புதன், 26 ஜனவரி, 2022

திருச்சிற்றம்பலக்கோவை உணர்த்தும் செந்நெறி


சித்தாந்தச் செம்மணி , சிவஞானக் கலாநிதி, முனைவர்.பழ.முத்தப்பன். 


தேனூறும் திருவாசகம் தந்த மணிவாசகர் படைத்த சிற்றிலக்கியம் திருச்சிற்றம்பலக் கோவையாகும். நானூறு கட்டளைக் கலித்துறை செய்யுட்களைப் பெற்ற அக்கோவை தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்த பெருங் கருவூலமாகும். திருச்சிற்றம்பலக் கோவையின் பாட்டுடைத் தலைவர் தில்லை மூதூர் பொதுவினில் தோன்றி , எல்லையில்லா ஆனந்தநடனம் புரிகின்ற சிவபெருமான் ஆவார்.  அம்முதல்வனது திருவடியைத் தன் சிந்தையிலும், சென்னியிலும் கொண்டு போற்றும் திருத்தகவுடைய தலைமகனே கிளவித் தலைவன் ஆவான். செய்யுளில் இடம் பெறும் காதல் தலைவி சிவத்தலைவி ஆவாள். தலைவியின் தோழி திருவருள் ஆகும். இத்தகைய பாத்திரங்களைக் கொண்ட திருச்சிற்றம்பலக் கோவையை அறிமுகப் படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது. 


இக்கோவையில் தில்லையில் புத்தர்களை வாதில் வென்ற பிறகு, சிற்றம்பலமுடையாரால் பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று ஆணையிட , மணிவாசகர் இக்கோவையைப் பாடினார் என்பது செவிவழிச் செய்தியாகும். மேலும் திருச்சிற்றம்பலமுடையாரே தம் திருக்கரத்தால் இக் கோவையை ஏட்டில் எழுதினார் என்பதும் மரபுவழிச் செய்தியாகும்;. செய்யுட்கள் தோறும் திருச்சிற்றம்பலமுடையாரின் சிற்றம்பலமும், திருத்தலமும் , தத்ததுவ நிலையும் நற்றமிழ்ச் சொற்களால் தீட்டப் பெற்றுள்ளன. . அப்பகுதிகளை எல்லாம் தொகுத்துரைக்கின் சிற்றம்பலமுடையாரின் தடத்த இலக்கணமும், சொரூப இலக்கணமும் கிடைக்கப் பெறும். மேலும் மணிவாசகர் காலத்துத் தமிழர்தம் வாழ்வியல் பண்பாடும் தெற்றெனப் புலப்படும். 


தில்லைச் சிற்றம்பலமுடையார் அனைவருக்கும் வழிபடு தெய்வம் என்றாலும் , தில்லை மூவாயிரவரின் தனிப்பெருந் தெய்வமாக விளங்குவதை மணிவாசகரும் மறந்தாரில்லை.  தில்லை மூவாயிரப் பெருமக்களைச் சிறப்பித்து அப்பெருமக்களால் வழிபடப் பெறுகின்ற திருவருள் நிலையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். 


ஷஷஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து

மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின்முன்னித்

தீவாய் உழுவை கிழித்த(து)அந் தோசிறி தேபிழைப்பித்(து)

ஆவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோர் ஆண்டகையே' (பா. 72)


இச்செய்யுள்  நடுங்க நாட்டம் என்ற  துறைக்குரிய பாடலாகும். திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாத திருவடியை , மூவாயிரவர்கள் கூடி வணங்கிடத் தில்லையம்பலத்து எளிவந்த நின்ற , அம்பலவாணர் என்று தில்லைப் பெருமான் முதற் பகுதியில் பாராட்டப் பெறுகிறார். முப்பெரும் தெய்வங்களில் இருபெரும் தெய்வங்களைக் காட்டிலும் தில்லை மூவயிரவர்க்கு அம்பலக்கூத்தன் எளிவந்த நிலையில் தோன்றி , தன் திருவடியைப் போற்றும் சிறப்பை அளித்துள்ளார் என்ற பொருளை உணர்கின்ற பொழுது , தில்லை மூவாயிரப் பெருமக்களின் அருமையும் பெருமையும் வெளிப்படுகிறது. இச்செய்தி தில்லை வரலாற்றுக்குப் பெருந்துணை புரியும் என்பதையும் மறுத்தற்கியலாது. இத்தகைய மூவாயிரவர் போற்றும் அம்பலவாணப் பெருமானை நினையாதவர்கள் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்ற செய்தியும் செய்யுளில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். இத்தகைய அம்பலக்கூத்தர் பிறவி நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறவர் என்ற செய்தியையும் பிறிதொரு செய்யுளில் மணிவாசகர் குறிப்பிடுகிறார்.


ஷஷஇருந்துதி என்வயின் கொண்டவன் யான்எப் பொழுதுமுன்னும்

மருந்து திசைமுகன் மாற்கரி யோன் தில்லை' (300)


இச்செய்யுள் பகுதியில் அன்பர்கள் செய்யும் பெரிய துதிமொழிகளை என்னிடமும் கொண்டவன் என்றும் , யான் எப்பொழுதும் நினையும் வண்ணம் மருந்தாக விளங்குகின்றவன் என்றும், பிரமனுக்கும் திருமாலுக்கும் அரியவனாவான் என்றும், அத்தகையோன் வாழுகின்ற தில்லை நகர் என்றும் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. இச்செய்திகளைக் கூறுகின்ற பாத்திரமாகத் தோழி படைக்கப் பெற்றிருக்கிறாள். தோழியின் கூற்றில் தில்லைக் கூத்தனைத் துதித்துப் பாடுவோர்களுக்கு அப்பெருமான் பிறவிநோயைத் தீர்க்கக் கூடிய மருந்தாக விளங்குவான் என்ற சிறப்புடைச் செய்தி இடம் பெற்றுள்ளது. இறைவன் மருந்தாக விளங்குவான் என்ற செய்தி சாத்திர நூல்களிலும் இடம் பெற்றிருப்பது இங்கு ஒப்புநோக்கத் தக்கதாகும். 

ஷஷஉன்னும் உளது , ஐயமிலது உணர்வாய்  ஓவாது

மன்னு பவம் தீர்க்கும் மருந்து ' (திருவருட்பயன், பா.10)

என்பது சாத்திரப் பகுதியாகும். இவ்வாறு திருச்சிற்றம்பலமுடையானின் பொன்னம்பலமும் , திருத்தலமும் கோவைத் தமிழால் சிறப்புடன் கூறப் பெற்றுள்ளன. 


திருச்சிற்றம்பலமுடையாரை உணர்ந்து அருள்பெற வேண்டுமானால் , ஞானாசிரியரின் திருவருள் மூலம்தான் பெறமுடியும் என்பதையும் கோவைத் தமிழ் உறுதிபட மொழிகிறது. 


ஷஷஉள்ளமெல்லாம்

காட்டியன் றேநின்ற தில்லைத்தொல் லோனைக்கல் லாதவர்போல்' (284)

தலைவி தன் எண்ணத்தை முழுமையும் புலப்படுத்தி , அன்று தொட்டு இன்று வரை இந்த தில்லை நகரத்துப் பழையோனே, ஆசிரியர் மூலம் கல்லாதவரைப் போலத் தலைவி வருந்தினாள் என்று கட்டுவிச்சி கூறியதாக இச்செய்யுட் பகுதியின் பொருள் அமைந்துள்ளது.  தில்லைத் தொல்லோனே கல்லாதவர் என்ற செய்யுட்பகுதிக்குத் தில்லைக் கூத்தனை ஆசாரியன் மூலம் கல்லாதவர் என்று முன்னோர்கள் உரை தந்துள்ளனர். இவ்வுரை மூலம் சைவ சமயத்தின் அடிப்படைக் கருத்தான் ஆசிரியன் வழிதான் முத்திப் பேறு கிடைக்கும் என்ற கருத்து வலியுறுத்தப் பெறுவதை அறியலாம். 

ஞானாசிரியர் மூலம் பாச ஞானத்தையும், பசு ஞானத்தையும் அகற்றி , பதி ஞானம் பெற்ற சீவன் முத்தர்கள் நிலையையும் கோவைத் தமிழ் குறிப்பிடுவது சிறப்புடையதாகும். 


ஷஷஎலும்பால் அணியிறை அம்பலத் தோன்எல்லை செல்குறுவேர்

நலம்பா விமுற்றம் நல்கினும் '  (197)


என்ற செய்யுட் பகுதி , உலகத்தில் உடம்போடு வாழுகின்ற பொழுதே , இறைவனின் திருவருளுக்கு ஆட்பட்டுத் தங்களை மறந்து வாழுகின்ற சீவன் முத்தரை அடையாளப் படுத்தும் பகுதியாகும்.  எலும்பு மாலை அணிந்திருக்கின்ற அம்பலத்தாரின் எல்லையாக விளங்கும் முத்தி உலகத்திற்குச் செல்ல விரும்புவோர் வாழும் இவவுலகத்தையே தலைவிக்கு விலையாகக் கொடுத்தாலும், தலைவியின் சுற்றத்தார் ஏற்க மாட்டார்கள் என்ற செய்தி செய்யுட் பொருளாக அமைந்துள்ளது. முத்திக்குச் செல்வோர் வாழும் உலகம் என்பதால் இவ்வுலக வாழ்வு பெறப்படுகிறது.  அத்துடன் மண்ணகமாம் இவ்வுலகத்தில் வாழும் உடம்போடு முத்தி பெறக் கூடிய சீவன்முத்தர் சிறப்பும் உணர்த்தப் பெறுகிறது. இறைவனின் பெருமையையும் திருத்தலத்தையும் சிறப்பித்த கோவைத்தமிழ் மண்ணுலகில் வாழும் ஆன்மா , குருமூர்த்தத்தால் ஞானம் கைவரப் பெற்றுச் சீவன்முத்தராக வாழலாம் என்ற செய்தியையும் கோவைத் தமிழ் தருகிறது என்பது தெளிவாகிறது. 


கோவைத் தமிழ் இலக்கியச் சுவையோடு பக்திச் சுவையையும் தரும் என்பதற்குச் சான்றாக அமைந்த பாடல்களில் கீழ்வரும் பாடல் மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். 


ஷஷஈசற்(கு) யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியஎன்

பாசத்தின் காரென்(று) அவன்தில்லை யின்ஒளி போன்றவன்தோள்

பூ(சு)அத் திருநீ(று) எனவெளுத்;(து) ஆங்கவன் பூங்கழல்யாம்

பே(சு)அத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே' (109)


இது காதல் தலைவன் கூறும் செய்யுளாகும்.  தன் காதலியின் கண்களின் அழகைத் தோழியிடம் கூறுவதாக அமைந்த செய்யுளாகும்.  தலைவியின் கண்கள் இறைவனிடத்தில் தான் வைத்த அன்பு போல் அகன்று , இறைவனால் தன்னிடமிருந்து வாங்கப் பெற்ற பாசம் போல் கறுத்து, இறைவனது தில்லையின் ஒளியை ஒத்து, இறைவனின் திருத்தோள்களில் அணியப் பெற்ற திருநீறு போல் வெளுத்து, இறைவனுடைய திருவடித் தாமரைகளைப் போற்றித் தான் பேசுகின்ற திருவார்த்தை போல நீண்டிருந்தது என்று காதல் தலைவன் கூறுவதாகப் செய்யுளின் பொருள் அமைந்துள்ளது. 

மானிடப் பெண்ணின் கண்கள்  தெய்வ உணர்வோடு கூறப்பெற்றிருப்பது சிறப்புடையதாகும். 


இறைவன் திருநீற்றினை அணிந்திருக்கின்ற அழகினை மணிவாசகர்  குறிப்பிடுகின்ற பொழுது ஒரு புதிய கருத்தைக் கோவைச் செய்யுளில் அமைத்திருக்கிறார்.  


  ஷஷதொழுதெழுவார்

வினைவளம் நீறெழ நீறணி அம்பல வன்தன்வெற்பில்

புனைவளர் கொம்பர்அன் னாய் அன்னாய்'   (118)

என்ற செய்யுட் பகுதியில் தொழுது கொண்டே எழுவாருடைய வினைப் பெருக்கம் அனைத்தும் சாம்பர் ஆகும்படித் தான் திருநீற்றை அணிந்திருக்கின்ற அம்பலவாணப் பெருமானுடைய மலையில், ஒப்பனை செய்யப் பெற்ற பூங்கொம்பை ஒத்த தலைவியே என்று தலைவி அழைக்கப் படுவதாகப் பொருள் அமைந்துள்ளது. இப்பகுதியில் உயிர்களின் வினைத் தொகுதி கெட, இறைவன் நீறணிகின்றான் என்ற பொருள் நயம் புலப்படுவது நினைந்து இன்புறத் தக்கதாகும். இறைவன் திருநீறை அணிவதற்குக் காரணம் தன்னை வணங்குகின்றவர்களுடைய வினைகள் எல்லாம் தான் அணிந்திருக்கின்ற திருநீறு போலத் தன்னுடைய அருளால் எரிந்து சாம்பராகும் என்று குறிப்பிட்டு மணிவாசகர் இறைவன் திருநீறை அணிந்திருப்பதற்குக் காரணத்தைப் புதிய நோக்கில் கூறிப் பக்திச் சுவையைத் தத்துவத்தோடு தந்திருக்கிறார்.  


பக்திச் சுவையைத் திருச்சிற்றம்பலக்கோவை தருவதோடு , பண்டைத் தமிழரின் பண்பாட்டையும் புலப்படுத்தத் தவறவில்லை. 

ஷஷமீண்டார் எனஉவந் தேன்கண்டு நும்மைஇம் மேதகவே

பூண்டார் இருவர்முன் போயின ரேபுலி யூர்எனைநின்று

ஆண்டான் அருவரை ஆளியன் னானைக்கண் டேன்அயலே

தூண்டா விளக்கனை யாய்என்னை யோஅன்னை சொல்லியதே'

(244)

என்ற செய்யுள் காதல் கொண்ட தலைவன் தலைவி இருவரும் தம் ஊரை விட்டுச் சென்ற பொழுது , அவர்களைத் தேடிச் சென்ற செவிலித்தாய் தன் நகரத்திற்கு வருகின்ற வேறொரு தலைவன் தலைவியரைக் கண்டாள். அவர்கள் பால் தன்னுடைய தலைவியையும் அவள் காதலனையும் கண்டீரோ எனக் கேட்ட பொழுது எதிர்வந்த தலைவன் பதில் கூறுவதாக அமைந்தது இச்செய்யுள். இதனை ஒரு நாடகக் காட்சி போல மணிவாசகர் படைத்திருக்கிறார். செவிலித்தாய் எதிர் வந்த தலைவன் தலைவியை நோக்கி , ஷஷஉம்மைக்கண்டு என்னுடைய தலைவியும் தலைவனும் மீண்டார் என்று மகிழ்ந்தேன்.  ஆனால் நீங்கள் வேறு . அவர்கள் வேறு என்பதை உணர்கின்றேன்.  உங்களைப் போன்ற மேன்மை தாங்கிய இருவர் முன்பு சென்றனரோ? கூறுங்கள் ' எனச் செவிலித்தாய் கேட்க அதற்கு எதிர்வந்த தலைவன் , ஷஷபுலியூரின் கண் என்னையம் ஒரு பொருளாக மதித்து ஆட்கொண்ட அம்பலவாணப் பெருமானது அணுகுவதற்கு அரிய மலையில் சிங்கம் போன்றவனை(ஆண்மகனை) யான் கண்டேன் ' என்று கூறிவிட்டுத் தன்னுடன் வந்த தலைவியைப் பார்த்து,ஷஷதூண்டா விளக்கனையாய் ,அன்னை சொல்லியது யாது? உனக்குத் தெரியுமோ ' என்று கேட்டு, தலைவனோடு வந்த தலைவியைப் பற்றி நான் அறியமாட்டேன், நீ அறிந்திருப்பாய் , கூறுவாயாக என்று கூறுவதாகச் செய்யுளின் பொருள் அமைந்துள்ளது. இச்செய்யுளில் ஆண்மகன் ஒருவன் எதிர்வந்த, வேறொரு ஆண்மகனும் பெண்மகளும் வந்தாலும் , அந்த ஆண் மகனைப் பார்ப்பானே தவிர. ஆண்மகனோடு அவனுக்கு உரியவளாய் உடன்வந்த பெண்ணை ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்ற தமிழ்ப் பண்பாடு வெளிப்படுத்தப் பெற்றுள்ளமை பெருமைக்குரிய செய்தியாகும்.  


இவ்வாறு தில்லைப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு மணிவாசகர் போற்றிப் பாடிய திருச்சிற்றம்பலக்கோவையில் பொருட் சிறப்பும், தத்துவக் கருத்தும், பக்திச் சுவையும் அமைந்து , 


ஷஷஆரணங் காணென்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின்

காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்

ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்

சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே' 


என்று பாராட்டப்பெறும் சிறப்பினைப் பெற்று விளங்குகிறது. கோவைத் தமிழை உளங்குளிரப் போற்றித் தில்லைக் கூத்தப்பெருமானின் திருவருளைப் பெறுவோமாக. 


______________________________________


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக