புதன், 26 ஜனவரி, 2022

முத்தி நிச்சயம் - ஒரு மீள்பார்வை


முனைவர். பழ. முத்தப்பன்,

  திருச்சிராப்பள்ளி.


திருக்கயிலாயாலயப் பரம்பரை தருமையாதீனத்தைத் தோற்றுவித்த 

ஸ்ரீகுருஞானசம்பந்த பரமாசாரிய மூர்த்திகள், தமது சிவானுபூதியின் விளைவாக அவ்வப்பொழுது அருளிச் செய்த நூல்கள் எட்டில், ஒரு ஞான நூல் முத்தி நிச்சயம் என்பதாகும். அந்நூலை அறிமுகப் படுத்துவதும், அதன்பால் உள்ள செய்திகளை மீண்டும் நினைவு கொள்வதும் இக்கட்டுரையின் நோக்கமாகும். 


நூல் தோன்றிய சூழல் :

தில்லையில் வாழ்ந்த கண்கட்டி மறைஞான பண்டாரம்  என்ற ஒரு அருளாளர் முத்திநிலை என்ற நூலை எழுதியிருந்தார். அதில் முத்தி பெற்ற ஆன்மா, அந்நிலையில் அனுபவிப்பது தனது ஆனந்தமே அன்றி, சிவனது ஆனந்தமன்று என்ற செய்தியை வலியுறுத்தி, ஆன்மானந்தவாதம் என்ற தனியொரு கொள்கையை வகுத்திருந்தார்.  இந்தக் கொள்கைக்கு ஆன்மானந்தவாதம் என்ற பெயரும் சூட்டினார். சைவசித்தாந்தக் கொள்கைக்கு இவர்தம் கொள்கை மாறாக அமைந்திருந்தது. எனவே குருஞானசம்பந்தப் பெருமான் அவரின் கொள்கைக்கு மறுப்பாக முத்திநிச்சயம் என்ற நூலை அருளிச் செய்தார்கள். 


நூல் அமைப்பு:

குருஞானசம்பந்தப் பெருமானின் அட்டக நூல்களில் ஒன்றான முத்தி நிச்சயம் என்ற நூலை 22 வெண்பாக்களால் அருளிச் செய்துள்ளார்கள்.  முதற்பாடலில்; தம் ஞானாசிரியராம் ஞானப்பிரகாசரின் திருவடிகளை வணங்கி, முத்தி நிச்சயம் என்ற நூலை மொழிவேன் என்று குறிப்பிட்டு, அப்பாடலைக்  கடவுள் வணக்கப் பாடலாக அமைத்துள்ளார்கள். இரண்டாவது பாடலில் தாம் முத்தி நிச்சயம் நூலில் கூறுகின்ற கருத்துகள், சைவசித்தாந்த சந்தான ஆசாரியர்கள் மற்றும் சமயக் குரவர்கள் ஆகியோர் அருளிச் செய்த முத்தி நிச்சயக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அடுத்து வரும் பதினைந்து பாடல்களில் கண்கட்டி மறைஞான பண்டாரத்தின் ஆன்மானந்தவாதத்தை மறுத்துச் சைவசித்தாந்த முத்தி நிலையை வினாவிடை அமைப்பில் விளக்கியுள்ளார்கள். அதன்பின் மூன்று பாடல்களில் சிவசமவாதத்தை மறுத்துள்ளார்கள். நிறைவான இறுதிப் பாடலாம் இருபத்திரண்டாம் பாடலி;ல், சைவ சித்தாந்த முத்திநிலையைத் தொகுத்து வகுத்துக் கூறியுள்ளாரகள்;. பாடல்கள் அனைத்தும் வெண்பா யாப்பில் அமைந்திருப்பதால் சிறந்த ஓசைநயத்துடன் அமைந்து, படிப்போரின் உள்ளத்தைப் பரவசப் படுத்துகின்றன. 


இரண்டாவது பாடலின் சிறப்பு:

இரண்டாவது பாடல்,

2

சந்தான நற்குரவர் தக்கோர் பிறர்சமயம்

நந்தாது தோற்றுவித்த நற்குரவர் - முந்தவே

எந்தமுத்தி சிந்தாந்த மென்றார்கள் சைவத்தில்

அந்தமுத்தி நிச்சயிப்போம் யாம். (பா.2)


என்பதாகும். பாடலில்  நந்தியம்பெருமான் முதலாகத் தோன்றிய சைவ சித்தாந்த சந்தான ஆசாரியர்களைச் சந்தான நற்குரவர் என்றும், பிற சமயங்கள் முழுமையாகக் கெட்டு ஒழியாமல் அவையும் உளவாக சைவ சமயத்தை வெளிப்படுத்திய திருஞானசம்பந்தர் முதலாகிய சமயக் குரவர்களை, பிறர்சமயம் நந்தாது தோற்றுவித்த நற்குரவர் என்றும் குருஞானசம்பந்தப் பெருமான் சிறப்புப் படுத்தியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.  மேலும் பாடலில் சைவ சித்தாந்த முத்தி எதுவோ அதனையே, தாம் உறுதிப் படுத்துவதாகக் குருஞானசம்பந்தப் பெருமான்  இப்பாடலில் கூறியுள்ளார்கள். சமயக் குரவர்களைக் குறிப்பிடும் பொழுது, நந்தாது தோற்றுவித்த என்ற தொடர் பொருள் பொதிந்த தொடராக விளங்குகிறது. அதுபோல் நிச்சயிப்போம் என்ற சொல்லை இடம்பெற வைத்து, தாம் சைவ சித்தாந்த முத்தியை உறுதிப் படுத்துவதாகச் சுவாமிகள் பாடலைப் பாடியிருப்பது படித்து இன்புறத் தக்கதாகும். 


ஆன்மானந்தவாத மறுப்புகள் :

தில்லை கண்கட்டி மறைஞான பண்டாரம் என்பார் சிறந்த நூலறிவு பெற்றிருந்தும் , திருவருள் வாய்க்கப் பெறாத காரணத்தால் முத்தி பெற்ற ஆன்மா அந்நிலையில் தான் அனுபவிப்பது, தனது ஆனந்தமே அன்றிச் சிவனாந்தம்; அன்று என்ற முடிவிற்கு வந்து, தன் கொள்கையை ஆன்மானந்த வாதமாகத் தமிழகத்தில் பரப்பி வந்தார். இதனால் குழந்தைக்குப் பாலை நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, தனது ஆனந்த மயமான தேனை உயிர்களுக்கு அளித்து, உயிர்களைத் தனது திருவருள் வியாபகத்தில் அடக்கிக் காத்தருளும் இறைவனது கருணையை அழித்துப் பேசுகின்ற வழக்கம் மக்களிடையே பரவி வந்தது. இதனை அறிந்த சுவாமிகள் இந்நூலைத் திருவாய் மலர்ந்து, முத்தி நிலையில் ஆன்மா அனுபவிப்பது சிவானந்தமே என்ற சைவசித்தாந்தக் கருத்தை வலியுறுத்தித் தமது நூலில் பதினைந்து பாடல்களை இயற்றி அருளினார்கள்.  அவற்றின் சுருக்கத்தை மீள்பார்வையாகக் காண்பது நலம் பயக்கும். 


ஆன்மானந்த வாதம் கூறுகின்றோர் முன்பு தோன்றிய சந்தான குரவர் முதலான அருளாளர்களும், பின்னர் வந்த அருளாளர்களின் வசனங்களாலும் அறிந்து கொள்ளப் பெற்ற தனது உட்கோளாகிய ஆன்மானந்தமே முத்தி என்று முடிவு கொண்டு கூறினால், அவர்கள் உட்கோளாகக் கொண்ட கருத்துகள் சித்தாந்த அளவைகளாலேயே மறுக்கப்படும். எனவே பிறமதத்தார் (சைவ சித்தாந்திகள்) அவர்தம் உட்கோளை மறுக்க வேண்டிய 


3

தேவையில்லை. அந்தச் சைவ சித்தாந்த அளவையைத் தாம் கூறுவேன், அதனைக் கேட்பாயாக என்று சுவாமிகள் குறிப்பிடுகிறார்கள். (பா.3)


சிவபெருமான் தனது சத்தி வடிவாகிய ஆனந்தத்தை அனுபவிக்கின்றார். அதுபோன்று தான் ஆன்மாவும் சிவனால் தனது மலம் அகல, தனக்குக் கிடைத்த அருள்வடிவான ஆனந்தத்தை அனுபவிப்பது என்று நீ கூறுவாயானல் அது பொருந்தாது.  ஏனென்றால் முத்தி என்பது சிவனும் ஆன்மாவும் அத்துவிதமாகக் கலந்திருப்பதாகும். எனவே இரண்டும் தனித்தனியாக ஆனந்தத்தை அனுபவிக்கிறது என்று கூறுவது முத்திநிலைக்கு ஒவ்வாததாகும். மேலும் ஆன்மா முத்தி நிலையில் பற்றற்று நிற்பதே ஆகும். நீ கூறுமாறு ஆனந்தத்தைப் பற்றி அனுபவிப்பது முத்தியாகாது.  (பா.4)


சிற்றின்பமும் பேரின்பமும் ஆன்மாவின் குணம் என்று நீ கூறுவதும் பொருந்தாது. எந்த இன்பமும் ஆன்மாவின் குணம் அல்ல. அதன் குணம் சார்ந்ததன் வண்ணமே ஆகும். சிற்றின்பம் வினையின் சார்பால் வருவது. பேரின்பம் மாயா காரியப் பொருளிலிருந்து வருவது. அதாவது அருளின்வழி சிவனிடத்திலிருந்து கிடைப்பது.  சார்ந்ததன் வண்ணமான படிகம் போல் ஆன்மா இருப்பதால் , ஆனந்தத்தை தானே அனுபவிப்பது என்பது பொருந்தாது. (பா.5);


பேரானந்தத்தைப் பெறுவானும் பேரானந்தமும் வேறுவேறு என்று ஆகமங்கள் கூறுகின்றன. அதனை அறியாத காரணத்தால் உன் கொள்கை அமைந்துள்ளது. ( பா. 6,7) 


உன்பால் தோன்றிய இன்பம் உன்னுடைய குணமாகாது. அதனை நீ மீண்டும் அனுபவிப்பது முத்தியாகாது. அதாவது குணி  தன் குணத்தையே அனுபவிப்பது முத்தியாகாது. ( பா. 8)


ஈசனை அடையவேண்டும் என்ற எண்ணத்தோடு, பல நிலைகளில் வாழ்ந்து பாசமகற்றிய முத்தி நிலையில்  ஆனந்தத்தை நீயே அனுபவிப்பது என்றால், அதாவது ஈசனது அருளை அனுபவிக்க இல்லை என்றால், ஈசனை அடைய வேண்டும் என்ற முன் நிலைகள் மோசமாய் முடிந்துவிடும். (பா.9)


தான் என்ற தற்பவமன்றி நிற்கத் தோன்றும் சச்சிதானந்தனின் ஆனந்தத்தை அனுபவிக்கவில்லை என்று கூறும் முரண்பாடு எவ்வாறு பெற்றினை? நான் அனுபவிக்கிறேன் என்று கூறித் தற்பவத்தை மீண்டும் பெறுவது முரண்பாடாகுமே. (பா. 10)


ஆன்மாவிற்கு ஆனந்தம் உண்டு என்றால் எண்ணற்ற பிறப்பை ஏன் ஆன்மா அடைகிறது? ஆன்மா தனக்குத்தானே ஆனந்தத்தை 

4

அனுபவிப்பதில்லை. இதனை அறிந்து கொள்ள சுவாமிகள் ஒரு உவமையையும் பயன் படுத்துகிறார்கள். கண்ணானது ஒரு பொருளைக் காண வேண்டுமென்றால் சூரிய ஒளியைக் கொண்டுதான் காணவேண்டும். அவ்வாறு இல்லாமல் கண்ணிற்கே  ஒளி உண்டு என்று கூறினால், இருளைக் கண்ணொளி ஏன் ஓட்டவில்லை? என்று சுவாமிகள் பாடியுள்ளார்கள். 


அண்ணலைப்போ லானந்த மான்மாவிற் குண்டாகில்

எண்ணில் பிறப் பிறப்பை யெய்திடுமோ - கண்ணிருளை

ஓட்டாதோ ஆதவனுக் கொத்தவொளி யுண்டாகிற்

கேட்டாயோ கேட்டிலையேற் கேள். (பா.12)


சிவனால் பெறும் ஆனந்தத்தை அனுபவிக்காது, மலங்களைப் போக்குகின்ற பேரின்பம் உன்பால் அமைவது உன் குணம் என்று கூறுவது எவ்வாறு இருக்கிறது என்றால், காய்ச்சப்பட்ட இரும்பில் தீயின் குணம் இருப்பதை, இரும்பின் குணமாகக் கூறுவது போன்றதாகும். 


பேரின்ப நின்குணமென் பேதாய்கேள் - பேரின்பம்

நின்குணம் போல தோன்றுமது நீயாகையான் இரும்பு

தன்குணமோ தீயியல்பு தான். (பா. 13)


என்ற பகுதியில் சுவாமிகள் தம் கருத்தை உவமை மூலம் விளக்கியிருப்பது படித்து உணரத் தக்கதாகும். 


ஆன்மானந்தவாதி தன் கருத்தினைக் கூறுவது வேறு எந்த மதவாதிகளும் கூறாதது ஆகும். ஆதலால் ஆன்மானந்தவாதி எந்தச் சமயச் சார்போடும் சேர இயலாதவர் ஆகின்றனர். ஆதலால் சுவாமிகள் அவர்களை மாயாவாதி மகன் என்று குறிப்பிடுகிறார்கள். 


பேயாவாதிக் கேது பேசிடில் நீ தானந்த

மாயா வா திக்கே மகன். (பா.14)


என்ற இப்பகுதியில் சுவாமிகள் தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்கள். இப்பகுதிக்கு வெள்ளியம்பலத் தம்பிரான் எழுதிய சிற்றுரையில் மாயாவாதியை,

ஷஷதன்னிற் தன்னைத் தானே காணிற்

கண்ணிற் கண்ணைக் காணவும் படுமே'

(சங்கற்ப நிராகரணம் -வரி 195 - 196)


என்று பிரமாண வேறுபாட்டைக் காட்டி மறுத்தவழி உடன்பட்டும், முன் கூறியதை நினையாது பின்னும் அதனையே கூறிப் பிதற்றுதலின், அத்தகைய இயல்பை உடைய ஆன்மானந்தவாதியை , மாயாவாதி என்று எண்ணாது 

5

அவன் மகன் என்றது என்னவெனில் கூறுதும் --- அம்மாயாவாதி போல இவ் ஆன்மானந்தவாதி ஏகான்மவாதம் கூறாமையினாலும், முத்தியில் தருமி பேதம் கூறுதலாலும் முறையே மாயாவாதியும் அல்லன், சைவனும் அல்லன். மாயா வாதி முத்தியில் தருமி பேதம் இல்லை என்றல், முத்தியில் சச்சிதானந்த தருமம் சிவனுக்கும் சீவனுக்கும் ஒக்கும் என்னும் சைவ சித்தாந்த சமயத்திற்கு ஒருவாற்றானொக்கும் அத்துணை ஒருமை பற்றி , அவனை மாயாவதி மகன் எனத் தள்ளினார் என்று அறிக.  (திருமடப் பதிப்பு, 1932, ப.90) என்று குறிப்பிடுவது அறிந்து கொள்ளத் தக்கதாகும். 


ஆணவம் சிவனருளால் நீங்கலால் முத்தி நிலையில் பேரின்பம் வந்து கூடுகின்றது. அவ்வின்பத்தைச் சிவபோகம் என்றே கூறவேண்டும். அவ்வாறு இல்லாமல் தன்போகம் என்றுரைப்பது, மலம் கழிய முத்தி என்று கூறுகின்ற நிலையாகும். (மலம் போகச் சிவப்பேறு அடைந்து முத்தி எய்த வேண்டும் என்பது சைவசித்தாந்தக் கொள்கை) . அவ்வாறு இல்லாததால் சுவாமிகள் அவர்களை, ஷஷநாமறிவோம் நீயும் மலம்போக முத்தி என்பவன்' என்று குறிப்பிடுகிறார்கள். ( பா. 15)


சிவசத்தி மாதாவாகவும் ஆன்மா மைந்தரும் ஆதலால் சிவசத்தியை ஆன்மா அனுபவிப்பது குற்றம் என்றும் அது மாபாதகம் என்றும் கூறுகிறாய். ஆனால் சிவசத்தி மாதா .ஆன்மா மைந்தர் என்று கூறுவதெல்லாம் உபசார வழக்கே அன்றி உண்மை வழக்கு அல்ல.  


சிவசத்தியைத் திளைப்பர் சீவன்முத் ரென்னு

மவசத்த மாபா தகமென் - சிவசத்தி      (பா.17)


என்று சுவாமிகள் குறிப்பிட்டு, ஞானசம்பந்தர் அன்னையின் முலைப்பாலை உண்டது என்று கூறுவது உண்மையான மார்பகப் பாலைக் குடித்தது அல்ல, அன்னை அளித்த ஞானப்பாலை உண்டதேயாகும் என்ற செய்தியை நினைவு படுத்தி, உபசார வழக்கைச் சுவாமிகள் நிறுவுகிறார்கள். 


பதினேழாவது பாடலின் முதலிரண்டு வரிகளையே பதினெட்டாவது பாடலிலும் இடம்பெற வைத்து, சிவசத்தியை ஆன்மா அனுபவிப்பது மாபாதகம் என்று கூறுவதைப் பின் இரண்டு வரிகளில் மறுக்கிறார்கள். சிவனின் அருளாம் சத்தியை முத்திநிலையில் தரிசித்து , ஞானம் பெற்று நேயத்தோடு அழுந்தி சிவபெருமானோடு ஒன்றி, இரண்டற்ற நிலையில் வாழ்வது முத்தி நிலையாகும். ஆதலால் மாபாதகம் என்று கூறுவது ஏற்புடையதன்று என்று சுவாமிகள் குறிப்பிடுகிறார்கள். 


இவ்வாறு பதினைந்து பாடல்களில் ஆன்மானந்தவாதத்தை முன் இரண்டு வரிகளில் அமைத்து, பின் இரண்டு வரிகளில் சைவ சித்தாந்த முத்தி நிலையைச் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்கள். 

6

சிவசமவாத மறுப்பு::

சிற்றுரை எழுதிய வெள்ளியம்பலவாணர் பத்தொன்பதாவது பாடலின் கீழ் சிவசமவாத நிராகரணமும் கூறுகின்றார் என்று குறிப்பிட்டிருப்பதால், பத்தொன்பது , இருபது, இருபத்தொன்று ஆகிய மூன்று பாடல்களும் சிவசமவாத மறுப்புக் கருத்துக்களாகக் கொள்வதுண்டு. அப்பாடல்களின் கருத்துச் சுருக்கம்  ----------- சத்து, சித்து, ஆனந்த வடிவமான சிவபெருமானோடு , சத்து ,சித்து வடிவான ஆன்மாவைச் சமமாகக் கூறுவது அறியமையாகும். ஆனால் அச்சமயத்தார் சிவனும் , சச்சிதானந்த சொரூபன் அன்று. சத்து சித்து உருவமாவான். ஆதலால் ஆன்மாவிற்குச் சமம் என்று கூறுவார்கள். ஆனால் இறைவனை சத்து சித்து ஆனந்தன் என்றுதான் வேதங்கள் கூறுகின்றன. மேலும் இறைவன் அந்நிலைக்கு உரியவன் அல்லன் என்று கூறினால், தச காரியத்தில் அமைந்துள்ள சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகியவை வேண்டப்பாடாதனநி ஆகிவிடும். மேலும் சிவசம வாதத்தைச் சைவசித்தாந்தம் பேதவாதமாகக் கூறுவதால், ஆன்மானந்தவாதமும் பேதவாதமாக அமையும் என்று குறிப்பிட்டு, சிவசம வாதக் கருத்துக்களைச் சுவாமிகள் மறுத்துள்ளார்கள். 


முடிந்த முடிபு :

நூலின் முடிந்த முடிபாக,

உள்ள மலநீங்கி யோங்கு சிவானந்த

வெள்ளத் திளைத்ததுவாய் மேவுதலே - கள்ளவிழ்பூங்

கொத்தார் விரிசடையார் கூறு சிவாகமத்திற்

சித்தாந்த முத்தியெனத் தேறு. (பா.22)


என்ற நிறைவுப் பாடலைச் சுவாமிகள் பாடியருளியுள்ளார்கள். ஷஷஆன்மா தனது ஆணவம் முதலான மலங்கைள நீக்கி, ஒருகாலத்தும் குறைவில்லாத சிவானந்தப் பெருங்கடலில் திளைத்து, சிவனும் ஆன்மாவும் ஒன்று என்றும், இரண்டு என்றும் பிரித்து அறியமுடியாது அத்துவித நிலையைப் பெறுதலே, மது ஒழுகும் ஆத்திப்பூ மாலையணிந்த விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளிய சிவாகமத்தில் கூறப்படும் சித்தாந்த முத்தி எனத் தெளிவாயாக' என்று இப்பாடலுக்கு வெள்ளியம்பலவாணரின் சிற்றுரை அமைந்துள்ளது.  எனவே முத்தி நிலையில் ஆன்மா சிவனோடு இரண்டறக் கலந்து , பேரானந்தத்தை அனுபவிப்பதுவேயாகும் என்று குருஞானசம்பந்தப் பெருமான் முடிவாகக் கூறியுள்ளார்கள். 


இத்தகைய முத்தி நிச்சயம் என்ற ஆதீனக்குரு முதல்வரின் நூலை மீண்டும் மீண்டும் பயிலும் பொழுது, சித்தாந்த முத்தியினை அறிந்து கொள்ள முடிகிறது . 


திருச்சிற்றம்பலம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக