புதன், 26 ஜனவரி, 2022

மெய்ப்பொருள்


முனைவர்.பழ.முத்தப்பன்,

திருச்சிராப்பள்ளி

      உலகப் பொதுமறையாம் திருக்குறளில் மெய்;ப்பொருள் என்ற சொல் ஐந்து குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது.  அருளுடைமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளிலும், மெய்யுணர்தல் அதிகாரத்தில் ஐந்தாவது, ஆறாவது குறட்பாக்களிலும், அறிவுடைமை அதிகாரத்தில் மூன்றாவது குறட்பாவிலும், இகல் அதிகாரத்தில் ஏழாவது குறட்பாவிலும் , வாய்மை என்ற அதிகாரத்தில் பத்தாவது குறட்பாவிலும் மெய்ப்பொருள் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இந்த ஐந்து குறட்பாக்களுக்கும் பரிமேலழகர் உரை எழுதும் பொழுது, மெய்ப்பொருள் என்ற சொல்லுக்கு வளர்ச்சி முறையில் சிறந்ததொரு விளக்கம் தருகிறார். அத்துடன் மெய்ப்பொருள் உணர்தலை அந்தந்த இடங்களில் வலியுறுத்திக் காட்டுகிறார். இந்த அடிப்படையில் மெய்ப்பொருள் என்ற சொல்லிற்கு உரிய பொருளைச்; சுட்டிக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 


       'தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி

        னருளாதான் செய்யு மறம்'  (குறள் .249)

இக்குறட்பாவின் பொருள்:

      உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்தால் ஞானமில்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும் என்பதாகும். இந்தப் பொருள் தந்த பரிமேலழகர் மெய்ப்பொருள் என்ற சொல்லிற்கு விளக்கம் தரும்பொழுது, மெய்ந்நூலில் சொல்லும் பொருள் என்று குறிப்பிடுவார்.  எனவே நிலைபெற்ற நூல்களில் கூறப் பெற்றுள்ள அறம் சார்ந்த பொருள்கள் தான் மெய்ப்பொருள் என்பது பெறப்படுகிறது. இந்த மெய்ப்பொருளை அறிவதுதான் அறிவு என்பதைக் கீழ்வரும் குறட்பாவில் குறிப்பிடுகிறார். 


           'எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருண்

            மெய்ப்பொருள் காண்ப தறிவு'  (குறள். 355)

இக்குறட்பாவின் பொருள்:

       யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும் , அத் தோன்றியவாற்றைக் கண்டு ஒழியாது, அப்பொருள்களில் இருந்து மெய்யாகிய பொருளைக் காண்பதே அறிவாகும் என்பதாகும். இத்தகைய பரிமேலழகர் உரையின்படி அறிவு என்பது நிலைபெற்ற நூல்களின் பொருள்களை அறிந்து கொள்வதே அறிவாகும் என்பது பெறப்படுகிறது. நிலை பெற்ற நூல்களில் அமைந்துள்ள பொருள்களை எவ்வாறு அறிவது என்பதைப் பின்வரும் குறளில் திருவள்ளுவர் காட்டுகின்றார். 


         'கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

          மற்றீண்டு வாரா நெறி'     (குறள். 356)


இக்குறட்பாவின் பொருள்:

       இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனால் மெய்ப்பொருளை உணர்ந்தவர் மீண்டும் இப்பிறப்பின் கண் வாராத நெறியை எய்துவர் என்பதாகும். பரிமேலழகரின் இவ்வுரையின்படி நிலைபெற்ற நூல்களை அதாவது மெய்நூல்களைத் தக்க ஞானாசிரியரிடத்தில் கற்று அவர்கள் கூறும் பொருளுரையால் தெளிவு பெறுதல் மெய்ப்பொருள் உணர்தலாகும் என்பதும் அதனால் பிறப்பு நீங்கும் என்பதும் தெரிகிறது.இவ்வாறு தேசிகராம் ஞானாசிரியர் கூறும் மெய் நூல்கள் யாவை என்பதைக் கீழ்வரும் குறடபாவிற்கு உரையெழுதும் பொழுது பரிமேலழகர் நன்கு விளக்குகிறார். 


        'யாம்மெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்

         வாய்மையி னல்ல பிற'    (குறள் - 300)


இக்குறட்பாவின் பொருள்:

       யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள் யாதொரு தன்மையானும் வாய்மையின் மிக்கதாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை என்று பொருள் எழுதி, அதற்கு விளக்கவுரை எழுத வந்த பரிமேலழகர், 'மெய் உணர்ந்தவற்றை மெய் என்றார். அவையாவன – தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணர வல்லவராய், காம, வெகுளி இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லவராய இறைவனருள் பெற்ற உலகத்தார் (ஞானாசிரியர்) உய்தி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள்' எனக் குறிப்பிடுவார். 

        இவ்வாறு அமைந்த நான்கு குறட்பாக்களால் நிலைபெற்ற நூல்களில் கூறப்பெற்ற பொருள்களை அறிவது அறிவு என்றும், அந்த அறிவை யாரிடம் பெறவேண்டும் என்றால், இறையருள் பெற்ற காம,வெகுளி, மயக்கம் அற்ற ஞானாசிரியர்கள்பால் என்பதும், அவர்கள் கூறுகின்ற அந்த ஆகம நூல்களாம் நிலைபெற்ற நூல்களின் தலையாய அறமாக வாய்மை இடம்பெற்றுள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. 

       வாய்மை என்பது பெரும்பான்மையும் காமமும் பொருளும் பற்றி நிகழுகின்ற பொய்மையை விலக்கி உண்மையைக் கூறுதல்.  எனவே எத்தகைய மக்கள் வாய்ச்சொற்களைக் கூறினாலும், அந்த வாய்ச் சொற்களின் உண்மையான பொருளை அறிவது அறிவின் மற்றொரு செயலாகும் என்பதைக் கீழ்வரும் குறட்பா குறிப்பிடுகிறது. 

         'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்

         மெய்ப்பொருள் காண்ப தறிவு'  (குறள் - 423)

இக்குறட்பாவின் பொருள்:

        யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப் பொருளின் மெய்யாகிய பயனைக் காணவல்லது அறிவாம் என்பதாகும். இதற்கு விளக்கவுரை எழுதவந்த பரிமேலழகர் 'உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார் வாயினும் ஒரோவழி கேட்கப் படுதலான், எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் என்றார்.'  இதன்படி வாய்ச்சொற்களைப் பலர்பால் கேட்டாலும் அந்தச் சொற்களால் பெறப்படுகின்ற உண்மையான பயன் எது என்பதை உணர்வதுதான் ( அதாவது மெய் உணர்வதுதான்)அறிவு எனப்படும் எனத் தெரிகிறது. 

       எனவே இந்த ஐந்து குறட்பாக்களால் உலக மக்கள் யார் கூறினாலும், அதனைக் கேட்டல் மனிதப்பண்பு என்றாலும், மெய்ப்பொருளை உணர்ந்த இறையருள் பெற்ற ஞானாசிரியர்களால் கூறப்படுகின்ற வாய்மொழிகளாம் ஆகம நூல்களின் சொல்லையும், பொருளையும் கேட்பதும், அச்சொல்லின் நிலையான தன்மையை உணர்வதும், மெய்ப்பொருள் உணர்தல் என்பது பெறப்படுகிறது. 

      இவ்வாறு ஆகம நூல்களை, அதில் கூறப்பட்ட அறங்களை உணர்வது மெய்யுணர்தல் என்பதை வளர்முறையில் காட்டிய பரிமேலழகர், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் என்று தொடங்கும் மெய்யுணர்தல் அதிகாரக் குறட்பாவிற்கு உரையெழுத வரும்பொழுது, நீண்ட உரைதந்து அந்த நிலையான மெய்ப்பொருள் பற்றிய விளக்கத்தைத் தருகிறார். அவ்விளக்கம் பரிமேலழகரின் உரைச்சிறப்பாகும்.  அக்குறட்பாவின் விளக்கவுரை -  

       பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து நின்ற உண்மையைக் காண்பதாம் என்ற மெய்யுணர்வின் இலக்கணம் கூறப்படுகிறது.  அஃதாவது கோச்சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றவழி, அரசன் என்பதோர் சாதியும், சேரமான் என்பதோர் குடியும், யானை நோக்கினை உடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சிறப்புப் பெயரும் ஒரு பொருளின் (அரசன்) கண் கற்பனையாதலின், அவ்வாறு உணராது நிலம் முதலிய உயிர் ஈறாகிய தத்துவங்களின் தொகுதிகளை உணர்ந்து அவற்றை, நிலம் முதலாகத் தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டு சென்றால், காரண காரியங்கள் இரண்டும் இன்றி முடிவாய் நிற்பதை(மெய்ப்பொருளை) உணர்தலாம்' என உரை எழுதுவார். இந்த உரைக்கு மிகச் சிறப்பாக வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் ஆராய்ச்சிக் குறிப்புரையை எழுதியுள்ளார். அதனைப் படித்து அறிதல் இன்றியமையாததாகும். 

      

      எனவே பரிமேலழகர் விளக்க உரையின்படியும் , வை.மு.கோ.அவர்களின் ஆராய்ச்சி உரையின்படியும் கீழ்க்கண்ட ஒரு முடிவிற்கு வரலாம். அதாவது மெய்ப்பொருள் என்பது உலகத்தில் உள்ள இயங்குகின்ற பொருளாயினும், இயங்காது நின்ற நிலைத்த பொருளாயினும் அவற்றினுடைய உலகத் தன்மையைப் பாராது, (அதாவது அந்த இயங்குதிணைப் பொருள்கள், நிலைத்த பொருள்களின் பெயர், தன்மை இவற்றைப் பாராது)அவற்றுள் இருந்துகொண்டு அவற்றை முப்பத்தாறு தத்துவங்களால் இயக்குகின்ற , அத் தத்துவங்களில் இருந்து நீங்கியிருக்கின்ற பெயர், சாதி முதலான கற்பனைகள் இல்லாமல் எப்பொழுதும் மேலாக இருத்தலைத் தன் குணமாகக் கொண்ட, அறிவதற்கு அரிதான, ஞான சொரூபியாய் ஆன்மாக்களுக்கு மேற்பட்டதாகிய எல்லாவற்றுக்கும் ஆதாரமான இறைவனின் சொரூபத்தைக் காண்பது மெய்ப்பொருள் காண்பதாகும் என்பது பெறப்படுகிறது.  எனவே பரிமேலழகர் உரையின்படி மெய்யுணர்தல் என்பது என்றும் நிலைத்திருக்கின்ற இறைவனை அறிதல் என்பது பெறப்படுவதாம். 

__________________




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக