புதன், 26 ஜனவரி, 2022

கோவையில் தமிழர் தம் பண்பாடு.


முனைவர். பழ. முத்தப்பன்,

திருச்சிராப்பள்ளி.

நம் பொம்மபுர ஆதீனப் புலவர் சிவப்பிரகாச சுவாமிகள் தமிழின் சிற்றிலக்கிய வகைகளின் பெரும்பாலான இலக்கியங்களைப் படைத்துள்ளார்.  அவர் பாடியருளிய சிற்றிலக்கியங்களில் ஒன்று திருவெங்கைக்கோவை ஆகும். இந்நூல் திருவெங்கனூரில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப் பெற்றதாகும்.  மாணிக்கவாசகர் பாடியருளிய திருக்கோவையாரை அரசகோவை என்றும், சிவப்பிரகாசர் பாடிய திருவெங ;கைக் கோவையை அமைச்சர் கோவை என்றும் தமிழ் உலகம் போற்றும்.  இத் திருவெங்கைக் கோவையில் அமைந்த ஒரு காட்சியை எடுத்துக்காட்டி, இன்றைய சமுதாயத்தின் பாலியல் செயல்களை அகற்றிட முனைவது இக்கட்டுரையாகும். 


கோவை இலக்கியங்கள் அகப்பொருளுக்கு உரிய நானூறு துறைகளைத் தன்னகத்துக் கொண்டு, தன்னேரில்லாத் தலைவன் தலைவியின் காதல் நிகழ்ச்சிகளை நாடகம் போல் படம்பிடித்துக் காட்டுவதாகும். அந்நாடகத்தில் ஒரு காட்சி.  கோவைத் தலைவன் ஒருவன் தலைவியைக் கண்டு காதலித்தான். தலைவியின் தோழி மூலமாகக் காதலை வளர்த்துக் கொண்டான்.  நாட்கள் செல்லச் செல்லத் தலைவன் தலைவியின் மீது கொண்ட கழிபெருங் காதலால் தோழியின் உதவியுடன் தலைவியைத் தன் ஊருக்கு உடன்போக்கு நிலையில் அழைத்துச் செல்லுகிறான். அவன் அழைத்துச் சென்ற அந்நாள் இரவு விடிந்தது. தன்னுடன் படுத்திருந்த தலைவியாகிய தன் மகளைக் காணாத தலைவியைப் பெற்ற தாய் திடுக்கிட்டாள்.  அவளின் வருத்தத்தைக் கண்ட தோழியின் தாயாகிய செவிலித்தாய் அவளை ஆற்றுப்படுத்தி, தலைவியை மீட்டுக் கொண்டு வருவதாகப் புறப்பட்டாள்.  தன்னுடைய ஊரை விட்டுச் சில கல் தூரம் தலைவியைத் தேடிச் சென்ற செவிலித்தாய் தலைவியைக் காணாது துன்புற்றாள்.  அவளின் துன்பத்தைத் தீர்ப்பது போல, எதிரே ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் வருவதைக் கண்டு, அந்தப் பெண் தன் தலைவியாக இருக்கலாமோ என்று எண்ணி விரைந்து அவர்களை அடைந்தாள். இத்தகைய செய்தியை எல்லாக் கோவை இலக்கியங்களும் தனி ஒரு துறையாகப் படைத்துள்ளன. 


எதிர் வந்தவர்களை அடைந்தவள் எதிர்வந்த தலைவனை நோக்கித் தன்னுடைய தலைவியையும், அவளைக் காதலித்த தலைவனையும் கண்டீர்களோ எனக் கேட்டாள்.  அவள் கேட்ட கேள்விக்கு எதிர் வந்த தலைவன் பதில் சொல்லுவதாக அமைந்த ஒருதுறை எதிர் வருவோரை வினவிடப் பதில் தரல் என்ற தலைப்பில் அமைந்துள்ளது.  அத்தலைப்பிற்குரிய பாடல் தமிழகப் பண்பாட்டை விளக்கும் பாடலாகக் கோவை நூல்களில் இடம் பெற்றுள்ளது.  மற்ற நூல்களில் இடம் பெற்றதை விடத் திருவெங்கைக் கோவையில் இடம் பெற்ற பாடல் மிகச் சிறப்புடைய பாடலாகும். 


இந்தக் காட்சியை முதலில் விளக்குவது திணைமாலை நூற்றைம்பது என்ற பதினெண்கீழ்க் கணக்கு நூலாகும்.  அந்நூலில் இத்துறை பற்றிய பாடல் எம் தலைவியைக் கண்டீரோ எனக்கேட்ட செவிலிக்குத் தலைவன் உங்கள் ஊரிலிருந்து புறப்பட்டு வந்த தலைவனை நான் கண்டேன்.  உங்கள் ஊரில் இருந்து புறப்பட்டு வந்த தலைவியை என்னுடன் வருகின்ற இத்தலைவி கண்டாள் என்ற பொருளில் பாடலை அமைத்துள்ளது. அப்பாடல் தரும் பொருளால் புறப்பட்டு வந்த தலைவனைப் பற்றித் தலைவனும், தலைவியைப் பற்றி எதிர் வந்த தலைவியும் பற்றிப் பேசிக் கொண்டார்கள் என்பது தெளிவாகிறது.  அதற்குரிய பாடல் -


'நண்ணி நீர்சென்மின் நமரவர் ஆபவேல்

எண்ணிய எண்ணம் எளிதரோ – எண்ணிய

வெஞ்சுடர் அன்னானை யான்கண்டேன் கண்டாளாம்

தண்சுடர் அன்னாளைத் தான்.'  (பா.89)


என்பதாகும்.  இப்பாடல் தரும் குறிப்பு –செவிலித்தாய் தேடிவந்த கோவைத் தலைவனையும்,தலைவியையும் எதிர் வந்த தலைவனையும் தலைவியையும் அவரவர் கண்டிருக்கிறார்கள் . ஒருவர் மற்றொருவரைப் பார்க்கவில்லை என்பது தெரியவருகிறது.  


அரசகோவை எனப்படும் திருக்கோவையாரில் மாணிக்கவாசகப் பெருமான், இத்துறைக்குரிய பாடலைப் பாடும் பொழுது ஒரு சிறிது மாற்றம் செய்கிறார். அதாவது செவிலித்தாய் தன்னுடைய மகளையும், அவளுடைய காதலனையும் புலியூரிலிருந்து வந்த தலைவனைப் பார்த்துக் கண்டீரோ எனக் கேட்டபொழுது, எதிர்வந்த தலைவன் தலைவனைப் பார்த்தாயோ என்ற கேள்விக்கு மட்டுமே தான் பதில் சொல்ல முடியும், மற்றொரு கேள்வியான தலைவியைக் கண்டீரோ என்ற கேள்வியைத் தன்னுடன் வருகின்ற தன் காதலியாம் தலைவியைத் தான் கேட்க வேண்டும் என்று கூறுவதாகச் சிறிது மாற்றம் செய்து அமைத்துள்ளார். அதற்குரிய பாடல் - 

'மீண்டார் எனஉவந் தேன்கண்டு

நும்மைஇம் மேதகவே

பூண்டார் இருவர்முன் போயின

ரேபுலி யூர்எனநின்று

ஆண்டான் அருவரை ஆளியன்

னானைக்கண் டேன்அயலே

தூண்டா விளக்கனை யாய்என்னை

யோஅன்னை சொல்லியதே.    (பா.244)


இப்பாடலின் பொருள்:

உங்களைக் கண்டு எம் தலைவியும், தலைவனும் மீண்டார் என மகிழ்ந்தேன். ஆனால் நீங்கள் வேற்றவர் என்பதை உணர்கின்றேன். உங்களைப் போன்று மேன்மை தங்கிய இருவர் முன் சென்றனரோ, உரைமின் (என்று செவிலி கேட்க)அதற்கு எதிர்வந்த தலைவன், தில்லையின் கண் இருக்கின்ற அடியேனையும் ஒரு பொருளாக மதித்து ஆட்கொண்ட தில்லையம்பலப் பெருமானது மலையில் வாழுகின்ற சிங்கம் போன்ற ஒருவனை நான் கண்டேன் (என்றுகூறி) தூண்;டா விளக்கனையாய் அவன் பக்கத்தில் வந்ததாக அன்னை கேட்கும் கேள்வி யாது? அவளுக்குப் பதில் சொல்வாயாக என்று கூறினான். 


இப்பாடல் தரும் குறிப்பு – புலியூர்த் தலைவன் தலைவனை மட்:டும் பார்த்தாகப் பதில் கூறி, தலைவியைப் பார்த்தீர்களாக என்ற செவிலியின் கேள்வி யாது என்றும், அதற்குப் பதில் சொல்வாயாக என்று தன் தலைவியை நோக்கிச் சொன்னதால், திருக்கோவைத் தலைவனை மட்டும் தலைவன் பார்த்ததும், திருக்கோவைத் தலைவியைத் தலைவி பார்த்தாளா பார்க்கவில்லையா? என்பது தமக்குத் தெரியாது,  எனவே கேள்விக்குப் பதில் அவள்தான் சொல்ல வேண்டும் என்று கூறியது தெரிகிறது.  எனவே பதிணென்கீழ்க்கணக்கு நூலும், திருக்கோவையாரும் எதிர்வந்த தலைமக்களில் தலைவன் கோவைத் தலைவனை மட்டுமே கண்டதாகவும், கோவைத் தலைவியைத் தான் பார்க்கவில்லை என்பதையும் பதிவு செய்து, அன்றையத் தமிழ்மக்கள் தங்கள் காதலியைத் தவிர அடுத்த ஒரு பெண்ணைப் பார்க்காத நாகரீகத்தை, பண்பாட்டை வெளிப்படுத்துகின்றனர். 


இவ்வாறு இரண்டு பாடல்கள் பொருள் கூறியிருக்கச் சிவப்பிரகாச சுவாமிகள் தன் திருவெங்கைக் கோவையில் இத்துறைக்குரிய பாடலைப் பாடும்பொழுது ஒரு பெரிய மாற்றத்தையே செய்கின்றார்.  அதாவது முன் இரு பாடல்களும் எதிர்வந்த தலைமக்களின் பண்பாட்டைக் கூற, திருவெங்கைக் கோவைத் தலைமக்களின் பண்பாட்டைக் கூறுவதாகச் சிவப்பிரகாசர் அமைத்துள்ளார். 

'என்ஊர் பெயர்அவ் இளங்கா ளையும் இவ்இலங்கிழையாள்

தன்ஊர் பெயர்நும் பிணைவிழி யாளும் தனிவினவிப்

பொன்நூ புரஅடி வஞ்சியங் காளா பொருந்துகொடி

மின்ஊர் முகில்உறங் கும்பொழில் சூழ்வெங்கை மேவினரே.

(பா.349)

இப்பாடலின் பொருள்:

என்னுடைய ஊர்ப் பெயரையும் என்னுடைய பெயரையும் அவ் இளங்காளை போன்ற உன் தலைவனும், இந்தப் பெண்ணின் ஊரையும் பெயரையும் உமது பெண்ணும் தனித்தனியே வினாவி, பொன்னால் செய்யப் பெற்ற சிலம்பை அணிந்த திருவடியை உடைய உமாதேவியின் பாகத்தை உடையவரது கொடி போல் பொருந்திய மின்னலும், தவழுகின்ற மேகமும் தங்குகின்ற சோலை சூழ்ந்த திருவெங்கைப் பதியை அடைந்தார்கள் என்பதாம். 


எனவே இப்பாடலின்படி செவிலித்தாய் தன் தலைவியையும் தலைவனையும் கண்டீரோ என்ற கேள்விக்கு அவர்களைப் பற்றிய விபரத்தை எதிர்வந்த தலைவன் கூறும் பொழுது, உன்னுடைய மகளின் தலைவன் என்னுடைய பெயரையும் ஊரையும் கேட்டான்.  உன்னுடைய தலைவி என் பக்கத்தில் இருக்கின்ற தலைவியை நோக்கிப் பெயரையும் ஊரையும் கேட்டாள் என்று கூறுவதால், செவிலித்தாயின் தலைவி எதிர்வந்த தலைவியை மட்டும் பார்த்திருக்கிறாள் என்பதும், அவளுடைய காதலனாம் தலைவன் எதிர்வந்த தலைவனை மட்டும் பார்த்திருக்கிறான் என்ற கருத்து பெறப்படுகிறது. திருவெங்கைக் கோவை தலைமக்களின் பண்பாடு, அதாவது பிற ஆடவரையோ பிற பெண்ணையோ ஏறிட்டுப் பார்க்காத தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது எனலாம்.  



இத்தகைய செய்திகளை இன்றைய இளைய தலைமுறை பயிலுமானானல் இன்று சமுதாயத்தில் நடக்கும் வயது முதிர்ந்தோர் இளம் சிறுமிகளைப் பாழ் படுத்துவதும், அடுத்தவர் கணவருக்கு மனைவிக்கு ஆசைப்பட்டுத் தம் குடும்பத்தை இன்றயை ஆடவரும், இன்றைய மகளிரும் தவிக்க விட்டுச் செல்வதும் ஆகிய பாலியல் துயரங்கள் நடைபெறாது என்பது  சமுதாய உண்மையாகும். இத்தகைய பண்பாட்டைத் தரும் திருவெங்கைக் கோவை இன்றையத் தமிழ் மக்களால் ஏற்றுப் போற்றப்பட வேண்டும். 


திருச்சிற்றம்பலம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக