வெள்ளி, 21 ஜனவரி, 2022

வரலாற்றுக் காப்பியம் - பெரிய புராணம்


முனைவர். பழ.முத்தப்பன்,

   திருச்சிராப்பள்ளி.

'பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டக் கவி பாடிய வலவன்" என்று போற்றப் பெறும் தெய்வச் சேக்கிழார் பாடியருளிய காப்பியம் பெரியபுராணம். இக்காப்பியத்தில் திருத்தொண்டர்கள் அறுபத்தி மூவரின் தொண்டுநெறி அடிப்படையாகப் பாடப் பெற்றாலும், சேக்கிழாரின் காலமாகிய பனிரெண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட செந்தமிழ் நன்னாட்டு வரலாற்றுப் பதிவுகள் காப்பியத்தில் ஆங்காங்கே பதிவு செய்யப் பெற்றிருக்கின்றன என்பதை நினைவு கொள்ளுதல் வேண்டும். அக் காப்பியத்தின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள தமிழக வரலாற்றுப் பதிவுகளில் ஒரு சிலவற்றை எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 


பெரியபுராணக் காப்பியம் உணர்த்துகின்ற வாலாற்றுச் செய்திகளைக் காப்பியத்தில் அமைந்துள்ள திருத்தொண்டர்களின் ஒவ்வொருவர் வரலாற்றிலும் அமைந்துள்ள வரலாற்றுக் குறிப்புகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கூறிச் செல்வது விரிவாக அமையும் என்பதால், காப்பியத்தி;ல் காணப்படுகின்ற மன்னர்களின் வரலாற்றுச் செய்திகள், சமுதாயத்தில் இடம் பெற்றிருக்கும் இனப் பாகுபாடுகள்,  சமுதாய மக்களின் பழக்க வழக்கங்கள் என்ற அமைப்பில் வரலாற்று நிகழ்வுகளை எடுத்தியம்ப முனைகிறது இக்கட்டுரை. 


காப்பியத்தில் அமைந்துள்ள தொண்டர்கள் மன்னர்களாக, படைவீரர்களாக, இனவாரி மக்களாக, பலவகைத் தொழிலாளர்களாக அமைந்துள்ளனர். எனவே அவர்களைப் பற்றிய செய்திகளைக் காப்பியப் புலவர் ஆங்காங்கு குறிப்பிட்டே செல்லுகிறார். அவ்வாறு அவர்களைக் குறிப்பிடுகின்ற பொழுது அவர்தம் வாழ்வியல் வரலாற்றுச் செய்திகளை இடம்பெற வைக்கின்றார். அச்செய்திகள் அக்கால வரலாற்றுப் பதிவுகளாகக் கிடைக்கின்றன.  காப்பியத்தைப் பாடிய புலவர் செந்தமிழ் நலம் பாடுபவராக மட்டும் இருந்திருப்பாரேயானால், இலக்கியச் சுவை மட்டும் கிடைத்திருக்கும். பாடிய புலவரோ சோழப் பேரரசன் அநபாயனிடம் அமைச்சராக இருந்தவர். இதனைச் சேக்கிழார் புராணம் பாடிய உமாபதி சிவம் குறிப்பிடுகின்ற பொழுது, 

'தத்துபரி வலவனுந்தன் செங்கோல் ஓச்சும்

தலைமை அளித்து அவர்தமக்குத் தனதுபேரு

உத்தம சோழப் பல்லவன் தான்என்று 

  உயர் பட்டம் கொடுத்திட ஆங்குஅவர்" (பா.18)


என்று குறிப்பிடுகின்றார். எனவே சோழநாடு அமைச்சராக வாழ்ந்ததால் அவரின் அமைச்சியல் அறிவு, வரலாற்றுக் குறிப்புகளைத் தருவதற்கு ஏதுவாக அமைகிறது. மேலும் காப்பிய ஆசிரியர் வலவன் சார்பு பெற்றிருந்ததோடு, தில்லைக் கூத்தன் திருவருளும்; பெற்றவர் ஆவார். இதனை உமாபதி சிவம் குறிப்பிடுகிற பொழுது, 'இங்கு மன்றினில் ஆடுவார் திருவருளினால் அசரீரி வாக்கு உலகெலாம் என்று அடியெடுத்து உரைசெய்த பேரொலி" (பா. 18) என்று குறிப்பிடுகின்றார்.  எனவே காப்பிய ஆசிரியருக்கு அரசுச் சார்பும், திருவருள் சார்பும் ஒருங்கே கிடைத்த காரணத்தால், காப்பியத்தில் இலக்கிய வளம் மட்டும் அமையாது, வரலாற்று, சரித்திரச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. 

வரலாறு என்ற சொல் தமிழில் சரிதம் என்றும், சரித்திரம் என்றும் பொருள் வேறுபாடு இல்லாமல் வழங்கப் படுவது ஆகும். ஆழ்ந்து நோக்கின்; இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு உண்டு. சரிதம் என்ற சொல் வாழ்க்கைக் குறிப்பு என்ற பொருளையும், சரித்திரம் என்ற சொல் வரலாறு என்ற பொருளையும் தரும்.  தனி ஒரு மனிதரின் வாழ்வியல் நிகழ்வுகளைத் தொகுத்துச் சொல்வது சரிதம் ஆகும்.  இந்த அடிப்படையில் தமிழில் முதன் முதலாகத் தோன்றிய சரிதமாகச் சிலப்பதிகாரத்தைக் குறிப்பிடலாம். கண்ணகியின் வரலாற்றைக் கொண்டு எழுந்தது அக்காப்பியம் ஆகும். அது போலப் பெரியபுராணம் நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது என்பதால் அது சரித நூலேயாகும்.  நாயன்மார்களின் வாழ்வியலைக் கூறத் தொடங்கியதே தவிரத் தமிழ்நாட்டின்  வரலாற்றை அக்காப்பியம் குறிப்பிடவில்லை. என்றாலும் நாயன்மார்களின் வாழ்க்கை அவர்கள் வாழ்ந்த காலத்து நாட்டு வாழ்வை எந்த அளவிற்குப் பாதித்ததோ, அந்த அளவிற்கு நாடு, ஊர், ஆட்சி பற்றிய சரித்திரக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. தமிழில் கிடைத்துள்ள பண்டை இலக்கியங்கள் அனைத்தும் கவிதை நூல்களாக இருந்ததால், இலக்கிய வளம் கிடைத்ததே தவிர வரலாற்றுக் குறிப்புகள் ஆண்டு, நாள் இவற்றைக் குறிக்கின்ற சரித்திரமாக அவை அமையவில்லை. 


உரைநடை நூல்கள் வரலாற்றுச் செய்திகளைத் தர முற்படுகின்ற பொழுது, ஆண்டு, நாள் ஆகியவற்றைக் குறிப்பிடுவதற்குரிய களமாக அமைகின்றன. அந்தக் களம் இலக்கிய வகைகளுக்கு அமையாததால், சரித்திர நிகழ்வுகள் கால அமைப்பில் கிடைக்கப் பெறவில்லை.  என்றாலும் காப்பியக் கவிஞர் அமைச்சர் வாழ்வைக் கொண்டவர் என்பதால், தம் காலத்திய தமிழகத்து எல்லைகளை நன்கு அறிந்தமையால் அடியவர்களின் வரலாற்றைக் கூறும்பொழுது, வாய்ப்புக் கிடைத்த பொழுதெல்லாம் வரலாற்றுச் சரித்திரக் குறிப்புகளைப் பதிவு செய்துள்ளார். மேலும் காப்பியத்தில் இடம் பெற்றுள்ள அடியவர்கள் ஒரு நாட்டையோ, அல்லது ஒரு ஊரையே சார்ந்தவர்களாக இல்லாமல், தமிழகம் முழுமையிலும் ஆங்காங்கு வாழ்ந்தவர்களாகக் குறிக்கப் பெறுவதால், காப்பிய ஆசிரியரின் அரசியல் ஞானம் சில வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்வதாகவும் அமைந்திருக்கிறது. 


காப்பியத்தில் இடம்பெற்ற அடியார்களில் அரசியல் வாழ்வை மேற்கொண்ட அரசர்கள், அமைச்சர்கள் இடம் பெற்றதால் , காப்பியப் புலவர்தம் அரசியல் ஞானம் கொண்டு அவர்களைப் பற்றிய வரலாற்று நிகழ்வுகளைத் தன் காப்பியத்தில் இடம்பெற வைத்துள்ளார். காப்பியத்தின் காலம் முடிமன்னர் காலம் ஆதலால் தமிழகத்து முடி மன்னர்களைப் பற்றிய சரித்திர நிகழ்வுகள் இடம்பெற வேண்டிய கட்டாயம் காப்பியத்திற்கு ஏற்படுகிறது. 




 அரசியல் வரலாற்றுச் செய்திகள்:

பெரியபுராணத்தில் சேரர்குல மன்னனாகச் சேரமான் பெருமாள் நாயனாரும், சோழர்குல மன்னனர்களாகப் புகழ்ச்சோழனும், கோச்செங்கச் சோழனும் , பாண்டிய குல மன்னனாகப் பாண்டியன் நெடுமாறனும் , பல்லவர்குல மன்னர்களாகக் கழற்சிங்கர், ஐயடிகள் காடவர்கோனும், களப்பிரர் குல அரசனாகக் கூற்றுவரும், சிற்றரசர் மரபைச் சார்ந்தவர்களாக மெய்ப்பொருளார், நரசிங்க முனையரையர், பெருமிழலைக் குறும்பர், இடங்கழியார் என்ற நால்வரும்  இடம் பெற்றுள்ளனர். இவர்களைப் பற்றிய சரித்திரக் குறிப்புகளை வரலாற்று முறையில் தராது, பக்தி அடிப்படையில் குறிப்பிடக் காப்பிய ஆசிரியர் முனைந்ததால், இத்தகைய பதினோரு மன்னர்களைப் பற்றிய சரித்திர வரலாறுகள் கிடைக்கப் பெறாது, சிற்சில குறிப்புகளே கிடைக்கப் பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் கிடைக்கப் பெற்றிருக்கும் சரித்திரக் குறிப்புகளி;ல், அதாவது வரலாற்று நிகழ்வுகளில் சில மீள்பார்வையில் பார்க்க இயலுகிறது. 


தமிழகத்தில் பெரிய அரசவாழ்வை நடத்திய மன்னர்களையும், பெரிய வெற்றிகளைப் பெற்ற மன்னர்களையும் குறிப்பிடும் காப்பிய ஆசிரியர், அவர்களின் தோற்றம், பரம்பரை, போர்ச்செயல்கள் இவற்றை எல்லாம் குறிப்பிடாது, அரசர்கள் பக்தி உடையவர்களாகக் காட்சியளிக்கும் பகுதிகளை மட்டும் குறிப்பிட்டுச் செல்கிறார். அவ்வாறு பக்தியைக் குறிப்பிடும் காப்பிய ஆசிரியர் தன் அரசியல் வாழ்க்கைப் பழக்கத்தால், அரச வரலாற்றுச் சில மரபுகளையும் கூடவே கூறிச் செல்லுகிறார்.   


காப்பிய ஆசிரியர் தனக்கு மூலநூலான திருத்தொண்டத் தொகையில் இடம்பெறாத ஆனால் தமிழக இலக்கியங்களில் இடம் பெற்ற மனுநீதிச் சோழன் வரலாற்றைத் திருநகரச் சிறப்பில் கூறியிருப்பது , அரசியல் வரலாற்றை அறிந்த அவரது மாண்பினை வெளிப்படுத்துகிறது.  அப்பகுதியில், அரசர்களின் இலக்கணத்தை வரையறுக்கும் பொழுது, கீழ்வரும் பாடல் அமைகிறது. 


'மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்

         தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்

ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்

     அனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ?" 

(திருநகரச்சிறப்பு- பா.36)


இப்பாடல் காப்பியக் கால மன்னர்களின் நீதிமுறை வரலாற்றை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.  

முடியாட்சிக் காலத்தில் மன்னர்கள் தந்தை, மகன் , அவனுக்கு மகன் என்ற பரம்பரை முறையில் அரசாண்டு வந்தனர். அவ்வாறு பரம்பரை மன்னர்கள் இல்லாத போது, தமிழக மன்னர்கள் தேர்ந்தெடுக்கப் பெற்ற அரசியல் வரலாற்றைப் பெரியபுராணக் காப்பியம் மூர்த்தி நாயானர் வரலாற்றில் குறிப்பிடுகிறது. அரசர் இல்லாத பொழுது, அரசு அதிகாரிகள் ஒன்று கூடி மன்னனைத் தேர்ந்தெடுக்கும் வழியை நாடுகின்றனர்.  மூர்த்தி நாயனார் காலத்தில் பாண்டிய நாட்டில் வடுகச் சாதியைச் சார்ந்த கருநாடக தேசத்து மன்னன் ஒருவன், கன்னட நாட்டில் இருந்து வந்து தன்னுடைய போர்த்திறத்தால் பாண்டிய நாட்டை அடிமையாக்கிக் கொள்கிறான். அவனும் திடீரென இறந்துவிட , அவனுக்குப் பரம்பரை இல்லை யாதலால், அரசனில்லாத நாடு உயிர்நீத்த உடம்பிற்குச் சமமாகும் என்று எண்ணி, அரச அதிகாரிகள் அரச வழக்கப்படி , பட்டத்து யானையின் மூலம் அரசனைத் தேர்ந்தெடுக்கும் முறையைக்; கையாளுகின்றனர். 

     ;சிறப்பின் மிக்க

மைவரை அனைய வேழங் கண்கட்டி விட்டால் மற்றச்

கைவரை கைக்கொண் டார்மன் காவல்கைக் கொள்வார்:"

(மூர்த்திநாயனார் - பா30)

என்று , பட்டத்து யானையை வணங்கி நீ இந்த நாட்டை ஆளுவதற்கு நல்ல ஒரு மன்னனை அழைத்துக் கொண்டு வருக என்று சொல்லி , அதன் கண்களைத் துணியால் கட்டிச் செல்ல விடுகின்றனர். அப் பட்டத்து யானை மூர்த்தியாரை அரசன் ஆக்குகிறது.  எனவே அரச வரலாற்றில் காப்பியக் காலத்தில் அரசனைத் தேர்ந்தெடுக்கின்ற உரிமை பட்டத்து யானைக்கு வழங்கப் பெற்றிருக்கிறது என்ற வரலாற்றுக் குறிப்புக்கிடைக்கப் பெறுகிறது. 


நாட்டை ஆளுகின்ற மன்னர்கள் தங்கள் ஆட்சியில் சமயத் தலைவர்களுக்குச் சிறப்பிடம் கொடுத்திருந்மையையும் காப்பிய ஆசிரியர் காப்பியத்தில் பதிவு செய்கிறார். திருநாவுக்கரசர் காலத்தில் காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஆவான்.  சமணத்திலிருந்த சைவத்திற்கு மாறிய திருநாவுக்கரசருக்குத்; தம்மைச் சார்ந்திருந்த சமண மதத் தலைவர்களின் கருத்துரையைக் கேட்டு, மதம் மாறியதற்குத் தண்டனைகளை வழங்கினான் என்ற பதிவுகள் , அக்காலத்து அரசர்கள் சமயத் தலைவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளுகின்ற அரசவாழ்வைக் கொண்டவர்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. 


மெய்ப்பொருளார் வரலாற்றில் சமயச் சார்புடையவர்கள், மன்னனின் அந்தப்புரம் வரை சென்றார்கள் என்பதும் காப்பிய வரலாற்றுக் குறிப்பால் தெரியவருகிறது. முத்தநாதன் என்ற பகை மன்னன் மெய்ப்பொருளாரை வெல்லுவதற்கு மெய்யெலாம் நீறு பூசி, வேணியை முடித்துக் கட்டி, சிவவேடங் கொண்டு அரசனின் அந்தப்புரம்  சென்ற பதிவு கிடைக்கிறது.  

'பொன்திகழ் பள்ளிக்கட்டில் புரவலன் துயில மாடே

மன்றலங் குழல்மென் சாயல் மாதேவி இருப்பக் கண்டான்"

     கண்டு சென்று அடையும் போது"   (மெய்ப்பொருள்,பா.10,11)

என்ற காப்பியப் பகுதிகள் , மன்னன் துயிலும் இடம் வரைச் சமயக் கோலம் பூண்டவர் சென்றார் என்ற செய்தியைத் தருகிறது. 


மன்னர்கள் வைவச் சார்புடையவர்களுக்கு விரைந்து சென்று ஆதரவு தந்தமையையும் காப்பியம், வரலாற்றுச் சான்றுகளாகத் தருகிறது. திருநாவுக்கரசர் பழையாறையில் மண்மூடி மறைக்கப் பெற்ற சிவன்கோயிலை மீண்டும் வழிபாட்டுத் தலமாக அமைந்திட முதன்முதலாக உண்ணாநோன்பைக் கையாளுகிறார். அவருக்கு உதவி செய்ய மன்னனின் கனவி;ல் இறைவன் அறிவிக்க, அதன்படி சமணரால் மறைக்கப் பெற்ற திருக்கோயி;ல் மீண்டும் உருவாகி , அரசனால் திருப்பணி செய்யப் பெற்றது என்பதைப் பெரியபுராணம் குறப்பிடுகிறது. 


'மேன்மை அரசன் ஈசற்கு விமானம்ஆக்கி விளக்கியபின்

ஆனவழி பாட்டு அர்ச்னை நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச"

(திருநாவுக்கரசு – பா.299)

அதுபோலத் தண்டியடிகள் புராணத்தில் விழியிழந்த தண்டியடிகள், குளத்தை; திருப்பணி செய்தபொழுது இறைவன் வழிகாட்ட, மன்னனும் சமணர்தம் தீமையை நீக்கி, அடியவர் புகழ் அறிந்து உதவி செய்தான் என்ற செய்தி கிடைக்கிறது. 

இவ்வாறு காப்பிய கால மன்னர்கள் பக்தியில் மேம்பட்டவர்க்கு உதவிய  செய்திகள் வரலாற்றுக் குறிப்பாகப் பெரியபுராணத்தில் கிடைக்கிறது. 


காப்பியக் கவிஞர் மன்னர்களின் வாழ்வியலில் ஒருபகுதியான பக்தியை மட்டும் எடுத்துக்கொண்ட காரணத்தால் அவர்களின் மற்றொரு பக்கமான வீரம் பற்றிய செய்திகளையோ, போர்கள் பற்றிய செய்திகளையோ மற்றொன்று விரித்தல் என்ற குற்றம் ஏற்படாதவண்ணம் கூறாது விடுத்துச் செல்கிறார்.  என்றாலும் ஒருசில போர் வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெறாமல் இல்லை. நின்றசீர் நெடுமாறனைக் குறிப்பிடும் பொழுது, 

'ஆயஅர சளிப்பார்பால் அமர்வேண்டி வந்தேற்ற

சேயபுலத் தெவ்வரெதிர் நெல்வேலிச் செருக்களத்துப்

பாயபடைக் கடல்மூழ்கும் பரமாவின் பெருவெள்ளம்

காயுமதக் களிற்றின் நிரை பரப்பிஅமர் கடக்கின்றார்"

(நின்றசீர் நெடுமாற நாயனார், பா.3)


என்ற குறிப்பின்படி நின்றசீர் நெடுமாறன் வெல்வேலிப் போரில் வெற்றி பெற்றான் என்ற வரலாற்றுக் குறிப்பு கிடைக்கப் பெறுகிறது. 

அதுபோலச் சிறுத்தொண்டராம் பரஞ்சோதியார் வடநாட்டில் உள்ள வாதாபி நகரத்தினை மன்னனுக்காகப் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றார் என்ற செய்தியும் கிடைக்கின்றது.


'மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்

தொன்னகரந் துகளாகத் துளைநெடுங்கை வரையுலகத்துப்

பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்

இன்னனஎண் ணிலகவர்ந்தே இகலரசன் முன் கொணர்ந்தார்:

(சிறுத்தொண்டர், பா.6)

என்ற பகுதியின் மூலம் வடநாட்டில் உள்ள இரண்டாம் புலிகேசிக்கு உரிய வாதாபிப் போர் நடைபெற்றமை தெரிகிறது. 


இத்தகைய போர் நிகழ்வுகளைத் தவிரத் தொன்மைப் போர் நிகழ்வுகள் காப்பிய கால அரசரகளின் வரலாற்றில் கூறப் பெற்றிருப்பதும் உண்டு. சோழ மன்னர்கள் சங்ககாலத்தில் இமயத்தில் புலிக்கொடி பதித்த வரலாற்றைக் காப்பியம் தான்கூறும் அரசர்களின் மேல் ஏற்றிக் கூறுகின்ற வழக்கமும் காணப்படுகிறது. கரிகால் பெருவளத்தான் இமயமலையில் சென்று புலிக்கொடியை நாட்டினான் என்றசெய்தி , திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. 'கரிகாற் பெருவளத்தோன் வன்திறல்புலி இமையமால் வரைமேல் வைக்க ஏகுவேன்" (திருக்குறிப்புத் தொண்டர் -பா. 85) என்ற பகுதி காரிகாற் பெருவனத்தான் போர்ச்செய்தியைக் குறிப்பிடுகிறது. 


மற்றொரு சோழ பரம்பரை வரலாறான சிபிச் சக்கரவர்த்தியின் வரலாற்றைச் சோழபரம்பரை நிகழ்வாகக் காப்பியம் குறிப்பிடுகிறது. 

'சுலையில் புறவின் நிறையழித்த சோழர் உரிமைச் சோணாட்டில்"

(கோச்செங்கன், பா-1) என்ற காப்பியக் குறிப்பின் மூலம், புறாவின் எடைக்காகத்; தன்னையே அளித்த சிபிச்சக்கரவர்த்தியின் வழி வந்தது ,சோழ பரம்பரை என்ற குறிப்புக் கிடைக்கப் பெறுகிறது. 

இத்தகைய போர்ச்செய்திகளோடு அரசர்கள் செய்த திருப்பணியும் காப்பியத்தில் சரிதக் குறிப்பாக இடம் பெற்றுள்ளது. 


'சேய வன்திருப் பேரம்ப லம்செய்ய

தூய பொன்னணி சோழன்நீ டூழீபார்

ஆய சீர்அந பாயன் அரசவை."

   (பாயிரம் -பா.8)

இக்காப்பியப் பகுதியால் தில்லைக் கூத்தனின் திருப்பேரம்பலமாகிய அவையை அநபாயச் சோழன் பொன்னினால் மெழுகி அணிசெய்தான் என்ற குறிப்புக் காணப்பெறுகிறது. 


முடிமன்னர்கள் தங்களுக்கென்று அடையாளக்கொடியைப் பெற்றிருந்தனர் என்ற வரலாற்றுக் குறிப்பும் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. பாண்டியன்  மீன்கொடியை உடையவன் என்பதால் காப்பியம் பாண்டியனைக் குறிப்பிடுகின்ற பொழுது மீனவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறது. 

'வலவனார் மீனவனார் வளம்பெருக மற்று அவரோடு " (கழறிற்றவறிவார், பா. 96)

இதில் மீனவன் என்ற சொல் பாண்டியனின் மீன்கொடியைக் குறிப்பிடுகிறது. 

சோழர் புலிக்கொடியை உடையவர் என்பதைச் 'சூட்டிய வளர் புலிச் சோழர்" (திருநாட்டுச் சிறப்பு, பா-1)என்ற காப்பியப் பகுதி குறிப்பிடுகிறது. அது போலச் சேரர்கள் வில்கொடி உடையவர்கள் என்பதை, 

'வீர யாக்கையை மேல்கொண்டு சென்றுபோய் வில்லவர் பெருமானைச் சார"

(வெள்ளானைச் சருக்கம், பா38) என்று சேரமான் பெருமாளை வில்லவர் என்று குறித்து, வில்லுக்குரிய சேரர் என்று அவர்தம் கொடியைப் புலப்படுத்துகிறது. 


முடியாட்சிக் காலத்தில் மக்கள் நீதிமன்றங்கள் இருந்தமையைத் தடுத்தாட் கொண்ட புராணத்திலும், திருநீலகண்டர் புராணத்திலும் அறியமுடிகிறது. சுந்தரரைத் தடுத்தாட் கொள்ளக் கிழவர்வேடத்தில் இறைவன் ஓலை காட்டியபொழுது, ஓலையைப் பற்றிய நீதியைத் திருவெண்ணெய் நல்லூர் மக்கள் நீதிமன்றம் விசாரணi செய்தது என்பது குறிக்கப் பெற்றுள்ளது. 

"தொன்மை நீக்கித் தெருள்பெறு சபையோர் கேட்க வாசகம் செப்புகின்றான்"

(தடுத்தாட் கொண்ட புராணம், பா. 58) என்ற பகுதி மக்கள் சபையைக் குறிப்பிடுகிறது. அதுபோலத் திருநீலகண்டர் வரலாற்றில் , 'தில்லைவாழ் அந்தணர்கள் வந்திருந்த திருந்தவை'(திருநீலகண்டர், பா.31) என்ற காப்பியப் பாடற் குறிப்பு மக்கள் சபையைப் பதிவு செய்கிறது. 


அரசியல் துறையில் கையூட்டு என்பது இன்றயை வழக்கம் மட்டுமல்ல, காப்பியக் காலத்திலும் இருந்தமை பெரியபுராண வரலாற்றுச் சான்றால் அறியப் பெறுகிறது. பல்லவ மன்னன் திருநாவுக்கரசரை அழைத்துவர மந்திரிகளை நோக்கிக் கூறும்பொழுது, 

'தெருள் கொண்டோர் இவர்சொன்ன தீயோனைச் செறுவதற்கு

     பொருள் கொண்டு விடாது என்பால் கொண்டுவாரும் எனப் புகன்றான்"

(திருநாவுக்கரசர் - பா. 90)

என்ற தொடர் அமைந்து, பொருள்ஒன்று என்றசொல் கையூட்டுப் பொருளை நினைவு படுத்துகிறது. 


மன்னவரிடத்தில் பணியாற்றுகின்ற அமைச்சர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பும் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. பாண்டியனிடத்தில் தனி ஒரு அமைச்சராக விளங்கியவர் குலச்சிறையார் ஆவார். அவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, 

'வீறில் சீர் தென்னவன் நெடுமாறற்குச் சீர்திகழு மன்னு மந்திரகட்கு மேலாகியார்'(குலச்சிறை – பா.8)என்று காப்பியம் குறிப்பிட்டுத் தலைமை அமைச்சராகக் காட்டுகிறது. மற்றொரு அடியாரான கோட்புலியைக் குறிப்பிடும் பொழுது,

      'தலம் பெருகும் புகழ் வலவ தந்திரியாராய் வேற்றுப்

   புலம் பெருகத் துயர் விளைப்பப் போர்விளைத்துப் புகழ் விளைப்பார்"

(கோட்புலி, பா.1) 

என்று காப்பியப் பகுதி குறிப்பிட்டு, போருக்குச் செல்லும் மந்திரியாராகக் காட்டுகிறது. அதுபோலத் சிறுத்தொண்டரைக் குறிப்பிடும் பொழுது, 

'ஆசில் புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவர்க்காக

     பூசல்முனை களிறு உகைத்துப் போர் வென்று பொரும்"

(சிறுத்தொண்டர். பா.5)

என்று குறிப்பிட்டுப் பரஞ்சோதியாராம் சிறுத்தொண்டரையும் படையெடுத்துச் செல்லும் அமைச்சராய்க் காப்பியம் குறிப்பிடுகிறது. அது போல மனுநீதிச் சோழனின் அமைச்சர்களைக் காட்டும் பொழுது , மன்னவனுக்கு ஆலோசனைகூறும் அமைச்சர்களாக மந்திரிகளைக் காட்டுகிறது. 


'அவ்வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம்நோக்கி" 

(திருநகரச் சிறப்பு – பா.31)

என்ற காப்பியத்தொடர் அமைச்சர்கள் அறம் உரைப்பவர்களாகச் சிறந்திருந்தமையைக் குறிப்பிடுகிறது. 

இவை போன்ற பதிவுகள் பெரியபுராணக் காப்பித்தின் அரசியல் வரலாற்றுச் செய்திகளாக இடம்பெற்றுள்ளன.


தமிழக அமைப்பு: 

காப்பியத்தில் இடம்பெற்ற சிவனடியார்கள் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர்கள். அடியார்களைப் பற்றிக் குறி;ப்பிடும் பொழுது ஆசிரியர் அவரவர் இனத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். என்றாலும் எரிபத்தர், கணம்புல்லர், காரியார், குலச்சிறையார், தண்டியடிகள், பெருமிழலைக் குறும்பர் ஆகிய அடியார்களைக் குறிப்பிடும் பொழுது அவர்கள்தம் இனம் குறிக்கப்படவில்லை அறியத் தக்கதாகும். இத்தகைய இருமுறைகள் காப்பிய ஆசிரியர்பால் இருப்பதால் அடியார்களின் இன மரபுகளை அறிந்துதான் காப்பிய ஆசிரியர் குறிப்பிடுகிறார் என்பதை உணரலாம். மேலும் இறைவனுக்கு முன்னே அனைவரும் பக்தர்கள் என்ற ஒரே இனம் உடையவர்கள் என்றாலும், அக்காலத்தில் இன மரபு வகுத்துக் காண்பது சமுதாயத்தில் பெரிதும் வழக்கமாக இருந்தமையால் காப்பிய ஆசிரியர் தெரிந்தவர்களுக்கு இனமுறைகளைக் குறிப்பிடுகிறார். இக்குறிப்பிலிருந்து அக்காலச் சமுதாயம் இனப் பாகுபாட்டிற்குச் சிறப்பிடம் கொடுத்திருந்தது என்ற வரலாற்றுச் செய்தியை அறியலாம்.


அக்காலத்தில் அரசர், அந்தணர், வணிகர்,வேளாளர் என்ற நால்வகைப் பெரும் வருணப் பிரிவு இருந்ததோடு, இன்றைய சாதி என்ற பெயரில் குறிக்கப்படுகின்ற சிற்றின முறைமையும் பெரியபுராண காலத்தில் இருந்தமை காப்பியக் குறிப்புகள் மூலம் தெரியவருகிறது. அந்தணரின் ஒரு பிரிவான இறைவனுக்கு வழிபாடு செய்யும் உரிமை பெற்ற ஆதிசைவர் இனமரபு இருந்திருக்கிறது. இசைஞானியார், சடையனார், சுந்தரர், புகழ்த்துணையார் ஆகியோர் இம்மரபைச் சார்ந்தவர்களாகக் குறிக்கப் படுகிறார்கள்.  தொழிலின் அடிப்படையில் சிற்றின இனங்களான ஆடு, மாடு மேய்க்கின்ற இடையர்,(ஆனாயர்,திருமூலர்), வேட்டுவத் தொழில் செய்யும் வேடுவர்(கண்ணப்பர்), எண்ணை ஆட்டும் தொழிலச் செய்யும் செக்கார்(கலிய நாயனார்), மீன்பிடித் தொழிலைச் செய்யும் நுளையர் (அதிபத்தர்), துணி துவைக்கும் தொழிலைச் செய்யும் ஏகாலியர் (திருக்குறிப்புத் தொண்டர்), மண் பாண்டம் செய்யும் தொழிலைச் செய்யும் குயவர் (திருநீலகண்டர்), ஆகிய சிறுபான்மை இனங்களும் குறிக்கப் பெறுகின்றன. இவற்றை நோக்கும் பொழுது அந்தணர் என்ற நால்வகை வருணத்தோடும் பெரிய புராணக் காப்பியத்தின் மூலம் சிறுபான்மை இனத்தைச் சார்ந்த மக்களும் பிரித்துக் காணப்பட்டமை அறிய முடிகிறது. இவ் இனத்தாருள் திருநாளைப் போவாரைக் காப்பியம் குறிப்பிடுகின்ற பொழுது அவரைப் புலையர் என்று குறிப்பிடுவது நினைவுகூரத் தக்கதாகும். எனவே சமுதாய அடிப்படையில் மக்கள் நால்வகை வருணத்தாலும் , செய்யும் தொழில்களாலும் பெரியபுராணக் காப்பியத்தில் இனங்கண்டு பிரிக்கப் பெற்றுள்ளனர் என்ற வரலாற்றுச் செய்தியை அறிந்து கொள்ளலாம். 


இத்தகைய இனமுறைச் சமுதாயத்தவரின் குறிப்பிடத்தகுந்த பழக்க வழக்கங்களுள் பெரியபுராணக் காப்பியம் வரலாற்றுச் செய்தியாகச் சிலவற்றைப் பதிவு செய்திருக்கிறது. ஆதி சைவர் மரபில் தோன்றிய சுந்தரர் அரச குலத்தைச் சார்ந்த நரசிங்க முனையரையரால் தத்து எடுத்து வளர்த்த செய்தி, பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ளது. 

     'நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர் கண்டு

விரவிய நண்பி னாலே வேண்டினர் பெற்றுத்; தங்கள்

அரசிளங் குமரற்; கேற்ப அன்பினால் மகன்மை கொண்டார்"

(தடுத்தாட் கொண்ட புராணம், பா. 5)

என்பது அப்பகுதியாகும். 


இத்தகு செய்தியுடன் ஒரு குறிப்பிட்ட செய்தியைக் காப்பியம் குறிப்பிடுவதும் நினைவு கூறத் தக்கதாகும். அஃதாவது தத்தெடுத்த பிள்ளைக்குத் திருமணம் என்று வருகின்ற பொழுது, தத்தெடுத்த மரபில் பெண் பார்க்காது பிறந்த குல மரபில் பெண் பார்த்துத் திருமணம் செய்யப் பெற்றிருக்கிறது.சுந்தரருக்குப்  புத்தூர் சடங்கவி மறையோனின் மகளைத் திருமணம் பேசியதாகப் பெரியபுராணம் குறிப்பிடுவதை நினைவு கொள்ளலாம். 


கலப்புத் திருமணம் காப்பியத்தில் ஏற்றுக்கொள்ளப் பெற்ற திருமணம் ஆகும். ஆதிசைவராம் சுந்தரர் பரவையாரைக் காதலித்துத் திருமணம் செய்ய நினைத்தபொழுது, திருவாரூர் அந்தணர் குழுவினர் அத்திருமணத்தை ஏற்றுத் திருமணம் செய்து வைத்தமை குறிக்கத் தக்கதாகும். பரவையார் பதியிலார் இனத்தைச் சேர்ந்தவர். அதாவது சமுதாயம் எள்ளி நகையாடும் பரத்தையர் குலத்தைச் சார்ந்தவர்.அவரை ஆதிசைவர் மரபைச் சார்ந்த சுந்தரர் திருமணம் செய்து கொள்கிறார். மயிலாப்பூர் செட்டியார் அந்தணராகிய திருஞானசம்பந்தருக்குத்; தன் மகளைத் திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்தமையும் இனத்தைக் கடந்த திருமண முறையாகக் கொள்ளலாம். அப்பூதி அடிகளாம் அந்தணர் வேளாளர் குலத்தில் தோன்றிய நாவுக்கரசரைத் தன்னுடைய தெய்வத் தலைவராகக் கொண்டமையும் சாதிசடந்த வழக்கமாகும். 


இறைவன் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்தால், அந்தச் சத்தியத்திற்குச் சமுதாயம் கட்டுப்பட்டு விளங்கியது என்பதைத் திருநீலகண்டர் புராணத்தில் காணமுடிகிறது. மனைவி திருநீலகண்டத்தின் மீது கூறிய சத்தியத்தை கணவனும் மனைவியும் மீறாமல் வாழ்ந்தார்கள் என்பதைக் காப்பியம் குறிப்பிடும் பொழுது, 

'இருவரும் வேறு வேறு வைகி அற்புறு புணர்ச்சியில்லை அயல் அறியாமல் வாழ்ந்தார்" (பாடல் -8) என்று கூறும் பகுதியைச் சுட்டிக்காட்டலாம். 


திருமணச் சடங்கு முறைகள் சமுதாய வரலாறாகக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.  வணிகர் குலத்துத் திருமணங்களில் வரதட்சணை முறை இருந்தமை பெறப்படுகிறது. இதனைக் குறிப்பிடும் பொழுது காரைக்கால் அம்மையார் புராணத்தில் அவருடைய தந்தையார், மணமகனுக்குப் பெருநிதி கொடுத்தமை,

'மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம் கொடுத்ததன்பின்"(பா.18) என்ற காப்பியத் தொடர் வலியுறுத்துகிறது.


முதல் மனைவி இருக்க இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்து கொள்ளும் பொழுது மணமகளின் ஒப்புதலோ அல்லது விலக்கு ஆணையோ பெறாது திருமணம் செய்து கொள்ளும் முறைiமையும் காப்பியத்தில் அறிய முடிகிறது. காரைக்கால் அம்மையாரின் கணவன் பரமதத்தன் புனிதவதியாரை விட்டு விலகிய பிறகு நாகபட்டினத்தில், 'அவ்வூர் விரும்பஓர் வணிகன் பெற்ற செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்" (பா.35) என்ற பகுதியால், மற்றொரு பெண்ணை விரும்பியவுடனே திருமணம் செய்துகொள்ளும் முறை இருந்தது தெரிய வருகிறது. சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொள்ளும் பொழுது, பரவை நாச்சியாரிடம் தெரிவிக்காமல்  செய்து கொண்டார்.  சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்டபின் பரவையாரிடம் திரும்பும் பொழுது, பரவையார் திருவொற்றியூரில் நடந்த அந்தத் திருமணத்தை அறிந்து கொண்டதால்தான் ஊடல் கொண்டார் என்ற செய்தியும் (ஏயர்கோன் - பா.317) அக்காலச் சமூக வரலாற்றைப் புலப்படுத்துகிறது.  


இறை வழிபாட்டில் கருவறையில் ஆண்களோடு பெண்களும் வழிபாடு செய்யலாம் என்ற செய்தி திருநீலநக்கர் புராணத்தால் அறியமுடிகிறது. ஆகம வழிபாட்டிற்கும் அன்பு வழிபாட்டிற்கும் காப்பியம் இடந்தருகிறது என்பதைக் கண்ணப்பர் வரலாற்றில் சிவகோசரியாரின் ஆகம வழிபாட்டையும், கண்ணப்பரின் அன்பு வழிபாட்டையும் இறைவன் ஏற்றுக் கொண்டார் என்பதை அறிய முடிகிறது. இவை போன்ற செய்திகளால் அரச வரலாற்றுச் செய்திகள் எத்தகைய அளவிற்குக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளதோ அந்த அளவிற்குச் சமுதாய வரலாற்றுச் செய்திகளுக்கும் காப்பியம் இடங் கொடுத்திருக்கிறது.  


முடிவு :

தமிழில் தோன்றிய முதன்மை சமயக் காப்பியமான பெரியபுராணம் அறுபத்தி மூவருடைய புராணச் செய்திகளை அறிவிப்பதற்கு உரிய இலக்கியமாகத் தோன்றினாலும், சரிதக் காப்பியமாக அமைந்து சிவனடியார்களின் வரலாற்றைக் கூறுவதோடு, வரலாற்றுக்குள் வரலாறாக அரசயில் வரலாற்றுச் செய்திகளையும், சமூக இயல் வரலாற்றுச் செய்திகளையும் தன் காப்பியக் களத்தில் கொண்டுள்ளது என்பது ஒருசிறிது இக்கட்டுரையின் மூலம் வெளிப்படுத்தப் படுகிறது. 

 

  திருச்சிற்றம்பலம் 



-------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக