புதன், 26 ஜனவரி, 2022

கோவையில் ஓர் பழமொழி



சித்தாந்தசெம்மணி முனைவர்.பழ.முத்தப்பன்.

மேனாள் முதல்வர்,

கணேசர் செந்தமிழ்க் கல்லூரி,மேலைச்சிவபுரி.


தமிழ் இலக்கியப் படைப்பாளர்களை இலக்கண நூலான நன்னூல் மூன்று வகையாகப் பிரித்து இலக்கணம் கூறும்;. முதல் நூல் படைப்பாளர், வழி நூல் படைப்பாளர், சார்புநூல் படைப்பாளர் என்பன அம்மூவகைப் பகுப்புகளாகும். அதில் வழிநூல், சார்புநூல் படைப்பாளர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, 

'முன்னோர் மொழி பொருளே யன்றி அவர் மொழியும்

  பொன்னே போல் போற்றுவம்'  (பொதுப்பாயிரம், சூ. 9)

என்று வகுத்து வழிநூல் செய்கின்றவர்கள், தம் காலத்திற்கு முன்னே வாழ்ந்த படைப்பாளர்களின் பொருளைப் பின்பற்றி வழிநூல் பாடலாம் என்றும், அவர்கள் கையாண்ட சொல்லையோ, தொடரையோ தம் படைப்புக்களில் பதிவு செய்யலாம் என்றும் நன்னூல் குறிப்பிடுகிறது.  அந்த அடிப்படையில் நம் திருமடத்து ஆதீனப் புலவர் கற்பனைக் களஞ்சியம் நல்லாற்றூர் சிவப்பிரகாசர் தம் காலத்தின் முன்னோர்களாகிய சங்கப் புலவர்கள், கோவை இலக்கியப் படைப்பாளர்களின் அகப்பொருள் அமைப்பைப் பின்பற்றித் திருவெங்கைத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் மீது திருவெங்கைக்கோவை என்ற கோவை இலக்கியத்தைப் படைத்திருக்கிறார். அவ்விலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு பழமொழியின் சிறப்பை எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 


அகப்பொருள் இலக்கியத்தில் தன்னேரில்லாத் தலைவனும் தலைவியும் ஒருவரோடு ஒருவர் தெய்வத்தின் திருவருளால் சந்தித்துக் காதல் வாழ்வைத் தொடங்குவர் என்றும், அவ்வாழ்வு களவியல் கற்பியல் என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது என்றும், காதல் நடைமுறைகள் அகப்பொருள இலக்கண நூல்களில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. அந்த அடிப்படையில் திருவெங்கைக் கோவையில் களவியல் பகுதியில் கைக்கிளைப் பகுதி நிறைவு பெற்றவுடன், இயற்கைப் புணர்ச்சிக்குத் தலைவனும் தலைவியும் உரியவர் ஆகின்றனர்.  அப்பொழுது இயல்பாகத் தெய்வத்தின் அருளால் தலைவியைச் சந்தித்த தலைவன் , அவளை முன்னிலையாக்கி அவளுடைய அழகு நலத்தைப் பாராட்டி அவளைத் தொட முயலுகின்றான்.  இந்நிகழ்வை அகப்பொருள் இலக்கியம் மெய்தொட்டுப் பயிறல் என்ற தலைப்பாகிய துறையின் மூலம் வெளிப்படுத்துகிறது.  


மெய்தொட்டுப் பயிறல் என்பது, ஆற்று நீர் செல்லும் வழி புல் சாய்ந்து புறங் கிடப்பது போல, விருப்பம் அதிகம் ஏற்பட்டுத் தலைவி நாணத்தால் சிறிது சாய்ந்து கிடப்பாள். அக்காலத்துத் தலைவன் அவளைத் தீண்டுவதற்கு அஞ்சி, அவள் கூந்தலில் மொய்க்கும் வண்டை ஓட்டுவது போல நெருங்கி, வண்டினை ஓட்டுவதால் கைபட்டது போலத் தொடுவான்.  அதனால் பயன் என்ன என்றால் தலைவனுக்கு ஊற்று இன்பம் ஏற்படும். தலைவி நாணியதால் அவளைத் தன்வயப் படுத்திக் கொள்வான்.  மெய்தொட்டுப் பயிறல் என்ற தொடரில் பயிறல் என்ற சொல் கருத்தாழம் மிக்க சொல்லாகும். தொல்காப்பியத்தில் களவியலில் பதினோறாம் சூத்திரத்தில் இடம்பெற்றுள்ள இத்தொடருக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதும் பொழுது, விரிவான ஒரு உரையைத் தருகிறார். அதனை இங்கு எடுத்துக் காட்டுவது இன்றியமையாததாகும். 


'தலைவன் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்ப்; பெரு நாணினளாகிய தலைமகள் எதிர்நிறகுமோவெனின் தான் பிறந்த குடிக்குச் சிறந்த வொழுக்கத்திற்குத் தகாதது செய்தாளாதலின் , 'மறையிற் றப்பா மறையோ னொருவனைக் கண்ட மறையிற் றப்பிய மறையோன்' போலவும் 'வேட்கை மிகுதியான் வெய்துண்டு புண் கூர்ந்தார்' போலவும், நெஞ்சும் நிறையுந் தடுமாறி இனிச் செயற்பாலது யாதென்றும், ஆயத்துள்ளே வருவான்கொல் என்னும் அச்சங்கூரவும், வாரான்கொல் என்னும் காதல் கூரவும், புலையன் றீம்பால போலமனங்கொள்ளா அனந்தருள்ளம் உடையளாய், நாணு மறந்து காதலீர்ப்பச் செல்லும், சென்று நின்றாளைத் தலைவன் இவ்வொழுக்கம் புறத்தார் இகழப் புலனாய் வேறுபட்டாள் கொல்லோ எனவும், அங்ஙனம் மறைபுலப்படுதலின் இதனினூங்கு வரைந்து கொள்ளினன்றி இம்மறைக்கு உடம்படாளோ வெனவுங் கருதுமாறு முன்புபோல் நின்ற தலைவியை மெய்யுறத் தீண்டி நின்று குறிப்பிறிவுமென்றற்குத் தொடுமென்னாது பயிறலென்றார்.   (தொல்.களவியல். 11.சூ.உரை)

இவ்வுரையின் பொருட் சுருக்கம் - புலையன் தீம்பால் போல மனங்கொண்டும், மனங்கொள்ளாது தலைவி இருக்கும்பொழுது தொட்டான்.  புலையன் தொட்டதால் சிறிது அருவருப்பும், பாலுக்குக் குற்றம் இன்று என்பதனால் விருப்பமும் உண்டாவது போல, அருவருப்பும் விருப்பமும் தலைவிக்கு எதனால் ஆயது என்றால், களவொழுக்கம் என்பதனால் அருவருப்பும், கந்தர்வமணம் என்பதனால் விருப்பமும் உண்டாயிற்று எனலாம். 


தலைவன் இம்மெய்தொட்டுப் பயிறலில் தலைவியின் தோள் உறுப்பைத் தொட்டான். இவ்வாறு தொடுதல் தமிழர் மரபு என்பதை, 

'உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலான் பேதைக்கு

அமிழ்தின் இயன்ற தோள்'  (குறள் - 1106)

என்ற திருக்குறள் குறிப்பிடும்.  


தலைவன் நலம் பாராட்டி வண்டினை ஓட்டுவது போலத் தலைவியின் உடலைத் தொடுவதைச் சங்க இலக்கியமான குறுந்தொகை கீழ்வரும் பாடலால் குறிப்பிடும். 

'கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பீ

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவு முளவோநீ அறியும் பூவே'  (பா. 2)


இப்பாடலுக்கு உரிய துறை - இயற்கைப் புணர்ச்சியின் கண் இடையீடு பட்டு நின்ற தலைமகன், தலைமகளை நாணினை நீக்குதற் பொருட்டு மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்தி கூடி, தனது அன்பு தோன்ற நலம் பாராட்டியது என்பதாகும். இப் பாடலின் பொருள் எளிது என்றாலும், நம் கட்டுரைக்கு வேண்டிய பகுதி தலைவன் மெய் தொட்டுப் பயிறலுக்காகத் தலைவியின் கூந்தலில் மொய்த்துக் கொண்டிருக்கும் வண்டினை நோக்கி, தலைவியின் கூந்தலுக்கு உரிய இயற்கை மணத்தை நீ அறிந்த பூக்களில் கண்டதுண்டோ? என்று கேட்டு விரட்டுவது போல் தோளைத் தொட்டான் என்பதாகும்.  எனவே குறுந்தொகை தலைவியின் நலம் பாராட்டும் பொழுது, தலைவன் கூந்தலைச் சிறப்பித்துப் பேசுவதாகக் குறிப்பிடுகிறது.  இதனைச் சிவப்பிரகாசர் தம் மனதில் கொண்டார். 


கோவை இலக்கியங்களில் அரசகோவையாக விளங்கும் மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையாரில் இத்துறை பற்றி அமைந்திருக்கும் பாடல் -

'கூம்பலங் கைத்தலத்(து) அன்பர்என்(பு)

ஊடுரு கக்குனிக்கும்

பாம்பலங் காரப் பரன்தில்லை

அம்பலம் பாடலரின்

தேம்பலம் சிற்றிடை ஈங்கிவள்

தீங்கனி வாய்கமழும்

ஆம்பலம் போதுள வோஅளி

காள்நும் அகன்பனையே.   (பா.11)

இப்பாடலின் பொருள்:

வண்டுகளே, கைகுவித்து வணங்கும் அன்பர்களின் எலும்பும் உருகுமாறு திருநடம் புரிகின்ற பாம்பை அணிகலனாக ஏற்ற சிவபெருமானின், தில்லையம்பலத்தைப் பாடாதவர் போல, இளைத்த இடையை உடைய தலைவியின் மணம் வீசுகின்ற கொவ்வைக் கனி போன்ற வாயினை ஒத்த ஆம்பல் பூக்களை நீங்கள் வாழுகின்ற மருதநிலத்தில் கண்டீரோ, கூறுவீராக என்பதாகும். மாணிக்கவாசகர் தலைவியின் நலத்தைப் பாராட்டும் பொழுது வாயினைப் பாராட்டிக் கூறியிருப்பதை இப்பாடல் உணர்த்துகிறது. இதனையும் சிவப்பிராகசர் தம் மனதில் பதிவு செய்துகொண்டார்.  


பின்னர் வந்த கோவை இலக்கியங்களில் பொய்யாமொழிப் புலவர் பாடிய தஞ்சைவாணன் கோவை இத்துறைக்குரிய பாடலாப் பெற்றிருப்பது, 

'நல்லார் விழிபோ லிருந்தும் அளியெனும் நாமம்பெற்றும்

அல்லார் குழலில் அமர்ந்திருந்தால் அமரரை வெல்ல

வல்லான் வரோதயன் வாணன்தென் மாறை மதுகரங்காள்

நில்லா திடையுமக் கோபழி சால நிலைநிற்குமே' (பா. 8)


என்ற பாடலாகும்.  இப்பாடலின் பொருள் - பகைவரை வெல்ல வல்லமை படைத்து, வரத்தினால் உதயம் செய்தவனாகிய வாணனது , தென்மாறை நாட்டில் உள்ள வண்டுகாள், நல்லார்க்கு நீ கண்போல் இருந்தும், அன்பு என்னும் அளி என்ற பெயரைப் பெற்றும், இவளுடைய இருள்போன்ற கூந்தலின்மேல் பொருந்தி இருந்தீர் ஆயின் இவளது இடை இல்லாது ஒடியும். அதனால் இவள் இறந்து படுவாள். அவள் இறந்தால் உமக்குப் பெண்கொலைப் பாவம் நிலை நிற்கும். அது வாராமல் இருக்கக் கூந்தலை விட்டு நீங்குங்கள் என்பதாகும். இங்கு எடுத்துக் காட்டப் பெற்ற மூன்று பாடற் பகுதிகளாலும், மெய் தொட்டுப் பயிறல் என்ற துறையில் தலைவியின் கூந்தலையோ, வாயினையோ, மற்றும் வேறு உறுப்புக்களையோ நலம் பாராட்டி வண்டுகளை ஓட்டுமாறு போலத் தலைவன், தலைவியின் உடம்பினைத் தொடுவான் என்பது பெறப்படுகிறது. இதனை மனங்கொண்ட சிவப்பிரகாசர் திருவெங்கைக் கோவையில் இதற்குரிய பாடலைக் கீழ்வருமாறு பாடிச் சிறப்பிக்கின்றார். 


'மன்இசை வெங்கை உடையபி ரான்வரை மான்நுசுப்பைப்

  பொன்இசை கொங்கை ஒடித்தா லும்நிந்தை பொருந்தும்நுமை

  மின்இசை மென்குழல் ஏறன்மின் நீவிர் விளங்கிலிரோ

  இன்னிசை வண்டினங் காள்காக தாலியம் என்பதுவே.'  (பா.10)


இப்பாடலின் பொருள் - இனிய இசை பாடுகின்ற வண்டினங்களே, நிலைபெற்ற புகழ் பொருந்திய திருவெங்கைத் தலத்தைத் தம் வாழ்விடமாகக் கொண்ட சிவபெருமானது மலையில் வாழுகின்ற இப்பெண்ணின் இடையை, தேமல் பரவிய கொங்கைகள் ஒடித்தாலும், அப்பழியானது உங்களைச் சேரும். ஆதலால் மின்னலைப் பொருந்திய மெல்லிய கூந்தலின் மீது ஏறாதீர்கள். காகதாலியம் என்னும் நியாயத்தை நீங்கள் அறிந்திலரோ? என்பதாகும். இப்பாடல் முன் எடுத்துக் காட்டுகளைப் போலக் கூந்தலில் உள்ள வண்டுகளை ஓட்டுவதற்கு முனைந்து, தலைவியின் உடலைத் தலைவன் தீண்டி மகிழ்ந்த நிகழ்ச்சியைக் காட்டுகிறது. 


என்றாலும் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர் முன் எடுத்துக் காட்டுகளைக் காட்டிலும் தன்னுடைய கற்பனை வளத்தால் பாடலுக்கு மெருகூட்டுகிறார். முன் குறிப்பிட்ட பாடல்கள் கூந்தலில் மொய்த்துக் கொண்டிருக்கும் வண்டினங்களைப் பார்த்துக் கூறியதாகும். ஆனால் சிவப்பிரகாசரோ வருமுன் காப்பது போலத், தலைவியின் கூந்தலின் நறுமணத்தை நுகர்வதற்கு முற்பட்ட வண்டினங்களைப் பார்த்துத் தடுத்துக் கூறியது போல் பாடலில் வண்டுகளைப் பார்த்து, 'மென்குழல் ஏறன்மின்' என்று குறிப்பிடுகிறார். அதாவது இடை ஒடியும்படி வண்டுகளே , தலைவியின் கூந்தலைச் சென்று மொய்க்காதீர்கள், ஏற்கனவே கொங்கைகளின் பாரத்தால் இடை ஒடிந்திருக்கிறது. அப்பழி உங்களுக்கு வரக்கூடாது என்று தடுத்துக் கூறுகின்றார்.  எனவே மேற்கூறிய பாடல்களுக்குரிய படைப்பாளர்கள் கூந்தலில் தங்கியிருக்கும் வண்டுகளைப் பார்த்துக் கூறிடச், சிவப்பிராகாசரோ கூந்தலின் மீது வண்டுகள் மொய்க்க வேண்டாம் என்று தடுத்துக் கூறுவது வளர்நிலையாகும்.   


இப்பாடலில் நிலைபெற்ற திருவெங்கை நாதர் என்று கூறுவது சிறப்புடையதாகும். பிற தெய்வங்களுக்குரிய புகழ் நிலைபெற்றதில்லை, ஆனால் திருவெங்கைநாதராம் சிவபெருமானின் புகழ் மன்னிசையாக அதாவது நிலைபெற்றதாக அமைந்துள்ளதாகும் என்று பாடலில் குறிக்கப் பெறுவது, வீரசைவ மரபிற்கேற்பப் பிற தெய்வங்களை வீரசைவர்கள் வழிபடாது, சிவனையே வழிபட்டு உய்வதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.  


தீமை செய்தவர்கள் பழிபாவங்களுக்கு உரியர் ஆவது இயற்கை. தீமை செய்யாதவர் பழிபாவத்திற்கு உரியவராதல் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டுவது போல, தலைவியின் இடை அவளுடைய கொங்கைகளின் சுமையால் அதாவது கொங்கை செய்த தீமையால் ஒடியுமாறு உள்ளது. அத்தகு நேரத்தில் எந்தத் தீமையும் செய்யாத வண்டுகள் பழியை அடையக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்ட, 'காகதாலியம்' என்ற நியாயம் பாடலில் இடம் பெற்றுள்ளது. 


காகதாலியம் என்பது தருக்க நூலார் வகுத்த நியாயம் ஆகும். இது ஒரு பழமொழியைச் சுட்டிக் காட்டுகிறது.  'காகம் உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது போல' என்பது அப்பழமொழியாகும். இயல்பாக மரத்தில் பழுத்த பனம்பழம் விழக்கூடிய நேரத்தில் மரத்தில் காக்கை போய் உட்காருகிறது. அந்த நேரத்தில் பனம்பழம் கீழே விழுகிறது. ஆனால் பார்த்தவர்களோ காக்கைதான் பனம்பழத்தை வீழச் செய்தது என்று பழியைக் காக்கை மேல் சுமத்துவார்கள். அதுபோல் பழி வண்டுகளுக்கு வந்துவிடக் கூடாது என்பது சிவப்பிரகாசரின் கற்பனை வளத்தைக் காட்டுகிறது.  மேற்கூறிய பாடல்கள் நிகழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஆனால் திருவெங்கைக் கோவையில் சிவப்பிரகாசரோ நிகழ்வைச் சொல்லுகின்ற அதே நேரத்தில், வீரசைவ மரபின் முழுமுதற் தெய்வ வழிபாடாம் சிவவழிபாட்டையும், தமிழ்ச் சமுதாயத்தில் வழங்கப் படுகின்ற பழமொழியையும் தம் பாடலில் இடம்பெற வைத்து, ஆன்மீகப் புலவராகவும் , சமுதாயப் புலவராகவும் விளங்குகிறார். 


எனவே திருவெங்கைக் கோவையில் ஆன்மீகத்தையும், அகப்பொருள் களவியல் நிகழ்ச்சிகளையுமே கூறுவதல்லாது, சமுதாயப் பழக்க வழக்கங்களையும் உடன் சேர்த்துச் சொல்லுகின்ற சமுதாயச் சிற்பியாகச் சிவப்பிராகசர் விளங்குகிறார்.  வண்டுகள் பழியை ஏற்கக் கூடாது என்பதன் மூலம் தீமை செய்யாதவர்களுக்கு பழி ஏற்படாது என்பதையும், சிற்றூர் மக்களிடம் பழக்கத்தில் இருக்கின்ற பழமொழி நிகழ்வினையும் பாடலில் இடம்பெற வைத்து, முன்னோர் மொழிகளைப் பொன்னே போல் போற்றுவதோடு தனக்குரிய விகற்பமாக (வளர்ச்சியாக) அவற்றைக் கூறியும் சிவப்பிரகாசர் நம் மனதில் நீங்கா இடம்பெற்று விடுகிறார். 


திருச்சிற்றம்பலம்.



 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக