புதன், 26 ஜனவரி, 2022

கால தத்துவம் -ஒரு மதிப்பீடு

 


      சித்தாந்தச் செம்மணி, சிவஞானக் கலாநிதி ,முனைவர். பழ.முத்தப்பன்

                                  திருச்சிராப்பs;sp .

 

       ‘‘மானிட ஒழுக்க நெறி சமயத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. சமயம் இல்லாமல் உலகில் அமைதியை உண்டாக்குவதற்காக எந்த ஒரு புதிய தத்துவத்தைச் சொன்னாலும் அது இறுதியில் சமயத்தில்தான் போய்முடியும்[1] உலகச் சமயங்களில் தனியொரு இடத்தைப் பெற்றது சைவசமயம் ஆகும். இச்சமயம் உலகில் உள்ள பொருள்களைப் பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களுக்குள் அடக்கி , அவற்றைப் பற்றிய கருத்துக்களை வெளியிடுகிறது.  அவ்வாறு வெளியிடுகின்ற பகுதிகளைக் கொண்டது சித்தாந்தம் எனப்பெறும்.  சித்தாந்தம் என்ற சொல் முடிந்த முடிபு என்ற பொருளைத் தரும். ‘‘அஃதாவது பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்யப் பெற்றுத் தருக்க நூல் அடிப்படையில் நிறுவப்பட்ட முடிவு என்பது இதற்குப் பொருளாகும். [2]

 

       சித்தாந்தப் பொருள்களில் ஒன்றாகிய பாசம் பற்றிய கருத்துக்களில் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களைப் பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தப் பெறுகின்றன.  இம்மூன்றின் ஆய்வுகளும் பதி , பசுவாகிய இறைவன், உயிர்  பற்றிய ஆய்வுகளும் சேர்ந்து ஐந்து பொருள்களின் ஆய்வாகச் சித்தாந்தம் விரிவடைகிறது.  மும்மலங்களில் மாயை பற்றிய ஆய்வு ,  பதினான்கு சாத்திர நூல்களிலும் அவ்வவ் ஆசிரியப் பெருமக்களால் நிகழ்த்தப் பெற்றுள்ளது.  அவ்வாய்வு நிலையில் மாயையின் ஒரு கூறாகிய 36 தத்துவங்களைப் பற்றிய  செய்தியில் இடம் பெறுகின்றன. அந்த 36 தத்துவங்களில் ஒன்றான கால தத்துவம் பற்றிய மதிப்பீட்டைச் செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

       மாயை என்ற சொல் தோற்றம், ஒடுக்கம் என்ற பொருளைத் தரும் . எங்கு தோன்றுகிறதோ அங்கு ஒடுங்கும் என்பது தருக்க நூலின் தத்துவமாகும். அந்த அடிப்படையில் மாயை உலகின் தோற்றத்திற்கு மூல காரணமாகின்றது.  இதனைக் காரண மாயை என்பர். இந்தக் காரண மாயைக் கொண்டு இறைவன் தனு, கரண, புவன , போகங்களைத் தன் ஆணையால் தோற்றவிக்கிறின்றான். அவ்வாறு தோற்றுவிக்கும் பொழுது பயன்படுகின்ற கருவிகள் காரிய மாயை எனக் கூறப் பெறுகிறது. மாயை என்ற சொல்  மாயா என்னும் சொல்லின் திரிபாகும். மா - மாய்வது  (ஒடுங்குவது ) ஆ - தோன்றுவது.  எனவே மாயை  ஒடுங்குவதும் தோன்றுவதுமாகிய இயல்பினை உடையது. அந்த மாயை உயிருக்கு உதவும் பொழுது , தனு , கரண , புவன , போகங்களாகிய காரிய நிலையில் இயங்குகிறது. மாயை ஜடப் பொருள்.  எனவேதான் இறைவன் உயிர்களுக்குப் பயன்படும் பொருட்டு தனு , கரண , புவன , போகத்தைக் காரியப் படுத்துகிறான். ‘‘உலகத்துப் பொருள்கள் அனைத்தும் அறிவற்றவை. உயிர் பிரிந்ததும் உடலும் அறிவற்றதாக இருப்பதைக் காண்கிறோம்.  ஆகவே உலகத்துப் பொருள்களும், உயிர்கள் நின்று உலவும் உடல்களும் மாயையிலிருந்தே உண்டாக்கப் பட்டன எனச் சைவ சித்தாந்தம் கூறுகிறது.  மாயை அறிவற்ற பொருளாக இருப்பதால் தான் அறிவற்ற உலகமும் , உடலும் அதிலிருந்து உண்டாகின்றன.[3] என்று சைவசித்தாந்த வித்தகர் குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத் தக்கது.

 

       தனு முதலாகியவற்றின் தோற்றத்திற்குரிய காரியங்கள்  தத்துவங்கள் எனப்படும்.  தத்துவங்கள் என்பது சைவசித்தாந்தத்தில் கருவிகளைக் குறிக்கும் சொல்லாகும்.  எனவே தத்துவங்கள் உடலின் தோற்றம் நின்று ஒடுங்குவதற்குக் கருவிகளாக அமைகின்றன. இந்தத் தத்துவங்கள் சுத்த மாயை என்றும், அசுத்த மாயை என்றும், பிரகிருதி மாயை என்றும் மூன்று பெரும் பிரிவுகளாப் பிரிக்கப்படும்.  இந்த மூன்று மாயைகளின் மொத்தக் கருவிகள் 36 தத்துவங்களாகும்.  சுத்த மாயையிலிருந்து  தோன்றுவது ஐந்து சிவ தத்துவங்களாகும்.  அசுத்த மாயையிலிருந்து தோன்றுவது 7 வித்தியா தத்துவங்களாகும். பிரகிருதி மாயையிலிருந்து தோன்றுவது 24 ஆன்ம தத்துவங்களாகும்.

        

       ‘‘பொருள்களின் தோற்றத்திற்கு முதற் காரணமாக அமையும் மாயை ஆணவமலத்தோடு கலவாமல் தூய்மையாக இருக்கும் பொழுது சுத்த மாயை எனப்படுகிறது. அதே மாயை ஆணவ மலத்தோடு கலந்திருந்தால் அசுத்தமாயை எனப்படுகிறது் குன்றிமணி ஒன்றே சிவந்ததும் கரியதுமாகிய இரு பகுதிப் பட்டதாய் விளங்குவதை இதற்கு உவமையாகக் கூறுவர். சுத்த மாயை மேலாய் விரிந்திருக்க , அசுத்தமாயை அதனுள்ளே அடங்கி நிற்கும்.  சுத்தமாயை வியாபகமாகவும், அசுத்த மாயை அதில் வியாப்பியமாகவும் ( (அடங்கிநிற்பது ) நிற்கும் என்று வித்தகர்கள் விளக்கம் தருவதை நினைவு கூறலாம்.. [4]

 

       சுத்த மாயையில் சிவதத்துவங்கள் ஐந்தும் தோன்றுகின்றன. இறைவனுடைய சத்தி சுத்தமாயையில் பொருந்தி சிவம், சத்தி, சதாசிவம், ஈசுவரம், சுத்தவித்தை ஆகிய ஐந்து தத்துவங்களைத் தோற்றுவிக்கும்.  இவ்ஐந்து தத்துவங்கள் இறைவனது சத்திக்கு நிலைக்களமாய் அமைவன ஆகும்.

 

 

வித்தியா தத்துவம் - பெயர்க்காரணம்

 

              அசுத்த மாயையில் இருந்து தோன்றும் வித்தியா தத்துவங்கள் இறைவனது ஏவல்வழி நிற்கும் அனந்ததேவர் என்பவரால் தோற்றம் , ஒடுக்கத்தைப் பெறுகின்றன. அனந்த தேவர் வித்தியேசுரருள் சிறந்தவர் ஆவார். வித்தியேசுரர் என்பவர்கள் சிவதத்துவத்தில் சுத்த வித்தையில் இருக்கின்ற எட்டு அதிகாரிகள் ஆவர்.  அவர்களில் ஒருவர்தான் அனந்தர் ஆவார். எனவே வித்தியேசுரருள் ஒருவரான அனந்த தேவரால் இத்தத்துவம் தோன்றி ஒடுங்குவதால் வித்தியா தத்துவம் எனப் பெயர்பெற்றது.

      

       வித்தியா தத்துவங்கள் ஏழும்  பிரகிருதி மாயையில் தோன்றும் ஆன்ம தத்துவங்களாகிய 24 தத்துவங்களுக்கும் மேலாக உயிருக்கு உதவும் கருவிகளாகும். அவை மாயை, காலம், நியதி , கலை , வித்தை , அராகம் , புருடன் என்பனவாகும். முதற்காரணமாகிய மாயையிலிருந்து தோன்றிய அசுத்த மாயையில் மாயை என்ற தத்துவம் வித்தியா தத்துவங்களில் ஒரு சிறு பகுதியாக விளங்கி , முதற் தத்துவமாக விளங்குகிறது.  ‘‘இந்த மாயா தத்துவத்திலிருந்தே காலம் முதலிய பிற வித்தியா தத்துவங்கள் தோன்றும்.  எனவே பிற அசுத்த தத்தவங்கள் தோன்றுவதற்கு ஏற்புடைதாகப் பதப் படுத்தப்பட்ட ஒரு பகுதியே மாயை என்று கூறலாம்.[5]

 

கால தத்துவம் - பொது நிலை

 

       வித்தியா தத்துவத்தில் மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்களில் காலம் முதல் தத்துவமாகும். உலக அரங்கில் ‘‘இளைப்பாறுவதற்கும் மீண்டும் செயல் படுவதற்கும் காலம் இன்றியமையாதது ஆகின்றது.  எனவேதான் ‘‘காலதேச வருத்தமானம், ஆடிப்பட்டம் தேடிவிதை, பருவத்தே பயிர்செய், பருவத்தாலன்றிப் பழா என்றெல்லாம் முதுமொழிகள் நிலவி வருகின்றன.  எத்தகைய காரியத்தைத் தொடங்கிச் செய்வதற்கும் தீது விளைவிக்கும் காலங்களைத் தவிர்ப்பதும், புண்ணிய காலங்களை அனுஷ்டிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. [6] என்று காலத்தின் அருமை பற்றிக் கூறுவர் சித்தாந்த அறிஞர்.

 

       36 தத்துவங்களையும் பொது நோக்கில் காணும்போது அவை உயிரின் உடல் வாழ்வதற்குரிய பின்புலமாகக் கொள்ளலாம்.  சுத்த தத்துவங்கள் ஐந்தும் உயிர்களுடைய உடம்பு தோற்றம் பெறுவதற்கு இறைவன் சத்தியால் திட்டமிடுகின்ற தத்துவங்கள் எனக் கொள்ளலாம்.  அடுத்து அசுத்த மாயையில் தோன்றும் வித்தியா தத்துவங்கள் ஏழும் இறைச் சத்தியால் தீர்மானிக்கப் பெற்றபடி உடம்பு வடிவெடுத்துத் தோன்றுகிற சூழலுக்குப் பின்புறமாக அமைந்த தத்துவங்கள் எனலாம். பிரகிருதி மாயையில் தோன்றும் 24 தத்துவங்களும் உயிர் வடிவெடுத்து உடலாக வாழும் பொழுது தேவைப்படுகின்ற பின்புலத் தத்துவங்களாகக் கொள்ளலாம்.  எனவே 36 தத்துவங்களும் தனு, கரண , புவன , போகங்கள் படைக்கப் பெற்று அவை செயல் படுவதற்குரிய பின்புலங்கள் எனக் கொள்ளலாம். அந்த அடிப்படையில் கருவிலிருந்து உடம்பு வடிவத்தைப் பெற்ற உயிர், வெளிப்படும் பொழுது வேண்டிய பின்புலங்களில் முதலாவதாக அமைவது ஜாதகக் குறிப்புகளுக்கு அடிப்படையாக அமைகின்ற காலமாகும்.  இக்காலம் இறந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டும் , நேரம், நாள் , ஆண்டு என்பன உள்ளிட்ட பகுப்புகளைக் கொண்டும் விளங்குவதாகும்.  இக்காலத்தைப் பற்றிய சைவ தத்துவக் கொள்கைகளைப் பதினான்கு சாத்திரங்களும்   குறிப்பாகவும், நேரிடையாகவும் தருகின்றன.  

             

       ‘‘ஞாயிறு முதலியவற்றோடு கூடி நின்று , நாழிகை , நாள், பக்கம், திங்கள் , ஆண்டு முதலியனவாய்ப் பாகுபாடு செய்யப்பெறும் காலதத்துவம்.[7] என்ற கருத்தை இங்கு நினைவு கொள்ளலாம்.  பல கூறுகளைக் கொண்ட கால தத்துவம் பற்றிச் சிவஞான முனிவர் சிவஞானபோத இரண்டாம் சூத்திரத்தின் இரண்டாம் அதிகரணத்திற்கு உரை எழுதுமபொழுது விரிவான விளக்கம் தருகிறார். அவ் விளக்கத்தில்  கால தத்துவம் என்பதற்கு . ‘‘அவற்றுள் கலை , வித்தை , அராகங்களால் தொழிலும் அறிவும் வித்தையும் விளங்கிப் போக நுகர்ச்சிக்கண்  சென்ற ஆன்மாக்களுக்குப் பலவேறு வகைப்பட்டுப் போகத்தை வரையறைப் படுத்துவது காலத் தத்துவம் என்று குறிப்பிடுகின்றார். [8] முனிவரின் கொள்கைப்படி உயிரானது உடம்பினால் போகங்களை (இன்ப துன்பங்களை) அனுபவிக்கப் பயன்படும் கருவி காலமாகும் என்பது பெறப்படுகிறது. மேலும் அவர் தம் விளக்கத்தில் ஒரு முடிவையும் தருகிறார். வித்தியா தத்துவங்களில் கலை , வித்தை , அராகங்கள் தோன்றும் வரை கால தத்துவம் பயனற்றதாக நின்று , அதன் பின்னரே பயன்படும் என்று குறிப்பிடுகிறார்.  வித்தியா தத்துவத்தில் காலம் முதல் தத்துவமாகக் கூறப்படுகின்ற நிலையில் சிவஞான முனிவர் கால தத்துவத்தை கலை , வித்தை , அராகத்திற்குப் பின்னர் நிகழும் தத்துவமாகக் கூறி அதை நிலைநாட்டுவதற்குக் கால தத்துவக் கருத்துக்களைப் பல கோணங்களில் நிறுவுவது படித்து உணரத் தக்கதாகும்.

சாத்திர நூல்களில் கால தத்துவம்

      

       பதினான்கு சாத்திர நூல்களில் கால தத்துவம் பற்றிய குறிப்பும் விளக்கமும் கிடைக்கின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்பது கட்டுரைக்குப் பயன் தரும்.  தத்துவங்களை அறிந்தால் பிறவித் துன்பத்திலிருந்து விடுபடலாம் என்பது திருக்களிற்றுப்படியாரின் குறிப்பாகும்.

 

              ‘‘தூல உடம்பாகிய முப்பத்தோர் தத்துவமும்

               மூல உடம்பாகிய முதல்நான்கும் - மேலைச்

               சிவமாம் பரிசினையும் தேர்ந்து உணர்ந்தார் சேர்ந்தார்

               பவமாம் பரிசறுபபார் பார்

                                                (பா. 36)

என்ற பாடலின் மூலம் தூல உடம்பிற்குக் காரணமாக அமைகின்ற ஆன்ம தத்துவம் 24 -ம், வித்தியா தத்துவம் 7- ம் , மூல உடம்பாகிய சுத்த வித்தை, மாயேச்சுரம், சாதாக்கியம், சத்தி என்ற நான்கு தத்துவங்களும் , அதற்கு மேலன சிவதத்துவத்தையும், ஞானாசிரியர் மூலம் அறிந்து கொண்டால் தம்மைச் சேர்ந்த பிறவித் துன்பத்திலிருந்து நீங்கலாம் என்று குறிப்பிடுவதால் தத்துவங்களில் ஒன்றான கால தத்துவமும் பிறவும் அறிய வேண்டியது இன்றியமையாததாகிறது.

 

       ‘‘உண்மை விளக்கம் காலத்தை உட்படுத்திக் கொண்ட வித்தியா தத்துவங்களின் தொழிலைக் கீழ்வரும் பாடலில் குறிப்பிடுகின்றது.

             

              ‘‘எல்லைபலம் புதுமை எப்போதும் நிச்சயித்தல்

               அல்லல் தரும் கிரியை ஆன்மாவுக்கு - ஒல்லை

               அறிவு ஆசைஐம்புலனும் ஆரவரும் காலம்

               குறியா மயக்குஎன்று கொள்

                                                (பா. 19)

 

இப்பாடல்  வித்தியா தத்துவங்கள் ஏழும் செய்யக் கூடிய தொழில்களை அறிவுறுத்துகிறது.  இதில் கால தத்துவத்தைச் சொல்லும் பொழுது, இறந்த காலத்தை எல்லை என்ற நிலையிலும், நிகழ்காலத்தைப் பலம் என்ற நிலையிலும் , எதிர்காலத்தைப் புதுமை என்ற நிலையிலும் பாடல் குறிப்பிடுகிறது.  இந்த மூன்று காலங்களும் உயிருக்கு வினைப்பயன்களை உணர்வதற்குரிய இத்துணை பொழுது எனக் காலதத்துவம் வரையறுத்துக் காட்டுகிறது. இறந்த காலம் வினைகளை நுகர்ச்சியினால கழியச் செய்து , உயிரை வினைகளிலிருந்து பிரிக்கும் எல்லையாகும் என்று குறிப்பிடுகிறது. நிகழ்காலம் உயிரை வினைப்பயன்களோடு கூட்டுவித்து நுகரச் செய்து பலம் என நிற்கிறது.  எதிர்காலம் உயிர்கள் வினைப்பயன்களை எதிர்நோக்குமாறு செய்து புதுமையாய் நிற்கிறது எனக் குறிப்பிடுகிறது.  எனவே கால தத்துவம் வினைகளைப் பிரிக்கும் எல்லையாகவும் , வினைகளை நுகர்விக்கும் பலமாகவும், வினைகளைப் பயன் எதிர்பார்த்துச் செய்கின்ற புதுமையாகவும் குறிப்பிடுகிறது. உண்மை விளக்கத்தின்படி இறப்பு , நிகழ்வு , எதிர்வு என்ற மூன்று நிலையில் அமையும் கால தத்துவம் , உயிர்களுக்கும் வினைப்பயன்களுக்கும் உள்ள தொடர்பை வெளிக்காட்டும் கருவியாகும் என்பது பெறப்படுகிறது.

 

       சிவஞானசித்தியார் ,

             

              ‘‘மாயையின் கால மோடு நியதி, பின் கலாதி தோன்றும்

               ஆய அக் காலம் மூன்றாய் ஆக்கியும் அளித்தும் போக்கிக்

               காயமோடு உலகுக்கு எல்லாம் காலசங் கையினைப் பண்ணி

               நாயகன் ஆணை யாலே நடத்திடும் சகத்தை எல்லாம்

                                                       (பா. 144)

என்ற பாடல் கால தத்துவத்தின் தொழிலைக் குறிப்பிடுகிறது. கால தத்துவம் அசுத்த மாயையிலிருந்து நியதி , கலை  முதலிய தத்துவங்களோடு தோன்றுகிறது என்று முதல் வரியில் குறிப்பிட்டு , கால தத்துவம் அசுத்த மாயையிலிருந்து தோன்றுகிறது என்ற தோற்ற முறைமையைக் குறிப்பிடுகிறது.  அடுத்துக் கால தத்துவமானது இறப்பு , நிகழ்வு , எதிர்காலம் என்ற மூன்று வகையாய் அமையும் என்பதையும் , அந்த மூன்று வகையும் தனக்குக் கீழ்பட்ட உடல்களும் உலகும் ஆகிய காரியப் பிரபஞ்சங்கள் அனைத்தையும் கால வரையறைக்கு உட்படுத்தி, இறைவனின் ஆணையின்படி வரையறை செய்து  நிற்கும் என்று பின்வரிகளில் குறிப்பிடுகிறது. இப் பாடலின் நாயகன் ஆணையாலே என்ற தொடரிலிருந்து  காலம் என்ற ஜடப்பொருள் இறைவனின் ஆணையினால் தான் நடக்கும் என்ற செய்தி கிடைக்கிறது. இதனை, இரு நிலனாய் என்று தொடங்கும் திருநாவுககரசுப் பெருமானின் ஆறாந்திருமுறை திருத்தாண்டகம்,

 

              ‘‘பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்

                      பிறருருவும் தம்உருவும் தாமேயாகி

               நெரு நலையாய் இன்றாகி நாளையாகி

                      நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே

                                                       (பதிகம் - 94, பா.1) 

என்று குறிப்பிடுவதை நினைவு கூறலாம். சிவஞானசித்தியாரின் பாடல்  இறைவன் ஆணையாலே காலம் உலகப் பொருள்களை நடத்திடும் என்பதால் கால தத்துவம் நித்தப் பொருளல்ல, அதாவது எவ்வித மாற்றமும் இல்லாத பொருள் எனக் கொள்ள இயலாது. இறப்பு முதலிய மூன்று பெருங் கூறுகளையும், நாழிகை முதலிய உட்கூறுகளையும் காலமாகிய பொருள் கொண்டிருப்பதால் , அது செயற்கைப் பொருளேயாகும்.  அதாவது அனந்ததேவராகிய இறைவன் ஆணை பெற்றவர்களால் கால தத்துவம் செயற்படுத்தப் பட்டுச் செயற்கைப் பொருளாய் , தோற்ற அழிவுகளுக்கு உரியதாய் அமைகிறது என்ற விரிவான செய்தியும் கிடைக்கிறது.

 

       சிவப்பிரகாசத்தில் ,

             

              ‘‘பேசரிய அராகம்தம் கன்மத்துக் கீடாய்

                     பெற்றதனில் ஆசைதனைப் பெருகுவிக்கும் நியதி

               நேசமிகும் அரசர்தரும் ஆணை செய்தி

                     செய்தவரைத் துய்ப்பிக்கும் செய்தி போல

               நேசமுறு தம்கன்மம் நிச்சயித்து நிறுத்தும்

                     நிகழ்காலம் கழிகாலம் எதிர்காலம் என்றே

               ஓசைதர வருங்காலம் எல்லைபலம் புதுமை

                     உருவிக்கும் இறைசத்தி உடனாய் நின்றே

                                                       (பா. 40)

என்ற பாடல் அராகம், நியதி , காலம் என்ற தத்துவங்களின் தொழில்களைக் குறிப்பிடுகிறது.  அவ்வாறு குறிப்பிடுகையி்ல் கால தத்துவத்தைக் குறிப்பிடும் பொழுது , இறந்த காலம், நிகழ் காலம் , எதிர் காலம் என்று மூன்று வகையாகச் சொல்லப்படும் கால தத்துவமானது , இறந்த காலத்து எல்லையையும், நிகழ்காலத்துப் பலத்தையும் , எதிர்காலத்துப் புதுமையினையும் சிவசத்தி உடனிருக்க வரையறை செய்திடும் எனக் குறிப்பிடுகிறது. 

 

       எனவே கால தத்துவமானது உலக போகங்களை அனுபவிப்பதற்குக் காலங்களை வரையறை செய்து கொண்டிருக்கும் என்ற தன்மை புலப்படுகிறது.  அத்துடன் அனுபவித்துத் தொலைத்து விட்ட போகத்தை இறந்த கால எல்லையாக வரையறுத்தும், இப்பிறவியில் அனுபவிக்கும் போகத்தை முன் பிற்விகளின் பலம் என்றும் , இப்பொழுது அனுபவிப்பதால் இனிவரும் பிறவிகளி்ல் அனுபவிக்கக் கூடிய போகங்களைப் புதியன என்றும் வரையறை செய்து இப்பாடல் காட்டுகிறது.

 

       இவ்வாறு இக்கட்டுரையில் கூறப்பெற்ற செய்திகளால் கிடைக்கப்படும் கருத்துக்களை கீழ்க்கண்டவாறு வரையறை செய்யலாம்.

 

1.  பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களை ஆய்வு செய்து முடிந்த முடிபைத்

        தருவது சைவசித்தாந்தம்.

2.  பாசம் பற்றிய ஆய்வில் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள்

    ஆய்வு செய்யப் பெறுகின்றன.

3.  இறைவனுக்குத் தனு, கரண , புவன , போகங்களைத் தோற்றுவிப்பதற்கு

    அமைகின்ற மூலமாயை காரணமாயை என்று கூறப்படும்.

4. காரண மாயை ஜடப்பொருள் என்பதால் அதிலிருந்து இறைவன்      ஆணையால் தனு,          கரண, புவன போகமாகிய ஜடப்பொருள்கள் தோற்றுவிக்கப்    பெறுகின்றன.

5.  தனு முதலிய நான்கும் தோற்றுவிக்கப்படும் பொழுது  உதவுவது   காரிய       மாயை ஆகும்.

6.  காரிய மாயையில் 36 தத்துவங்கள் கருவிகளாக அமைகின்றன.

7. முப்பத்தாறு தத்துவங்கள் தனு முதலிய நான்கிற்கும் பின்புலமாக  அமைகின்றன.

8. வித்தியா தத்துவம் ஏழும் உடம்பு தோன்றி வெளிப்படுவதற்குப்       பின்புலமாக அமைகின்றன.

9.   வித்தியா தத்துவங்களில் ஒன்று கால தத்துவம்.

10.  கால தத்துவம் சிவசத்தி. மற்றும் ஆணையால் இயக்கப் படுவது.

11.  கால தத்துவம் இறப்பு முதலிய முக்காலப் பெரும் பிரிவுகளையும் ,      நாழிகை முதலான சிறு பிரிவுகளையும் கொண்டவையால் , அது       இறைவன்  ஆணைக்கு உட்பட்ட செயற்கைப் பொருளாகும்.

12.   கால தத்துவம் உயிர்களின் போகங்களை அனுபவித்த எல்லையாகவும்,

       அனுபவிக்கும் பலமாகவும், அனுபவிக்க வேண்டிய புதுமையாகவும்

       அமைகிறது.

 

       இத்தகைய செய்திகளைக் கொண்ட கால தத்துவம், இன்றைய உலக வாழ்க்கையில் குறிப்பிடத் தக்கதாகும் என்பதை,

 

                     ‘‘அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி

                      எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த

                      உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்

                      பருவத்தால் அன்றிப் பழா

                                                (மூதுரை,பா. 5)

என்று பின்னர்வந்த நீதிநூலும் வலியுறுத்துகிறது.  இறையருளால் கால தத்துவத்தை உணர்ந்து, போகங்களைத் தவிர்த்து வாழ முற்பட்டால் இறையருளைப் பெறலாம் என்பது உறுதியாகிறது.

 

                                  திருச்சிற்றம்பலம்.

                    

                           ---------------------------------

             



[1] . இரத்தினஞ் செட்டியார். முரு. பழ, இதோ சைவ சித்தாந்தம் தெரிந்து கொள்ளுங்கள், 2012, ப. 15

[2] . வைத்தியநாதன். கு. சைவ சித்தாந்த அடிப்படைக் கொள்கைகள், 1995, ப.1

[3]  இரத்தினஞ் செட்டியார், முரு. பழ, இதோ சைவ சித்தாந்தம் தெரிந்து கொள்ளுங்கள், 2012, ப.33

[4] .ஆனந்தராசன். ஆ , உண்மை விளக்கம் உரை, 2005, பக் . 36 - 36.

[5] . ஆனந்தராசன். ஆ , உண்மை விளக்கம் உரை, 2005, ப. 66

[6] . டான்ஸ்ரீ சோமசுந்தரம். மு, சைவசித்தாந்தக் கட்டுரைகள் , கோலால்ம்பூர், 2001, ப.164.

[7] .ஔவை துரைசாமிப்பிள்ளை. சு, சிவஞான போத மூலமும் சிற்றுரையும், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1968 , ப. 123

[8]  .சிவஞான மாபாடியம், சி. சு மணி பதிப்பு , 2001, ப. 375.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக