புதன், 26 ஜனவரி, 2022

பண்பியல்


முனைவர்.பழ.முத்தப்பன்,

திருச்சிராப்பள்ளி

இன்றைய கணிப்பொறி உலகத்தில் , உலக மொழிகளில் தனிச் சிறப்புப் பெற்று விளங்குவது தமிழ் மொழியாகும். தமிழ் மொழியின் சிறப்பிற்குக் காரணம் அம்மொழியில் அமைந்துள்ள இலக்கிய வளமும், இலக்கண முறைமையும் ஆகும். 

தமிழ் மக்களின் வாழ்வியலை அகத்துறை என்றும், புறத்துறை என்றும் இரு பாகமாகப் பிரித்து அதற்குரிய இலக்கணங்களையும், இலக்கியங்களையும் தமிழ் மொழி தன்னகத்தே கொண்டுள்ளது.  உலக மொழிகளில்  மனத்தை அடிப்படையாகக் கொண்ட அகவாழ்க்கைக்கு இலக்கணம் கண்ட மொழி தமிழ்மொழி ஆகும்.  மனித வாழ்க்கையில் மனத்தின்வழி நிகழுகின்ற அன்பினை அடிப்படையாகக் கொண்ட காதல் வாழ்க்கைக்கு வரையறை செய்து அதன்படி வாழ்ந்த நிகழ்வுகளை அகத்துறை இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. 

பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் அகத்துறை சார்ந்த இலக்கியங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.  அவற்றில் சங்ககாலத் தமிழர்களின் காதல் வாழ்க்கையின் பண்பியல் அழுத்தமாகச் சுட்டிக் காட்டப் பெறுகின்றது. பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான கணிமேதாவியார் என்ற புலவர் பாடிய திணைமாலை நூற்றைம்பது என்ற நூலில் ஒரு காட்சி – உள்ளம் ஒத்த ஒரு தலைவனும் தலைவியும் பலநாட்களாகக் காதலித்து வந்தனர்.  தன்னிகரில்லாத் தலைவன் தன் காதலை வெளிப்படுத்தித் தோழியின் மூலமாகத் தன்னால் விரும்பப்படும் பெண்ணைத் தன் ஊருக்கு அழைத்துச் செல்லுகின்றான். தலைவியின் உடன்பாட்டோடு தலைவன் தலைவியை அழைத்துச் செல்லும் இம்மரபிற்கு உடன்போக்கு என்று பெயர். ஒருநாள் இரவில் தலைவியை அழைத்துச் சென்ற தலைவன், தலைவியோடு தன் ஊரை அடைந்தான்.  அந்த இரவில் தன்னுடன் உறங்கிய தலைவியாகிய மகளைப் பெற்றெடுத்த தாய் படுக்கையில் அவளைக் காணாது துன்புறுகிறாள். தன்னுடைய துன்பத்தைத் தோழியின் தாயாகிய செவிலித்தாயிடம் கூறுகிறாள்.  அதனைக் கேட்ட செவிலித்தாய் சில நாட்களாக நமது வீட்டின் அருகில் தென்பட்ட தலைவன் தான் தலைவியை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். நான் சென்று நம் மகளைத் தலைவனோடு மீட்டு வருவேன் என்று கூறிப் புறப்பட்டாள்.  


அதிகாலைப் பொழுதில் இருவரையும் தேடிப் புறப்பட்ட செவிலித்தாய், நெடுந்தொலைவு வரை அவர்களைக் காணாது வேதனை கொண்டாள்.  அந்த நேரத்தில் எதிரில் ஒரு ஆண்மகனும், பெண் ஒருத்தியும் வருகின்ற தோற்றத்தைக் கண்டாள். வருகின்றவள் தன் வீட்டுப் பெண்ணும் தலைவனுமாக இருக்கலாம் என்று எண்ணி விரைந்து அவர்களை அடைந்தாள்.  அவர்களைக் கண்டாள். ஆனால் அவர்கள் தன் வீட்டுப் பெண்ணும் அவளுடைய காதலனும் இல்லை என்பதை உணர்ந்தாள். என்றாலும் தம் வீட்டை விட்டுச் சென்ற பெண்ணையும், அவளை அழைத்துச் சென்ற ஆடவனையும் எதிரில் பார்த்தீர்களா என்று கேட்டாள். அதற்கு அத் தலைவன் நீங்கள் உங்கள் எண்ணம் நிறைவேற விரைந்து செல்லுங்கள். நீங்கள் தேடி வந்த நோக்கம் கைகூடும். ஏனென்றால் சூரியனைப் போன்ற ஒளி பொருந்திய முகத்தை உடைய ஒரு ஆடவன் போவதைப் பார்த்தேன். என் பக்கத்தில் வரும் இவள் முழு நிலவு போன்ற ஒரு பெண்ணைக் கண்டாளாம். அவர்கள் நீங்கள் நினைத்தவர்களாக இருக்கலாம் என்று கூறினான். அதாவது நான் எதிரில் வந்த ஆடவனை மட்டும் கண்டேன். என்னுடன் வந்த இவள் பெண் மட்டும் கண்டாள் என்று கூறினான். எனவே தன்னுடைய காதலியைத் தவிர ஆடவன் மற்றொரு பெண்ணை ஏறிட்டுப் பார்க்கவில்லை.  பெண்ணும் தன்னுடைய காதலனைத் தவிர மற்றொரு ஆடவன் எதிரில் வந்தாலும் அவனைப் பார்க்கவில்லை. இத்தகைய காதல் வாழ்க்கைதான் தமிழரின் அக வாழ்க்கை என்பது தெரிகிறது. இதனை உணர்த்தும் திணைமாலை நூற்றைம்பது பாடல் - 

நண்ணி நீர்சென்மின் நமரவர் ஆபவேல்

  எண்ணிய எண்ணம் எளிதரோ – எண்ணிய

  வெஞ்சுடர் அன்னானை யான்கண்டேன் கண்டாளாம்

   தண்சுடர் அன்னாளைத் தான். 

இப்பாடல் தமிழரின் அகத்துறைப் பண்பாட்டை வலியுறுத்தும் பாடலாகும். இதே கருத்தை வலியுறுத்தப் பின்னர் வந்த சமய இலக்கியமான மணிவாசகர் பாடிய திருக்கோவையார்; பரிணாம வளர்ச்சியில் பாடலைத் தருகிறது. அதாவது தலைவனையும் தன் மகளையும் கண்டீரோ எனக் கேட்ட செவிலிக்கு எதிர்வந்த ஆடவன் பதில் சொல்வதாகப் பாடல் அமைந்துள்ளது.

மீண்டார் எனஉவந் தேன்கண்டு நும்மைஎம் மேதகவே

பூண்டார் இருவர்முன் போயின ரேபுலி யூர்எனைநின்று

ஆண்டான் அருவரை ஆளியன் னாளைக்கண்டேன் அயலே

தூண்டா விளக்கனை யாய்என்னை யோஅன்னை சொல்லியதே

திணைமாலை நூற்றைம்பதில் எதிர்வந்த தலைவனே தலைவனையும், தன் காதலி தலைவியையும் பார்த்தைப் போலத் திருக்கோவையார் தலைவனோ நான் தலைவனை மட்டும் பார்த்தேன். தலைவியைப் பற்றி நீ அறிய வேண்டுமானால் இப்பெண்ணைக் கேட்டுக் கொள்வாயாக என்று கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.  எனவே எதிரே வந்தவர்களைப் பற்றிய பேச்சுக்கூட இவர்களிடத்தில் நிகழவில்லை. அந்த அளவிற்கு மற்ற ஆணையும் பெண்ணையும் பார்ப்பதைத் தவிர்க்கின்ற பண்பாடு மேலும் வலியுறுத்தப் பெறுகிறது. 


அரசகோவை எனப்படும் திருக்கோவையார் தமிழர் பண்பாட்டை இவ்வாறு வலியுறுத்த, பின்னால் வந்த நல்லாற்றூர் சிவப்பிரகாசர் பாடிய திருவெங்கைக் கோவை இப்பண்பாட்டை மேலும் வலியுறுத்தும் பொழுது, எதிர்வந்த தலைவன் செவிலிக்கு என்னுடைய ஊரையும் பேரையும் இளங்காளை போன்றவன் கேட்டான். இந்தப் பெண்ணின் ஊரையும் பெயரையும் நீ தேடிவந்த மகள் கேட்டாள். இருவரும் இப்பொழுது திருவெங்கை நகர் சென்று அடைந்திருப்பார்கள் என்று கூறினான். திணைமாலை நூற்றைம்பதும், திருக்கோவையாரும் அயலூரில் இருந்து புறப்பட்டு வந்த தலைவனின் பண்பாட்டை வெளிப்படுத்தி இருக்க, திருவெங்கைக் கோவையோ செவிலியின் மகளும், அவளுடைய காதலனும் தழிழர் பண்பாட்டை வெளிப்படுத்தியதாகக் கூறுகிறது.  


என்ஊர்பெயர் இளங்காளையும் இவ்இலங்கிளையாள்

தன்ஊர்பெயர் நும்பிணைவிழி யாளும் தனிவினவினர்

என்பது அப்பாடற் பகுதி. 


இவ்வாறு செவிலிக்கு எதிரே வந்த தலைவனும் தலைவியும், செவிலியின் மகளும் அவளுடைய தலைவனும் , ஆடவர் ஆடவரை நோக்கி, பெண்டிர் பெண்டிரை நோக்கி, ஊர் பெயர் வினவித் தமிழரின் பாலியல் பண்பாட்டை வலியுறுத்தினர். இத்தகைய தழிழர் பண்பாடு இன்றைக்கும் நிகழுமானால் சமுதாயத்தில் பாலியல் ஒழுக்கக் கேடுகள் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. அத்தகைய நிகழ்வில் தமிழ் இலக்கியப் பயிற்சி மக்களிடத்தில் நிலவ வேண்டும். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக