்திகை உணர்த்துமாறு. 

பொருள் -

அத்துவிதம் என்ற சொல்லிற்குச் சித்தாந்தம் இரண்டற்றது என்று பொருள் கொள்ளும். ஆனால் பிறர் அச்சொல் ஏகம் என்ற பொருளைத் தருகிறது என்பார்கள். அப்படியானால் ஏகம் என்ற சொல்லைச் சொல்லுகின்ற பொழுது அத்துவிதம் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாமே . அவ்வாறு இல்லாது அந்நியநாத்தி என்ற சொல்லால் வேதத்தில் குறிக்கப் பெற்று இறைவன் உடனாய் உள்ளான் என்று பொருள் பெறுவதால் இறைவன் உயிர்களிடத்தில் இரண்டற்ற நிலையில் இருக்கின்றான் என்பது பெறப்படுகிறது. 


உதாரணம் - 1

கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டுள்ளம் இட்டதொரு பேரழைக்க என்என்றாங்கு - ஒட்டி

அவன்உளம்ஆ கில்லான் உளமவனா மாட்டாது

அவன்உளமாய் அல்லனுமாம் அங்கு.

பொருள் -

உயிரானது நரம்பு முதலியவற்றால் கட்டப்பெற்ற உடம்பினையும், ஐம்பொறி முதலாகிய கருவிகளையும் கொண்டு விளங்குகிறது. இத்தகைய உடம்பை அதற்கு இட்ட பெயரால் அழைக்கின்ற பொழுது உடம்போடு உயிரும் உடன் வந்து ஒன்றுபோல் நின்று ஏன் என்று கேட்கிறது. அதுபோல இறைவன் உயிர்களோடு வேறாகாது கலந்திருக்கிறான். உயிரோடு ஒட்டி நின்றாலும் இறைவன் உயிராக மாட்டான். உயிரும் இறைவன் ஆகாது, அதே நேரத்தில் இறைவன் உயிராகியும் , உயிர் அற்றவனுமாயும் இருப்பான். 

சொ.பொ.வி -

(இப்பாடல் உயிரும் உடம்புமாகிய இருபொருளும் ஒருபொருளாய்க் காணப்படுவது போல இறைவன் உயிரோடு கலந்து ஒன்றாய் நிற்கின்றான் என்பதை உணர்த்துகிறது. ) கரணம் - கருவி,  உள்ளம் - உயிர், அவன் - இறைவன். 


உதாரணம் - 2

ஒன்றென்றது ஒன்றேகாண் ஒன்றே பதிபசுவாம்

ஒன்றென்ற நீபாசத் தோடுளைகாண் - ஒன்றின்றால்

அக்கரங்கள் இன்றாம் அகர உயிரின்றேல்

இக்கிரமத்து என்னும் இருக்கு.

பொருள்-

இருக்குவேதம் ஒன்று என்று  கூறுவதற்குப் பதிப்பொருள் ஒன்றே இரண்டில்லை என்பதாம். பதிப்பொருளை ஒன்று என்று உணருகின்ற நீ , அப் பதியின் வேறாகிய பசு ஆவாய்.(பொருளால் இறைவன் வேறு நீ வேறு) நீ மலங்களோடு கட்டுண்டு இருக்கின்றாய். இதனை நீ அறிய வேண்டும். அகரம் என்ற உயிர் எழுத்து இல்லை என்றால் பிற எழுத்துக்கள் இல்லை என்று சொல்லுமாப்போல் , இறைவன் இல்லையாயின் ஒருபொருளும் இல்லையென்று வேதங்கள் கூறுகின்றன. 

சொ.பொ.வி -

(இப்பாடல் இறைவன் வேறு , ஆன்மா வேறு என்பதை அகரம் வேறு மற்ற எழுத்துக்கள் வேறு என்ற உவமை மூலம் குறிப்பிடுகிறது) பதி - இறைவன், பசு - உயிர், உளைகாண் - கட்டுண்டு இருக்கின்றாய், அக்கரங்கள் - எழுத்துக்கள், அகரஉயிர் - அகர எழுத்து, இக்கிரமத்து - இதுபோல  


உதாரணம் - 3

பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்

எண்ணும் சுவையும்போல் எங்குமாம் - அண்ணல்தாள்

அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்றென்னாது

அத்துவிதம் என்றறையும் ஆங்கு.

பொருள் -

பண்ணும் இசையும் போலவும், பழமும் அதன் சுவையும் போலவும், எல்லா இடத்தும் நிறைந்திருக்கும் இறைவன் திருவருள், உயிர்கள் அனைத்திலும் வேற்றுமையின்றி நிற்கிறது. எனவேதான் வேதங்கள் ஒன்று என்று கூறாமல் அத்துவிதம் என்ற சொல்லால் கூறுகின்றன. 

சொ.பொ.வி -

(இப்பாடல் இறைவன் உயிர்களோடு உடனாய் நிற்கிறான் என்பதைப் பண்ணும் இசையும், பழமும் சுவையும் என்ற உதாரணங்களால் காட்டுகிறது)

அண்ணல்தாள் - இறைவனின் திருவருள், 

உதாரணம் - 4

அரக்கொடு சேர்த்தி அணைத்தஅக் கல்போல்

உருக்கி உடங்கியைந்து நின்று - பிரிப்பின்றித்

தானே உலகாம் தமியேன் உளம்புகுதல்

யானே உலகென்பன் இன்று. 

பொருள் - 

அரக்கை உருக்கி அதனுடன் கல்பொடியைச் சேர்த்துக் கட்டளைக்கல் (சாணைக்கல்) உருவாக்கப்படும். அப்பொழுது கல்பொடி அரக்கோடு கூடி நீக்கமின்றி நிற்கும். அதுபோல முதல்வன் உயிரோடு நீக்கமின்றி உடனாய் நிற்பான். அதே நேரத்தில் அரக்கு வேறு கல்பொடி வேறு, அதுபோல இறைவன் வேறு உலகம் வேறு. அரக்கு முழுவதும் கற்பொடி சேர்ந்து தெரிவதால் உடனாய் நிற்பது தெரிகிறது. அதுபோலவே இறைவன் உயிர்களோடு உடனாய் நிற்கின்றான். அத்தகைய இறைவன்தான் உலகம் ஆவான். மேலும் பாசங்களிலிருந்து நீங்கித் தனியே நிற்கும் காலத்தில் (முத்திக் காலத்தில்) என் உயிரின்கண் திகழ்ந்து வேற்றுமையின்றி விளங்குவான். ஆதலால் உலகமாகிய அவன் முத்தியில் என் உயிரில் கலப்பதால் யானே உலகெலாம் ஆயினேன் என்று கூறும்நிலை ஆயிற்று. 


சொ.பொ.வி :

(இப்பாடல் இறைவன் உயிர்களோடு ஒன்றாய், வேறாய், உடனாய் இருக்கின்ற மூன்று நிலைகளுக்கும் சாணைக்கல் உவமை மூலம் விளக்கம் தருகிறது) கல் - சாணைக்கல், இன்று - முத்திக்காலம். 


இரண்டாம் சூத்திரம் - இரண்டாம் அதிகரணம். 

(இது உயிர்களுக்கு வினை உண்டு என்பதை உணர்த்துவதாகும்)

மேற்கோள் -

இனி இவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வரும். 

பொருள் -

உயிர்களுக்கு முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயன் இப்பொழுது இறைவனுடைய சத்தியால் வரும் என்பதாகும். 


ஏது -

ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவலிட்டாங்கு அவை அவனது ஆக்கினை ஆகலான். 

பொருள் -

ஒரு நகரத்தைக் காக்கும் அரசன், பாசறையில் காவல் காக்கும் தண்டத் தொழிலை ஒரு அதிகாரியிடம் ஒப்படைத்துச் செய்வது போல இறைவன், தனது சத்தியைக் கொண்டு உயிரின் இருவினையை நடத்துவான். 


உதாரணம் - 5

உள்ளதே தோற்ற உயிரணையும் அவ்வுடலின்

உள்ளதாம் முற்செய்வினை உள்ளடைவே - வள்ளலவன்

செய்பவர் செய்திப் பயன்விளைக்கும்செய்யேபோல்

செய்வன் செயலணையா சென்று.

பொருள் -

முற்பிறவியில் செய்த புண்ணிய பாவமாகிய சஞ்சித வினையே உடம்பினைத் தோற்றுவிக்க, அவ்வுடம்பில் உயிரானது பொருந்தி, புண்ணிய பாவத்தின் பயனாகிய இன்ப துன்பங்களைப் பிராரத்த வினையாக அனுபவிக்கும் . முன்செய்த வினையை அனுபவிக்கும் பொழுது விருப்பு, வெறுப்புக்களால் உயிருக்கு மறுபிறவிக்குரிய ஆகாமிய வினை உண்டாகும். வயலை உழவு செய்பவர் செய்யும் தொழிலுக்கு ஏற்பப் பயன்தரும் வயலைப் போல, இறைவன் உயிர்களின் வினைப்பயன்களைத் தன் சத்தியால் உயிர்களுக்கு ஊட்டுவான். வினை தானே வந்து பொருந்தமாட்டாது. 


சொ.பொ.வி -

சஞ்சிதவினை - ஊழ்வினை, பிராரத்தவினை - இப்பிறவியில் அனுபவிக்கும் வினை, ஆகாமிய வினை - மறுபிறவியில் அனுபவிக்கப் போகும் வினை, வள்ளல் -இறைவன், செய் - நிலம். 


உதாரணம் - 6

அவ்வினையைச் செய்வதனில் அவ்வினைஞர் தாம்சென்றங்கு

அவ்வினையைக் காந்த பசாசம்போல் - அவ்வினையைப்

பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல்

ஆர்தாம் அறிந்தணைப்பார் ஆங்கு. 

பொருள் -

இரும்பினை நேராகப் பிடிக்கும் பொழுது அதனை இழுத்துக் கொள்ளும் காந்தம் போல, அவரவர்கள் செய்த ஊழ்வினையின் பயனை முறைமை மாறிவிடாமல் இறைவன் கூட்டி , அனுபவிக்கச் செய்கின்ற பொழுது, உயிர்கள் அந்தந்த வினைகளை அனுபவிப்பதற்குரிய உடம்பினைப் பெற்று வினைகளின் பயனை அனுபவிக்கும். இறைவன் கூட்டவில்லை என்றால் சிற்றறிவு உடைய உயிர்க்கு வினைப்பயனை வேறு யார்தான் ஊட்டுவர்.

சொ.பொ.வி -

பசாசம் - இரும்பு, பேராமல் - முறை மாறாமல், பிரான் - ;இறைவன். 


உதாரணம் - 7

நெல்லிற்கு உமியும் நிகழ்செம்பினில் களிம்பும்

சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி

மலகன்மம் அன்றுளவாம் வள்ளலார் பொன்வாள்

அலர்சோகம் செய்கமலத் தாம்

பொருள் -

நெல்லிடத்து உமியும், செம்பிடத்துக் களிம்பும் ஆராய்ந்தால் இடையே வந்தன அல்ல. தொன்றுதொட்டே வந்தனவாம். அதுபோல மாயா மலமும் ஆணவ மலமும், கன்ம மலமும் உயிர்களுக்கு அநாதியாக உள்ளனவாம். இந்த மும்மலங்களும் சூரியனின் ஒளியால் தாமரை மலர் மலர்தலும் வாடுதலும் போல இறைவனாலேயே தொழில் படுகின்றன. 

சொ.பொ.வி -

(இப்பாடல் மும்மலங்களும் அநாதி என்று கூறுகின்றது) தொன்மை - அநாதி, வல்லி - மாயாமலம், மலம் - ஆணவமலம், கன்மம் - கன்மமலம், பொன்வாள் - சூரியன், அலர் - மலர்தல், சோகம் - கூம்புதல். 

 

  இரண்டாம் சூத்திரம் - மூன்றாம் அதிகரணம்

(இது ஆன்மாக்கள் மாறி மாறிப் பிறந்துவரும் என்பதை உணர்த்துகிறது)

மேற்கோள் -

இனி, இவ்வான்மாக்கள் மாறிப்பிறந்து வரும் என்றது. 

பொருள் -

இருவினைப் பயன்களை அனுபவிப்பதற்கு உரிய உயிர்கள் இறந்து மீளப் பிறந்து முறையாக வரும். 

ஏது -

தோற்றமும் ஈறும் உள்ளதற்கு அல்லது உளதாதல் இன்மையான்.

பொருள்-

தோற்றமாகிய உற்பத்தியும், ஈறாகிய நாசமும் தொடரச்சியாக உள்ள பொருளுக்கு மட்டும் உரியதாகும். தொடர்ச்சி இல்லாத பொருளுக்கு உரியது ஆகாது. எனவே பல பிறவிகள் தோறும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற உயிருக்கு இறப்பும் பிறப்பும் உண்டு. 


உதாரணம் - 8

கண்ட நனவைக் கனவுணர்வில் தான்மறந்து

விண்படர்ந்தத் தூடு வினையினால் - கண்செவிகெட்டு

உள்ளதே தோற்ற உளம்அணுவாய்ச் சென்றுமனம்

தள்ள விழும்கருவில் தான். 

பொருள் -

கண், காது முதலிய உறுப்புகளைக் கொண்ட இவ்வுடம்பு அழிந்த விடத்து, படைப்புக் காலந்தொட்டு சங்கார காலம் வரை நிலைபெற்று இருப்பதாகிய சூட்சும உடம்பு (கண்ணால் காணமுடியாத உடம்பு) தான் தேவலோகத்திற்குரிய பூதசார உடம்பாகவும், நரகத்திற்குரிய யாதனா உடம்பாகவும், மண்ணலகத்திற்குரிய பூத உடம்பாகவும் வினைக்கு ஏற்றவாறு காரியப்பட்டுத் தோன்றும். நனவில் கண்டவற்றைக் கனாக்காணும் காலத்தில், மறந்து அறிவு வேறுபட்டாற் போல, முன்பு சூலதேகம் என்றும் (காண்பதற்குரிய வடிவம்), சூக்கும தேகம் என்றும் பூதசார தேகம் என்றும் அனுபவித்தவற்றை மறந்து , மீண்டும் புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப சூக்கும தேக வடிவத்தில் கருவறையில் சென்று பிறக்கும். 

சொ.பொ.வி :

(இப்பாடல் உயிர்கள் மாறிமாறிப் பிறந்து வரும் என்பதை விக்குவதாகும்.) சூல உடம்பு - கண்ணால் காண்பதற்குரிய உடம்பு, ;சூட்சும உடம்பு - காணமுடியாத உடம்பு, பூதசார உடம்பு - நிலம் முதலாகிய ஐம்பூதங்களால் ஆகிய உடம்புவிண்படர்ந்த - சொர்க்கம் நரகத்தில் சென்றவழி, ஊடு வினையினால்- உடம்பினால், கரு - கருவறை. 


உதாரணம் - 9

அரவுதன் தோலுரிவும்  அக்கனவும் வேறு

பரகாயம் போய்வரும்அப் பண்பும் - பரவில்

குடாகாய ஆகாயக் கூத்தாட்டாம் என்பது

அடாதுஉள்ளம் போமாறு அது. 


பொருள் -

உயிர்களின் தூல உடம்பு கெட்டவிடத்து , சூட்சும உடம்பின் கண் நின்று, முன்பாடலில் கூறியபடி வினைக்கு ஏற்ப உடம்புகளைப் பெறும். அவ்வாறு பெறுவதற்குப் பாம்பு பழைய தோலை உரித்துப் புதிய தோலைப் பெறுவதும், உயிர் நனவு உடலை நீங்கிக் கனவுடலைப் பெறுவதும், யோகிகள் தங்கள் உடலை விட்டு நீங்கி வேறு உடம்பில் புகுவதும் உவமைகளாகச் சைவசித்தாந்தத்தில் கூறப் பெறுகிறது. இவ்வுவமைகளை விட்டுவிட்டுக் குடத்தில் உள்ள ஆகாயம் குடம் உடைந்த பிறகு ஆகாயத்தோடு கூடுவது போல, தூல உடம்பு நீங்கியவிடத்து உயிர் கடவுளோடு கூடுகிறது என்று பிற மதத்தார் கூறுவது பொருந்தாது. இந்த உவமை சூட்சும உடம்பை விட்டு உயிர் முத்தி அடைவதற்குரிய உவமையாகும். மறு பிறப்பிற்கு உவமை ஆகாது. 

சொ.பொ.வி :

(உயிர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்பதை இப்பாடல் உவமைகளால் விளக்குகின்றது) அரவு - பாம்பு, பரகாயம் - பிற உடம்புகள். 


இரண்டாம் சூத்திரம் -நான்காவது அதிகரணம் 

(இது, இறைவன் எல்லாப் பொருள்களிடத்திலும் சத்தியும் சிவமுமாய்க் கலந்து நிற்கிறான் என்பதை உணர்த்துகிறது)

மேற்கோள் -

இனி நீக்கமின்றி நிற்குமன்றே என்றது. 

பொருள் -

இறைவன் தன் திருவருளாகிய சத்தியோடு பிரிப்பின்றி நிற்பான். 

ஏது -

அவன் ஏகம் அநேகம் இரண்டும் இன்றிச் சருவ வியாபியாய் நிற்றலான்.

பொருள் -

இறைவன் ஒன்று வேறு என்று எண்ணம்படி இல்லாது எல்லா இடங்களிலும் வியாபித்து,(கலந்து) நிற்பதால் , தன் சத்தியைப் பிரிப்பின்றி நிற்பன். 

உதாரணம் - 10

எங்குமுளன் என்றளவை ஒன்றன்று இரண்டென்னில்

எங்கும் உளனன்று எவற்றெவனும்  - அங்கண்

அவையவன் அன்றில்லை பொன்னொளிபோல் ஈசன்

அவையுடைமை ஆளாம்நாம் அங்கு. 

பொருள்-

இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறான் என்று கூறப்பட்டதால் இறைவன் தனிஒரு பொருளாக மாட்டான். மேலும் இறைவன் இருபொருளாய் இருக்கிறான்(வேறாய் இருப்பவன் )  என்று கூறினால் தன்னில் வேற்றுமை உடையவன் பிற பொருள்களில் வியாபித்து இருப்பது இயலாது, மேலும் எல்லா இடத்திலும் இறைவன் வியாபித்து இருப்பவன் அல்லன் என்றால் அவ்வாறு கூறமுடியாது. ஏனென்றால் இறைவன் இல்லாமல் எந்தப் பொருளும் தனித்து இருக்க இயலாது. எனவே இறைவன் சூரியனும் அதன் ஒளியும் போலச் சிவனும் சத்தியுமாய் இணைந்து எல்லாப் பொருளிலும் நிற்பான். பாசங்கள் அனைத்தும் அவனுக்கு உடைமையாகும். உயிர்கள் அனைத்தும் அவனுக்கு அடிமையாகும். 

சொ.பொ.வி -

(இப்பாடல் இறைவன் சத்தியுடன் எல்லா இடங்களிலும் வியாபித்து (நிறைந்து) நிற்பான் என்பதனைக் கூறுகிறது.) இரண்டு என்னில் - இறைவனும் சத்தியும் வேறுபட்டு இருபொருள் என்றால், எவற்றுஎவனும் - எவ்விடத்திலும் உள்ள எப்பொருளும், அவன்அன்றி இல்லை - இறைவன் இல்லாது இல்லை. 


________________________________________

மூன்றாம் சூத்திரம் 


(இச்சூத்திரம் ஆன்மா உள்பொருள் (என்றும் அழியாதது) என்பதை நிறுவுகின்ற சூத்திரமாகும்.)

உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்

ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் - கண்படில்

உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்

மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா. 

பொருள் -

உயிர் என்ற ஒன்று இல்லை என்று சிலர் கூறுவர். அது தவறு, அவ்வாறு கூறுவதற்கு அறிவு வேண்டும் அல்லவா? அந்த அறிவே உயிராகும். சிலர் உடலே உயிராகும் என்று கூறுவர். அது தவறு. உயிர் உடம்பிற்கு வேறாக இருப்பதால் உடம்பு உயிர் ஆகாது. ஐம்புலன்கள் உயிர் என்று கூறுவர். அதுவும் தவறு. ஐந்து புலன்களைக் கருவியாகக் கொண்டு ஒரு பொருளை உயிர் அறியுமே அன்றி, புலன்களாகிய கருவிகள் பொருளைத் தானே அறியாது. சிலர் கனவாகிய சூட்சும உடம்பே உயிர் என்பர். அதுவும் தவறு. ஏனென்றால் கனவில் அறிந்த பொருள் நனவில் அறிகின்ற பொருளுக்கு வேறாக இருப்பதால், அறிவு வேறு பட்ட உயிர் இல்லை. பிராண வாயுவே உயிர் என்பர் சிலர். அதுவும் தவறு. உறங்கும் பொழுது பிராணவாயு இயங்கினாலும் உடலுக்கு இன்ப துன்ப நுகர்வு இல்லை.(உண்ணுதல் போன்ற செயல்) இறைவனே உயிர் என்று கூறுவாரும் உண்டு. அதுவும் தவறு. ஏனென்றால் இறைவன் பேரறிவு உடையவன். உயிரோ உணர்த்த உணர்கின்ற குறை அறிவு உடையது. மேலும் மாயையினால் கட்டப்பட்ட உடம்பின் தத்துவக் கூட்டமே உயிர் என்று கூறுவாரும் உண்டு. அதுவும் தவறு. ஏனென்றால் ஒவ்வொரு தத்துவத்திற்கும் தனித்தனிப் பெயர் உள்ளதே தவிர, உயிர் என்ற ஒட்டு மொத்தப் பெயர் இல்லை. ஆதலால் இவற்றுக்கெல்லாம் வேறாகிய உயிர் தனிப்பொருள் என்பது பெறப்படும். அத்தகைய உயிர் மாயையால் உண்டாகிய உடம்பில் உள்ளது. 

சொ.பொ.வி :

(இச்சூத்திரம் உயிரைப் பற்றிய பிற சமயத்தாரின் கருத்துகளைக் கூறி ஏழு நிலையில் மறுத்து, உயிர் என்பது தனிப்பொருள் என்றும், அது உடம்பில் உள்ளது என்றும் வலியுறுத்துகிறது)  உளது - இறுதிச் சொல்லாகிய ஆன்மா உளது என்று முடித்துக் கொள்ள வேண்டும். கண்படில் - தூக்கத்தில், உணர்த்த உணர்தல் - உயிர் எதனையும் பிறர் உணர்த்தவதால் தான் அறியும். தனு - உடம்பு, மாயா - மாயையாகிய மலம். 

  

மூன்றாம் சூத்திரம் முதல் அதிகரணம்

(ஆன்மா என்பதே இல்லை என்பாரை மறுக்கிறது)

மேற்கோள் -

ஈண்டு இலது என்றலின் ஆன்மா உளது. 

பொருள் -

ஆன்மா என ஒன்று இல்லை என்று கூறும் சூன்யவாதிகளுக்கு இது ஆன்மா அல்ல, இது ஆன்மா அல்ல என்று சொல்லிக்கொண்டே செல்லுகின்ற அறிவு இருப்பதால், அந்த அறிவே ஆன்மாவாகும். 

ஏது -

ஏழு அதிகரணங்களுக்கும் மேற்கோளே ஏதுவாக அமையும். 


உதாரணம் - 1

அன்றன்று எனநின்று அனைத்தும்விட்டு அஞ்செழுத்தாய்

நின்றொன்று உளததுவே நீஅனைத்தும் - நின்றின்று

தர்ப்பணம்போல் காட்டலால் சார்மாயை நீஅல்லை

தற்பரமும் அல்லை தனி. 

பொருள் -

உடல், பொறி ஆகியவற்றில் நின்று இது நானன்று இது நானன்று என்று விலக்கிக் கொண்டே வரும் இடத்து, அகர, உகர, மகர, விந்து, நாதம் என்னும் சூக்கும பஞ்சாட்சர வடிவமாய் அறிகின்ற ஓர் அறிவு நிலைபெற்று நிற்கிறது. அந்த அறிவுதான் பசு எனப்படும் நீயாவாய். நிறம் முதலியவை உன்னோடு கூடிநின்று, கண்ணுக்குக் கண்ணாடி போல உனது அறிவை விளக்குகிறது. நின்னால் சாரப்பட்ட மாயை அறிவற்ற பொருளாதலால் அதனைக்கொண்டு அறிகின்ற நீ , மாயை ஆக மாட்டாய். அதே நேரத்தில் அம்மாயைக்கு அப்பாற்பட்ட சிவமும் ஆகாய். எனவே மாயைக்கும் சிவத்திற்கும் வேறானவன் நீ. 

சொ.பொ.வி :

தர்ப்பணம் - கண்ணாடி, தற்பரம் - சிவம். 

மூன்றாம் சூத்திரம் - இரண்டாம் அதிகரணம்.

(உடலே ஆன்மா என்பாரை மறுத்து உயிர்வேறு உடல்வேறு என்று குறிப்பிடுகிறது)

மேற்கோள் -

இனி எனது உடல் என்றலின் ஆன்மா உளது என்றது. 

பொருள் -

எனது ஊர், எனது வீடு என்றாற் போல எனதுடல் என்று கூறுவதால் உடல் வேறு, எனது என்ற உயிர் வேறு என்றாகி, எனது என்பது ஆன்மாவைக் குறிக்கிறது. 


உதாரணம் - 2

எனதென்ற மாட்டின் எனதலாது என்னாது

உனதலாது உன்கைகால் யாக்கை - எனதென்றும்

என்அறிவது என்றும் உரைத்துநீ நிற்றிகாண்

உன்னில்அவை வேறாம் உணர். 

பொருள் -

புறப்பொருளாக உள்ள வீடு, நிலம் போன்றவற்றை என்னுடையது என்றுதான் கூறுகின்றோம், அவை நம்மிடத்திலிருந்து வேறுபட்டவை ஆகும். பொருளால் வேறுபட்ட அவற்றை நமக்குரிய பொருளாக்கி, எனது வீடு எனது நிலம் என்று கூறுகின்றோம். மேலும் உயிருக்கு உரியது அல்லாத உடம்புக்கு உரியதான கை கால்களையும் என்னுடையது என்று உடமைப் பொருளாகக் கொண்டு என்கை என்கால் என்உடம்பு என்று கூறிக்கொண்டு வருகின்றோம். எவ்வாறு வீடு, நிலம், கை, கால், உடம்பு ஆகியவை பொருள்களால் , உறுப்புகளால் வேறுபட்டு நின்றாலும் என் என்பதோடு சேர்த்துச் சொல்வதால் என் என்பது ஆன்மாவைக் குறித்து, அவற்றிலிருந்து பொருள் அடிப்படையில் வேறுபட்டு இருப்பதையும் உணரலாம். 

சொ.பொ.வி -

எனது என்ற மாட்டின் - எனது வீடு என்று தற்கிழமையாகக் கூறுவது, உன்னில்அவை - ஆன்மாவில் உள்ள கை, கால், யாக்கை. 


மூன்றாம் சூத்திரம் - மூன்றாம் அதிகரணம்

(ஐம்புலன்களே ஆன்மா என்பாரை மறுக்கிறது)

மேற்கோள் -

இனி ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது என்றது.

பொருள் -

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து இந்திரியங்கள் - ஓசை, ஊறு, சுவை, ஒளி, நாற்றம் என்ற ஐந்து புலன்களையும் ஒன்று அறிந்ததை ஒன்று அறியாது. மெய் முதலிய கருவிகள் ஐந்தினாலும் ஐந்து பயன்களையும் ஒருசேர அறிகின்ற ஒன்று உளது. அதுவே ஆன்மாவாகும். 


உதாரணம் - 3

ஒன்றறிந்தது ஒன்றறியா தாகி உடல்மன்னி

அன்றும் புலனாயஅவ் அஞ்செழுத்தை - ஒன்றறிதல்

உள்ளதே ஆகில் அதுநீ தனித்தனிகண்டு

உள்ளல்அவை ஒன்றல்லை ஓர். 

பொருள்-

உடலின்கண் இருக்கும் கருவிகளாகிய ஐம்பொறிகளில் ஒன்று ஒரு பொருளை அறியுமே அன்றி, மற்றொரு புலனின் பொருளை அறியாது. (கண் பார்க்குமே தவிரக் காதுக்குரிய புலனாகிய ஓசையைக் கேட்காது) இந்த ஐந்து கருவிகளின் தொழிற்பாட்டை ஒருசேர உணர்கின்ற ஒருபொருள் இருக்குமானால் அதுவே நீயாகிய ஆன்மா. அப்புலன்கள் ஆன்மாவிலிருந்து வேறுபட்டவை ஆகும். இந்திரியங்களாகிய கருவிகளால் புலன்களாகிய பொருளை அனுபவிக்கின்ற ஆன்மா ஐம்புலன்களில் ஒன்று ஆகாது. இதனை ஆராய்ந்து தெரிந்து கொள்வாயாக.

சொ.பொ.வி -

உடல் மன்னி - உடலில் உள்ள, ஒன்று - ஒருபுலன், அஞ்செழுத்தை - அஞ்செழுத்தால் ஆகிய பொறியின் தொழிற்பாடு, 


மூன்றாம் சூத்திரம் - நான்காம் அதிகரணம்

(கனவின் கண் இயங்கும் சூட்சும தேகம் ஆன்மா அன்று என்று மறுப்பது)

மேற்கோள் -

இனி ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது என்றது. 

பொருள் -

மெய் முதலாகிய ஐந்து கருவிகளும் தொழிற்படாது ஒடுங்கின கனவில், கனவு காணப்பெற்றோம் என்றும் கனவு காணப் பெறவில்லை என்றும், நனவில் அறிகின்ற அறிவு உண்டு. அதுவே ஆன்மாவாகும். 


உதாரணம் - 4

அவ்வுடலின் நின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாம்கிடப்பச்

செவ்விதின் அவ்வுடலில் சென்றடங்கி - அவ்வுடலின்

வேறொன்று கொண்டு விளையாடி மீண்டதனை

மாறல்உடல் நீயல்லை மற்று. 

பொருள் -

உயிரல்ல என்று கூறப்பட்ட உடம்பின்கண் இருக்கின்ற உயிர்ப்புச் சக்தியை உடைய ஐந்து பொறிகளும், உடம்பின் கண் உயிர்ப்பு ஒழிந்து, ஐந்து பொறிகளும் ஒடுங்கி நிற்க, புறத்து நிகழும் தொழில்கள் எல்லாம் அடங்கி:, உடம்பில் எவ்விதத் துன்பமும் இல்லாமல், சூட்சுமமாகிய நுண் உடம்பைப் பெற்று , அந்த உடம்பால் கனவு நிலையை எய்தி, அக்கனவு நிலையில் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து அனுபவிக்கிறது. அந்த அனுபவத்தை விட்டு நீங்கி நனவுக் காலத்தில் அந்த ஐந்து கருவிகளால் அனுபவிக்கின்ற ஒன்று உண்டு. அந்த ஒன்றுதான் ஆன்மாவாகும். 


சொ.பொ.வி '

அவ்வுடல் - நனவின் கண் உள்ள தூலஉடம்பு, ஐம்பொறிகள் - மெய், வாய், கண், மூக்கு, செவி, விளையாடி - அனுபவித்து, மாறல் - நீங்குதல். 


மூன்றாம் சூத்திரம் - ஐந்தாம் அதிகரணம்

(பிராணவாயு ஆன்மா என்பாரை மறுப்பது )

மேற்கோள் -

இனிக் கண்படில் உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது. 

பொருள் -

ஐம்புலன்களும் ஒடுங்கிய உறக்க நிலையில் பிராணவாயு இயங்குகிறது. ஆனால் இன்ப துன்பங்களை உறக்கத்தில் அனுபவிப்பதில்லை. பிராணவாயு நனவுக்காலத்திலும் இயங்குகிறது. இன்ப துன்பத்தை அனுபவிக்கிறது. எனவே பிராணவாயு உறக்கத்தில் அனுபவிக்காமல் விழிப்பில் அனுபவிப்பதால் இந்த வேறுபாடு இல்லாத ஒரே நிலையில் உள்ள ஆன்மா பிராணவாயுவிலிருந்து வேறுபட்டதாகும். 


உதராணம் - 5

கண்டறியும் இவ்வுடலே காட்டொடுங்கக் காணாதே

உண்டிவினை இன்றி உயிர்த்தலால் - கண்டறியும்

உள்ளம்வேறு உண்டுஆய் ஒடுங்காது உடல்நண்ணில்

உள்ளதாம் உண்டிவினை ஊன். 

பொருள்-

எதனையும் கண்டு அறிகின்ற உடம்பின் கண்ணே இருக்கின்ற ஐம்பொறிகளாகிய கருவிகள் உறக்க நிலையில் ஒடுங்கி இருக்கவும், இன்ப துன்ப நுகர்ச்சி இல்லாமல் இருக்கவும் காணுகிறோம்.  அதே நேரத்தில் பிராண வாயு இயங்குவதையும் காணுகிறோம். எதனையும் கண்டு அறிந்து அனுபவிக்கின்;ற ஆன்மா, பிராணவாயு இருந்தும் அவ்வுறக்க நிலையில் அனுபவிக்காததால் பிராணவாயு ஆன்மா ஆகாது. 

சொ.பொ.வி :

கண்டறியும் இவ்வுடல் - ஐம்பொறிகளால் அறியும் உடம்பு, உண்டி வினை இன்றி - இன்ப துன்ப நுகர்ச்சியின்றி, உயிர்த்தலால் - பிராணவாயு இயங்குதலால், 


மூன்றாம் சூத்திரம் - ஆறாம் அதிகரணம்

(பிரம்மமே ஆன்மா என்பதை மறுப்பது)

மேற்கோள் -

இனி உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது என்றது.

பொருள்-

உடம்பு எடுக்காத நிலையில் (கேவலநிலை) ஆன்மா அறியாமலும், உடம்பு எடுத்த நிலையில் (சகலநிலை) அறிவதுமாகிய ஆன்மா, இறைவன் உணர்த்த அறிவதாகும். ஆனால் பிரமமாகிய இறைவனோ என்றும் ஒரே தன்மையான பேரறிவுடையவன். எனவே பிரமத்திற்கு வேறான ஆன்மா என்பது ஒன்று உண்டு. 


உதாரணம் - 6

அறிந்தும் அறிவதே யாயும் அறியாது

அறிந்ததையும் விட்டு அங்கடங்கி - அறிந்தது

எதுஅறிவும் அன்றாகும் மெய்கண்டான் ஒன்றின்

அதுஅதுதான் என்னும் அகம். 

பொருள் -

ஒன்றினை அறியும் போது வேறு ஒன்றினை அறியப் புகுவதும், முன்பு அறிந்ததனை மறந்தும் , அறிந்ததை விட்டு நீங்கியும், ஐந்து அவத்தையில் அடங்கியும், பொருள்களை அறிவது எது? அது அறிவற்றது அல்ல. அறிவுடையதாம். (ஆன்மா) . ஆனால் அது ஒரே நிலையில் இயல்பாக அனைத்தையும் ஒருங்கே அறிகின்ற பேரறிவாகிய சிவமும் அன்று. உண்மையான சித்தாந்தத்தை அறிந்தவன் இதை ஆராய்ந்து பார்த்தால் சார்ந்ததன் வண்ணமாய் இருக்கின்ற ஆன்மாவானது, பேரறிவாகிய சிவத்தில் இருந்து வேறு ஒருபொருள் ஆன்மா என்று அறிவான். 

சொ.பொ.வி -

அறிவதே - அறியப் புகுவது, அறிந்ததையும் விட்டு - அறிந்தவைகளை மறந்து, மெய்கண்டான் - சித்தாந்தத்தை அறிந்தவன், அகம் - ஆன்மா. 


மூன்றாம் சூத்திரம் - ஏழாம் அதிகணரம்

(இது மாயையின் காரியங்களாகிய தத்துவக் கூட்டமே ஆன்மா என்பதை மறுப்பது)

மேற்கோள் - 

இனி மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது என்றது.

பொருள் -

மாயையின் காரியங்களால் கட்டுப்பட்டு விளங்குகின்ற உடம்பில், தத்துவங்களுக்கு வேறான ஆன்மா என்ற ஒன்று உள்ளது. தத்துவங்களோ அதனைக் கொண்ட உடலோ ஆன்மா என்ற பெயரைப் பெறாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரினைப் பெற்று விளங்குகின்றது. எனவே உடம்பிற்கும் தத்துவத்திற்கும் வேறான உடம்பினில் உள்ளதாகிய ஆன்மா என்ற ஒன்று உண்டு. 


உதாரணம் - 7

கலையாதி மண்அந்தம் காணில்அவை மாயை

நிலையாவாம் தீபமே போல - அலையாமல்

ஞானத்தை முன்உணர்ந்து நாடில்அது தனுவாம்

தான்அத்தின் வேறாகும் தான். 

பொருள் -

ஆராய்ந்து பார்த்தால் உடம்பாகிய ஒரு கூட்டுப்பொருள் உண்டாவதற்குக் கலை முதலாக நிலம் ஈறாக உள்ள தத்துவங்களே காரணம் ஆகும். அத்தத்துவங்கள் மாயையின் காரியங்களாகும். சில காலம் நின்று அவை அழிந்துவிடும். அத்தத்துவங்கள் அனைத்தும் சேர்ந்து உடம்பில் தோன்றும் ஞானத்தின் இயல்பை ஆராய்ந்து பார்த்தால் , அந்த உடம்பு தூலம் என்றும், சூக்குமம் என்றும் , பரம் என்றும் பெயர்களைப் பெற்று விளங்குவதாகும். ஆதலால் ஆன்மா என்பது தத்துவங்களால் ஆகிய உடம்பிலிருந்து வேறு பட்டதாகும். 

சொ.பொ.வி :

கலையாதி மண்அந்தம் - சித்தாந்தத்தில் தத்துவங்கள் முப்பத்தாறு. அதில் கலை முதலாக மண் ஈறாக முப்பத்தோரு தத்துவங்கள் வித்தியா, ஆன்ம தத்துவங்கள் என்று கூறப்படும். தீபம் - விளக்கு, தனு - உடம்பு, அத்தின் - உடம்பின். 


-------------------------------------------------------------------------


இலக்கண இயல் - நான்காம் சூத்திரம்.

(பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களின் இலக்கணத் தன்மையைக் கூறுவது இலக்கண இயலாகும். இச்சூத்திரம் ஆன்மாவிற்குரிய இலக்கணத் தன்மையைக் கூறுகிறது. தோன்றும்போதே ஆணவத்தால் மறைக்கப் பட்டு நனவு, கனவு முதலிய ஐந்து நிலைகளில் ஆன்மா வாழும் என்ற இலக்கணம் கூறப்படுகிறது.) 


அந்தக்கரணம் அவற்றின் ஒன்றுஅன்று அவை

சந்தித்தது ஆன்மாச் சகசமலத்து உணராது

அமைச்சுஅரசு ஏய்ப்பநின்று அஞ்சுஅவத் தைத்தே.

பொருள் -

ஆன்மாவானது மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் நான்கு அகக் கருவிகளில் ஒன்று ஆகாது. ஆன்மா ஆணவ மலத்தினால் தனக்கென ஓர் அறிவு இல்லாமையினால், அமைச்சர்களோடு கூடிய அரசனைப் போல, மனம் புத்தி முதலிய அந்தக்கரணங்களைக் கூடி அறிகிறது. மேலும் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் என்னும் ஐந்து அவத்தைகளை உடையதாகும். 

சொ.பொ.வி :

அந்தக்கரணம் - உடலுக்குள் இருக்கும் அகக்கருவிகள், சகசமலம் - ஆணவமலம், ஐந்தவத்தை - ஐந்து நிலைகள். 


நான்காம் சூத்திரம் -  முதல் அதிகரணம்

(ஈண்டு இவ் ஆன்மாவானது அந்தக்கரணங்களாய் உள்ள மனம், புத்தி, அகங்கார, சித்தங்களில் ஒன்று அன்று. )

பொருள் -

வெளிப்படை. 

ஏது -

அவைதாம் பிரகாசமாய் நின்று அப்பிரகாசமாய் நிற்றலாம். 

பொருள் -

அந்தக்கரணங்கள் நான்கும் ஐந்து பொறிகளைக் கொண்டு அறிவதால், சித்து ( அறிவு)ப் பொருளாக விளங்குகிறது. அதே நேரத்தில் தம்மைத் தாம் அறியாமையால் அசத்துப் பொருளாகவும்(அறிவற்ற பொருளாகவும்) விளங்குகிறது. (ஆன்மா அறிவுப் பொருளாகும். அந்தக்கரணம் ஒரு நேரத்தில் அசத்தாக விளங்குவதால் அது ஆன்மா அல்ல)


உதாரணம் - 1

மனமாதி யால்உணர்தல் மன்னுபுலன்கள்

மனமாதி மண்புலனின் அல்லன் - மனமேல்

உதித்தொன்றை உள்ளம் உணர்தல் அதனின்

உதிக்கும் கடல்திரையை ஒத்து. 

பொருள் -

மனம் முதலிய அந்தக் கரணங்களால் உணரப்படுவன - ஐம்பொறிகளால் உணரப்படும் புறப்பொருள்களாகும். ஆனால் ஆன்மா உணர்வது மனதிற்கு மேலே உள்ள புத்தியில் தோன்றுகின்ற ஒன்றாகும். இந்த மன உணர்வும் ஆன்ம உணர்வும் கடல் அலை போல ஒன்றன்பின் ஒன்றாக ஆன்மாவில் வந்து சேருவதால்தான் பொருள்கள் உணரப்படுகின்றன. உணரப்படுகின்ற பொருள்களில் ஆன்மா வேறானாற் போல, ஆன்மாவாகிய உயிரும் மனம் முதலிய அந்தக்கரணங்களில் ஒன்றல்ல. வேறாகும். 

சொ.பொ.வி :

மனமாதி - மனம், புத்தி, அகங்காரம், சித்தி, கடல்திரை - கடல்அலை. (இப்பாடல் அந்தக்கரணங்கள் ஆன்மா அல்ல என்பதைக் குறிப்பிடுகிறது)


உதாரணம் - 2

சிந்தித்தாய் சித்தம் தெளியாதாய் ஆங்காரம்

புந்தியாய் ஆய்ந்து மனமாகிப் - பந்தித்து

வௌ;வேறு தானே துணிந்துள்ளம் இவ்வேறாம்

அவ்வேறாம் போதுபோல் ஆங்கு. 


பொருள் -

புருட தத்துவம் என்று நின்ற ஆன்மாவானது , தான் காணுகின்ற காட்சியில் சித்தமாய் நின்று இது எது என்று சிந்தனை செய்யும். மனமாக நின்று இது இன்னது என்று பற்றும். அகங்காரமாக நின்று இது இன்னது என்று தெளிவேன் என்று முனைந்திடும். புத்தியாய் நின்று இது இன்னதென்று ஆராய்ந்து தெளியும். இவ்வாறு நான்கும் வௌ;வேறாக நின்று கண்ட காட்சியில் ஒரு பொருளை உணர்வதால் ஆன்மா அந்தக்கரணங்களில் இருந்து வேறுபட்டதாகும். எதுபோல என்றால் ஞாயிறு, திங்கள், நட்சத்திரம் ஆகியவற்றோடு கூடி, நாழிகை, நாள், திங்கள், ஆண்டு என்ற பகுதிகளைக் கொண்ட கால தத்துவமானது, ஞாயிறு திங்கள் நட்சத்திரங்களுக்கு வேறு பட்டது போலாகும். 

சொ.பொ.வி -

(கால தத்துவம் தான் உண்டாவதற்குக் காரணமாகிய சூரியன், சந்திரன் , நட்சத்திரங்களிலிருந்து வேறானாற் போல, மனம் முதலியவற்றால் ஒரு பொருளால் இன்ப துன்பங்களை உணரும் ஆன்மா, மனம் முதலிய அந்தக்கரணங்களிலிருந்து வேறுபட்டதாகும். ) சிந்தித்தாய் - சிந்தித்து, பந்தித்து - பற்றி, போது - காலதத்துவம். 


உதாரணம் - 3

                                                                                         

அகாரம் உகாரம் அகங்காரம் புத்தி 

மகாரம் மனம்சித்தம் விந்துப் - பகாதிவற்றை                                                                     

நாதம் உளவடிவாம் நாடிற் பிரணவமாம்

போதம் கடல்திரையே போன்று. 

பொருள் -

அகர ஒலி அகங்காரத்தினையும்;, உகர ஒலி புத்தியினையும், மகர ஒலி மனத்தினையும், விந்து சித்தத்தினையும் , நாதம் உயிரினையும் செலுத்தும். அவ்வாறு செலுத்துவதால் , மகா சகலமாகிய மத்தியாலவத்தையின் கண் ( ஐந்து கருவிகளும் ஒருசேரத் தொழிற்படும்                                                                                                                                                                         அவத்தை) கண், மனம் முதலியவற்றில் உணர்வு , புதிது புதிதாய் உதித்தும், ஒடுங்கியும் வரும். எதுபோல என்றால் கடலில் அலை புதிது புதிதாய்த் தோன்றி ஒடுங்குவது போன்றதாம். அகரம் முதலிய ஒலிகளைப் பகுக்காது ஒன்றாகக் கூடினால்,பிரணவ ஒலியாகும்.

சொ.பொ.வி-

பகாதிவற்றை-ஒலிகளைப் பகுக்காது,                                                                          

உதாரணம் - 4

எண்நிலவு ஓங்காரத்து ஈசர் சதாசிவமாம்

நண்ணிய விந்துவொடு நாதத்துக் - கண்ணில்

பகர்அயன் மாலோடு பரமன் அதிதெய்வம்

மகரஉகரம் அகரத்து ஆம். 

பொருள் -

மனத்தால் அறியப்படுவதாய் அகத்து விளங்கிய பிரணவத்தின் கண் பொருந்துகின்ற அக்கரங்களாகிய ஒலிகளுக்கு உரிய தெய்வங்களைக் குறிப்பிட்டால், நாதத்திற்குச் சதாசிவமும், விந்துவிற்கு மகேசனும், மகரத்திற்கு உருத்திரனும், உகரத்திற்குத் திருமாலும் , அகரத்திற்குப் பிரமனும் ஆவார்கள். 

சொ.பொ.வி -

(அந்தக் கரணங்களைச் செலுத்தும் ஒலிகளைச் சுட்டிக் காட்டும் உதாரணம்) அவ் ஒலிகளுக்குரிய தெய்வங்களைக் குறிப்பிடும் பாடல். எண் நிலவு - மனத்தால் எண்ணப்படுகின்ற , ஓங்காரம் - பிரணவம், நண்ணிய - பொருந்திய. 


நான்காம் சூத்திரம் - இரண்டாம் அதிகரணம்

(ஆன்மாவிற்கு ஆணவமலம் அநாதிகாலந் தொட்டு அறிவை மறைத்து நிற்கிறது என்பதை விளக்குவதாகும்)

மேற்கோள் -

ஆன்மா சகச மலத்தினால் உணர்வு இன்று என்றது. 

பொருள் -

ஆன்மா அந்தக் கரணங்களிலிருந்து வேறாகி அறிவுடைப் பொருளாகி விளங்கினாலும் செம்பினில் களிம்பு போலத் தன்னோடு உடன் தோன்றிய ஆணவ மலத்தால் தானே எதனையும் அறியாது. கருவிகளோடு  கூடி நின்றுதான் அறியும். 

ஏது -

அதுதான் ஞான திரோதகமாய் மறைத்துக் கொடு நிற்றலான். 

பொருள் -

ஆணவ மலமானது ஞானத்தின் தொழிலை நிகழவொட்டாது ஆன்மாவிற்கு அறிவே இல்லை எனும்படியாக மறைத்துக்கொண்டு நிற்கிறது. 


உதாரணம் - 5

மாயா  தனுவிளக்காம் மற்றுள்ளம் காணாதேல்

ஆயாதாம் ஒன்றை அதுவதுவாய் - வீயாத

வன்னிதனைத் தன்னுள்  மறைத்தொன்றாம் காட்டம்போல்

தன்னைமலம் அன்றணைதல் தான். 

பொருள் -

ஆன்மா மாயையின் காரியமாகிய உடம்பை விளக்காகக் கொண்டு பொருள்களைக் காணும். அவ்விளக்கு இல்லை என்றால் ஒரு பொருளையும் அறியாது. அதே நேரத்தில் உடம்பு இல்லாத காலத்து ஆன்மாவிற்கு அறிவு நிகழாதபடிச் செய்வது ஆணவ மலமாகும். அந்த ஆணவ மலம் ஆன்மாவை அநாதியே பற்றி நிற்கின்றது. எதுபோல என்றால் விறகு முதலியவற்றில் கடைவதற்கு முன்னால் அது அக்கினியை மறைத்து வைத்திருக்கின்றது போன்றதாகும். 

சொ.பொ.வி -

மாயாதனு - மாயையின் காரியமாகிய உடம்பு, வன்னி - தீ, காட்டம் - விறகு. 

நான்காம் சூத்திரம் -  மூன்றாம் அதிகரணம்

(ஆன்மா எந்தெந்த இடங்களில் எந்தெந்தக் கருவிகளால் தொழிற்பட்டு ஐந்தவத்தைகளை அடைகிறது என்பதை விளக்குகிறது)

மேற்கோள் -

ஆன்மா சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் , துரியாதீதம் ஆகிய பஞ்சாவத்தினனாய் நிற்கும் என்றது. 

பொருள் -

ஆன்மா நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் ஆகிய ஐந்து நிலைகளில் உடம்பு பெற்று வாழுகிறது. 

ஏது  -

அதுதான் மல சொரூபத்தில் மறைந்து, அரூப சொரூபியாய் நிற்றலான்.

பொருள் -

ஆன்மா ஆணவ மலத்தினுள் மறைந்து தன் அறிவை இழந்து, ஆன்ம தத்துவங்களையே தனக்கு வடிவமாகக் கொண்டுள்ளது. (எனவேதான் அது ஐந்தவத்தைப் படுகிறது)  


உதாரணம் - 6


         ஒன்றணையா  மூலத்து உயிரணையும் நாபியினில்

சென்றடையும் சித்தம் இதயத்து - மன்றஏய்

ஐயைந்தாம் நன்னுதலில் கண்டத்தின் வாக்காதி

மெய்யாதி விட்டகன்று வேறு. 

பொருள் -

சாக்கிரதானம் (நனவு) எனப்படும் புருவ நடுவில் முப்பத்தைந்து கருவிகளும் தொழிற்படும். சொப்பனதானம்(கனவு) எனப்படும் கண்டத்தில் (கருத்தில்) இருபத்தைந்து கருவிகள் தொழிற்படும். சுழுத்திதானம் (உறக்கம்) எனப்படும் இருதயத்தில் புருடன் , பிராணன், சித்தம் என்ற மூன்றும் தொழிற்படும். துரியத்தானம் எனப்படும் (பேருறக்கம்) உந்தியில் புருடன்:, பிராணவாயு இரண்டும் தொழிற்படும். துரியாதீததானம் (உயிர்ப்படக்கம்) எனப்படும் மூலாதாரத்தில் புருடன் ஒன்றே நிலைபெறும். 

சொ.பொ.வி -

மூலத்து - மூலாதாரத்து, உயிர் - புருடன், நாபி - உந்தி, ஐயைந்து -  இருபத்தைந்து கருவிகள் தொழிற்படும். (முப்பத்தைந்து கருவிகளில் வாக்கு முதலிய  கன்மேந்திரியங்கள் ஐந்;தும், மெய் முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்தும் இவை நீங்கி , மீதி உள்ள ஓசை முதலிய தன்மாத்திரைகள் ஐந்;து, மனம் முதலிய அந்தக்கரணங்கள் நான்கு , புருடன் ஒன்று, நிலம் முதலிய ஐம்பூதங்கள் ஐந்து, பிராணவாயுக்கள் பத்து, ஆக இருபத்தைந்து கருவிகள் கனவில் கண்டத்தில் தொழிற்படும். )


உதாரணம் - 7

இலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம்

இலாடத்தே ஐந்தவத்தை எய்தும் - இலாடத்தே

அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டுஅதுவே

அவ்வவற்றின் நீங்கல்அது ஆங்கு.



பொருள் -

ஆன்மாவானது இலாடதானம் எனப்படும் புருவ நடுவில் நின்று நீங்கி, கண்டம், இருதயம், நாபி, மூலாதாரம் ஆகிய இடங்களில் செயல் படுவது கீழாலவத்தை ஆகும். அது மீண்டும் மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு நாபி, இருதயம், கண்டம், புருவநடு என்ற ஒவ்வொரு தானத்திலும் இயங்கும் பொழுது மேலாலவத்தை ஆகும். இவ்வாறு படிப்படியாய் மேலேறி புருவ நடுவை அடைந்து சாக்கிரத்தை எய்தும். அங்கே சாக்கிரம் முதலிய ஐந்து அவத்தைகளையும் ஒருசேர அடைவதுண்டு. இதை மத்தியாலவத்தை என்றும் கூறுவர். இவ்வாறு புருவ நடுவில் நின்ற ஐம்பொறிகளில் ஒவ்வொன்றைக் கொண்டு அதற்குரிய ஒசை முதலிய புலன்களை நன்கு உணர்ந்தும்,  உணராது விடுதலும் ஐந்தவத்தை எனக் கூறப்படுவதுண்டு. 

சொ.பொ.வி -

இலாடத்தே - புருவநடுவாகிய இலாடதானம், சாக்கிரம் - நனவு, உள்ளம் - ஆன்மா, ஐந்தவத்தை - நனவு முதலிய ஐந்து நிலைகள். இந்திரியம் - மெய் முதலிய கருவிகள், நீங்கல் - உணராது விடுதல். 


_____________________________________________________


ஐந்தாம் சூத்திரம்

(இச்சூத்திரம் பாசத்தின் இலக்கணத்தைக் கூறுவதாகும்)

விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு

அளந்துஅறிந்து அறியா ஆங்கவை போலத்

தாம்தம் உணர்வின் தமியருள்

காந்தம் கண்ட பசாசத் தவையே. 

பொருள் -

முன் கூறப்பட்ட ஆன்மாவால் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து கருவிகள் தத்தமக்குரிய விஷயங்களை அளவிட்டு அறியும். ஆனால் அறிகின்ற தம்மையும் தம்மை அறிய வைக்கின்ற ஆன்மாவையும் அவை(மெய் முதலியவை) அறிய மாட்டாது.  அந்த ஐம்பொறிகளைப் போல ஆன்மா தனது அறிவுக்கு முதன்மையாக அமைந்த இறைவனின் மறைத்தல் தொழிலால் தத்தம் வினைப் பயன்களை அறிந்து அனுபவிக்கும். அதே நேரத்தில் அனுபவிக்கின்ற ஆன்மாவாகிய தம்மையும் தம்மை அறியவைக்கின்ற திருவருளையும் அறிய மாட்டாது. காந்தத்தைக் கண்டு எதிர்ப்பட்ட இரும்பு போல ஆன்மா இறைவன் முன்னிலையில் (உதவியால்) தொழிற்படும். 

சொ.பொ.வி -

விளம்பிய - இரண்டாம் சூத்திரத்தில் உண்டு எனக் கூறிய ஆன்மா, தமியருள் - இறைவனின் திரோதான சத்தி. பசாசம் - இரும்பு (இச் சூத்திரத்தில் பாசமாகிய வினைகள் இறைவனின் சத்தியால்தான் ஆன்மா  அனுபவிக்கின்றது. அது தானே முன் வினைகளைப் பற்றி அனுபவிக்காது என்ற இலக்கணம் கூறப்பெற்றுள்ளது. 


ஐந்தாம் சூத்திரம் - முதல் அதிகரணம்

(ஐம்பொறிகள் ஆன்மாவோடு இணைந்து உலகப் பொருள்களை அறிகிறது என்பதை விளக்குகிறது)

மேற்கோள் -

ஈண்டு ஐயுணர்வுகள் ஆன்மாவால் உணரும் என்றது. 

பொருள் -

ஆன்மா ஐம்பொறிகளை (மெய், வாய், முதலிவற்றை) கருவிகளாகக் கொண்டு உலகப் பொருளை அறிகின்றது. எனவே ஐம்பொறிகளும் ஆன்மாவால் தான் அறிகின்றன என்பது பெறப்படுகின்றது. 

ஏது -

அவற்றினால் ஆன்மா ஒன்றித்துக் காணின் அல்லது அவை ஒன்றையும் விடவியாவாகலான்.

பொருள் -

ஐம்பொறிகளோடு ஆன்மா சேர்ந்து நின்றால்தான் ஐம்பொறிகள் ஒரு பொருளை அறியும். அவ்வாறு ஆன்மா ஒன்றவில்லை என்றால் ஐம்பொறிகள் ஒரு பொருளையும் அறியாது. 


உதாரணம் - 1

ஐம்பொறியை ஆண்டங் கரசாய் உளம்நிற்ப

ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம் - ஐம்பொறியின்

காணாதேல் காணாது காணும்உளம் காணாதேல்

காணாகண் கேளா செவி. 

பொருள் -

ஒரு அரசன் ஆட்சி செலுத்துவது போல, ஆன்மா ஐம்பொறிகளையும் ஆவ்வவற்றிற்குரிய பொருள்களில் செலுத்தி , சாக்கிர தானமாகிய புருவ நடுவின்கண் நிற்பதால் ஐந்து பொறிகளும் பொருளை அறிகின்றன. அவ்வாறு அறிந்தாலும் தன்னைச் செலுத்துகின்ற ஆன்மாவை அறிய மாட்டாது. அதே நேரத்தில் ஐம்பொறிகள் இல்லாது ஆன்மா அறியும் என்றால் அறியாது. ஆன்மா அறியவில்லை என்றால் கண்கள் காணமாட்டா, காதுகள் கேட்க மாட்டா. 

சொ.பொ.வி :

அரசாய் - அரசன்போல, உளம் - ஆன்மா(மெய் முதலிய ஐந்து கருவிகளும் ஆன்மாவால்தான் ஒருபொருளை அறிகின்றன என்பதைப் பாடல் விளக்குகிறது)


ஐந்தாம் சூத்திரம் - இரண்டாம் அதிகரணம். 

(இறைவனால் ஆன்மா உலகப் பொருள்களை அறிகின்றது என்பதை விளக்குகிறது)

மேற்கோள் -

இனி இதுவும் தமது முதலாலே உணரும் என்றது. 

பொருள் - 

ஆன்மாக்களும் தமது முதலாகிய இறைவன் அறிவிக்கவே அறியும். 

ஏது -

இவ்வான்மா தன்னாலே உணரும் இந்திரியங்களைப் போலத் தானும் தன்னை உணராது நிற்றலான். 

பொருள் -

ஆன்மா தன்னாலே உணருகின்ற இந்திரியங்களைப் போலத் தன்னையும் , தம்முடைய இறைவனையும் உணராது. 


உதாரணம் - 2

மன்னுசிவன் சன்னிதியில் மற்றுலகம் சேட்டித்தது

என்னும் மறையி; இயல்மறந்தாய் - சொன்னசிவன்

கண்ணா உளம்வினையால் கண்டறிந்து நிற்கும்காண்

எண்ணான் சிவன்அசத்தை இன்று. 

பொருள் -

என்றும் உள்ள இறைவனின் திருமுன்னர் ஆன்மாக்கள் இயங்குகின்றன -  என்று கூறுகின்ற வேதத்தின் பொருளை அறியாது மயங்குகின்ற பேதமை உடையவனே, ஆன்மாவானது முற்றும் உணர்ந்த உணர்வினன் என்று கூறப்பெறும் இறைவன் , தனக்குக் கண்களாக இருக்க, தான் செய்த வினைகளுக்கு ஏற்பப் பொருள்களை அறிந்து நுகரும். இந்திரியங்களோ தனக்கென இல்லாது ஆன்மாவிற்காகவே பொருள்களை அறியும். இவ்வாறு ஆன்மா தன்பொருட்டு அறிதலும், இந்திரியங்கள் ஆன்மாவின் பொருட்டு அறிதலும் ஆகிய வேறுபாடுகளை அறிவாயாக. இறைவன் தூய வடிவினன். ஆதலால் அவனின் முன்னர் அசத்து (அறிவற்ற ) பொருள்கள் எல்லாம் சூனியமாகும். எனவே இறைவன் உலகத்தில் அசத்துப் பொருள்களை ஆன்மாவைப் போன்று அனுபவிக்க மாட்டான். 

சொ.பொ.வி :

மன்னு - என்றும் உள்ள, சன்னிதியில் - முன்னிலையில் (அவனால்), சேட்பித்தது - தொழிற்படுகின்றது, சொன்ன - முற்றும் உணர்ந்தவன் என்று சொன்ன, அசத்தை - அறிவற்ற பொருள்களை(பாசத்தை).


உதாரணம் - 3

வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது

வெய்யோனை ஆகாத மீன்போல - வெய்யவனிற்

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனைக்

கண்டுடனாய் மன்னுதலைக் காண். 


பொருள் -

நட்சத்திரங்கள் ஒளி உடையதாய்த் தோன்றும் பொழுது, சூரிய ஒளியின் வேறாய்த் தோன்றாமலும்;, சூரியனே ஆகாமலும், சூரியன் ஒளியில் அடங்கித் தோன்றுவது போலே, ஆன்மாவானது கண்டு கேட்டு உண்டு நுகர்ந்து தீண்டி அறியப்படும் ஐவகைச் செயல்களை , உண்மைப் பொருளாகிய இறைவனால் உணர்ந்து, அவ்வாறு உணரும் பொழுது, இறைவனை விட்டு வேறாய் நின்றும், இறைவனோடு ஒன்றியும் அறிதல் இன்றி, இரண்டிற்கும் பொதுவாய் இறைவனோடு உடனாய் நின்று அனுபவிக்கும். 

சொ.பொ.வி -

வெய்யோன் - சூரியன், மீன் - நட்சத்திரம், மெய்யவன் - உண்மைப் பொருளாகிய இறைவன் (ஆன்மா ஒரு பொருளை இறைவனோடு உடன்நின்று அறியும் என்பதை விளக்குகிறது)


உதாரணம் - 4

அருளுண்டாம் ஈசற்கு அதுசத்தி அன்றே

அருளும் அவனன்றி இல்லை - அருளின்று

அவன்அன்றே இல்லை அருட்கண்ணார் கண்ணுக்கு

இரவிபோல் நிற்கும்அரன் ஏய்ந்து. 

பொருள் -

ஆன்மாக்களுக்கு அநாதிகாலம் தொட்டுக் கூடி நிற்கின்ற ஆணவ மலத்தின் தடையால் ஏற்பட்டிருக்கும் பசுத் தன்மையை நீக்கிச் சிவத்தன்மை கொடுக்கும் அருள், இறைவனுக்கு அநாதியே உள்ளது. அந்த இரக்கம் என்பது (தனி ஒன்று அல்ல), இறைவனோடு உடனாய் உள்ள திருவருள் எனப்படும் சத்தியே ஆகும். அவ்விரக்கம் சத்தி இறைவனின்றி இல்லை. இறைவனும் அருளாகிய சத்தியின்றி இல்லை. எதுபோல என்றால் சூரியன் தன் ஒளியோடு பிரிப்பின்றி நிற்பது போன்றதாகும். குற்றமில்லாத கண்ணுக்கு ஒளியோடு நிற்கும் சூரியன் தெரிவது போல, ஆணவ மலம் இல்லாத அருட் கண்ணை உடைய ஆன்மாவிற்குத் திருவருளோடு நிற்கும் இறைவன் விளங்கித் தோன்றுவான். 

சொ.பொ.வி :

அருள் - இரக்கம், சத்தி - திருவருள், அருட்கண்ணால் - ஆணவ மலம் நீங்கி ஞானம் பெற்றவர். இரவி - சூரியன். (ஆன்மாவிற்கு இறைவன் உணர்வுகளை உணர்த்தும் பொழுது, தன்னோடு பிரிவில்லாது இருக்கின்ற சத்தியால் உணர்த்துவான் என்பது கூறப்பெற்றுள்ளது)


____________________________________________________


ஆறாம் சூத்திரம் 

  (இச்சூத்திரம் இறைவனின் இலக்கணத்தைக் கூறுவது)


உணர்உரு அசத்துஎனின் உணராது இன்மையின்

இருதிறன் அல்லது சிவசத்து ஆம்என

இரண்டு வகையின் இசைக்கும்மன் உலகே.

பொருள் -

இறைவனாகிய முதற்பொருள் கருவி கரணங்களால் உணரப் படும் பொருள் என்றால் அழியக்கூடிய அசத்துப் பொருளாகும். (அறிவற்ற பொருளாகும்) எவ்வாற்றானும் உணரப்படாத பொருள் என்றால் சூனியப் பொருளாகும். இவ்விரண்டுமின்றிப் பாசமாகிய கருவிகளாலும், பசுவின் அறிவாலும் அறியப் படாமலும், பதி ஞானத்தால் மட்டும் ஒருவகையால் அறியப் படுதலுமாகிய இரண்டு இயல்பினை உடையதால் இறைவனைச் சிவசத்து என்று மெய்யுணர்ந்த பெரியவர்கள் கூறுவார்கள். 

சொ.பொ.வி -

உரு - பொருள், அசத்து - அறிவற்ற அழியும் பொருள், இரு திறன் - பாச, பசு ஞானங்களால் அறியப்படாது, பதி ஞானத்தால் மட்டும் அறியக் கூடிய இருவகை, மன்உலகே - அறிவுடையோர். 


ஆறாம் சூத்திரம் - முதல் அதிகரணம்

(ஆன்மாவால் சுட்டிக்காட்டி உணரப்படுகின்ற பொருள்கள் எல்லாம் நிலையில்லாது அழியக்கூடிய அசத்துப் பொருள்கள் என்பதை விளக்குகிறது)

மேற்கோள் -

ஈண்டு அறிவினால் அறியப்பட்ட  சுட்டு, அசத்து என்பது.

பொருள் -

ஆன்மா தன் மனதினால் நினைந்து அறிவதாகிய சுட்டுப்பொருள்கள் எல்லாம் அறிவற்ற அசத்து ஆகி அழியும் பொருள்களாம்.

ஏது -

அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான். 

பொருள் -

உலகத்தில் உள்ள பொருள்கள் எல்லாம் இது இன்ன பொருள் என்று சுட்டிக் காட்டப் பெற்று உணர்வதற்குரிய பொருளாய் அமைந்து, உள் பொருளாக விளங்கும். அதே நேரத்தில் அழிகின்ற பொழுது இல்லை என்ற உணர்வுக்குரிய பொருளாகவும் அமையும். உண்டு என்றும் இல்லை என்றும் சுட்டுப் பொருள்கள் விளங்குவதால் அவை அறிவற்ற அசத்துப் பொருள்களாம். 


உதாரணம் - 1

அசத்துஅறியாய் கேள்நீ அறிவறிந்த எல்லாம்

அசத்தாகும் மேய்கண்டான் ஆயின் - அசத்தலாய்

நீரில் எழுத்தும் நிகழ்கனவும் பேய்த்தேரும்

ஓரினவை இன்றாமாறு ஒப்பு. 

பொருள் -

அசத்துப் பொருளின் இயல்பை அறியாதவனே, யாம் கூறுவதைக் கேட்பாயாக. சத்தின் இயல்பை அறிந்தவன் ஆராய்ந்தால் ஆன்ம அறிவினால் 

அறியப்பட்ட பொருள் எல்லாம் நிலையற்ற அசத்துப் பொருளே என்பதை அறிவான். அசற்காரியவாதி அல்லாத அறிவுடையவனே, தோன்றி மறையும் உலகப் பொருளில் அசத்துத் தன்மைக்கு  நீர்மேல் எழுத்தும், கனவுக் காட்சியும், கானல்நீரும் உவமைகளாகக் கூறலாம். 

சொ.பொ.வி -

மெய்கண்டான் - அறிவுப் பொருளாகிய சத்தின் இயல்பை அறிந்தவன், அசத்தலாய் - அசற்காரியவாதி அல்லாத சற்காரியவாதி (சித்தாந்தி) பேய்த்தேர் - கானல்நீர், நீரில் எழுத்து தோன்றியவுடன் மறையும். அதுபோல உலகப் பொருள்கள் சில தோன்றியவுடன் மறையும். கனவு இடையில் மறையும். அதுபோலச் சில பொருள்கள் தோன்றி நின்று இடையில் மறையும். கானல்நீர் மேகம் மறைத்தவழி மறையும். அதுபோல ஏதேனும் ஒரு காரணத்தின்வழி உலகப் பொருள்கள் அழியும். அழிகின்ற இவைகள் அசத்துப் பொருளாகும். 


ஆறாம் சூத்திரம் - இரண்டாம் அதிகரணம்

(இறைவன் பதிஞானமாகிய சிவஞானத்தால் அறியப்படுவான் என்பதை விளக்குகிறது)

மேற்கோள் -

இனி , இவ்விரண்டு தன்மையும் இன்றி வாக்கு, மனாதீத கோசரமாய் நின்றதுவே சத்தாயுள்ள சிவம் என்று உணரற்பாற்று. 

பொருள் -

உணரப்படும் தன்மையும், உணரப்படாத தன்மையும் ஆகிய இரண்டு தன்மையும் இல்லாது, பாசஞானத்திற்கும் பசுஞானத்திற்கும் எட்டாததாய், பதிஞானத்தால் எட்டுவதாய் (கோசரமாய்) நிற்கின்ற சத்துப்பொருளே சிவம் என்று உணரற்பாற்று. 

ஏது -

பிரகாசத்திற்குப் பிரகாசிக்க வேண்டுவது இன்மையாகும். அப்பிரகாசத்திற்குப் பிரகாசம் இன்மையாகும்.

பொருள் -

சத்தாகிய பதிப்பொருள் வாக்கு மனங்களால் உணரப்படும் பொருளாயின் அதனை உணர்தற்கு முயற்சி வேண்டுவதில்லை. அதே நேரத்தில் ஒருவாற்றானும் உணரமுடியாதது என்றால் எம்முயற்சியும் பயன் தராது. எனவே ஞானநூல்களின் கூற்றப்படி பதியைக் காணும் முயற்சி செய்து, பதிஞானமாகிய அவன் அருளால் இறைவனைக் காண வேண்டும். 

உதாரணம் -2

எண்ணிய சத்தன்று அசத்தன்றாம் என்றால்என்

கண்ணி உளதென்றல் மெய்கண்டான் - எண்ணி

அறிய இரண்டாம் அசத்தாதல் சத்தாம்

அறிவறியா மெய்சிவன்தாள் ஆம். 

பொருள் -

இறைவன் கருதப்பட்ட சத்துப்பொருளும் அன்று, அசத்துப் பொருளும் அன்று என்றால் இறைவன் என்ற ஒரு பொருள் உள்ளது என்று கூறுதல் எது கருதி? மெய்கண்டானாகிய சத்தின் இயல்பை அறிந்தவன் இச்செய்தியை ஆராய்ந்து பார்த்தால். அசத்து என்பது காட்சி முதலிய அளவைகளால் காண்பதும், காணமுடியாத சூன்யம் ஆவதும் ஆகிய இரண்டு நிலைகளை உடையதாகும் என்பதை உணர்வான். எனவே ஞானநூல்களில் சத்து என்று ஓதப்படுவது சுட்டி அறியப்படாத மெய்ப்பொருளாகிய சிவனே ஆகும். (நேரில் காணமுடியாது அனுபவத்தால் மட்டும் இறையுணர்வு புலப்படும்) 

சொ.பொ.வி:

எண்ணிய - கருதிய, சத்து - அறிவுடைப் பொருள், அசத்து - அறிவற்ற பொருள், என் கண்ணி - யாது பிரமாணம்?


உதாரணம் -3

உணர்ப அசத்தாதல் ஒன்றுணராது ஒன்றை

உணரும்நீ தான்உணராய் ஆயின் - உணரும்உனின்

தான்இரண்டாம் மெய்கண்டான் தன்னால் உணர்தலால்

தான்இரண்டாய்க் காணான் தமி. 

பொருள் -

ஆன்மாவால் ஏவி பொருள்களை அறியும் கருவிகள் எல்லாம் அறிவற்ற அசத்துப் பொருள்களே ஆகும். அக்கருவிகள் முதற்பொருளாம் இறைவனை அறியாது. அதுபோலப் பொருள்களை அறிகின்ற ஆன்மாவும் இறைவனை அறியாது. ஆராய்ந்து பார்த்தால் கருவிகள் ஆன்மாவிற்கு வேறாதல் போல, ஆன்மாவிற்கு இறைவனும் வேறாவான். அதே நேரத்தில் இறைவன் உயிருக்கு உயிராய் நின்று அறிவிப்பதால் தான் ஆன்மாவிற்கு அறிவு விளங்குகிறது. இதை அறிந்தால் தன்னுடைய அறிவை இறைவனின் அருளில் அடங்கச் செய்து, அவ்அருளாலே இறைவனை அறிவான். உலகப் பொருளை வேறாக நின்று அறிவது போல இறைவனை வேறாய் நின்று அறியாது உடன் நின்று ஆன்மா அறியும். 

சொ.பொ.வி-

ஒன்று - கருவிகளில் ஒன்று, இரண்டாய் - வேறாய். (இப்பாடல் வாக்கிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட இறைவனைக் கண், மனம் போன்ற கருவிகளால் அறியாது, அவன் உடன்நிற்க ஆன்மா அவனை அறியும் என்ற செய்தியைக் குறிப்பிடுகிறது)


உதாரணம் -4

பாவகமேல் தானசத்தாம் பாவனா தீதம்எனில்

பாவகமாம் அன்றென்னில் பாடதுவாம் - பாவகத்தைப்

பாவித்தல் தான்என்னில் பாவகமாம் தன்னருளால்

பாவிப்ப பதுபரம்இல் பாழ். 

பொருள் -

மனம் முதலியவற்றால் கூடி நின்று பாவிக்கின்ற பாவனைதான் இறைவன் என்றால் - பாவனையோ நிலைக்காத  அசத்தாகும். இறைவன் பாவனையைக் கடந்தவன் என்றால் அதனால் கிடைக்கக் கூடிய பயன் எதுவும் இல்லை. இத்தகைய இருநிலையும் இன்றி;ப் பாவிக்கப் படுவது (அறியப்படுவது) என்றால் அது சூனியப் பொருளே ஆகும். மேலும் பாவனைக்கு எட்டாத பொருளை அறிந்ததாகக் கற்பனை செய்து கொண்டு பாவனை செய்தால் அதுவும் பயனில்லாத செயலாகும். எனவே இறைவனது திருவருளால் பாவிக்கப்படுவது பரம்பொருளே ஆகும். அது சூனியமில்லை. 

சொ.பொ.வி -

பாவகம் - பாவனை, பாவனாதீதம் - பாவனையைக் கடந்தது, பாழ் - சூனியப் பொருள். பரம் - பரம்பொருள். (இறைவன் பாவனைக்கு உரியவன் அல்ல, அதே நேரத்தில் சூனியப் பொருளும் அல்ல. இறைவனுடைய திருவருளால் அறியப்படுகின்ற பரம்பொருளாகும் என்பதை விளக்குகிறது)


உதாரணம் - 5

அறிய இரண்டல்லன் ஆங்கறிவு தன்னால்

அறியப் படான்அறிவின் உள்ளான் - அறிவுக்குக்

காட்டாகி நின்றானைக் கண்ணறியா மெய்யென்னக்

காட்டாது அறிவு அறிந்துகண்டு. 

பொருள் -

ஆன்மாவானது தன் அறிவால் அறிவதற்கு இறைவன் அவ் ஆன்மாவின் வேறல்லன். ஆன்மாவின் அறிவிற்குள் அறிவாய் நிற்கின்றான். ஆதலால் ஆன்மாவின் அறிவினால் அவன் அறியப்பட மாட்டான். தன் அறிவுக்குத் துணையாய் நின்று அறிவிக்கின்ற இறைவனை ஆன்மாவின் அறிவானது, ஆன்மாவிற்கு எட்டும் வண்ணம் காட்டாது. எதுபோல என்றால் ஆன்மா கண் ஒளிக்குள் நின்று பொருளை அறிவதற்குத் துணை செய்ய, அவ்வாறு துணை செய்த ஆன்மாவைக் கண் காணமாட்டாதது போல. 

சொ.பொ.வி -

இரண்டல்லன் - உயிருக்கு வேறல்லன், அறிவின் உள்ளான் - இறைவன் ஆன்மாவில் அதன் அறிவாகி நிற்பவன், காட்டாகி - காட்டுவதற்குத் துணையாகி, (ஆன்மாவிற்குள்ளே இறைவன் அறிவாகக் கலந்திருப்பதால் ஆன்மா தனக்குள்ளே கலந்திருக்கின்ற இறைவனை வேறாக நின்று அறியமுடியாது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது)


உதாரணம் -6

அதுஎன்னும் ஒன்றன்று அதுவன்றி வேறே

அதுஎன்று அறிஅறியும் உண்டே - அதுவென்று

அறிய இரண்டல்லன் ஆங்குஅறிவுள் நிற்றல்

அறியும் அறிவே சிவமும்ஆம். 

பொருள் -

சத்தாகிய சிவம் சூனியப் பொருள் அல்ல, அச்சிவன் அருளால் அறியப் படுகின்ற ஆன்மாவும் முத்தியிலும் உள்பொருளே ஆகும்.  முத்திநிலையில் ஆன்மா இருப்பதால் இறைவனும் ஆன்மாவும் ஒன்றோ என்றால்; ஒனN;றயாகும். எவ்வாறு என்றால் தண்ணீரைச் சார்ந்த உப்புப் போல , ஆன்மாவின் அறிவின்கண் இறைவன் கலந்து வேற்றுமை தோன்றாது நிற்பான். ஆன்மா அச்சிவமே ஆகும். 

சொ.பொ.வி -

ஒன்றன்று - சூனியமன்று, இரண்டல்லன் - இறைவன் உயிர்களின் வேறல்லன், (அவனருளால் அவனை அறிந்த ஆன்மா முத்திநிலையில் இறைவனோடு ஒன்றாய் நிற்கும். அது தண்ணீரோடு உப்புச் சேர்ந்தது போலாகும். )


__________________________________________


உண்மை அதிகாரம்

  சாதன இயல்.

(முப்பொருள்களின் சிறப்பு இயல்பைக் கூறுவது உண்மைஅதிகாரம் ஆகும் . அந்த உண்மையை அறிவதால் பயன் பெறுவதற்குரிய சாதனங்களைக் கூறுதல் சாதன இயலாகும்)


ஏழாம் சூத்திரம்

(இச்சூத்திரம் ஆன்மாவின் சிறப்பு இலக்கணமாக இறைவனைச் சார்ந்து அருளையும், உலகப் பொருள்களைச் சார்ந்து போக இன்பத்தையும்  பெறும் என்பதை விளக்குகிறது.)

யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்

சத்தே அறியாது அசத்துஇலது அறியாது

இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா. 

பொருள் -

சத்தாகிய சிவத்தின் முன் அசத்தாகிய உலகப் பொருள்கள் விளங்கித் தோன்றாத சூனியமாகும். எனவே இறைவன் உலகத்தை அறிந்து அனுபவிக்க மாட்டான். அசத்தாகிய உலகப் பொருள்கள் அறிவில்லாதவை. ஆதலால் அவை இறைவனை அறிந்து அனுபவிக்க மாட்டா. சத்தாகிய இறைவனும் அசத்தாகிய உலகப் பொருளும் இல்லாத சதசத்து என்ற ஆன்மா அவ்விரண்டையும் அறியும் தன்மை உடையது. 

சொ.பொ.வி -

யாவையும் - உலகப்பொருள்கள், இலது - அறிவில்லாதது, இருதிறன் - இறைவனையும் உலகப் பொருளையும் அறிகின்ற திறமை. 


ஏழாம் சூத்திரம் - முதல் அதிகரணம்

(இது உலகம் இறைவனால் அறிய வேண்டிய பொருளில்லை என்பதைக் குறிப்பிடுகிறது)

மேற்கோள் -

ஈண்டு சத்தினிடத்து அசத்து பிரகாசியாது என்றது. 

பொருள் -

சுட்டி அறிகின்ற அறிவு இன்றி அனைத்துப் பொருளிலும் கலந்து நின்று, ஒருசேர அறிகின்ற சிவமாம் இறைவன் முன்னர் , சுட்டி அறியப் படுவதாகிய அசத்து ஆகிய உலகம் விளங்கித் தோன்றாது. 

ஏது -

மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்றலான். 

பொருள் -

மெய்யெனப்படும் சத்தின் (இறைவனின்) முன்னர் , ஒரு நிலையாய் நில்லாது மாறுதலுக்கு உட்பட்டு நிற்கின்ற அசத்துப் பொருளாகிய பொய்ப்பொருள்  நிகழ்தல் இல்லை. 


உதாரணம் - 1

அன்னியம் இலாமை அரற்கொன்று உணர்வின்றாம்

அன்னியம் இலான்அசத்தைக் காண்குவனேல் - அன்னியமாம்

காணான் அவன்முன் கதிர்முன் இருள்போல

மாணா அசத்துஇன்மை மற்று. 

பொருள் -

தனக்குள் அடங்கி இருப்பதான பதி, பாசங்களோடு உடனாய் நிற்கின்ற இறைவனுக்குச், சுட்டி அறியக்கூடிய பொருள் ஒன்றும் இல்லை. அசத்தாகிய உலகத்தை அறிய வேண்டின் இறைவன் உடனாய் நின்று அவற்றை ஒருசேர அறிவான். நம்மைப் போல உலகப் பொருளிலிருந்து வேறாய் நின்று சுட்டி அறிய மாட்டான். ஏனென்றால் சூரியன் முன் இருள் தோன்றாதவாறு போல, இறைவன்முன் அசத்தாகிய உலகம் விளங்கித் தோன்றாது என்பதால்.

சொ.பொ.வி -

அரற்கு - அரசனாகிய இறைவனுக்கு, அன்னியம் - பதி, பாசங்களில் வேற்றுமை இல்லாதவன், கதிர் - சூரியன், மாணா - சிறப்பில்லாத. (இப்பாடல் உலகம் இறைவனுக்குள் அடக்கம் என்பதால் உலகத்தை இறைவன் அறிய வேண்டியதில்லை என்பதை விளக்குகிறது)


ஏழாம் சூத்திரம் - இரண்டாம் அதிகரணம்

(அசத்துப் பொருளுக்கு அறிவில்லை என்பதை விளக்குகிறது)

மேற்கோள் -

இனி அசத்தினுக்கு உணர்வின்று என்றது. 

பொருள் -

தத்துவங்களால் ஆகிய உலகிற்கு அறிவு இல்லை.

ஏது -

அதுதான் நிரூபிக்கில் இன்றாகலான். 

பொருள் -

குற்றமற்ற காட்சியால் ஆராயுமிடத்து அவ்அசத்துக்கு (உலகிற்கு) அறிவில்லை என்பதாகும். 

உதாரணம் - 2

பேய்;த்தேர் என்றுவரும் பேதைக்கு மற்றணைந்த

பேய்த்தேர் அசத்தாகும் பெற்றிமையின் - வாய்த்ததனைக்

கண்டுணர்வார் இல்வழியில் காணும் அசத்துஇன்மை

கண்டுணர்வார் இல்லதுஎனக் காண். 

;.பொருள் -

வேனிற்காலத்துக் காணப்படும் கானல்நீரைக் குடிக்கும் நீர் என்று கருதி உண்ணவருகின்ற அறிவற்ற பேதைக்கு , இறுதியில் அதனை அடைந்த பொழுது , அக்கானல் நீர் பொய்யாகும் தன்மை போல, குருவின் அருளுரை கிடைத்து அசத்தின் தன்மையை ஆராய்ந்து அறிகின்ற சூழல் கிடைக்காதவருக்கு அசத்து அறிவுடைப் பொருளாகவே தோன்றும். ஆனால் குருவின் அருள்மொழி கிடைத்து ,அசத்தின் தன்மையை அறிய வல்லவருக்கு, அசத்தானது அறிவற்றது என்பது புலனாகும். இதனை உணர்வாயாக. 

சொ.பொ.வி -

பேய்த்தேர் - கானல்நீர், பேதை - அறிவற்றவன், அசத்து - அறிவற்றது, கண்டுணர்வார் இல்வழி - ஆராய்ந்து அறிகின்ற சூழல் இல்லாதவழி, 


ஏழாம் சூத்திரம் - மூன்றாம் அதிகரணம். 

(ஆன்மா சத்துப்பொருளையும் அசத்துப் பொருளையும் அறியும். அந்த முறையில் தன்னையும் அறியும் என்பதை விளக்குகிறது)

மேற்கோள் -

இனி, இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா என்றது. 

பொருள் -

சத்து, அசத்து என்னும் இரண்டின் இயல்பை அறியும் பொருள் சத்தும் அசத்தும் அல்லாத சதசத்தாகிய ஆன்மாவாகும். 

ஏது -

இல்லை. 

உதாரணம் -3


அருவுருவம் தானறிதல் ஆயிழையாய் ஆன்மா

அருவுருவம் அன்றாகும் உண்மை - அருவுருவாய்த்

தோன்றிஉடன் நில்லாது தோன்றாது நில்லாது

தோன்றல் மலர்மணம்போல் தொக்கு. 

பொருள் -

உண்மையான நூல்களை ஆராய்கின்ற ஆன்மா, சத்து அசத்து என்ற இரண்டினையும் அறியும். எனவே ஆன்மா சத்து அசத்து அன்றி அவ்விரண்டின் வேறாக உள்ளது. அத்தகைய ஆன்மா அவ்விரண்டோடு சமமாய் நிற்பதும் அல்ல. அதே நேரத்தில் சூனியமும் அல்ல. மலரின்கண் மணம் எவ்வாறு அடங்கித் தோன்றுகிறதோ அதுபோலச் சத்திலும் அசத்திலும் சார்ந்து அடங்கித் தோன்றும். 

சொ.பொ.வி -

அருவுருவம் - சத்து அசத்து, தொக்கு - அடங்கி. (இப்பாடல் ஆன்மா சத்தையும் அசத்தையும் அறிவது என்பதை விளக்குகிறது)


உதாரணம் - 4

மயக்கமது உற்றும் மருந்தில் தெளிந்தும்

பெயர்த்துணர்நீ சத்தாகாய் பேசில் - அசத்தும்அலை

நீயறிந்து செய்வினைகள் நீயன்றி வேறுஅசத்துத்

தானறிந்து துய்யாமை தான். 

பொருள் -

அறிவைத் தருவதற்குரிய கருவிகள் இல்லாத இடத்து ஆன்மா ஒரு பொருளை இன்னது என்று அறியமாட்டாது. மயக்கத்தைப் பொருந்தும். பசி நோயைத் தீர்க்கும் உணவு மருந்தாதல் போல, மயக்கத்தைத் தீர்த்தற்குரிய கருவிகள் உள்ள இடத்தில் அதே ஆன்மா மயக்கம் தெளிந்து பொருள்களை உணரும். இவ்வாறு மயங்கியும் மயக்கம் தீர்ந்தும் உலகப் பொருள்களை உணருகின்ற ஆன்மா, ஆராய்ந்து பார்க்கும் பொழுது சிவமாகிய சத்துப் பொருளும் ஆகாது, அசத்தாகுமா என்றால் அதுவுமில்லை. ஆன்மாவனாது முன்பு செய்த வினையின் பயன்களை ஆன்மா   அனுபவிக்குமே அன்றி , உடல் உள்ளிட்ட அசத்தாகிய பாசம் அனுபவிக்காது. எனவே ஆன்மா அசத்துப் பொருளுக்கு ஒப்பாகாது. அதாவது அசத்துப் பொருளாகாது. அதிலிருந்து வேறுபட்டதாகும். 

சொ.பொ.வி -

பெயர்த்து - மாறிமாறி, பேசில் - ஆராய்ந்தால், துய்யாமை - அனுபவிக்க மாட்டாது. (இப்பாடல் ஆன்மா இறைவன் போலச் சத்துமில்லை. பாசம் போல அசத்துமில்லை. அறிவும் அறியாமையும் கொண்ட சதசத்து ஆகும் என்பதை விளக்குகிறது.)


உதாரணம் - 5

மெய்ஞ்ஞானம் தன்னில் விளையாது அசத்தாதல்

அஞ்ஞானம் உள்ளம் அணைதல்காண் - மெய்ஞ்ஞானம்

தானே உளதன்றே தண்கடல்நீர் உப்புப்போல்

தானேய் உளம்  உளவாத்தான். 

பொருள்-

அஞ்ஞானம் மெய்யறிவு என்னும் சிவத்தின் முன் நிற்பதில்லை. ஆனால் இறைவன் எப்பொழுது தோன்றினானோ அப்பொழுதே தோன்றிய ஆன்மாக்களிடத்தில் அஞ்ஞானம் உள்ளது. இவ்வாறு அஞ்ஞானம் இறைவனைப் பற்றாமலும், உயிரைப் பற்றுவதும் எவ்வாறு என்றால், கடலிடத்து உப்பில்லாமல், கடல்நீரில் உப்பிருப்பது போன்றதாகும். 

சொ.பொ.வி -

n;மய்ஞ்ஞானம் - மெய்யறிவு எனப்படும் சிவபெருமான், உள்ளம் - ஆன்மா, அஞ்ஞானம் - அறியாமை, கடல்நீர் உப்புப்போல் - கடலிடத்தில் (கடல்மண்ணில் உப்பில்லாமல் நீரி;ல் உப்பிருப்பது போல , அஞ்ஞானம் இறைவன் கலந்திருக்கின்ற ஆன்மாவிற்கு உண்டு , கலந்த இறைவனுக்கு இல்லை என்பதாகும்)


_________________________________

எட்டாம் சூத்திரம்.

(இச்சூத்திரம் ஆன்மா ஞானத்தை உணரும் முறைமையினை உணர்த்துகிறது. அதாவது பதி ஞானத்தால் ஆன்மா மெய்ஞ்ஞானத்தை உணரும். அதாவது இறைவன், ஆன்மா செய்த புண்ணியத்தால் ஞானாசிரியனாய் மானுடச் சட்டை தாங்கி எழுந்தருளி, ஆன்மாவிற்கு மெய்ஞ்ஞானத்தை அருளுவான் என்பதை விளக்குகிறது)


ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்

தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு

அன்னியன் இன்மையின் அரன்கழல் செலுமே. 

பொருள் -

ஆன்மாவில் உடனாய் இருந்த பரம்பொருள் ஆன்மா செய்த புண்ணியத்தின் மிகுதியினால், குருவடிவாய் எழுந்தருளி வரும். அவ்வாறு வந்த இறையருள் சிவதீக்கை செய்து, ஆன்மாவை நோக்கி, ஷஷஐம்பொறிகளாகிய வேடர்களுடன் சேர்ந்து பழகி வளர்ந்து வந்ததினால் மயங்கித் துன்புற்றாய்' என்று அறிவிக்கும். மேலும் குருவடிவு தந்த தீக்கை முறையால் ஐம்பொறிகளை விட்டு நீங்கி இறைவனுக்கு வேறாகிய பொருளாக இல்லாத காரணத்தால், ஆன்மாவானது இறைவனது திருவடியை அணைந்து நிற்கும். 

சொ.பொ.வி -

ஐம்புலவேடர் - ஐம்பொறிகள், தம்முதல் - ஆன்மாவோடு உடனிருக்கும் இறைவன், தவத்தினில் - செய்த புண்ணியத்தால், உணர்த்த - அஞ்ஞானத்தை உணர்த்த, விட்டு - தீக்கையால் அஞ்ஞானத்தை விட்டு, அன்னியம் - வேறு பொருளாக, அரன் - சிவன். 


எட்டாம் சூத்திரம் -  முதல் அதிகரணம். 

(சரியை, கிரியை, யோகம் செய்தால்தான் அதன் பயனாகிய ஞானம் கிடைக்கும் என்பதைக் குறிப்பிடுகிறது)

மேற்கோள் - 

ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முன்செய் தவத்தால் சிவஞானத்தைக் கண்ணாகக் கொண்டு அறிவதாகிய ஞானம் நிகழும். 

பொருள் -

ஆன்மாக்களுக்கு முன் பிறவிகளில் செய்த சரியை, கிரியை, யோக விசேடத்தால் சிவஞானம் ஐயம் திரிபின்றி விளங்கும். 

ஏது -

மேலும் சரியை, கிரியை, யோகம் செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக் கொடா ஆகலான். 

பொருள் -

சரியை, கிரியை, யோகங்களாகிய தவங்களைச் செய்து முற்றுப் பெற்ற விடத்து, அத்தவங்கள் தாம் வீடு பேறு எய்துவதற்குரிய ஞானத்தைப் பயப்பித்து முத்தியைக் கொடுப்பன. அன்றி அத்தவங்களே நேராக முத்தியைத் தாராது. எனவே ஆன்மாக்கள் ஞானத்தைப் பெற்றுத்தான் முத்தியை அடைய முடியும். 


உதாரணம் -1

தவம்செய்தார் என்றும் தவலோகம் சார்ந்து

பவம்செய்து பற்றறுப்பார் ஆகத் - தவம்செய்த

நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலைக்

கற்றார்சூழ் சொல்லுமாம் கண்டு. 

பொருள் -

சரியை, கிரியை, யோகத்தைச் செய்தவர்கள் , அவற்றிற்குரிய பயனை முறையாகச்  சாலோக பதத்தையும், சாமீப பதத்தையும் , சாரூப பதத்தையும் உறுதியாகப் பெறுவார்கள். அப்பதங்களுக்குரிய இன்பங்களை உரிய காலம் வரை அனுபவித்துப் பின்னர், அப்பதங்களை விட்டுப் பிரிந்து, மீண்டும் உலகத்தில் வந்து பிறப்பார்கள். அவ்வாறு பிறக்கும் பொழுது முற்பிறப்பு வினைப்பயன்களை நுகர்ந்து, அவற்றை அறுப்பதற்காகத் தவம் செய்த நல்ல உயர்ந்த குலத்தில் வந்து பிறப்பார்கள். ஆதலால் அந்தப் பிறப்பில் தம் தவத்தால் ஆசைகளை அறுத்து, ஞானத்தைப் பெறுவர் என்று முத்திக்குரிய நூலைக் கற்றுணர்ந்தவர்கள் கற்ற நூலின்வழி அறிவிப்பார்கள். 

சொ.பொ.வி -

தவம் செய்தார் - சரியை, கிரியை, யோகம் செய்தவர்கள், தவலோகம் - அதற்குரிய பயனாகிய மூன்று உலகங்கள், நற்சார்பில் - நல்லகுடியில், நண்ணுதல் - அடைவர். (இப்பாடல் ஞானம் ஒரு பிறவியில் கிடைக்காது என்றும் பல பிறவிகளில் சரியை முதலாகிய சாதனங்களைச் செய்து, ஞானம் பெறுவதற்குரிய பிறவியை ஆன்மா அடையும் என்று கூறுகிறது) 


உதாரணம் -2

பசித்துண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும்

இசைத்து வருவினையின் இன்பம் - இசைத்த

இருவினை ஒப்பில் இறப்பில் தவத்தான்

மருவுவனாம் ஞானத்தை வந்து. 

பொருள் -

அறநூல்களில் கூறப்பெற்றுள்ள வேள்வி முதலாகிய தவங்களைச் செய்வதால், அவற்றால் உண்டாகும் சொர்க்கம் முதலிய இன்பங்களும், அறநூல்களில் உடன் கூறப்பெற்றுள்ளது. அந்த இன்பங்கள் பசித்தவன் பசியை நீக்க உணவு உட்கொள்ளுவது போன்று நிலையில்லாதது ஆகும். அதாவது உணவு உண்டதும் சீரணமாகிறது. ஆனால் சிறிது நேரம் கழித்துப் பசித்துன்பம் ஏற்படுகிறது. முதலில் உண்ட உணவு பசித்துன்பத்தை நீக்கி இன்பத்தைத் தந்தாலும், அந்த இன்பம் நிலையில்லாது மீண்டும் பசியை ஏற்படுத்துகிறது. அது போலத்தான் வேள்வி முதலியவற்றால் வரும் பயன்களும் நிலையில்லாதவை ஆகும். மீண்டும் மீண்டும் வேள்வியைச் செய்ய வைக்கும். ஆனால் சைவத்தில் கூறிய சரியை, கிரியை, யோகம் முதலிய தவத்தால் இருவினை ஒப்பு நிகழும். அந்த இருவினை ஒப்பு நேர்ந்தால் ஆன்மா ஞானத்தைப் பெறும். 

சொ.பொ.வி :

இசைத்த இருவினை - கூறப்பட்ட புண்ணிய பாவங்கள், இறப்பில் தவம் - அழிதல் இல்லாத சரியை, கிரியை , யோகம் முதலிய தவங்கள், (இப்பாடலில் வேள்வி இன்பமாகிய பயனைத் தந்தாலும் அது நிலையில்லாதது. ஆனால் சரியை முதலியவற்றைச் செய்தால் அந்தப் புண்ணியங்கள் நிலையாக இருந்து , ஆன்மாவிற்கு இருவினை ஒப்பினைத் தந்து ஞானத்தைப் பெறவைக்கும் என்று கூறப்பெற்றுள்ளது.)


எட்டாம் சூத்திரம் - இரண்டாம் அதிகரணம். 

(மூவகை ஆன்மாக்களுக்கு இறைவன் ஞானம் அருளுவதைக் குறிப்பிடுகிறது)

மேற்கோள் -

இவ் ஆன்மாக்களுக்குத் தமது முதல் தானே குருவுமாய் உணர்த்தும் என்றது.

பொருள் -

முதல் அதிகரணத்தில் கூறியபடி, சரியை, கிரியை, யோகம் முதலானவை பலன் தருகின்ற பிறப்பில் மலபரிபாகமும்,  சத்திநிபாதமும் ஏற்பட்டு, ஞானத்தை அடைய விரும்புகின்ற ஆன்மாவிற்கு , இதுவரை உள்நின்று உணர்த்திய இறையருள் , குருவடிவாக எழுந்தருளி வந்து ஞானத்தை உணர்த்தும். (முதல் - இறைவன்)

ஏது -

அவன் அந்நியமின்றிச் சைதன்ய சொரூபியாய் நிற்றலான். 

பொருள் -

இறைவன் பாலில் மறைந்திருக்கும் நெய் போல அல்லது தயிரில் தோன்றும் நெய்போல ஆன்மாக்களிடத்தில் விளங்கி, குருவாகிய வடிவே தன் சொரூபமாகக் கொண்டு, தவம் உடைய ஆன்மாக்களுக்கு விளங்கி நிற்பான். 

(சைதன்யம் - குற்றம் நீங்கிய)


உதாரணம் - 3

மெய்ஞ்ஞானம் தானே விளையும் விஞ்ஞானகலர்க்கு

அஞ்ஞான அச்சகலர்க்கு அக்குருவாய் - மெய்ஞ்;ஞானம்

பின்னுணர்த்தும் அன்றிப் பிரளயா கலருக்கு

முன்னுணர்த்தும் தான்குருவாய் முன். 

பொருள் -

ஆணவ மலம் மட்டும் உடைய விஞ்ஞானகலருக்கு இறைவன், அறிவினுள் அறிவாய் , தன்மை இடத்தில் நின்று மெய்ஞ்ஞானத்தை விளைவிப்பான். பிரளயாகலருக்கு அவ்வாறு இன்றி நான்கு தோளும், மூன்று கண்ணும், கறைக்கண்டமும் ஆகிய உறுப்புக்களுடன் தன் இயல்பான வடிவையே காட்டி, முன்னிலையில் நின்று ஞானத்தை உணர்த்துவான். அஞ்ஞானத்தை உடைய அச்சகலர்க்குச் சகலரின் வடிவாகிய மானுடச் சட்டை தாங்கிக் குருவாய் வந்து, அக்குருவடிவில் தான் மறைந்திருந்து இறைவன் ஞானத்தை உணர்த்துவான்.

சொ.பொ.வி -

விஞ்ஞானகலர் - ஆணவம் மட்டும் உள்ளவர்கள், சகலர் - ஆணவம், கன்மம், மாயை உடையவர், பிரளயாகலர் - ஆணவம், கன்மம் உடையவர். (இப்பாடல் ஆன்மாக்களின் வகையான மூவருக்கு இறைவன் ஞானத்தை அளிக்கும் திறம் கூறுகிறது)


உதாரணம் - 4

அறிவிக்க அன்றி அறியா உளங்கள்

செறியுமாம்  முன்பின் குறைகள் - நெறியில்

குறையுடைய சொற்கொள்ளார் கொள்பவத்தின் வீடுஎன்

குறைவில்சகன் சூழ்கொள் பவர்க்கு.

பொருள் -

ஆன்மாக்கள் தங்களுக்குரிய பக்குவ முறையில் இறைவன் அறிவிக்க, அறியும் தன்மை உடையனவாகும். எல்லா உயிரும் ஒன்றுபோல் இறைவன் அறிவிக்க அறியும் தன்மை உடையன அல்ல. ஆதலால் குறைபாடு இல்லாத இறைவன் கூறுகின்ற குருவருள் மொழியை ஏற்றுக்கொண்டு உணரும் தன்மை உடைய, குறை அறிவுடைய பிரளயாகலருக்கும் சகலருக்கும் இறைவனின் குருமொழிகள் முன்னிலையிலும் பின்னிலையிலும் நிகழ்வனவாம். அதே நேரத்தில் குறையறிவு இல்லாத விஞ்ஞானகலருக்கு இறைவன் தன்னிலையில் நின்று உணர்த்த ஞானம் கிடைக்கும் என்பதை அறிய வேண்டும். 

சொ.பொ.வி -

அறிவிக்க - சுட்டி அறிவிக்க, குறைவில் சகன் - குறைவில்லாத விஞ்ஞானகலர். (இப்பாடல் மூவகை ஆன்மாவிற்கும் இறைவன் மூவகையாக நின்று ஞானம் உணர்த்துவதற்குரிய காரணத்தை விளக்குகிறது. விஞ்ஞானகலருக்கு அவர்தம் அறிவுக்குள் அறிவாய் நின்று ஞானத்தை உணர்த்துவதையும் குறிப்பிடுகிறது)


உதாரணம் - 5

இல்லா முலைப்பாலும் கண்ணீரும் ஏந்திழைபால்

நல்லாய் உளவாமால் நீர்நிழல்போல் - இல்லா

அருவாகி நின்றானை யாரறிவார் தானே

உருவாகித் தோன்றானேல் உற்று. 

பொருள் -

அறிவுடைய மாணவனே, அணிகலன்கள் அணிந்த ஒரு பெண்ணிற்குத் தன் குழந்தையிடத்து வைத்த அன்பு பிறருக்கு வெளிப்படையாகத் தெரியாமல் இருப்பினும், அவ்அன்பின் வடிவமாக அவளிடத்தில் உண்டாகும் முலைப்பாலும், கண்ணீரும் குழந்தையைக் காணும் முன் இல்லாததாய் இருந்து, கண்டபின் உளவாகும். அதுபோல நீரின் கண்ணே உள்ள நிழல் வேறாக நில்லாது நீருடன் கலந்து நின்றாற் போல, ஆன்மாவுடன் கலந்து அருவமாய் நின்ற இறைவன், ஆன்மாக்களிடத்துப் பக்குவம் ஏற்பட்டுத் தான் கண்ட பொழுது வெளிப்பட்டுக் குருவாய்த் தோன்றுவான். இறைவன் குருவடிவாய் வந்து தோன்றி உணர்த்தானாயின் இறைவனை யார்தான் அறிவார்?

சொ.பொ.வி :

இல்லாத - குழந்தையைக் காண்பதற்கு முன் இல்லாத , இழை - அணிகலன்கள். (இப்பாடல் சகலருக்கு இறைவன் குருவடிவாய் வருவதை உவமை மூலம் விளக்குகிறது. மேலும் நீர்நிழல் எவ்வாறு பிரியாது இருக்கிறதோ அதுபோல இறைவன் ஆன்மாக்களிடத்துப் பிரியாமல் இருப்பான் என்று கூறுகிறது. 


எட்டாம் சூத்திரம் - மூன்றாம் அதிகரணம். 

(இவ் அதிகரணம் ஆன்மா ஞானத்தை அறிய முடியாத வண்ணம் ஐந்து பொறிகளின் செயல்பாடுகள் மறைத்து நிற்கின்றன என்று கூறுகின்றது)

மேற்கோள் -

இனி, இவ்வான்மாக்கள் ஐயுணர்வுகளான் மயங்கித் தம்மை உணராது என்றது. 

பொருள் -

உணர்த்த உணரும் அறிவை உடைய ஆன்மாக்கள் மெய் முதலிய ஐந்து பொறிகளால் மயக்கமுற்றத் தம்மை உணராது. 

ஏது -

அவைதாம்,பளிங்கில் இட்ட வண்ணம் போல் காட்டிற்றைக் காட்டி நிற்றலான்.

பொருள் -

படிகக் கல்லின் கீழே வைக்கப்பட்ட பல்வேறு நிறங்கள் படிகத்தின் வெண்மை ஒளியைக் காட்டாமல் தத்தம் நிறங்களைக் காட்டுமாப் போலே , உயிர்களிடத்தில் பொருள்களை அறியும் கருவிகளாய் இருக்கும் ஐம் பொறிகளும் ஆன்மாவின் சொரூபத்தைக் காட்டாமல் ஐம்பொறிகளுக்குரிய பொருளையே விளக்கி நிற்பதால் ஆன்மா மயங்கித் தம்மை உணராது நிற்கிறது. 

உதாரணம் - 6

பன்னிறம் காட்டும் படிகம்போல் இந்திரியம்

தன்னிறமே காட்டும் தகைநினைந்து - பன்னிறத்துப்

பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய்கண்டான்

மெய்ப்பொருட்குத் தைவமாம் வேறு. 

பொருள் -

தன்னைச் சார்ந்த பல நிறங்களின் இயல்பான தன்மையைக் காட்டுகின்ற படிகம் போல, ஆன்மா தான் பொருந்தியிருக்கின்ற மெய் முதலிய இந்திரியங்கள் காட்டுவதாலே, பொருள்களை உணரும். படிகத்தின் நிறம் வேறு. (வெண்மை). படிகத்தில் வைத்த பலநிறப் பொருள்களை எடுத்து விட்டால் அந்த வெண்மைநிறம் தெரியவரும். அது போல ஆன்மாவும் இந்திரியங்களைத் தன் இயல்புக்கு வேறானவை எனத் தெரிந்து இந்திரியங்கள் காட்டும் பொருள்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை உணர்ந்து விட்டால் , இறைவனாம் சிவத்தின் இயல்பு தன்னிடத்தில் விளங்கச் செய்யும். அதனால் அச்சிவத்திற்கு ஆன்மா அடிமையாகும். 

சொ.பொ.வி :

படிகம் - படிகக்கல், இந்திரியம் - மெய் முதலிய ஐந்து கருவிகள், தன்னிறம் - தன் இயல்பு, பொய்ப்புலன் - இந்திரியங்களால் அனுபவிக்கப் படும் சுவை முதலிய அனுபவங்கள், பொய் - அவை நிலையற்றவை, தைவம் - அடிமை - தனக்கென ஒரு செயல் இன்றி இறைவன் அருள்வழி நடக்கும்,  (இப்பாடல் ஆன்மா ஞானத்தை அறிய முடியாத வண்ணம் ஐம்பொறிகள் செயல்பட்டு, ஆன்மாவை மறைத்திருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது)


எட்டாம் சூத்திரம் - நான்காம் அதிகரணம்.

(இது ஐம்பொறிகளை விட்டு நீங்கினால் ஆன்மா இறைவன் திருவருளைப் பெற்று, அவனுள் அடங்கி மீண்டும் பிறப்பு எடுக்காது என்பதை உணர்த்துகிறது)

மேற்கோள் -

இனி, இவ்வான்மா தன்னை இந்திரியங்களின் வேறாவான் என்று காணவே,தமது முதல் சீபாதத்தை அணையும் என்றது. 

பொருள் -

ஐம்பொறிகளால் மயங்கித் தம்மை உணராத ஆன்மா, அறிவாகவும், வியாபகமாகவும் உள்ள தன் சிறப்பு இயல்பை - அறிவில்லாத ஐம்பொறிகளுக்கு (சடப்பொருளுக்கு) வேறானவை என்று உணர்ந்தால் இறைவனின் திருவடியை அடையும். 

ஏது -

ஊசல் கயிறு அற்றால் தாய் தரையேயாம் துணையான். 

பொருள் -

ஒருவன் ஏறி இருந்து ஆடும் ஊஞ்சல் கயிறு அறுந்து விட்டால் அவனைத் தாய் போலத் தாங்குவது நிலமாகும். அதுபோல, ஐம்பொறிகளை விட்டுவிட்டால் ஆன்மாவை இறைவன் தாங்கிக் கொள்வான். 

உதாரணம் - 7

சிறைசெய்ய நின்ற செழும்புனலின் உள்ளம்

சிறைசெய் புலன்உணர்வில் தீர்ந்து - சிறைவிட்ட

அலைகடலில் சென்றடங்கும் ஆறுபோல் மீளாது

உலைவில்அரன் பாதத்தை உற்று. 

பொருள் -

அணைகட்டித் தடை செய்ததால் தேங்கி நின்ற ஆற்று நீர் போல - மெய் முதலிய இந்திரியங்கள் தடை செய்ய, அவற்றுள் அடங்கி நின்ற ஆன்மா - அணை உடைந்து வெள்ளமென ஓடும் நீர் - கடலில் சென்று அக்கடல் நீராய் ஆகி, மீண்டும் ஆற்றுக்கு வராதது போல , தன்னைத் தடை செய்த புலன்களின் உணர்வாகிய பாசத்தை விட்டு, கேடில்லாத சிவபெருமானது திருவடியை அடைந்த ஆன்மா அவனுள் அடங்கி மீண்டும் பிறக்காது. 

சொ.பொ.வி -

சிறை - அணை, உள்ளம் - ஆன்மா, புலன் - மெய் முதலிய ஐந்து கருவிகள், உலைவில் - கேடில்லாத, அரன் - சிவபெருமான். (இது ஐம்பொறிகளை விட்டு நீங்கினால் ஆன்மா இறைவன் திருவருளை அடைந்து மீண்டும் பிறப்பெடுக்காது என்பதைக் கூறுகின்றது)


உதாரணம் - 8

எவ்வுருவும் தான்என்னின் எய்துவார் இல்லைதாள்

இவ்வுருவின் வேறேல் இறையல்லன் - எவ்வுருவும்

கண்போல் அவயவங்கள் காணாஅக் கண்ணில்லார்

கண்பேறே காணக் கழல்.

பொருள் -

ஐந்து வகைப்பட்ட மெய் முதலிய கருவிகள் உணரும் உணர்வு. சிவமே ஆகும் என்றால், அக்கருவிகள் வழி இன்பத்தை அனுபவிக்கும் உடம்புடன் கூடிய சகல நிலையை விட்டு விட்டு, இறைவனின் திருவடியைக் கூடும் சுத்த நிலையை விரும்புபவர் ஒருவரும் இல்லை. இறைவன் ஆன்மாக்களோடு கலந்திருப்பதால் தன்னுடைய மெய்யுணர்வு இன்றி, ஆன்மாவின் உணர்வைக் கொண்டிருந்தால் அவன் இறைவனாக மாட்டான். இந்த அடிப்படையில் இறைவனுடைய கலப்பினால் ஆன்மாவின் உணர்வு சிவமாதல் போல, இந்திரியங்களின் உணர்வு பிறர் கூறுவது போலச் சிவமே ஆயினும், இரண்டும் தம்முள் ஒப்பன அல்ல என்பதை உணரலாம். ஐம் பொறிகளில் ஆன்மா ஒரே மாதிரியாகக் கலந்திருந்தாலும் , கண் மட்டும் தன் பார்வை செல்லும்வரை பொருள்களைச் சென்று அறியும். மற்ற நான்கு இந்திரியங்களும் பொருள்கள் தன்னிடம் வந்தால்தான் அறியும். அதுபோல இறைவன் ஆன்மாவில் கலந்து அதன்வழி ஐந்து இந்திரியங்களில் கலந்து நின்றாலும் இந்திரியங்களில் ஏகதேசமாகத்தான் ( ஒவ்வொரு அறிவாக) நிற்கிறான். ஆனால் ஆன்மாவில் கலந்தால் வியாபகமாய்க் கலந்திருக்கிறான். (எல்லாவற்றிலும் ஒருசேர). இவ்வாறு இறைவன் கலந்திருப்பதைக் கண் உள்ளவர்களைக் கொண்டும், கண் இல்லாதவர்களைக் கொண்டும் அறியலாம். 

சொ.பொ.வி -

எவ்வுருவும் - ஐந்து கருவிகள், தாள் - திருவடி (பேரின்பம்) , அவயவங்கள் - கண்ணைத் தவிர எஞ்சிய இந்திரியங்கள், கண்ணில்லார் - குருடர், கண்பேறு - கண் உடையவர் . (இறைவன் ஆன்மாவிடத்தும் கருவிகளிடத்தும் கலந்திருக்கிறான். எனவே கருவிகள் மூலமே இறைவனின் பேரின்பதை அடையலாம் என்று பிற தத்துவத்தார் கூறுவர். இதனை மறுத்து இரண்டிலும் இறைவன் கலந்திருந்தாலும் ஒரே மாதிரியாகக் கலக்கவில்லை. மெய் முதலிய கருவிகளில் அந்தந்தக் கருவிகளுக்கு ஏற்பக் கலந்திருக்கின்றான். (ஏகதேசம்) ஆனால் ஆன்மாவிலோ முழுமையும் கலந்திருக்கிறான். (வியாபகம்) என இதைக் கண்ணுடையவர் போல ஞானம் உடையவர் அறிவர். ஞானமில்லாதவர் அறியமாட்டார் என்று விளக்குகிறது)


உதாரணம் -9

ஐம்பொறியின் அல்லைஎனும் அந்ததர சிவனை

ஐம்பொறியை விட்டங்கு அணைசகலன் - ஐம்பொறியின்

நீங்கான் நீர்ப்பாசிபோல் நீங்குமல கன்மம்வரின்

நீங்கானை நீங்கு நினைந்து. 

பொருள் -

(ஆன்மா) வியாபக அறிவை உடையது அன்றி (எல்லாவற்றையும் ஒருசேர அறியும் அறிவு) ஏகதேச அறிவுடையது அல்ல எனும் வேத வாக்கியத்தின் சிறப்பினைப் பெற்ற மாணவனே, ஐம்பொறிகளால் ஆகிய புலன் உணர்வுகளில் இருந்து நீங்கி, சிவபெருமான் திருவடியைச் சென்று சேர்ந்த ஆன்மா, மீண்டும் தன் ஐம்பொறிகளைக் காரணமாகக் கொண்டு , திருவடியை விட்டு நீங்காது. நீரில் உள்ள பாசியில் கல்லெறிந்தாற் போல, (கல்பட்டு விலகி மீண்டும் கூடும்) மலவாசனையால் மீண்டும் மல கன்மங்கள் ஆன்மாவை வந்து பற்றுமானால், இறைவனைத் தியானித்து மல கன்ம மாயைகளை நீக்கிக் கொள்ளும். 

சொ.பொ.வி :

அந்ததர - மகாவாக்கியத்தினை உணர்ந்த, சகலன் - மும்மலங்களைக் கொண்ட ஆன்மா, (இப்பாடல் திருவடியை அடைந்த ஆன்மா மலவாசனையால் மீண்டும் இந்திரியங்களைக் கூடும் என்றால், அதனை இறைவனை நினைந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதை உணரத்துகிறது. 

________________________________________

        ஒன்பதாம் சூத்திரம்

(இச்சூத்திரம் இறைவன் அருளால் ஞானத்தைப் பெற்றுப் பாசத்தை நீக்கிட இறைவன் திருவடியை அடையலாம் என்பதையும் திருவடி ஞானம் கிடைப்பதற்கு ஐந்தெழுத்தைத் தவறாது உச்சர்ப்பதையும் கூறுகிறது0

ஊனக்கண் பாசம் உணராப் பதியை

ஞானக் கண்ணினில் சிந்தை நாடி

உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத்

தண்ணிழலாம் பதிவிதி எண்ணும் அஞ்செழுத்தே. 


பொருள் -

சுட்டிக்காட்டி அறிகின்ற பசு அறிவினாலும், பாச அறிவினாலும் அறிய முடியாத இறைவனை , அவனது திருவடி ஞானம் என்னும் அறிவினால் , ஆன்மா தன் அறிவின் கண்ணே ஆராய்ந்து இறைவனை அறிவதாகுக. கானல் நீர் போல விரைந்து அழியக்கூடிய பாசக்கூட்டத்தை விட்டு நீங்குவதால் இறைவன் திருவடி ஞானத்தைப் பெறலாம். அத்திருவடி ஞானம் இடையறாது கிடைத்தல் பொருட்டு, திருவைந்தெழுத்து மந்திரத்தை விதிப்படி அறிந்து உச்சரிக்க வேண்டும். 

சொ.பொ.வி -

ஊனக்கண் - குறைந்த அறிவாகிய பசு அறிவு, பாசம் - பாசஅறிவால், உணரா - உணரமுடியாத, பதியை - இறைவனை, உராத்துனைத்தேர் - செலுத்துதல் இல்லாத கானல் நீராகிய தேர், தண்ணிழல் - குளிர்ச்சி நிழலாகிய பதிஞானம். 


ஒன்பதாம் சூத்திரம் - முதல் அதிகரணம். 

(இது, பதிஞானத்தினாலே தான் (அவனருளால்) இறைவனைக் காணமுடியும் என்பதை விளக்குகிறது)

மேற்கோள் -

ஈண்டு அம்முதலை ஞானக் கண்ணாலே காண்க என்றது. 

பொருள் -

பாசஞான , பசு ஞானங்களால் அறியமுடியாத இறைவனைச் சிவஞானத்தால் அறிதல் வேண்டும். 

ஏது -

அவன் , வாக்கு மனாதீத கோசரமாய் நிற்றலான் 

பொருள் -

நாத முடிவான பாச ஞானத்திற்கும் , மலமாகிய பசு ஞானத்திற்கும் அப்பாற் பட்டவன் , அதே நேரத்தில் பதி ஞானத்தாலே எட்டப் படுகின்றவனாய் நிற்பவன் இறைவன். எனவே அவன் அளித்திடும் ஞானக் கண்ணாலே அவனை அறிதல் வேண்டும். 


உதாரணம் - 1

நாடியோ என்போ நரம்புசீக் கோழையோ

தேடி எனையறியேன் தேர்ந்தவகை - நாடியரன்

தன்னாலே தன்னையும் கண்டு தமைக்காணார்

என்னாம் எனஅறிவார் இன்று.

பொருள் -

காட்சிக்குரிய இந்த உடம்பிற்குள் இருக்கின்ற ஆன்மாவாகிய யான் யார்? இடை, பிங்கலை, சுழுமுனை என்ற நாடி நரம்புகளோ? புண்ணிலிருந்து ஒழுகுகின்ற நீரோ? அல்லது கண்ணில் ஒழுகும் கோழையோ? அல்லது இந்திரியங்களோ? அல்லது அந்தக்கரணங்களோ என்று ஆன்மாவாகிய என்னைத் தேடி அறிந்திலேன். இவ்வாறு நான் அறிந்திலேன் என்று அறிகின்ற அறிவு வேறு உண்டு என்று ஆராய்ந்து நோக்கினால் , இறைவனின்; திருவருள் விளங்கித் தோன்றுகிறது. அத்திருவருளால் இறைவனையும் அறிந்து, இறைவனை விட்டு நீங்காது இருக்கின்ற தம்மையும் ஆன்மா அறிகிறது. இவ்வாறு அறிதலைச் செய்யாதவர்கள் முத்திக் காலத்து எதனால் தம்மை அறிய வல்லுநர் ஆவர்?

சொ.பொ.வி -

சீ - புண்ணிலிருந்து ஒழுகுகின்ற நீர், கோழை - கண் கோழை, எனை - ஆன்மாவை, அரன்தன்னாலே - இறையருளால், தமைக்காணார் - இறைவனையும் ஆன்மாவையும் அறியாதவர்கள். (இப்பாடல் உடல் உறுப்புகள் ஆன்மா அல்ல, அவற்றிலிருந்து வேறுபட்டு நிற்கின்ற அறிவு ஆன்மாவாகும். இறைவனை நினைக்க நினைக்க, இறைவனையும் ஆன்மாவாகிய தம்மையும் ஆன்மா அறியும்.. இறைவனை நினைக்காதவர்கள் அவ் இரண்டினையும் அறியமாட்டார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது. )


உதாரணம் - 2

காட்டிய கண்ணே தனைக்காணா கண்ணக்குக்

காட்டாய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய

உள்ளம் தனைக்காணா உள்ளத்தின் கண்ணாய

கள்வன்தான் உள்ளத்தில் காண். 

பொருள் -

கண் ஒருபொருளைக் காணுங்கால் தானே காணாது. உயிரால் காட்டப்பெற்றக் காணும். அவ்வாறு காணுகின்ற கண்ணானது காண வைக்கின்ற உயிரைக் காணமாட்டாது. அதுபோல, உயிரும் தானே பொருள்களைச் சேர்ந்து அறியாது. இறைவன் தன்னுள் மறைந்து நின்று அறிவிக்க அறியும். கண் சடப்பொருள் என்பதால் உயிரை அறியாது என்பது சரி.ஆனால் உயிர் அறிவுப் பொருளாயிற்றே. அது அறியாது என்று கூறுவது பொருந்துமோ? ஆதலால் இறைவன் கள்வன் போல உடனாய் நின்று அருளுகின்ற அருளாலேதான் உயிர் இறைவனையும் தன்னையும் அறிய முடிகிறது. 

சொ.பொ.வி -

தனைக்காணா - கண் தன்னையும் காணாது உயிரையும் காணாது, கள்வன் - உயிரில் மறைந்திருக்கும் இறைவன், 


ஒன்பதாம் சூத்திரம் - இரண்டாம் அதிகரணம்

(இது, ஆன்மா அசத்தை - அசத்து என்று அறியும் பொழுது பதிஞானம் தோன்றகிறது என்று கூறுகிறது)

மேற்கோள் -

இனி அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்து  என்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்று உணரற்பாற்று. 

பொருள் -

அசத்தாய்ப் பலநிலைகளில் விளங்கும் உலகப் பொருள்கள் நிலையில்லாதவை என்று ஆராய்ந்து அறிந்தால் , அவ்விடத்து எந்தப் பொருளையும் பற்றாமல்  விளங்கித் தோன்றுவது பதி ஞானத்தின் இயல்பு என்ற அறிந்து கொள்ளலாம். 

ஏது - 

வேற்று இயல்பாகிய வன்ன பேதங்களை வேற்று இயல்பு என்று கண்டு களிக்கின் உளதாய் இருப்பது படிக சொரூபமாம் துணையான். 

பொருள் -

படிகங்களின் கீழே வைக்கப்பட்ட பலநிற வண்ணப் பொருள்களை நீக்கி விட்டால் நிலையாய் நிற்பது படிக ஒளியும் வெண்மையான சொரூபமே ஆகும். 

உதாரணம் - 3

நிரக்குணனாய் நின்மலானய் நித்தியா னந்தனாய்த்

தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் - அற்புதம்போல்

ஆனா அறிவாய் அளவிறந்து தோன்றானோ

வானே முதல்களையின் வந்து. 

பொருள் -

அசுத்தப் பிரபஞ்சம் போல அளவிட்டு அறியப்படாதவனாய் , முக்குணங்களைக் கடந்த காரிய ரூபமாகவும் அறியப்படாதவனாய் , மல கன்மங்களைக் கடந்தவனாய், சுத்த பிரபஞ்சம் போல ஆனந்த வடிவாய் அறியப் படாதவனாய், இவையெல்லாம் கூடியிருக்கின்ற உயிர் போல அன்றி, அதற்கு மேம்பட்டவனாய், ஒன்றாலும் அறியப்படாத இறைவன், ஆகாயம் முதலிய அசத்துப் பொருள்களை எல்லாம் இறைவன் அல்ல என்று நீக்கியவழி சுட்டறிவினைக் கடந்து, சூனியப்பொருள் போலத் தோன்றி, தன்னுடைய பேரறிவின்கண் நீங்காது , சோதிக்குள் சோதியாய் இறைவன் தோன்றமாட்டானோ? தோன்றுவான் என்றவாறு. 

சொ.பொ.வி -

நிர்க்குணன் - அசுத்தப் பிரபஞ்சம் கொண்ட ராசதம் அல்லாத முக்குணம் அல்லாதவன், நின்மலன் - மலமற்றவன், நித்தியானந்தன் - ஆனந்த வடிவாய் அறியப்படாதவன், தற்பரன் - மேலானவன், வான்முதல் - ஆகாயம் முதலிய தத்துவங்கள் (இப்பாடல் அசத்துப் பொருள்களை எல்லாம் அசத்தாக உயிர் உணருகின்ற பொழுது, இறைவன் உலகப் பொருள்போல் தோன்றாது, சூனியப் பொருள்போல் தோன்றி, பின் சோதியுள் சோதியாய்த் தோன்றுவான் என்று கூறுகிது )


உதாரணம் - 4

சுட்டி உணர்வதனைச் சுட்டி அசத்துஎன்னச் 

சட்ட இனிஉளது சத்தேகாண் - சுட்டி

உணர்ந்தநீ சத்துஅல்லை உண்மையைத் தைவம்

உணர்ந்ததினால் பொய்விட்டுப் போம். 

பொருள் -

சுட்டி உணரப் படுவதாகிய பிரபஞ்சத்தை ஒவ்வொன்றாய்ச் சுட்டி அசத்து என்று கழித்துக் கொண்டே செல்ல - முடிவில் செம்மையாய்த் தெரிவது சத்தே ஆகும். இவ் உண்மையை உணர்தல் வேண்டும். இவ்வாறு சுட்டி அறிந்த ஆன்மாவானது சத்தாகிய இறைவன் ஆகாது. சத்தாகிய தெய்வத்திற்கு உடைமையாகி அத்தெய்வப் பொருளை உணர்ந்தால், அப் புணர்ச்சியால் சுட்டுணர்வாகிய சுட்டறிவு ஆன்மாவை விட்டு நீங்கும். 

சொ.பொ.வி -

சட்ட இனி உளது - செம்மையாக அறியப் படுவது, தைவம் - அடிமை, பொய் - சுட்டி அறிவதாகிய சுட்டறிவு. (இது அசத்தை அசத்து என்று கண்டவிடத்துத் தோன்றுவது பதிஞானம் என்பதை உணர்த்துகிறது)


உதாணரம் - 5

கண்டதை அன்றுஅன்று எனவிட்டுக் கண்டசத்தாய்

அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டணைந்த

ஊனத்தைத் தான்விடுமாறு உத்தமனின் ஒண்கருட

சானத்தில் தீர்விடம்போல் தான். 

பொருள் -

சுட்டி உணரப்பட்ட பிரபஞ்சத்தை இது சத்து அன்று , இது சத்து அன்று என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து நோக்கி, அவற்றை நீக்கி, ஆன்ம அறிவின்கண் நின்ற இறைவனை ஆராய்ந்து உணர்ந்தால், ஆன்மாவில் இறைவன் அத்துவிதமாய்க் கலந்திருத்தலை அறியலாம். அத்தகைய இறைவனால் அநாதி காலம் தொட்டுக் கூடி நின்ற சுட்டுணர்வாகிய குறைபாடு ஆன்மாவை விட்டு நீங்கும். அது எதுபோல என்றால் ஒளி பொருந்திய கருட தியானத்தினால் விஷத்தைத் தீர்க்கும் பாவகன் செயல் போன்றதாகும். 

சொ.பொ.வி -

கண்டதை - கண்ட பிரபஞ்சத்தை, அண்டனை - இறைவனை, பண்டணைந்த - அநாதிகாலத்தில் அமைந்த, ஊனத்தை - சுட்டி அறியும் சிற்றறிவை , கருட சானத்தில் - கருட தியானத்தில். (இப்பாடலில் நிலையில்லாத உலக இன்பங்களைச் சத்து அன்று என்று நீக்கினால் இறைவனை அறியலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்மா ஆணவத்தை கருட தியானத்தினால் நீக்கிய விஷம் போல நீக்கிக் கொள்ளும் என்றும் கூறுகிறது)

ஒன்பதாம் சூத்திரம் - மூன்றாம் அதிகரணம்

(இது ஐந்தெழுத்தை முறைப்படி உச்சரிப்பதைக் கூறுகிறது)

மேற்கோள் -

இனி இவ்விடத்து ஸ்ரீபஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்க என்றது.

பொருள் -

ஞானக்கண்ணால் பதியை அறிந்தவிடத்து வாசனா மலம் தோன்றுமானால், அதனை நீக்குதல் பொருட்டுத் திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்க வேண்டும். 

ஏது -

 இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் , அஞ்ஞானத்தை வேம்பு தின்ற புழுப்போல , நோக்கிற்றை நோக்கி நிற்குமாதலின் , அது நீக்குதற்கெனக் கொள்க. 

பொருள் -

வேப்ப மரத்துப் புழு அதனை விட்டுக் கரும்பைத் தின்றாலும் , அதன் இனிய சுவையை விட்டு விட்டுப் பழக்க தோஷத்தால் புழு வேம்பை நாடி வருவதுண்டு. அதுபோல அசத்தை விட்டு நீங்கிய ஆன்மா நாத சொரூபத்தை அடைந்தாலும், பழக்க வசத்தால் சிற்றின்பமாகிய பிரபஞ்ச இன்பத்தை நோக்கி நிற்கும் என்று கூறி மேற்கோளை வலியுறுத்துகிறது.


உதாரணம் - 6

அஞ்செழுத்தால் உள்ளம் அரன்உடைமை கண்டரனை

அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் - அஞ்செழுத்தால்

குண்டலியில் செய்துஓமம் கோதண்டம் சானிக்கில்

அண்டனாம் சேடனாம் அங்கு. 

பொருள் -

ஆன்மா சிவனுக்கு உடைமை ஆதலின் திருவைந்தெழுத்தை உச்சரிக்கும் முறையினை ஆராய்ந்து , இதயத்தில் இறைவனை அவ் ஐந்தெழுத்தால் அர்ச்சனை செய்து, அவ் ஐந்தெழுத்தால் புண்டரீக இடமான உந்தியில் ஓமம் செய்து, புருவ நடுவின்கண் தியானித்துச் சிவயோகம்பாவனை செய்தால் , அப்பாவனையில் இறைவன் விளங்கித் தோன்றுவான். ஆன்மா அடிமையுமாகும். 

சொ.பொ.வி -

உள்ளம் - ஆன்மா, அர்ச்சித்து - அருச்சனை செய்து, உந்தி - வயிற்றில்,(புண்டரீகதானம்), கோதண்டம் - புருவநடு, சானிக்கில் - தியானிக்கி;;ல், அண்டனாம் - விளங்கித் தோன்றுவான், சேடனாம் - அடிமையாம். (இப்பாடல் ஐந்தெழுத்தை உச்சரிக்கும் முறையைக் கூறுகிறது)


உதாரணம் - 7 

  இந்துவில் பானுவில் இராகுவைக் கண்டாங்குச்

    சிந்தையில் காணில் சிவன்கண்ணாம் - உந்தவே

காட்டாக்கில் தோன்றிக் கனல்சேர் இரும்பென்ன

ஆள்தானாம் ஓது அஞ்செழுத்து. 

பொருள் -

இராகு, கேது என்று சொல்லப்படுகின்ற கிரகங்கள் , மற்ற கிரகங்களைப் போல நேரிடையாகத் தோன்றாது. அவற்றைக் கிரகண காலத்தில் சந்திர சூரியர்களிடத்தில் காணுவது போல,  இறைவனை இதயத்தில் அஞ்செழுத்து முறையால் கண்டால் , கடையும் பொழுது விறகில் இருந்து அக்கினி தோன்றுவது போல இறைவன் வெளிப்பட்டு, அறிவுக்குள் அறிவாய்த் தோன்றுவான். நெருப்பைச் சேர்ந்த இரும்பு நெருப்பாவது போல ஆன்மாவும் இறைவனுக்கு அடிமையாகும். ஆதலால் முறைப்படி அஞ்செழுத்தை ஓதவேண்டும். 

சொ.பொ.வி -

இந்து - சந்திரன், பானு - சூரியன் , இராகு - கோள், ஆள்தானாம் - அடிமையாம். 


உதாரணம் -8

மண்முதல் நாளம்மலர் வித்தை கலாரூபம்

எண்ணிய ஈசர் சதாசிவமும்  - நண்ணில்

கலைஉருவாம் நாதமாம் சத்தியதன் கண்ணாம்

நிலையதிலாம் அச்சிவன்தாள் நேர்.

பொருள் -

இதயத்தைத் தாமரையாகக் கொண்டு அதனை அறிய முற்பட்டால், நிலம் முதலாகிய இருபத்து நான்கு ஆன்ம தத்துவமும் தண்டாகும். வித்தியா தத்துவம் ஏழும் சுத்த வித்தை ஒன்றும் ஆக எட்டும் இதழ்களின் வடிவாகும். அத்தத்துவங்களுக்கு மேலானது என்று கருதப்படுகின்ற ஈசுவரம், சதாசிவம் என்னும் இரண்டு தத்துவங்களும் அவ்விதழுக்கு உள்ளே உள்ள அறுபத்துநான்கு  பூந்தாதுக்களாகும். சத்தி தத்துவம் என்பது அப்பூந் தாதுக்களில் இருக்கும் கொட்டை வடிவமாகும். சிவதத்துவம் என்பது அக் கொட்டையில் காணப்படும் ஒளி வடிவாகும். எனவே இதயக் கமலத்தில் முப்பத்தாறு தத்துவங்களையும் ஆசனமாகக் கொண்டு , திருவருளாகிய சத்தி நிலைபெற்று வீற்றிருக்கும் என்பதை உணர்ந்து, முத்தி பஞ்சாட்சரத்தால் இறைவனை அர்ச்சிக்க வேண்டும். 

சொ.பொ.வி -

நாளம் - தாமரையின் தண்டு, கலாரூபம் - அறுபத்துநான்கு வகை, ஈசர் - ஈசுவர தத்துவம், சதாசிவம் - சதாசிவ தத்துவம், நாதம் - நாத தத்துவம், 


________________________________


    பயனியல் -பத்தாம் சூத்திரம் 

    

( முன் சூத்திரத்தில் கூறியபடி ஞானாசிரியர், மற்றும் ஐந்தெழுத்து ஆகிய சாதனங்களின் செய்முறைகள் கூறப்பெற்று, இச்சூத்திரம் முதல் மூன்று சூத்திரங்களில் சாதனங்களால் உண்டாகும் பயனும், பாசத்தை விடுதலும், சிவனை அடைதலும் கூறத்தொடங்கி, இச்சூத்திரத்தில் பாசம் நீங்குதலாகிய பயன் கூறப்;பெற்றுள்ளது)



அவனே தானே ஆகிய அந்நெறி

ஏகன் ஆகி இறைபணி நிற்க

மலம்மாயை தன்னொடு வல்வினை இன்றே.

பொருள் -

இறைவன், ஆன்மா உடம்பு எடுப்பதற்கு முன்னால் பெத்த நிலையில் இறைவன் ஆன்மாவாகவே நின்ற நிலை போல, சீவன்முத்தி நிலையில் ஆன்மா தான் வேறு இறைவன் வேறு என்னும்படி நில்லாது, ஒற்றுமைப் பட்டு நின்று , இறைவனுக்குத் தொண்டுகளைச் செய்து வழுவாது ஒழுகினால், ஆணவம், மாயா மலங்களுடன் கூடிய கன்ம மலமும் இல்லாது ஒழியும். 

சொ.பொ.வி :

அந்நெறி - இறைவன் ஆன்மாவோடு இரண்டறக் கலந்து நின்ற பெத்தநிலை, ஏகனாகி - ஆன்மா இறைவனோடு உடனாய் நிற்கும் சீவன்முத்தர் நிலை, மலம் - ஆணவமலம், வல்வினை - கன்மவினை. 


பத்தாம் சூத்திரம் - முதல் அதிகரணம்

மேற்கோள் -

ஈண்டுப் பரமேசுவரன் இவ்வான்மாவாய் நின்ற முறைமையான் அவனிடத்து ஏகனாகி  நிற்க என்றது. 

பொருள் -

ஞானக்கண்ணால் காணப்பட்ட இறைவன், பெத்த நிலையில் ஆன்மாவோடு உடனாய் நின்று அறியவும், அம்முதல்வன் ஆன்மாவின் வேறாகக் காணப்படாமல், ஆன்மா தானே அறிந்தேன் என்று கூறிக்கொள்ளும்படி ஆன்மாவாய் நின்றது போல, சீவன்முத்தி நிலையிலும் இறைவனோடு உடனாய் நின்று உலகப் பொருளை ஆன்மா அறியினும், ஆன்மா இறைவனின் வேறாகக் காணப் படாமல் , அவ்விறைவனோடு ஒற்றுமைப்பட்டு நிற்கும். 

ஏது -

அவ்வாறு நிற்கவே யான் எனது என்னும் செருக்கற்று அவனது சீபாதத்தை அணையும் ஆகலான். 

பொருள் -

அவ்வாறு ஒற்றுமைப்பட்ட ஆன்மா இறைவனோடு நின்றாலே யான் எனது என்னும் மயக்க உணர்விற்கு ஏதுவாகிய மலம் நீங்கி , இறைவனுடைய திருவடியாகிய சிவானந்தத்தைப் பெறும். 


உதாரணம் - 1

நான்அவனென்று எண்ணினார்க்கும் நாடும்உளம் உண்டாதல்

தான்எனஒன்று இன்றியே தான்அதுவாய் - நான்எனஒன்று

இல்லென்று தானே எனும்அவரைத் தன்அடிவைத்து

இல்லென்று தானாம் இறை. 

பொருள்-

நான் என்றும் அவன் என்றும் பகுத்து உணர்வார்க்கு நான் என்ற தன்முனைப்புத் தோன்றும். ஆதலால் தான் என்ற தனிஒரு பொருள் இல்லாமல் இறைவன் தான்;, அவ்வான்மாவின் உணர்வாக நிற்கிறான் என்றும், யான் என்பது இல்லை என்றும் உணர்ந்து, எல்லாம் இறைவனே எனக் காண்பவரை இறைவன் தனது திருவடியே இல்லம் (வீடு ) என்று உணரும்படி வைப்பததோடு, அவ்வான்மாவே தானாகவும் ஆகும்படி நிற்பான். 

சொ.பொ. வி -

நான் - ஆன்மா, அவன் - இறைவன், எண்ணினார்க்கு - பிரித்துக் காண்பவருக்கு, இல் - இல்லம் (வீடு) , தானாம் - ஆன்மாவாக. (இப்பாடல் தன்முனைப்பு அற்றவர்களை இறைவன் தன் திருவடியில் வாழுமாறு செய்வான். மேலும் அவர்கள் செயல் எல்லாம் தன் செயலாக அமையும்படி செய்வான் என்று குறிப்பிடுகிறது)


பத்தாம் சூத்திரம் - இரண்டாம் அதிகரணம்

(இவ் அதிகரணம் தன்னை மறந்து எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணி, இறைவனுடைய பணியாகிய கருணை உள்ளத்தோடு வழுவாது நிற்றலைக் குறிக்கிறது)


மேற்கோள் -

இனி, ;இறைபணி வழுவாது நிற்க என்றது. 

பொருள் -

இறைவனின் அருள் வடிவில் (கருணை உள்ளத்தோடு) சளைக்காமல் நிலைத்து நிற்க என்றவாறு. 

ஏது -

அவன் அருளால் அல்லது ஒன்றையும் செய்யானாகவே, அஞ்ஞான கன்மம் பிரவேசியா ஆகலான்.  

பொருள்-

மாயையின் காரியங்களும், கன்மத்தின் காரியங்களும் தன்னைத் தாக்காது நிற்பதற்கு ஆன்மா செய்ய வேண்டுவது இறைபணி நிற்றலாகும். இறைபணி - இறைவனின் அருளை ( கருணையை)ப் பிற உயிர்களிடத்தில் தான் செய்தல். 


உதாரணம் - 2

நாம்அல்ல இந்திரியம் நம்வழியின் அல்லவழி

நாம்அல்ல நாமும் அரன்உடைமை - ஆம்என்னில்

எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லைவினை

முற்செய்வினை யும்தருவான் முன். 

பொருள் -

ஐம்பொறிகளாகிய இந்திரியங்கள் மாயை மலத்தினால் உருவாவதன்றி , யாம் அல்ல , அவை நம் வயத்ததும் அல்ல. மேலும் ஐம்பொறிகள் செயல் படுவதற்கு , உலகப் பொருள்கள் மாயேயம் ஆகியவை காரணமாக ஆகுமே அன்றி, நாம் காரணம் அல்ல. மேலும் ஆன்மா தன்னை இறைவனின் அடிமை என்று உண்மைகளை உணர்ந்தால் , இறைவனின் பணிகளைச் செய்கின்ற அவ் ஆன்மாக்கள் எந்த உடம்பில் எதனைச் செய்தாலும், அந்தச் செயல்களால் உண்டாகின்ற பந்தம் எதுவும் இல்லை. முன் செய்த பிராரத்த வினைகளும் இறைவனுடைய முன்னிலையி;ல் உடல் ஊழாய் (உடலின் வினையால்) கழிந்து விடும்.

சொ.பொ.வி :

இந்திரியம் - மெய் முதலாகிய ஐந்து கருவிகள், நாம் அல்ல - ஆன்மா அல்ல, நம் வழியின் அல்ல - ஆன்மாவின் வயத்தது அல்ல, இறைவழியே ஆகும் - முன்செய்தவினை. (சஞ்சித பிராரத்த வினைகள்)

இப்பாடல் அனைத்தும்  இறைவனின் செயல்கள் என்று தன்னை மறந்து செயல்படும் அடியவர்களுக்கு இப்பிறவியில் உடம்பைப் பெற்றாலும், அவ் உடம்பால் செய்யப்படுகின்ற நல்வினை தீவினை இல்லை என்பதைக் குறிப்பிடுகிறது) 


உதாரணம் - 3

சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்

சார்ந்தாரைக் காத்தும் சலம் இலனாய்ச் - சாந்தடியார்

தாம்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல்

ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு. 

பொருள் -

தம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்களைக் காப்பாற்றுதல் தலைவர்களின் கடனாகும். ஆதலால் தன்னை வந்து அடைந்த அடியவர்களை இறைவன் பாதுகாப்பான். பாதுகாப்பது என்பது தன்னுடைய அருட்பணியைச் செய்த அடியவர்களைத் தானாகும்படி செய்வது. அதாவது தனக்கு எவ்வாறு வினைகள் இல்லையோ அதுபோல அடியார்களுக்கு வினையில்லாது செய்வது. அதே நேரத்தில் தன்னைச் சாராத பிறருக்கு ஆகாமியமாகிய வருவினையைக் கொடுப்பான்;. இதன்படி அடியவர்களுக்குப் பிராரத்த வினையால் நன்மை, தீமை இல்லாதபடியும் அடியவர் அல்லாதவர்க்குப் பிராரத்த வினையை அனுபவிக்கச் செய்வான் என்பதையும் உணரவேண்டும். 

பொருள் -

சலம்இலனாய் - அநீதி அற்றவனாய், தாம் தானாச் செய்து - இறைவன் தன்னை அடைந்த அடியவர்களுக்குத் தன்னைப் போல் வினையில்லாது செய்வான். (இப்பாடல் தன்னைச் சார்ந்தவர்களை இறைவன் நீதிமானாக இருந்து அருள் செய்வான் என்பதைக் குறிப்பிடுகிறது)


உதாரணம் - 4

இங்குளி வாங்கும் கலம்போல ஞானிபால்

முன்செய் வினைமாயை மூண்டிடினும் - பின்செய்வினை

மாயையுடன் நில்லாது மற்றவன்தான் மெய்ப்பொருளே

ஆயஅத னால்உணரும் அச்சு. 

பொருள் -

பெருங்காயம் வைக்கப்பட்ட பாண்டத்தில் எவ்வாறு வாசனை அது இல்லாத போதும் கமழ்கின்றதோ அதுபோல, இறைவனைச் சார்ந்து இறைபணி நிற்கும் ஞானிகளிடத்து (சீவன்முத்தர்) முன்செய் வினையாகிய பிராரத்த கன்மம் இப்பிறவியில் வந்து மூண்டாலும், ஆகாமிய வினையானது இப்பிறவி எடுத்த உடலோடு கெட்டு அழியும். மேலும் ஞானிகள் மெய்ப் பொருளாகிய சிவன் போன்றவர்கள் ஆதலால், வாசனாமலத்தால் மயக்கநிலை ஏற்பட்டாலும் இறைவனையே நோக்கி நிற்பார்கள். 

சொ.பொ.வி -

இங்குளி - பெருங்காயம், கலம் - பாத்திரம், ஞானி - இறைபணி நிற்கும் சீவன் முத்தரகள். முன்செய் வினை - முன்பிறப்பில் செய்த சஞ்சிதவினை இப்பிறவியில் அனுபவிக்க வேண்டிய பிராரத்த வினையாக , பின்செய் வினை - ஆகாமிய வினை. நில்லாது - அழியும். (இப்பாடல் வெறும் பெருங்காயப் பாண்டத்தில் வாசனை மெலிதாக வீசுவது போலச் சீவன் முத்தர்க்கு அஞ்ஞானம் இல்லாதபோதும் மலவாசனையால் உடம்பு கூடும் என்பதைக் காட்டுகிறது)


உதாரணம் - 5

நண்அனல் வேவாத நற்றவர் தம்மினும்

பண்ணமர மாச்செலுத்தும் பாகரினும் - எண்ணி

அரனடி ஓர்பவர் ஐம்புலனில் சென்றும்

அவர்திறல் நீங்கார் அதற்கு. 

பொருள் -

நெருப்பின் நடுவே நின்றாலும் வெந்துபோகாமல் இருக்கின்ற தவம் உடைய ஞானிகள் போலவும், தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடுகின்ற குதிரையைச் செலுத்துகின்ற பாகரைப் போலவும், ஐம்புலன்களை அடக்கி வாழ்வதற்குரிய வழி யாது? என்று எண்ணி, இறைவனின் திருவடிகளை உணர வல்லவர்கள், ஐம்புலன்களால் பொருள்களை உணருகின்ற உணர்ச்சியை உடையவர்கள் ஆயினும், அவ்வுணர்வால் எந்தவிதப் பந்தமும் அடைய மாட்டார்கள். 

சொ.பொ.வி :

நண்அனல் - நல்லநெருப்பு, நற்றவர் - ஞானிகள், பண்ணமர - பண்ணிற்குப் பொருந்தும்படி, மா - குதிரை, அரன் - சிவபெருமான், அவர்திறல் - ஐம்புலன் உணர்வால். (இப்பாடல் பிராரத்த வினையால் ஏதேனும் ஒரு உடம்பினைப் பெற்றவர்கள், உடம்பின் கருவிகளை அடக்கினால் வினைகளின் பந்தங்கள் ஏற்படாதவண்ணம் காத்துக் கொள்ளலாம் என்பதைக் குறிப்பிடுகிறது)


உதாரணம் - 6

சதசத்தாம் மெய்கண்டான் சத்துஅருளில் காணின்

இதமித்தல் பாசத்தில் இன்றிக் - கதம்மிக்கு

எரிகதிரின் முன்னிருள்போல் ஏலா அசத்தின்

அருகணையார் சத்தணைவார் ஆங்கு. 

பொருள் -

தான் சதசத்து என்று உண்மையை உணர்ந்தவர் சத்தாகிய இறைவனின் திருவருளால் அனைத்தையும் காண்பார் ஆகில் , பாசமாகிய அசத்தில் பற்றுக் கொள்ள மாட்டார்கள். சத்தாகிய இறைவனையே சார்ந்து நிற்பவர்கள், எரிகின்ற சுடருக்கு முன்னே இல்லாத இருள்போல, சத்துக்கு முன்னால் நிற்கமாட்டாத அசத்தாகிய ஐம்புலன் உணர்வுகளில் பொருந்தி இருக்க மாட்டார்கள். 

சொ.பொ.வி -

சதசத்து - சத்தாகிய இறைவனைச் சார்ந்து சத்தாகவும், அசத்தாகிய உலகப் பொருள்களைச் சார்ந்து போகத்தை அனுபவிக்கின்ற அசத்தாகவும் நிற்கின்ற ஆன்மாவிற்கு உரிய பெயர், கதம்மிக்கு - சீற்றத்தோடு எரிகின்ற தீ, அசத்து - அறிவற்றதாகிய ஐம்பொறிகள். (இப்பாடல் சதசத்தை உணர்ந்தவர்கள் இறைவனையே சார்ந்திருப்பார்கள் , அசத்துப் பொருள்களை அவர்கள் சாரமாட்டார்கள் என்பதை உணர்த்துகிறது) 


பதினோறாம் சூத்திரம் 

(முன்சூத்திரத்தில் பாச நீக்கமாகிய பயன் கூறப்பெற்று, அதனால் இடையறாது சிவபெருமான் திருவடியைப் பற்றுதலாகிய சிவப்பேறு இச்சூத்திரத்தி;ல் கூறப்பெறுகிறது)

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்

காணா உள்ளத்தைக் கண்டு காட்டலின்

அயரா அன்பின் அரன்கழல் செலுமே. 

பொருள் -

ஒரு பொருளை ஆன்மா காட்டக் காணுகின்ற கண்ணிற்கு உடனின்று, உருவத்தைக் கண் காணும்படிக் காட்டித் தானும் காணுகின்ற ஆன்மாவைப் போல, தான் அறிவிக்க அறிவதாகிய ஆன்மாவைப் பிரிப்பின்றி நின்று , அனுபவிக்கின்ற பொருளை எல்லாம் அறிவித்து, இறைவன் தானும் அறிந்து வருகின்றான். ஆதலால் அவ்வுதவியை மறவாது அயரா அன்பினால் ஆன்மாக்கள் இறைவனின் திருவடிப் பேற்றினைத் தலைப்படும். 

சொ.பொ.வி -

காணும் - ஆன்மா காட்டக் கண் காணும், உளம் - ஆன்மா, காட்டலின் - ஆன்மாவைக் காணும்படி செய்து இறைவன் தானும் அறிவான், அயரா அன்பு - இடைவிடாது கடைப்பிடிக்கின்ற அன்பு. 


பதினோறாம் சூத்திரம் - முதல் அதிகரணம்


(ஆன்மாக்களோடு இறைவன் கலந்து நின்று அறிகின்ற பொழுது, ஆன்மாக்களுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகிறது)

மேற்கோள் -

ஈண்டு, அவனும் அவற்றது விடயத்தை உணரும் என்றது. 

பொருள் -

இறைவன் ஆன்மாவால் உணரப்படும் விஷயத்தை உடன்நின்று உணர்வான். 

ஏது -

இவ்வான்மாக்கள் அவனைஇன்றி அமைந்து ஒன்றையும் விடயியா ஆகலான். 

பொருள் -

இறைவன் அறிவிக்க அறியும் தன்மை உடைய ஆன்மாக்களும் இறைவனுடைய அறிவோடு கலந்து அறிகின்ற பொருள்களிலும் கலந்து நின்றால் மட்டும் ஆன்மா அறிவு விளக்கம் பெற்று, அப்பொருள்களை அறியும். இறைவனுடைய அறிவு ஆன்ம அறிவோடும் பொருளோடும் கலவாத விடத்து ஆன்மாக்கள்  தனித்து நின்று ஒன்றையும் அறியாது. 


உதாரணம் - 1

ஐந்தையும் ஒக்க உணராது அவற்றுணர்வது

ஐந்தும்போல் நின்றுணரும் ஆகலான் - ஐந்தினையும்

ஒன்றொன்றாப் பார்த்துணர்வது உள்ளமே எவ்வுலகும்

ஒன்றொன்றாப் பார்க்கும் உணர்ந்து. 

பொருள் -

ஆன்மாவானது சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்தினும் ஐம்பொறிகளைக் கொண்டு, அதுவதுவாய் நின்று உணரவேண்டியதை உணரும். அதே நேரத்தில் ஆன்மாவானது ஐம்புலன்களையும் ஒருசேர உணர மாட்டாது. ஐந்து புலன்களையும் தனித்தனியே நின்றுதான் அனுபவிக்கின்ற சிறப்பு உடையது. ஆனால் இறைவன் எல்லா ஆன்மாக்களிலும் நிகழுகின்ற நிகழ்வுகளைப் பொதுவகையால் பொதுவாக அறிந்து , சிறப்பு வகையால் ஒவ்வொரு ஆன்மாக்களிடத்தும் நின்று உணர்வான். 

சொ.பொ.வி -

ஐந்தையும் - சுவை முதலான ஐந்து புலன்களையும், ஐந்தும்போல் - மெய் முதலிய கருவிகள் ஐந்தும்போல், ஒன்றொன்றா - ஆன்மா ஐம்புலன்களுக்கு உரிய பொருளை ஒவ்வொன்றாக அறியும், ஒன்றொன்றா - இறைவனாகிய ஒன்று ஆன்மாக்களை ஒருசேரப் பார்க்கும். ( இப்பாடல் ஆன்மாக்கள் கருவிகள் வாயிலாகப் புலனுக்குரிய பொருள்களை ஒவ்வொன்றாக அறியுமே தவிர, ஒருசேர அறியமாட்டாது என்றும்,; இறைவன் எல்லாவற்றையும் ஒருசேர அறிவான் என்றும் குறிப்பிடுகிறது)


உதாரணம் -2

ஏகமாய் நின்றே இணையடிகள் ஒன்றுணரப்

போகமாய்த் தான்விளைந்த பொற்பினான் - ஏகமாய்

உள்ளத்தின் கண்ணானான் உள்குவார் உள்கிற்றை

உள்ளத்தால் காணானோ உற்று. 

பொருள் -

சார்ந்த வண்ணம் ஆகின்ற ஆன்மா முத்திநிலையில் இறைவனோடு ஒற்றுமைப்பட்டு நின்று அவனுடைய திருவடிகளால் உணர்வதால், இறைவன் அவ் ஆன்மாக்களுக்குப் பரபோகமாய் விளங்கும் பொலிவுடையவன் ஆகின்றான். ஆதலால்தான் ஆன்மாக்களிடத்துப் பெத்த நிலையிலும் முத்தி நிலையிலும் ஆன்மாக்களை விட்டு நீங்காது ஒன்றித்து நிற்கின்றான். எனவே கருதுவார் கருதுகின்ற பொருளாகும் தன்னை, கருதுகின்றவரின் ஆன்ம அறிவோடு கூடிநின்று அறிகின்ற பொருளை அவனும் அறிவான் அல்;லவோ. 

சொ.பொ.வி -

ஏகமாய் - இறைவனோடு ஒன்றுபட்டு, இணையடிகள் - இறைவனின் திருவடிகள், போகமாய் - பரபோக இன்பமாய், பொற்பினான் - பொலிவுடையவன், உள்குவார் - நினைப்பவர், உள்கிற்றை - நினைக்கின்ற பொருளாய், காணானோ - இறைவன் காணமாட்டானோ. (இப்பாடல் இறைவன் ஆன்மாக்களோடு ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்கின்றவன். பெத்த நிலையில் ஆன்மாக்கள் நினைக்கின்றவனாய்க் காட்சி தருவான். முத்தி நிலையில் பேரின்பமாய்க் காட்சி தருவான் என்று கூறுகிறது)


பதினொன்றாம் சூத்திரம் - இரண்டாவது அதிகரணம். 

(சூரியன் கண்பார்வை உடையவர்களுக்கு ஒளியாகவும், பார்வை அற்றவர்களுக்கு இருளாகவும் தோன்றுவது போல, இறைவன் சீவன்முத்தர்க்கு அறிவு உருவமாகவும், அல்லாதவர்க்கு அறியாமை வடிவமாகவும் காட்சி தருவான் என்பதை விளக்குகிறது)


மேற்கோள் -

இனிப் பத்தியினான் மறவாது ஏத்த அவனது சீபாதத்தை அணையும். என்றது. 

பொருள் -

ஆன்மாவானது இறைவனோடு கலந்திருக்கும் அத்துவித நிலையை மறவாது, தன் பத்தியாகிய அன்பினால் அவனது திருவடிகளை நாடி நிற்பதால், அவனுடைய திருவடிகளாகிய பேரின்ப அநுபூதியை அடையும். 

ஏது -

அவன் அன்னியமின்றிச் செய்வோர் செய்திப் பயன் விளைத்து நிற்றலான். 

பொருள் -

இறைவன் ஆன்மாக்களிடத்து நேராக நில்லாது, அவை செய்கின்றவற்றை அறிந்து அச்செயல்களுக்குரிய தக்க பயனைத் தருவான். அவனை மறவாது ஏற்ற அவனது திருவடிகளை ஆன்மா அடையும். 


உதாரணம் - 3

அருக்கன்நேர் நிற்பினும் அல்இருளே காணார்க்கு

இருட்கண்ணே பாசத்தார்க்கு ஈசன் - அருட்கண்ணால்

பாசத்தை நீக்கும் பகல்அலர்த்தும் தாமரைபோல்

நேசத்தின் தன்உணர்ந்தார் நேர். 

பொருள்-

சூரியன் ஆன்மாக்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியாக நின்றாலும் , கண்பார்வை இல்லார்க்கு இருளாகவே தோன்றுவான். அதுபோலப் பாசத்தை உடைய ஆன்மாக்களுக்குப் பாச ஞானமாகவே இறைவன் தோன்றுவான். தன்னை உணர்ந்த அடியவர்களுக்குப் பக்குவம் பெற்ற தாமரை மலர்களை மலர்விக்கும் சூரியனைப் போல அன்பினால், தன் திருவருள் பார்iவையைச் செலுத்தி, பாசத்தை நீக்கி அவர்தம் அறிவை மலர்த்துவான். 

சொ.பொ.வி -

அருக்கன் - சூரியன், அல் - இரவு, காணார் - பார்வை இல்லாதவர், பகல் - சூரியன், அலர்த்தும் - மலர்விக்கும். (சூரியனைப் போல இறைவன் சீவன் முத்தராகிய அடியவர்களுக்கு அறிவு ரூபமாய்க் காட்சி தருவான் என்பதை விளக்குகிறது)


உதாரணம் -4

மன்னும் இருளை மதிதுரந்தவாறு அன்பின்

மன்னும் அரனே மலம்துரந்து - தன்னின்

வலித்துஇரும்பைக் காந்தம் வசம்செய்வான் செய்தல்

சலிப்பில் விகாரியலன் தான். 

பொருள் -

சூழ்ந்திருக்கும் இருளைப் பிறைச்சந்திரன் நாள்தோறும் வளர, வளரச் சிறிது சிறிதாக நீக்கி, இறுதியில் முழுமையும் ஓட்டுவது போலத் , தன்னுடைய அன்பின் மிகுதியால் ஆன்மாக்களோடு கலந்திருக்கின்ற இறைவன், ஆன்மாக்களிடத்தில் இருக்கக்கூடிய மல வலிமையைச் சிறிது சிறிதாக நீக்கி, இறுதியில் பற்றற ஓட்டுவான். காந்தம் இரும்புத்துண்டைத் தன்பக்கம் இழுத்து வசப்படுத்துவது போல இறைவனும் ஆன்மாக்களைத் தன்வசப்படுத்திக் கொள்வான். என்றாலும் அதனால் அவனுக்கு எவ்விதச் சலிப்பும் ஏற்படுவதில்லை. அதாவது அவன் விகாரம் அடையமாட்டான். 

சொ.பொ.வி -

மன்னும் இருள் - செறிந்திருக்கும் இருள், மதி - பிறைச்சந்திரன், மன்னும் - ஆன்மாக்களோடு உடனாய், சலிப்பில் - சலிப்பு ஏற்படுவதில்லை, விகாரியலன் - விகாரப்படுவதில்லை (இப்பாடல் இறைவனின் பெருமையைக் கூறுகிறது. பிறைச்சந்திரனைப் போல இறைவனும் ஆன்மாக்களின் மலங்களைப் பிறவி பிறவியாகச் சிறிது சிறிதாகப் போக்குவான் என்று குறிப்பிடுகிறது)


உதாரணம் -5

நசித்தொன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா

நசித்திலதேல் ஒன்றாவது இல்லை - நசித்துமலம்

அப்பணைந்த உப்பின் உளமணைந்து சேடமாம்

கப்பின்றாம் ஈசன் கழல். 

பொருள் -

இறைவனோடு ஆன்மா சேரும் பொழுது அழிந்து சேருமானால், இறைவனோடு ஒன்ற இயலாது. அதே நேரத்தில் ஆன்மா கெடாது என்றால் இறைவனோடு இணைய முடியாது. என்றாலும் தண்ணீரில் கலந்த உப்புப் போல. உப்பு தன்னுடைய திடமாகிய கடினத் தன்மை நீங்கி, நீரோடு நீராய்க் கலப்பது போல, ஆணவமலம் கெட்டு ஆன்மா இறைவனுடைய திருவடிகளில் ஒன்றிநின்று அடிமையாகும். அடிமையான பிறகு ஆன்மாவிற்கு மீளும் தன்மை இல்லை. 

சொ.பொ.வி -

நசித்து - கெட்டு, அப்பு - நீர், சேடமாம் - அடிமையாம், கப்பின்றி - மீளும் நிலை இல்லை. (இப்பாடல் ஆன்மா முத்தி நிலையில் இறைவனோடு சேரும் பொழுது கெட்டுச் சேருகின்றது என்றும், கெடாது சேருகின்றது என்றும் கூற இயலாது.  உருவம் கெட்டுத் தண்ணீரில் சேரும் உப்புப் போல ஆன்மா , ஆணவம் முதலாகிய மலங்கள் கெட்டு இறைவனோடு சேரும் என்று கூறுகின்றது)


உதாரணம் - 6

பொன்வாள்முன் கொண்மூவில் புக்கொடுங்கிப் போயகலத்

தன்வாளே எங்குமாம் தன்மைபோல் - முன்வாள்

மலத்தின் மறைந்துள்ளம் மற்றுலகை உண்ணும்

மலத்திரித்துச் செல்லும் வரத்து. 

பொருள் -

சூரிய ஒளியானது மேகக் கூட்டத்துள் ஒளிந்து, பின் அம்மேகக் கூட்டம் நீங்கிய பொழுது, எல்லா இடத்தும் தன் ஒளியைப் பரப்புவது போல, ஆன்மாவானது தன்னுடைய அறிவு , ஆணவமலத்தில் மறைப்புண்டு கேவலப் பட்டு முதலில் விளங்கும். பின் மெய் முதலிய கருவிகளோடு கூடி, ஐம்புலன்களை நுகர்ந்து சகலத்தில் வாழும். பின்பு இறைவன் திருவருளால் மலத்தைப் பற்றறக் களைந்து பொலிவு பெற்று , இறைவனின் திருவடியை அடைந்து தூய்மை பெறும். 

சொ.பொ.வி -

பொன்வாள் - சூரியஒளி, கொண்மூ - மேகக்கூட்டம், தன்வாளே - சூரியஒளி, உண்ணும் - ஐந்து புலன்களை நுகரும், மலத்திரித்து - மலத்தைக் களைந்து. (இப்பாடல் ஆன்மாக்கள் அநாதி காலத்தில் மலங்களால் மறைக்கப் பட்டு, உலக இன்பங்களை அனுபவித்துப் பின் இறைவன் திருவருளால் இன்ப துன்பங்களைத் துறந்து, மலங்களை வேரறுத்து இறைவன் திருவடியை அடையும் என்கிறது)


பன்னிரண்டாம் சூத்திரம்


(இச் சூத்திரம் சிவப்பேறு எய்திட, உடம்போது கூடி வாழும் சீவன் முத்தர்கள் உடம்போடு வாழும் வரை எவ்வாறு இருப்பார்கள் என்பதைக் கூறுகிறது0

செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா

அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ

மாலற நேயம் மலிந்தவர் வேடமும்;

ஆலயம் தானும் அரன்எனத் தொழுமே. 

பொருள் -

சிவந்த தாமரை மலர் போன்ற , அன்பர்களைத் தாங்குகின்ற இறைவனின் திருவடிகளைச் சேரவிடாமல் தடுக்கின்ற மும்மலங்களின் அழுக்கினை, ஞான நீரால் கழுவி, மெய்யடியார்களுடன் கலந்து கூடி, மலங்கள் தரும் மயக்கம் நீங்க , இறையன்பர்களாகிய அடியவர்களின் சிவ வேடத்தையும். சிவலாயத்தையும் இறைவன் எனக் கண்டு , சீவன்முத்தர்களாகிய உடலோடு வாழும் ஆன்மா வழிபடும்.  

சொ.பொ.வி -

நோன்தாள் - அடியார்களைத் தாங்கும் திருவடி, அம்மலம் - மும்மலம், அன்பர் - இறையடியார்கள், மாலற - மயக்கம் நீங்க, நேயம் மலிந்தவர் - அன்பு மிக்கவர், ஆலயம் - கோயில். 


பன்னிரண்டாம் சூத்திரம் - முதல் அதிகரணம்

(இவ்வதிகரணம் சீவன்முத்தர்கள் மும்மலங்களைக் களைதல் வேண்டும் என்று கூறுகின்றது)

மேற்கோள் -

ஈண்டு , ஆணவ மாயை கான்மியம் என்னும் மலங்களைக் களைக என்றது. 

பொருள் -

சீவன் முத்தர்கள் ஆணவம்,மாயை, கன்மம் என்று கூறப்படுகின்ற மூன்று மலங்களை நீக்க வேண்டும். 

ஏது -

அவைதாம் ஞானத்தை உணர்த்தாது அஞ்ஞானத்தை உணர்த்தும் ஆகலான். 

பொருள் -

அயரா அன்பைச் செலுத்துகின்ற சீவன் முத்தரிடத்து மீண்டும் யாதேனும் ஒரு காரணத்தால் மும்மலங்கள் நுழைந்து, உண்மை அறிவைக் கீழ்படுத்தி, பிறவிக்கு வித்தாகிய விபரீத உணர்வை ஏற்படுத்தும். 


உதாரணம் - 1

புண்ணிய பாவம் பொருந்தும்இக் கான்மியமும்

மண்முதல் மாயைகாண் மாயையும் - கண்ணிய

அஞ்ஞானம் காட்டும்இவ் ஆணவமும் இம்மூன்றும்

மெய்ஞ்ஞானிக்கு ஆகா விடு. 

பொருள் -

முன் பிறவியில் செய்த புண்ணிய பாவங்கள் பயனாகவும், காரணமாகவும் , இப்பிறவியில் விளங்கும் கன்ம மலத்தையும், நிலம் முதலாகச் சொல்லப் பெற்ற முப்பத்தாறு தத்துவங்களின் தோற்றத்திற்குரிய மாயா மலமும், அஞ்ஞானத்தைக் காட்டுகின்ற ஆணவ மலமும் ஆகிய இம் மூன்று மலங்களும், மெய்யுணர்வு உடைய சீவன் முத்தர்களுக்கு ஆக மாட்டா. ஆகையால் அவற்றை விட்டுவிட வேண்டும். 

சொ.பொ.வி -

கான்மியம் - முற்பிறவியில் செய்த கன்மவினை, இப்பிறவியில் செயல் படுதல், மாயை - மண் முதலாகிய தத்துவங்கள், மெய்ஞ்ஞானி - சீவன்முத்தர். (இப்பாடல் மூன்று மலங்களுக்கும் எளிமையான விளக்கம் தருவதை உணர வேண்டும் என்கிறது)


பன்னிரண்டாம் சூத்திரம் - இரண்டாம் அதிகரணம்

(சீவன் முத்தர்கள் சிவனடியார்களோடு கூடி வாழவேண்டும் என்கிறது)

மேற்கோள் -

இனிச் சிவபத்தர்களோடு இணங்குக என்றது.

பொருள் -

மும்மலங்கள் மீண்டும் தங்களைப் பற்றாது நிற்கும் பொருட்டு, இறைவனின் அத்துவித நிலையை உணர்ந்த சீவன்முத்தர்கள் , தம்மைப் போல் இறைவழி நிற்கின்ற அடியார்களோடு நட்புச் செய்தல் வேண்டும். 

ஏது -

அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவர் ஆகலான். 

பொருள் -

இறைவனின் திருவடியை அணையாத பாசத்தார், சுட்டி உணர்வதாகிய விபரீத உணர்வை அறிவிப்பார்கள். ஆதலான் சிவ அடியார்களோடு மட்டுமே இணங்கி இருத்தல் வேண்டும். 


உதாரணம் - 2

மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்கும்

சிறப்பிலார் தம்திறத்துச் சேர்வை - அறப்பித்துப்

பத்தர் இனத்தாய்ப் பரன்உணர்வினால் உணரும்

மெய்யத்தவரை மேவா வினை. 


பொருள் -

தம் அறிவை இழக்கும்படி செய்து, மலங்களின் சார்பால் மீண்டும் பிறப்பாகிய துன்பத்தில் வீழும்படிச் செய்கின்ற அன்பில்லாதவர்களிடம் சேர்க்கை நீங்கும்படிச் சிவனடியார்கள் பக்கம் பேரன்பு உடையவர்களாய் , விளங்குகின்ற சிவஞானத்தால் எதனையும் உணர்கின்ற மெய்ஞ்ஞானிகளைப் பிராரத்த வினைகள் வந்து பொருந்தாது. 

சொ.பொ.வி -

மறப்பித்து - உண்மை அறிவை மறக்கும்படி செய்து, சிறப்பில்லா - இறையன்பு இல்லாதவர், சேர்வை அறப்பித்து - சேர்க்கையை நீங்கி. பத்தர் இனத்தாய் இறையடியார் கூட்டம், வினை - பிராரத்தவினை. (இப்பாடல் சீவன்முத்தர்கள் அடியவர்களோடு கூடி வாழவேண்டும். எதிராக உள்ளவர்களிடம் கூடி வாழுதல் கூடாது என்கிறது)


பன்னிரண்டாம் சூத்திரம் - மூன்றாம் அதிகரணம். 

(இவ்வதிகரணம் சீவன் முத்தர்கள் அடியவர் திருவேடத்தையும். திருக் கோயில்களையும் சிவனாகக் கண்டு வழிபட வேண்டும் என்று கூறுகின்றது)


மேற்கோள் -

இனிப் பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் பரமேசுரன் எனக் கண்டு வழிபடுக என்றது. 

பொருள் -

வெளிப்படை. 

ஏது - அவன் மற்று இவ்விடங்களில் பிரகாசமாய் நின்றே ;அல்லாத இடத்து அப்பிரகாசமாய் நிற்றலான். 

பொருள் -

திருவேடத்திலும், கோயில்களிலும் இறைவன் தயிரில் நெய் போல வெளிப்பட்டு நிற்பான். மற்ற இடங்களில் பாலில் நெய்போல வெளிப்படாது நிற்பான். 


உதாரணம் - 3

தன்னுணர வேண்டித் தனதுருவைத் தான்கொடுத்துத்

தன்னுணரத் தன்னுள் இருத்தலால் - தன்னுணரும்

நேசத்தார் தம்பால் நிகழும் ததிநெய்போல்

பாசத்தார்க்கு இன்றாம் பதி. 

பொருள் -

இறைவன் ஆன்மா தன்னை அறிவதற்காகத் திருநீறு, உருத்திராக்கம் அணிகின்ற தன் உருவத்தைத் தன் அன்பர்களுக்குத் தான் கொடுத்தலாலும், சத்திநிபாதத்தால் தன்னை அறியச் செய்தலாலும், தன் வியாபகத்துள்ளே அவர்களை இருக்கச் செய்தலாலும் , தன்னை உணருகின்ற சீவன் முத்தர்களிடத்தில் தயிரில் உள்ள நெய் போல வெளிப்பட்டுத் தோன்றுவான். மும்மலப் பாசம் உடையவர்களுக்குப் பாலில் உள்ள நெய்போல வெளிப்படாது நிற்பான். 

சொ.பொ.வி -

தனதுருவம் - திருநீறு உருத்திராக்கம் அணிந்த சிவவடிவை , நேசத்தார் - சிவஅன்பர், ததி - தயிர், பதி - இறைவன். (இப்பாடல் இறைவன் தன் அடியவரிடத்திலும், அடியவர் அல்லா இடத்திலும் எவ்வாறு நிற்பான் என்பதை உணர்த்துகிறது)


 உதாரணம் - 4

கண்டதொரு மந்திரத்தால் காட்டத்தில் அங்கிN;வறு

உண்டல்போல் நின்றங்கு உளதாமால் - கண்டஉருத்

தானதுவாய் அன்றானான் தானதுவாய்த் தோன்றானோ

தானதுவாய்க் காணும் தவர்க்கு. 

பொருள் -

விறகில் , கடையும் பொழுது தோன்றும் தீ வேறாக நிற்கும். கடையாத பொழுது விறகில் ஒன்றாகி நிற்கும். அதுபோலக் காணப்படுகின்ற சிவலிங்க வடிவத்தில் கலப்பினால் இறைவன் சிவலிங்கமாகவே தோன்றுவான். ஆனால் அதே நேரத்தில் சிவலிங்கம் அல்லாத தனித்த இயல்பினை உடையவனும் ஆவான். மேலும் தன்னால் அறிவிக்கப்பட்ட மந்திரங்களால் சிவலிங்கத்தின்கண் நிலைபெற்றுத் தோன்றுவான். எனவே சிவலிங்க வடிவத்தை இறைவன் என்று காணுகின்ற சீவன்முத்தர்களுக்கு அவ்வடிவமே தானாய் வந்து தோன்றமாட்டானா? தோன்றுவான். 

சொ.பொ.வி -

காட்டம் - விறகு, அங்கி - நெருப்பு, கண்டஉரு - சிவலிங்க வடிவம், தவர்க்கு - சீவன்முத்தர்க்கு.  (இப்பாடல் சிவலிங்க வடிவமே இறைவன் வடிவம், அதே நேரத்தில் வேறாகவும் நிற்பான் என்றும், மேலும் மந்திரத்தால் சிவலிங்க வடிவத்தில் சீவன்முத்தர்கள் சிவபெருமானைக் காண்பர் என்றும் கூறுகின்றது)

பன்னிரண்டாம் சூத்திரம் - நான்காம் ஒழிபு அதிகரணம்.

(இவ் அதிகரணம் முன் மூன்று அதிகரணங்களின் ஐயங்களை நீக்கும் பொருட்டு, குரு, லிங்க, சங்கம வழிபாட்டில் சிவத்தைக் கண்டு வழிபட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது)

 

மேற்கோள் -

இனி, இவ்விடங்களில் வழிபடுக என்றது. 

பொருள் -

வெளிப்படை. 

ஏது -

நரம்புநாடி முதலானவற்றைத் தானதுவாய் வரும் புருடன் அவையாகாவாறு அப்புருடனும் ஆகலான்.

பொருள் -

ஆன்மாவானது நாடியோ, எலும்போ, நரம்போ என்று ஆராய்ந்து பார்த்தால் அவை ஆன்மா ஆவதில்லை. ஆன்மாவிலிருந்து வேறுபட்டு உறுப்புக்களாய் நிற்கும். அதுபோல இறைவனும் உலகத்தில் உள்ள பொருள்கள் அனைத்திலும் அதுவதுவாய் வேற்றுமையின்றிக் கலந்திருந்தாலும், பொருள் தன்மையில் வேறுபட்டும் நிற்பான். 


உதாரணம் - 5

அதுஇது என்றது அதுவல்லான் கண்டார்க்கு

அதுஇது என்றதையும் அல்லான் - பொதுவதனில்

அத்துவிதம் ஆகல் அகண்டமும் தைவமே

அத்துவிதி அன்பி;ல் தொழு. 

பொருள் -

உலகப் பொருள்கள் எல்லாவற்றிலும் இறைவனைக் காணுகின்ற சீவன் முத்தர்களுக்கு அது இது என்று சுட்டிக் காட்டுகின்ற பேதநிலையில் இறைவன் நிற்க மாட்டான். அதே நேரத்தில் வேறுபட்டு(பேத) நிற்பவனும் அல்ல. மேலும் பேதா பேத நிலையிலும் நிற்பவன் அல்ல. மூன்றிற்கும் பொதுவான தன்மை உடையவன் ஆவான். எனவே உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் அவன் வடிவமே. என்றாலும் அன்பு விளையும் இடத்தில் இறைவனை வழிபட வேண்டும். 

சொ.பொ.வி -

அத்துவிதமாதல் - இறைவன் ஒருசேரக் கலந்திருக்கும் அத்துவித நிலைமை, அகண்டம் - எல்லாப் பொருளிலும், தைவம் - வடிவம், (இப்பாடல் ஆன்மா அன்பு காட்டக்கூடிய லிங்க வடிவத்தில் இறைவனைக் காணவேண்டும் என்று கூறுகின்றது)


உதாரணம் - 6

வினையால் அசத்து வினைதலான் ஞானம்

வினைதீரின் அன்றி வினையா - வினைதீர்

ஞானத்தை நாடித் தொழவே அதுநிகழும்

ஆனத்தால் அன்பில் தொழு. 

பொருள் -

பிராரத்த வினையினால் அசத்தாகிய உலகம் ஆன்மாவிற்குக் காட்சிப்படும். அதனால் இறைக்காட்சி மறையும். பிராரத்த வினையை நீங்கினால்தான் அத்துவித நிலை மேம்பட்டு நிற்கும். எனவே பிராரத்த வினை கழிவதற்கு மெய்ஞ்ஞானம் உடைய இறை அடியார்களை நாடிச் சென்று வழிபட வேண்டும்.அவ்வாறு வழிபட்டால் மெய்ஞ்ஞானம் நிகழும். எனவே சீவன் முத்தர்கள் சிவனடியார்களைத் தேடிச் சென்று அன்போடு வழிபட வேண்டும். 

சொ.பொ.வி -

வினையால் - பிராரத்த வினையால், அசத்து - உலக அனுபவம், ஞானம் - மெய்ஞ்ஞானம், ஆனத்தால் - ஆனதால், (இப்பாடல் சிவனடியார்களை வழிபட வேண்டும் என்று கூறிச் சங்கம வழிபாட்டை (அடியார் வழிபாட்டை) வலியுறுத்துகிறது.)


உதாரணம் - 7

தன்னை அறிவித்துத் தான்தானாச் செய்தானைப்

பின்னை மறத்தல் பிழையலது - முன்னவனே

தானே தானாச்செய்தும் தைவம்என்றும் தைவமே

மானே தொழுகை வலி. 


பொருள் -

ஆன்மாவிற்கு ஆன்மாவின் இயல்பினை உணர்த்தி, ஆன்மாவைச் சிவமாகச் செய்த குருவை மறந்தால் சிறிய குற்றமாகாது பெரிய குற்றமாகும். இறைவன் ஆன்மாவைச் சமமாகச் செய்தாலும், இறைவனுடைய அடிமையாகிய ஆன்மா எக்காலத்தும் முதல்வன் ஆகாது. அடிமையே ஆகும். எனவே அவ்விறைவனாம் குருவை வழிபடுவது ஆன்மாவிற்கு வலிமையாகும்.

சொ.பொ.வி -

தான் தானா - சிவமாகச் செய்தல், பிழையலது - சிறு குற்றமல்ல (பெருங் குற்றம்), தைவம் - அடிமை, (இப்பாடல் குரு வழிபாட்டை வலியுறுத்துகிறது )


____________________________________

இந்நூலிற்கு உரியவர் 

 (பன்னிரண்டு  சூத்திரங்களைக் கூறிய பிறகு சிவஞானபோதம் என்ற இந்நூல் கற்பவர்கள் யார் என்பதைக் கீழ்வரும் பாடல் குறிப்பிடுகிறது)


சிவம்என்னும் அந்ததர சிந்தைநேர் நோக்கப்

பவமின்றாம் கண்பா சகத்தில் - சிவம்உண்டாம்

ஒன்றும் இரண்டும் மலர்த்தார்க்குஇங்கு ஒண்குருவால்

இன்றுஇந்நூல் மும்மை மலர்க்கு. 

                                  

பொருள் -

சீவன் என்னும் நிலைமை நீங்கிச் சிவமாம் தன்மை பெற்றிருக்கும் மாணவனே, இறைவன் விஞ்ஞானகலர்க்கு உள்நின்று அருள் செய்வான். பிரளயாகலர்க்கு எதிரில் நின்று அருள் செய்வான். எனவே அவ்விருவருக்கும் பசுகரணம் நீங்கிச் சிவ தத்துவம் விளங்கும். அவர்களுக்கு இந்நூல் தேவையில்லை. குருவால் எடுத்துப் போதிக்கப்ப படுகின்ற இந்நூல் மும்மலம் உடைய சகலர்க்கே ஆகும். 


சிவஞானபோதம் முற்றிற்று. 

திருச்சிற்றம்பலம். 


_________________________________________________________    









மெய்கண்ட சாத்திரங்கள் -                                                                                                                                                                                                                                    

உந்தி களிறு உயர்போதம் சித்தியார்

பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தருள்

பண்புவினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு

உண்மைநெறி சங்கற்ப முற்று .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக