புதன், 26 ஜனவரி, 2022

உயிர்த்தோற்றம்.


முனைவர். பழ. முத்தப்பன்,

திருச்சிராப்பள்ளி.


செந்தமிழ் மொழியின் பண்டை இலக்கியங்களைச் சங்க இலக்கியங்கள் என்பர். தனித்தனிப் பாக்களால் இருந்தவற்றை அகப்பாடல்கள் என்றும், புறப்பாடல்கள் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை நானூறு என்ற எண்ணிக்கையிலும் பத்து என்ற எண்ணிக்கையிலும், நானூறு என்ற எண்ணிக்கையிலும் , ஐந்நூறு என்ற எண்ணிக்கையிலும் தொகுத்துப் பண்டைத் தமிழ் அறிஞர்கள் வகைப் படுத்தித் தந்துள்ளனர். 


அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட சங்க இலக்கியங்களில் கடவுள் நம்பிக்கை பற்றிய செய்தியும், கடவுளால் படைக்கப் பெற்ற உடல் வகைகளைப் பற்றிய செய்தியும், அவ்வுடலை இயக்குகின்ற உயிர்களின் தன்மை பற்;றிய செய்தியும்;, அவ்வுயிர்கள் தத்தம் பண்டை ஊழ்வினைக்கு ஏற்றவாறு உடம்பினைப் பெறுகின்றன என்ற செய்தியும்

சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற பொதுத் தலைப்பில், சங்க இலக்கியங்களில் காணப்படும் உயிர் பற்றிய கொள்கைகளை எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 


பண்டு தொட்டுத் தமிழகத்தில் வழங்கி வந்த கடவுள் கொள்கை முப்பொருளை உணர்த்தும். அதாவது வினையின் நீங்கி விளங்கிய அறிவனாக விளங்கும் இறைவன் முதற்பொருள். இறைவனைப் பதி என்ற குறியீட்டுச் சொல்லால் குறிப்பிடுவர். அந்த இறைவனின் கருணைப் பெரு வெள்ளத்தால், தனு, கரண, புவன போகங்கள் என்று கூறப்படும் உடம்பு, கருவிகள், உலகம், போகப் பொருள்கள் என்பவை படைக்கப் பெறுகின்றன. படைக்கப் பெற்ற பொருளைப் பயனுடையதாகக் கொள்வதற்குக் கடவுள் தோன்றிய பொழுதே, அவன் இயங்குவதற்குரிய நிலைக்களமாக உயிர்கள் தானே தோன்றின . அந்த உயிர்களின் இயக்கம் வினையின் அடிப்படையில் அமைகிறது என்ற வினைக்கொள்கையும் பண்டு தொண்டு வழங்கி வருகின்றது. இவ்வாறு தமிழகத்தில் கடவுள் கொள்கை பதி என்றும், உயிராகிய பசு என்றும், வினையாகிய பாசம் என்றும் முப்பொருளை அடிப்படையாகக் கொண்டு விளங்கி வருகின்றது. பதி, பசு, பாசம் என்ற கடவுள் கொள்கையின் முப்பொருளைச் சங்க இலக்கியங்கள் பலவாறு பதிவு செய்துள்ளன. அதில் உயிரின் தோற்றம் பற்றிய செய்திகளை இக்கட்டுரை தொகுத்துத்தர முற்படுகிறது. 


சைவக் கொள்கைக்கு முன்னோடி சங்க இலக்கியங்கள் :

தமிழகத்தின் கடவுள் கொள்கையைக் கடவுள் சார்ந்த பல்வேறு வகைப்பட்ட சமயங்கள் தத்தமக்கு ஏற்றவாறு வெளிப்படுத்துகின்றன. அதில் 

2

இந்திய மெய்ப்பொருளியலில் சைவசமயம் தனி ஒரு சமயமாகவும், முதன்மைச் சமயமாகவும் விளங்குகிறது. பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களின் செய்திகளைச் சங்க இலக்கியங்கள் பல்வேறு சமயங்களின் அடிப்படையில் கூறினாலும், சைவம் சார்ந்த கொள்கையைப் பெரிதும் வலியுறுத்துகின்றன. சைவசமயக் கொள்கைகளைத் தமிழில் வகைப் படுத்தியும், தொகுத்தும் தருகின்ற நூல்களைத் திருமுறைகள் என்றும் சித்தாந்த சாத்திரங்கள் என்றும் இரண்டு வகையாக வகுக்கப்பட்டுள்ளன.  


திருமுறைகள் பனிரெண்டாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களைக் கொண்டுள்ளன. அடுத்த நான்கு,ஐந்து, ஆறு திருமுறைகள் திருநாவுக்கரசர் பாடியருளிய பாடல்களைக் கொண்டுள்ளன. ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி பாடிய பாடல்களைக் கொண்டு விளங்குகின்றது. எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் பாடியருளிய திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் கொண்டுள்ளது. ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்ற பாடல்களைக் கொண்டுள்ளது.  பத்தாம் திருமுறை திருமூலர் பாடியருளிய திருமந்திரப் பாடல்களைக் கொண்டுள்ளது. பதினோராம் திருமுறை சைவ அருளாளர்கள் பதினோருவர் பாடிய பாடல்களைக் கொண்டுள்ளது, பனிரெண்டாம் திருமுறை சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணமாம் அறுபத்திமூன்று தொண்டர்களின் வரலாற்றைக் கூறும் பாடல்களைக் கொண்டுள்ளது.  இத்தகைய பனிரெண்டு திருமுறைகளைப் பாடிய இருபத்தேழு அருளாளர்களின் கருத்துகளாம் சைவசமயக் கொள்கைகள், பெரும்பாலும் சங்க இலக்கியங்களைக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே விளங்குகின்றன.


பனிரெண்டு திருமுறைகள் இலக்கியங்கள் போல அமைய, இலக்கியம் கொண்டு இலக்கணம் இயம்புதல் என்ற மரபிற்கேற்ப, திருமுறைக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கணம் போல் பதினான்கு சாத்திரங்கள் சைவ சமயக் கொள்கைகளை வரையறுத்துக் காட்டுகின்றன. பதினான்கு சாத்திரங்களாவன - திருஉந்தியார், திருக்களிற்றுப்படியார்,   சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, திருவருட்பயன், உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், கொடிக்கவி, வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்பனவாகும். இத்தகைய பதினான்கு சாத்திரங்கள் சைவசமயத்தில் பரவலாக விளங்கினாலும், சிவஞானபோதமே தலைமை நூலாக விளங்குகிறது. இப்பதினான்கு சாத்திரங்களிலும் கூறப்படுகின்ற கடவுள் கொள்கைகள் , சங்க இலக்கியக் கடவுள் கொள்கை கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே விளங்குகின்றன. 

பன்னிரு திருமுறைகளும் , பதினான்கு சாத்திரங்களும் கூறுகின்ற கடவுள் கொள்கை கருத்துகள், சங்க இலக்கியங்களில் காணப்பெறும் 

3

கடவுள் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு விரித்துக் கூறுகின்றன என்று இன்றைய ஆய்வாளர்கள் பலவித நோக்கில் வலியுறுத்தியுள்ளனர். 


உயிர்த்தோற்றம் :

தமிழகத்துக் கடவுள் கொள்கையாம் முப்பொருளில் நடுநாயகமாக விளங்குவது உயிர் பற்றிய கொள்கைகளாகும். உயிர்த்தோற்றம் என்ற தலைப்பில் உயிர் உடலைத் தத்தம் ஊழ்வினைகளுக்கு ஏற்ப, உடல் நிலைகளைப் பெற்று நிலையாக வாழ்வதைச் சங்க இலக்கியங்கள் எவ்வாறு கூறுகின்றன என்ற நிலையில் விளக்கப் பெறுகிறது. உயிர் பற்றிய இலக்கணங்களாகச் சைவசமயம் கூறுவது ------------- 1. உயிர் தானே தோன்றியது, 2. என்றும் அழிவில்லாதது, 3. தனித்து நிற்காதது, 4. தான் எதனைச் சார்ந்திருக்கின்றதோ அதனையே சார்ந்து இயங்கும் குணத்தை உடையது, 5. உயிர் வினைகளை அனுபவிப்பது என்று குறிப்பிடுகின்றன. உயிர் என்ற ஒரு பொருள் இல்லை என்று கூறுகின்ற கடவுள் மறுப்புக் கொள்கையாளராம் உலகாயதர் குறிப்பிடுவர். அதனைச் சைவ சமயம் மறுத்து உயிர் உண்டு என்று நிறுவுகின்றது. அவ்வாறு நிறுவுவதற்கு அடிப்படை சங்க இலக்கியங்களே ஆகும். 


உயிர் என்று கூறப்படும் ஆன்மா பற்றி கீழ்க்கண்ட முடிவு கூறப்பெறுகிறது. மாயையின் காரியங்களால் உருவாக்கப் பெறுகின்ற தூல உடம்பு, சூட்சும உடம்பு, பர உடம்பு மூன்றும் அடங்க, தனு என்று கூறப்படுகின்ற உடம்பினுள் அதனை இயக்குகின்ற அறிவாகிய ஆன்மா என்ற ஒன்று உண்டு, அது அனுமானத்தாலேயே அறியப்படும் என்பது தமிழ்ச் சைவ சமயக் கொள்கையாகும்.  எனவேதான் தமிழ் இலக்கணத்தில் அறிவை அடிப்படையாக வைத்து அவை ஓரறிவு, ஈரறிவு என்று குறிக்கப் பெறுகின்றன. 

ஷஷஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப் படுத்தினரே'

(தொல்-மரபியல்27)


எனவே அறிவு நிலையில் ஆன்மா உணரப் படுகிறது என்பது இச்சூத்திரத்தால் பெறப்படுகிறது. இவ்வாறு உயிர் பற்றிய விளக்கம் தருகின்ற சிவஞானபோதம் தரும் சூத்திரம் ,


ஷஷஉளது இலது என்றலின், எனது உடல் என்றலின்

ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில் 

உண்டி வினை இன்மையின் உணர்த்த உணர்தலின்

மாயா இயந்திர தனவினுள் ஆன்மா''(சூ.3)





  

இவ்வாறு சைவ சித்தாந்தம் உயிர் என்பதை உடம்போடு இணைத்து உண்டுஎன்று நிறுவுகிறது.  ஆன்மா என்றும் இ உயிர் என்றும்இ பசு என்றும் வழங்கப் பெறுகின்றது. மூன்று சொற்களால் வழங்கப் பெறுகின்ற உயிர் பற்றிச் சங்க இலக்கியங்களில் பல கருத்துக்கள் அமைந்துள்ளன.  அவற்றைப் பாகுபடுத்திக் காண்பது நலம் பயக்கும். 


உயிரும் உடம்பும் --

சங்க இலக்கியங்கள் உயிர் உண்டு என்பதை ஏற்கின்றன.  அவ்வுயிர் உடம்பினின்று வேறுபட்டது என்பதையும் ஏற்கின்றன.  உடம்பை வி்ட்டு உயிர் பிரிகின்ற நிலை உண்டு என்றும்இ உடம்பும் உயிருமாக இணைந்து வாழ்வது உண்டு என்றும்இ சங்க இலக்கியத் தொடர்கள் விளக்குகின்றன. ஆதனுங்ஙன்  என்ற குறுநில மன்னனைக் கள்ளில் ஆர்த்திரையனார் பாடிய புறநானூற்றுப் பாடல் -  

''எந்தை வாழி ஆத னுங்கஎன்

நெஞ்சந் திறப்போர் நிற்காண் குவரே

  நின்யான் மறப்பின் மறக்கும் காலை

  என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்

  என்னியான் மறப்பின் மறக்குவென் ''(  புறம் -175)


என்ற பகுதியை உடையது.  வள்ளலைப் புலவர் மறக்கும் காலம் எது என்றால்  தன்னுடைய உயிரானது இ தன்னுடைய உடம்பை விட்டு நீங்கும் காலத்துத் தன்னை மறக்கும் காலம் உண்டாயின் அப்பொழுது வள்ளலை மறப்பேன் என்று புலவர் இப்பகுதியில் குறிப்பிடுகின்றார். எனவே உடம்பும் உயிரும் இணைந்திருக்கின்றன என்பதும் உடம்பை விட்டு உயிர் பிரியுங்காலம் வரும் என்பதும் இப்பகுதியால் பெறப்படுகிறது.  ஆதலால் உடம்பினுள் ஆன்மா உள்ளது என்ற சித்தாந்தக் கருத்திற்கு மூலக் கூறாக இச்சங்க இலக்கியப் பாடல் உடம்பையும் உயிரையும் இணைத்துக் கூறுகிறது எனலாம்.  இதே கருத்தைஇ

1..   ''நல் நலம் தொலைய நலம் மிகச் சாஅய் 

இன்னுயிர் கழியினும் உரையல்''( குறுந் -93)


2.    ''துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் என்னின் உயிரும் கொடுக்குவர் ''(புறம் -182)


3.   ''நிரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே''( புறம் - 18)


4.    ''அனையன் என்னாது அத்தக்கோனை

நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று''( புறம் - 221)


5.    ''உடம்போடு இன்னுயிர் நிரம்பம் கிழமை

தொல் நட்புடையார் தம்முழைச் செறினே''( புறம் - 223) 


6.    ''யாக்கை இன்னுயிர் கழிவதாயினும் நின்மகள்

ஆய்மலர் உன்கண் பசலை 

காமநோய் எனச் செப்பாதீமே''(அகம் - 52)


என்ற எடுத்துக் காட்டுகள் உடம்பும் உயிரும் இணைந்திருப்பதையும்இ உடம்பை விட்டு உயிர் என்பது பிரியும் என்பதையும் சுட்டிக் காட்டுவன ஆகும்.  இவற்றின் மூலம் சங்க இலக்கியங்கள் உயிர் என்ற ஒன்று உண்டு என்பதில் உடன்பட்டும்இ அது உடம்போடு சார்ந்ததன் வண்ணமாய் விளங்கும் என்றும் குறிப்பிடுவதையும் உணரலாம்.  சங்க இலக்கியங்களின் இச் செய்திகள் பின்னால் வந்த சாத்திரங்களில்  உயிர் பற்றிய இலக்கணத்தைத் தருவதற்கு அடிப் படையாக அமைந்தது எனலாம். இந்த உயிர் உடம்பைப் பெற்று வாழுகிறது என்பதனைச் சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றான போற்றிப் பஃறொடையில் உமாபதி சிவம் குறிப்பிடுகின்றார். 


''        '' எவ்வுயிர்க்கும்- உள்நாடிக்

  கட்புலனான் காணார்தம் கைக்கொடுத்த கோலேபோல்

  பொற்புடைய மாயைப் புணர்ப்பின் கண் - முற்பால்

   தனுகரணமும் புவனமும் தந்து அவற்றால் 

   மனமுதலால் வந்த விகாரத்தால் - வினையிரண்டும்

   காட்டி அதனால் பிறப்பாக்கிக் கைக்கொண்டு

   மீட்டறிவு காட்டும் வினை போற்றி''(  10-14 கண்ணி)


உயிர்களுக்கு உதவுவதற்காகக் கண்ணற்ற குருடனுக்குக் கோல் கொடுத்து உதவுவது போலஇ மாயையைக் கூட்டுவித்து அதன் மூலம் உடல்இ கருவிஇ உலகுஇ நுகர்ச்சிப் பொருள்களைத் தந்துஇ நல்வினை தீவினைகளைப் பொருத்திஇ வினைப் பயனை நுகர்வதற்குப் பல பிறப்புக்களைத் தந்து மலநீக்கத்தையும் செய்துஇ பக்குவம் பெற்றிருக்கின்ற உயிர்களுக்கு எல்லையற்ற பேரின்பத்தைத் தருகின்ற இறைவனின் தொழிலுக்கு நன்றி என்று உமாபதி சிவம் இப்பகுதியில் குறிப்பிடுகின்றார். இப்பகுதியின் மூலம் உயிருக்கு உதவுவதற்காக உடம்பு கொடுக்கப் படுகிறது என்பது் அழுத்தமாகத் தெரிவிக்கப் படுகிறது.  எனவே உயிரையும் உடம்பையும் இணைத்துப் பேசிய சங்க இலக்கிய மூலக்கூறுஇ பின்னால் வந்த சைவ சமய சாததிரங்களில் உயிரின் வினைகளை நீக்குவதற்காக உயிருக்கு உடம்பு கொடுக்கப் படுகிறது என்று குறிப்பிட்டுஇ உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்துகிறது.  


உயிர் நிலையானது --

உயிர் உடம்போடு இணைந்து செயல் படுகின்ற ஒன்று என்று உயிர் உண்டு என்பதைக் குறிப்பிட்ட சங்க இலக்கியங்கள் உயிர் என்றும் அழியாதது என்பதை ''மன்'' என்னும் அடைமொழி கொடுத்துக் குறிப்பிடுகிறது.  


''மன்னுயிர் அறியா துன்னரும் பொதியில் 

சூருடைஅடுக்கத்துஆரம்கடுப்ப''(குறுந்-376)


    ''நிலம்புடைப் பெயர்வது அன்றுகொல் இன்றுஎன 

மன்னுயிர்மடிந்தமழைமாறுஅமையத்து''(அகம்31)

'

''மன்னுயிர் ஏமுற மலர்ஞாழல் புரவுஈன்று

  பன்னீரால் பாய்புனல் பரந்து ஊட்டி(கலித் -34)

'' மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது 

   ஈத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பின் (பதிற் -15)


  ''மலர்தலை உலகத்து  மன்னுயிர் காக்கும்

          முரசு முழங்கு தானை மூவருள்ளும்( பெரும் - 32-33)


   


  

என்ற சங்க இலக்கியப் பகுதிகள் உயிரைக் குறிக்கின்ற பொழுது மன் என்ற அடைமொழியோடு குறித்திருப்பதை அறியலாம். மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் என்ற தொடரில் உலகம் நிலையாமை உடைத்து என்று குறிப்பிடுவது போல மன்னுயிர் நிலையானது என்பதன் மூலம்  உயிர் நிலைத்திருக்கிறது என்பதைச் சங்க இலக்கியங்கள்  வலியுறுத்துவதை அறியலாம். எனவே உயிர் என்பது என்றைக்கும் நிலையானதுஇ அழிவில்லாதது என்ற சைவ சித்தாந்த அடிப்படைக் கருத்துக்குச் சங்க இலக்கியங்கள் மூலக் கூறுகளாக அமைகின்றன. இதனை வழிமொழிந்து  உயிரைத் திருமுறைகளும் சைவ சித்தாந்தமும்  நிலையானது என்றே குறிப்பிடுகின்றன. 


''வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்

மன்னுயிரும் என்னுயிருந் தானாய் ''( திருநாவு -6-91-7)


''பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு பாசம் அனாதி''(திருமந்தி- 115)


''எண்ணிலா மன்னுயிர்க்கும் இந்த வழக்கேஆய்''( போற்றி - கண்ணி- 39)


''எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தில் அழுந்தி''(சிவப் - 19)


என்ற பகுதிகள் உயிர் நித்தம் என்பதை விளக்கும் பகுதிகளாகும்.  உயிர்கள் பல என்பதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  


''கரை பொருது இரங்கும் கனைஇரு முந்நீர்

திரையிடு  மணலினும் பலரே உரைசெல

மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே( மதுரை- 235-238)


செறிதலை உடைய கரிய கடலில் பொருது ஒலிக்கும் கடல்திரை குவிக்கின்ற மணலினும் பலர் ஆவர்  . உலகங்களைத் தன் கீழ் ஆண்டு இ எந்தப் பயனும் இல்லாது மாண்டோர் என்பது இப்பகுதியின் பொருள். எனவே உயிர்களைப் பற்றி இப்பகுதி குறிப்பிடும் பொழுதுஇ உயர்ந்த எண்ணிக்கையைக் குறிப்பிடுவதற்காகக் கடல் மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையைக் கொண்ட இறந்து பட்டோர் எனக் கூறுகிறது.  இதிலிருந்து இறந்தவர்களை எண்ண இயலாது என்பது பெறப்படுகிறது. சங்க இலக்கியம் கூறிய இப்பகுதியைப் பின்னா வந்த சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றான திருவருட்பயன் இ


''பிறந்த நாள் போலும் பிறக்கு நாள் போலும்

துறந்தோர் துறப்போர் தொகை ( பா. 11)


என்று குறிப்பிடுகிறது. உயிர்களில் முத்தி அடைந்தோர் தொகை உயிர்கள் பிறந்து வாழ்ந்ததற்குச் சமமாகும்.  முத்தி அடையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்களின் தொகை இனிப் பிறந்து வாழும் நாட்களுக்குச் சமமாகும் என்பதைக் குறிப்பிட்டுஇ உயிர்கள் எண்ணற்றவை என்பதைச் சித்தாந்தம் குறிப்பிடுகிறது.  இப்பகுதியோடு இ 


''துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக் கொண்டற்று''(திருக் -22)

என்ற திருக்குறளையும் ஒப்பிட்டுக் காணலாம். 


''ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்''(திருவாச-8-7-11)


என்ற திருவாசகப் பகுதியில் உய்வார்கள் என்று உயிர்களின் பன்மை கூறப் பெற்றுள்ளது. 


உயிர்கள் வினைக்கு ஏற்ப உடம்புகளை எடுத்து அச்சுமாறிப் பல பிறப்புக்களில்  பிறந்துவரும் என்பதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 


''தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்

அறியா தோரையும் அறியக் காட்டி'(புறம் -27)


''சாதலும் புதுவதன்றே வாழ்தல் 

இனிதென மகிழ்ந் தென்றும் இலமே''( புறம் -192)


''சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்

பிறப்பு பிறிதாகுவது ஆயின் 

மறக்குவேன் கொல் என் காதலன்''( நற்றிணை - 397)


''இன்மை மாறி மறுமையாகினும் நீயாகியர் என் கணவனே''(குறுந் - 49)


''யாயும் யாயும் யாராகியரோ 

  எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

  யானும் நீயும் எவ்வழி அறிதும் '' ( குறுந் - 40)


என்ற பகுதிகள்  உயிர் எடுக்கும் பிறப்புக்கள் பல என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.  இவ்வாறு சங்க இலக்கியம் கூறியதைப் பின்னால் வந்த் திருமுறைகளும் இசாத்திரங்களும் வழிமொழிந்துள்ளன. 


 

''புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப்  பறவையாகிப் பாம்பாய்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்அசுரராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்''(திருவாச 26-31)


   'பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் 

    உன்னை என்றும் மறவாமை வேண்டும் ''(பெரிய - காரைக் -60)


என்று திருமுறைகள் உயிர்கள் பல பிறப்பெடுக்கும் என்பதை வலியுறுத்துகின்றன. சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றான சிவஞான சித்தியார் இ


'' இருவினை - அநாதி ஆதி

இயற்றலால் நுகர்வால் அந்தம்

  வரும் மலம சார்ந்து மாயா

உருவுகள் மருவி ஆர்த்துத்

  தஞ்செயல் முறைமை யாலே

தான்பல பேதம் காட்டி

  அருவதாய் நின்று அரன்தன்

ஆணையின் அமர்ந்து செல்லும்''( பா. 130)

என்று குறிப்பிடுகிறது. 


இப்பாடலில் மலம் சார்ந்து மாயா உருவுகள் மருவி என்பது உயிரானது ஆணவ மலத்தோடு பல பிறப்புக்களாகிய உருவங்களை அடையும் என்பதை வலியுறுத்தும் பகுதியாகும்.  இருவினைக்கு ஏற்றவாறு உயிர் உடம்பெடுக்கும் என்பதை இப்பாடல் காட்டுகிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக