புதன், 26 ஜனவரி, 2022

முப்பாலில் முத்தமிழ்.


    முனைவர். பழ. முத்தப்பன்

       திருச்சிராப்பள்ளி.


       தமிழ்ச் சிற்றிலக்கியங்களான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்துக் கூறுகின்ற பழம்பாடல் ஒன்று உண்டு. 


           'நாலடி நான்மணி நான்நாற்பது ஐந்திணைமுப்

            பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

            இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே

            கைந்நிலை யவாம்கீழ்க் கணக்கு.'


இப்பாடலில் திருக்குறள் முப்பால் என்று குறிக்கப் பெற்றுள்ளது.  திருக்குறளைப் பாராட்டிய ஐம்பத்திமூன்று பேர் பாடிய ஐம்பத்திமூன்று வெண்பாக்களைக் கொண்ட திருவள்ளுவமாலையில் பதினைந்து பாடல்களில் முப்பால் என்ற சொல்லால் திருக்குறள் குறிக்கப் படுகிறது. மேலும் பரிமேலழகர் உரையின் சிறப்புப் பாயிரத்திலும் பரிப்பெருமாள் உரையின் சிறப்புப் பாயிரத்திலும் திருக்குறள் முப்பால் என்றே குறிக்கப் பெறுகிறது.  அறம்,பொருள், இன்பம் என்ற மூன்று பகுதிகளைத் தன்னகத்துக் கொண்டதால் திருக்குறள் முப்பால் என்று அழைக்கப் பெறுகிறது. 


       இமயத்தின் எல்லை கண்ட எம்தமிழ் இயல், இசை, நாடகம் என்ற மூன்று பகுப்புக்களைக் கொண்டதால் முத்தமிழ் என்று அழைக்கப் பெறுகிறது.

     

      'தித்திக்கும் தௌ;ளமுதாய் தௌ;ளமுதின் மேலான

       முத்திக்கனியே என் முத்தமிழே' (கண்ணி – 69)

என்பது தமிழ்விடு தூதின் பகுதியாகும். 


       இக்கட்டுரை திருக்குறளாம் முப்பாலில் தமிழின் வகையான முத்தமிழ் கூறுகள் இடம் பெற்றுள்ளன என்பதை ஒரு சிறிது சுட்டிக்காட்டுகிறது. 


       இலக்கியம் கண்டு இலக்கணம் இயம்புதல் என்பது தமிழ் மரபாகும். தொல்காப்பியம் என்ற தமிழின் முதல் இலக்கண நூல் தனக்கு முன்னே தோன்றிய இலக்கியங்களைக் கொண்டு எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து இலக்கணங்களைப் பகுப்பாகவும், குறிப்பாகவும்  வகுத்துக் காட்டுகின்றது. அதில் ஒரு இலக்கணம் ,

             'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

              பாடல் சான்ற புலனெறி வழக்கம்

              கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்

              உரியதாகும் என்மனார் புலவர்' (தொல்.பொ.53)


என்பதாகும். இதன் குறிப்புப் பொருள் - புனைந்துரை வகையானும், உலகியல் வழக்கானும் பாடல் சான்ற இலக்கண மரபால் அமைந்த ஒழுகலாறுகள் கலிப்பா, பரிபாட்டு என்னும் இருபாக்களாலும் கூறுவதற்கு உரியதாகும் என்பர் அறிவுடையோர் என்பதாம். தொல்காப்பிய முதல் உரையாசிரியர் இளம்பூரணர் இச்சூத்திரத்திற்கு உரை எழுதும் பொழுது, 

       'நாடக வழக்காவது சுவைபட வருவன எல்லாம் ஓரிடத்து நிகழ்ந்தனவாகத் தொகுத்துக் கூறுதல் என்றும், 

       உலக வழக்காவது உலகத்தால் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது' என்றும் உரை எழுதுவார். 

       இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், நாடக வழக்கு என்பதற்குப் புனைந்துரை வகையால் உரைப்பது என்று எழுதுவார்.  உலக வழக்கு என்பதற்கு உலக மக்களின் இயல்பு நிலையைக் கூறுவது என்பார்.  பிற்கால உரையாசிரியர்கள் இவற்றை எல்லாம் எண்ணி,


        'சுருக்கமாகக் கூறினால், உலகில் அருகிக் காணப்படுவனவற்றை மக்கள் சமுதாய நன்மை கருதிப் பெருக்கிக் கூறுதலும், உலகில் பெருகிக் காணப்படும் தீயனவற்றைச் சுருக்கியும், இலைமறை காயாகவும் கூறுவதே பண்டைத் தமிழ் நெறியாகும். முழுவதும் இல்லெனக் கூறுவதோ சிறிது இல்லெனக் கூறுவதோ எந்த இடத்திலும் இல்லை.' (தமிழண்ணல்,தொல்காப்பியத் தமிழ் நெறிகள் நூல், ப.11) 


        இவற்றை எல்லாம் கொண்டு நோக்கும் பொழுது, நாடக வழக்கு என்பது பாடும் புலவன் உலக நிகழ்வைத் தன் கற்பனையாற்றால் சிறிது விளக்கிக் கூறுவது என்பதும், உலக வழக்காகிய இயற்றமிழ்  என்பது உலகியல் மக்கள் வாழ்வை நேரிடையாகச் சுட்டிக் காட்டுவது என்பதும் பெறப்படும். 


       முப்பாலாம் திருக்குறளின் காமத்துப்பால் முழுமையும் நாடகத்தமிழ் அமைந்திருக்கிறது என்பதைக் கீழ்வரும் கூற்று குறிப்பிடுகிறது. 

      

     'காமத்துப் பாலில் வரும் குறள் ஒவ்வொன்றும் நாடக நூலில் வரும் பேச்சுக்கள் போல, யாரேனும் ஒருவர் கூற்றாக அமைந்திருப்பது வெள்ளிடைமலை. இதனால் இதனை நாடகநூல் என்று கூறலாம். நாடக வழக்கு என்ற மரபைத் தொல்காப்பியமும், இறையனார் அகப்பொருளும் கூறுவதை உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்'.(தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தென்காசி திருவள்ளுவர் கழகத்து வெள்ளிவிழா மலர், ப.80) எனவே திருக்குறள் நாடகத் தமிழைத் தன்னகத்துக் கொண்டுள்ளது என்பது உறுதி. 


        இசைத்தமிழ் தமிழ்ச் செய்யுள் இலக்கணங்களைக் கொண்டு, ஆசிரியம், வெண்பா உள்ளிட்ட ஐந்து பாவினங்களோடு விளங்குவது ஆகும். செய்யுள் வடிவமே இசைப்பாட்டு வடிவமாகும். செய்யுளியல் என்ற தொல்காப்பிய அதிகாரத்திற்கு உரையெழுத வந்த நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரத்தில் அமைந்த வழக்கும் செய்யுளும்' ஆயிரு முதலில் எழுத்தும் சொல்லும் பொருளும்' என்ற தொடரைக் கையாண்டு, எழுத்தாலும் சொல்லாலும் வழக்கிற்கும் செய்யுளுக்கும் உரியனவற்றைக் கலந்து கூறுவது செய்யுளியல் என்று எழுதுவார். இதன்படி உலக நிகழ்வுகளைச் செய்யுள் வடிவில் கூறுவது, அந்த செய்யுளை இசைக்குரிய பாவினங்களால் கூறுவது இசைத்தமிழ் எனப் பெறப்படுகிறது. திருக்குறளில் குறள் வெண்பா அமைப்பு அமைந்து, அளபெடைகளையும்;, அசைச் சொற்களையும் உரிய இடங்களில் கையாண்டு திருவள்ளுவர்  இசைத்தமிழை இடம்பெற வைத்துள்ளார். அளபெடை என்பது இசை நீட்டலுக்குரிய அமைப்பு என்பதும், அசைச்சொல் என்பது ஓசையை நிறைவிக்க வந்தது என்பது அறிந்ததே. எனவே நாடகத்தமிழ் போல இசைத்தமிழும் திருக்குறளில் அமைந்துள்ளமை மறுக்க இயலா. 


          முப்பாலில் முத்தமிழ் என்ற நிலையில் இயற்றமிழ் அமைந்திருக்கிறது என்பதை வலியுறுத்த வருகின்ற இக்கட்டுரை,தொல்காப்பிய இலக்கணப்படி திருக்குறள் உலக வழக்குகளைக் கூறுவதால் இயற்றமிழுக்கு உரியதாகிறது என்பதைப் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறது. 


       தமிழண்ணல் அவர்கள் கூறியபடி, உலகில் பெருகிக் காணப்படும் தீயனவற்றைச் சுருக்கியும், இலைமறை காயாகவும் கூறுவதோடு, இளம்பூரணர் கூறியபடி உலகத்தார் நல்லொழுக்கங்களைக் கூறுவதால் திருக்குறள் இயற்றமிழைத் தன்னகத்துக் கொண்டிருக்கிறது. 


       அவா அறுத்தல், அழுக்காறு, இரவச்சம்,இன்னா செய்யாமை, உட்பகை, கயமை, கல்லாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை என்பன போன்ற சில தீய ஒழுக்கங்களைக் குறைவாகக் காட்டி, சான்றோரின் நற்பண்புகளாகிய அருளுடைமை, அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினை உடைமை ஆகிய சான்றோர்களின் நலன்களை அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் அதிகமான அதிகாரங்களால் விரித்து உரைக்கிறது என்பதால் இயற்றமிழைக் கொண்டுள்ளது என்பது தெளிவாம்.  


       இயற்றமிழை இன்றைய வழக்கில் உரைநடைத் தமிழ் என்று குறிப்பிடலாம். இன்றைய உலகில் உரைநடை, சிறுகதை வடிவாகவும், உலக நடைமுறைகளைக் கூறி  நல்ஒழுக்கங்களைக் கூறுகின்ற அருளுரையாகவும், அன்றாடச் செய்தித்தாள் செய்திகளாகவும், நாவல் நூல்களாகவும் காணப் பெறுகின்றன. இவையனைத்தும் திருக்குறளில் இடம் பெற்று இயற்றமிழ் நூலாகிறது. 


       திருக்குறளில் சிறுகதை வடிவங்கள் பல காணப் பெறுகின்றன. உதாரணமாகச் சில குறட்பாக்களை எடுத்துக் காட்டலாம். 


      'கான முயல்எய்த அம்பினில் யானை

       பிழைத்தவேல் ஏந்தல் இனிது'  (குறள் -772)

      'கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

       மெய்வேல் பறியா நகும் ' (குறள் - 774)

இவை போன்ற திருக்குறள்கள் புறப்பொருள் நிகழ்வை ஒரு சிறு கதை போலக் கூறுகிறது எனலாம்.   


      'மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

       நோக்கக் குழையும் விருந்து'  (குறள் -90)

      'இனிய உளவாக இன்னாத கூறல்

       கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள் -100)

இவை போன்ற திருக்குறள்கள் அருளுறை இயற்றமிழை எடுத்துக் காட்டுகின்றனவாகும். 


       'நெஞ்சத்தார்; காத லவராக வெய்துண்டல்

        அஞ்சுதும் வேபாக்கு அறிந்து'  (குறள் -1128)

       'தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

        எம்மை மறைத்தீரோ என்று'   (குறள் - 1318)

இக்குறள்கள் அகத்துறை சிறுகதை இயற்றமிழை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம். 

       தீயனவற்றைச் சுருக்கிக் கூறுதல் என்ற இயற்றமிழைக் காண்பதற்குத் திருக்குறளில் கயமை அதிகாரத்தை உதாரணமாக எடுத்துக் காட்டலாம். உலகில் உள்ள கயமைத் தன்மைகளை எல்லாம் பத்துக் குறட்பாக்களில் சுருக்கமாகக் கூறிவிடுகிறார் திருவள்ளுவர். உதாரணத்திற்கு ஒரு குறள்-


         'அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

          மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்'  (குறள் - 1076)


      தான் கேட்ட இரகசியங்களை அதாவது மறைக்க வேண்டிய செய்திகளைச் சுமை போலத் தாங்கிக் கொண்டு சென்று, பிறர் கேளாமலே கூறுவது கயவர்கள் செயலாகும். இது எப்படி இருக்கிறது என்றால், பறைக்கருவியைக் கையில் எடுத்துச் சென்று தானே அதிரும்படி அடித்து ஒலிக்கின்ற செயலைப் போன்றதாகும் என்ற செய்தி இக்குறளில் இடம் பெற்றுள்ளது.  இது போன்ற குறட்பாக்கள் மிகச் சுருக்கமாக அமைந்து இயற்றமிழ் இலக்கணத்தை வெளிப்படுத்துகிறது. 


     நிகழ்ந்த செய்தியைக் கூறும்பொழுது அவையத்தில் கூற முடியாதவற்றை இலைமறை காயாகக் கூறுவது தமிழரின் இயற்றமிழ் நெறியாகும். இதனை எடுத்துக்காட்ட கீழ்வரும் குறளைக் குறிப்பிடலாம். 


        'தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

         அம்மா அரிவை முயக்கு'  (குறள் - 1107)


ஒரு ஆணும் பெண்ணும் உடல் இன்பம் துய்த்ததை வெளிப்படையாக விரிவாகக் கூறாமல் இலைமறை காயாக ஒரு உவமையில் எடுத்துக்கூறி விளக்குகிறது இக்குறட்பா. இவ்வாறு இயற்றமிழுக்குரிய கூறுகளை எடுத்துக் காட்டிக் கொண்டே செல்லலாம்.  என்றாலும் விரிவுகருதி விடுத்தனம்.  


       முப்பாலில் இயற்றமிழ் என்ற நிலையில் உலக நிகழ்வுகளைச் செய்யுள் வடிவில்லாது, சொற்கோவையாகக் கூறவேண்டிய நீதிகளை விளக்கிக் கூறுவதும், கூறும்பொழுது கதைபோலக் கேட்பவர் மனங்கொள்ளக் கூறுவதும், வெளிப்படையாகக் கூறமுடியாதவற்றை இலைமறை காயாகக் கூறுவதும் ஆகிய இலக்கணங்களை முப்பாலாம் திருக்குறள் பெற்றிருக்கிறது. 


------------------


    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக