புதன், 26 ஜனவரி, 2022

கோவையில் விதிமணம்

 கோவையில் விதிமணம்

சித்தாந்த செம்மணி,முனைவர்.பழ.முத்தப்பன்,

மேனாள் முதல்வர்,

கணேசர் செந்தமிழ்க்கல்லூரி,மேலைச்சிவபுரி.


தமிழ்ச் சமுதாயத்தின் பேச்சு வழக்கில் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்றும், கணவன் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றும் வழங்கப்பெற்று வருகின்றன.  இந்த வழக்கத்தை இலக்கணமாகத் தொல்காப்பியர் கீழ்வரும் சூத்திரத்தில் அமைத்துள்ளார்.  


     'ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

      ஒன்றி உயர்ந்த பால(து) ஆணையின்

      ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப

      மிக்ககோ னாயினுங் கடிவரை யின்றே. (தொல்.கள.சூ.2)


இதன்பொருள்: தலைவன், தலைவிக்கு ஓர் இடம் வேற்றிடம் என்று கூறப்பட்ட இருவகை நிலத்தின் கண்ணும், முற்பிறவியிலும், இப்பிறவியிலும் அன்பு முதலியன உயிரில் விளங்குவதற்குக் காரணமான பால்வரை தெய்வம் என்று கூறப்படும் ஊழ்வினையால், ஒத்த தலைவனும் தலைவியும் சந்திப்பர். தலைவன் தலைவியை விட உயர்ந்தவனாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதாகும். இச்சூத்திரத்தில் இடம் பெற்றுள்ள பாலது ஆணை என்பது ஊழின் ஆணையால் என்று பொருள் கொள்ளப்படும். பால் என்பது ஊழினைக் குறிக்கும். திருவள்ளுவரும்  ஊழ் என்ற அதிகாரத்தில் ஊழினைக் குறிக்க,'பரியினும் ஆகாவாம் பாலல்ல'(குறள் - 376) என்று ஊழைப் பால் என்று குறிப்பிடுவார். எனவே ஒரு ஆண்மகனும் பெண்மகளும் சந்தித்துப் பழகித்; திருமணம் செய்து வாழ்வது ஊழினால் ஆகும் என்பது பெறப்படுகிறது. இதனை, நம் ஆதீனப் புலவர் சிவப்பிரகாசர் தன்னுடைய திருவெங்கைக் கோவையில் வலியுறுத்துவதைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 


ஊழ்வினையால் தலைவனும் தலைவியும் சேர்வார்கள் என்பதைத் தொல்காப்பியம் போலச் சங்க இலக்கியங்களும் வலியுறுத்துகின்றன. குறுந்தொகையில் இடம் பெற்ற கீழ்வரும் பகுதி இதனை உறுதிப்படுத்துகிறது. 


'நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்

றுணைமலர்ப் பிணைய லன் னவிவர்

மணமகி ழியற்கை காட்டி யோயே. (பா.229, வரி 5 – 7)


இப்பகுதியின் பொருள் - மலரால் கட்டப்பெற்ற மாலையைப் போன்று இவர்கள் திருமணம் புரிந்து மகிழ்ச்சியை உண்டாக்கிய ஊழ்வினையே நீ, உறுதியாக நன்மை உடையை ஆவாய் என்பதாகும். தொல்காப்பிய, சங்க இலக்கியங்களைப் போல் ஊழ்வினையால் தலைவனும் தலைவியும் சேர்வார்கள் என்பதைப் பிற்கால இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. அவற்றுள் கோவை இலக்கியங்கள் குறிப்பிடத் தக்கனவாகும். 


கோவை இலக்கியங்களில் முதற்பகுதி இயற்கைப் புணர்ச்சி என்பதாகும். அதாவது எங்கோ உள்ள ஒரு தலைவனும், இங்குள்ள தலைவியும் இயல்பாக ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பு மேம்படக் காதலைப் பரிமாறிக் கொள்வது இயற்கைப்புணர்ச்சி என்பதாகும். இப்பகுதியில் தலைவன் ஒருவன் தலைவியைச் சந்தித்து, அவள் அழகில் ஈடுபட்டு மெய்தொட்டுப் பயிறல் என்ற நிலையில் கூந்தலில் உள்ள வண்டை ஓட்டுவது போல, அவள் உடலைத் தொட்டு இன்பம் காண்பான்.  அவனின் செயலைக் கண்ட தலைவி இவன் தன்னைவிட்டுப் பிரியாது என்றைக்கும் அன்போடு இருப்பானா? என்று ஐயமுற்று அச்சம் கொள்வாள். அவள் அச்சத்தைப் போக்கத் தலைவன் ஊழ்வினையின் காரணத்தால் சந்தித்த நம்மை எவராலும் பிரிக்க முடியாது என்றுகூறி ஆற்றுப்படுத்துவான். இதற்குரிய துறை தெய்வத்திறம் பேசுதல் என்பதாகும்.  இத்துறையைக் கோவை இலக்கியங்கள் அனைத்திலும் காணலாம். மாணிக்கவாசகர் எழுதிய திருக்கோவையாரில் அருட்குணம் உரைத்தல் என்;ற துறையாக இச்செய்தி வலியுறுத்தப் பெறுகிறது. 


'தேவரில் பெற்றநம் செல்வக்

     கடி வடிவார்திருவே

யாவரின் பெற்றினி யார்சிதைப்

     பார்இமை யாதமுக்கண்

மூவரின் பெற்றவர் சிற்றம

     பலம்அணி மொய்பொழில்வாய்ப்

பூஅரில் பெற்ற குழலிஎன் 

     வாடிப் புலம்புவதே.'  (பா. 14)


என்பது அத்துறைக்குரிய பாடலாகும்.  இதன்பொருள் - அழகு மிக்க தலைவியே, தேவராம் இறைவரால் பெற்ற நமது செல்வத் திருமணத்தைப் பிரிப்பதற்குரிய வல்லமையை யாரிடம் இருந்து பெற்று யார் பிரிப்பார்கள்.  மூன்று சுடரையும் இமைக்காத மூன்று கண்களாகப் பெற்ற இறைவனின் தில்லைச் சிற்றம்பலத்தே உள்ள பூஞ்சோலையில் பூத்த பூக்களால் தொடுக்கப் பெற்ற மாலையை உடைய கூந்தலைக் கொண்டவளே, நீ வாடிப் புலம்புவது ஏன்? என்பதாகும். இப்பகுதியில் செல்வம் என்ற திருமணம் தேவராகிய இறைவரால் பெறப் பெற்றது என்ற செய்தி வலியுறுத்தப் பெறுகிறது. அதாவது உயிர்களின் ஊழ்வினையைச் செயல் படுத்தும் இறைவனால் திருமணம் நடக்கிறது என்பது வலியுறுத்தப் பெறுகிறது. 


பொய்யாமொழிப் புலவர் பாடிய தஞ்சைவாணன் கோவையில் தெய்வத்திறம் பேசல் என்ற துறைக்குரியதாகக் கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது. 


'மன்னிய பார்புகழ் வாணன்தென் மாறையின் மாந்தளிர்போல்

மின்னிய மாமை விளர்ப்பதென் னேவிதி கூட்டநம்மில்

பின்னிய காதல் பிரிப்பவர் யாரினிப் பேரருவி

இன்னிய மாக இளமயி லாடும் இரும்பொழிற்கே'  ( பா.22)


இப்பாடலின் பொருள் - பூவுலகில் நிலைபெற்ற புகழை உடைய தஞ்சைவாணன் மலையில் ஒழுகும் பேரருவியின் பக்கம் மயில் ஆடுகின்ற பெரிய சோலையிடத்து, மாந்தளிர் போல மேனி அழகு அச்சங்கொண்டு, வெள்ளையாகிய மாயையின் நிறத்தைக் காட்டுவது ஏன்? விதி கூட்டுவிக்க நம்மிடையே பிணித்த காதலைப் பிரிப்பவர் யார்? நீ அச்சங்கொள்ள வேண்டாம் என்று தலைவன் கூறினான் என்பதாகும். திருக்கோவையாரில் தேவரால் தரப்ப:டுகின்ற திருமணம் என்ற குறிப்பிருக்க, தஞ்சைவாணன் கோவை தெளிவாக விதியினால் தான் , தலைவன் தலைவியின் பிணைப்பு நடைபெறுகிறது என்;பது பதிவு செய்யப் பெற்றுள்ளது. 


இதுபோல, பாடியவர் பெயர் தெளிவாகத் தெரியாத ஆனால் முத்துநயினாத்தை என்ற புலவர் பாடினார் என்று ஆய்வாளர்கள் குறிக்கும் புலவர் பாடிய, பேரூர்க் கோவையில் தெய்வத்திறம்  பேசல் என்ற துறைக்குக் கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது. 


'கூடிடுங் காந்தமும் வல்லிரும் புந்தனைக் கூட்டிவைக்க

நாடிடுந் தெய்வ நமதுபட் டீசர்நன் னாட்டுவெற்பின்

வாடிடு மின்னுயிர் மின்னே வருந்தல் வரும் விதிதான்

தேடிடும் நம்வினை கூட்டவுங் காதல் சிறப்புளதே'  (பா.22)


இப்பாடலின் பொருள் - காந்தத்தில் வலிமையான இரும்பு கூடுவது போல ஆன்மாக்களைத் தன் சந்நிதியில் அணைத்துக் கொள்ளுகிற இறைவனாகிய பட்டீசுவரப் பெருமானின் மலையில், மின்னல் போன்ற அழகுடைய பெண்ணே, வருந்தாதே. இப்பிறவியில் வந்திருக்கும் ஊழ்வினையானது தேடி நம்மைக் கூட்டிவைத்த காதல் சிறப்புடையதாகும் என்பதாகும். தலைவன் கூறிய இப்பாடலில் ஊழ்வினை எங்கெங்கோ இருந்த தலைவனையும் தலைவியையும் தேடி இருவரையும் சேர்த்துக் காதலிக்க வைத்தது என்ற பொருள் அமைந்து, ஊழ்வினையின் வலிமையினால் தலைவன் , தலைவியரின் சேர்க்கை நடைபெறுகிறது என்பது வலியுறுத்தப் பெறுகிறது. மேற்குறித்த செய்திகள் அனைத்தும் இறைவனின் சிற்சத்தியாகிய ஊழ்வினையின் அருளால் தலைவனும் தலைவியம் சேர்கின்றார்கள் என்ற செய்தி வலியுறுத்துப் பெறுவதை அறியமுடிகிறது. 


இச்செய்தியைக் கூறவந்த சிவப்பிரகாசர் தான் படைத்து அருளிய திருவெங்கைக் கோவை நூலில், மற்றவர்களைக் காட்டிலும் உவமையின் மூலமாக இச் செய்தியைக் குறிப்பிட்டிருப்பது படித்து இன்புறத் தக்கதாகும். 


'நதிவசத்து ஆய சடையார் திருவெங்கை நாட்டுஒருவர்

மதிவசத் தால்அன்றி வான்கூன் மதிநுதல் வல்லிசதா

கதிவசத் தால்வரும் வள்ளிதழ்ப் போதின் கடிமணம்போல்

விதி;வசத் தால்வரும் நம்கேண்மை யாவர் விலக்குவரே.'  (பா.25)


இப்பாடலின் பொருள் - கங்கை நதியை உடைய சடையினைக் கொண்ட சிவபெருமானது, திருவெங்கை நாட்டில் உள்ள ஆகாயத்தில் விளங்கும் பிறைபோலும் நெற்றியை உடையவளும், கொடி போன்றவளுமாகிய பெண்ணே – ஒருவரின் அறிவின் வசத்தால் அல்லாது, எப்பொழுதும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கின்ற காற்றின் வசப்பட்டு வருகின்ற , செழித்த இதழ்களை உடைய மலரின் மிக்க மணம் போல, ஊழ்வயத்தால் உண்டான நமது நட்பை விலக்க வல்லார் யாவர்? என்பதாகும். 


இப்பாடலில் விதிவசத்தால் உண்டான காதல் என்பது குறிக்கப் பெறுகிறது. அவ்வாறு குறிக்கும் பொழுது, தலைவனும் தலைவியும் தங்கள் முயற்சியால் கூட இயலாது. அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இறைவனால் இயக்கப் படுகின்ற ஊழ்வினையால் தான் இயலும் என்பதைக் கூற ஒரு மிகச் சிறந்த உவமை கையாளப் பெற்றிருக்கிறது. இந்த உவமையைப் படைத்துத் தந்த சிவப்பிரகாசர் கற்பனைக் களஞ்சியம் என்ற அடைமொழிக்கு உரியவர்தான் என்பது தெளிவாகிறது. 


உவமையைக் குறிப்பிடுகின்ற பொழுது தெய்வத்தின் பெருமையை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார் சிவப்பிரகாசர்.  இறைவனுக்கும் அவர்வழி வருகின்ற ஊழ் வினைக்கும் சிவப்பிரகாசர் இந்தப் பாடலில் கூறும் உவமை சதாகதி வசத்தால் என்பதாகும். சதாகதி என்பது வடசொல்லாகும். இதன்பொருள் இடைவிடாது இயங்குகின்ற காற்று என்பதாகும். ஒரு மலரில் உள்ள நறுமணம் மக்களால் நுகரப்பட வேண்டுமானால் மலர் தானே மணத்தை நுகர வைக்காது.  மணம் மலரிலிருந்து வெளிப்பட்டு அது காற்றில் கலந்து, அந்தக் காற்றின் மூலம் வருகின்ற நறுமணத்தை மக்கள் நுகருகின்றனர்.  காற்று கண்களுக்குத் தெரியாது. அதுபோலக் கடவுளும் கண்களுக்குத் தெரிய மாட்டார். காற்று வீசுவதை உணரத்தான் முடியும். அதுபோலக் கடவுளின் அருளை அல்லது கடவுளின் இருப்பை ஆன்மாக்கள் (மக்கள்) உணர்வால் உணர்ந்து கொள்ளவே முடியும். 


திருமணம் என்பது பெற்றோர்கள் எவ்வளவு முயன்றாலும் உடன் கூடிவிடாது. திருமணத்திற்குரிய காலமும், நேரமும் எப்பொழுது உண்டாகின்றதோ அப்பொழுது இறைவனால் அதற்குரிய வழிகள் உணர்த்தப் பெறுகின்றன. அந்த இறைவனின் -ஊழ்வினையின் உந்துதலால்தான திருமணம் நடைபெறும். மக்களின் முயற்சியால் நடைபெறாது என்பதைச் சிவப்பிரகாசர் பாடலில், 'ஒருவர் மதிவசத்தால் அன்றி' என்ற தொடரால் வலியுறுத்துகிறார். மக்களின் அறிவு முயற்சியினாலே திருமணம் நடைபெறாது, எவ்வாறு காற்றின் உதவியால் மணம் நுகரப்படுகிறதோ அதுபோல இறைவனின் விதியின் உதவியால் திருமணங்கள் கைகூடுகின்றன என்று உவமையின் மூலம் சிவப்பிரகாசர் குறிப்பிடுவது நினைந்து இன்புறத் தக்கதாகும். 

எனவே தொல்காப்பியம் தொடங்கிய ஊழ்வினையால் கூடுகின்ற திருமணம் இலக்கியங்களில் பலவாறாகச் சித்தரிக்கப் பெறுகிறது என்பதும், அதிலும்; சிவப்பிரகாசர் இறைவனால்தான் அவர் செயல்படுத்துகிற விதியினால்தான் காதல் கைகூடுகிறது என்பதை மலரின் மணம் காற்றின் உதவியால்தான் உணரப்படுவதைப் போல என்று உவமையால் கூறியிருப்பதும் சிறப்புடைத்தாம். 



 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக