புதன், 26 ஜனவரி, 2022

சீவகசிந்தாமணியில் இயற்கை இகந்த நிகழ்வகள்



சீவகசிந்தாமணிக் காப்பியம் தமிழில் வாழும் தலைசிறந்த இலக்கியம் ஆகும். இது காதலைப் பாடும் உணர்ச்சி மிகுந்த பெருங்காப்பியம். ஹோமர் படைத்துள்ள இலியத், ஒதிவி ஆகிய பெருங்காப்பியங்களுக்கு நிகரானது. உலகப் பெருங் காப்பியங்களில் இதுவும் ஒன்று என்று குறிப்பிடுவார் ஜி.யு.போப்.   சீவகசிந்தாமணி என்பது செந்தமிழின் முதல் பேரிலக்கியம். சமணசமயக் காவியம். அந்நூலில் மறைமலை அடிகளார்க்கு இருந்த ஆழ்ந்த சுவை உணர்ச்சியின் வெளி உருவம்தான் சிந்தாமணி என்று தன் பெண்ணின் பெயராக அமைந்தது.   இத்தகைய சீவகசிந்தாமணி தமிழுக்கே உரிய காப்பியம் இல்லை என்றாலும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட காப்பியம் ஆகும்.  சீவகன் கதையை வடமொழியில் கூறும் நூல்கள் பலவற்றுள் ஒன்று சீவந்திரசம்பு என்பதாகும். இதனை இயற்றியவர் அரிச்சந்திரகவி என்பவராவார். இக்கதையில் இடம்பெற்ற செய்திகள் சீவகசிந்தாமணிக்கு அடிகோலின. இக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள இயற்கை இகந்த நிகழ்வுகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 

ஷஷஇயற்கை இகந்த ஆற்றல்கள் காப்பியக் கவிஞரால் இலக்கிய உத்தியாகப் பயன் படுத்தப் பெறுகிறது.  அரிஸ்டாட்டிலின்  கவிதை இயல் இதனைக் காப்பியக் கூறாகவே நினைக்கின்றது. மிகத் தேவையானதாகவும் எண்ணுகின்றது என்பர்   மீவியற்கை என்று கூறப்படும் இந்த இயற்கை இகந்த ஆற்றல் மூவகையாகப் பகுத்துக் கூறப்படும். 1. கவிதைச் சிறப்பிற்காக அமைக்கப் படுவது. 2.  நடப்பில் காண்பதை விடச் சிறந்ததாக அமைவது. 3.  பழைய மரபில் உள்ளனவற்றைக் குறிப்பிடுவது என்று மூன்று வகையாக ஆய்வாளர்கள் கருதுவார்கள்.   

சீவகசிந்தாமணியில் இயற்கை இகந்த நிகழ்வகள் காப்பியக் கட்டுக்கோப்பிற்கு இன்றியமையாதனவாக அமைகின்றன.  இந்த நிகழ்வு இல்லையென்றால் காப்பியச் சுவை குறைந்து விடும் என்ற அளவிற்குக் காப்பிய நடையோடு இந்த நிகழ்வுகள் இணைந்துள்ளன. 

பாத்திரங்கள் 

இயற்கை இகந்த நிகழ்வுகளை இயக்கும் பாத்திரங்கள் பல சிந்தாமணியில் இடம் பெற்றுள்ளன. கலுழவேகன் என்பவன் வித்தியாதர அரசனாகப் படைக்கப் பெற்றிருக்கிறான். இவன் தரன் என்ற ஒருவனால் சீதத்தனை விச்சாதர உலகிற்கு வரவழைக்கிறான். சீதத்தன் இவ்வுலகத்து மானுடன். இவன் கப்பலில் செல்லும் போது தரன் மயக்கி கலுழவேகன் தன்பால் அழைத்துக் கொள்கிறான்.  எனவே தேவர் உலகத்துப் பாத்திரமான விளங்குகின்ற கலுழவேகனும் அவனுடைய பணியாளாகிய தரனும் இயற்கை இகந்த பாத்திரங்களாக நம்மால் காணமுடிகிறது. 

அதுபோல மந்திரச் சொற்களால் நாய் ஒன்று இயற்கை இகந்த பாத்திரமாக அமைகிறது. சீவகன் அருகதேவனின் மந்திரத்தைக் கூற, அந்தணர்களின் உணவை வெளவித் தின்ற நாயானது சுதஞ்சனன் என்ற தேவனாக மாறுகிறது. அவன் சீவகனுக்கு நண்பனாகிப் பலவிதத்திலும் உதவி செய்கின்றான்.  எனவே இயற்கை இகந்த பாத்திரமாகச் சுதஞ்சனன் விளங்குகின்றான். 

இக்காப்பியத்தில் குணமாலை தூது விட்ட கிளியும் சீவகனிடம் பேசுவது போல் படைக்கப் பெற்றிருக்கிறது. அக்கிளி பேசுவதோடு அல்லாமல் மடல் ஒன்று பெற்று வந்து குணமாலையிடம் கொடுக்கிறது. எனவே சொல் கூற இயலாத கிளி பேசுகின்ற மானுடன் போல் படைக்கப் பெற்றது இயற்கை இகந்த பாத்திர அமைப்பாகும். 


சிந்தாமணியில் அசரீரி என்ற தேவலோக ஒலி ஒரு இயற்கை இகந்த பாத்திரமாகப் படைக்கப் பெற்றிருக்கிறது. கட்டியங்காரன் இறப்பான் என்பதை அசரீரி கூறியதாக  அமைக்கப் பெற்றிருப்பது இதற்கொரு சான்றாகும். இவ்வாறு இயற்கை இகந்த பாத்திரங்கள் சீவகசிந்தாமணியில் இடம் பெற்றுக் கதையின் கட்டுக்கோப்பிற்கு உதவுகின்றன. 


மயிற்பொறி

வானவூர்திகள் பயன்படுத்தப் பெறுகின்ற இக்காலத்திய இயந்திர அறிவு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சீவகசிந்தாமணியிலேயே இருந்தமை புலனாகின்றது. சச்சந்தன் விசயையினிடத்துக் காமம் மிகுதியுடையவனாய் வாழ்ந்த பொழுது அவளைக் காப்பதற்காக மயில் ஊர்தி ஒன்றைத் தச்சன் ஒருவனிடம் செய்யுமாறு கூறுகின்றான். அந்த மயில் ஊர்தி எந்திர ஊர்தி என்பதனைத் திருத்தக்கத்தேவர் குறிப்பிடுகின்றார். 

ஷஷவெந்திறலான் பெருந்தச்சனைக் கூவிஓர் 

எந்திரஊர்தி இயற்றுமின் என்றான்|| 

என்ற பகுதி மயில்ஊர்தியை எந்திரஊர்தி என்று குறிப்பிடுவது சிறப்புடையதாகும். பொறிஇயல் திறன் இல்லாத காலத்தில் திருத்தக்கத்தேவரால் கற்பனையாக ஒரு எந்திர ஊர்தி கண்டுபிடிக்கப் பட்டது என்பது இயற்கை இகந்த நிகழ்வுதானே. இந்த ஊர்தியைப் பல்வகைத்துணி, பச்சை வெள்ளை நூல், நல்ல அரககு,  மெழுகு இன்னும் பல பொருள்கள் சேர்த்து ஏழு நாட்களில் வானத்தில் பறக்கக் கூடியதாகத் தச்சன் செய்தான் என்று திருத்தக்கதேவர் குறிப்பிடுகிறார். இதனைக் கரட எந்திரம் என்று ஸ்ரீபுராணம் குறிப்பிடுவதாகக் கூறுவர்.   எனவே இரும்பு உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்படாது கற்பனையாகக் காப்பியப் புலவரால் படைத்துக் கொள்ளப் பெற்ற ஒரு எந்திரப்பொறி என்பதால் இயற்கைஇகந்த கருவியாக இதனைக் கொள்ளலாம்.  இது விசயையை ஏற்றிக் கொண்டு பறந்து செல்கிறது. இதனைத் திருத்தக்கத்தேவர் குறிப்பிடும் பொழுது, மயிலானது தன் தோகையைச் சுருக்கிக் கொண்டு கீழே இறங்குவது போல இயந்திரம் இறங்கியது என்றும், மயிலானது தன்னுடைய கால்களைக் குவித்து இறங்கியது போல இறங்கியது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.  எனவே எந்திர அமைப்பை ஒரு புலவரின் கற்பனையில் காணமுடிகிறது. 

மாயை நிகழ்வு

இயற்கை இகந்த நிகழ்வுகளில் மாயா வித்தை போலச் சில நிகழ்வுகள் அமைவது உண்டு. கலுழவேகன் சீதத்தனுடைய மரக்கலத்தை திடீரெனத் தோன்றிய புயற்காற்று மறைத்தது என்பதும், பின்பு சீதத்தன் தன்நாடு திரும்பும் பொழுது பழமையில் இருந்த படியே மீண்டும் அந்த மரக்கலம் தோன்றியது என்று கதையின் கட்டுக்கோப்பில் மாயா வித்தை போல அமைந்திருக்கிறது.  இதனைக் கீழ்க்கண்டவாறு புலவர் படைத்துள்ளார்.

ஷஷஓம்பிப் படைத்த பொருளும் உறுகாதலாரும்

வேம்பு உற்ற முந்நீர் விழுங்கல் விரையாது நின்றான்||  

என்ற பகுதியின் மூலம் சீதத்தனுடைய பொருளும், அவனுடைய உற்றாரும் மறைந்தமை கூறப்படுகிறது. இதே பொருள்கள் மீண்டும் தோன்றின என்பதும் மாயாவித்தையாகப் படைக்கப் பெற்றிருக்கின்றது. 

ஷஷபீழை செய்து பெற்றனன் வாழிஎன்று மாக்கடல்

ஆழ்வித்திட்ட அம்பியைத் தோழற்குச் சுட்டிக் காட்டினான்|| 

இப்பகுதியில் அம்பி என்று கூறப்படுகின்ற மரக்கலம் மீண்டும் தோன்றியது என்பது இயற்கை இகந்த நிகழ்வு ஆகும். 

மந்திரம்

மந்திரச் சொற்களால் இயற்கை இகந்த நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. குணமாலையார் இலம்பகத்தில் புறநகர்ச் சோலையில் அந்தணருடைய சோற்றுக் குவியலை நாய் ஒன்று தீண்ட அதனை அவர்கள் கல்லையும் தடியையும் கொண்டு தாக்கினார்கள். அடியின் துன்பத்தால் வலி பொறுக்க மாட்டாது நாய் வருந்திய பொழுது, அவ்வழியே வந்த சீவகன் பஞ்சநமஸ்காரம் என்னும் ஐம்பத மந்திரத்தை அதன் காதில் ஓதினான். உடனே அந்த நாய் விலங்குப் பிறப்பு ந்Pங்கிச் சுதஞ்சனன் என்ற பெயரோடு தேவனாக மாறிற்று என்பது கதையின் அமைப்பாகும்.  இது ஒரு இயற்கை இகந்த நிகழ்வாகும். பஞ்சநமஸ்காரம் என்ற மந்திரத்தைச் சீவகன் நாயின் காதில் கூறியதைக் கீழ்க்கண்டவாறு புலவர் பாடுகிறார். 

ஷஷமுற்செய்த வினையின் நீங்கி நல்வினை விளைக்கும் வித்து

மற்செய்து வீங்கும் தோளான் மந்திரம் ஐந்தும் மாதோ

தற்செய்கை தளிர்ப்பத் தாழ்ந்தாங்கு அதன்செவியில் செப்புகின்றான்|| 

என்று பாடற்பகுதி அமைந்துள்ளது. இங்கு நல்லவினை விளைவிக்கக் கூடிய அந்த வித்து ஐந்து மந்திரம் என்று கூறப்பெற்று அதன் வலிமையால் நாய்ப்பிறப்பு நீங்கித் தேவர் பிறப்பு அடைந்தது என்பதையும் கீழ்வருமாறு புலவர் குறிப்பிடுவார். 


ஷஷகூடிக் கோலம் குயிற்றிப் படங்களைந்து 

     ஆடுங் கூத்தரின் ஐயெனத் தோன்றினான்||  

என்பது அப்பாடற் பகுதி. இவ்வாறு பிறப்பு மாறிய நிகழ்ச்சி இயற்கை இகந்த நிகழ்ச்சியாகக் காப்பியத்தில் அமைந்துள்ளது. 

பிறநிகழ்வுகள்

குணமாலை தூது விட்ட கிளி சீவகனிடத்தில் பேசுவது இயற்கை இகந்த நிகழ்ச்சிக்கு ஒரு சான்றாகும்.  தன்னிடம் வந்த கிளியிடம் சீவகன் தான் அணிந்திருந்த மோதிரம் ஒளியை வீசப் பறவையை வரவேற்றுக் கையிலே அமர்த்திக் கொண்டான்.  அப்பொழுது அக்கிளி குணமாலை பெற்ற காமத் துன்பத்தை அழகுற எடுத்துக் கூறுகிறது. அவ்வாறு கூறுகின்ற சொற்கள் எல்லாம் இயற்கை இகந்த நிகழ்வாகும்.  

அதுபோல அச்சணந்தி முனிவர்  துறவு பூண்டு யானைத்தீ என்ற நோயுற்றதும் , சீவகனுக்கு மயிற் நீக்க வந்த நாவிதர் முற்பிறவியில் முனிவர் என்று கூறப் பெறுவதும், சீவகனுடைய முற்பிறப்புக் கதை நிகழ்வுகளும்  இயற்கை இகந்த நிகழ்வுகளாக அமைந்துள்ளன. 

பழமைக் கூறுகள்

காப்பியங்களில் இயற்கை இகந்த நிகழ்ச்சிக் கூறுகளில் ஒன்று பழமை நிகழ்வுகளை மீண்டும் கூறுவதாகும்.  சீவகசிந்தாமணியில் மிகப் பழைய புராணக் கதைகள் இடம் பெற்றுள்ளன. முருகன் பற்றிய குறிப்பு காப்பியத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளது.  முருகனின் பிறப்பு இயற்கை இகந்த நிகழ்வுகளில் ஒன்றாகும்.  அதுபோலத் திருமால் பாற்கடல் கடைந்தது( பா.492),சிவபெருமான் முப்புரம் எரித்தது(பா.2537), காமன், இந்திரன் இவர்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் இயற்கை இகந்த நிகழ்வுகளே ஆகும். 

புத்தரின் அருள் காரணமாக ஒரு பெண் கழுதை ஆனது; (பா.210) இயற்கை இகந்த நிகழ்வாகும்.  அதுபோல அணங்காமாவீணை பவதத்தன் வாழ்வும் இயற்கை இகந்த நிகழ்ச்சியாகப் படைக்கப் பெற்றுள்ளது. 

முடிவு

இவ்வாறு காப்பியப் போக்கிற்கு இன்றியமையாத நிலையில் நிகழாத ஒன்று நிகழ்வதாகக் கூறப்பெறும் மீவியற்கை நிகழ்வான இயற்கை இகந்த நிகழ்வுகள் சிந்தாமணியில் அமைந்து காப்பியத்திற்குச் சுவையூட்டுகின்றன எனலாம். இந்த நிகழ்வுகளைப் படைப்பாசிரியர் பல கோணங்களில் படைத்துள்ளார். பாத்திரங்களின் மூலமாகவும் ஒரு பிறப்பு மற்றொரு பிறப்பாக மாறுவதன் மூலமும், திடீரெனப் பொருள்கள் மறைவதும், பொருள்கள் மீண்டும் தோன்றுவனவாகவும், பேசாத உயிரினங்கள் பேசுவதாகவும், புராணச் செய்திகளாகவும் , கடவுளரின் அருட் செயல்களாகவும் இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் சீவகசிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கத் தேவரால் படைக்கப் பெற்றுள்ளன. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக